Tuesday, February 21, 2012

நினைவில் நீ...(அத்தியாயம் ஒன்பது )

   
                       நினைவில் நீ....( நாவல் தொடராக )
                      ------------------------------------------------

                                -              --  9----

     கண்ணனுக்குக் கல்யாணம்..! உறவில் பிணக்கோலம் கண்டவன் மணக்கோலம் பூண விரும்பினான். ஒட்டு பற்றற்ற  தன் வாழ்வின் விளை நிலத்தில் மனசின் அடிதளத்தில் சுரந்த அன்பின் ஊற்று நீரால் மணங்கமழும் மலர்வனத்தைத் தோற்றுவிக்க மணக்கோலமே சிறந்த வித்து என்று கண்ணன் எண்ணினான் .எண்ணியவனின் எண்ணத்துக்குச் சிறந்த உரமாக நின்றான் அருள். அந்த வரைக்கும் அருளுக்கு அவன் என்றென்றைக்கும் கடமைப் பட்டுள்ளதாக அடிக்கடி அவனிடம் தெரிவித்து தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான் கண்ணன்.

     கல்யாணம் எளிய முறையில் சிறப்பாக நடந்தது. சிறப்பாக எனும்போது, மனத்தாங்கல்கள் தவிர்க்கப் பட்ட ஒரு சுப காரியமாக நடந்தது என்று பாபு நினைத்தான். அன்பு நண்பன் இன்ப இல்லற வாழ்வு தொடங்கும் சடங்கு என்பதால் சிறப்பானது என்று அருள் எண்ணினான். உடன் பிறந்தவனின் ஒரே சகோதரி, தன் ஒருத்தியால் சோபித்த சுபகாரியம் என்பதனால் சிறந்தது என்று கமலம் கருதினாள்.இழவுக்குப் பின் நடக்கும் இனிய வினை என்று எண்ணித் தன்னையே தேற்றி கொண்டாள் பாட்டி. ஒளிமயமான வாழ்வின் விடிவெள்ளி என்று மகிழ்ந்தாள் மணப் பெண் மாலதி.

     யார் யார் எப்படி எப்படி எண்ணினாலும் நடந்த்ததென்னவோ ஆயிரக் கணக்கில் நிகழும் திருமணங்களில் ஒன்று என்றாலும் , இந்த மணம் கண்ணனை ஒரு புதிய பிறவி எடுக்கச் செய்தது. கண்ணனுக்கு இறைவனிடம் அதிக பற்றுதல் ஏற்படச் செய்தது. ஏற்பட்ட பற்றுதலை உணர்த்த உள்ளம் தன் மதத்திலும் குலத்திலும் தோய்ந்து நின்றது.

     திருமண நாளின் முதலிரவு. எண்ணற்ற கற்பனைகளில் மனம் லயித்து, இன்ப நினைவுகளில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்த மாலதிக்கு இன்பம் இதுதான், இது இப்படித்தான் இருக்கும் என்று உணர்ந்து மகிழும் நேரத்தையும் சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே மேலிட்டது,.பூமணங்கமழும் புது மண மக்களுக்கே உரித்தான முதலிரவு. என்று இருந்தும் அந்த இரவில் அந்த இன்பம் மாலதிக்கு இல்லாமலேயே போய்விட்டது. ஒரு சமயம் இல்லாத ஒன்றை இருப்பதாக எல்லோரும் ஸ்தாபிக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. உள்ளத்து ஆதங்கத்தை உணர்த்தித் தெரியப் படுத்த முடியாதபடி, ஒருவரை ஒருவர் உணர்ந்திருந்த குறுகிய காலம் தடையாக இருந்தது.

      மாலதியின் எண்ணங்களைப் பற்றி கண்ணன் ஒரு கணமேனும் சிந்தித்துக் கூடப் பார்க்கவில்லை. சற்றே அவளை உற்று நோக்கியவன் முகம் சற்றே கடுத்து மறைந்தது.
“ மாலதி, இன்று முதல் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் செய்து கொள்ள விரும்புகிறேன். இதுவரைக்கும் எனக்கு எதிலும், யார் மீதும் அக்கறை இருக்கவில்லை. எல்லோரும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள். தட்டிக் கேட்க ஆளில்லாத நான் தட்டுத் தடுமாறி நிலை கெட்டுப் போயிருந்தேன்.இதுவரையில். உனக்கு இது முதலிரவு .ஆனால் எனக்கோ......சொல்லிக் கொண்டே வந்தவன் மாலதியின் உதடுகள் துடித்து அழுகை வெடித்து விடும் என்று உணர்ந்ததும் நிறுத்தினான்

    ” உன்னைப் புண் படுத்த எதுவும் சொல்லவில்லை, மாலதி.என்னை நீ நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் இந்த நேரத்தில் ,இன்றைக்கு என்னை நானே அடக்கிக் கொள்வதாகத் தீர்மானித்திருக்கிறேன்..அது உன்னை ஏமாற்றத்துக்கு ஆளாக்கக் கூடாதே என்று சொல்ல வந்தால், ......சரி, சரி. எனக்கு இதெல்லாம் பிடிக்காது. விளக்கை அணைத்துப்படுத்துத் தூங்கு. “

       ஆதரவாகப் பேசிகொண்டே போனவனின் உள்ளத்தில் , திடீரென ஆதரவை முதலிலேயேக் காட்டினால், நாளைக்கே தன் மனைவி தன் ஆதிக்கத்துக்கும் அதிகாரத்துக்கும் ஒரு சமயம் கட்டுப் படாமல் போகலாம் என்ற சந்தேகம் எழுந்தது.அன்பினால் கட்டுப் படுத்த முடியும் என்பது அறியாததால் கண்ணன் கடுப்பாக முடித்தான்.

       மாலதிக்கு ஒன்றுமே புரியவில்லை. வாழப் போகும் வாழ்க்கை தான் எண்ணாத முறையில் அமைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக அவளுக்கு உறக்கமே வரவில்லை. நித்திரை இல்லாமல் காலம் கடந்து செல்லச் செல்ல இமைகள் கனத்து கண்கள் அவளை அறியாமலேயே செருகிக் கொண்டன.

    விடியற்காலையில் விழித்துப் பார்த்த கண்ணனுக்கு மாலதி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாள் என்னும் நினைவு கோபத்தைக் கிளப்பியது. இருந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு, காலைக் கடன்களை முடித்துக் குளித்து, நெற்றியில் பட்டை பட்டையாக விபூதியை தீற்றிக் கொண்டு, அவன் திரும்பவும் , மாலதி எழுப்பப் பட்டு விட்டாள். எழுப்பிய கமலம், “ நன்னாயிருக்குடி, இப்படித் தூங்கினால்;..புருஷன் எழுந்துக்கறதுக்கு முன்னாலே பொம்மனாட்டி எழுந்திருந்து காரியங்களை சட்டுப்புட்டுன்னு கவனிக் கறதைத் தான் நான் பார்த்திருக்கேன். நாங்கள்ளாம் இப்படியா இருந்தோம்.?என்று நீட்டி முழக்கி சுப்பிரபாதம் பாடினாள்.  மாலதிக்கு தன் பேரிலேயே கோபம் வந்தது. “சே.! ராப்பூராவும் வராத உறக்கம் விடியற்காலை வந்து பெயரை கெடுக்கிறதே “ என்று மனதுக்குள் தன்னையே வைது கொண்டாள்.உடம்பு அசதியாலே ... “ என்று மெல்லச் சமாதானம் சொல்லிக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தாள். அன்றைக்கே மாலதி இப்படி இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கண்ணன் கண்டிப்பாக வரையறுத்துச் சொன்னான்.

   ” கார்த்தாலெ எழுந்ததும் குளித்து , பூஜைக்கு வெண்டியதை எடுத்துவைத்து, சமையலுக்கு வேண்டியதைச் செய். பூஜை முடிந்த பிறகுதான் தண்ணீர் குடிப்பது கூட. ..ஆம்மா. .. இன்னொண்ணு மாலதி. நீ இந்த ஆறு கஜப் புடவை எல்லாம் ஒதுக்கி வைத்து, மடிசார் வைத்துக் கட்டிக் கொள்ள வெண்டும். அப்போதுதான் லட்சுமீகரமாக இருக்கும்.

      மாலதிக்கு இந்த கட்டுப் பாடுகளை எல்லாம் கேட்கவே பயமாக இருந்தது. பழையன கழிந்து புதியன புகுதலென்று உலகமே மாறிக்கொண்டிருக்கும்போது .இவர் என்னடா என்றால்...... இருந்தாலும் அவர் விருப்பப்ப்டி, நடக்க வேண்டியதுதானே முறை. இந்த மாதிரி நடந்தால் அவர் அன்பின் அரவணைப்புக்குப் பாத்திர மாகலாம்
என்றால் அப்படி நடப்பதுதான் நல்லது. உள்ளவரையில் இருப்பதைக் கொண்டு கணவன் விரும்பியபடி வாழ்வது தானே ஒரு இந்தியப் பெண்ணுக்குச் சிறந்தது என்றெல்லாம் எண்ணி ,எடுத்த முடிவை செயலிலும் காட்டத் துவங்கினாள். ஒரு சில நாட்களில் கண்ணன் எதிர்பார்க்காத அளவுக்கு மாலதி தன்னை மாற்றிக் கொண்டாள்.

       கண்ணன் தனியாக இருந்தவரை அவனுக்குக் கிடைத்த சம்பளம் போதுமானதாக இருந்தது. திருமணம் முடிந்து தனிக் குடித்தனம் என்று துவங்கியதும் கொண்டுவந்து போடுவதைக் கொண்டு குடும்பம் நடத்தத் தெரிய வில்லை என்று மாலதியைக் கண்டிக்க ஆரம்பித்தான். இருந்தாலும் மாலதி கூடியவரை பொறுத்துக் கொண்டு இனிய முகத்துடன் வசவுகளையும் வரவு வைத்துக் கொண்டாள். தனக்கு இல்லையென்றாலும் கணவனுக்கு ஒரு குறையும் வைக்க வில்லை. அதனால் கண்ணனுக்கு இருப்பது இல்லாதது தெரியாமல் போயிற்று.

    ஒரு நாளிரவு உணவை முடித்துக் கொண்டு, இளைப்பாறிக் கொண்டிருந்த கண்ணன் திடீரென்று எழுந்த ஏதோ ஒரு சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள சமையல் அறைக்கு மாலதியைத் தேடி நுழைந்தான். அவன் வந்ததை அவள் கவனிக்க வில்லை. சாப்பிட்டுக் கொண்டிருப்பாள் என்று எண்ணி வந்தவன், மாலதி வடித்த கஞ்சியில் உப்பு போட்டுக் கலக்கிக் குடிபபதைக் கண்டான்.

      என்ன மாலதி இது.?ஏன் ..சாப்பாடு இல்லையா.?எதற்கு கஞ்சி குடிக்கிறாய்என்று கேட்டான்.

       வந்தவன் வரவைக் கவனிக்காத மாலதி, ஏதோ குற்றம் செய்து விட்டவள் போல விழித்தாள். அவளையும் துலக்கி வைத்திருந்த பாத்திரங்களையும் கண்ட கண்ணன் , “ எவ்வளவு நாளாக இது மாதிரி நடக்கிறது.?நானும் ,என்னடாப்பா இவள் இப்படி மெலிந்து கொண்டே வருகிறாளே என்று கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுதான் கரணமா “ என்று கேட்டவன் தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துக் கொண்டான்.

               இப்ப்டி வாழ்க்கை நடத்துவதில் எவ்வளவு மனக்கசப்பு இருக்கும் என்று உணர்ந்தவன் கண்களில் அவனறியாமலேயே நீர் பெருகியது.

     ” மாலதி உன்னை இந்த நிலையிலா வைத்துக் கொண்டிருக்கிறேன் என்னிடம் சொல்லாமல் இவ்வளவு நாள் ஏன் மறைத்து வைத்தாய்.என்று ஆதரவுடன் அணைத்துப் பிடித்துக் கேட்டான். உண்மையான உள்ளன்பை முதன் முதலாக உணரப் பெற்ற மாலதி, அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதாள். ”அத்தான் உங்களுக்குத் தெரிஞ்சா மனசு கஷ்டப்படுமேன்னுதான்,இவ்வளவு நாள் மறைச்சேன். இதற்கு மேல் சிறப்பாக வாழ இந்த வருமானம் போதாது அத்தான்என்று கஷ்டப் பட்டுக் கூறினாள். எது எதிர்பார்க்கவில்லையோ அது கண்ணனுக்குத் தெரியப்படுத்தப் பட்டதும், அவன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தான்.அவனுக்கு எந்த வித முடிவும் தோன்றவில்லை.இருக்கும் வேலையை விட்டு வேறு வேலை தேடலாம் என்றால், வேறு வேலை கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்று அனுபவத்தால் உணர்ந்தவன். வேறு வேலை கிடைக்கும்வரை இப்படியேதான் இருக்க வேண்டுமா என்று குழம்பினான்.

    ”அத்தான் ஒன்று செய்தால் என்ன.? நாம இப்படி தனியா இருக்கிறதால படர கஷ்டங்களை ஒன்றாய் சேர்ந்து இருந்தால் தவிர்க்கலாமே “என்றாள் மாலதி.

      “ என்ன சொன்னே.?கேட்கும்போதே உஷ்ணம் பொங்கியது கண்ணன் குரலில். .தெளிவாக எதுவுமே தெரிந்து கொண்டிராத மாலதி தெளிவாகவேக் கூற்னாள். “ இப்படித் தனிக்குடித்தனம் வைத்துக் கஷ்டப் படுவதை விட , உங்க தம்பி பாபுவோட , உங்க குடும்பத்தோட சேர்ந்திருந்தால் பார்க்கவும் நன்றாயிருக்கும், கஷ்டத்தையும் தவிர்க்கலாமே என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. “

       ‘ ‘ அந்தக் கோத்திரங் கெட்டவ கூடப் போய் இருக்கலாம்னு சொல்றியா.? பிராம்மண குலத்துக்கே இழுக்கில்லையாடி அது.? “ கேட்டவனின் வார்த்தைகளில் விருப்பம் இருக்காவிட்டாலும் குரலில் சற்றே மாற்றம் தெரிந்தது.

       “ என்ன இருந்தாலும் நீங்க சின்ன வயசில வளர்ந்த இடம்தானே. குலம் கோத்திரம் என்றெல்லாம் எண்ணி நம்மை நாமே கஷ்டப் படுத்திக் கொள்வதைவிட, சேர்ந்திருந்தா அதைத் தவிர்க்கலாம். அப்படி சேர்ந்திருக்கறதுனால நீங்க ஒண்ணும் நம்ம ஆசார முறையை விட்டுக் கொடுக்கணும்னு நான் சொல்லலியே. உங்களுக்கும் ஒரு மதிப்பு கிடைக்கும் . நமக்கும் இதுல லாபம் தான் இருக்கும். “ இடம் கிடைத்தவுடன் சொல்ல வேண்டியதை முறைப்படி கண்ணனுக்கு  உறைக்கும்படி கூறினாள். கண்ணனின் அடிப்படைக் குணம்தான் தெரிந்ததாயிற்றே. வளைக்கும் விதத்தில் வளைக்கப் பட்டதால் விட்டுக் கொடுத்தான்.

    அதுவும் சரிதான். பாபுவும் அன்னைக்கே சொன்னான். பாட்டி வேண்டாம்னு சொன்னதால நானும் கேட்கலை. இப்ப போறதுலயும் பாபு சந்தோஷ்மடைவான். போனதும் அவனைப் பூணூல் போட்டுக்கச் சொல்லணும். அம்மாவும்அதான் எங்க சித்தியும் கூட சந்தோஷப் படுவாள். மாலதிக் கண்ணு, உன்னைப் பத்தி என்னவோ நினைத்திருந்தேன். இப்போதான் தெரியுது. அடேயப்பா.! உங்கிட்ட எவ்வளவு சரக்கு இருக்கு. “ என்று அவளை இறுக்கிப் பிடித்து அணைத்து  அன்புடன் கூறி மகிழ்ந்தான். கல்யாணி அம்மாவை நினைக்கும்போது அம்மா என்றுதான் கூற வருகிறதே அல்லாமல் சித்தி என்று கூறப் பழக்கிக் கொள்ள வேண்டி இருப்பதைக் கண்ணன் உணர்ந்தான். இதை மாலதியும் கவனிக்காமல் இல்லை. இருந்தாலும் தன் கணவன் வேண்டுமென்றேதான் வஞ்சம் பாராட்டுகிறான் என்று நினைக்கத் தோன்றினாலும் , அப்படி தான் நினைப்பது தவறு என்ற எண்ணத்தால் அதை அடக்கிக் கொண்டாள். 
-------------------------------------------------------------------------

                                                       ( தொடரும் ) 
    


        







1 comment:

  1. வளைக்கும் விதத்தில் வளைக்கப் பட்டதால் விட்டுக் கொடுத்தான்..

    அருமையான திருப்பம்..

    ReplyDelete