நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.....
----------------------------------------------------
அதுதான் பலநேரங்களில் நடப்பதில்லையே நாங்கள் ஆண்டுதோறும்
மேற்கொள்ளும் ஆலய விஜயங்கள் இந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில்
நிகழவில்லை.ஆண்டுதோறும் ஜூன் மாதக் கடைசியிலோ ஜூலை மாத ஆரம்பத்திலோ பயணம் செய்வது
வழக்கம். இந்த ஆண்டு என் இரு பிள்ளைகளும் உடன் வந்து காரிலேயே அழைத்துச்
செல்கிறோம் என்றனர்,. இருவருக்கும் தங்களைப் பணியில் இருந்து விடுவித்துக் கொள்ள
இயலாத நிலையில் எங்கள் பயணமும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு சமயம் நாங்களே
தனித்துச் செல்ல அனுமதித்தனர். ஆக பயணச் சீட்டு தங்குமிடம் போன்ற விஷயங்களில்
கவனம் செலுத்தினோம். சாதாரணமாகத் திருச்சி சென்று அங்கிருந்து கும்பகோணம
வைத்தீஸ்வரன் கோவில் சிதம்பரம் என்று பயணிப்பது வழக்கம் . இந்த முறை ஒரு
மாற்றத்துக்காக மயிலாடுத்துறை சென்று அங்கு தங்கி ஆலய தரிசனங்களை முடித்துவிட்டு
கடைசியில் திருச்சி வந்து பிறகு பெங்களூர் வரத் திட்டமிட்டோம். எனக்கு
மயிலாடுதுறையில் பதிவர் கோமதி அரசு இருப்பது நினைவுக்கு வந்து அவருக்கு மெயில்
அனுப்பினேன். மயிலாடுத்துறையில் தங்குமிடங்கள் குறித்துத் தகவல்கள் தருமாறும்
கேட்டேன். ஐந்தாறு தங்குமிட முகவரியுடன் தொலைபேசி எண்களும் தந்தார்கள். எத்தனை
சிரமம் கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொண்டேன். என் பயண திட்டத்தை திருச்சிப்
பதிவர்கள்திரு. வை. கோபாலகிருஷ்ணன், திரு ரிஷபன் . திரு ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
திரு தமிழ் இளங்கோ போன்றோர்களுக்குத் தெரியப் படுத்தினேன் . திருமதி கீதா
சாம்பசிவம் மும்பையில் இருப்பதாகத் தெரிந்ததால் அவர்களுக்குத் தகவல்
கொடுக்கவில்லை. இவர்கள் என்னை திருச்சியில் சந்திப்பதாகக் கூறினார்கள்
ஒன்பதாம் தேதி காலை
மயிலாடுதுறையைச் சமீபிக்கும் போது திருமதி கோமதி அரசுவிடம் இருந்து தொலைபேசியில்
அவர்கள் ரயில் நிலையத்தில் எங்களுக்காக காத்திருப்பதாகத் தகவல் வந்தது. நாங்கள்
மிகவும் நெகிழ்ந்து விட்டோம். திருமதி. கோமதியும் அவர்கள் கணவர் திரு
திருநாவுக்கரசும் எங்களை அவர்கள் காரிலேற்றி நாங்கள் தங்க முன் பதிவாயிருந்த
ஹோட்டல் பாம்ஸில் கொண்டு சேர்த்தனர். நாங்கள் திருக்கடையூர் மற்றும் திருவிடைக்கழி
முருகன் ஆலயம் சென்றுவர டாக்சியும் ஏற்பாடு செய்து தந்தனர். மாலை மயிலாடுத்துறையில்
இருக்கும் பரிமள ரங்கநாதர் ஆலயத்துக்கும் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர்
கோவிலுக்கும் எங்களை அவர்கள் காரிலேயே கூட்டிப் போவதாகவும் கூறினர்.
காலையில் குளித்து உணவருந்தி திருக்கடையூர் திருவிடைக்கழி
நோக்கிப் பயணித்தோம் திருக்கடையூருக்கு முன்பே வந்திருக்கிறோம். என்னுடைய அறுபதாம்
ஆண்டு விழா அங்குதான் நடந்தது. திருவிடைக்கழி ஆலயம் முதல்தடவை யாகச் சென்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆலய தரிசனம் செல்லும் போது அதுவரைக் கண்டிராத ஒரு கோவில் செல்வது
வழக்கம் இம்முறை இந்த முருகன் கோவில். பழமையான சிறிய ஆலயம் . இருக்குமிடம்
தெரியாமல் தொலைவில் எந்தக் களேபரமும் இல்லாமல் அமைதியாகக் காட்சி அளிக்கிறது.முருகன்
சன்னதியில் ஒரு சிவ லிங்கமும் இருக்கிறது. எந்த திட்டமும் இல்லாமல் போனதால்கோவில் பற்றிய விவரங்கள் தெரிந்திருக்கவில்லை. எல்லாக் கோவில்களுக்கும் இருக்கும் சில
கதைகள் இக்கோவிலுக்கும் உண்டு என்று பிறகு அறிந்தேன். . திருக்கடையூரில்.... அப்பப்பா....... அப்படி ஒரு
கூட்டம் நெரிசல். வெயிலும் அதிகம். திருமண ஆண்டு விழாக்கள் எங்கு பார்த்தாலும்
நடந்து கொண்டிருக்க அமைதியாக தரிசனம் என்பது இயலாத காரியம் முக்கிய சன்னதிகளான அமிர்தகடேசர் கால சம்ஹார மூர்த்தி, கள்ளப்
பிள்ளையார் அன்னை அபிராமி சென்று வழிபட்டோம். என் அறுபதாம் ஆண்டு விழா நினைவுக்கு
வந்தது. என் பேரக்குழந்தைகள் தாத்தா பாட்டிக் கல்யாணம் என்று கூறி மகிழ்ந்தது
நினைவிலாடியது. அந்த வெயிலில் மிகவும் களைப்பாக உணர்ந்தேன். பிறகு கோவில் அலுவலகம்
சென்று எங்கள் நட்சத்திரத்துக்கு மாதம் ஒரு முறை பூஜை செய்து பிரசாதம்
அனுப்பக்கேட்டுக் கொண்டு அதற்கான கட்டணத்தைச் செலுத்தினோம். அந்தநாளையநினைவுகள் பழையபுகைப்படங்களைத்
தேடி எடுத்து அவற்றையே காமிராவில் பிடித்து இத்துடன் வெளியிடுகிறேன்.
|
அமிர்தகடேசர் சன்னதி முன் பேரன்வலது ஓரத்தில் பேத்தி மனைவியின் அருகே. |
|
திருமாங்கல்யத்துக்குப் பூஜை..? |
|
இரண்டாம் முறையாக தாலி கட்டல் |
|
நெற்றியில் திலகமிடல் |
|
இரண்டாம் மகன் மருமகள் பேத்தியுடன் |
|
மூத்தமகன் மருமகள் பேரனுடன் |
|
மச்சினன் , அவன் மனைவி மகளுடன்( இந்தப் பெண்தான் இங்கிலாந்தில் sky dive செய்தவள் |
|
அன்று விழாவில் பங்கெடுத்தசுற்றமும் நட்புகளும் |
இந்த சஷ்டியப்த பூர்த்தி நடந்த்ததே பல உறவுகளுக்கும் தெரியாது......!
மதியம் அறைக்கு வந்து உண்டு களைப்பாறினோம் மாலை சுமார் ஐந்து
மணி அளவில் அரசு தம்பதியினர் எங்கள் அறைக்கு வந்தனர். நான் சற்றும் எதிர்பாரா
நிலையில் எனக்கு ஒரு சால்வையைப் போர்த்தினார்கள். என் மனைவிக்கு ஒரு கல்கத்தா காளி
உருவத்தை பரிசாகக் கொடுத்தனர்.ஒரு டப்பாவில் போளிகளும் பழங்களும் கொடுத்து எங்களை
திக்கு முக்காடச் செய்தனர். பிறகு அவர்கள் காரிலேயே திரு பரிமள ரங்கநாதர்
ஆலயத்துக்கு அழைத்துச் சென்றனர் சற்றே பெரிய கோவில். ரங்கநாதர் பின்னணியில் பாதி
மறைக்கப் பட்டு இருக்கிறார்.( எண்ணைக்காப்புபோல )108 திருப்பதிகளுள் ஒன்று. ஐந்து
நிலை ராஜ கோபுரம் பெருமாளின் தலைப்பகுதியில் காவிரியும் கால் பகுதியில் கங்கையும்
சேவிக்கிறார்கள்.இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி சந்திரன் தன் சாபம் நீங்கப்
பெற்றான் என்றும் கதை உண்டு. வீர சயனத்தில் கிழக்குப் பார்த்து அருள் பாலிக்கும்
பெருமாள் தீபாராதனைபோது முகமும் காலும் காட்டப் படுகிறது ஓரிரு புகைப்படங்கள்
எடுத்தேன்
அதன் பிறகு அபயாம்பிகை சமேத மயூர நாதர் கோவில் சென்றோம்.
முதலில் சிவன் கோவில் என்று தெரியவில்லை. முருகனின் ஆலயம் என்று நினைத்திருந்தோம்.
இந்தக் கோவிலில் திருமதி. கோமதியின் கணவர் திரு. திருநாவுக்கரசு நாயன்மார்கள்
பற்றிய உபன்யாசம் செய்திருப்பதாக பேச்சு வாக்கில் அறிந்தோம் திருநாவுக்கரசு
அவர்கள் தமிழ் அறிஞர். முனைவர் பட்டம் பெற்றவர். திருமுறைகள் பற்றிய நூலை
எழுதியவருள் இவரும் ஒருவர். பார்ப்பதற்கு மிகவும் எளிமையாகக் காட்சி தருகிறார். கோவில்
கோபுர உச்சியில் மோக்க்ஷ தீபம் ஏற்றுவதாகப் பிரார்த்திப்பவர்களும் உண்டாம் அப்படி
ஏற்றப்பட்ட மோக்ஷ தீபத்தைப் புகைப் படமாக எடுத்திருக்கிறேன் கோவில் தரிசனம்
முடிந்தபின் திருமதி .கோமதி அரசுவின் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்கள்.
மல்லீப்பூ போன்ற இட்லிகளும் தோசைகளும் கொடுத்தார்கள்.கூடவே செவிக்குணவாக பல
விஷயங்களையும் கேட்டுத்தெரிந்து கொண்டோம் கடவுளர் பற்றிய விஷயங்களில் முதலில்
நம்பிக்கையே முக்கியம் என்பது திரு அரசுவின் வாதம். கேள்வி கேட்டுபுரிந்து கொள்ள
முயல்வது என் குணம். பல கேள்விகளுக்கு விடை கிடைக்காது என்று ஒப்புக் கொண்டோம்
முகமறியா வலை நண்பர் ஒருவர் பல நாட்கள் பழகியது போல் நடந்து கொண்டது மனசுக்கு
மகிழ்ச்சி அளித்தது. அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கும் அறைக்குத்
திரும்பினோம். . .
|
மயூரநாதர் கோவில் கோபுரம் மேல் “மோக்க்ஷ தீபம்” |
|
திருமதி கோமதிஅரசு, திருநாவுக்கரசு , நான் |
|
திருமதி.கோமதி அரசு என் மனைவிக்குக் கொடுத்தபடம் |
|
என் சிறுகதைத் தொகுப்பு”வாழ்வின் விளிம்பில்” என் பரிசாக. |
|
அருள்மிகு பரிமள ரங்கநாதர் ஆலயம் முன் |
|
மயூரநாதர் கோவிலில் அன்னை மயிலாக ஈசனைப் பூசிக்கும் சிற்பம் |
|
அரசு தம்பதியினர் அவர்கள் இல்லத்தில் |
மறுநாள் பத்தாம் தேதி வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் புறப்படும்
முன் கோவில் குருக்களிடமிருந்து தொலைபேசியில் அழைப்பு. பிரதி வருடமும் ஜூலை மாதம்
வருகை தருவோர் இதுவரை வரவில்லையே என்று கேட்டார். நாங்கள் இன்னும் அரைமணியில்
வருவதாக்ச் சொன்னோம். வழக்கம் போல் பூஜைக்கான பொருட்களுடன் குருக்களை சந்தித்து வைத்தீஸ்வரன்
தையல்நாயகி, முத்துக் குமாரஸ்வாமி, அங்காரகன் என்று அனைவரையும் சேவித்துவிட்டு குருக்களிடம்
வழக்கம்போல் வருடாந்திர அர்ச்சனைகளுக்கும் பணம் கொடுத்துவிட்டு சிதம்பரம் நோக்கிப்
பயணிக்க வெளியில் வந்து கொண்டிருந்தோம். திடீரென எனக்கு இருமல் வந்தது. என் மனைவியின்
கையைப் பிடித்துக் கொண்டு இருமினதுதான் தெரியும். நான் மயங்கி கீழே
விழுந்துவிட்டேன். என்மனைவி எப்படிப் பதறிப் போய் இருப்பாள் என்று இப்போது எண்ணிப்
பார்க்கிறேன் அருகில் இருந்தவர்கள் எனக்கு வலிப்பு வந்து விட்டது என்று கருது
இரும்புச் சாவி கொடுக்க முற்பட்டார்கள். இதற்குள் நான் மயக்கம் தெளிந்து எழுந்து
விட்டேன் அது ஒரு மாதிரி இருமல்..சிலசமயம் இந்த மாதிரி syncopi யில்
கொண்டுவிடும் மிகவும் சோர்வாக இருந்தது. சிதம்பரம் கோவில் மிகப் பெரியது அங்கு
சென்று தரிசனம் செய்ய அப்போது உடலில் தெம்பு இருக்கவில்லை. ஆண்டு தோறும் எங்களைக்
கூட்டிச் சென்று தரிசனம் செய்விக்கும் தீக்ஷிதர் வீட்டில் நானிருக்க என் மனைவி
ஆடலரசனைக் கண்டு சேவித்து வந்தாள். அந்த தீக்ஷிதரின் பெண்ணுக்குத் திருமணம்
நடந்திருந்தது. எங்களால் போக முடியவில்லை. அவர்கள் வீட்டில் அப்பெண்ணை வாழ்த்திவிட்டு
தில்லை காளியம்மன் கோவில் வாசலில் நான் காரில் இருக்க என் மனைவி தரிசித்து
வந்தாள். என் நிலைமையில் திருச்சிக்குப் போக என் மனைவிக்கு துணிவு இருக்கவில்லை.
எனக்கும் இந்த வெயில் ஒத்துக் கொள்ள வில்லை. நேரே பெங்களூர் திரும்ப
முடிவெடுத்தோம். என் மகன்களுக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டு
மயிலாடுதுறையிலிருந்து தத்கலில் டிக்கெட்
பதிவு செய்யப் பட்டது. 11-ம் தேதி பகல் நேரம் முழுவதும் அறையிலேயே இருந்தோம்.
எதுவும் உண்ணவோ அருந்தவோ பிடிக்கவில்லை. ஹோட்டலில் ஒரே ஒரு தயிர் சாதம் பாக்
செய்து கொண்டு மாலை கிளம்பினோம் திருச்சியில் சந்திப்பதாக இருந்த அனைவருக்கும்
தகவல் தெரிவித்தோம். ரயிலில் ஏறியதும் ஏதாவது சாப்பிடக் கிடைத்தால் தேவலாம்
என்றிருந்தது. எங்கள் துரதிர்ஷ்டம் கும்பகோணத்திலோ தஞ்சையிலோ எதுவும் வாங்க
முடியவில்லை. மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது டெல்லியில் இருந்த என் மூத்த
மகனுக்கு தொலை பேசியில் விஷயங்களைச் சொன்னோம் அவன் திருச்சியில் இருந்த நண்பர்
ஒருவரிடம் எங்களுக்கு இரவு உணவு ரயில் நிலையத்தில் கொண்டு வந்து கொடுக்கச்
சொன்னார். திருச்சி ரயில் நிலையத்தில் அந்த நண்பர் சூடான இட்லி தோசையுடன்
காத்திருந்தார் இன்றைய வேக வாழ்க்கையில் இது சாத்தியமாயிற்று. ஒரு மணி நேரத்தில்
தகவல்களும் அதன்படி செயல் களும் நடந்து முடிந்தன. நண்பருக்கு நன்றி சொன்னோம். 12-ம்
தேதிகாலை ஐந்தரை மணிக்கு எங்கள் இளைய மகன் ரயில் நிலையம் வந்து எங்களை வீட்டுக்குக்
கூட்டி வந்தான்
சொல்ல நினைத்ததை சொல்லும்போது சற்றே நீண்ட பதிவாகி விட்டது.
.
.
. .
இனிமையான சந்திப்புகளுடன் ஆன்மீகச் சுற்று சென்று வந்திருக்கிறீர்கள். அரசு ஸார் அற்புதமாக ஓவியங்களும் வரைவார். ஒவ்வியம் பற்றி உங்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. அந்தப் பேச்சு வரவில்லையா?
பதிலளிநீக்குதிருச்சி சந்திப்பு விவரங்களுக்குக் காத்திருக்கிறேன்.
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம்
பதிவு முழுவதும் படிக்கவில்லையா?
//நேரே பெங்களூர் திரும்ப முடிவெடுத்தோம்.//
பதிலளிநீக்குஇந்த வரிகளைப் படித்திருந்தாலும் கும்பகோணம், தஞ்சாவூர் என்று படித்ததும் திருச்சி சென்றிருப்பீர்களோ என்றுதான்....!
ஹிஹிஹி..
நீள் பதிவு என்றாலும் படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. திருமதி கோமதி அரசு அவர்கள் உங்களுக்கு தந்த அந்த கல்கத்தா காளி ஓவியம் அருமை. தங்களின் அறுபதாம் அகவை திருமண படங்களும் அருமை.
பதிலளிநீக்குநல்லதொரு ஆன்மீகப்பயணம். அருமையான விவரணம். சந்திப்புகளும் இனியதாக....மிகவும் சுவாரஸ்யமாக வாசித்தோம் சார். தங்கள் அந்த புகைப்படங்களையும் ரசித்தோம்...
பதிலளிநீக்குவணக்கம் சார், வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குஉங்கள் மணிவிழா படங்கள் மிக அருமை.
சாரும் உங்கள் பதிவை படித்தார்கள்.
உங்கள் மகனின் நண்பர் உணவு கொண்டு வந்து கொடுத்தமை அறிந்து மகிழ்ச்சி.
எங்கள் படங்களை எல்லாம் வெளியிட்டு பதிவில் சிறப்பித்து விட்டீர்கள். நன்றி.
நீங்களும், உங்கள் மனைவியும் நீண்டநாள் பழகியது போல் அன்பாய் பேசியது மனதுக்கு மகிழ்ச்சி அளித்தது. நம் சந்திப்பை மறக்க முடியாது.
உங்களைப் பதிவுகளில் காணோம் என்றதும் உடல்நிலை சரியில்லையோ என்னும் எண்ணம் தான் முதலில் வந்தது. தற்சமயம் எப்படி இருக்கிறது? இனிமேல் பிள்ளைகள் துணையுடன் பயணம் மேற்கொள்வதே சிறந்தது என எண்ணுகிறேன். நீங்கள் வரப் போவது குறித்து எனக்குத் தகவல் இல்லை. ஆனாலும் எங்கள் பயணம் இரண்டு மாதங்கள் முன்னரே முடிவு செய்யப்பட்டது. தவிர்க்க முடியாது. இந்த வருடமும் உங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்தேன்.
பதிலளிநீக்குகோமதி அரசுவையும், அவர்கள் கணவரையும் புகைப்படம் மூலம் பார்க்க நேர்ந்ததில் மகிழ்ச்சியாக உள்ளது. நல்லதொரு விருந்தோம்பலும் நடத்தி உள்ளனர். உங்கள் சஷ்டி அப்தபூர்த்திப் படங்களும் அருமையாக உள்ளது.
பதிலளிநீக்கு****திடீரென எனக்கு இருமல் வந்தது. என் மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு இருமினதுதான் தெரியும். நான் மயங்கி கீழே விழுந்துவிட்டேன்.***
பதிலளிநீக்கு:(
Glad that you recovered quickly, and became "normal" Sir! :-)
வணக்கம்
பதிலளிநீக்குஐயா.
மணிவிழா படங்கள்
பட்டொளி வீச
இளமை வாலிபம்
துள்ளி விளையாட
நட்புக்கள் படை சூழ
இனிதே நடந்தது சிறப்பு.
வாழ்வில் வசந்தங்கள் வந்தாட
என்றென்றும் இளமையுடன் வாழ
இறைவன் துணை நிப்பான் ஐயா.
வாழ்த்துக்கள்.
-------------------------
கோமதி அம்மாவை பார்க்க வேண்டும் என்றஆசை மனதில் இருந்தது. தங்களின் பதிவின் வழி புகைப் படத்தில் பார்க்க கிடைத்தது. இருவரையும் மிக்க மகிழ்ச்சி ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Linked with TM :-)
பதிலளிநீக்குஅருமையான படங்களும் , மணிவிழா நிகழ்வுகளும் , இனிய கோமதி அரசு அவர்களின் தம்பதிசமேதராக சந்திப்பு என்று நிறைவாக இருந்தது..
பதிலளிநீக்குபயணத்தில் எதிர்பாராத உடல்நிலைக் கோளாறு கலங்கவைத்தது.
கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா..!
Unexpected events occur at unexpected time and that too for people for whom we least expect the unforeseen adverse events.
பதிலளிநீக்குQuite a thrilling tourfrom the onlookers' point of view, though, however, for those who suffered, it should have been weird indeed.
God Bless you.
subbu thatha.
www.subbuthatha72.blogspot.com
ஆன்மீகப்பயணம் அந்தச் சிறு அசௌகரியம்
பதிலளிநீக்குஇல்லாமல் நிறைவுற்று இருந்தால் எங்களுக்கும்
சந்தோசமாக இருந்திருக்கும்
அறுபதாம் திருமணப் படங்கள் பார்க்கப் பார்க்க
சுவாரஸ்யம்.
அன்புடையீர்..
பதிலளிநீக்குதங்களது பயணத்தில் தங்களுக்கு ஏற்பட்ட எதிர்பாராத உடல் நலக் குறைவு அறிந்து மனம் வருந்துகின்றது.
தங்கள் உடல் நலனைக் கவனித்துக் கொள்ளவும்.
தாங்கள் மயிலாடுதுறை திருக்கடவூர் தரிசனம் செய்து அன்புக்குரிய கோமதி - அரசு அவர்களையும் எங்களுக்கு அறிமுகம் செய்தது கண்டு மகிழ்ச்சி..
வெகுநாள் பழகியவர்களைக் கண்டது போலிருந்தது.
வாழ்க நலம்..
தங்கள் பயண விவரமும்,
பதிலளிநீக்குமணி விழாப் படங்களும் அருமை ஐயா
உடல் நிலையை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா
நன்றி
நான் தூரப் பயணங்கள் இப்போது தவிர்க்கிறேன். இதுவரை பார்த்தது போதும் என்ற எண்ணம் வந்து விட்டது.
பதிலளிநீக்குதிருச்சி பயணம் கடைசி நிமிடத்தில் ரத்தானதை திரு. ரிஷபன் அவர்கள் மூலம் கேள்விப்பட்டேன்.
பதிலளிநீக்குதங்கள் உடல்நிலையை உத்தேசித்து அநாவஸ்யமாக எங்கும் பயணம் செல்வதை இனியாவது தவிர்த்து விடுங்கள், ஐயா.
திருமதி கோமதி அரசு தம்பதியினரை படத்தில் கண்டதில் சந்தோஷம்.
ப்ழனி கந்தசாமி சார் கூறியதுபோன்று நானும் தொலைதூர அதுவும் ரயில்/பேருந்து பயணங்களை முழுவதுமாக தவிர்த்துவருகிறேன். இளம் வயதிலேயே எனக்கு பயணம் என்றாலே அலர்ஜி. இப்போது கேட்கவே வேண்டாம். பார்த்தது போதாதா என்ற மனநிறைவுடன் அருகில் இருக்கும் தெய்வங்களை வணங்கினால் போதாதா என்ற எண்ணமும் எனக்கு எப்போதுமே உண்டு.
பதிலளிநீக்குHow are you now? Take care.
பதிலளிநீக்குRegards,
Banu
பதிலளிநீக்கு@ ஸ்ரீ ராம்
திருச்சியில் நிகழ இருந்த சந்திப்புகள் நடக்காதது ஒரு குறையாகப் பதிவிட்டிருந்தேன் நீங்கள் நடந்ததாக assume செய்து விட்டீர்கள் பரவாயில்லை. வருகைக்கு நன்றி ஸ்ரீ.
பதிலளிநீக்கு@ அந்தக் கோவில் சென்றபோது பழைய நினைவுகள் அதுதான் படங்களைப் பதிவிட்டேன். வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ துளசிதரன் தில்லையகத்து
ஒரே ஒரு பதிவரைத்தான் சந்திக்க முடிந்தது. முழுவதும் முற்றுப் பெறாத பயணம்....! வருகைக்கு நன்றி.
பதிலளிநீக்கு@ கோமதி அரசு
உங்களைச் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியே. அன்பும் பரிவும் மறக்க முடியாதது. எதேச்சையாக டெல்லியில் இருந்து பேசிய மகனிடம் சமாச்சாரங்கள் சொன்னதும் அங்கிருந்தேஒரு மணி நேரத்தில் இரவு உணவுக்கு ஏற்பாடு செய்து அதை நண்பர் ஒருவர் மூலம் கொடுக்கச் செய்திருந்தான். தகவல் தொடர்புகளின் உச்ச அனுகூலம்.
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. ஒவ்வொரு நிகழ்வும் நம் அநித்தியத்தை வலியுறுத்திச் செல்கிறது. திருச்சிக்கே வர இயலாததில் வருத்தம் உண்டு. வருகைக்கும் அன்பான விசாரிப்புக்கும் நன்றி
பதிலளிநீக்கு@ கீதா சாம்பசிவம்
அரசு தம்பதியினரின் புகைப்படங்களை அவர்கள் அனுமதியுடனே வெளியிட்டேன் வலையுலக நட்புகளின் முகமறிதல் எவ்வளவு மகிழ்ச்சி தருகிறதுபாருங்கள். மணிவிழாப்படங்கள் நினைவுகளின் தூண்டுதல் நன்றி.
பதிலளிநீக்கு@ வருண்
வயது காலத்தில் எதுவும் நடக்கலாம் உடன் சரியானதில் என்னைவிட என் மனைவிக்கு ஆறுதல் அதிகம். Thanks for the kind inquiries.
பதிலளிநீக்கு@ ரூபன்
ஏறத்தாழ 16 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள் அவை. அந்தக் கோவில் அந்தக்கால நினைவுகளை உசுப்பி விட்டது. அரசு தம்பதிகள் படங்கள் பலருக்கும் மகிழ்ச்சியை கொடுப்பது தெரிகிறது.
பதிலளிநீக்கு@ வருண்
linked with TM புரியலையே .
பதிலளிநீக்கு@ இராஜராஜேஸ்வரி
உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி மேடம்.
பதிலளிநீக்கு@ சூரி சிவா
எதிர்பாரா நிகழ்வு என் மனைவியை வெகுவாக பாதித்து விட்டது. எதிர்பாராததை எதிர் நோக்கவும் தயாராய் இருக்கவேண்டும் அல்லவா. என்னவோ வலையுலக நட்புகளிடம் பகிரத் தோன்றியது வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ ரமணி
அதனால்தான் அந்த தலைப்பு. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
வெகுநாள் காத்திருந்த பயண்ம் இப்படி அரை குறையாக முடிந்துபோனது குறையாகவே தெரிகிறது. பதிவின் தலைப்பு சரி அல்லவா. ?
பதிலளிநீக்கு@ துரை செல்வராஜு
வெகுநாள் காத்திருந்த பயண்ம் இப்படி அரை குறையாக முடிந்துபோனது குறையாகவே தெரிகிறது. பதிவின் தலைப்பு சரி அல்லவா. ?
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார்
பாராட்டுக்கும் கனிவான வார்த்தைகளுக்கும் நன்றி ஐயா.
பதிலளிநீக்கு@ டாக்டர் கந்தசாமி.
நடக்க இருப்பது எங்கானாலும் நடந்துதானே தீரும் . வெளியூரில் என்றதால் கூட வந்த என் மனைவிக்கு கவலை ஆகிவிட்டது. வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ கோபு சார்
திருச்சியில் தமிழ் இளங்கோ, ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி, ரிஷபன் இவர்களைத் தவிர்த்து இன்னும் சிலரை சந்திக்க இருந்தேன். ரயிலில் போகும் போதே செய்தி அனுப்பி விட்டேன் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் சார். இருந்தாலும் நம்மால் பிறர் கஷ்டப்படக் கூடாது அன்பான வார்த்தைகளுக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ டி.பி.ஆர் ஜோசப்
என் பயணம் திட்டமிட்டபடி நடக்கவில்லையே தவிர அது நான் பயணங்களைத் தவிர்க்கச் செய்யாது என்று நினைக்கிறேன். கூட வந்த என் மனைவி அதிகம் கலங்கி போனாள். எங்கிருந்தாலும் நடப்பது நடந்தே தீரும் . வருகைக்கு நன்றி சார்.
பதிலளிநீக்கு@ பானுமதி வெங்கடேஸ்வரன்.
வருகைக்கும் கனிவான விசாரிப்புக்கும் நன்றி பானு.
உங்கள் முனைப்பும் துணிச்சலும் பாராட்டுக்குரியது. பயணத்தின் நிறைவில் மகிழ்ச்சி (எங்களுக்கும்).
பதிலளிநீக்குஅவர் வரையும் sketch போலவே இருக்கிறாரே திரு அரசு? (அல்லது அவரைப் போலவே இருக்கிறதே அரசு வரைந்த caricature?)
போளி கொடுத்தாங்களா? அடுத்த ட்ரிப்ல கோமதி அரசு வீட்ல டேரா.
அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்.! உங்களோடு அன்று நான் செல்போனில் தொடர்பு கொண்டபோது நீங்கள் மயக்கம் ஆனதால் திருச்சிக்கு வரவில்லை என்றவுடன் எனக்கு மிகவும் பதட்டமாகவே இருந்தது. தங்களுக்கு ஏதும் ஆகிவிடக் கூடாது என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். அடுத்தநாள் தங்கள் மின்னஞ்சலைக் கண்டவுடன்தான் தெளிவு பிறந்தது. திருச்சி வழியே ரெயிலில் வருவது தெரிந்து இருநதால் நான் உங்களுக்காக உணவுடன் வந்து இருப்பேன். தாங்கள் அன்றைய பதட்டமான சூழ்நிலையில் இருந்து மீண்டு வந்தது இறைவன் அருள்! மீண்டும் நலமுடன் இருக்க உடல்நலம் பேணவும்!
பதிலளிநீக்குமலரும் நினைவுகளாக முன்பு திருக்கடையூரில் நடைபெற்ற தங்களது 60 ஆம் ஆண்டுவிழா நிகழ்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவலைப்பதிவில் கோமதி அரசு தம்பதியினர் புகைப் படங்களை இன்றுதான் பார்க்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
திரு அரசு படங்கள் வரைவார் என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரும் அதுபற்றிப்பேசவில்லை. இதுமாதிரி எத்தனை பேர் வீட்டில் டேரா போடப் போகிறீர்,என் முனைப்பையும் துணிச்சலையும் பாராட்ட ஒருவர் இருக்கிறாரே நன்றி
@ தி தமிழ் இளங்கோ
எனக்காகக் காத்திருக்க வேண்டாம் எனத் தெரிவிக்கவே செல் ஃபோனில் தொடர்பு கொண்டேன். நடந்தது நன்றாகவே நடந்தது. நடப்பதும் நன்றாகவே நடக்கிறது நடக்க இருப்பதும் நன்றாகவே இருக்கும் என்று நம்புவோம்
பதிலளிநீக்கு@ தி தமிழ் இளங்கோ
பாராட்டுக்கலுக்கும் கனிவான விசாரிப்புகளுக்கும் நன்றி ஐயா. அரசு தம்பதியினரின் படங்களை அவர்கள் அனுமதி பெற்றே பதிவிட்டேன். அது எல்லோருக்கும் மகிழ்ச்சி தருவது இப்போது தெரிகிறது
****@ வருண்
பதிலளிநீக்குlinked with TM புரியலையே . ***
I just said, I linked your blog-post with "thamizhmaNam thiratti" without your approval! :-)
பதிலளிநீக்கு@ வருண்
நான் பதிவிட்டு ஒரு நாள் முடிந்தபின்தான் தமிழ் மணத்தில் இணைப்பது வழக்கம் . இம்முறை இணைக்கச்சென்றபோது பதிவுகள் இல்லை என்று வந்தது. இப்போதுதான் புரிகிறதுஇனி வேண்டாமே வருண்.
ஓ அப்படியா! மன்னிக்கவும் சார். ஒரு சிலர் இணைப்பதில் பிரச்சினைகள் இருப்பதால் மற்றவர்கள் அவர்களுக்காக இணைத்துவிடுவதுண்டு. அதேபோல் "தவறாக நான் யூகித்ததால்" வந்த விளைவு! இந்த் தவறு ஒரு போதிலும் தொடராது! :)
பதிலளிநீக்கு"Well, DON'T GUESS! ASK Varun!" is what I want to tell myself now! :)
It wont happen again. Sorry about that! :(
சுருளிராஜன் என்று ஒரு நகைச்சுவை நடிகர். பழைய படம் ஒன்றில் வேலை வெட்டியில்லாத கேரக்டர். குடும்பத்துடன் சென்று பழைய சொந்தம் பந்தம் என்று ஊர் ஊராகத் தேடிப்போய் ஒவ்வொருவர் வீட்டிலும் இத்தனை நாள் என்று டேரா போடுவார் - இதான் அவரது பிழைப்பே! சரியான காமெடி. நினைவுக்கு வந்தது.
பதிலளிநீக்குஸ்ரீராம் பதிவுகளை முழுமையாகப் படிப்பதில்லை என்று எனக்கும் தோன்றுகிறது.
பதிலளிநீக்கு:-).
தவறான குற்றச்சாட்டு அப்பாஜி... மறுக்கிறேன். ஜி எம் பி ஸாரின் பதிவை முழுதும் படித்தபின்பே கருத்திட்டேன்.
பதிலளிநீக்குஆனால் இது உங்கள் பதிவுக்குப் பொருந்தாது என்றும் சொல்லி விட என்னை அனுமதியுங்கள் அப்பாஜி.. மிக நீளமாக இருந்தால் படிக்கும் ஆர்வம் போய்விடுகிறது. ஆனால் படிக்காமல் கருத்திடுவதில்லை. அப்படிப் படிக்காத தளங்களில் நான் கருத்திடுவதில்லை. உங்கள் 'அந்த'க் கவிதைப் பதிவில் கூட பதிவைப் பற்றிப் பொதுவாகச் சொல்லி, பின்னூட்டம் பற்றித்தான் நான் குறிப்பிட்டிருந்தேன். :)))))
பதிலளிநீக்கு@ வருண்
அவ்வளவு சீரியசாக நினைக்க வேண்டாம். பதிவிட்ட ஒரு நாள் கழித்து திரட்டிகளில் இணைத்தால் வாசகர் எண்ணிக்கை கூடுகிறது என்பது என் அனுமானம். எனக்குப் பிரச்சனை வந்தால் நிச்சயம் வாசகர்களையே முதலில் அணுகுவேன்.நன்றி.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
டேரா எனும் வார்த்தை என்னவெல்லாம் நினைவுக்குக் கொண்டு வருகிறது.
பதிலளிநீக்கு@ அப்பாதுரை
ஸ்ரீராம் என் பதிவுகளை முதலில் படிப்பவர் என்று எனக்குத் தெரியும்
பதிலளிநீக்கு@ ஸ்ரீ ராம்
பதிவுகள் நீளமாய் இருந்தால் படிக்கும் ஆர்வம் குறையும் என்று எனக்குத் தெரியும். இருந்தும் சொல்ல வேண்டிய விஷயங்கள் சில நேரங்களில் பதிவின் நீளத்தை அதிகப் படுத்தி விடுகிறது.தைர்க்க முடியவில்லை.
படங்களும் பதிவும் அருமை. தமிழகத்தில் கோயில்களுக்குச் சென்றுவருவது என்பதில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலும் கிடைக்குமா என்பது ஐயமே. பிறந்த மண் கும்பகோணம் என்ற நிலையில் கோயில்கள் மீதான ஈர்ப்பு எனக்கு அதிகம். தங்களின் பதிவு மனதிற்கு நிறைவாக இருந்தது. ஒவ்வொருவரும் குடும்பத்துடன் இவ்வாறு செல்ல வேண்டும். சந்ததியினருக்கும் நம் கலை, பண்பாட்டுப் பெருமைகளை எடுத்துச்செல்லவேண்டும். சிறப்பான பணி செய்துள்ளீர்கள். நன்றி.
பதிலளிநீக்கு