Tuesday, May 10, 2011

அவதாரக்கதைகள்--பாகம் 2 --ஆமையாக...........

அவதாரக் கதைகள் --பாகம்  2--ஆமையாக ....
-----------------------------------------------------------

தவ வலிமை மிகுந்த துருவாச முனிவர் ,
திருமகளை வணங்கிவர ,மகிழ்ந்த மகாலட்சுமி ,
அவருக் களித்த ஒரு பூ மாலையை.,எதிரே 
வந்த தேவ ராஜனுக்கு சிறப்பு செய்வதாக 
எண்ணிக் கொடுத்தார். 
தன வல்லமைச் சிறப்பால் செருக்குடனிருந்த
இந்திரன் மாலையைத் தான் அணியாமல், யானையின் 
மத்தகத்தில் வைத்தான். யானை அதனை தன துதிக்கையால் 
எடுத்து காலில் போட்டு மிதித்துவிட ,சினம் கொண்ட 
துருவாசர் தேவேந்திரனை அவன் வலிமை, செல்வம் ,
சிறப்பனைத்தையும் இழக்கக் கடவது, என சாபம் இட்டார்.

வல்லமை  மிகுந்த முனிவரின் வாக்கு பலிக்க 
பொலிவிழந்த இந்திரன் அனைத்தையும் இழக்க, 
அவனுடன் தேவர்களின் நிலையும்  தாழ்ந்தது. 
என்ன செய்ய என்று கூடி ஆய்ந்தவர்கள் 
நான்முகனிடம் குறை கூறிச் சென்றனர். 
பாம்பணைப் பரந்தாமனே சரணம் எனச் 
செல்வதே சிறந்த வழி என்றவன் சொல் கேட்டு 
அனைவரும் திருப்பாற்கடல் சென்று முகுந்தனிடம் 
மன்னித்தருளவும் மறுபடி ஏற்றம் வேண்டியும் யாசித்தனர்.

திருமாலும் திருவாய் மலர்ந்து திருப்பார்க்கடலில்
அமிழ்ந்து  கிடக்கும் செல்வச்சிறப்புகளை 
வெளியே கொண்டுவர ,கடலைக் கடைய கிடைக்கும் 
அமிழ்தம் உண்டால்  அடைவீர் பழைய நிலை ,
பெறுவீர் புதுப்பொலிவும் என்றே அருளி ,தனித்து செய்தல்
இயலாது,கூடவே அசுரர் துணை நாடுங்கள் 
என்று அறிவுரையும் நல்கினார்.

 தேவர்கள் முயன்று பெற்ற நட்பில் அசுரரும் சேர கிடைக்கும் 
பலன்களில்  பாதி பாதிப் பங்கு என்றும் முடிவெடுத்தனர். 

ஒருசேர சிந்தித்து எடுத்த முடிவின்படி, 
மந்தார மலையை மத்தாக்கி, வாசுகிப் பாம்பை 
கயிறாக்கி, பாம்பின் தலையை அசுரர் பிடிக்க 
வால் பாகம் தேவர்களின் பிடிக்குள் சிக்க 
திருப்பார்க்கடல்  கடையப் பட்டது. 
அசுரர்  பிடி இறுக,வலி தாங்காத பாம்பு 
ஆலகால விஷத்தைக்  கக்கியது. 

கொடிய  நெஞ்சின் வேகம் தாங்காத தேவரும் 
அசுரரும் பிடி நழுவ விட கடைதல் நிறுத்தப்பட்டதும் 
மந்தார மலை நிலை பிறழ, கதறி அழைத்தனர்,
காத்தருள வேண்டி நின்றனர். 
ஆமை வடிவெடுத்து, மகாவிஷ்ணு மந்தாரமலை
நிலை சமன் செய்ய தன முதுகில் தாங்கினார். 
காக்கும் கடவுளின் பரிந்துரையில் 
ஆலகால விஷத்தை அரனும்  எடுத்துண்டு, 
நஞ்சின் கொடுமையைத் தானேற்றார்

மீண்டும்  கடைதல் துவங்க பாற்கடலில் 
பல பொருட்கள் தோன்றின..திருமகளும் 
தோன்றித் திருமாலைத  தானடைந்தார். 
வாருணி என்றொரு மாது, மயக்கும்  மது அளிப்பவள், 
அரக்கர் பக்கம் அழைத்துச் செல்லப்பட்டாள்
வாருணிக்குப்பின் தோன்றிய தன்வந்திரி  கையில் 
அமிர்த கலசம் காணப்பெற அசுரர் அதைப் பற்றினர். 
தேவர் துயர் துடைக்க திருமாலும் அருள் புரிய, 
மயக்கும் மோகினி  வேடமேடுத்தார். 
ஒப்பந்தப்படி அமுதத்தைப் பிரித்துக் கொடுக்க 
தேவாசுரர்  அனைவரும்  வேண்டி நின்றனர். 

அசுரரும் தேவரும் இரு வரிசையில்கண் பொத்தி நிற்க
பங்கீடு துவங்கியது. தேவர்களுக்கு ஒரு முறை 
வழங்கப்பட்ட அமிர்தம் அசுரருக்கு ஈயப்படாமல் 
மறுமுறையும் தேவர்களுக்கே கொடுக்கப்பட, 
கண் விழித்துக் கண்ட அசுரர் ராகுவும் கேதுவும் 
சினமடைந்து , தேவர்களாக உருமாறி, நின்று 
அமுதம் உண்டனர். அருகில் இருந்து உணர்ந்த 
சந்திர  சூரியர்  மோகினியிடம் முறையிட, 
அவரும் உருமாறிய அரக்கர் தலையில்  கரண்டியால் 
ஓங்கி அடிக்க அமுதம் உண்ட அரக்கர் உயிரிழக்க வில்லை. 

காட்டிக் கொடுத்த  சந்திர சூரியரை பகை கொண்டு 
கிரகண காலத்தில் தீண்டி வருவதாகக் கூறுவர்

கற்றறிந்ததை  உணர்ந்தபடி எழுதினேன். 
அவதாரக் கதைகளில் கிளைகள் பல உண்டு, 
சில சமயம் அவையே முதன்மை பெறுவதும் உண்டு.
=============================================. .

















 

8 comments:

  1. நீங்கள் விளக்கி சொல்லும் விதம் அருமை. தொடருங்கள்.

    ReplyDelete
  2. இதிகாசங்கள்தான் நம் ஆதார ஸ்ருதி.

    சித்ராவின் வாக்கைப் பின்பற்றுகிறேன்.

    ReplyDelete
  3. அவதாரக் கதைகளில் கிளைகள் பல உண்டு,
    சில சமயம் அவையே முதன்மை பெறுவதும் உண்டு./
    ஆழ்ந்த கருத்துக்கள்.

    ReplyDelete
  4. ஐயா உங்களின் அவதார கதைகள் பாராட்டும் படியாக இருக்கிறது உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி .

    ReplyDelete
  5. கூர்மாவதாரம் பற்றியும் அழகாக விளக்கிவிட்டீர்கள்.
    பாராட்டுக்கள். அவதார மகிமைகள் தொடரட்டும்.

    ReplyDelete
  6. அந்த தேவர்கள் பெற்ற
    அமுதத்தை விட
    நீங்கள் அருளிய இந்த
    அவதார கதை
    அமுதம்
    அற்புதம் .

    ReplyDelete
  7. Idhihaasam Allai, Thirupparkadalai Kadaivadhu Purana(u)m..

    ReplyDelete
  8. என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் கற்பனைச் செறிவுமிகுந்த கதைகள் இதிகாசமென்று சொல்ல வில்லையே

    ReplyDelete