Sunday, February 5, 2012

நினைவில் நீ. ( அத்தியாயம் ஆறு )

                     
                         நினைவில் நீ ( நாவல் தொடராக )
                         ----------------------------------------------
                                          (---6---)

               கண்ணன் அருள் வீட்டில் தங்க ஆரம்பித்ததில் முதலில் அருளுக்கு ஆட்சேபமிருக்கவில்லை. என்றாலும் கண்ணனின் பர்ஸ் காலி என்று தெரிந்ததும் ஓரளவு மனத்தாங்கல் ஏற்படத்தான் செய்தது. என்னதான் நண்பன் என்றாலும் காலம் இருக்கிற நிலையில் ,விலைவாசிகள் ராக்கெட் போல் மேலேறும் காரணத்தால் கண்ணன் ஒரு பாரமாகத்தான் இருந்தான்.அருளுக்கு மெல்லவும் முழுங்கவும் முடியாத நிலை. அடித்துப் பேசி கண்ணனை விரட்டியிருக்கலாம். ஆனால் அருளிடம் இருந்த ஒரு நல்ல குணம், எவ்வளவு கெட்ட குணங்களிருந்தாலும் ,நன்றி மறவாத தன்மை ஒன்றுதான். எவ்வளவு நாட்கள் கண்ணன் அருளைப் பராமரித்திருப்பான்.! தன் சகோதரர்கள் மேலுள்ள பாசத்தை ஒரு வீம்புக்காக உதறியெறிந்திருந்தவன், அவர்கள் ஞாபகம் வரும்போதெல்லாம், அருளையும் மற்ற நண்பர்களையும் சகோதரர்களைப் போல் பாவித்து, அவர்களுக்கு உதவுவதை தன் தம்பிகளுக்கு உதவுவதுபோல் எண்ணி சமாதானம் அடைவான். அது அருளுக்குத் தெரியுமோ என்னவோ, கண்ணன் உதவி இருந்ததை மட்டும் அவன் மறக்கவில்லை. அதற்காக கண்ணனை என்றைக்கும் பராமரிக்கும் நிலையிலும் இருக்கவில்லை. மெல்ல பிட்டுப் பிட்டு விஷயத்தை விளக்கினான்.விளக்கியவனுக்கு சங்கடமாகத்தான் இருந்தது என்றாலும் விளக்கப் பட்டவனுக்கு விரக்தியே மேலிட்டது. விளங்கியதைப் பட்டவர்த் தனமாக ஒப்புக்கொண்டான். முடிவில் அவன் படிப்புக்கும் அந்தஸ்துக்கும் பங்கம் விளைவிக்கும் முறையில், ஒரு ஆட்டோ கராஜில் மெகானிக்காக சேர்ந்தான். இந்த வரைக்குமாவது நிலைமை சமாளிக்கப் பட்டு விட்டதில் அருளுக்கு சந்தோஷம்தான்.அருளுக்கும் கண்ணனுக்கும் இருந்த பல குணாதிசய வேறு பாடுகளுள் முக்கியமானது, அருளின் நிதானமும் கண்ணனின் படபடப்பும்தான். எந்த நிலையிலும் தன்னிலை மறவாத அருள் பல தடவை அதை மறந்த கண்ணனை சுய நிலைக்குக் கொண்டு வந்தவன். கண்ணனுக்கு வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்படச் செய்தால், அவனைப் போல் ஒரு நல்லவனைப் பெறுதல் மிகவும் கஷ்டம். கண்ணன் அன்புக்காக ஏங்கினான். ஏக்கத்தில் எடுப்பார் கைப் பிள்ளையானான். ஏமாளியானான். சுற்றியிருந்தவர்கள் சுரண்டுவதற்கென்றே ஏற்படுத்தப் பட்ட சுரங்கம் என்ற நிலையில் அவனை மதிப்பதாகக் கணக்கும் போட்டான். அவனிடம் எதையும் பொருளாக ஏற்காத பாட்டியையும்  மாமாக்களையும் தெய்வமெனக் கருதினான். ஆனால் பொருளுக்காக மட்டும்தானா உறவு கொண்டாடுகிறார்கள்.?ஒருவனுடைய சன்னமான உணர்வுகளால் அவனை கருவியாக்கி விளையாடுபவர்கள் எத்தனை பேர்கள்தான் இல்லை.?இதைக் கண்ணன் உணர வில்லை. உணர்ந்திருந்தால் அவனுடைய வாழ்க்கையே மாறுபட்டிருந்திருக்கும். தெரிந்தோ தெரியாமலோ கண்ணன் தந்தையைப் பழித்துக் கொண்டான்.அவர் இறந்த பிறகு, அவர் இருக்கும்போது தான் உதவ வில்லையே என்ற உணர்வால் உருக்கப் பட்டான். இருந்தாலும் தன் தவறை ஒப்புக் கொள்ள முடியாத ஒரு வீம்பு ,தான் செய்ததுதான் சரி என்று அவனைப் பேச வைத்தது. நாவிலிருந்து வெளிவருவது அவன் நினைப்புதான் என்றறிந்தவர்கள்தானே ஏராளம். ஆக அன்றிருந்த கண்ணந்தான் என்றும் என்று எல்லோரும் நம்பினார்கள்.

 இந்த நிலையில்தான் பாபு பெங்களூர் வந்ததை கண்ணன் அறிந்தான்..அறிவித்ததோ அவன் பாட்டி. பாட்டிக்கு ஒரு பயம். தன் செல்வாக்குக்குக் கட்டுப்பட மறுத்த பாபு, எங்கே மற்றவர்களையும் அதிலிருந்து பிரித்து விடுவானோ என்ற திகில். பாட்டி உலகையறிந்தவள். மனிதர்களை நன்கு படித்தறிந்தவள். எந்த இடத்தில் எந்த சொல்லைச் சொன்னால் அதற்கு மிக அதிகம் சக்தி இருக்கும் என்ற வித்தை தெரிந்தவள். சுருங்கச் சொன்னால் , வாழைப் பழத்தில் ஊசி ஏற்றுவது போல மற்றவர்களிடம் தன் கருத்தை பதிய வைப்பவள். பாபு வந்து விட்டான். கண்ணனும் வீட்டை விட்டு வெளியேற்றப் பட்டதால் நொந்திருப்பான்.இந்த நேரத்தில் பாபுவின் பேச்சு கண்ணனுக்குப் புரியும். ஆனால் புரிய வைக்க விடக் கூடாது. அப்படியானால் அவர்கள் எல்லோரும் சேர்ந்து விடுவார்கள். சேச்சே ! அது நடக்கவே கூடாது.!

ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்யும் செயல்கள்தான் சரி என்ற எண்ணம். அதன்படி செய்யப்படும் செயல்கள் எல்லாமே சரியாகத்தான் இருக்க வேண்டும்; இருந்திருக்கும், சரியானதெது, தவறானதெது என்பதை அளக்கும் அளவுகோல் இருந்திருந்தால்.ஒருவருக்குச் சரியானது மற்றவருக்குத் தவறான தாகிறது.இதற்கு ஒரே காரணம் அவரவர்கள் இருக்கும் சுற்றுப்புற சூழ்நிலையும், வளரும் சமுதாய சட்ட திட்டக் கட்டுப் பாடுகளும்தான். மாறுபட்ட சந்ததியினர் வளர்ந்து வருவது, மாறாமல் வளர்ந்த சந்ததியினரின் செல்வாக்குக்கு இழுக்கு, அவர்களது அட்சியின் பிடிப்புக்குஒரு வழுக்கு.

பாட்டிக்கு ரங்கசாமியின் மீது ஒரு தனி மதிப்பு இருந்தது. ,அவர் பாட்டியின் மகளுக்குக் கணவன் என்றிருந்த வரையில்..மகளோ நான்கு மக்களைப் பெற்று வாழ்ந்த வாழ்வு தொடங்கு முன்பாகவே சுமங்கலியாகச் சென்று விட்டாள். சென்றவளுடைய இடம் நிரப்பப் பட்டது. ஆனால் நிரப்பப்பட்ட விதம்தான் பாட்டிக்குப் பிடிக்கவில்லை. மகளே சென்ற பிறகு மாப்பிள்ளையிடம் பற்றுதல் குறைந்திருந்தாலும் பேரப் பிள்ளைகளிடம் அன்பு வளர்ந்திருக்கலாம். வளர்ந்துமிருக்கும் என்றுதான் பாட்டி நம்பினாள்.,ரங்கசாமி மட்டும் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கா விட்டால்.

       என்னமாக ஏமாற்றி விட்டார். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற எரிச்சலே பாட்டியின் புகைச்சலுக்கு மூலக் காரணம். சென்ற மகளின் இடத்தை இருக்கும் இன்னொரு மகள் நிரப்பட்டுமே என்று பாட்டி விரும்பினாள். விரும்பியதை வெளியிடவும் செய்தா.ள். ஆனால் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் சுபகாரியம் அல்லவா. ! கேவலம் மனிதனின் ஆசாபாசங்களுக்குக் கட்டுப் பட வைக்க முடியுமா.?

ரங்கசாமியாவது வேண்டாம் இல்லை என்று மறுத்திருக்கலாம்.ஆனால் மழுப்பி மறுத்தவர், அதோடு நிற்காமல் வேற்று ஜாதிப் பெண்ணையுமல்லவா இரண்டாம் தாரமாக மணந்தார்.! அதனால் பாட்டியின் மதிப்பும் கௌரவமும் எவ்வளவு குறைந்து விட்டது. ரங்கசாமி செய்த தவறுக்கு அவர் தண்டனை பெற வேண்டும்.எப்படி தண்டிப்பது.? ஏன், அவர் பெற்றெடுத்த செல்வங்கள்தான் இருக்கின்றனவே. அவர்களாலேயே அவரது செய்கை தவறு என்று உணர்த்துவதுதான் சரியான தண்டனை. பாட்டி எந்த அளவுக்கு ரஙகசாமியின் தவறை உணர்த்த நினைத்தாரோ, அந்த அளவுக்கு அவருக்கு அவருடைய செய்கையின் சரித்தன்மை உணர்த்தப் பட்டது. ரங்கசாமி வேண்டுமென்றே  ஒரு வேற்று ஜாதிப் பெண்ணை மண்ந்தாரா.? மனம் லயித்தவர் மணத்தில் முடித்தாரே. ,அதுவே ஒரு பண்பல்லவா. இருந்தாலும் நிகழ்ந்தது நடந்திருக்கக் கூடாது. நடந்ததால் ரங்கசாமி அதன் பலனை அனுபவிக்க வேண்டும். பாட்டியின் கணக்கும் தீர்ப்பும் ரங்கசாமி இருந்தவரை அவரை சஞ்சலப் படுத்தியதைவிட அவர் இறந்த பிறகு கல்யாணி அம்மாவை அதிகமாகத் தாக்கவேண்டும் என்பதே. அதையும் தூள் தூளாக்க முயல்கிறான் நேற்று முளைத்த இந்த பாபு.

அதற்காகத்தான் விரட்டியடித்த கருவியான கண்ணனிடம் பாட்டி செய்தி தெரிவிக்க வந்தாள். அவள் போதாத காலம் அவள் அங்கு இருக்கும்போதேபாபுவும் கண்ணனைக் காண வந்திருந்தான்.
“ வாடா ,பாபு, ரொம்பப் பெரியவனாயிட்டே.பம்பாயிலிருந்து வரதக் கூடத் தெரியப் படுத்தக் கூடாதா.”.என்று கண்ணன் கேட்டான்.

“நான் கடிதம் போட்டிருந்தேன் அண்ணா.ஆனால் நீதான் விலாசமிட்ட இடத்தில வாங்கக் கூட இருக்கலை போலிருக்கு. வந்தவுடன் விஷயம் தெரிந்ததும் உன்னைப் பார்க்க  நேரிலே வந்துட்டேன்.வந்த இரண்டு நிமிடங்களிலேயே பாபு தன்னை உதாசீனப் படுத்தி விட்டான். உதாசீனப் படுத்தப் பட்டதாக கண்ணன் நினைக்கக் கூடாது என்று துரிதமாகக் கணக்குப் போட்ட பாட்டி,நீ கண்ணனுக்கு எழுதிய கடுதாசி இன்னக்கிதான் கிடச்சுது.உடனே சேதி சொல்ல வந்தேன்.சௌக்கியமா இருக்கியா பாபு.என்று துணிந்து பொய் சொல்லிக் கேட்டாள் பாட்டி.

வலுவிலே வந்து பேசுபவரை இனம் கண்டு கொள்ளாமல் இருக்கும் அளவுக்கு பாபுவுக்கு யாரிடமும் வெறுப்பு கிடையாது.மனிதர்களை அவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக வெறுக்கும் குணத்தை விட அவர்கள் மீது பச்சாதாபமே மேலிடும் வர்க்கத்தவன் ஆதலால் அவனும் பாட்டி கேட்ட கேள்விக்கு “சௌக்கியம் “ என்று ஒரு வார்த்தையில் பதில் சொன்னான்.

     கண்ணனின் க்ஷேமலாபங்களை விசாரித்தான்.கண்ணனும் விட்டுக் கொடுக்காமல் பேசினான்.அண்ணா ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகு நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.சிதறி இருக்கும் நம் குடும்பம் ஒன்றாக இருக்க வேண்டும். என்ற ஆசையால் உந்தப்பட்டு ஓடோடி வந்திருக்கிறேன். “

      “    “என்னவோப்பா, நீ இந்த மாதிரிஒரு பாசத்தோட பேசறதக் காணக் குடுத்து வைக்காத உன் அம்மா போயிட்டா. உங்களையெல்லாம் பெரியவாளாப் பார்க்கும்போது என் பாழும் மனசு உங்க அம்மாவை நெனச்சுப் புலம்பறது. ஏனோ தானோன்னு வளர்த்தின உங்க அப்பாவும் போயிட்டான் இனிமேயாவது உங்களுக்கு நல்ல காலம் வரட்டும்.கிடைக்கிற சம்பளத்தை செட்டு சிக்கனமாச் செலவு செய்து,மிச்சமிருக்கிறத அழகாச் சேத்து வெச்சுகூடிய சீக்கிரத்திலேயே குடியும் குடித்தனமுமா நீங்க வாழறத என்னக்கித்தான் பார்ப்போமொன்னு இருக்கு. “

     பாட்டி உண்மையாகவும் போலியாகவும் பேசியதிலும் உள்ளர்த்தம் இருப்பது பாபுவுக்குப் புரிந்தது.முகம் கடுமையாக மாறியது.. கண்ணனுக்குப் புரியவில்லை. கலங்கி விட்டான்.

      “ஆமாண்டா பாபு, இப்பத்தான் என் மனசு ஏதோ நிம்மதி அடைந்த மாதிரி இருக்கு.பாட்டி சொல்றது எவ்வளவு உண்மை. “என்றும் கூறினான்

அண்ணா, நிம்மதி அடைந்த மாதிரி தோன்றுவது தப்பில்லெ. உண்மையாகவே நிம்மதி அடைய முடியும். போயிட்ட அம்மாவப் பத்தி பாட்டி புலம்பறா.அது அவங்களுக்குப் பொருந்தும். ஆனா, நினைவு தெரியறதுக்கு முன்னாடி போன அம்மாவை நினைத்துப் புலம்பறத விட நம்மை வளர்த்து ஆளாக்கின ,இருக்கிற அம்மாவப் பத்தி எண்ணறதும் அதிலே நிம்மதி அடையறதும்தான் நமக்குப் பொருந்தும். அப்பா இருக்கிற போதில்லாத நல்ல காலம் அவர் பொன பிறகாவது நமக்கு வேணும்னா, அவர் விட்டுப் போயிருக்கிற கடமைகளை தொடர்ந்து செய்யறதுலதானே வரும். அதுக்குத்தான் நானும் துடிச்சுக் கிட்டு இருக்கேன்.பழசை எல்லாம் மறந்து என் கூட வா அண்ணா.வாழவும் விடாம சிந்திக்கவும் விடாமபிரிச்சுப் பார்க்கற இந்தப் பாழும் சொந்தங்களை நம்பாதே.அண்ணா! நம்பி இதுவரை வாழ்ந்ததுல உனக்கு உண்மையா மனத்திருப்தி ஏற்பட்டிருக்கா? சொல்லு அண்ணா.!கண்களில் நீர் மல்கக் கெஞ்சினான் பாபு.

  
      “அப்பவே நான் சொல்லலயா கண்ணா..நீ ஏமாளி, நீ இப்பொ சுதந்திரமா ஒரு பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்கிறது, அந்த நீச சாதிப் பொம்மனாட்டிக்குப் பிடிக்கலை. உன்னைச் சுரண்ட பாபுவை அனுப்பி இருக்கிறாள் பாபுவும் பாவம்..ஏதோநல்லது செய்யறதா தவறா எண்ணிட்டு பாம்புக்குப் பால் ஊத்தறான்.அது போறாது அதுக்கு மேல தன்னால முடியாதுன்னு தெரிஞ்சு, அவ பேச்சைக் கேட்டு உன்னையும் அந்தச் செயலை செய்யக் கூப்பிடறான்.நீ போவியோ என்னவோ அது உன் இஷ்டம்.ஆனா நீ ஒரு ஏமாளி உன்னை இப்படி எல்லாரும் படுத்தறத நெனச்சுதான் எனக்குப் பாவமா இருக்கு. “ பாட்டியும் விட்டுக் கொடுக்காமல் முந்தானையால் கண்ணைத் துடைத்து ,மூக்கை சிந்தி புலம்பினாள். கண்ணனுக்கு எது உண்மை எது பொய் என்று தெரியவில்லை. மதில் மேல் பூனையை ஒத்ததாய் இருந்தது அவன் நிலை. இல்லை இப்படியும் சொல்லலாம். ஓட்டுக் கேட்க வந்த இரண்டு வேட்பாளர்களில் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற புரியாத நிலை படைத்த பாமரனாய் நின்றான்.

இல்லை அண்ணா இல்லை. உன்னை ஏமாளி என்று அறிந்தவர்கள் இவர்கள்தான்.அதனால் நீதான் நன்றாக ஏமாற்றப் பட்டிருக்கிறாய்.உன்னை இதுவரை சுரண்டியது யாரண்ணா.? என்றைக்கு நீ படிக்கும்போது லீவில் இவர்கள் வீட்டுக்கு வந்து போனாயோ அன்றையிலிருந்துதானே அண்ணா உனக்கு அம்மா மேல் கோபம். அதுவரைக்கும் என்னைவிட நீயும் அவர்கள்மேல் அன்பு செலுத்த வில்லையா...அவர்களைப் பராமரிக்க முடியாம உன்னை உதவிக்கு அழைக்கிறதா யாராவது சொன்னா அதைப் பொல ஒரு அபாண்டம் வேற இருக்காது. உனக்கு வேலை போன பிறகு எவ்வளவு நாள் உன் பாட்டி வீட்டில் இருந்தாய் அண்ணா... உனக்கு புத்தி சொல்ல எனக்கு வயசாகலை. நம் குடும்பம் இப்படி சின்னாபின்னமாக இருக்கிறத எண்ணி நொந்துபோய் உன்னைப் பார்க்க வந்தேன். வந்த இடத்தில் பார்க்க விரும்பாதவங்களையும் பார்த்தேன். என் வாதம் உனக்குப் புரியுமா புரியாதா என்பது எனக்கு நாளைக்குத் தெரியும்..புரிஞ்சிருந்தா நாளைக்கு நீ நம் வீட்டுக்கு வருவாய். இல்லையென்றால் புரிந்தபிறகு கட்டாயம் வருவாய். பாட்டி.. இப்படி உங்களைக் கூப்பிடவே வெட்கமா இருக்கு.சொந்தத்துக்காக அல்ல. உங்க வயச நெனச்சு கூப்பிடுகிறேன் அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். உங்களுடைய தீவினைகளுக்கு நன்றாக தெய்வம் பதில் சொல்லும். சாகிற சமயத்திலாவது உங்கள் தவறு உங்களுக்கு புரியணும்.ஆண்டவன் அதைப் புரியவும் வைப்பான். உங்க பெண் விட்டுப் போன இடத்திலே இருக்கிற பெண்ணை உங்க பெண் மாதிரி நீங்க நினைத்திருக்க வேண்டியதுதான் முறை. அதைச் செய்யாத நீங்கள் ....எனக்கு எப்படி சொல்வதுன்னே தெரியலே. அண்ணா நான் வரேன் “...ஆத்திரம் கோபம் வெறி மேலிட வார்த்தைகளை வீசி எறிந்துவிட்டுச் சென்றான் பாபு.

 பார்த்தியாடா, பார்த்தியாடா.. அந்தப் பிள்ளை எப்படி எல்லாம் பேசிட்டுப் போறதை

      “இது ஒண்ணும் பிரமாதம் இல்லை பாட்டி. இதை விடக் கேவலமா எங்கப்பாவை நான் பேசி இருக்கேன் இதுக்கே நீ இப்படி எண்ணினா, எங்கப்பா எப்படி வருத்தப் பட்டிருக்கணும்.ஹூம்.!எனக்கு எதுவுமே புரியலை. பாபு பெசியதை கேட்டு என் மனசு ரொம்பவே குழம்பிக் கிடக்கு. “ என்றான் கண்ணன்.
.
       “ நீ பாவம்டா கண்ணா....உன்னை யாருக்கும் தெரியாது. எனக்கு நன்னாத் தெரியும். நீ சாப்பிட்டுப் படுத்துத் தூங்கு. ஏதாவது மனசுக்கு கஷ்டம் வந்தா என்னை நெனச்சுக்கோ.எல்லாம் சரியாயிடும்.பரிவுடன் கண்ணன் தலையைக் கோதியபடி ஆதரவளித்தாள் பாட்டி.. பாட்டிக்குத்தான் கை வந்த வேலையாயிற்றே அது..!போலி அன்பில் கட்டுப்பட்டு கண்ணன் பாட்டியைப் போலொருவர் வேறில்லை என்று நினைத்தான்.


கண்ணனுக்கு பாட்டி தன்னை மறைமுகமாக வீட்டை விட்டுப் போ என்று சொன்னது கூட தன் நலனில் அக்கறை கொண்டு சொன்னதாகத்தான் இப்போது எண்ண முடிந்தது. இல்லையென்றால் தன் இடம் தேடி பாட்டி வர வெண்டிய அவசியம் இருந்திருக்காதே. பாபுவோ பாவம் ஏமாளி.. என்னைப்போய் ஏமாளி என்கிறானே. பாட்டி அப்படிச் சொல்வது நான் ஏமாந்து விடுவேனோ என்ற பயத்தால்தான்.பாட்டியை ஏமாற்றக் கூடாது. பாபு மேடையில் உணர்ச்சி வசப் பட்டுப் பேசுவது போல் பேசுகிறான். அவன் ஒருமேடை நடிகன்தானே. எத்தனையோ நாடகங்கள் நடத்தி இருக்கிறான். இப்போது உணாமையாகவே நாடகமாடுகிறான். இவன் நடிப்பில் ஏமாந்து நாளை நான் அவள் வீட்டுக்கு அதை நம் வீடு என்கிறானே.போக வேண்டுமாம். நானா போவேன்? எனக்கா தெரியாது.?பாட்டி சொல்லும் முன்பாகவே கண்ணன் முடிவெடுத்து விடுகிறான். எடுத்த முடிவைப் பாட்டியிடம் தெரியப் படுத்தவும் செய்தான். புன்னகைப் பொலிவுற பாட்டியும் விடை பெற்றாள்..
------------------------------------------------------------------------------------------------------------ ( தொடரும் )- , 

 


4 comments:

 1. எப்படியெல்லாம் மனிதர்கள்!!


  //என்றாலும் கண்ணனின் பர்ஸ் காலி என்று தெரிந்ததும் ஓரளவு மனத்தாங்கல் ஏற்படத்தான் செய்தது//

  நிறைய இடங்கள் ரசித்தேன். மனதை ஆராய்ந்து எழுதும் எழுத்து பிடிக்கிறது.

  ReplyDelete
 2. @சக்திப்ப்ரபா,
  வருகைகும் பின்னூட்டத்துக்கும் நன்றி. இது நான் ஏற்கனவே எழுதி இருந்தபடி ஒரு சாதாரண குடும்ப பின்னணி கொண்ட கதை. திடீர் திருப்பங்கள் எல்லாம் கொடுத்து ஆவலை எதிர்பார்க்க வைக்கும் மர்ம நாவல் அல்ல. நீங்கள் சரியாகவே எழுதி உள்ளீர்கள். உளக்கூறுகளின் பல பரிமாணங்களை எழுதும் முயற்சியே. மீண்டும் நன்றி.

  ReplyDelete
 3. ஜி.எம்.பி. சார்,

  உங்கள் எழுத்தின் மேல் எனக்குள்ள அபிமானத்துக்கு சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன்.

  சுட்டி கீழே:

  http://minminipoochchigal.blogspot.in/2012/02/blog-post_06.html

  ReplyDelete
 4. அன்புள்ள ஐயா..

  தொடர் வகுப்புகளினால் தொடர்ந்து பயணத்திலிருக்கிறேன். எனவே உங்களின் நாவலை சற்று தாமதமாகத்தான் படிக்கவேண்டியிருக்கும். படித்துவிட்டு எழுதுகிறேன். எனவேதான் சிறு கடிதங்களை உடன் எழுதிவிடுகிறேன். நன்றி.

  ReplyDelete