Thursday, June 9, 2011

நான் போட்ட நாடகங்கள். ....

நான் போட்ட நாடகங்கள்.
-----------------------------------
      நான் அந்தக் காலத்திலேயே சுமாராக எழுதுபவன் என்று
எண்ணிக்கொண்டிருந்தவன். சிறுகதை, கவிதை, கட்டுரை
என்று எல்லாவற்றிலும்  முயற்சி செய்திருக்கிறேன். நான்
எழுதியது  எல்லாம்  என் ஆத்ம  திருப்திக்கு  மட்டுமே.
எழுதியவற்றை சில நாட்கள் கழித்துப் படித்துப் பார்த்தால்
நம்மை நாமே விமரிசிக்க முடியும். நாடகம் எழுதி, நடித்து,
அரங்கேற்ற வேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. 1962-ம்
வருடக் கடைசி என்று நினைக்கிறேன்.மைசூர் இண்டஸ்டிரிஸ்
ஸ்போர்ட்ஸ் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷன் ஒரு
நாடகப் போட்டி நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.HAL AERO
ENGINES சார்பில் நான் ஒரு நாடகம் எழுதி போட்டியில் பங்கு
பெற அனுமதி பெற்றேன்.நாடகம் ஒன்றரை மணி நேரத்துக்குள்
இருக்க வேண்டும்.பல மொழிகளில் போட்டியில் பங்கு பெற
நாடகங்கள் வந்திருந்தன. என் நாடகம் தமிழில் “ வாழ்ந்தே
தீருவேன்” என்ற தலைப்பில் இருந்தது.

      நாடகம் போட ஆர்வம் இருந்தால் மட்டும் போதுமா.?நடிக்க
ஏற்ற நண்பர்கள் கிடைக்க வேண்டும்;பெண் கதாபாத்திரத்தில்
நடிக்க, தொழில் முறை நடிகைகளை கொண்டு வர வேண்டும்.
கதை வசனம் ஆளுக்கொரு காப்பி கொடுக்க வேண்டும்.ரிகர்சல்
நடத்த வேண்டும். அதற்கு இடம் தேட வேண்டும். செலவுக்குப்
பணம் வேண்டும்.இவற்றை எல்லாம் சுமாராகப்  ப்ளான்  செய்து
நடிகர் தேர்வில் இறங்கினேன். ஒருவனுக்கு  நடிக்க வருமா
என்று எப்படி கணிப்பது.? வசனங்களை ஏற்ற  இறக்கத்துடன்
சரியான உச்சரிப்பில் பேசினாலேயே பாதி நடிப்பு வந்த மாதிரி.
இதை சோதிக்க நான் ஒரு உத்தி  வைத்திருந்தேன். கலைஞ்ர்
கருணாநிதியின்  “வீரத்தாய்” என்ற ஓரங்க நாடகம் எனக்குத்
தெரியும்.அதனை எழுதி, நடிக்க விருப்பம் உள்ளவர்களிடம்
படித்துக் காட்டச்சொல்லுவேன். நன்றாகப் படித்தவன் கதா
நாயகன் வேஷத்துக்கும், சுமாராகப் படித்தவர்கள் பிற பாத்திர  
வேஷங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சரியாக படிக்க 
முடியாதவர்கள்  நிராகரிக்கப்பட்டனர். 
            நானே முதன்முதலில்  எழுதி நடித்து இயக்க இருந்தேன். 
நிறைய கதாபாத்திரங்கள் இருந்தால் சமாளிப்பது கஷ்டம். 
தொழிற்சாலைகளுக்குள்ளான  போட்டி என்பதால்  முதலாளி, 
மேனேஜர், தொழிற்சங்கத்  தலைவன் , முதலாளி மகன், மகள் 
என்ற முக்கிய கதாபாத்திரங்களுடன்  கதை எழுதி இருந்தேன். 
எதிர்பாராத  திருப்பமுடன்  மேடைக்கதை  அமைத்திருந்தேன். 
எனக்கு நான் ஒரு பாலசந்தர் என்ற நினைப்பு. நடிக்க வந்தவர்
மனதில்  சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.தொழில்முறை  
நடிகை  இரண்டு மூன்று ரிகர்சலுக்குத்தான்  வருவார். அவர்
மனதில் சாவித்திரி ,பத்மினி என்ற எண்ணம்.அவர் இல்லாத
போது  டம்மி  கதாநாயகியாக  யாராவது இருக்கவேண்டும். 
எல்லோரும் தொழிற்சாலையில்  பணி புரிபவர்கள்.பணி 
முடிந்து வீட்டிற்கு திரும்பி  ரிகர்சலுக்கு குறித்த நேரத்தில் வர 
பல  தொந்தரவுகள் இருக்கும். எல்லாவற்றையும் மீறி நடிக்க 
வந்தபிறகுதான் வசன தாள்களையே பார்ப்பார்கள். அவற்றை 
மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு முன், சுற்றி இருந்துகொண்டு
நடிக்காமல் வசனங்களை வெறுமே படிக்க வேண்டும். ஒருவர்
முடித்து அடுத்தவர் வசனம் எங்கு துவங்குகிறது என்று புரிந்து
கொள்ள இந்த முறையைப் பயன்படுத்தினேன். எழுதும்போது 
நல்ல தமிழில் எழுதி இருந்தேன். பேசும்போது அப்படியே 
பேசினால் சமூக நாடகத்துக்கு ஒத்துவரவில்லை. பேச்சுத்
தமிழ் என்று கூறினால் மிகவும் கொச்சையாக வந்தது. 

       எப்படியோ ஓரளவு தயாரான நிலையில் கதாநாயகியுடன் 
சேர்ந்த ரிகர்சல். அப்போதுதான் பின்னணி இசை இல்லாமல் 
என்ன நாடகம் என்று தோன்றியது. அருகில் இருந்த ஒரு 
ஆர்கெஸ்ட்ரா குழுவுடன்  விவாதித்தோம். அவர்கள்  ஒரு 
வேளை ரிகர்சலுக்கு டிபன் காப்பி  செலவுடன் ரூபாய் 80/-
கேட்டார்கள்.நாடகத்தன்று ரூபாய் 100/- தர வேண்டும்  என்றும் 
கூறினார்கள்.வேறு வழியில்லாமல்  ஒப்புக்கொண்டு  
சிசுவேஷனை அவர்களுக்கு விளக்கினோம். என் வீட்டில்தான் 
எல்லா ரிகர்சலும். இசையுடன் கூடிய ரிகர்சலிலேயே ஒரு 
நாடகம் பார்க்க வரும் கூட்டமிருந்தது. 

       நடிப்பு சொல்லிக் கொடுக்கும்போது நான் பட்ட கஷ்டம் 
அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். வசனம் முடிந்தவுடன் 
எந்த ஒரு முகபாவமும் இல்லாமல் கட்டைபோல் நின்று 
விடுவார்கள். கைகால்கள் இயல்பாக இயங்காது. எல்லோரும் 
ஆர்வத்தில் நடிக்க வந்தவர்கள்  நாட்பட  நாட்பட கொஞசம்
கொஞ்சமாக மெருகேற்றி வந்தோம்.

       செலவு கைக்கு மீறிப் போகவே, நாடகம் பார்க்க வரும்படி
அழைப்புக்  கொடுக்கும்போதே, அறிந்தவர்கள் எல்லோரிடமும்
நன்கொடையாக ரூ.1/-, ரூ.2/-, ரூ. 5/- என்று  பெற்றுக்கொண்டோம்.
      ஒரு வழியாக 1963-ம் வருடம் பெப்ரவரி மாதம் 13-ம் நாள் 
என்று நினைக்கிறேன். பெங்களூர் டவுன் ஹாலில் அடி
யேனின் நாடகம் அரங்கேறியது. போட்டியில் பங்கெடுத்தும் 
பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள் 
வந்தன. நான் எழுதியிருந்த ஒரு வசனம் சிறப்பாகப் பேசப் 
பட்டது.அதில் நான்  “ ஒருகாலத்தில் நாட்டை அரசன் ஆண்டான்;
பின் அந்தணன் ஆண்டான், பிறகு பெருந்தனக்காரன் ஆண்டான்
இன்னும் ஆள்வதாகவும் மனப்பால் குடிக்கிறான். வேதம் கூறும் 
நான்கு சாதியினரில் மூவரின் காலம் தழைத்திருந்தாகி விட்டது. 
இதுவரை. இப்போது, இது, எங்கள் காலம், ஏழைத்தொழிலாளரின் 
காலம்,நிறம் மாறும் பச்சோந்திப் பணமூட்டைகளுக்கு சாவு மணி 
அடிக்கும் எங்கள் காலம். பாட்டாளிகளின் பொற்காலம். மாறி 
வரும் காலத்தின் மதிப்பு மாற்றங்களை புரிந்து கொள்ளாமல் 
கொடுப்பவன் நான் என்று மமதையில் கொக்கரிக்காதே. ONE HAS 
TO GIVE FIRST TO TAKE.!" என்று எழுதியிருந்தேன். 

      அதற்குப் பிறகு அலசூரில் முத்தமிழ் மன்ற சார்பாக பெங்களூர்
குப்பி தியேட்டரில்  முரசொலி சொர்ணத்தின்,”விடை கொடு 
தாயே” ,என்ற நாடகத்தை அரங்கேற்றினேன். அதன் பிறகு 
கண்ணன் எழுதிய “முப்பது நாள் “ என்ற நாடகத்தையும் 
அரங்கேற்றினேன். நீளமான வசனங்களை எங்களுக்கு ஏற்ற
படி மாற்றிக்கொண்டோம். விடை கொடு தாயே நாடகம் 
அந்நாள்  கர்னாடக கல்வி அமைச்சர்  திருமதி.கிரேஸ்  டக்கர் 
தலைமையில் நடந்தது.

    நாட்கள் பல சென்றபிறகு, நான் பி.எச்.இ..எல் --ல் பணி
யாற்றிக் கொண்டிருந்தபோது, “வாழ்ந்தே தீருவேன் “
நாடகத்தை மறுமுறை  கம்யூனிடி செண்டரில் 1971-ல்
நாடகப் போட்டியில் நடத்தி  இரண்டாம் பரிசாக ஒரு
ஷீல்ட் வாங்கினேன். குடியிருப்பில் இயங்கி வந்த  கிருஷ்ண
கான  சபாவுக்காக, “ஆராமுது அசடா” என்ற நாடகத்தை  இயக்கி
நடித்துக் கொடுத்தேன். அவர்களுக்காக அதையே ஸ்ரீ ரங்கத்திலும்
நடத்திக் கொடுத்தேன். பிறகு “ மனசாட்சி” என்ற நாடகம் சில
புது உத்திகளுடன் கம்யூனிடி செண்டரில் அரங்கேற்றப் பட்டது.
அந்த நாடகத்தின்  கரு கொண்ட ஒரு சிறுகதையை  என்
வலைப்பூவில் பதிவாக வெளியிட்டிருக்கிறேன்.

  ஒவ்வொரு நாடகம் போடும்போதும் நடந்த நிகழ்ச்சிகளை
நினைத்து அசை போடுவது மனசுக்கு இதமாக இருக்கிறது.
நல்ல் வேளை நான் சினிமாப் பக்கம் போகவில்லை. போய்
இருந்தால் போட்டி தாங்காமல் பலரும் ஓடிப்போயிருப்பார்கள
===============================================
             (  "உலகமே  நாடக  மேடை  என்றால் 
                        ஒப்பனை அறை  எங்குள்ளது ?" )

 



 

 









 
 



















.








19 comments:

  1. உங்கள் அனுபவத்தையும் அதில் உள்ள கஷ்ட நஷ்டங்களையும் என்னால் நன்கு உணரமுடிகிறது. நானும் சிறுவயதில் நாடகங்கள் எழுதி, இயக்குனர் பொறுப்பையும் ஏற்று, சிறுவர் சிறுமியர் மூலம், எங்கள் குடியிருப்புப்பகுதியில், மிகச் சாதாரண முறையில், அரங்கேற்றிய அனுபவம் உண்டு.சினிமாவில் தவறு நேர்ந்தால் சரி செய்து கொள்ளலாம். நாடகத்தில் அதுபோல செய்ய இயலாது.

    பிறகு சமீபத்தில் “ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்” என்ற தலைப்பில், பள்ளிச்சிறுவர்கள், இரண்டரை மணி நேரத்திற்குள் நடித்துக்காட்டும் வண்ணம், நாடகம் எழுதித்தர ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள். அதில் என் படைப்பு அகில இந்திய அளவில் மூன்றாம் பரிசுக்குத்தேர்வாகியது. சென்னையில் நடைபெற்ற மாபெரும் நிகழ்ச்சியொன்றில் ரூபாய் 5000 பரிசுத்தொகை அளிக்கப்பட்டது. பரிசுப்பணத்தைவிட அகில இந்திய அளவில் வந்திருந்த 400க்கும் மேற்பட்ட படைப்புக்களில், என்னுடையது மூன்றாம் பரிசுக்குத் தேர்வான செய்தி எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

    அதுபோலவே திருச்சி திருவானைக்கோயிலில் உள்ள மாதர் சங்கத்தினருக்காக ஒரு சமூக நாடகம் [வரதக்ஷணை கொடுமை பற்றி] எழுதிக்கொடுத்து அது திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தாரால் அவர்களின் “பூவையர் பூங்கா” நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டது. மாதர் சங்கத்தினர் அதில் சிறப்பாக நடித்திருந்தனர். எனக்கு அது மிகப்பெரியதொரு அங்கீகாரமாகத் தோன்றியது.

    தங்கள் பதிவைப்படித்ததும் இந்த நிகழ்ச்சிகள் என் நினைவுக்கு வந்து மகிழ்வித்தன.

    தங்கள் முயற்சிகளுக்கும், இந்த நல்லதொரு பதிவுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

    ReplyDelete
  2. நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்டாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.

    வரமோ சாபமோ சினிமாவிலும் ஒரு கை பார்த்திருக்கலாம்.

    ReplyDelete
  3. நாடகத்தை வெறுமனே வெளியில் இருந்து பார்த்து கொண்டு அதில் உள்ள சிறு குறைகளை மலை என சொல்லி குறை படுவோர் நிறைய உண்டு , அதில் உள்ள கஷ்ட நஷ்ட்டங்களை அவர்கள் அறியார் , இதை படித்த பின்பாவது அவர்கள் சிந்திக்கட்டும்
    உங்களுள் இருந்த ஒரு உன்னதமான படைப்பாளியின் உணர்வுகளை அப்படியே எழுத்தில் வடித்துள்ளீர்கள்

    ReplyDelete
  4. இயலையும் இசையையும்(கவிதையையும்)
    பதிவில் படித்துத் தெரிந்து கொண்டோம்
    நாடகத்தையும் ஒரு கை பார்த்திருக்கிறீர்கள்
    என அறிய மிக்க மகிழ்ச்சி
    பதிவுலகிலும் ஒரு முத்தமிழ் வித்தகர் இருப்பது
    மகிழ்சியளிக்கிறது
    மனங்கவர்ந்த பதிவு

    ReplyDelete
  5. சுவையான நினைவுகள். நானும் பள்ளி, கல்லூரி நாட்களில் நாடகம் போட்டிருக்கிறேன். ரங்கராஜன் குமாரமங்கலம் நான் பேசிய சாக்கரடீஸ் (ராஜாராணி) வசனத்தைப் பாராட்டி பள்ளியில் இருந்து வாங்கி வைத்திருந்த பரிசோடு தன் சட்டைப் பையிலிருந்த பேனாவை என்னிடம் சிறப்புப் பரிசாகக் கொடுத்தார். கல்லூரிக் காலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து நான் நடத்திய இசை நாடகம் மிக பிரபலம். இப்படி இனிய நினைவுகளைக் கிளறியது உங்கள் பதிவு. பல்துறை வல்லுனருக்கு என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. எழுபதுகளில் - அப்போதைய அமெச்சூர் நாடகங்களை பொங்கல் விழாக்களில் பார்த்திருக்கிறேன். தங்களைப் போன்றவர்களின் முயற்சியால் அவை வாழ்ந்திருந்தன இப்போது....? கல்லூரி விழாக்களில் கூட இல்லை சார். பொருளாதாரம், நேரமின்மை காரணமாக மறக்கப்பட்டு வரும் இலக்கியம். தங்களின் பதிவு மீண்டும் நினைவுபடுத்திவிட்டது. நன்றி சார்.

    ReplyDelete
  7. //நடிக்க வந்தவர்
    மனதில் சிவாஜி, ஜெமினி என்ற நினைப்பு.//

    //ONE HAS TO GIVE FIRST TO TAKE.!- என்று எழுதியிருந்தேன்..//

    1963 பிப்ரவரியில் அரங்கேறிய ஒரு நாடகத்திற்கு வசனத்தை எழுதியவருக்கும் இப்படி ஒரு சிவாஜி, ஜெமினி நினைப்பு இருந்திருந்தாலும் தப்பில்லை. ரொம்ப காலத்திற்குப் பின்னாடி வெளியான 'பாசமலர்' படத்தில் வரும் ஒரு காட்சிக்கான வசனத்தை உங்கள் நாடக வசனம் எனக்கு நினைவு படுத்தியது.

    சிவாஜியும், ஜெமினியும் (முறையே தொழிற்சாலை முதலாளி, தொழிலாளி- (அட! இங்கே கூட அப்படித்தான்!) இருவரும் உணர்ச்சியுடன் வார்த்தையாடிப் பேசும் (மோதும்) ஒரு கட்டத்தில் ஜெமினி பேசுவதாக ஒரு வசனப் பகுதியும் இப்படியாக ஒரு ஆங்கில வார்த்தைத் தொடருடன் "Those days were gone Mr.Raju! TO DAY ALL FOR EACH AND EACH FOR ALL" என்று முடியும்!

    ஆக, சினிமாவுக்கு போயிருந்தாலும் கலக்கித்தான் இருந்திருப்பீர்கள், போலிருக்கு!

    ReplyDelete
  8. கோபுசார்,உங்கள் கருத்துரைக்கும் அனுபவப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. பூவையர் பூங்கா பற்றிக் குறிப்பிடும்போது, என் மனைவி, திருச்சி வானொலி நிலையத்தில் இந்த நிகழ்ச்சியில் இரண்டு மூன்று முறை பங்கு பெற்றது, என் நினைவுக்கு வருகிறது. அவர் வரதட்சிணைக் கொடுமை என்ற தலைப்பில்கலந்துரையாடல்களில் பங்கு பெற்றிருக்கிறாள். உங்கள் பின்னூட்டம் அவளுக்குப் பழைய நினைவுகளைக் கிளறி விட்டது

    ReplyDelete
  9. சுந்த்ர்ஜி, உங்கள் பின்னூட்டம் எப்போதும் எதிர் ப்ர்க்கப் படுவது;ஊக்கப் படுத்துவது.மிக்க நன்றி.

    ReplyDelete
  10. ஏ.ஆர். ராஜகோபாலன்,நாடகங்களை எழுதி, தயாரித்து, நடித்து அரங்கேற்றும்வரை அநேக சம்பவங்கள், தமாஷாகவும் தடையாகவும் நிகழ்வதுண்டு. அதையெல்லாம் பகிர்ந்து கொள்ள ஒரு தனிப் பதிவே வேண்டும். கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. ரமணி சார், வித்தகர் என்று கூறி அதிகமாகப் புகழ்கிறீர்கள். ஆர்வமுள்ளவன் என்பதே சரி. பின்னூட்டத்துக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. கலாநேசன், நாடகம் போட பணம் வேண்டுமே. பழைய படங்களை திரையிட்டு, டிக்கட் விற்று பணம் பெற முயர்ச்சிப்போம். அந்த வகையில் ராஜா ராணி திரைபடம் திரையிட்டு பணம் வசூலித்திருக்கிறோம். அதில் வரும் சாக்ரடீஸ் நாடக வசனங்கள் ஒரு காலத்தில் மனப் பாடமாகத் தெரிந்திருந்தது. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  13. சாகம்பரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அமெச்சூர் நாடகங்கள் போட நிறைய உழைப்பும் ஆர்வமும் தேவை. நாடகம் பார்க்கப் பார்வையாளர் கிடைப்பது கஷ்டம். சபாக்களிலோ, இலவசமாகவோ பொட்டால் பார்க்க மக்கள் வரலாம்.

    ReplyDelete
  14. ஜீவி சார், உங்கள் பின்னூட்டம் எனக்கு மன நிறைவைத் தருகிறது.எனக்குத் தோன்றாத பாசமலர் வசனம் குறிப்பிட்டது மேலும்நிறைவைத் தருகிறது. you are a discerning reader sir, Thanks.

    ReplyDelete
  15. நீங்கள் போட்ட நாடகங்களைக் காணக் கொடுத்துவைக்காவிட்டாலும் கேட்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.//

    அதேதான்..
    படைப்பாளியின் உணர்வுகளை உணர்ப்பூர்வமாய் கொண்டுவந்துள்ளீர்கள். வாழ்த்துகள்..

    ReplyDelete
  16. @அன்புடன் மலிக்கா பதிவுலகில் மதுரை சரவணன் தவிர நான் யாரையும் சந்தித்ததுகூட இல்லை. எழுத்துக்கள் மூலம்தான் பரிச்சயம் அப்படி இருக்க என் நாடக அனுபவங்கள் தான் பகிர்ந்து கொண்டேன். என்னைப் பற்றி என் எழுத்தின் மூலம் வெளிபடுத்திக் கொள்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  17. உங்க dialogue நிஜமாகவே top class !
    திருச்சி-ல இருந்திருக்கேளா??!!! :) கேக்க சந்தோஷம்!
    நாடகமெல்லாம்-- சின்ன வயசில அவ்வளவா பார்த்ததில்ல... school drama ல நடிக்கறதோட/பாக்கறதோட சரி! இப்போ-லாம் தான் drama பார்க்க முடியறது... சென்னைக்கு வந்து... பெரிய வேல தான், sir ! உங்க enthusiasm உங்க post ல ரொம்பவே அழகா பிரதிபலிச்சிருக்கு!

    ReplyDelete
  18. வணக்கம் ஐயா
    என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (5/11/11 -சனிக்கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/

    ReplyDelete
  19. வணக்கம் அய்யா, தங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.//போட்டியில் பங்கெடுத்தும்
    பரிசு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் நல்ல விமரிசனங்கள்
    வந்தன// இதை விட வேறென்னப் பரிசு வேண்டும். மக்கள் அளிக்கும் விமர்சனம் தானே ஒரு படைப்பாளியை உற்சாகப்படுத்த முடியும். தங்கள் அனுபவத்தில் எனது வயது கூட இல்லை. தங்களைப் போன்ற முத்தமிழ் வித்தகரை வலைப்பக்கத்தில் சந்தித்ததே என்னைப் போன்ற இளைஞர்களுக்கு பாக்கியம்.

    ReplyDelete