Tuesday, October 11, 2011

பேசாமல் பெண்ணாய்....

பேசாமல் பெண்ணாய்...
-------------------------------

பேசாமல் நாமும் பெண்ணாகவே பிறந்திருக்கலாம்.
வயதானால் வழுக்கை விழாது , நகரத்தில்
நமக்காகவே சிறப்புப் பேரூந்துகள் இயங்கும்
தினமும் முகச் சவரம் செய்ய வேண்டியதில்லை.
சட்டங்கள் நமக்காக சாய்ந்திருக்கும் ,எப்போதும்
நம் செல் பேசி செயல் பாட்டிலேயே இருக்கும்
சடங்கானால் ஊர் கூடி சீர் செய்துக் கொண்டாடுவார்கள்
நாற்பது பேர் ப்ரொபோஸ் செய்வார்கள் , கல்யாணம்
மருதாணி ,நலங்கு ,பட்டுப்புடவை , வளைகாப்பு என
அநேக தருணங்களில் நாயகியாய் அமர்ந்திருக்கலாம்
காமக் கவிதை எழுதினால் உலகமே திடுக்கிடும்
கணவனுக்கெதிராகப் புகார் கொடுக்கலாம் -மூத்த
இலக்கியவாதி திருவனந்தபுர விடுதி முகட்டுக்கு நம்மை
அழைத்துப்போய் கடலைப் பார் எனக் காட்டுவார்-உனக்கு
இந்தக் காட்சி பிடிக்கும் என்று எனக்குத் தெரியும்  என்பார்
முகப் புத்தகத்தில் எவனையும் கவிழ்க்கலாம் -எவனாவது
ஒருவன் நமக்குத் தாஜ்மகால் கட்டுவான் -கிழவியானாலும்
ஒருவன் அருநெல்லிக்கனி தருவான். -ஒன்பதாம் வகுப்பே
படித்திருந்தாலும் கல்லூரிக்குப் பேச அழைப்பார்கள்.
மதுரையை எரிக்கலாம்-கூந்தல் வாசம் குறித்து ஐயம்
எழுப்பி ஆண்டவனையே அலைக் கழிக்கலாம்
நமக்கு நல்ல அடிமைகள் வாய்ப்பார்கள்.
டென்னிஸ் ஆடினால் உலகமே கவனிக்கும். -அரசு
விவகார அதிகாரியானால் பத்திரிகைகள் பின்னாலேயே
ஓடிவரும். -நம் வலைப்பூவில் நிறைய வண்டுகள் திரியும்
திடீரென்று நம் புத்தகங்கள் எஸ்கிமோ மொழியில்
பெயர்க்கப் படும்.-யார் அமைச்சராக வேண்டும் என்பதை
நாம் முடிவு செய்யலாம். - பேசாமல் நாமும்
பெண்ணாகவே பிறந்திருக்கலாம் -இல்லையா.?

(சத்தியமாக இது என் கற்பனை இல்லை. எனக்கு ஒரு மின் அஞ்சல் 
ஃபார்வேர்ட் செய்யப் பட்டிருந்தது. நான் பெற்ற இன்பம் பெறுக 
இவ்வையகம் என்னும் எண்ணத்தில் இதனைப் பதிவிடுகிறேன். )










11 comments:

  1. பூப்பு என்ற பெயரில் நம் மானத்தை வாங்குவார்கள், அந்த மூன்று நாட்கள் வலி உயிரை எடுக்கும், வலியை மீறி பெற்றெடுத்தாள் கை பிடித்தவன் நம் வலி குறித்து கேட்கவே மாட்டான், மகன் மனைவி வந்தவுடன் மறந்து விடுவான், இன்னும் எவ்வளவோ அவர்களும் அடுக்க முடியும்... இக்கரைக்கு அக்கறை பச்சை... உங்களுக்கு தெரியாததா?

    ReplyDelete
  2. மாத்தி யோசிச்சு இருக்கீங்க. பெண்களைக்கேட்டுப்பாருங்க நாமும் ஒரு ஆணாய்ப்பிறந்திருக்கனும்னுதான் சொல்வாங்க.அவங்களும் இதுபோல நிறைய காரணங்களைச்சொல்வாங்க.

    ReplyDelete
  3. தங்களுக்கு ஃபார்வேர்ட் செய்யப்பட்ட மெயிலை ஒரிஜினலாக எழுதியவர் பல விஷ்யங்களை ஆராய்ந்து தான் எழுதி அனுப்பியுள்ளார்.

    நம் நண்பர் சூர்யஜீவா அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள கருத்துக்களும் மறுக்க முடியாதவை தான்.

    தூரத்துப்பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி. அவரவர்கள் கஷ்டம் அவரவர்களுக்கு இருக்கும் தான்.

    நன்கு சிந்திக்க வைக்கும் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஐயா, இது மகுடேஸ்வரன் அவர்கள் எழுதிய கவிதை! :-)
    இதை எழுதிவிட்டு அவர் படுகிற பாடு இருக்கிறதே...! :-(

    ReplyDelete
  5. //பூப்பு என்ற பெயரில் நம் மானத்தை வாங்குவார்கள், அந்த மூன்று நாட்கள் வலி உயிரை எடுக்கும், வலியை மீறி பெற்றெடுத்தாள் கை பிடித்தவன் நம் வலி குறித்து கேட்கவே மாட்டான், மகன் மனைவி வந்தவுடன் மறந்து விடுவான்//

    பிரமாதம் நண்பரே! :-)

    ReplyDelete
  6. இக்கரைக்கு அக்கரைப் பச்சை
    இது,ஆண் பெண் இருவருக்கும்
    பொருந்தும்
    ஆனால் இதில் ஏதோ மறை
    பொருள் உள்ளதாகவே படுகிறது

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  7. //காமக் கவிதை எழுதினால் உலகமே திடுக்கிடும்// ஹா ஹா

    ReplyDelete
  8. அவர்களது நல்ல பக்கம் மட்டும் காட்டப் பட்டுள்ளது
    அவர்களது அவஸ்தைப் பக்கம் காட்டப்படவில்லை
    ஆயினும் பதிவு ரசிக்கும் படியாக இருந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. சுவாரஸ்யமான கற்பனை. மகுடேஸ்வரன் கவிதையா...சிறப்புக்குக் கேட்பானேன்...
    இல்லாத பொருள் மீது எல்லார்க்கும் ஆசை வரும்...இக்கரைக்கு அக்கரை பச்சை...

    ReplyDelete
  10. @சூர்யஜீவா, @லக்‌ஷ்மி, @கோபு சார், @புலவர் ஐயா, ரமணி ஸ்ரீராம்-- ஆணாகப் பிறந்திருக்கலாமே என்று ஒரு பதிவு எழுதி இக்கரைக்குஅக்கரைப் பச்சை என்று காட்ட ஒரு எண்ணம் இருக்கிறது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
    @சேட்டைக்காரன் இது மகுடேஸ்வரன் கவிதை என்று எனக்குத் தெரியாது. மின் அஞ்சலில் வந்ததைப் பகிர்ந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
    @சமுத்ரா, @நாகசுப்பிரமணியம். வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  11. ஐம்பதிலும் ஆசை வரும்.
    ஆசை மட்டுமல்ல .
    ரசிக்க வைத்த சிறுகதை.

    ReplyDelete