Monday, June 6, 2011

அவதாரக் கதை...பாகம் ....5.....வாமனனாக...

அவதாரக் கதை...பாகம்.....5.....வாமனனாக.
-----------------------------------------------------------

         ஆதிசிவனால் மூவுலகாள  வரம் பெற்ற, 
         திரி தூண்டி விளக்கணையாது காத்த கோயில் எலி,
         இரணியன் மகன், பிரஹலாதன் மகன், விரோசனன் 
         மகன் மகா பலியாகப் பிறந்தான்.( தது )

பெற்றவரம்  பலிக்க, வானவரையும் ஏனையவரையும் 
வென்று, மூவுலகாளும் பலி சக்கரவர்த்தி ஆனான். 

          வானவர்களின் தாய் அதிதி, அது கண்டு
          தன் மக்கள் நிலை கண்டு வருந்தி, 
          கச்சியப்ப  முனிவரிடம்  முறையீடு செய்ய,
          அவர் நோன்பு நோற்று, திருமாலை வழிபடு, 
          வழி ஒன்று பிறக்கும் என்றார்.அவளும் வழிபட,

திருநீலகண்டன்  அருள் பெற்று, மூவுலகாளும் பலி,
ஆணவத்தில் திளைக்கும்போது, அவனை நான்
அடக்குவேன், அதற்கென நாள் வரும்போதுன்
வயிற்றில் நான் வந்துதிப்பேன், என்றுரைத்த திருமால்,
அதிதி மகனாக வாமனாவதாரம் எடுத்தார்.

           வரம் மூலம் பெற்ற ஆட்சி நிலைக்க,
           அசுவமேத  யாகம் நடத்தி, யார்
           எதைக் கேட்பினும் நான் அதனைத் தருவேன்,
           என்று கூறி ,அதனைச் செய்தும் வந்தான்  பலி.

தக்க தருணம் வேண்டி நின்ற வாமனரூப
மகாவிஷ்ணு மகாபலியின் யாகசாலை வர,
வணங்கி வரவேற்கப்பட்டு , வேண்டியது
கேட்டுப்பெற, , வேண்டிக்கொள்ளப் பட்டான்.

           தான் ஒரு பிரம்மசாரிப்  பார்ப்பனன்,
           அவன் வாழ மூன்றடி நிலம் தந்தால்
           அதுவே போதும் நலமாயிருக்க என்ற,
           வாமனனுக்கு அது அளிக்க வேண்டாம்
           வந்திருப்பவன் பெருமாள் , அவனுன்னை
           அழிப்பான் என்று அறிவுரை  வழங்கினார்
           குல குரு சுக்கிராச்சாரியார்.

சொன்ன சொல் தவறேன், திருமாலுக்கே என்
தானம் என்றால் எனக்கது பெருமை, என்
குலம் தழைக்கும் என்றே  கூறிய  மகாபலி,
தானம் தர, நீர் வார்த்துத் தர  தயாராக
கிண்டி நீரை எடுக்க, வண்டாக மாறி,
அதன் துவார மறைத்தார், சுக்கிராச்சாரி .

            கிண்டி அடைப்பை நீக்க, எல்லாம்
            அறிந்த மாலும் தருப்பையால்  அதன்
            துவாரம் குத்த ,கண்ணொன்று  குருடாகி
            அலறியடித்து வெளியே வந்தது வண்டு.

மூன்றடி நிலம் பெற,
வரம் பெற்ற வாமனன்
நெடிதுயர்ந்து  ஓரடியாய்
வான மளந்து ,மறு அடியாய்
பூமி அளந்து ,மூன்றாம் அடிக்குக்,
கால் எங்கே வைக்க என்று
மகாபலியிடம்  வினவினான்.

           கைகூப்பித் தலை வணங்கி
           சொன்ன சொல் தவற மாட்டேன்
           தங்கள் மூன்றாம் அடி  என் தலை மேல்
           வைக்க , யான் பெருமை கொள்வேன்
           என்று கூறிய பலிச்சக்கரவர்த்தி
           பாதாளம் ஆள வரம் ஈந்து அவன்
          தலை மேல் கால் வைத்தான் பெருமான்.
           =================================
   ( அங்கும் இங்கும் கேட்டதையும், படித்ததையும் பகிரும் வண்ணம் 
        அவதாரக் கதைகள் எழுதுகிறேன். எழுதும்போது யாராவது  ஏதாவது 
      கேட்டால் என்னால் பதில் கூற இயலாது. என்பதையும் உணர்ந்து 
       இருக்கிறேன். எனக்கே உள்ள சந்தேகம் :--ஜெயன், விஜயன் இருவரும், 
       இரணியாட்சகன், இரணியன் என்ற இரட்டைப் பிறவிகளாக, கச்சியப்ப 
       முனிவருக்குப  பிறந்தனர். இரணியகசிபுவின் மகன் பிரகலாதன் 
       பிரகலாதனின் பேரன் மகாபலி சக்கரவர்த்தி. வானவர்களின் தாயான 
       அதிதியின் கணவர் கச்சியப்ப முனிவர். இந்த அதிதியின் மகனாக 
       பிறந்தவர் வாமனர். சிந்தித்துப் பார்த்தால் தலைமுறை  சார்ந்த 
       உறவுகள் நெருடலாகத்  தெரிகிறது. 
       இதற்கு  விளக்கம்  கிடைத்தால் கடமை பட்டிருப்பேன். ) .          








 

3 comments:

  1. ”ரிஷி மூலம், நதிமூலம் கேட்கக்கூடாது என்பார்கள்”.

    தாங்கள் கேட்கும் விளக்கங்களை அளிக்க எனக்குத்தெரியாது என்பதை சமாளிக்கவே இவ்வாறு ஒரு பழமொழியை எடுத்து விட்டுள்ளேன்.

    வாமனாவதார பாடல் கதை அருமையாக உள்ளது.

    புராணக்கதைகளில் உள்ள நல்ல விஷயங்களை, கருத்துக்களை, நம் இன்றைய வாழ்வுக்கு தேவையானவற்றை மட்டும், நல்லவிதத்தில் எடுத்துக்கொள்வோம்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  2. எது எப்படி இருப்பினும் நீதி தழைக்க , அநீதி அழிய
    அந்த
    ஆண்டவன்
    அவதாரம் எடுத்து
    அழிப்பான்
    அசுரர்களை என்பது
    நிதர்சனம்
    நல்ல பதிவு ஐயா

    ReplyDelete
  3. வாமனாவதாரம் விஸ்வரூபமெடுக்கிறது கவிதையின் மொழியில்.

    அருமை. தொடருங்கள் பாலு சார்.

    ReplyDelete