Tuesday, August 16, 2011

ஊழலுக்கெதிராக....

ஊழலுக்கெதிராக....
-------------------------

நாட்டில் ஊழலில்லாத அரசும் அதிகாரிகளும்வேண்டும் என்பதில்
யருக்கும் அபிப்பிராய பேதம் இருக்க முடியாது. ஆனால் ஊழலுக்கு
எதிராக செயல்படும் ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக்
கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியா
யத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள். .
ஊழலுக்கெதிரான பலமான சட்ட அமைப்புகள் இல்லை என்பது
எல்லோரும் அறிந்ததே. உண்மையில் அந்த மாதிரி ஒரு பலமான
சட்ட மசோதா கொண்டு வரஅல்லவா இவர்கள் பாடுபடவேண்டும்
லோக்பால்போன்ற சட்டமசோதாக்கள் பாராளுமன்றத்தால் நிறை
வேற்றப்பட வேண்டும். பாராளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்
பட்ட 540-க்கும் மேற்பட்ட அங்கத்தினரைக் கொண்டது..இவர்கள்
பல்வேறு கட்சிகளையும் பிரதேசங்களையும் சார்ந்தவர்கள். .
இப்போது UPA-ல்பிரதான அங்கம் வகிக்கும் காங்கிரஸ்பெரும்
பான்மைக் கட்சியல்ல. அவர்கள் மட்டும் நினைத்து எந்த சட்டமோ
திருத்தமோ கொண்டு வர முடியாது. லோக்பால் மசோதா போன்ற
எதுவும் ,பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப் படாமல் நிறைவேற்ற
முடியாது. தங்களைக் CRUSADER- களாகப் பாவித்துக்கொண்டு,
அகில இந்தியாவுக்கும் சேர்ந்து குரல் கொடுக்கும் இந்த பஞ்ச
பாண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்.?அரசாங்கம் தயாரித்துள்ள
மசோதாவில் இன்ன குறை, இது சரியில்லை, இது மாற்றப்பட
வேண்டும் என்று பாராளுமன்றப் பிரதிநிதிகளிடம் பேசி, ஒத்தக்
கருத்தை உருவாக்க வேண்டும். அதை விட்டு, பார்லிமெண்டில்
நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை
இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?

நாடு இருக்கும் நிலையில் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட வேண்
டியது மிகமுக்கியமானது இன்னிலையில் மக்களின்
உணர்ச்சிகளைத் தூண்டுவதுபோல்பேசுவதும் நடந்து கொள்வதும்
தலைவர்கள் என்று தங்களைத்தானே சொல்லிக் கொள்பவர்கள்
செய்யும் செயலாகத்தான் இருக்கிறது. அரசுக்கு எதிராக கருத்து
தெரிவிக்க, கூட்டங் கூட்டி உண்ணாவிரதம் இருப்பதுதான்
வழியா.?

நாம் சுதந்திரம் பெற்று 64- வருடங்கள் முடிந்து விட்டது.உண்மை
யில் ஏழ்மையிலிருந்தும், அறியாமையிலிருந்தும், ஜாதி மத இன
பேதங்களிலிருந்தும் ,போட்டி பொறாமை, பேராசையிலிருந்தும்
சுதந்திரம் பெறவில்லை. அதற்கான வழிமுறைகளில் ஆக்க
பூர்வமாகத் தொண்டு செய்பவர்களை, நிறைகுடங்களாய்த்
தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல்
வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப் படுத்துவது
தவறு என்றே தோன்றுகிறது,

காங்கிரஸைத் தவிர இருக்கும் மற்ற கட்சிகள் அவர்களது
அபிப்பிராயங்களைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்களா?ஒத்த
கருத்து ஏதேனும் இருக்கிறதா.?பாராளுமன்ற Standing Committee-ல்
அங்கம் வகிக்கப் போகிறவர்கள் தானே மாற்றுக் கட்சியினரும்.

தீவிரவாதிகளும், உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளும் இந்த
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

முன்பே நான் கூறியுள்ளபடி ஊழலுக்கான அடிப்படைக்
காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.    
   

12 comments:

  1. //ONLY CRUSADERS -ஆக தங்களை பாவித்துக் கொண்டு,ஏகப்பட்ட சப்தங்களை எழுப்புபவர்கள் ,மக்களை அநியாயத்துக்கு ஒன்றுமே அறியாதவர்கள் போல் பாவிக்கிறார்கள்.//

    இந்த அணுகுமுறையே அவர்களது குறிக்கோள் குறித்த ஒரு கேள்விக்குறியை எழுப்புகிறது என்பதையே பார்க்கிறோம்.

    //பார்லிமெண்டில் நம்பிக்கை உண்டு, ஆனால் அதிலுள்ள பிரதிநிதிகளிடம் நம்பிக்கை இல்லை என்று கூறுவது எந்த விதத்தில் ஏற்றுக் கொள்ளக் கூடும்.?//

    மிகச்சரியான கேள்வி!

    //நிறைகுடங்களாய்த் தளும்பாமல் இருப்பவர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் வெறுமே SABRE-RATTLE செய்பவர்களை முக்கியப்படுத்துவது தவறு என்றே தோன்றுகிறது,//

    தவறே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை ஐயா!

    அழுத்தம் திருத்தமாய், ஆணித்தரமாய் சொல்லியிருக்கிறீர்கள். I salute You!

    ReplyDelete
  2. ஊழல் இந்தியாவில் கரைபுரண்டு ஓடுகிறது
    எல்லா அரசியல் வாதிகளும் ஊழல்வாதிகளாக
    இருக்கிறார்கள் நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி
    இத்தனை ஆண்டுகாலமும் பாராளுமன்றமும்
    உறுப்பினர்களும் இருக்கத்தான் செய்தார்கள்
    ஊழலை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்ததைத் தவிர
    வேறு என்ன உருப்படியாகச்செய்தார்கள்
    நாமும் செய்ய மாட்டோம்
    செய்ய வருபவர்களையும் ஏதாவது சொல்லி விமர்சனம் செய்து
    ஒதுக்கிவிடுவோம்
    சிந்திக்கத் திறனற்றும் ஏதாவது ஒரு வகையில்
    இந்தப் பிரச்சனை சரியாகிவிடாதா என
    ஏங்குபவர்களையும் குழப்பிவிடுவோம்
    அதுதான் இந்தியாவில் தொடர்ந்து நடக்கிறது
    ஹசாரே ராம்தேவ் தவிர வேறு யார்தான்
    ஊழலுக்கு எதிராக இப்போது கொடிபிடிக்கிறார்கள்
    மாட்டிக் கொண்டவனை மட்டும் திருடன் என்கிறோம்
    அதற்கும் ஒரு கோர்ட்தான் தேவைப்பட்டது
    பாராளுமன்ற அமைப்புக்கு உட்பட்ட வேறு
    ஏதாவது ஒரு அமைப்பா 2ஜி ஊழலை
    நெருக்கடி கொடுத்து வெளிக் கொணர்ந்தது?
    ஊழலை ஒழிக்க மாட்டேன்
    ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டமும்
    கொண்டுவரமாட்டேன்
    அதற்கு எதிராக போராடவும் விடமாட்டேன்
    என்றால் அதற்கு என்ன அர்த்தம்
    அது என்ன அரசியல் என எனக்குப் புரியவில்லை

    ReplyDelete
  3. ஊழலுக்கு எல்லோரும் எதிரிகள்தான். நான் கூறவருவதெல்லாம் அணுகுமுறை பற்றிதான். யார் என்ன சொன்னாலும் ஊழலுக்கெதிரான சட்டம் பாராளுமன்றத்தால்தான் கொண்டு வர முடியும். நான் சொல்வது போல்தான் சட்டம் மசோதா இருக்க வேண்டும் என்பது சிறுபிள்ளைத்தனம். அரசாங்கம் கொண்டுவந்துள்ள மசோதாவைப் எல்லோரும் ஏற்கும்படியான மசோதாவைக் கொண்டுவருவதில் ஆக்க பூர்ர்வமாகச்செயல் படவேண்டும்.ஊழலுக்கெதிரான விழிப்புணர்வுக்கு ஒரு முகமாக இருந்த அண்ணா ஹசாரெ, கிடைத்த நல்லெண்ணத்தை வீணாக்குகிறார் என்றே தோன்றுகிறது. இப்பொழுது நீயா நானா என்ற கட்டத்துக்கு வந்துள்ளது. கருத்துக்கு நன்றி ரமணி.

    ReplyDelete
  4. ஊழலுக்கான அடிப்படைக்
    காரணங்கள் களைந்தெறியப்பட வேண்டும். சந்தர்ப்பவாதிகளும்
    சுயநலமிகளும் அடையாளப் படுத்தப் பட வேண்டும். பிரச்சினை
    உணர்வு பூர்வமாக அல்லாமல் அறிவு பூர்வமாக அணுகப்பட
    வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளின் அடையாளங்களாகத்
    தங்களை எண்ணிக் கொள்பவர்கள் அந்த நிலையைத் தக்க
    வைத்துக் கொள்ள அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
    ஆக்கபூர்வமான கருத்துரைகளுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. அருமையான பதிவு.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

    ReplyDelete
  6. இதையேதான் ஆளும் கட்சியும் சொல்கிறது. 40 வருடங்களாக ஒரு மசோதா கிடப்பில் கிடக்கிறது. எத்துனை ஆட்சி மாறியது. ஏன் ஒருவரும் இது குறித்து அக்கறை காட்டவில்லை? எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். ஊழலை ஒழிப்போம் என வாய் கிழிய பேசுவதோடு மட்டுமல்லாது அந்தப் பேச்சையும் சந்தர்ப்பத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வரே அன்றி வேறல்ல. ராசாவின் கொள்ளை மட்டும் வெளிப்படவில்லையென்றால் நமது மக்களும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்வர். ஆனால் இது கொடுமையல்லவா? ஜனநாயகச் சிக்கல் இருக்கிறதென்றால் அதைத் தீர்க்கவேண்டுமே தவிர நமது நாட்டிற்கு இப்போது மிகத்தேவையான இந்த சக்தியை முடக்கிப்போட்டு மறுபடியும் அசுரனை உயிர் பிழைக்க விடக்கூடாதல்லவா..?

    தங்களுக்குத் தெரியாததல்ல. மகாத்மாவையே சுட்டுத்தள்ளிய தேசமல்லவா இது.

    கருத்து வேற்றுமைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் தேசத்தின் உயிரறுக்கக் கூடாது. என்னைக் கேட்டால் பாராளுமன்றத்தில் இப்போது நடப்பது மிகப் பெரிய தீவிரவாதமென்பேன். மக்களின் உணர்வுகளை எல்லாக் கட்சிகளும் மிதிக்கின்றன. இது கூடாதல்லவா..,.?

    ReplyDelete
  7. @வெட்டிப்பேச்சு. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அரசியல் ஆதாயம் தேடி எரிகிற கொள்ளியில் எண்ணை விடக்கூடாது. ஊழலுக்கெதிரான மக்கள் சக்தியைக் காண்கிறோம். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தரும் அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டத்தின் தீர்வுக்கு வழிசெய்ய முடியும். செய்வார்களா?அண்ணாஹசாரேயின் ஜன் லோக் பாலுக்கு அவர்களுடைய ஆதரவைத் தெரிவிக்கட்டுமே. ஹசாரே மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களைக் கொண்டு ஏற்கெனவே குற்றுயிராயிருக்கும் அரசை வீழ்த்துவதுதான் அவர்கள் நோக்கம். இது தெரிந்துதானோ என்னவோ ஹசாரே அவர்கள் பாராளுமன்றத்தில் நம்பிக்கை உண்டு ஆனால் அதன் பிரதிநிதிகளிடம் இல்லை என்றாரோ என்னவோ. தான் நினைக்கும் ஜன் லோக் பால்தான் வரவேண்டும் என்றால் அதற்கு பாராளுமன்ற ஆதரவைப் பெறுவதில் அவர் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண குடிமகனுக்கு ஊழல் ஒழிக்கும் சட்டம் வேண்டும். ஊழல் ஒழிய வேண்டும். அதற்கு ஒத்த கருத்து உருவாக எல்லோரும் செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  8. எனக்குத் தெரிந்த வரையில் அன்னா ஹசாரே எந்த அரசியல் அமைப்பின் பின்னும் இல்லை. அரசியல் கட்சிகள்தான் இதிலும் ஆதாயம் தேடுகின்றன.

    ஆளும் கட்சியின் பிடிவாதம் ஒத்துக்கொள்ள முடியவில்லை. மிகப் பெரிய ஊழல்கள் நடந்த பின்னும் மௌனம் காப்பது அல்லது பேருக்கேனும் நடவடிக்கை எடுப்பது அவர்களது நம்பகத்தன்மையை கெடுக்கிறது.

    ஊழல் செய்த கட்சிகள் ஊழலுக்கெதிராய் என்ன செய்துவிடும் என நினைக்கிறீர்கள். கட்சிகள் மட்டுமே கூடும் பாரளுமன்றத்தை பகடையாக வைத்து விளையாடுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் விழித்துவிட்டார்கள். அன்னாவின் இயக்கத்தில் இதுதான் ஒரு பெரிய உந்து சக்தி. வலிமையான இந்தியாவை விரும்பும், தன் உழைப்பை சுரண்டாத அரசியல் வாதியை விரும்பும், உழைப்பைச் சுரண்டினால் தண்டனைக்குத் தப்ப முடியாதபடிக்கு ஒரு சட்ட அமைப்பை விரும்பும் இளைஞர்கள் அவர் பின் சேர்ந்து விட்டனர்..

    விடியலுக்கு காத்திருப்போம்.

    ReplyDelete
  9. கொடுக்கிறவன் இருக்கும் வரை எடுக்கிறவன் இருந்து கொண்டுதான் இருப்பான். அடிப்படை என்ன என்பதில் தான் அக்கறை கொள்ள வேண்டும். மனிதாபிமானமுள்ள எவரும் ஊழலுக்குக் கைநீட்டமாட்டார்கள்.

    ReplyDelete
  10. ஐயா, சுத‌ந்திர‌ இந்தியாவின் அறுப‌த்தைந்து ஆண்டுகால‌த்தில், நேருவிட‌ம்(ஜீப் ஊழ‌ல்)தொட‌ங்கி, இந்திராவிடம் (ந‌க‌ர்வாலா) த‌வ‌ழ்ந்து, ராஜீவிட‌ம் (போப‌ர்ஸ்) ந‌ட‌ந்து,ந‌ர‌சிம்ம‌ராவிட‌ம் (ஹர்சத் மேத்தா)ந‌டை ஓட்ட‌மாகி சோனியாவிட‌ம் (2ஜி, சிவிஜி, எஸ் பாண்ட்,ஆத‌ர்ஸ்) ஓட்ட‌மாய் ஓடி, உண்மையாய் உழைப்ப‌வ‌ர்க‌ளை வ‌றுமைக் கோட்டிற்குள் தள்ளிவிட்டு விட்டு ஹ‌ச‌ன் அலி, குவாட்ரோச்சி, ம‌து கோடா, ச‌ர‌த்ப‌வார்,சித‌ம்ப‌ர‌ம், முக‌ குடும்ப‌ம், ராஜா, க‌ல்மாடி, திக்ஷித், அம்பானி,கோய‌ல், மாற‌ன் ச‌கோத‌ர‌ர்க‌ள், சிபுசேர‌ன், ரெட்டி ச‌கோத‌ர‌ர்க‌ள் போன்ற‌வ‌ர்க‌ளை வின்ன‌ள‌வு உய‌ர்த்தி தோல்க‌ளில் தூக்கிச் சென்று கொண்டிருக்கிற‌து இந்த கோலிய‌த் ஊழல் பூத‌ம். அதை எதிர்க்க‌ வ‌ந்த‌ டேவிட்டாய் அன்னாவையும், வ‌லிமையான லோக்பால் பில்லை அவ‌ர‌து க‌வன் க‌ல்லாய், இந்த‌ பாவ‌ப்ப‌ட்ட‌ நூறு கோடி இந்திய‌ ம‌க்க‌ளும் எண்ணியே இந்த‌ அற‌ப்போர‌ட்ட‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ருகிறார்க‌ள். உட‌னிருக்கும் 'ப‌ஞ்ச‌ பாண்ட‌வ‌ர்க‌ளிட‌ம்' குறைக‌ளிலிருந்தாலும் (நீங்க‌ள் கூறிய‌ப‌டி), நிச்ச‌யமாய் தேச‌ துரோக‌மில்லை. குறைய‌ற்ற‌வன் ம‌னித‌னில்லை. இவ‌ர்க‌ள் நாட்டுக்காக போராடும் மாம‌னித‌ர்க‌ள‌க‌வே இருக்கிறார்க‌ள். மேலும் பேசுவோம். ந‌ன்றி.

    ReplyDelete
  11. இந்த வலையில் ஒரு ஆரோக்கியமான விவாதமே நடைபெறுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. எரிதழல் வாசனுக்கு, நான் என்னுடைய எந்த பதிவிலும் யாரையும் தேசத் துரோகி என்று கூறவில்லை. அர்த்தம் புரிந்து கொண்டுள்ளதில் எங்கோ பிழை இருக்கிறது என்று எண்ணுகிறேன். விவாதம் தொடரட்டும் ஒரு நல்ல புரிதல் நிகழட்டும். அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  12. ஐயா. 'தாங்க‌ள் கூறிய‌ப‌டி, அன்னா குழுவின‌ர் த‌வ‌று செய்த‌வ‌ர்க‌ளாக' இருக்க‌லாம், ஆனால் இந்த‌ சில‌ அர‌சிய‌ல்வாதிக‌ள் போல் "தேச துரோகிக‌ள் அல்ல‌வே" என்ற‌ அர்த்த‌த்தில் தான் 'தேச துரோகிக‌ள்'
    ப‌த‌ம் பின்னோட்ட‌த்தில் இட‌ப்ப‌ட்ட‌து. நான் கொஞ்ச‌ம் தெளிவாக எழுதியிருந்திருக்க‌லாமோ? குழ‌ப்பிய‌திற்கு வ‌ருந்துகிறேன்.

    ReplyDelete