Thursday, June 23, 2016

When opportunity knocks at the door, do not complain about the noise


 வாய்ப்பு கதவைத் தட்டும்போது  ஓசை பற்றிக் குறைபடாதே
----------------------------------------------------------------------------------------------
சில கருத்துக்களைச் சொல்ல முற்படும்போது என்னையே முன் நிறுத்திச் சொல்ல முயற்சிக்கிறேன் எந்த ஆசிரியரையும் பாடலையும்  சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம்  இல்லாமல் என் வாழ்க்கையே இருக்கிறது இது சிலருக்குச் சுய சரிதையாய்ப் படுகிறது என்னைத் தவிர்த்து சொல்ல வந்த விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டால் பதிவின் பலன் கிடைக்கும்

எனக்கு திருச்சியிலிருந்து மாற்றல் என்று ஆர்டர் வந்தது பள்ளி இறுதிப்படிப்பே முடித்திருந்த என்னை நிர்மாணப் பணிக்கு அனுப்பும் முகாந்திரமாக வந்த ஆர்டரைக் கண்டதும்  எனக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை தொழிற்சாலையில் தரம் மற்றும் உற்பத்திப்பிரிவில் பணி செய்து பழக்கப்பட்ட என்னை மாற்றுவது முதலில் ஏதோ பழிவாங்கும்  நடவடிக்கை என்றே எண்ண வைத்தது. என் மக்களின் படிப்பு என்னாகுமோ என்னும்  பயம் இருந்ததுஎந்த ஊருக்கு மாற்றல் என்றும்  இருக்கவில்லை.பேசாமல் நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு பெட்டிக்கடைவைத்துப்பிழைக்கலாமா என்னும் தீவிர சிந்தனை எழுந்தது.  ஆனாலும்  சவால்களைக் கண்டு அஞ்சுபவன் அல்ல நான் ஆகவே எதையும் எதிர்கொள்வது என்று தீர்மானித்தேன் எந்த இடத்துக்கு மாற்றல் என்னும் விபரம் தெரியாத நிலையிலும் பிள்ளைகளின்  படிப்பை உத்தேசித்தும்  நான் மட்டும் பணியில் சேர்வது என்றும் பிள்ளைகளையும் மனைவியையும் சென்னையில் அம்மா தம்பிகளிடம் விட்டுப் போகலாம் என்றும் நினைத்தேன் ஆனால் என்ன ஒரு ஏமாற்றம் சென்னையில் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அம்மா தம்பிகளுடன்  என்மனைவி பிள்ளைகளையும்  குடி வைப்பது என்னும்  எண்ணத்துக்கு அம்மா ஒப்புக் கொள்ளவில்லை. அது சரிவராது என்றார்கள்  அப்பா இறந்து ஓரளவு நிர்க்கதியாய் இருந்த அம்மாவுக்கும் தம்பிகளுக்கும் என் உதவி தேவையாய் இருந்தது எனக்கு என்று ஒரு தேவை வரும்போது உதவ மனம் வரவில்லை. என் மனம் ஒடிந்து விட்டதுஎத்தனை அன்புடனும் ஈடுபாட்டுடனும்  அவர்களை நான் கவனித்துக் கொண்டிருந்தேன் என்பதை மறந்து விட்டார்கள் என் அன்புக்கும்  பரிவுக்கும்  சரியான அடிஅது  இருந்தாலும்  என்னால் என் மனைவி குழந்தைகளைத் தனியே சென்னையில் குடி வைத்தும் பார்த்துக் கொள்ள முடியும்  என்னும் வைராக்கியம் என்னுள் எழுந்தது நண்பன் சின்னிகிருஷ்ணா  கோடம்பாக்கத்தில்  ட்ரஸ்ட் புரத்தில் ஒரு வீடு பார்த்துக் கொடுத்தான் நுங்கம் பாக்கம் கிருஷ்ண ஸ்வாமி ஹையர் செகண்டரி பள்ளியில் மனோவை ஐந்தாவதிலும் பிரசாதை மூன்றாவதிலும் சேர்த்தோம் திருச்சியிலிருந்து ட்ரஸ்ட் புரம் வீட்டுக்கு வந்து கூட எங்களைப் பார்க்காத அம்மா மீது முதன் முதலாக எனக்கு மதிப்பு குறைந்தது சே என்றாகி விட்டது பள்ளியில் சேர்ந்த இரு மாதங்களுக்குள் எனக்கு  விஜயவாடாவுக்கு போஸ்டிங்  என்று தெரிய வந்தது
 விஜயவாடா அனல் மின் நிலையத்துக்கான  ஆரம்பப் பணிகளே துவக்க நிலையிலிருந்தது திரு கே பி. ராஜ்குமார் அங்கு டிஜிஎம் பொறுப்பேற்க இருந்தார்  அவர் என்னிடம் முதலில் விஜயவாடா சென்றுபள்ளிகளில் அங்கு வருவோரின் குழந்தைகளுக்கு  அட்மிஷனுக்கு  ஏற்பாடு செய்யும் படியும்  எனக்காக ஒரு வீடு பார்த்துக் கொள்ளூமாறும் சொல்லி அனுப்பினார்  அங்கு எனக்கு முன்னால் பணியில் இருந்து ஆரம்ப வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவருக்கு என்னைப் பிடிக்கவில்லை. ஏன்  என்றால் நான் அவருக்கு மேலதிகாரியாகப் பொறுப்பு ஏற்க இருந்தேன் இருந்தாலும்  நாட்பட நாட்பட அவருக்கு என் மேல் மதிப்பும்  மரியாதையும்  வந்தது வித விதமான மனிதர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்று நான் உணரத் துவங்கினேன்

விஜயவாடாவில் பென்ஸ் சர்க்கிள் அருகே எங்கள் அலுவலகம் இருந்தது எனக்கென்று அதன் அருகிலேயே வீடும் கிடைத்தது படமட்டா என்னும் இடத்தில் ஓரளவு பிரசித்தி பெற்ற பள்ளி  NSM PUBLIC SCHOOL. வரப்போகும் வேலையாட்களின் குழந்தைகளை அங்கு சேர்க்கும்  பணியாக நான் அந்தப் பள்ளியின் ப்ரின்சிபாலைக் கண்டேன்  அவருக்கு விஜயவாடா அனல் மின் நிலையம் பற்றிக் கூறி பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க உதவுமாறு வேண்டிக்கொண்டேன் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்தால் நாங்கள் பள்ளிக்கு என்ன செய்வோம் என்று கேட்டார்நாங்கள் உற்பத்தி செய்யப்போகும் மின்சாரம்  அனைவருக்கும் உதவுமே என்றேன்  அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவரும் கூனூர் அந்தோணியார்  உயர் நிலைப் பள்ளியில் படித்தவர் என்றும்  எனக்கு மூன்றாண்டுகள்  ஜூனியர் என்றும் தெரிய வந்ததுபள்ளிக்கு ஒரு வகுப்புக்கான  மேசை நாற்காலிகளைத் தர முயற்சி செய்கிறேன் என்று  வாக்குக் கொடுத்தேன் எனக்கு எந்த அதிகாரம் இருந்தது என்றெல்லாம்  யோசிக்க வில்லை. வேலைக்கு வருவோர் நிம்மதியாகப் பணி புரிய அவர்களது  பிள்ளைகள் பள்ளியில் சேர்க்கப்பட வேண்டும் திரு ராஜ்குமார் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது ஆக பிள்ளைகளின் பள்ளி சேர்க்கை உறுதி ஆயிற்று. ஆனால் அங்கு  தமிழ் போதிக்கப் படவில்லை. என்  மக்கள் ஹிந்தி கற்றாக வேண்டும்
1976-ம் ஆண்டு விஜயவாடா சென்றேன்  அனல் மின் நிலைய நிர்மாணப் பணிகளுக்காக முதலில் காலம்கள் எனப்படும் ராட்சதத்  தூண்களை எழுப்ப வேண்டும் அடித்தளத் தூண்களை ஒன்றோடு ஒன்று  இணைக்கும் படி விதானம் கட்ட வேண்டும் . எனக்கோ இதெல்லாம் மிகவும் புதியது. ஒப்பந்ததாரர்களை நட்பாக்கிக் கொண்டு அவர்கள் மூலம் இவற்றின் நெளிவு சுளுவுகளைக் கற்றேன்  ஆனால் அந்த ஆண்டு வீசிய புயலில்  நிர்மாணித்திருந்த தூண்கள் எல்லாம் சரிந்து விட்டன. ஏறத்தாழ இரண்டு மூன்று மாதப் பணி வேஸ்டானது. மனம் ஒடியும் நேரமா அது/. மீண்டும் அதிக முயற்சியுடன் அந்த வேலைகள் முடிக்கப் பட்டன. அந்தப் புயலின்  போது எங்கள் வீட்டின் வெராந்தாவில் வைக்கப் பட்டிருந்த ஒரு நீள பென்ச் காற்றில் பறந்தது மாடியிலிருந்து கீழே விழுந்து கிடந்தது…!
அனல் மின் நிலையத்தில் இணைக்கப் பட வேண்டிய முக்கிய பார்ட்  பாய்லர் ட்ரம் எனப்படுவதாகும் சுமார் ஒன்றரை மீட்டர் விட்டத்தில் 100 மி மீ கனத்தில் 10 மீட்டர் நீளத்தில்  சுமார் 130 டன் எடையுள்ள பகுதியை பாய்லரின்  மேல் ஏற்றிப் பொறுத்த வேண்டும்  
இதை ஒரு தனி வாகனில் ஏற்றி அனுப்புவார்கள் ரயிலில் வந்த ட்ரம்மை அதற்காக நிறுவப்பட்ட ரயில் பாதையில் பணி நடக்கும்  சைட்டுக்குக் கொண்டு வர வேண்டும்  இதைக் கையாள் இரண்டு பெரிய க்ரேன்கள் தேவைப் படும்  அதை வாகனிலிருந்து இறக்கும் போது  க்ரேன் சரிந்து விட்டு மண்ணில் புதைந்தது  ட்ரம் அந்தரத்தில் எங்கும் எடுக்க முடியாமல் தொங்கிக் கொண்டிருந்தது  அந்த இக்கட்டான நிலையை நான் சமாளித்ததைச் சொன்னால் பதிவு மிக நீண்டுவிடும். ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும் ட்ரம்மை சரியான இடத்துக்குக் கொண்டுவர எங்களுக்கு இரண்டு பகல் களும் இரண்டு இரவுகளும் தேவைப்பட்டது  தொடர்ந்து வேலையில் இருக்கும் நாங்கள் எப்படி இதை சமாளிக்கப் போகிறோம் என்பதை வேடிக்கைப் பார்க்க ஒரு கும்பல் இருந்தது

இதல்லாமல் பாய்லரை இயக்க FANS  என்று கூறப்படும் காற்றூதிகள் முக்கியமானவை அவை போபாலிலிருந்து உதிரி பாகங்களாக வந்தன. அவற்றை ஒருங்கிணைப்பது மிகவும் கடினமான பணி ரோட்டார் மற்றும் ஸ்டேட்டாருக்கான இடைவெளி  இரண்டு மிமீ க்கும் குறைவே  இதைஒன்றுடன் ஒன்று மோதாமல் பொறுத்துவது பிரம்மப் பிரயத்தனம் வேடிக்கைப் பார்ப்பவர்களைத் தவிர்க்க ஒரு ஞாயிற்றுக் கிழமையில் வெற்றிகரமாகப் பொறுத்தினோம் 
இதை எல்லாம் நான் கூறக் காரணமே பதிவின் தலைப்பைப் பார்த்தால் தெரியும் உற்பத்தி மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவில்  தொழிற்சாலையில் மட்டுமே பணி புரிந்த நான் புதிய உத்திகளைக் கையாண்டு கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்திக் கொண்டேன்
 நிர்மாணப் பணிகள் எல்லாம் முடிந்து நான் மீண்டும் திருச்சிக்கு மாற்றல் ஆகிப் போகும்  போது VTPS –ன் SUPERINTENDING  ENGINEER  சொன்ன வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ரீங்கரிக்கிறது. அவர் சொன்னார்,BALU WHENEVER I COME NEAR THESE MACHINES  I WILL HEAR THEM CALL –BALU, -BALU” இருபது வருடங்களுக்குப் பிறகு 2001-ல்
நான் அந்த அனல் மின் நிலையம் சென்று என்னால் கட்டி முடிக்கப் பட்ட மெஷின்களின் அருகே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டபோது எனக்கு அவை என்னை “ பாலு .பாலு “ என்று கூப்பிடுவதுபோல் இருந்தது.
நான் கடைசியாக விஜயவாடா சென்று ஆயிற்று 15 வருடங்கள் அந்த அனுபவங்கள் கற்றுக் கொடுத்த பாடங்கள் ஏராளம்  அவற்றில் மிக முக்கியமானது  வாய்ப்புகள் வந்து கதவைத் தட்டும் போது அதன் ஓசையைக்கேட்டு குறை பட்டுக் கொள்ளாதே  என்பதாகும்
விஜயவாடாவில் பணி புரியும் போது புகைப்படங்கள் ஏதும்  எடுத்துக் கொள்ள வில்லை.நான் 2001-ல் சென்றபோது  புகைப்படம் எடுப்பது தடுக்கப் பட்டிருந்தாலும்  எனக்காக விசேஷ சலுகையில்  சில படங்கள் எடுத்துக் கொண்டேன்  அவற்றில் சில  கீழே 
விஜயவாடா அனல் மின் நிலையம்  ஒரு தோற்றம் 
மின் நிலையத்துக்குத் தேவையான  கரியைத் தூள் செய்யும் பௌல் மில் 


எஃப் டி  ஃபேன் எனப்படும் காற்றாலை( forced draught  fan )


ஐடி ஃபேன் எனப்படும் காற்றாலை(  Induced draught  fan )






35 comments:

  1. நீங்கள் பெரிய ஆள்தான், ஐயா.

    ReplyDelete
  2. நல்ல நினைவாற்றல். உங்கள் பணி போற்றுதலுக்குரியது!

    ReplyDelete
  3. உங்கள் அனுபவங்களே ஆயிரம் இருக்கும் போது எதற்கு வெளியே தேட வேண்டும்.? சுவாரஸ்யமாய் உங்களுக்கு சொல்லவும் வருகிறது. Go ahead GMB சார்.

    ReplyDelete
  4. நல்ல அனுபவங்கள். ஒருவரது அனுபவங்கள் மற்றவர்களுக்கு பாடமாகலாம்.

    ReplyDelete
  5. உங்களுக்கு மட்டுமல்ல ,எங்களுக்கும் சொல்கிறதே ...அங்குள்ள ஒவ்வொரு தூண்களும் சொல்கிறதே ,வாழ்வென்றால் போராட்டக் களமென்று:)

    ReplyDelete
  6. அனுபவம் புதுமை. தரப்பட்டதை நீங்கள் ஏற்றுக்கொண்டதால் உங்களுக்கு அது கிடைத்தது. இன்று நிம்மதியுடன் திரும்பிப் பார்க்கமுடிகிறது.

    நமது மக்களில் பலர் சொந்த ஊரிலேயே வேலை கிடைக்காதா என ஏங்குபவர்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் போவதே அவர்களுக்குப் பெரிய்ய சவால். என்னோடு மத்திய அமைச்சரவையில் புது டில்லியில் அப்போது சேர்ந்த இளைஞர்களில் பெரும்பாலானோர் அங்கே காலூன்றவே இல்லை. தங்களது மாநிலத்துக்கான மாறுதலையே எப்போதும் முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அல்லது வேலையை ராஜினாமா செய்து வேறு வேலை தேடி சென்னை சென்றுவிட்டார்கள். நான் புது டில்லியில் நிலைத்ததோடு, வாய்ப்புகள் வந்தபின் வெளிநாடுகளுக்கும் குடும்பத்துடன் சென்றேன். சுமார் 20 வருடங்கள் வெவ்வேறு நாடுகளில் பணியும் வாழ்க்கையும். அது மாபெரும் கதை. இங்கே சொல்லி போரடிக்கமாட்டேன்.

    ReplyDelete
  7. இரண்டு விஷயங்கள் எனக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது... ஒன்று உங்களுடைய உழைப்பு இன்னொன்று நியாபக சக்தி...

    ReplyDelete
  8. உங்கள் திறமையால் கடினமான பணிகளையும் சாதித்துள்ளீர்கள். தாங்கள் சிறந்த முன்னுதாரணம் என்பதில் ஐயமில்லை.

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. சுஜாதா சொன்னது போன்று வயதாகும்போது 60 வயது உள்ள நிகழ்வுகள் நினைவு மங்குவதில்லை. ஆனால் குளிக்கப் போகும் முன் கழட்டி வைத்த கண்ணாடி வைத்த இடம் நியாபகம் வராது.

    --
    Jayakumar

    பி.கு பௌல் மில் என்பதை பால் மில் என்று திருத்தி கொள்ளவும்.

    ReplyDelete
  11. எந்த சோதனையையும் சாதனையாக்கி, தனது வாழ்க்கை அனுபவங்களாக சொல்லி வரும் ஜீ.எம்.பி அய்யா அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  12. மனதில் உறுதி இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதற்கு தங்களது பதிவு நல்ல எடுத்துக்காட்டு ஐயா.

    இந்தப்பதிவு எனக்கு இப்பொழுதுதான் டேஷ்போர்டில் வந்தது ஐயா அதாவது 24.06.2016 அதிகாலை 1.32 am

    ReplyDelete
  13. அனுபவ பதிவு படிக்க மிக சுவராஸ்யமாக இருந்தது

    ReplyDelete
  14. தங்களின் எழுத்தைப் படிக்கும் இளைஞர்கள், முதியோர் என அனைவரும் ஊக்கம் பெறுபவர் ஐயா. ஒவ்வொரு அனுபவப்பதிவிலும் உங்களுடைய மன உறுதியைக் காணமுடிகிறது.

    ReplyDelete

  15. @ டாக்டர் கந்தசாமி
    பாராட்டுக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ கீதா சாம்பசிவம்
    பாராட்டுக்கு நன்றி மேம்

    ReplyDelete

  17. @ வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மோகன் ஜி

    ReplyDelete

  18. @ ஸ்ரீ ராம்
    வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  19. @ பகவான் ஜி
    வாழ்வு எனும் போராட்ட களத்தில் வெற்றி என்பது தானாக வருவதில்லை. அதற்காகப் பாடுபட வேண்டும் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  20. @ ஏகாந்தன்
    நான் கதை சொல்லிப் போரடித்து விட்டேனா சார். வருகைக்கு நன்றி

    ReplyDelete

  21. @ ஸ்ரீ மலையப்பன் ஸ்ரீராம்
    நினைவாற்றல் எல்லோருக்கும் இருப்பதுதான் நாம் முக்கியமில்லாதவற்றை மறந்து விடுவோம் இன்னொன்று உழைப்பு அது கிடைத்த வாய்ப்பைப் பயன் படுத்துவதில் இருந்தது வருகைக்கு நன்றி மலையப்பன் சார்

    ReplyDelete

  22. @ டி என் முரளிதரன்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சார்

    ReplyDelete

  23. @ ஜேகே 22384
    /குளிக்கப் போகும் முன் கழட்டி வைத்த கண்ணாடி வைத்த இடம் நியாபகம் வராது/ இதற்குப் பெயர் AAADD பார்க்க என் பதிவு http://gmbat1649.blogspot.in/2013/05/aaadd.htmlநான் சொன்னது பௌல் மில்தான் பால் மில் என்பது வேறு வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  24. @ தி தமிழ் இளங்கோ
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  25. @ கில்லர் ஜி
    அது என்னவோ தெரியவில்லை. பதிவுகள் டாஷ் போர்டில் தாமதமாகவே வருகிற்து வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  26. @ அவர்கள் உண்மைகள்
    வந்து ரசித்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  27. டாக்டர் ஜம்புலிங்கம்
    உங்களைப் போன்றோர் பாராட்டு ஊக்கம் தருகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  28. தன்னம்பிக்கையும் உழைப்பும் கற்கும் ஆர்வமும் இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று சொன்னது பதிவு! அருமையான அனுபவ பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  29. நீங்கள் போரடிக்கிறீர்கள் என்கிற அர்த்தத்தில் அதை எழுதவில்லை. தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

    ReplyDelete

  30. @ தளிர் சுரேஷ் ,
    சாதனைக்கு அளவுகோல் இல்லை சார் ஒருவருக்குச் சாதனை எனப்படுவது மற்றவருக்கு அப்படி எண்ணத் தோன்றாது வருகைக்கு நன்றி

    ReplyDelete

  31. @ ஏகாந்தன் ,
    இதில் தவறாக எண்ண என்ன இருக்கிறது. மீள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  32. எத்தனை எத்தனை அனுபவங்கள்... கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு உங்கள் வாழ்விலிருந்தே உதாரணம் தந்தது நன்று.

    ReplyDelete

  33. @ வெங்கட் நாகராஜ்
    உங்களுக்குத் தெரிகிறது /சமூக அல்லது பொது விஷயங்களோடு கலக்கும் பொழுது தான் சுயசரிதைகள் சிறப்பும் சுவையும் பெறுகின்றன.
    இல்லாத பட்சத்தில் தனிநபர் சார்ந்தவை தான்/. இப்படியும் கருத்துண்டு. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  34. பழக்கப்பட்ட பணியைச் செய்வதை விட, புதிய சவாலான பணியை செய்யும்போது ஆரம்பத்தில் சில இடர்ப்பாடுகள் இருந்தாலும் அதைத் தாண்டி இட்ட பணியை செம்மையாக செய்து செய்தால் முடிவில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. தங்களின் அனுபவம் அதை சொல்கிறது. பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
  35. @ வே நடனசபாபதி
    வருகை தந்து பதிவை ரசித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete