வியாழன், 27 அக்டோபர், 2022

சிந்திக்க வேண்டிய பிரச்சனை

 


                            சிந்திக்க வேண்டிய பிரச்சனை
                            ------------------------------------------



 நான் திருச்சியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று பெங்களூர் வந்தபோது ஓய்வை அனுபவிக்க வேண்டுமானால் நம் உடல் உறுப்புக்களும் புலன்களும் ஒழுங்காக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறுவயதிலிருந்தே கண்ணாடி அணியத் தேவையாகி விட்டது. பணியில் இருக்கும்போது எனக்கு காது கேட்பதில் கொஞ்சம் பிரச்சனை இருந்தது. வேலையில் இருக்கும் போது சரியாக கவனிக்க முடியவில்லை. ஆகவே இங்கு வந்ததும் ஒரு காது நிபுணரிடம் சென்றேன். அவர் எனக்கு stapidectomy என்னும் காது ஜவ்வு இறுக்கம் இருப்பதாகவும் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சொன்னார். அறுவைச் சிகிச்சை செய்தால் இருக்கும் கேட்கும் திறனும் போய் விடுமோ என்ற அச்சம் இருந்தது. நான் டாக்டரிடம் எனக்கு முழுதும் கேட்கும் திறன் கிடைக்க எத்தனை சதம் வாய்ப்பு இருக்கிறது என்று கேட்டேன். அவர் 90% என்றார். நமக்கு என்று அந்த மீதி பத்து சதத்தால் இருக்கும் திறனும் போய் விடுமோ என்ற பயம். எதற்கும் இன்னொரு நிபுணரைப் பார்க்கலாம் என்று தீர்மானித்து வேறொரு டாக்டரை அணுகினோம். அவரும் அறுவைச் சிகிச்சை வேண்டும் என்றார். பூரண குணம் கிடைக்க என்ன வாய்ப்பு என்று அவரிடமும் கேட்டேன். அதற்கு அவர், YOU WILL HEAR WELL  என்றார். அந்த உறுதி என்னை அவரிடம் அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வைத்தது உஷ்... அப்பாடா.. ஒரு பதிவு எழுதுவதற்கு இவ்வளவு முன்னுரையா.....நான் இதுவரை எழுதியதற்கும் இனி எழுதப் போவதற்கும் சம்பந்தமில்லை. சம்பவ நிலைக்களனை விளக்க இவ்வளவும் தேவைப் பட்டது.( ? )
அறுவைச் சிகிச்சைக்கு நான் ஒரு நாள் மருத்துவமனையில்  இருக்க வேண்டும் என்றார்கள். என்னுடன் அன்று இரவு மருத்துவ மனையில் என் மனைவியும் தங்க முடிவாயிற்று.அங்கு இன்னொரு அறையில் இன்னொருத்தரும் சிகிச்சைக்கு இருந்தார். அவருக்குத் துணையாக ஒரு பெரியவரும் இருந்தார். அன்று இரவு தூங்கப் போகும்முன் அந்தப் பெரியவர் என் மனைவியிடம் தனக்கு தூங்கும் போது குறட்டை விடும் பழக்கம் இருக்கிறதென்றும் அதைப் பொறுத்துக் கொள்ளும்படியும் வேண்டினார்.
என் மனைவியும் “ஓ, அதனாலென்ன .... பரவாயில்லை என்றிருக்கிறார் அதுவுமல்லாமல் இப்படி ஒளிவு மறைவு இல்லாமல் அவர் கூறியது அவர் மேல் ஒரு தனி மதிப்பே வந்துவிட்டது அவளுக்கு. ஆனால் அது அன்றைக்கு மட்டும்தான். இரவு உறங்கப்போக  ஆயத்தம் செய்ய அவளுக்கு பயம் வந்து விட்டது. நிசப்தமான இரவில் ஒரு சிங்கம் அருகில் வந்து உறுமுவதுபோல் இருந்திருக்கிறது. பிறகு அவளுக்கு  அந்தப் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது.. இருந்தாலும் இப்படி ஒரு குறட்டைச் சப்தம் இருக்கும் என்று அவள் நினைத்துப் பார்க்கவில்லை. என் அருகில் வந்து சப்தத்தைக் கேட்கச் சொன்னார். எனக்குத்தான் காது காதாயிருக்கவில்லையே. ஏதோ சிறு சப்தம் .அதற்குப் போய் இவ்வளவு மருள்கிறாயே என்றேன். நாளை உனக்கு ஆப்பரேஷன் முடிந்தபிறகு கேட்க வைக்க வேண்டும் என்று கருவிக் கொண்டாள்.
மும்பை அருகே இருக்கும் உல்லாஸ் நகருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்குச் சென்றோம். முதல் நாள் இரவு ஒரு அறையில் நாங்கள் நால்வர் தங்க ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அந்த இரவு அங்கு ஒரு தாளவாத்தியக் கச்சேரியே நடந்தது. என்னைத் தவிர மற்ற மூவரும் உண்மையிலேயே குறட்டை விட்டுத் தூங்கினர். அன்று சிவராத்திரியாயிருந்திருந்தால்  எனக்கு கண்விழித்த பலன் கிடைத்திருக்கும். வித விதமான ஏற்ற இறக்கங்களுடன் வெவ்வேறு சுருதிகளில் ஒரு அபஸ்வரக் கச்சேரியே இரவு முழுவதும் நடந்தேறியது.
NOW LIGHTER THINGS APART இந்தக் குறட்டை என்பது என்ன.? வியாதியா? நிறுத்த முடியுமா.?குறட்டை விட்டுத் தூங்குபவரை அவர்கள் தூக்கத்தை சற்றே குலைத்தால் ஒரு சில விநாடிகளுக்கு குறட்டை சப்தம் நிற்கலாம்
குறட்டை என்பது என்ன. ?மூச்சுப்பாதையில் ஏற்படும் சில அதிர்வுகளே குறட்டை சப்தமாகத் கேட்கிறது.நாம் உறங்கிய பின் நம் சுவாசக் குழாயில் இருக்கும் தசைகள் relax ஆகுமாம்.அந்த நேரத்தில் தொண்டை சுருங்கத் தொடங்குமாம். சுருங்கும் தொண்டையில் காற்று போய் வரும் பாதை போதுமானதாக இல்லாமல் இருக்குமாம் அழுத்தம் அடையும் தொண்டை பின் புற தசைகளை அதிரச் செய்யும்போது வெளியாகும் சப்தமே குறட்டை எனப்படுகிறது குறட்டைக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதிக உடல் எடை.தொண்டை பலமின்மை, தொண்டைப் பகுதியில் கொழுப்பு சேகரம், தாடையின் அமைப்பு, மூக்கு துவாரத்தில் தடுப்பு மல்லாக்கப் படுக்கும்போது நாக்கு பின்னோக்கி இழுக்கப் படுவதால் தடங்கல் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம். இதுவே OSA  எனப்படும் அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா என்னும் நோய்க்கு அடிகோலியாக இருக்கலாம் அப்னியா என்றால் தற்காலிக மூச்சு நிறுத்தம் என்று பொருள்படும் உறங்கும்போது மூச்சு நின்று நின்று தொடரும் . இதனால் பாதிப்புக்கு ஆளானவர்கள் பகல் நேரத்தில் சோர்வாகக் காணப் படலாம்
பொதுவாக வயதானவர்களுக்கு குறட்டை விடும் பழக்கம் வரலாம் குறட்டையால் வாழ்க்கை முறையே அவதிக்குள்ளாகலாம். கணவனின் குறட்டையால் உறக்கம் இழந்து விவாகரத்து கோரிய பெண்களைப் பற்றிக் கேள்விப்படும் அதே நேரத்தில் அந்த சப்தத்துக்குப் ( தாலாட்டு. ?) பழக்கப் பட்ட மனைவியர் அது இல்லாமல் உறக்கம் வருவதில்லை என்றும் கூறலாம் எதையும் எளிதாகவே எடுத்துக் கொள்ளப் பழகிவிட்ட நாம் எப்பொழுது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிந்திருப்பதும் அவசியம். ( விக்கிப் பீடியாவுக்கு நன்றி

SNORING. NOTE that the snorting sound is most often caused by the vibration of the soft palate. and the uvula
Snoring sound production is most often from the soft palate and uvula. The black arrow points to the soft palate and the grey arrow points to the uvul


5 கருத்துகள்:

  1. குறட்டை பற்றி அறியா செய்திகளை அறிந்து கொண்டேன். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  2. குறட்டையால் இவ்வளவு சிக்கலா? அப்பப்பா.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் அறுவை சிகிச்சை என்னவாயிற்று என்று சொல்லவில்லையே...?

    பதிலளிநீக்கு
  4. உங்கள் கதையை நிறுத்திவிட்டு குறட்டை புராணமாகிவிட்டதே

    பதிலளிநீக்கு
  5. எங்கள் தாத்தா விடும் குறட்டையை சிறுவயதில் நானும் கேட்டு பயந்திருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன்.  ஏற்ற இறக்கங்களுடன் பயங்கரமாக இருக்கும்.  அப்புறம் இப்போது நானே அந்த நிலையில் குறட்டை விட்டு மற்றவர்களை, குறிப்பாக பாஸை அச்சுறுத்தி வருகிறேன்!  யார் என்ன குறட்டை விட்டாலும், அது ஒரு லயத்துக்கு வந்தபிறகு மற்றவர்கள் அவர்கள் தூக்கத்தைத் தொடர ஆரம்பித்து விடுவார்கள்!

    பதிலளிநீக்கு