Friday, October 22, 2010

KAITHTHALAM PATRA VAA


                        கைத்தலம்    பற்ற    வா.
                       --------------------------------------
பாவாடை   தாவணியில்   பதினாறு   வயசுப்   பாவை   நீ,
ஓரடி  ஈரடி  சீரடி  வைத்தென்முன் நாலடி  நடந்து  வர,
உன் வலை வீசும்  கண்கள்   கண்டு,
நாலாறு வயசு நிரம்பப்  பெறாத என்
மனசும்  அலைபாயும், மெய்  விதிர்க்கும் ,
வாய்  உலரும் , தட்டுத் தடுமாறும்   நெஞ்சும்.

ஆடிவரும்  தேரினை  யாரும்  காணாதிருக்க
செய்தல்  கூடுமோ ..?
அயலவர்  உன்னை    ஆராதிப்பதை
தடுக்கவும்  இயலுமோ ...?
எங்கும்  நிறைந்தவன் ஈசன்  என்றால்
என்னுள் நிறைந்தவள் நீயேயன்றோ ...?
என்னுள் நிறைந்த உனை என் கண்ணுள் நிறுத்தி
நீ வரும் வழி நோக்கித  தவமிருக்கும்
நானும்  ஒரு   பித்தனன்றோ...?

யாருனைக்  காணினும்   யாதே  நேரினும் ,
நிலம்  நோக்கி  என் முன்னே  மட்டும்
என்கண்  நோக்கி என்னுள் பட்டாம்பூச்சி
பறக்கச்செய்யும்  வித்தை   அறிந்தவளே ...!

உன் விழி  பேசும்  மொழியறிந்து
உனைக் கண்ட   நாள்  முதல்  கணக்கிட்டு  விட்டேன்
எனக்கு  நீ , உனக்கு  நான் , எனவே ,
கைத்தலம்  பற்ற காலமும்  நேரமும்  குறித்து  விட்டேன், .
                              -----------------------------------


 
       
                      







                      



 








                                                                                                                           
       


   

No comments:

Post a Comment