Monday, June 13, 2016

NOTHING IS OPENED MORE OFTEN BY MISTAKE THAN THE MOUTH


                              வார்த்தைகள் விளையாட்டல்ல ..........
                                                  ---------------------
 NOTHING IS OPENED MORE OFTEN BY MISTAKE THAN THE MOUTH
ஆங்கிலத்தில் என்னைக் கவர்ந்த  சொல்லாடல்களில் இதுவும் ஒன்று

          வெறும் வார்த்தை என்று நாம் எண்ணுபவை சில ,உள வெளிப்
பாடுகள் ஆகும்  அவை , எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது பற்றிய .
சிந்தனைகள் நூற்றாண்டுகளுக்கு முன்பே
இருந்திருக்க வேண்டும். “ தீயினால் சுட்ட புண் உள்ளாறும்,
ஆறாதே நாவினால் சுட்ட வடு.” “ இனிய உளவாக இன்னாத
கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று.” என்பன போன்றும்,
உதிர்க்கப்பட்ட வார்த்தைகளை அள்ள முடியாது என்பன
போன்றும், சொல்லப்படாத வார்த்தைகளுக்கு நாமே எஜமானர்
என்பன போன்றும் பல எண்ணங்கள் மனசில் வந்து மோதுகிறது.


       சில நேரங்களில் உணர்ச்சிப் பெருக்கால் உமிழப்படும்
வார்த்தைகள் எவ்வளவு தீவிரமாகக் காயப்படுத்துகிறது
என்பதையும் சிந்திக்க வைக்கிறது

         நான் என் மகனிடம் சின்ன வயதில் நடந்ததில் அவன்
நினைவுக்கு திடீரென்று வருவது என்ன என்று கேட்டபோது.
அவன் சொன்ன பதில் என்னை ஆட வைத்து விட்டது. எனக்கு
நன்கு படிக்கும் பிள்ளைகள் கணிதத்தில் ஈடுபாடு கொண்டவர்
களாக இருப்பார்கள் என்றும் கணிதத்தில் ஈடுபாடு உள்ளவர்
புத்திசாலிகள் என்றும் எண்ணம் இருந்திருக்கிறது. அதை நான்
நியாயப் படுத்த வில்லை. அவன் கணிதத்தில் குறைவான
மதிப்பெண்கள் எடுக்கும்போது நான் அவனைக் கடிந்து கொண்டு
வாழ்வில் அவன் உருப்படுவது கஷ்டம் என்ற முறையில்
கூறியிருக்கிறேன் சாதாரணமாகப் பெற்றோர்களின் நிலையில்
இருந்து நான் அவனைக் கடிந்து கொண்டது அவனுக்கு மனசில்
ஆழமாக வலி ஏற்படுத்தி இருக்கிறது. என் எண்ணம் தவறு
என்று எனக்குணர்த்த அவன் பின் ரசாயனப் பிரிவில் பட்டப்
படிப்பு முடித்து பிறகு எம். பி. தேறி இன்று ஒரு உன்னத
நிலையில் இருக்கிறான். அவனை அந்தக் காலத்தில் கடிந்து
கொண்டதால் தான் ஒரு வெறியுடன் முன்னுக்கு வந்ததாய்
என்னை சமாதானப் படுத்துகிறான். இதுவே நேர் மாறான
விளைவுகளை ஏற்படுத்தி இருந்தால் என் ஆயுசுக்கும் நான்
வருத்தப்பட்டுக் கொண்டுதான் இருந்திருப்பேன். என் நண்பன்
ஒருவன் அவனது மகனைக் கணினி கற்றுக்கொள்ள கம்ப்யூட்டர்
பாயிண்ட் என்ற நிறுவனத்தில் விசாரித்திருக்கிறான். அங்கு என்
மகன் பணியாற்றிக் கொண்டிருந்தது தெரியாத அவன் என்னிடம்
அதன் மார்க்கெடிங் அதிகாரி எஸ்கிமோக்களிடமே
ரெஃப்ரிஜிரேட்டர் விற்றுவிடும் திறமை படைத்தவராக
இருக்கிறார் என்று கூறிய போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு
ஈடே இருக்கவில்லை.


         எனக்குத் தெரிந்த ஒருவர் கடற்படையில் பயிற்சியில்
சேர்ந்திருந்த காலம். விடுமுறை முடிந்து பயிற்சிக்குத்
திரும்பியவர், வீட்டு நினைவில் சற்றே கவனக் குறைவாக
இருந்திருக்கிறார். பயிற்சி அளிப்பவர் இந்தியில் அவரை அம்மா
பெயருக்குக் களங்கம் விளைக்கும் ஏதோ ஒரு வார்த்தையை
உபயோகித்திருக்கிறார். ஆத்திரமடைந்த என் நண்பர், கையில்
இருந்த ரைஃபிளால் பயிற்சியாளரை ஓங்கி அடித்திருக்கிறார்.
பிறகு அதன் பலனாக தண்டனையாக மருத்துவமனையில் மன
நோயாளிகள் பிரிவில் சில நாட்கள் காலங் கழிக்க வேண்டி
இருந்தது.

         
சில வருடங்களுக்கு முன்னால் இந்திய கிரிக்கட் அணி
ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது நமது ஆட்டக்காரர் ஹர்பஜன்
சிங் இந்தியில்மாகிஎன்று ஏதோ சொல்லப்போக அது ஆண்ட்ரூ
சைமண்ட்ஸ் காதில்மங்கிஎன்று கேட்கப்போக அது ஒரு பெரிய
இனப் பிரச்சனையை இரு அணிகளுக்கும் இடையில் தோற்று
வித்ததை யாரும் மறந்திருக்க முடியாது.


          சில வார்த்தைகள் உச்சரிக்கப்படும் விதத்திலும்
தொனியிலும் மாத்திரையிலும் வேறு வேறு பொருள் கொடுக்கும் உதாரணத்துக்கு இந்த ஓரெழுத்து வார்த்தை
என்னவெல்லாம் பொருள் கொடுக்க முடியும் என்று முயற்சித்துப்
பார்த்தால் தெரியும்.

       
ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்னும் நிகழ்ச்சியில் கொடுக்கப்
படும்க்ளூக்கள்உதவி கொண்டு வார்த்தை கண்டு பிடிக்கப்பட
வேண்டும். சுவாரசியமான விளையாட்டு. விஜய் தொலைக்
காட்சியில் காணலாம்.

       
என்னைப் பொறுத்தவரை இரண்டு வார்த்தைகள் என்
வாழ்க்கையின் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கின்றன. ஒன்று
அன்பு, மற்றது ஏமாற்றம். நான் யார் யாரிடம் அன்பு செலுத்தி
மகிழ்ந்தேனோ அவர்களில் பலரும் ,அதில் ஒரு பங்காவது
திருப்பிச் செலுத்தாதது என்னை மிகவும் ஏமாற்றத்துக்கு
உள்ளாக்கியிருக்கிறது.
வார்த்தைகளின் பிரயோகம் எங்ஙனம் தவற்றில் கொண்டு விடுகிறது என்பதற்கு சிலப் பதிகாரத்தில்  பாண்டிய மன்னனின்  கூற்றே ஒரு சான்று
தாழ்பூங் கோதை தன்கால் சிலம்பு
கன்றிய கள்வன் கைய தாகில்
கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கென
காவலன் ஏவ……………. ....'
அரச மாதேவியின் கால் சிலம்பு இந்த பொற்கொல்லன் கூறிய கள்வன் கையில் இருக்குமானால் (அவனைக் கொல்வதற்கு அச்சிலம்புடன் இங்கு கொண்டு வருக என்று சொல்ல நினைத்தவன் அவ்வாறு கூறாமல்)
அவனைக் கொன்று இச்சிலம்பை இங்கு கொண்டு வருக!' என்று மன்னன் காவலர்க்குக் கட்டளையிடு கிறான். இது திரு ஜீவி அவர்களின் நினைவில் அடிக்கடி வரும்  சிலப்பதிகாரப் பாடல் என்று அறிகிறேன்   
ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்   வார்த்தைகளைக் கடந்த நிலைக்கு ஒருவரால் வரமுடியும் என்றால் அதுதான் தெய்வ நிலை. மொழி நமது பலவீனம் சிலர் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கூட அவர்கள் கருத்தை வலியுறுத்தாமால் இந்திரன் சந்திரன் என்று கூறுவதும் வார்த்தைகளைச் சரியாகப் பயன் படுத்தும்  தைரியம் இல்லாததுதான் பிறர் மனம் நோகாமல் நம் கருத்தை கூறுவதற்குத்தான் வார்ர்த்தைகளே இருக்கின்றன                            


                   

 




 

38 comments:

  1. ம்ம்ம், இந்த வார்த்தைகளால் நிறையக் காயப்பட்டிருக்கிறேன். ஆனால் யாரையும் காயப்படுத்தியதில்லை! என்றாலும் உங்கள் மகன் கூறுவது போல் சில வார்த்தைகள் நினைத்து நினைத்துப் பார்த்து வருத்தம் ஏற்படுத்தக் கூடியவையே! உங்கள் மகன் எதிர்மறையாகப் பார்க்கவில்லை. ஆகையால் மனப்போராட்டங்கள் இல்லை. :)

    ReplyDelete
  2. சரியாகச் சொன்னீர்கள் GMB சார்!
    பேச்சிலும் எழுத்திலும் சரியாகச் சொல்லப் படாதவை ஏற்படுத்தும் அனர்த்தம் அதிகம்.
    எங்கும் 'கனியிருப்பக் காய் கவர்பவர்களே' அதிகம்.

    ReplyDelete
  3. அருமையான அலசல் ஐயா நான் பலரது வார்த்தைகளால் நிறைய முறை காயப்பட்டு இருக்கின்றேன் அந்த வலியின் அருமை அறிந்த காரணத்தால் நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் வார்த்தைகளை விட்டதில்லை ஒருக்கால் தவறுதலாக வந்து விட்டால் உடன் மன்னிப்பு கேட்டு விடுவேன் வயதில் சிறியவராயினும்.
    நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  4. சொல்லாத விலையேதும் இல்லை என்பது கவிஞர் வரி. கொட்டினால் அல்ல முடியாதது. நாம் சாதாரண நிலையில் ஏதோ ஒரு அர்த்தத்தில் சொல்வது டுத்தவர்களுக்கு வேறு பொருளைத் தரலாம். பின்னூட்டம் பற்றிக் குறிப்பிட்டீர்கள். உண்மை. நானும் அதே போலத்தான். ஆங்கிலத்தில் இன்னொரு சொல் உண்டு. "நான் என்ன சொன்னேன் என்பதற்குத்தான் நான் பொறுப்பு. நீ என்ன அர்த்தம் எடுத்துக் கொண்டாய் என்பதற்கல்ல" என்ற வரிகள்!

    ReplyDelete
  5. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்று படிக்கவும்!

    ReplyDelete
  6. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வலிமை உண்டு என்பதனை தங்கள் அனுபவ மொழிகளால் உணர்த்தி இருக்கிறீர்கள். ஒரு சொல்லின் வலிமை என்பது , அது நம்மை நோக்கி வீசப்படும்போது , நாம் கோபப் படும்போதுதான் நமக்கும் உறைக்கிறது. உதாரணம். ‘உனக்கு அறிவு இருக்கா?” சாதாரணமாகப் பார்க்கும்போது இதுவும் ஒரு வார்த்தைதான்.

    ReplyDelete
  7. காயத்தை ஏற்படுத்துவதும் காயத்திற்கு மருந்தாககுவது வார்த்தைகளே அதை யார் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பொருத்து இருக்கிறது வார்த்தைகள் கண்ணாடி போல அதை எப்படி உபயோகப்படுத்திறோம் என்பது போலத்தான் இந்த வார்த்தைகள் பயன்பாடும் இருக்கிறது.

    ReplyDelete
  8. ரசித்தேன். வார்த்தைகள் கூரிய வாளுக்கு சமம் என்ற கருத்தை எங்கோ படித்த நினைவு. வார்த்தைகளின் வீரியத்தை நன்றாக உணர்த்தியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  9. நல்லதொரு பகிர்வு.

    பல சமயங்களில் வார்த்தைகள் கடுமையான மன சஞ்சலத்தை ஏற்படுத்தி விடுகின்றன. ஸ்ரீராம் சொல்வது போல தவறான புரிதலும் சில சமயங்களில் கஷ்டங்களை உண்டாக்கி விடுகின்றன.

    ReplyDelete
  10. அதுவும் நம்ம தமிழ்ல ஒரு எழுத்த மாத்தி பேசிட்டாலும் தொலைஞ்சோம் நாம... http://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
  11. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பேசும்போது நிதானமாகப் பேசுவது நல்லது. குறிப்பாக மகிழ்ச்சியான நிலையிலும், சோகமான நிலையிலும் சொற்களைக் கவனமாகப் பயன்படுத்தவேண்டும்.

    ReplyDelete
  12. மிக நல்ல கட்டுரை! புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் யதார்த்தமாக நான் சொன்ன வார்த்தைகளால் கூட பல சமயங்களில் பலர் காயப் பட்டிருப்பதை அறிந்து மனம் வருந்தி இருக்கிறேன். என் தொனியும் உடல் மொழியும் அதற்க்கு காரணமாக இருக்கலாம். இனிமையாக பேசுவது என்பது எல்லோருக்கும் கை வரும் கலை அல்ல.

    ReplyDelete

  13. @ கீதா சாம்பசிவம்
    வேண்டு மென்றே காயப் படுத்துவோர் மிகக் குறைவே இருந்தாலும் நம்மை அறியாமல் சில வார்த்தைகள் காயப் படுத்தலாம் வார்த்தைகளின் சக்தி தெரிந்திருத்தல் அவசியம் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  14. @ மோகன் ஜி
    கனி இருப்ப காய் கவர்தல் நல்லதல்ல என்று உணர்த்தவே இம்முயற்சி வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  15. @ கில்லர்ஜி
    பொதுவாகவே யாருக்கும் யாரையும் காயப்படுத்தும் எண்ணம் இருப்பதில்லை. கவனக் குறைவால் விடும் வார்த்தைகளே காரணிகள் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  16. @ ஸ்ரீ ராம்
    நான் சொன்ன வார்த்தைக்குத்தான் நான் பொறுப்பு நீ கொள்ளும் அர்த்தத்துக்கு அல்ல என்பது எஸ்கெபிஸ்ம் போல் தெரிகிறதுசொல்லும் வார்த்தைகள் நேரானதாகவும் மறை பொருள் இல்லாததாகவும் இருப்பது அவசியமல்லவா . நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete

  17. @ ஸ்ரீராம்
    கவிஞர்கள் சொன்னால்தான் ஏற்றுக் கொள்கிறோம் நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  18. @ தி தமிழ் இளங்கோ
    நான் என் மகனிடம் கூறியது வலி ஏற்படுத்த அல்ல. இருந்தாலும் சந்தர்ப்பமும் சூழலும் கூட வார்த்தைகளுக்கு வலுவேற்றி விடும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ அவர்கள் உண்மைகள்
    எப்போதாவது நீங்கள் வருவதும் மகிழ்ச்சி தருகிறதுகாயப்படுத்திவிட்டு மருந்து தேட வேண்டாமே நன்றி சார்

    ReplyDelete

  20. @ டாக்ட கந்தசாமி
    வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  21. @ வெங்கட் நாகராஜ்
    சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தவறாகப்பொருள் கொள்ளக் காரணமாகலாம் பேசும் முன் சிந்திப்பதே நல்லது வர்ருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ கரந்தை ஜெயக் குமார்
    வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  23. @ ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்
    எனக்கு ஒரு நண்பர் இருந்தார் தமிழில் பேசும்போது மிகவும் மரியாதையுடன் வார்த்தைகள் விழும். ஆனால் அவர் ஆங்கிலத்தில் பேசினால் மிகக் கடுமையாய் இருக்கும் தமிழைக் குறை சொல்ல வேண்டாமே வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  24. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நாம் பேசாதவரை நம் ஞானமும் அறிவும் பிறருக்குத் தெரியாது. ஆனால் நம் பேச்சு நம்மை எடைபோட வைத்து விடும் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  25. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    நம் பேச்சின் த்வனியும் நினைக்காத அர்த்தத்தைக் கொடுக்கலாம் உதாரணத்ட்க்ஹுக்குத்தான் இந்த எழுத்ட்க்ஹும் வார்த்தையுமான “ ஓ “ வைக் காட்டி இருக்கிறேன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  26. நானும் என் மகனிடம் இது போல கேட்க வேண்டும் என்று நினைக்கின்றேன்..

    ReplyDelete

  27. @ துரை செல்வராஜு
    உங்கள் மனம் நோகும்படியான பதிலாய் இருக்காது என்றே எண்ணுகிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  28. வார்த்தைகளை கொட்டிவிடலாம். ஆனால் அள்ளமுடியாது.’ என்பதை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். பதிவை இரசித்தேன்!

    ReplyDelete

  29. எப்போதாவது வருவது இல்லை உங்கள் பதிவுகளை முடிந்த வரையில் ஆபிஸில் இருக்கும் போதுபோன் மூலம் படித்துவிடுவேன் ஆனால் அதன் மூலம் கருத்துக்கல் இடுவது எனக்கு கடினமாக இருக்கிறது வீட்டில் இருந்து லேப் டாப்பில் மூலம்படிக்கும் போதுதான் கருத்துக்கள் இட முடிகிறது.

    ReplyDelete

  30. @ வே நடனசபாபதி
    பதிவை ரசித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete

  31. @ அவர்கள் உண்மைகள்
    போன் மூலம் படிப்பது எல்லாம் எனக்குப் புரியாதது எனக்கானால் உங்கள் பதிவுகளுக்குக் கருத்திட்டால் உடனே என் மெயில் பாக்சில் டெலிவெரி ஃபெயில்ட் என்று வந்து விடும் இதுவும் புரியாத ஒன்று எனிவே மீள் வருகைக்கும் நன்றி சார்

    ReplyDelete
  32. //இது திரு ஜீவி அவர்களின் நினைவில் அடிக்கடி வரும் சிலப்பதிகாரப் பாடல் என்று அறிகிறேன் //

    வெல்லும், கொல்லும்-- இதில் எதற்காக என் நினைவு வந்தது ஐயா?..

    ReplyDelete

  33. @ ஜீவி
    வெல்லும் கொல்லும் என்பதற்கும் உங்களூக்கு சிலப்பதிகார வரிகள் நினைவு வருவதற்கும் முடிச்சு போடவில்லை. இந்த வரிகளை என் பதிவு ஒன்றுக்கு எழுதிய பின்னூட்டத்திலிருந்து கையாண்டேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  34. வார்த்தைகள் எப்போதும் வலிமையானவை .அருமையான அலசல் கட்டுரை ஐயா.

    ReplyDelete
  35. அருமை! வாய் வார்த்தைன்னு சொல்லிடறோம். பல சமயங்களில் வாயை மூடிக்கிட்டு இருந்தாலே பல பிரச்சனைகள் தீர்ந்துரும்.

    நாம் ஒன்றை நினைச்சுச் சொல்ல, எதிரில் இருப்பவர் அதுக்கு வேறு அர்த்தம் புரிஞ்சுக்கிட்டால் அனர்த்தம்தான்.

    எத்தாலே கெட்டே? நோராலெ கெட்டேன் என்று ஒரு பழஞ்சொல் உண்டு. நோரு = வாய் (தெலுகு)

    ReplyDelete

  36. @ தனிமரம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  37. @ துளசி கோபால்
    சொல்லாத வார்த்தைகளுக்கு நாம் எஜமான் . கொட்டிய வார்த்தைகளுக்கு அடிமை. வாய் பேசாமல் இருந்தால் எடை போடுவது கடினம் பேசுபவர்களின் குணாதிசயங்கள் எளிதில் வெளிப்பட்டு விடும் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete