Wednesday, January 18, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்று)...

                                    நினைவில் நீ.( தொடரும் நாவல் )
                                    ----------------------------------------------
    (கலைமகள் நாராயணசாமி அய்யர் நினைவு நாவல்
     போட்டிக்காக 1966-/ ம் வருடம் எழுதியதை தூசு தட்டிப்
     பதிவிடுகிறேன் )
     

            மூக்கில் ஆக்ஸிஜென் ட்யூபும், உடலின் சோர்வும்,உள்ளத்தின் பளுவும், இருண்ட எதிர்காலத்தின் நினைவை ரங்கசாமியின் நினைவில் நிறுத்தியது.இருட்டில் ஒளியைத் தேட கடந்த கால நிகழ்ச்சிகளை அசை போட்டவரின் கண்களில் நீர் அரும்பியது. எண்ணத் தறியில் கடந்த நிகழ்ச்சிகள் இழையோட இழையோட, எதிர்காலத்து சோபை,விடி வெள்ளிபோல் தென்படும் தறுவாயில், தறி அறுந்தது., நர்ஸின் நடையோசை கேட்டு.

                 விரிப்பை சரி செய்து, ஆக்ஸிஜென் ட்யூபை மாற்றிப் பொருத்திடக், டக்,என்ற மிதியோசை வெளிப்படக் கடந்து சென்ற நர்ஸின் விருப்பு வெறுப்பற்ற கடமை உணர்வைக் கண்டதும், காலம் யாருக்கும் காத்திருப்பதில்லை என்ற உண்மையும் தெள்ளெனத் தெரிந்தது. “ காலத்துடன் காலனும் போட்டி போடுகிறானோஎன்ற நினைவு உதித்ததும் உள்ளம் வெதும்பியது. “ ஆண்டவனே நான் சாகக் கூடாது.எனக்கு இன்னும் எவ்வளவொ கடமைகள் இருக்கிறதே. காலனே என்னை அண்டாதே “என்று வேண்டலும் வெதும்பலுமகக் கிடந்தவரின் நினைவுத் தறி மீண்டும் ஓட ஆரம்பித்தது. த்றியின் இழையோட்ட எண்ணங்கள் பாபுவை சுற்றியே பின்னப் படுகிறது. ஏன்.?இருண்ட எதிர்காலத்தின் விடி வெள்ளியாக பாபுவைத்தான் காண்கிறாரோ.?

     அன்று வேலை தேடிசென்ற பாபு ஒரு மாதகாலத்துக்கு திரும்பி வரவேயில்லையே. அந்த இள வயதிலேயே எதிர்பாராத ஏமாற்றத்தின் ஏகபோக உரிமைக்கு ஆளாக்கப் பட்டுவிட்டான் பாபு. வேலை தேடி வந்தவனைக் கண்டதும்  வேலை இருக்கிறது என்று சொன்னவர்கள் எள்ளி நகையாடினர். உடல் வளர்ச்சி குறைவு என்று நிராகரித்தனர். ஏமாற்றம் அவன் உள்ளத்தை வைரமாக்கியது. வேலையில்லாமல் திரும்ப மாட்டேன் என்று உறுதியாய் இருந்தவன் முயற்சியெல்லாம் முக்கால்தோல்விதான்,வேலை கிடைக்கவில்லை என்ற நிலையைப் பொறுத்தவரையில்.ஆனால் கால் பங்கு வெற்றி,உலகத்தின் நடவடிக்கைகளை அந்த இடைக் காலத்தில் உணரக் கிடைத்த வாய்ப்பினால்.  கடைசியில் வீடு வந்து சேர்ந்தவன் எடுத்த காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பது அவ்வளவு எளிதல்ல என்ற உண்மை உணர்த்தப் பட்டவனாக இருந்தான். தந்தையைக் கண்டதும் தாங்க முடியாத வேதனையாலும் அவமானத்தாலும் நிலை குன்றிப் போனான்.

                அப்படி அன்று மனமொடிந்து வந்தவன் இன்று வாழ்வின் அடிப்படியில் காலெடுத்து வைத்திருக்கிறான். அவனை ஒளிவட்டமாகக் காண்பதில் தான் பெரிய  தவறு செய்கிறோமோ என்று ரங்கசாமி உருகினார்.அவர் அப்படி நினைக்கக் காரணமுண்டு. தன் மூத்த பிள்ளைகளால் ஏமாற்றப் பட்டு பழிக்கப் பட்ட அவர் சுட்ட பால் குடித்த பூனையாயிற்றே. தன்னைப் பழிப்பவர் சுற்றாரும் உற்றாரும் மட்டுமா? உலகமுமா.?அப்படி என்ன பழிதான் செய்துவிட்டோம் தன் இரு மூத்த பிள்ளைகள் அப்படி நடந்து கொண்டிருக்க வேண்டியதில்லை. தான் வேண்டியதில்லை என்று நினைத்தால் நடக்காதென்ற காரியமாயிருந்தால் இப்படி ஒரு நிலையே ஏற்பட்டிருக்காதே.

        கஷ்ட நஷ்டங்களைப் பற்று வரவு பார்க்கும்போதும் சில சமயங்களில் ஒரு அலாதியான திருப்தி ஏற்படுகிறது. நிவர்த்திக்கப்பட முடியாத காரியங்களிலும் சில நன்மைகள் தெரிகிறது. தன் காரியங்களைப் பழித்துதனக்கெதிராக கிளம்பியுள்ள பிள்ளைகளால் நன்மைகள் ஏதும் ஏற்படாவிட்டாலும் துன்பங்களாவது தவிர்க்கப் பட்டு விட்டதே.இல்லையென்றால் என்றும் ஒரே போராட்டமாயிருந்திருக்கும். இப்போதும் போராட்டம் இல்லையென்றல்ல. இப்போதைய போராட்டங்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் பாதையமைக்கும் பணியில்தான். மற்றபடியிருந்தால் கூடவே மனப் புகைச்சல்களும் பூசல்களும் கூடவே இருந்திருக்கும். தன் சுய கௌரவமும் எண்ண ஈடுபாடுகளும் செயல்களும்பிறருக்காக விட்டுக் கொடுக்க வேண்டி இருந்திருக்கும். விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை

   .தான் எண்ணியபடி இரண்டாம் முறை மணந்தது தவறு என்றால், தவறு எது சரி எது என்று நிர்ணயிக்கப் படமுடியாத ஒரு சந்தர்ப்பத்தினால் ஏற்படும் ஒரு முடிவேயாயிருக்கும். எந்த ஒரு கொள்கைக்கும் இரண்டு வாதம் இருக்கும். அது சந்தர்ப்ப சூழலால் அவரவர் ஏற்கும் முடிவைப் பொறுத்தது. தான் செய்தது தவறு அல்ல என்ற எண்ணம் இறக்கும் தருவாயிலும் இருப்பது தன் கொள்கையின் , முடிவின் சரித்தன்மையைக் காட்டுகிறது. மேலும் தன் இரண்டாம் மனைவி தன் மூத்தாள் பிள்ளைகளையும் தன் பிள்ளைகள் போல் கவனித்தது எல்லோரும் அறிந்ததே. அறிந்ததை இல்லையென்று நிரூபிக்க முயல்வது செயல் நிகழ்த்தியவரைப் பழிப்பதற்கே ஆகும். அது யார் குற்றமுமல்ல.

            மேலும் இருந்த ஒரே பெண்ணும் மணமுடிந்து குடியும் குடித்தனமுமாக எங்கோ இருக்கிறாள். .இவர்கள் எல்லோரும் தன் சாவுக்காவது வருவார்கள். வந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வடித்தால் அவர்களின் அறியாமையும் மன்னிக்கப்படும்.

            ஆனால் சாவை எதிர்பார்க்கும் நிலையிலா ரங்கசாமி இருந்தார்.?வளர்ந்த பிள்ளைகள் வளர்க்கப்பட்ட விதத்திலாவது வளர்ந்து வரும் பிள்ளைகள் வளர்க்கப்பட வேண்டுமே.. அதற்கு பற்றுகோல் போல் பாபுவை நாடுவது சரியா. பாபுவோ சுயமாக வாழ இப்போதுதான் வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறான். தன்னாலேயே தாங்க முடியாத வறுமைப் பிணியை அந்த இளம் பிள்ளை தாங்குமா.? தெய்வமே தனக்கு சாவு வரக் கூடாது என்ற பிரார்த்தனையே அடிக்கடி எழுந்தது. பிரார்த்திக்கும்போதெல்லாம் பாபுவையே கோடி காட்டும் தெய்வம் அவனிடமே தன் பொறுப்புகளை சுமத்தச் செய்யுமா.? சிந்தனைகள் சிக்கலில் சுழலச் சுழல எண்ணம்  தடை படுகிறது. நெஞ்சு வலிக்கிறது. இதோ....டாக்டர் போகிறாரே...அவரை கூப்பிடலாமா “ டாக்டர் “

          வாழ்க்கையில் கிடைத்த பெரும் வெற்றி பாபுவுக்கு அவனைப் பொறுத்தவரை அவனாகவே தேடிப் பெற்ற வேலைதான். வேலை என்பதைவிட பயிற்சி என்பதே சரியாகும் மூன்று வருஷங்களில் ஒரு வருஷத்தை ஓரளவு முடித்தாயிற்று. தான் சம்பாதிக்கும்போது தன் குடும்பம் எவ்வளவு மகிழ்ச்சியடையும். அப்பாவுக்கு சரி நிகராகப் பணிக்குப் போகலாம். தன்னையும் தந்தையை மதிப்பது போல் தம்பிகள் மதிப்பார்கள்.. அம்மாவும் ஒருவித ஸ்பெஷல் கவனிப்பைக் காட்டுவாள். ஆனால் இன்னும் கொஞ்ச நாளில் அப்பா ரிடையர் ஆகிவிடுவாரே. அப்போது இந்தக் குடும்பம் ஒருவன் சம்பாதித்து வாழ வேண்டி இருக்குமே. வித்தியாசம் தந்தைக்குப் பதில் தான் பொறுப்புகளை ஏற்பதாகத்தான் இருக்கும். வறுமை ஒழியாது. சந்தோஷம் இருக்காது. எண்ணியது நடக்காது மொத்தத்தில் வாழ்க்கையே சுவைக்காது. நடக்காத செயல்களை நடப்பதாக பாவித்துஇன்பமும் துன்பமும் அடைபவர்கள் ஏராளம். ஆனால் வறுமையிலேயே பிறந்து வறுமையிலேயே வாழும் பாபுவுக்கு இன்பத்தை பற்றியும் சுக வாழ்வு பற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.இதனைவிட கஷ்டமில்லாமல் இருந்தால் சரி என்ற துறவு உணர்ச்சியே அந்த இள வயதிலேயே ஏற்பட்டுவிட்டது. எதிர்காலத்தை எதிர் நோக்கும்போது எதிர்பாராதது ஏதும் இருக்கலாகாது என்ற கொள்கை அவனை அறியாமலேயே அவனிடம் இருந்தது.,அவனது பிற்காலத்தில் பெரிதும் உதவியது. ரங்கசாமியும் பாபுவுக்கு அடிக்கடி கூறும் அறிவுரை “நல்லதை எதிர்பார். அல்லாததற்கும் தயாராய் இரு “என்பதுதான்.

         பாபு உனக்கு அர்ஜெண்டாக ஒரு செய்தி வந்திருக்கிறது. உன் அப்பா, ஆஸ்பத்திரியில் கொஞ்சம் சீரியசாம்...உடனே போ.செய்தி சொன்னவன் முடிக்கவுமில்லை., பாபு பறந்து விட்டான். ஆஸ்பத்திரி வாசலில் தடை செய்த காவலர்களையும் சட்டை செய்யாமல் பதறிச் சென்ற பாபுவை ரங்கசாமி புன்னகையுடன் வரவேற்றார்,தாயும் தம்பிகளும் இருந்தனர். பயங்கரமான சூழ்நிலையை எதிர்பார்த்துச் சென்ற பாபுவுக்கு ரங்கசாமி இருந்த விதம் ஆறுதல் தந்தது.

        “என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேன்.நீங்களானால் அரச தர்பாரில் இருக்கிறமாதிரி இருக்கிறீர்களே. உடம்பு பரவாயில்லையா அப்பா, டாக்டர் என்ன ச்ப்ல்கிறார்.? டாக்டர் எங்கே.?

         “டேய், டேய், பதட்டப்படாதே.!ஏதோ உங்களை எல்லாம் பார்க்கணும் போல இருந்தது. டாக்டரிடம் சொன்னேன். உனக்கும் செய்தி அனுப்பினார்கள்.கவலைப்பட எதுவுமேயில்லை. “

  முசு முசு என்று வரும் மூச்சுக் காற்றையும் கட்டுப்படுத்த முயன்று முழ பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் ரங்கசாமி. அணையும் தீபச்சுடர் நின்றெரியும்போது ஏற்படும் பிரகாசம் அலாதியாக அவர் முகத்தில் தெரிந்தது. தெரிவித்ததை உணரும் வயதில்லையே பாபுவுக்கு. அவனும் நம்பினான். சிறிது நேரம் எல்லோருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். வீட்டுக்குப் போக நேரமாகிவிட்டது என்று உணர்த்தப் பட்டார்கள். பிக்னிக் வந்த பிள்ளைகள் போல் துரு துருவென்று இருந்தனர் தம்பிகள்.கல்யாணி அம்மாவுக்கு ஏதோ தெரிந்தும் தெரியாதது போன்ற பிரமை. அந்த பிரமையிலேயே கட்டுப்பட்டுக் கிடக்க ஏங்கியது உள்ளத்தின் ஒரு பகுதி. மூடுபனி
போன்ற சூநிலை தெளியத் தொடங்கினால் அங்கு தெரியும் காட்சி...அப்பப்பா .பயங்கரம்

  தெய்வமே.. வேண்டாம் இந்த நிலை.. எதையும் கோடி காட்டாதே எண்ணுவதெல்லாம் எண்ணமாகவே இருக்கட்டும் கணவனை மறுமுறை கூர்ந்து நோக்கினாள் கல்யாணி அம்மா. அவர் முகத்தில் கண்ட அசாதாரண அமைதி கல்யாணி அம்மாவுக்கு உறுதியைத் தந்தது. கண நேரம் தான் நினைத்து கலங்கி விட்ட பைத்தியக் காரத்தனத்தை நினைத்துச் சிரித்தாள் சிரிப்புடன் விடையும் பெற்று வீட்டுக்குக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் சிறிது தூரம் சென்றதும் பாபுவை மட்டும் விளித்தார் ரங்கசாமி. மற்றவர்கள் தயங்கி நின்று மறுபடியும் தொடர்ந்து சென்றார்கள். அருகில் வந்து நின்ற பாபுவை தன் அருகில் அமரச் செய்தார் ரங்கசாமி.

    என்னென்னவோ பேசத்துடித்தது மனம். எண்ணியதை எல்லாம் சொல்லில் கொட்டினால் கொட்டியவற்றின் முழு சக்தியையும் பாபு தாங்குவானா.?சில சமயம் தாங்கும் சக்தி இல்லாதவர்களிடமும் தாங்க முடியாத சுமைகள் தவிர்க்க முடியாத சமயங்களில் ஏற்றப்படும்போது, பெரும்பாலும் ஆண்டவனே அதை ஏற்றுக்கொள்கிறான்., ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை வேண்டும். பல விஷயங்களை மறைக்க முயன்றார் ரங்கசாமி. முடியவில்லை. ஒரு பெருங்கதையே அவனுக்குக் கூறினார்.சொல்லப்பட்ட விஷயங்களெல்லாம் கேட்ட பாபுவுக்கு தன் தந்தை எவ்வளவு பொறுமையோடு வாழ்வின் ஏற்ற தாழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறார் என்று தெரிந்தது. வறுமையிலும் வாழ்வின் எதிர்ப்பிலும் தனக்கு சரியென்று பட்டவற்றை மனிதாபிமான உணர்ச்சியுடன் செய்து வந்து  முடிக்க முடியாத நிலையில் உடலுக்குப் பிணி வந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவர் ஏற்ற கடமையை அவர் விட்ட இடத்தில் தொடர அவர் குணம் அறிந்த ஒருவர் வேண்டும்ரங்கசாமிக்கு பாபுவிடம் ஒரு தனிப் பற்றுதல். தந்தை தனயன் என்ற நிலைக்கும் அப்பாற்பட்டது. தனக்கு சமமானவன் என்ற எண்ணம். இது பாபுவின் விஷயத்தில் நன்மைக்காக அமைந்தாலும் மற்றவர்கள் விஷயத்தில் , முக்கியமாக மூத்த பிள்ளைகள் விஷயத்தில் மாறாக அமைந்தது. சமத்துவம் கொடுக்கப் பட வேண்டிய இடத்தில் பெறுபவர் தன்மையறிந்து தரப்பட வேண்டும். மூத்த பிள்ளைகள் தற்கால முற்போக்கு சந்ததியினரின் பிரதிநிதிகள் தனி வாழ்வு எனும் கொள்கையில் மட்டும்.

    கடைசியாக ரங்கசாமி பாபுவிடம் கேட்டது பாபுவை அதிர வைத்து விட்டது. “ பாபு ! எனக்குப் பிறகு உன் சித்தியையும் உன் தம்பிகளையும் உன்னை நம்பித்தான் விட்டுப் போவேன். அவர்களைக் கை விட மாட்டாயே பாபு..கெஞ்சாத குறைதான்.

   ஏனப்பா இப்படியெல்லாம் கேட்டு வருத்துகிறீர்கள்.நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் இகழ்ந்தவர்கள் ஏற்றிப் பேசும் அளவுக்கு என் தம்பிகளும் தாயும் வள மடைவார்கள் வளமடையத்தான் வேண்டும். ஒரு பாவமும் அறியாதவர்களை ஆண்டவன் சோதிப்பான் ,அவர்களை ஆண்டவனே சோதனையிலும் வெற்றியடையச் செய்வான் என்றும் கூறியிருக்கிறீர்களே. உங்களுக்குப் பிறகு என்றெல்லாம் பேசி ஏன் மனம் உடைகிறீர்கள். நீங்கள் என்னிடம் அப்படிக் கேட்கும்போது  என் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்று எண்ணத்தூண்டுகிறது. உங்கள் மகன் உங்களை ஏமாற்ற மாட்டான்”---விம்மி வெடித்தது பாபுவின் நெஞ்சம். ஒரு சமயம் அப்படியும் நேர்ந்து விட்டால்.... ...நேர்ந்து விடாது.. நேரக் கூடாது. இது உறுதி.!இந்த உறுதி என்னிடம் கலையுமானால், நான் உங்களுக்குப் பிறக்கத் தகுதி அற்றவன் என்று இந்த உலகம் என்னை காறி உமிழட்டும். அப்போது என் உயிர் என் உடலில் தங்காது...சொல்லாத வார்த்தைகள் நினைக்கப் பட்டன.

  ரங்கசாமியும் அமைதியிலாழ்ந்தார். பேசாத நேரம் சொற்பமே ஆனாலும் பேசிய நேரத்தால் ஏற்பட்ட சோர்வு அவருடைய தளர்ந்த உடலை நித்திரையில் ஆழ்த்தியது. உறங்கி விட்ட தந்தையிடம் விழித்த மனம் பெற்ற தனயன் மானசீகமாக விடை பெற்று வெளியேறினான். 

                                                          ( தொடரும் ) ..

                         


     
  

   


















9 comments:

  1. ஆரம்பம் சுவாரசியமாக இருக்கு. ஆஸ்பிடலில் உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கும் ஒருவரின் மன நிலை யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கீங்க. இதில் பாபுவின் மன நிலையும் தெளிவாகிரது. தொடருங்க.

    ReplyDelete
  2. ஆரம்பமே கவிதை மாதிரி அமர்க்களமான தொடக்கம், காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை என்ற தத்துவம் இந்த கதைக்கும் பொருந்தி வருகிறது அய்யா.

    ReplyDelete
  3. நான் படிக்கத் தொடங்கிவிட்டேன். எத்தனை பரிமாணங்களை உள்ளே வைத்திருப்பீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. முழுக்கப் படித்துவிட்டு கடைசியில் என் விமர்சனத்தை எழுதுகிறேன். தொடர்ந்து வாசிப்பேன். தொடருங்கள்.

    ReplyDelete
  4. ஒரு தந்தை பல மகவுகளைப் பெற்றாலும் தன்னுடைய பிரதிபிம்பமாக ஏதோ ஒரு குழந்தையை பார்கிறான் விட்டுப் போன கனவுகள் மீதமுள்ள கடமைகள்,தன இயலாமையும் ஆற்றாமையும் பகிர்ந்து.. நெருங்குகின்றன அந்த நெஞ்சங்கள் .தந்தை செய்த செயல்களின் பின்புலங்கள் தெரியாதபோதும் நிச்சயம் நானும் கூட அப்படித்தான் நடந்திருப்பேன் என்கிறது அந்த நேசமும் பரஸ்பர நம்பிக்கையும்.தறியில் நெசவு இழைகிறது.மெல்லிய பட்டு நூல் ஆனாலும் லாவகமாய் கோர்க்கப் படுகின்றது ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. உங்கள் தமிழாழம் கண்டு வியக்கிறேன். தொடர்கிறேன்.

    ReplyDelete
  6. @லக்ஷ்மி,
    @ஏ.ஆர்.ராஜகோபாலன்,
    @ஹரணி.
    @காளிதாஸ்,
    @சக்திப்ரபா
    வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி.நான் முன்பே எழுதியதுபோல நவலை பதிவுக்ளாக வெளியிடுகிறேன்.தொடர்கதையில் எல்லா பாத்திரங்களும் அறிமுக்மாகி அவர்களது குணாதிசயங்கள் வெளிப்பட வேண்டும் அதுவரை கதையின் போக்கு புரிவது கடினம். இதுவே வாசிப்பவரை க்வ்ராமல் தடுக்கிறது. என்று நினைக்கிறேன். படிக்கப் படிக்க சுவை கூடும என்று நம்புகிறேன்

    ReplyDelete
  7. இன்றுதான தங்கள் நாவலை படிக்கத் துவங்கினேன்
    கதை துவங்கியுள்ளசூழல் சொல்லிச் செல்லும் விதம்
    சுவாரஸ்யமாகவும் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்குவதாகவும்
    அருமையாகவும் உள்ளது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மெதுவான ஆழமான தொடக்கம். 'hope for the best, prepare for the rest' என்பதற்கு அழகான தமிழ் கிடைத்தது. நன்றி. தொடர்கிறேன்.

    ReplyDelete
  9. விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் சந்தோஷ்மிருந்திருக்கும் இரு பக்கமும் அந்த எண்ணமிருந்திருந்தால். இரு கையும் சேரும்போதுதானே ஓசை//

    விட்டு கொடுத்து வாழும் வாழ்க்கை தான் இன்பம் என்பது உண்மை.

    பாபுவின் அன்பு மனம் தெரிகிறது. முதல் குழந்தையிடம் பெற்றவர்களின் எதிர்பார்ப்பு பாபுவின் தந்தையிடம் தெரிகிறது.
    குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு பிக்னிக் வந்த்து போல் வந்து போவதை பார்க்கும் போது குழந்தை தனம் மாறாத குழந்தைகள் என தெரிகிறது.

    ReplyDelete