வியாழன், 19 ஜூலை, 2012

பார்வையும் மௌனமும்.


                                           பார்வையும் மௌனமும்.
                                           -----------------------------------
                                                      ( ஒரு சிறு கதை.)


ஹரே ராம, ஹரே ராம, ராமராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ணகிருஷ்ண ஹரே ஹரே வாய் ஓயாமல் ஈசுவரன் நாமத்தை ஜெபித்துக் கொண்டு இருக்கட்டும். மனம் அலைபாயாமல் ஒரு நிலைப் படும். உன் துன்பங்களை மறக்க இதுதான் சிறந்த வழி என்று , அன்று யாரோ சொல்லிச் சென்றதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்ந்தாள் காமுப்பாட்டி.வாய் ஓயாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கலாம். மனம் ஓயாமல் சிந்திப்பதை தடுக்க முடியுமா.? பாட்டி என்று எல்லோரும் அழைக்கின்றனரே. அப்படி அவளுக்கு என்னதான் வயதாகிவிட்டது.ஒரு முப்பத்தைந்து இருக்குமா. ? முப்பத்தைந்து வயதில் பாட்டியா.? திருமணமே ஆகாதவள் எப்படிப் பாட்டியாக முடியும்.?

சிறு வயதில் வைசூரி வந்து பார்வை போனவளை அவளது தமையன் சுந்தா எனும் சுந்தரேசன்தான் பராமரித்து வந்தார். ஒரு கப்பல் கம்பனியில் ஸ்டூவர்ட் ஆகப் பணியாற்றி அப்போதைய ரங்கூனில் பணியாற்றி வந்தவர் நல்ல நிலையில்தான் இருந்தார். எப்போதும்போல் ஒரே மாதிரியாக வாழ்க்கை அமைவதில்லையே. இரண்டாம் உலகப் போர் பலரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுவிட்டது. அவரவர் உயிர் தப்பிப் பிழைக்க இடம் பெயர்வது தவிர வேறு வழி இருக்கவில்லை. ஆங்கிலேயரதும் ஜப்பானியரதும் குண்டு மழைக்குப் பலியானோர் எண்ணிக்கை கூடிக் கொண்டே போயிற்று. ஆயிரக் கணக்கானோர் உழைத்து சேர்த்த பொருளைத் துறந்து உடல் ஆவி  காக்க நடந்தே தூரத்தைக் கடக்கச் செய்த முயற்சியில் மனம் உடைந்தவர் பலர் .பல சமயங்களில் எடுக்கும் முடிவு சரியா தவறா என்று சிந்திக்கக் கூட முடியாத நேரத்தில் எடுக்கப் படுகிறது.கட்டிய மனைவி,பெற்ற பிள்ளைகள் இருவர் கண்
தெரியாத சகோதரி; மணமாகாதவள்  யௌவனம் குன்றாதவள் . உயிருக்குப் பயந்து ஓடும்போது அவளைச் சேதமில்லாமல் ஊர் கொண்டு போய்ச் சேர்க்க அவளது தலை மழிக்கப் பட்டது. மணமேயாகாதவளுக்கு விதவைக் கோலம் போடப் பட்டது. உயிர் பிழைக்க மெய் வருந்தி வந்து சேர்ந்தபோது அவளுக்குச் சற்றே மனம் பிறழ்ந்திருந்தது.,சிறிது சப்தம் கேட்டாலும் நிலை குலைந்து போய்விடுவாள் ஆகாய விமானங்கள் குண்டு மாரி பொழிகின்றன என்றே பயந்து அலறுவாள்.

”‘ராம ராம ராம ராம’ சுந்தா, பேப்பர் பையன் பேப்பர் போட்டுட்டு போய் விட்டான். மதிலோரத்தில் விழுந்திருக்கு பார்” கண் தெரியாதவ.ள்தான். ஆனாலும் வந்தது பேப்பர் பையன், வீசி எறிந்த பேப்பர் மதிலோரத்தில் வீழ்ந்திருக்கிறது என்று துல்லியமாகச் சொல்லுவாள், காமுப் பாட்டி. அவளைப் போய் பாட்டி என்று சொல்ல மனம் வருவதில்லை. ஆகவே இனி அவள் வெறும் காமுதான். கண்புலன் இல்லாதிருந்தாலும் காமுவுக்கு, மீதி எல்லாப் புலன்களும் மும்மடங்கு கூர்மையானவை. அவளது எல்லா வேலைகளையும் அவளே செய்து கொள்வாள். அடுப்பு மூட்டி வென்னீர்போட்டு குளித்து, துணி துவைத்து என்று எல்லாப் பணிகளும் செய்வாள். அவளுக்கு சப்தம் சிறிது அதிகமானாலும் துடித்து விடுவாள். ‘ என் ஆயுசை எடுத்துக் கொள். குண்டு போடாதே’ என்று வானம் பார்த்து ( ? ) அலறுவாள். அந்த நேரம் மாத்திரம் மட்டுமே அவள் வித்தியாசமாய் நடந்து கொள்வாள். அதனால் அந்த வீட்டில் ஒருவர் பேசுவது அடுத்தவருக்குக் கேட்பதே கடினம் என்றவகையில் மெதுவாகவே உரையாடுவார்கள்

.
காமு அந்த வீட்டில் இன்னொரு பொருள் என்ற நிலையிலேயே கருதப் பட்டு வந்தாள். என்ன இருந்தாலும் அவளும் ஒரு பெண்தானே. அவளுக்கும் ஆசாபாசங்கள் இருக்காதா.?உடலும் மனதும் துணைக்காக ஏங்காதா.?. சுந்தரேசன் மனைவிக்கு இந்த எண்ணம் அடிக்கடி ஏற்படுவதுண்டு. தன் கணவனிடம் அன்பாகப் பேசவே தயங்குவாள். காமுவுக்குத்தான் பாம்புச் செவியாயிற்றே. சிறிது சலனம் ஏற்பட்டாலும் ‘ என்னஎன்று கேட்டுவிடுவாள். அந்த வீட்டுக்கு வந்து போகிறவர் யார் யார் என்று காமுவுக்கு நன்றாகத் தெரியும் காலடி ஓசையிலேயே வித்தியாசம் கண்டு கேள்விகள் கேட்கத் துவங்கி விடுவாள்.

சுந்தரேசனின் மனைவியின் குடும்பத்து உறவினர்கள் அடிக்கடி வந்து போவார்கள் பிள்ளைகளுக்கு ட்யூஷன் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் வருவார். இவர்கள் எல்லோரையும் காமுவுக்கு அடையாளம் ( ? ) தெரியும். காமுவுக்கு நல்ல குரல் வளம். அவளுக்குப் பாட்டு சொல்லிக் கொடுத்தால். இசையில் மனம் லயித்து அவளைப் பற்றிய சிந்தனைகள் அவளை அதிகம் வாட்டாது என்று எண்ணி காமுவுக்கு பாட்டு சொல்லிக் கொடுக்க ஏற்பாடாயிற்று. மதியம் பாட்டு சொல்லிக் கொடுக்க ஆசிரியர் வரும் சமயம் அநேகமாக வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள்.உச்சஸ்தாயியில் வரும் பாட்டை தவிர்க்க ஆசிரியரிடம் வேண்டுகோள் வைக்கப் பட்டது. ஒரு விதத்தில் அது சுந்தரேசனின் மனைவிக்கு அனுகூலமாக இருந்தது. அவருடைய மதிய உறக்கம் கெடாது அல்லவா.

வீட்டில் போதிய மனிதர்கள் இருந்தும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்வதில்லை. என்னதான் பேச முனைந்தாலும் ஒரு இறுக்கச் சூழல் இருந்து கொண்டே இருந்தது. மனதில் தோன்றும் எண்ணங்கள் வெளிப்படுத்தப் படாமல் அநேகமாக சருகாகவே உதிர்ந்து விடுவதுண்டு. காமுவுக்கு சில நேரங்களில் எல்லாவற்றின் மீதும் ஆத்திரம் வரும். அப்போதெல்லாம் அவள் ஏதாவது சொல்ல வரும் போது கிருஷ்ணா, ராமா “ என்று ஜபித்துக் கொண்டிரு. மனசை அலைய விடாதே என்று அடக்கி விடுவார் சுந்தரேசன். அவருக்குப் பதில் தெரியாக் கேள்விகள் கேட்டுவிடுவாளோ என்னும் பயம்.. ஒன்றுமே தெரியாமல் பார்வையே இல்லாமல் வெறும் வார்த்தைகளைக் கொண்டு மனதை எதில் லயிக்கச் செய்யமுடியும். ?கிருஷ்ணனையும் ராமனையும் வெறும் வார்த்தைகளால் தெரிந்து கொள்ளச் சொல்கிறார்களே என்று கோபம் வரும் அந்த உணர்ச்சியையும் யாரிடமும் காட்ட முடியாது.

ஒரு முறை பாட்டுப் படித்துக் கொண்டிருந்தபோது எங்கோ ஒரு பட்டாசுச் சத்தம் கேட்டு அல்றினாள். ” என் ஆயுசை எடுத்துக் கொள்; குண்டு போடாதே” என்று துடித்தவளை அனிச்சையாக பாட்டு வாத்தியார் கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். முதல் முறை ஒரு ஆணின் ஸ்பரிசம் காமுவுக்குள்  என்னவோ சலனங்களை ஏற்படுத்தியது. எதுவோ தனக்கு மறுக்கப்பட்டு இப்போது அறியாமல் பெறப் படும்போது சற்றே மனமும் உடலும் குறு குறுத்தது. என்னவோ தவறு செய்கிறோமோ என்று தோன்றினாலும் அந்தத் தவறை செய்வதில் அலாதி இன்பம் இருப்பதை உணர்ந்தாள்..பாட்டு ஆசிரியரும் சற்றும் யோசிக்காமல் ஆறுதலாக அணைத்தவர், யாராவது பார்த்து விடுவார்களோ என்றுதான் பயந்தார். கண் தெரியாவிட்டால்தான் என்ன. ?அவளது உடலில் ஓடிய உணர்ச்சிகள் அவரால் உணரப் பட்டதே. ” வெறும் வெடிச்சத்தம்தான். யாரும் குண்டு போடவில்லை “என்று ஆறுதலாகக் கூறியவர் அவளுடைய இந்த பயம் போக்கும் மருந்து தன்னிடம் இருப்பதை உணர்ந்தார். 

அடுத்த சில நாட்களில் காமுவிடம் சற்று மாற்றம் இருப்பதை சுந்தரேசன் உணர்ந்து கொண்டார் .ராம ராமாவுக்குப் பதில் சில பாட்டுக்கள் முணுமுணுக்கப் பட்டன.ஆசை முகம் மறந்து போச்சே “ என்றும் கண்ணில் தெரியுதொரு தோற்றம் “ என்றும் அவளது பாட்டு சத்தம் இயல்புக்கு முரணாக ஒலிக்கக் கேட்க சுந்தரேசன் தன் மனைவியிடம் இது பற்றிக் கேட்டார். ஒரு பெண்ணின் மனது இன்னொரு பெண்ணுக்குத் தெரியலாம் அல்லவா.

“காமுவின் சுபாவத்தில் என்னவோ மாற்றம் தெரிகிறதே ,கவனித்தாயா.

“ அவள் முன்னைப் போல் இல்லை. நானும் கவனித்தேன்..அவகிட்ட இது பற்றி எப்படிக் கேட்பது “

“ நீ எதையும் கேட்டு வைக்காதே. ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் தானாத் தெரியறது.என்று மனைவிக்கு கடிவாளம் போட்டார். சுந்தரேசன்.

அந்த நாள் சீக்கிரமே வந்தது. காமு ஒரு நாள் “வெண்ணிலவு நீ எனக்கு;
மேவுகடல் நான் உனக்கு; பண்ணின் சுதி நீ எனக்கு; பாட்டினிமை நான் உனக்கு “ என்று பாடிக் கொண்டிருந்தாள்.

“ ஹாய் ! அத்தைப் பாட்டி நல்லாப் பாடறாங்களேஎன்று குழந்தைகள் பாராட்ட வந்ததே கோபம் காமுவுக்கு

.
“ நான் என்ன பாட்டியா உங்களுக்கு. கிருஷ்ணா ராமா ன்னு இருந்தா பாட்டியாகி விடுவேனா. காலா காலத்துல எனக்கும் கலியாணம் கார்த்தின்னு இருந்தா இப்படிக் கூப்பிடுவேளா..எல்லாம் ஒங்கப்பாவச் சொல்லணும் “ என்று பிலு பிலுக்க துவங்கி விட்டாள். யாருமே கொஞ்சமும் எதிர்பார்க்காத பிரச்சனையாகி விட்டது. காமுவை பாட்டி என்று நம்பச் செய்தது.

அதன் பின் எல்லோரிடமும் காமு சிடுசிடுவெனவே இருந்தாள் சுந்தரேசனும் அவன் மனைவியும் கலந்தாலோசித்தனர். காமுவின் மனம் முன்னைப் போல் ஈஸ்வர நாமத்தில் லயிக்கவில்லை. எப்போதும் பாடிக்கொண்டே இருந்தாள். காமுவை எப்படியாவது பாட்டுப் பாடுவதை நிறுத்தச் செய்ய வேண்டும்.பாடும் பாட்டு வேறு எண்ணங்களுக்கு வித்திடலாம் அதனை நிறைவேற்றும் உத்தியாக பாட்டு ஆசிரியரை வர வேண்டாம் என்று சொன்னார்கள். பாட்டுவாத்தியாருக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் , கொஞ்சம் புரியாதது போலவும் இருந்தது. எதையாவது கேட்கப் போய் எங்காவது கொண்டு விட்டால் என்ன செய்வது.? ஏதும் கேட்காமல் அவரும் நின்றுவிட்டார். பாட்டு நிறுத்தினது காமுவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் கேட்டாள். லௌகீகப் பாடல்கள் கற்றுக் கொள்வதால் மனம் 
கட்டுக்கடங்காமல் போய்விடும்.. அதனால் அவளுக்கும் மற்றவர்களுக்கும் மன அமைதி குறையும் என்றும் கூறி அவளை அடக்கப் பார்த்தனர். பாட்டு வாத்தியாரால்தான் எல்லாம் கெட்டுப் போவதாகவும் அதனால்தான் அவரை நிறுத்திவிட்டதாகவும் கூறினர். காமுவுக்கு எதையும் ஜீரணிக்க முடியவில்லை. என்னவென்று சொல்ல முடியாத ஒரு வைராக்கியம் அவளது உள்ளத்தில் எழுந்தது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விடாமல் பாடத் துவங்கி விட்டாள். பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடியும் கதையாய் தோன்றியது சுந்தரேசனுக்கும் அவர் மனைவிக்கும்.

இவ்வளவு நாள் இல்லாத பிரச்சனை இப்போது தலை தூக்குவது தெரிந்தது.
கண் தெரியாதவள், வேண்டாத எண்ண்ங்களுக்கு அடிமையாய் கெட்டுத் தொலந்தால் என்ன செய்வது. எதையாவது சொன்னால் எதிர்த்தல்லவா பேசுகிறாள். கண் தெரியாதது போல் வாயும் ஊமையாய் இருந்தால் எவ்வளவு நல்லதாயிருக்கும்.கணவன் மனைவி பேசிக்கொண்டதைக் காமு கேட்டு விட்டாள். என்னவென்று சொல்ல முடியாத பாரம் அவளை அழுத்திற்று. குருட்டுக் கண்களானாலும் கண்ணீருக்குப் பஞ்சமா என்ன.?ஒரு இரவு முழுவதும் அழுது கொண்டிருந்தாள். ‘ கண் தெரியாமல் இருப்பது போல் பேச்சும் இல்லாதிருக்க வேண்டும் என்றுதானே இவர்கள் விரும்புகிறார்கள். இனி என் வாயிலிருந்து ஒரு அட்சரமும் வெளிவராது. இனி என்றும் மௌனம்தான்என்று முடிவெடுத்துவிட்டாள் காமு.

ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இருண்ட உலகில் பல்வேறு  சப்தங்களுக்கிடையில் நிரந்தர மௌனத்தின் ஓசையிலேயே காலம் கடத்திய காமுவின் நினைவுகள் சுந்தரேசனுக்கு மிகுந்த மன வேதனையை அளித்தது.
“ மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாடவேண்டும் “எங்கோ ஒலிக்கும் பாடலும் அதன் முரணும் வலியை இன்னும் அதிகரிக்கச் செய்தது
-------------------------------------------------











.







                                             

திங்கள், 16 ஜூலை, 2012

பொழுது போக, பொழுது போக்க...


                                    பொழுது போக, பொழுது போக்க.
                                     --------------------------------------------
                                                 ஒரு சின்னக் கதை.
                                                  --------------------------


வென்னீர் போட்டாச்சா.? எப்பக் குளிச்சு எப்ப நான் ரெடியாகிறது.
‘மொதல்ல நீங்க டவல் தேடி எடுத்து, பாத்ரூம் போங்க. எனக்கு ரெண்டு கைதானே இருக்கு. எழுந்ததிலிருந்து ஒரே ஓட்டம்தான். குழந்தைகளுக்கு டிபன் ரெடி செய்யணும். ஸ்கூல் பஸ் வரதுக்குள்ள அவங்களும் ரெடியாக வேண்டாமா. எங்கிட்ட உங்க அவசரத்தைக் காட்டுங்க, ஏதோ கவர்னர் உத்தியோகத்துக்குப் போற மாதிரி. ....
‘என்ன, விட்டா பேசிட்டே போறே. கெய்சர் கெட்டுப்போனதால உங்கிட்ட வென்னீருக்கு நிக்க வேண்டி இருக்கு. சரி, சரி, டிபன் ரெடி பண்ணு. ‘

காலையில் பிள்ளைகளுக்கு வேண்டியதைச் செய்து, அவர்களைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதற்குள்போதும் போதும் என்றாகி விடும் மங்களத்துக்கு. இப்போது கணவனும் காலையில் தொந்தரவு தருகிறார். அவருக்கும் செய்ய வேண்டும். ஒரு வழியாக தேவைகளைப் பூர்த்தி செய்து, ,அப்பாடாஎன்று பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்தாள்.

அவள் கணவன் முன் வந்து, ‘இதப் பார்.இந்த டை சரியா இருக்கா....இந்தப் பேண்டுக்கு இந்த ஷர்ட் மேட்ச் ஆகிறதாஎன்று கேட்டுக்கொண்டு நின்றான்.

எல்லாம் சரியாத்தான் இருக்கு. உங்களுக்கு யாரும் பொண்ணு கொடுக்க வேண்டாம். ‘
‘என் கன்சல்டிங் அறையை சுத்தம் செய்து வைத்தாயா.?நாலு பேர் வந்து போற இடம்.
‘எல்லாம் சுத்தம் செய்தாச்சு.உங்கள் மேசை மேல் இன்றைய பேப்பர் வைத்திருக்கிறேன். நீங்க சொல்ற நாலு பேர் வந்து போகிற நேரம் போக மீதி நேரம் வரி விடாமல் படியுங்கள். கூடவே ஒரு பொருளும் வைத்திருக்கிறேன், உங்கள் உபயோகத்துக்கு.

இவ்வளவு களேபரத்துக்கும் பிற்கு டாக்டர் சுந்தரேசன், வீட்டின் முன் இருக்கும் தன் கன்சல்டிங் அறையில் உட்கார்ந்தான். மேசையின் மேல் இருந்த புதிய பொருளைப் பார்த்ததும் தன் மனைவியின் தீர்க்க தரிசனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அங்கே இருந்தது ஒரு ஈ ஓட்டும் FLY SWATTER.!.

                                                                      ஐடியா எப்படி.?
                                                                        -----------------------     


அந்த வருஷம் வானம் பொய்த்து மழை இல்லாமல் இருந்தது. ஓரிரு தூறல் போட்டு மழை பெய்யலாம் என்ற அறிகுறி தென்பட்டது. நிலம் திருத்த வேண்டும் அந்த விவசாயிக்கு உடல் முடியாமல் போய் சோர்ந்திருந்தான். இருக்கும் மகனோ நக்சலைட் என்னும் சந்தேகத்தில் பொலீசால் கைது செய்யப்பட்டுக் காவலில் இருந்தான். விவசாயி தன் கஷ்டங்களைக் கூறி மகனிடம் ஒரு பாட்டம் அழுதான். மறுநாள் மகனிடம் இருந்து தந்தைக்குஒரு கடிதம் வந்தது அதில் ‘ அப்பா, நீங்கள் நிலத்தை ஒன்றும் செய்யாதீர்கள். நம் நிலத்தில் ஓரிடத்தில் நான் துப்பாக்கி மற்றும் குண்டுகளைப் புதைத்து வைத்திருக்கிறேன். நீங்கள் ஏதாவது செய்யப் போய் எனக்கு பிரச்சனை ஆகலாம் “ என்று எழுதி இருந்தான்.

அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அவனுடைய நிலம் முழுவதும் ஆழ வெட்டப் பட்டது, நிலத்தில் ஏதும் கிடைக்கப் பெறாமல் போலீசார் ஏமாந்தனர்.. மகனின் புத்தி சாதுரியம் எண்ணி விவசாயி மகிழ்ந்தான்.



இனி சில எளிய கேள்விகள். விடைகள் கடைசியில்.

1.) ஒன்றிலிருந்து ஒன்பதுக்குள் மூன்று எண்கள் கூட்டினாலும் பெருக்கினாலும்     ஒரே விடை வரும். அந்த மூன்று எண்கள் என்ன.?
2.) நூறிலிருந்து எத்தனை முறை 25-ஐ கழிக்கலாம்.?
3.) ஒரு கடிகாரத்தில் இரண்டு மணி அடிக்க இரண்டு வினாடிகளானால் மூன்று மணி அடிக்க எவ்வளவு நேரமாகும்.?
4.) 10,9,8,7,6,5,4,3,2,1 இப்பொழுது நேரத்தைச் சொல்லுங்கள்.
5 ) ஒரு எண் மூன்று முறை உபயோகிக்கப்பட்டு அதன் கூட்டுத்தொகை 60- ஆனால் அந்த எண் என்ன.?
6.) ஒருவனுக்கு 10-மகன்கள். ஒவ்வொரு மகனுக்கும் ஒரு சகோதரி. அவனுக்கு எத்தனை குழந்தைகள்.?
7.)எத்தனை மாதங்களில் 28- நாட்கள் இருக்கின்றன. ?
8.) எந்த மாதத்தில் ஒருவன் குறைவாக உண்கிறான்.?
9.) 100- க்கும் 1000-துக்கும் என்ன வித்தியாசம்.?
10.) பல்லிருக்கும். வாயில்லை அது எது.?



கேள்விக்குப் பதில்.

1.) 1,2,3.
2.) ஒரே முறை ஒரு முறை கழித்தபின் நூறு இருக்காது.
3.) நான்கு வினாடிகள். மணி அடிக்கும் இடைவெளி 2 வினாடிகள்.
4.) டென் டு ஒன்
5.) ஐந்து 55+ 5= 60.
6.) 11. ஏனென்றால் ஒரே பெண் பத்து மகன்களுடைய சகோதரியுமாவாள்.
7.) எல்லா மாதங்களிலும்.
8.)ஃபெப்ருவரி. அந்த மாதம் குறைந்த நாட்களுடையது.
9.) ஒரு பூஜ்யம்.
10) தலைவாரும் சீப்



இனி ஒரு ஜோக்.( எழுத்தாளன் பற்றியது. )
----------------------------------------------------------------------------
ஒரு எழுத்தாளன் மற்ற ஒரு எழுத்தாளர் பற்றி. அவருக்கு எழுதுவதற்கு விஷயம் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியாது. ஆனால் அவரது காதுகளை ஒரு பெரிய தொகைக்கு இன்ஷுர் செய்திருக்கிறார். “

ஒரு நேர்காணலில்.
--------------------------------- 

உங்களுக்கு இந்த லைனில் எவ்வளவு வருட  அனுபவம்.?
‘ 55- வருடங்கள். ‘
‘உங்கள் வயதென்ன.?
“ 47 “
‘ 47 வயதுக்காரருக்கு 55- வருட அனுபவம் .எப்படி.?
‘ ஓவர்டைம். “

கடைசியாக ஒன்று.
 ------------------------------

தொலைபேசியில்  டையல் செய்தபோது மறுமுனையிலிருந்து ‘ ராங் நம்பர் ‘என்று பதில் வந்தது.
“ உண்மையாகவா “ என்றேன்.
“ இதற்கு முன் உங்களிடம் பொய் பேசி இருக்கிறேனா என்று உடனே பதில் வந்தது.
-----------------------------------------------      .




       
      .           




சனி, 14 ஜூலை, 2012

ஆலயதரிசனம்..அனுபவங்கள்---3


                              ஆலய தரிசனம்... அனுபவங்கள்--3
                              ------------------------------------------------


ஒரு இடத்தில் தங்கி அங்கிருந்து அடுத்து இருக்கும் கோயில்களுக்குச் சென்று வருவதே சிறந்தது. ஆனால் தூரம் அதிகமானால் பயணம் சோர்வடையச் செய்து விடுகிறது .( வயதாவதின் தாக்கம்.) நாம் செல்லும் நேரம் கோயில் நடை திறந்திருக்க வேண்டும், தரிசனம் கிடைக்க வேண்டும்.ஆகவே நாங்கள் தங்குமிடத்தை மாற்றிக் கொள்வதுண்டு. கும்பகோணத்திலிருந்து முதலில், வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் பூஜை, பிறகு அங்கிருந்து சிதம்பரம். இரண்டு கோயில்களிலும் அவரவர் நட்சத்திரத்தன்று மாதமொரு முறை பூஜை செய்த பிரசாதம் பெறுவது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. நாங்கள் வருவதை எங்களுக்காக பூஜை செய்யும் குருக்களுக்கு முன்பே தொலை பேசியில் தெரிவித்து விடுவோம். இந்த முறை உறவினர்கள் பலரும் அவர்களுக்காக பூஜை செய்து பிரசாதம் கொண்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். வைத்தீஸ்வரன் கோயிலில் உப்பு மிளகிடுவதும் நீரில் வெல்லம் கரைப்பதும் வேண்டுவார்கள். இப்போதெல்லாம் குளத்தில் வெல்லம் கரைக்க அனுமதிப்பதில்லை. அதற்கான இடத்தில் வைத்து விட வேண்டும். அன்னை தையல்நாயகி. குழந்தை முத்துக்குமாரசாமி, அங்காரகன் மற்றுமுள்ள தெய்வங்கள். நவகிரக தலத்தில் அங்காரகனுக்கான க்ஷேத்திரம் இது. நாளுக்கு நாள் இந்த நாடி சோதிட தரகர்கள் தொந்தரவு அதிகரிக்கிறது. கோயிலுக்கல்லாமல் நாடி சோதிடத்துக்கும் பெயர் பெற்ற இடம் வைத்தீஸ்வரன் கோயில்.

அங்கிருந்து சுமார் பதினோரு மணி அளவில் சிதம்பரம் சென்றோம். கோடையின் கடுமை கொஞ்சமும் குறைய வில்லை. சிதம்பரம்  தீட்சிதர் மாலை ஆறரை மணிக்கு மேல் கோயிலுக்கு வரச் சொன்னார். அதற்கு முன் சுற்று பிராகாரத்தில் கால் வைக்க முடியாத அளவு சூடு. மாலை ஐந்து மணிக்கு தில்லை காளி கோயிலுக்குச் சென்று தரிசனம் முடிந்து நிதானமாகக் கோயிலுக்குச் சென்றோம். ஒரு முறை கோயில் பிராகாரத்தை வலம் வந்தால் ஒரு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்திருப்போம். பிரம்மாண்டமான பெரிய கோயில். பரத நாட்டிய சாஸ்திரத்தில் கூறியுள்ள 108 கரண சிற்பங்கள் அங்கே நான்கு கோபுர வாசல்களிலும் காணலாம் கோயிலைப் பற்றி நான் அதிகம் கூறப் போவதில்லை. பலரும் எழுதி இருக்கிறார்கள் வலையில் நிறையவே எழுதப் பட்டிருக்கிறது. இருந்தாலும் ஒன்று விளங்க வில்லை, தெற்கு வாசல் வழியே உள்ளே நுழைந்தால் இடப் புறம் முக்குருணி வினாயகர். ஒரு பெரிய நந்தி சிலை. சிறைபட்டிருப்பதுபோல் காட்சி அளிக்கிறது. அத்ற்கு நேர் சற்று வலப்பக்கம் இருந்த ஒரு வழி  சுவரால் மூடப் பட்டிருக்கிறது. நந்தனார் கோயிலுக்குள் நுழைந்த வழி மூடப் பட்டுள்ளது என்று ஒரு சேதி. மற்றொரு விஷயம். கோயிலின் மதிலை ஒட்டி எல்லாப் பக்கங்களிலும் தூண்கள் நிரம்பிய இடம். ( எனக்கு அது குதிரை லாயத்தை நினைவு படுத்துகிறது. அந்த இடம் புழக்கத்தில் இல்லை. அதேபோல் அன்னை சிவகாம சுந்தரி ஆலயத்தை அடுத்த இடமும் உபயோகத்தில் இல்லாமல் தெரிகிறது. இதையெல்லாம் பராமரிக்காமல் இருப்பதன் காரணம் தெரியவில்லை. எங்கள் பூஜையைச் செய்து வரும் தீட்சிதருக்கும் சரியாகப் பதில் தெரியவில்லை. மேலும் மேலும் துருவிக் கேட்டால் அது விரும்பப் படாதது என்பதால் விட்டு விட்டேன். அங்கேயே சில காலம் தங்கி பலரையும் கேட்டு ஆராய்ந்தால் ஒரு சமயம் தெளிவு கிடைக்கலாம். வாதப் பிரதி வாதங்களுடனான பதிவுகள் வலையில் பல உள்ளன.ஆனால் இதைப் பற்றிய சேதி எனக்குக் கிடைக்கவில்லை.. முன்பொரு பதிவில் குழந்தைகள் மணச்சட்டம் தில்லை வாழ் அந்தணர்களிடையே மீறுவதில்தான் இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அவர்களின் பெண் குழந்தைகளும் படிக்கத் துவங்கி விட்டார்கள். மணமானவருக்குத்தான் கருவறையில் பூஜை செய்யும் உரிமையும் , அதை ஒட்டிக் கிடைக்கும் சலுகைகளும் என்பதால் அவர்களுக்குள்ளேயே இளவயது மணம் சாதாரணமாகக் கருதப் படுகிறது. ஆனித் திரு மஞ்சன விழாவின் போது சின்னச் சின்னக் குழந்தைகள் திருமணமான
அடையாளமாக மடிசார் புடவை உடுத்தி உலவும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது. தில்லை வாழ் அந்தணர்கள் விடாப்பிடியாக சில கொள்கைகளை கடைப் பிடிக்கிறார்கள். கோயிலில் இல்லாதிருந்த உண்டிகள் இப்போது காணப் படுகின்றன. கோயில் மூலவரே உற்சவராக வீதி உலா வரும் வழக்கம் முதல் பல பூஜை முறைகளும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் வித்தியாசமாக உள்ளது. இந்து அற நிலையத்துக்கும்  தீட்சிதர்களுக்குமான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எல்லாம் நல்ல முறையில் முடிய அந்த ஆடல்வல்லானே அருள் புரியட்டும்.

இன்னுமொரு சந்தேகம். தெரிந்தவர்கள் விளக்காலாம். போனமுறை திருமஞ்சனத்துக்கு வந்திருந்தபோது இரவு உற்சவர்களை எல்லாம் வீதி உலா எடுத்துச் செல்வதைக் கண்டேன். அதில் ஒன்று .கைலாச பர்வதம் என்று சொன்னதாக நினைவு. அதில் ராவணன் கைலாயத்தை தூக்க இருப்பதுபோலவும் அதன் மேல் உற்சவரை வீதி உலா கொண்டு சென்றார்கள். ராவணனுக்கு ஒன்பது தலைகளே இருந்தது.. அப்போது அந்த நேரத்தில் சந்தேகம் கேட்கக் கூடாது என்று எண்ணி வாளாயிருந்து விட்டேன். இந்த முறை அது பற்றி எங்கள் தீட்சிதரைக் கேட்டேன். ஒரு வேளை நாந்தான் தவறுதலாக ஒன்பது தலைகள் என்று எண்ணினேனோ என்று கேட்டேன். அவர் ஒன்பது தலைகள் சரியே என்றும் ராவணனின் யாழை பத்தாவது தலையாகக் கருதுவது ஐதீகம் என்றும் சொன்னார். இது சரியா. ? யாராவது தெளிவிக்கலாமே.


மறுநாள் காலை மீண்டும் தரிசனம் முடிந்து அங்கேயே உணவருந்தி மீண்டும் கும்பகோணம்  வந்தடைந்தோம். நான்கு நாட்கள் பயண அலைச்சல். உடல் அசதியாக இருக்கவே, அன்று பூராவும் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.மறு நாள் காலை கோயில்கள் நிரம்பி இருக்கும் கும்பகோணாத்தில் எந்த கோயிலுக்குப் போவது என்று சிறிது நேரம் தடுமாறினோம். ஏறக்குறைய எல்லாக் கோயில்களுக்கும் சென்றிருக்கிறோம். ஆகவே கும்பேசுவரரையும் . சாரங்கபாணியையும் தரிசிக்க முடிவு செய்தோம். முன்பே இரு கோயில்களிலும் திருவெழுக்கூற்றிருக்கை சுவரில் எழுதி இருந்தது பற்றி எழுதி இருந்தேன். மறுபடியும் அவற்றைப் படிக்கும்போது எப்பாடு பட்டாவது அது மாதிரி எழுத முயற்சிக்க வேண்டும் என்று தோன்றியது. எனக்கிருக்கும் தமிழ் அறிவு கொண்டு அப்படி நினைப்பதே முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல் இருக்கும். எழுதியவற்றையே படித்துப் பொருள் புரிந்து கொள்ள முடியவில்லை. அதை எழுதும் விதிகள் என்ன என்றும் தெரியாது. தெரிந்தவர் கூறி உதவினால் மகிழ்வேன். வலையில் எழுதும் விதிகள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்குமா தெரியவில்லை. என்னதான் முடிகிறது... பார்ப்போம்
( ஆலய தரிசன அனுபவங்கள் நிறைவடைகிறது.) 
------------------------------------------------      
      .           

     
  .






வியாழன், 12 ஜூலை, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்...2

                                ஆலய தரிசனம் அனுபவங்கள் --2
                                -----------------------------------------------



நாங்கள் கும்பகோணம் போய்ச் சேர்ந்து ஓட்டல் அறையில் எங்கள் உடைமைகளை வைத்து நோக்கினால் மணி பத்துக்கும் மேலாகி இருந்தது. கும்பகோணம் அருகே கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பற்றி என் மனைவி கேள்விப் பட்டிருந்தாள். எங்கிருக்கிறது , எப்படிப் போக வேண்டும் என்று ஓட்டலில் விசாரித்தால் யாருக்கும் சரியாகத் தெரிய வில்லை. உடனே போனாலும் கோயில் நடை திறந்திருக்க வாய்ப்பில்லை. உணவருந்தி ஓய்வெடுத்து மாலை செல்லலாம் என்றும் விவரங்களுக்கு கும்பகோணத்தில் இருந்த நண்பனை அணுகலாம் என்றும் தீர்மானித்து அவர்கள் வீட்டுக்கு ஃபோன் போட்டோம். நம்பர் புழக்கத்தில் இல்லை என்று பதில் வந்தது. முன்பு ஒரு முறை அவர்கள் வீட்டுக்குச் சென்ற ஞாபகத்தில் வழி விசாரித்து அங்கு போய்ச் சேர்ந்தோம். முதலில் அவர்கள் தொலைபேசி எண் மாறியிருக்கிறதா என்று கேட்டதற்கு.மாற்றம் ஏதுமில்லை அதே எண்தான் என்றார்கள்..இப்போது எனக்கு என் மனைவியை வார ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. தொலை பேசி எண் அங்கெல்லாம் ஏழு இலக்க எண்கள். என் மனைவி ஒரு இலக்கம் சேர்த்து எட்டு இலக்க எண்ணாக மாற்றியிருந்தாள்

அவர்கள் கருவேலிக்குப் போகும் வழியைக் கூறியதுடன், எங்களை அங்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவையும் ஏற்பாடு செய்தார்கள். கிடைத்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திஅருகில் இருந்த , நாங்கள் இதுவரை பார்க்காத கூத்தனூர் மஹாசரஸ்வதி ஆலயத்துக்கும்., நாச்சியார் கோயில் ஸ்ரீநிவாசபெருமாள் திருக் கோயிலுக்கும் சென்று வந்தோம். பூந்தோட்டம் அருகேயுள்ள மஹாசரஸ்வதி ஆலயத்தில் எங்கள் பேரக் குழந்தைகளின் கல்வி அறிவுக்கும், படிப்புக்கும் வேண்டிக் கொண்டோம். அழகான அமைதியான கோயில்.நல்ல தரிசனம். கும்பகோணத்திலிருந்து 30 கிலோமீட்டருக்கும் அதிக தூரம். .

கருவேலி சற்குணேஸ்வரர் ஆலயம் பழமை வாய்ந்தது. திருநாவுக்கரசரால் பாடப் பட்ட ஸ்தலம்.
மட்டிட்ட குழலார் சுழலில் வலைப்
பட்டிட்டு மயங்கிப் பரியாது நீர்
கட்டிட்ட வினை போகக் கருவிலிக்
கொட்டிட்டையுறைவான் கழல் கூடுமே.
( தேனையுடைய மலர்களை வைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு, மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக , கருவிலிக் கொட்டிட்டை உறையும் பெருமான் திரு வடிகளைக் கூடுவீராக.)

ஒரு காலத்தில் சீரும் சிறப்புமான பெரிய கோயிலாக இருந்ததாம். இரண்டாம் இராசாதிராசன் காலத்து நான்காம் ஆண்டுக் கல்வெட்டு , இவ்வூரை உய்யக் கொண்டார் வளநாட்டு வெண்ணட்டுக் குலோத்துங்க சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிக்கிறது. என்ற தகவல்கள் எல்லாம் ஊரின் , கோயிலின் பழமையைக் குறிக்கும். ஆனால் நேரில் காணும்போது ஒரு புதிய கோயிலைத்தான் காண முடிகிறது.

சென்ற நூற்றாண்டில் அக்கிராமத்தில் கருவிலி ராமைய்யர் ( குழந்தை அய்யர்) என்ற பக்தர் இருந்தார். நிலம் நீச்சு என்று இருந்த போதிலும் வந்த வருமானம் எல்லாம் அன்னதானத்துக்கே செலவிட்டாராம். 24 மணி நேரமும் அவர் இல்லத்தில் கோட்டை அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம். அன்னதானம் என்றால் கஞ்சி வார்ப்பதல்ல. பருப்பு பாயசத்துடன் நெய் மிதக்கும் அறுசுவை உணவு. உண்டவர் கை கழுவிய யம தீர்த்தத்தில் அவர்களது கையில் ஒட்டியிருந்த நெய் மிதக்குமாம். .இந்தக் குழந்தை அய்யரின் வம்ச வாரிசுகள் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி சகோதரர்கள்தான் இந்தக் கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்திய TRUST-ன் பின்னணியில் இருந்தவர்கள். இருப்பவர்கள். இந்த கிருஷ்ண மூர்த்திதான் இந்தியாவின் தலை சிறந்த மானேஜர் என்று கருதப்பட்டு BHEL, SAIL, MARUTHI  போன்ற நிறுவனங்களுக்குத் தலைவராய் இருந்தவர். ஓடாத திருவாரூர் தேரை திருச்சி BHEL –ல் இருந்தபோது ஓடச் செய்தவர். அவர் பிறந்து வளர்ந்த கருவிலி கொட்டிட்டை சற்குணேஸ்வர் ஆலயம் ஊருக்கு ஒதுக்குப் புறம் உள் வாங்கி இருப்பதால் பலரது கவனத்துக்கு வராமல் இருக்கிறது.

அமைதியான ஆலயம். அன்னை சர்வாங்க சுந்தரி காணக் கண் கோடி வேண்டும் அவ்வளவு அழகு. எங்கேயோ இருந்த எங்களை தன்னிடம் வரவழைத்து அருள் புரிந்த அவளுக்குக் கோடி கோடி நமஸ்காரம்.

கருவேலி என்பதை கரு, இலி என்று பிரிக்கலாம். இத்தல தெய்வங்களை வழிபட்டவனுக்கு , இனியும் ஒரு தாயின் கருவில் உருவாக வேண்டாம் எனும்படியான மோட்சத்தைக் கொடுக்கும்படியான வாய்ப்பு ஏற்படுமாம். .கருவிலி என்ற பெயரே மருவி கருவேலி என்றாகி விட்டதாம்.

ஆற்றவும் அவலத்தழுந்தாது நீர்
தோற்றுந் தீயொடு நீர் நிலந் தூவெளி
காற்றுமாகி நின்றான்ற்ன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

( நீங்கள் மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், அவனால் தோற்றுவிக்கப் படுகின்ற தீ, நீர், நிலம், காற்று, விசும்பு ஆகி நின்றவனும் கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக. )

கருவேலி சற்குணேஸ்வரர் சர்வாங்க சுந்தரி ஆலயம் குறித்த தகவல்களைக் கொடுத்துதவிய கோயில் நிர்வாகத்தாருக்கு நன்றியுடன் அடுத்த ஆலய தரிசன அனுபவங்களைத் தொடர்கிறேன்.

.
சற்குணேஸ்வரரை தரிசித்து திரும்பும்போது எதையோ விட்டு விட்டு வந்ததுபோல் தோன்றியது. சர்வாங்க சுந்தரியின் திருவுருவம் மனக் கண் முன் வந்து வந்து போயிற்று. நமக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான், ஒரு மணிநேர கோயில் தரிசனம். வரும் வழியில் திருநறையூர் என்று அழைக்கப் படும் நாச்சியார் கோயிலுக்கு வந்தோம். அய்யன் ஸ்ரீநிவாச பெருமாளைவிட தாயார் ஸ்ரீவஞ்சுளவல்லிக்குத்தான் முக்கியத்துவமோ என்று எண்ணும்படி ஊரே நாச்சியார் கோயில் என்று அழைக்கப் படுகிறது. கருவறையில் நின்ற கோலத்துடன் இருக்கும் பெருமானின் வலப் பக்கத்தில் தாயாரும் நிற்கிறார். .வலப் பக்கத்தில் நான்முகப் பிரமன் சங்கர்ஷணன் என்ற பெருமாளும், இடப் பக்கத்தில் வரிசையாக, அநிருத்தன் ப்ரத்யும்னன், சாம்பன் என்ற புருஷோத்தமன் என்பவர் தரிசனம் தருகின்றனர்,

உற்சவர் ஸ்ரீநிவாசருக்கு மூன்றங்குலம் முன்பாக நாச்சியார் சாவிக்கொத்து இடுப்பில் தொங்க தரும் காட்சியில் யார் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று சொல்லாமலே புரிபடும். கருடாழ்வார் கல் கருடன் என்று சிறப்பாக அழைக்கப் படுகிறார். பெருமாளுக்கு திருவாராதனம் செய்து முடித்தவுடன் பெரிய திருவடிக்கும் சமர்ப்பிக்கும் ஆராதனம் நடை பெறுகிறது. நாங்கள் சென்ற சமயம் அவருக்கு தைலக் காப்பிட்டு இருந்ததால் முக சேவை மட்டுமே சாத்தியமாயிற்று, ஒவ்வொரு கோயிலையும் தரிசித்து வரும்போது நம் முன்னோர்களை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. கோயில்களின் கம்பீரமும் சிற்பவேலைப் பாடுகளும் பெருமிதம் அடையச் செய்கிறது. அந்தக் காலத்தில் வாழ்க்கை நெறிமுறையே கோயிலை ஒட்டியே இருந்திருக்கிறது. இந்தக் காலத்தில் அந்த மாதிரி கோயில்களை எழுப்ப முடியுமா புரியவில்லை. பல இடங்களில் சலவைக்கல் கொண்டு பிரம்மாண்டமாக கோயில்கள் கட்டப் பட்டிருப்பது கண்டிருக்கிறேன். ஆனால் அங்கு தரிசனத்துக்குச் செல்லும் போது ஏனோ மனதை ஒருங்கிணைக்க முடிவதில்லை. பல நிலைகளுடன் கட்டப் பட்டுள்ள கோபுரங்களும் பரந்து விரிந்து சிற்ப வேலைப் பாடுகள் கொண்ட தூண்களுடன் கூடிய ப்ராகாரங்களும் ஈடு இணை இல்லாதவை. கோயில் தரிசனம் முடிந்து வரும் ஒவ்வொரு முறையும் இன்னொரு முறை வந்து தரிசிக்க வாய்ப்பு இருக்குமா என்ற எண்ணம் எழுகிறது. நமக்குக் கிடைத்த ஒரு சில நாட்கள் மறக்க முடியாததாய் விடுகிறது.

கிட்டத்தட்ட 70-/ கிலோமீட்டர் தூரம் ஆட்டோ ரிக்‌ஷாவில் போய் வந்த களைப்பையும் மீறி அடுத்த நாள் பயணத்துக்கு மனதும் உடலும் தயாராயிற்று
--------------------------------------------------.      



      .           






.

செவ்வாய், 10 ஜூலை, 2012

ஆலய தரிசனம் .அனுபவங்கள்..


                                       ஆலய தரிசனம்  அனுபவங்கள்.
                                       ---------------------------------------------


ஒவ்வொரு வருடமும் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரத்தில் அவசியமாக திருச்சி ,வைத்தீஸ்வரன் கோயில், சிதம்பரம் என்று க்ஷேத்ராடனம் செல்லும் வழக்கம் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக தொடர்கிறது. சிதம்பரம் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் ஏதாவது ஒரு நாளில் அங்கிருப்போம். இந்த முறை திருவிழா சீக்கிரமே வந்ததால் பார்க்க முடியவில்லை.எப்படி இருந்தாலும் ஜூலை மாதம் மூன்றாம் நாள் ஏதாவது ஒரு கோயிலில் இருப்போம். ( அது என் மனைவியின் பிறந்த தினம்.)

இந்த வருடம் ஜுலை இரண்டாம் நாள் பெங்களூரில் இருந்து புறப்பட்டு ஜூலை மூன்றாம் நாள்,சிற்றஞ் சிறுகாலையில் ( திருமதி ஷைலஜா எழுதியபடி ) திருச்சி வந்து சேர்ந்தோம். புறப்படும் முன்பே என் மனைவி என்னிடம் போதிய அளவு பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளச் சொன்னாள். இந்தக் காலச் செலவு பற்றிய என் ஞானம் குறித்து அவளுக்கு எப்போதுமே சந்தேகம்தான். தேவையான பணம் இருக்கிறது . இல்லாவிட்டால்தான் என்ன. ? டெபிட் கார்ட் இருக்கிறது தேவைப்பட்டால் வங்கியில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி அவள் வாயை அடைத்து விட்டேன். எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம், இம்முறை அடிவாங்கியது. ரயிலில் ஏறிய பிறகு பார்த்தால் பர்ஸில் நான் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த பணம் இருக்கவில்லை. திருச்சியில் தங்குவதற்கு அறையும் சுற்றுவதற்கு காரும் என் மகன் ஏற்பாடு செய்து இருந்தான்.



எதிர்பார்த்தபடி கோயில் தரிசனங்கள் முடிந்தது. மதியம் SBI – ATM –ல் பணம் எடுக்கக் கார்டை நுழைத்தால் SORRY என்று பதில் வந்தது. என்னுடைய கார்டின் EXPIRY DATE முடிந்திருந்தது. நான் கவனித்திருக்கவில்லை. யானைக்கும் அடி சறுக்கும் என்று சந்தடி சாக்கில் என்னை என் மனைவி வாரினாள். நல்ல வேளை. என் மகன் எங்களுக்குத் தேவையான பணத்துக்கு ஏற்பாடு செய்து எங்களை நிம்மதி அடையச் செய்தான்.

இரண்டாம் முறையாக என் கணிப்பு தவறானது, எனக்கு ஜனங்களை எடை போடத் தெரியும் என்ற எண்ணத்தில், திருச்சியில் பதிவுலக நண்பர்கள் பலர் இருப்பது தெரியும். முகம் பார்த்த அறிமுகம் இல்லாதவர்கள். ஒருவரையாவது சந்திக்க வேண்டும் என்று விரும்பி ஒருவருக்கு அவரது தொலை பேசி எண் கேட்டு மின் அஞ்சல் அனுப்பி இருந்தேன். மூன்று நாட்களுக்கும் மேலாக காலை மதியம் இரவு என்று பதிலுக்காகக் காத்திருந்தேன். பதில் வரவில்லை. நான் அவரைத் தேர்ந்தெடுத்தது இருவருக்கும் அதிக பிரச்சனை இல்லாமல் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில்தான். என்னை சந்திக்க விருப்பம் இல்லாமல் இருந்தாலும் ஏதாவது காரணம் சொல்லி பதிலாவது எழுதி இருக்கலாம். SIMPLE COURTESY  மனம் வருந்தியது நிஜம். ஊரெல்லாம் போய் வந்த பிறகு வை. கோபால கிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததற்காக வாழ்த்து அனுப்பி இருந்தேன். நாங்கள் வருவது தெரிவித்திருந்தால் அவரே எங்களை பார்க்க வந்திருப்பேன் என்று எழுதி இருந்தார். என்னிடம் பலரது தொலைபேசி எண்கள் இல்லாததுனாலும் வேண்டிக் கேட்டவரிடமிருந்து எந்த தகவலும் இல்லாததாலும் பலருக்கும் நான் அஞ்சல் அனுப்பி இருக்க வில்லை. அனுபவங்கள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒரு விதம் வயதாகி விடுவதாலேயே எல்லா அனுபவங்களும் கிடைப்பதில்லை. I HAVE STILL TO LEARN A LOT. கணினியில் வலைப்பூக்களில் எல்லாப் பதிவர்களின் மின் அஞ்சல் மற்றும் தொலைபேசி எண்களை அறிந்து கொள்ளும் நுட்பம் இருக்கிறதா என்ன.?சிலரது மின் அஞ்சல் முகவரிகள் தெரியும். ஒரு முறை ஒரு சக பதிவர் என் பதிவை தெரியாமல் தமிழ் மணத்தில் இணைத்து விட்டதாகக் கூறி இருந்தார். நான் தமிழ் மணத்தில் இணைக்க என் மின் அஞ்சல் முகவரியுடன் பாஸ் வேர்டும் அல்லவாதர வேண்டி உள்ளது. எப்படி அவரால் இணைக்க முடிந்தது என்னும் கேள்வி இன்னும் என் மனதில் குடைகிறது.

மாற்றம் ஒன்றே வாழ்க்கையில் மாறாதது. அடிக்கடி கேள்விப் படும் சொற்றொடர், இம்முறை நிதர்சனமாகக் கண்டோம். 25-/ வருடங்களுக்கும் மேலாக திருச்சியில் இருந்தவன் நான். ஒவ்வொரு முறை செல்லும்போதும் நிறைய மாற்றங்களைப் பார்க்கிறேன். பல இடங்களும் அடையாளம் தெரியாதபடி மாறி இருக்கிறது. சமயபுரம் மாரியம்மன் கோயில் நிறையவே மாற்றம் கொண்டிருக்கிறது. இப்போதும் ஏதோ கட்டுமானப் பணிகள் நடக்கிறது.
திருச்சி இப்போது மிகவும் காஸ்ட்லியாக உணருகிறேன். மிகவும் சாதாரணமான ஓட்டலில் அறை வாடகை மிகவும் உயர்ந்திருக்கிறது. ஒரு நபர் ஒரு நாள் வெளியில் உணவு சிற்றுண்டிக்காக குறைந்தது ரூ. 250-/ ஆவது செலவு செய்ய வேண்டி உள்ளது. திருச்சி ரயில் நிலையம் விட்டு வெளியில் வந்தால் ரூ.8-/ க்கு அருமையான சுவையான ஃபில்டர் காஃபி விற்கிறார்கள். இந்த மாற்றம்தான் என்னை மகிழ வைத்த மாற்றம்.

மெயின் பஸ் ஸ்டாண்டில் இருந்து கும்பகோணத்துக்கு ஜூலை நான்காம் தேதி காலையில் பஸ்ஸில் புறப்பட்டோம்.ஒலி பெருக்கிகளில் வந்த அறிவிப்புகள் கவனத்தைக் கவர்ந்தன.அறிவிப்புகள் பேரூந்து ஓட்டுநர்களை கவனமாக வண்டி ஒட்டும்படியும், சரியான நிறுத்தத்தில் நிற்க வேண்டியும் இருந்தது அறிவிப்புகளைவிட அதை சொன்ன விதம் கவனத்தை ஈர்த்தது. ‘ஓட்டுனர்களே நீங்கள் திறமைசாலிகள்.நல்லவர்கள். அதிகம் வேகம் வேண்டாமே. திடீரென்று ப்ரேக் போட்டு பயணிகளை பயமுறுத்தாதீர்கள். வளைவுகளில் வேகம் வேண்டாம். முந்த வேண்டாம்அறிவிப்புகள் பாராட்டும்படி இருந்தன. அரசு வண்டிகளில் ட்ரைவரின் நேர் எதிரே “ அப்பா, ப்ளீஸ், வேகமாப் போகாதிங்க “என்னும் அறிவிப்பு ஓட்டுனருக்கும் ஒரு குடும்பம் அவரை நம்பி இருக்கிறது என்று அறிவுறுத்துவதாய் இருந்தது திருச்சியில் புறப்படும்போதே கும்பகோணம் வரை டிக்கட் எடுத்துப் போகாதீர்கள். தஞாவூரில் பஸ்ஸை 15 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்தி விடுவார்கள்.. கால தாமதம் ஆகும். தஞ்சை வரை டிக்கெட் எடுத்து அங்கிருந்து பஸ் மாறிப்போனால் கால விரயத்தைத் தவிர்க்கலாம் என்றார்கள். லக்கேஜுடன் ஏறி இறங்குவதைத் தவிர்க்க நேராகக் கும்பகோணத்துக்கே  டிக்கெட் வாங்கி விட்டோம். எதிர்பார்த்ததைப் போல் தஞ்சையில் 20- நிமிடம் போட்டு விட்டார்கள். ஒன்பதரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்தோம். தஞ்சையைத் தாண்டி கரந்தை வரும்போது திரு.ஹரணியின் இருப்பிடம் இது என்று என் மனைவியிடம் கூறினேன். அவருக்கு முன் கூட்டியே தெரிவிக்கவில்லை என்று சின்ன கோபம். காரணங்கள் இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் ஹரணி ஐயா ஊர் பழக்கப் படாதவர்கள் பாடு மிகவும் அதிகம் அங்கே. காலையிலேயே சுட்டெரிக்கும் வெயில். பத்தடி போகவென்றாலும் ரூ.40-/ ஆட்டோ ரிக்‌ஷாவுக்குக் கொடுக்க வேண்டும். ஒரு வழியாக என் மகன் சொல்லியிருந்த ஓட்டலுக்கு வந்து சேர்ந்தோம். ஒவ்வொரு முறை வரும்போதும் அதுவரை காணாத ஆலயத்துக்கு செல்வது வழக்கம் இந்த முறை நாங்கள் சென்றது ........அடுத்த பதிவில் பார்ப்போமே.        

     
         






ஞாயிறு, 8 ஜூலை, 2012

படித்தது பகிர்கிறேன்.


                                         படித்தது பகிர்கிறேன்.
                                         -----------------------------


இந்த முறை பதிவில் படித்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

நம் நாயகன் ஒருவன் உழைத்துக் கிடைத்த பணத்துடன்
ஆளரவமில்லா வீதி வழியே வந்து கொண்டிருக்க,
வழிப்பறிக் கொள்ளையன் கையில் பிஸ்டலுடன்
மடக்கி மிரட்டிப் பணம் கேட்டான்.

பயந்து மிரண்ட நம் நாயகன் பணம் பறி போயிற்று
என்று சொன்னால் மனைவி நம்ப மாட்டாள்.-உன்
துப்பாக்கியால் என் தொப்பியைச் சுடுஎன வேண்ட
தொப்பியை வீசி எறிந்து அதில் ஓட்டை இட்டான் அவன்.

ஒருவனை சமாளிக்க முடியாதவனா நீ, என்பாள் அவள்.
பலரிடம் சிக்கி பணம் பறிகொடுத்தவன் நான் என அவள் நம்ப
என் மேலங்கியில் பல ஓட்டைகளை உன் துப்பாக்கியால் உண்டாக்கு  
என்றே மேலும் அவன் வேண்ட பல துளைகளுக்குப் பிறகு
‘இவ்வளவு தான் இனி .துப்பாக்கியில் ரவைகள் இல்லை
என்று சலித்துக் கொண்ட கொள்ளையன் திரும்ப முனைய
‘இதற்குத்தானே காத்திருந்தேன்.;எடுத்த பணத்துடன் தொப்பி ,அங்கிக்கான
விலையும் மரியாதையாய் தந்துவிடு. இல்லையேல் என்னிடம்
அடிபட்டுச் சாவாய் ‘என்று கூறி எல்லாப் பணத்தையும் மீட்டான்.

கதையின் நீதி; என்ன சிந்திக்க என்றல்ல எப்படி சிந்திக்க வேண்டும் என்பதே
         ------------------------------

ஒரு கல்லூரி மாணவன் விலங்கியல் பாடம் முடிக்க ஒரு ஆசிரியரை அணுகினான். ஒருவாரப் பயிற்சிக்குப் பின் அவர் ஒரு தேர்வு வைத்தார். பறவை இனங்களை அவற்றின் கால்கள் கண்டு அடையாளப் படுத்த வேண்டும். முடியைப் பிய்த்துக்கொண்ட மாணவன் நொடிக்கொரு முறை ஆத்திரத்தோடு ஆசிரியரை நோக்கினான்.அருகில் வந்த ஆசிரியர் ‘இளைஞனே , இன்னும் நீ ஏதும் செய்யவில்லை. உன் பெயரென்ன.? என்று கேட்டார்.மாணவன் தன் கால் சராயை மேல் தூக்கி தன் கால்களைக் காண்பித்து “ நீங்கள் சொல்லுங்கள் “ என்றான்.
             -------------------------------

Once there was a bus conductor who was rude to his passengers.
One day a beautiful young girl, of around 18 years,tried to board the bus, but he didn't stop the bus.Unfortunately the beautiful young girl came under the bus and died on the spot.
He was taken to the electrocution chamber. There was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. The conductor was strapped to the chair and high voltage current was given to him. But to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.

After a few months, this time, a good looking middle aged woman tried to board the bus but the conductor didn't stop the bus The good looking middle aged woman came under the bus and died on the spot.
The judge took one look at the conductor and gave him capital punishment. The Bus conductor was taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him. This time also, to everyone's amazement, he survived. The judge decided to set him free, and he returned to his profession.



A couple of months later, an elderly gentleman tried to board the bus.

This time the Bus conductor, remembering his earlier experiences, stopped the bus. Unfortunately the elderly gentleman slipped and died due to his injuries. The conductor was taken to the police station and then to the court, to the same judge. Though he hadn't done anything wrong, but considering his past record the judge decided to set an example and gave him capital punishment.

The Bus conductor was again taken to the same electrocution chamber where there was a single chair in the center of the room and a single banana peel at one corner of the room. He was strapped to the chair and high voltage current was given to him.


This time he died instantly !!!!!!!!!!!

The question is why didn't he die on the first two occasions, but died instantly the third time??

Try to solve it yourselves. This is rather interesting and answer is perfectly logical. If necessary read the puzzle once again

During the first two times, the conductor was a bad conductor,;therefore the electricity didn’t pass through him. But during the third time he was a good conductor, so electricity freely passed through him and he died.!
                ------------------------------------------------















ஞாயிறு, 1 ஜூலை, 2012

அப்பாவுக்கு........


                             அப்பாவுக்கு ..நினைவுகள்  சமர்ப்பணம்
                               ----------------------------------------------------


நீங்கள் எங்களையெல்லாம் விட்டுப் போய் 55-/ஆண்டுகளுக்கும் மேலாகிறது.நீங்கள் துவக்கிய தலைமுறையில் நான்காவது ஓடிக் கொண்டிருக்கிறது. நீங்கள் இந்தப் பூவுலகில் இருந்த நாட்களைவிட ( ஆண்டுகளை விட )எங்களைவிட்டுப் பிரிந்து போன காலம் அதிகம். இருந்தால் என்ன.? உங்களைப் பற்றிய நினைவுகள் எல்லாம் எனக்குப் பசுமையாகவே உள்ளது. நான் இந்த உலகத்தை ஆர்வத்துடன் கவனிக்கத் துவங்கும் முன் எங்களை விட்டுப் பிரிந்து விட்டீர்கள். நீங்கள் போகும்போது எனக்கு என்ன தெரியும் என்ன தெரியாது என்றே தெரியாத வயது.

உங்களைப் பற்றிய நினைவுகள் வரும் போதெல்லாம் நீங்கள் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருந்த காலம் என்று ஏதாவது இருந்ததா. என்று எண்ணத் தோன்றுகிறது..நீங்கள் மகிழ்ச்சியாக கழித்த காலச் சுவடுகளின் விளைவு, பதின்மூன்று ஜீவன்கள் என்று சொல்லலாமா... வாழ்வில் மகிழ்ச்சி என்பது உங்களுக்கு அது மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்விலிருந்து நாங்கள் கற்ற படிப்பினை, அளவான குடும்பமே வளமான வாழ்வுக்கு ஆதாரம் என்பதாகும்.

இருந்தாலும் உங்களுடன் எனக்கிருந்த  மகிழ்ச்சியான/ மற்றும் உங்களை  பாதித்த தருணங்களை நினைவு கூர்கிறேன்..என்னை நீங்கள் மகனாக நினைத்ததைவிட அன்பாக நினைத்த நேரங்களே அதிகமாயிருக்கும். இன்றைக்கும் என்னை மட்டும் அரக்கோணத்திலிருந்து, மஹாத்மா காந்தியைக் காட்ட மதராசுக்கு அழைத்துச் சென்றதை பெருமையுடன் நினைவு கூறுகிறேன்..உங்களுக்கு நினைவிருக்கிறதா.?மஹாத்மா காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட சேதி கேட்டு அன்றிரவு முழுவதும் நீங்கள் அழுதது காந்தியின் மீதும் அவரது கொள்கையின் மீதும் உங்களுக்கிருந்த பிடிப்பை உணர்த்தியது. அகிம்சைக்கு காந்தி, நகைச்சுவைக்கு என்.எஸ். கிருஷ்ணன், என்று கூறி வந்த உங்களுக்கு என்.எஸ். கிருஷ்ணன் மேல் போடப்பட்ட கொலை வழக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வழக்கு விசாரணையின்போது, மதராசில் கோர்ட்டுக்குப் போய் வழக்கின் போக்கை நீங்கள் கவனித்து வந்தது எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்முடைய பெருமைக்கு உரியவர்கள் அதற்குத் தகுதி இல்லை என்று உணரும் போது வலி அதிகம் என்பது எனக்கு இப்போது புரிகிறது.

சித்தியின் ( உங்கள் இரண்டாம் மனைவி ) தூரத்து உறவினர் ஒருவருக்கு வேலை வாங்கிக் கொடுத்து, அவர் தவறு செய்து முழித்தபோது ,ஆங்கிலம் அவ்வளவு தெரியாத அவருக்கு மனு எழுத உதவப் போய் உங்கள் அலுவலகத்தில் அவப் பெயர் வாங்கி , அதன் பயனாய் பணி இறக்கம் செய்யப் பட்ட போது நீங்கள் வருந்தியது இப்போது நினைத்துப் பார்த்து ,தகாத ஒருவருக்கு உதவப் போய் வீண்பழி சுமந்தீரே என்று வருத்தப் படுவது உண்டு. அந்த இடியின் வலியே உங்கள் மறைவுக்கும் ஒரு காரணமோ என்று இப்போது தோன்றுகிறது

உங்களுக்கு இசையில் ஆர்வம் உண்டு என்று எனக்குத் தெரியும் .ஒருமுறை நண்பர் ஒருவரை வீட்டிற்கு அழைத்து அவர் பாடக் கேட்டு மகிழ்ந்ததும் என் நினைவில் இன்னும் இருக்கிறது. “ தாயே யசோதா “ என்ற அந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் இந்த நினைவு வரும். நீங்கள் முணுமுணுக்கும் பாடல்கள் பலவும் எனக்கும் பிடிக்கும். கொள்ளுத் தாத்தாவுக்குப் பிடித்த பாடல்கள் என்று என் பேரக் குழந்தைகளுக்கு நான் சொல்வது, “ வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும் “ .. “ தெருவில் வாராண்டி வேலன் தேடி வாராண்டி “ போன்ற பாடல்களை.

என் தாய் இறந்தபோது மறு மணம் செய்து கொண்ட நீங்கள் அதன் பலனாக உறவினர் மத்தியில் விரும்பப் படாதவராக இருந்தீர். உங்கள் தங்கைக்கு உங்கள் மச்சினரை மணம் முடித்த பிறகு நீங்கள் மறு மணம், அதுவும் சாதிவிட்டு செய்தது பலருக்கும் உங்களிடம் துவேஷம் ஏற்படுத்தியது. அந்த மறுதார மணம் காதலினால் விளைந்த ஒன்று என்பது இன்னும் கூடுதல் துவேஷத்தையே உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

யாருடைய செய்கையையும் சரி தவறு என்று கூறுவது தவறு என்று எனக்கு நானே கற்பித்துக் கொண்ட பாடம். நேரம், காலம், சூழ்நிலை, பொன்ற பல விஷயங்களே பலரது செயல்களுக்குக் காரணம் என்று எனக்குத் தெரியும். ON HIND SIGHT – தீர்ப்பு கூறுவது சரியாகாது.

உங்களுக்கு நினைவு இருக்கிறதா.? வெல்லிங்டனில்  RMDC குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளைத் தேர்ந்தெடுக்க என்னைக் கேள்வி கேட்டு தர்க்கங்களின் முடிவில் பதில் தெரிந்தெடுத்து போட்டிக் கூப்பன்களை அனுப்புவீர்கள். ஒரு முறை பரிசாக ரூ. 100-/ வந்தபோது அது நான் சொன்ன பதில்களால் வந்தது என்று பாராட்டி உற்சாகமூட்டினீர்கள். பரிசு கிடைக்காத போதெல்லாம் நான் சொன்ன பதில்களால் தவறாகி விட்டது என்று ஒருமுறை கூடக் கூறியதில்லை. ஏன் இந்தப் போட்டிகளில் பங்கேற்கிறீர்கள் என்றால் ஒரு பெரிய பரிசுத் தொகை வீழ்ந்து நமக்கு விடிவு வராதா என்பீர்கள்.

சர்க்கிள் குவார்டர்ஸிலிருந்து மாலையில் காய்கறி வாங்க வெல்லிங்டன் செல்வோம். உங்களுடன் வருவதில் எனக்கும் அலாதி மகிழ்ச்சி. அங்கு போகும் போதெல்லாம் ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கும் ஒரு ஆயாவிடம் கைக்குட்டையில் வேர்க்கடலை வாங்கி கொரித்துக் கொண்டே வருவோம். ஒரு முறை வேர்க்கடலை வாங்க கைக்குட்டைக்குப் பதில் அம்மாவின் பாடியை நீட்டினீர்கள். அந்தக் கிழவி உங்களைக் கலாய்த்தபோது, என் மனைவியின் பாடிதானே என்று ஏதோ கூறி சமாளித்தீர்கள்.

உங்கள் குடும்பத்திலேயே பட்டப் படிப்பு படித்த ஒரே ஒருவர் என்று உங்களைப் பற்றிப் பெருமையாகக் கூறுவீர்கள். ஆங்கிலம் பேச என்னை ஊக்கப் படுத்துவீர்கள். ஆங்கில உச்சரிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பீர்கள். படிப்பில் எனக்கு ஆர்வம் இருப்பது கண்டும், வகுப்பில் முதல் இடங்களில் வருவது கண்டும்,என்னை மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லாததால் முடியவில்லையே என்று நீங்கள் வருந்தியது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அந்த வயதில் நான் உருவத்தில் மிகவும் சிறியவனாகத் தெரிகிறேன் என்று குறை படும்போதெல்லாம், ‘ இன்னும் நீ குழந்தை தானேடாஎன்று ஆறுதல் கூறியவர், என்னை வேலைக்கு எடுத்துக் கொள்ள உங்கள் நண்பரிடம் அனுப்பியபோது, என் வயதையும் உருவத்தையும் காட்டி அவர் என்னை வேலைக்கு எடுக்க மறுத்த போது, ஒரு குழந்தையை வேலைக்கு அனுப்ப வேண்டி இருக்கிறதே என்று நீங்கள் வருந்திய போது, நான் தான் உங்களுக்கு ஆறுதல் கூறினேன்.

 உங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது தெரிந்தும், அது அலுவலகத்துக்குத் தெரிந்தால் வேலைக்கு குந்தகம் ஏற்படலாம் என்று எண்ணி, மருத்துவப் பரிசோதனைக்கு கொடுக்க வேண்டிய உங்கள் சிறுநீருக்குப் பதில் எனது சிறு நீரைக் கொடுத்து பிரச்சனை ஏதும் இல்லாததுபோல் இருந்தீர்களே. அதன் முழுத் தாக்கமும் தெரியாமல் அறிவில்லாதவனாக நானும் இருந்தேனே என்று பிற்காலத்தில் நான் வருந்தியதுண்டு. தெரிந்திருந்தால் மட்டும் என்ன செய்திருக்க முடியும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.

பெங்களூரில் எனக்குப் பயிற்சி. வெலிங்டனில் நீங்கள். ஒன்றாக இருக்க வேண்டும் என்ற என் விருப்பத்துக்காக வேலை மாற்றல் பெற முயன்றீர்கள். அது விஷயமாக ஒரு முறை நீங்கள் பெங்களூர் வந்தபோது நான் இருந்த அறையில் தங்கினீர்கள். ஒரு அறையில் நான்கு கட்டில்களில் ஒன்று எனது. அங்கே அசைவ உணவு செய்வார்கள். என் முகம் வாடக் கூடாதே என்று உங்களுக்குப் பிடிக்காத ,பழக்கமில்லாத இடத்தில் என்னுடன் இருந்தீர்கள். உங்களை ஒரு திரைப் படம் பார்க்கக் கூட்டிச் சென்றேன் அந்த நேரமாவது நீங்கள் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். DANNY KAYE நடித்த  THE COURT JESTER என்ற படம் என் மகிழ்வுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் உங்களை மகிழ்விக்க என்னால் முடிந்தது அதுதான். 

பெங்களூரில் இருந்த போது ஒரு முறை நடந்து போகும்போது உங்கள் சித்தப்பா அவர்களைக் கண்டு குசலம் விசாரித்தீர்கள். அவர் உங்களுக்கு பதிலாக “ஏதோ நடக்கிறது. I AM IN THE EVENING OF MY LIFE "என்று பதிலளித்தார். ஆனால், LOOK AT THE IRONY. அவருக்கும் முந்தி நீங்கள் போய் விட்டீர்கள்.  WHERE AS HE LIVED WELL INTO THE NIGHT ALSO. 

உங்கள் முடிவு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ மருத்துவ மனையில் இருந்தபோது என் கையைப் பிடித்து என் உடன் பிறப்புகளையும் தாயையும் நான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினீர்கள். சம்பவங்களின் முக்கியத்துவம் அவை நடைபெறும்போது தெரியாமல் போவது பிற்காலத்தில் மன உளைச்சலைத் தரவல்லது. அந்த நேரத்தில் எனக்கு என் பயிற்சியில் மாற்றம் வந்து நல்ல ஒரு நிலைக்கு உயர வாய்ப்பாக இருந்தது அறிந்த பின் தான் உங்கள் மரணம் சம்பவித்தது. உங்கள் வயதான காலத்தில் எந்த கஷ்டமும் இல்லாமல் உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற என் ஆசை நிராசையாகி விட்டது. நீங்கள் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்ய விரும்பி இருப்பீர்களோ அதை செய்த திருப்தி மட்டும்தான் எனக்குண்டு. வெள்ளி பூண்போட்ட கைத்தடி வீசி நீங்கள் நடந்துவருவதைப் பார்க்க எங்களுக்குக் கொடுத்து வைக்க வில்லை.

அப்பா உங்கள் நினைவு நாளை உங்களுக்கு அளித்த வாக்கை காப்பாற்றிய மன நிறைவோடு தான் எண்ணுகிறேன். மற்றபடி எந்த சடங்கு சம்பிரதாயமும் நான் செய்வதில்லை. நீங்களும் வெறும் சடங்கு சம்பிரதாயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். உள்ள்த்து உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுக்கவே இந்தப் பதிவு. நீங்கள் நீங்களாக இல்லாமல் நினைவாக இருக்கும் உங்களுக்கு சமர்ப்பணமாக அளிக்கிறேன்..
--------------------------------------------------------------    



.