Friday, February 27, 2015

உபாதைகள் பலவிதம்-ஒவ்வொன்றும் ஒரு விதம்--3


                   உபாதைகள் பலவிதம் -ஒவ்வொன்றும் ஒருவிதம்- 3
                  ----------------------------------------------------------------------------------


உபாதைத் தொடரினை சீக்கிரமே முடிக்க முயற்சி செய்தாலும் அது நீண்டு கொண்டே போகுமளவுக்கு பலவித உபாதைகளின் வகைகளும் அதை  சமாளிக்கும் அனுபவங்களுமே காரணமாகும்
விருப்ப ஓய்வில் பெங்களூரு வந்தபோதே என் கேட்கும் திறனை சோதிக்க விரும்பினேன். எங்காவது வெடி வெடித்தால் என்ன புகைகிறது என்று கேட்கும் அளவுக்கு காதின் திறன் குறைந்து கொண்டு வந்தது. இளவயதிலேயே எனக்குக் காது மந்தம் என்று பிறர் சொல்லிக் கேள்வி. பெங்களூருவில் ஒரு பிரபலமான ENT Specialist ஐப் பார்த்தேன். அவர் சோதனை செய்து அறுவைச் சிக்கிச்சை செய்து விடலாம் STAPIDECTOMY  என்னும் குறை என்றார். அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்குமா. காது நன்றாகக் கேட்க எத்தனை சதவீதம் வாய்ப்பு என்று கேட்டேன். அவர் 95 சதம் வெற்றிகிடைக்கும் என்றார். எனக்கோ அந்த5சதம் வாய்ப்பில் இருப்பதும் போய்விட்டால் என்ற பயம். பேசாமல் வந்து விட்டேன். என் அம்மான் மகன் இன்னொரு நிபுணரைப் பரிந்துரைத்தான். அவரும் காதில் மைக்ரோ சர்ஜெரி மூலம் சரிப்படுத்தலாம் என்றார். அவரிடமும் எத்தனை சதம் வெற்றி வாய்ப்பு என்று கேட்டேன். என்னை ஏற இறங்கப் பார்த்தவர் “ உங்களுக்குக் காது கேட்கும் “ என்று உறுதியாய்க் கூறினார். அந்த நம்பிக்கை எனக்கும் வர அறுவை சிகிச்சைக்கு நான் உடன்பட்டேன். அறுவைச் சிகிச்சை முடிந்தது எனக்குக் காதும் (இடது) கேட்டது. வலது காதையும் அறுவைச் சிகிச்சைக்கு இதுவரை உட்படுத்தவில்லை
நாங்கள் காசி ஹர்த்வார் பயணத்துக்கு டிக்கெட் எல்லாம் முன்பதிவு செய்து அந்த நாளுக்காகக் காத்திருந்தோம். எனக்கு என் இடுப்புவலி கூடவே வரும் sciatica என்று மருத்துவர்கள் கூறும் காலில் வலி வந்து மிகவும் படுத்தியது. எங்கள் பயணமே தடை படுமோ என்று பயந்தேன். அருகில் இருந்த ஒரு ஹாஸ்பிடலுக்குச் சென்றேன். அவர்கள் என்னைப் பரிசோதித்து எங்கள் பயணத்தை உத்தேசித்து உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் இல்லாவிட்டால் பயண நடுவில் பிரச்சனை அதிகமாகலாமென்றும் கூறினர். . நான் அதற்கு உடன் படும் பட்சத்தில் லாப்ரொஸ்கோபிக்கான கருவிகளைக் கொண்டு வருவதாகவும் கூறினர். எனக்கு அவர்கள் பேசும் விதத்தைப் பார்த்ததில் அது என்னை அறுவைச் சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டிய மார்க்கெட்டிங் டெக்னிக் என்று தோன்றியது. சிறிது அவகாசம் கேட்டு வந்து விட்டேன் நான் என்னைச் சோதித்த யுராலஜிஸ்டிடம் சென்று அபிப்பிராயம் கேட்டேன். அவர் அது ஹெர்னியாவின் ஆரம்பஅறிகுறி என்றும் சிறிது ஓய்வில் இருந்தால் சரியாகிவிடும் என்றும் பிறிதொரு சமயம் தேவைப்பட்டால் ஆப்பரேஷன் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். அதன் பிறகு நாங்கள் 22 நாட்கள் பயணத்தில் இருந்தோம் எந்தப் பிரச்சனையும் இருக்கவில்லை அதன் பிறகு.
சிறிது தூரம் நடந்தால் இடது தொடையின் நடுவேஅடிக்கடி வலி வரத் தொடங்கியது. சிறிது ஓய்வெடுத்தால் சரியாகும். மருத்துவரை அணுகியபோது Hernia  என்று சொல்லி அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளச் சொன்னார். செய்து கொண்டேன். பிரச்சனை தீர்ந்தது. இதற்கு முன்பே சிறு நீர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் அடிக்கடி வரும். ஒரு மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணி நேரம் கூடத் தாக்கு பிடிக்க முடியவில்லை UROLOGIST ஒருவரைப் பார்த்தேன் ஸ்கான் எடுத்துப்பார்த்து prostate enlargement   இருக்கிறது என்றும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் அறிவுரை கூறினார். எனக்கு அறுவை சிகிச்சை செய்வதில் உடன் பாடு இருக்கவில்லை. நான் இதுவரை பார்த்த மருத்துவர்களிலேயே என்னைக் கவர்ந்தவர் இவர். மருந்து மாத்திரைகள் சிம்ப்டொமெடிக் ரிலீஃப் தரலாம் ஆனால் அறுவைச் சிகிச்சை தேவை என்றார். நான் முதலில் எனக்கு இந்த சிம்ப்டொமெடிக் ரிலீஃப் கிடைக்கட்டும் .பிறகு அறுவை சிகிச்சை பற்றி யோசிக்கலாம் என்று கூறினேன். என் திடமும் முடிவெடுக்கும்திறனும் அவருக்குப் பிடித்தது.இன்றும் மாத்திரைகளில்தான் இருக்கிறேன் ( சுமார் 15 ஆண்டுகளாக). அவர் எனக்குக் கூறிய ஒரு அறிவுரை. மனதுக்குப் பிடித்த வேலைகளில் ஈடுபட்டு உபாதைகளின் நினைப்பை மறக்க    (diversion of  the mind)முயற்சி செய் என்றார். அப்போதுதான் நான் தஞ்சாவூர் ஓவியங்கள் தீட்டக் கற்றுக் கொண்டிருந்தேன்.மும்முரமாக அதில் ஈடுபட்டு சுமாரான திறனை வளர்த்துக் கொண்டேன் அவருக்கு என்னால் நன்றாக வரைய பட்ட ஒரு தஞ்சாவூர் ஓவியக் கிருஷ்ணனைப் பரிசாகக் கொடுத்தேன். மிகவும் மகிழ்ந்தார். தன் வீட்டு ஹாலை அது அலங்கரிப்பதாகவும் கூறினார். இந்த நேரத்தில்தான் 2010 ஆம் ஆண்டு ஆனந்த விகடனில் வந்த ஒரு செய்தி பார்த்து வலைப்பூ பற்றி அறிந்தேன். மனசை ஈடுபடுத்த எழுதலாம் என்னும் எண்ணம் தோன்ற. என் பேரன் மூலம் இந்த வலைப்பூவைத் தொடங்கி எழுதி வருகிறேன்.
அம்மாதிரி ஒரு நாள் நான் கணினியில் இருந்தபோது நெஞ்சு சற்று பாரமாக இருப்பது போல் தோன்றியது. எனக்குத்தான் இது பழக்கப்பட்டதாயிற்றே என்று வாளா இருந்தேன். ஆனால் இன்னும் சிறி நேரத்துக்குப் பின்னும் அது சற்றே வித்தியாசமாய் தொடரவே அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்று ecg எடுக்கக் கேட்டுக் கொண்டேன். அவர்கள் ஈசீஜீ எடுத்து ஸ்பெஷலிஸ்டைப் பார்க்கச் சொன்னார்கள். நானும் என் மனைவியோடு நிபுணரைப் பார்க்கச் சென்றேன். அங்கும் ஈசீஜீ எடுத்து என்னை மருத்துவ மனைக்குப் போகச் சொன்னார்கள். மாலை ஏழு மணி ஆகி இருந்தது. அவர்கள் என்னைப் பல சோதனைகளுக்கு உட்படுத்தி என் மனைவியிடம் வந்திருப்பது ஹார்ட் அட்டாக் என்றார்கள். நாங்கள் தனியே இருந்தோம். என் மக்களுக்குச்செய்தி பறந்தது. பதறி அவர்களும் வர மறு நாள் angiography  செய்தார்கள் ஒரு குழாய் ஏறக்குறைய முழுவதும் அடைப்பு என்று கூறி angioplasty  செய்தார்கள் என்னிடம் அரை முதல் முக்கால் மணி நேரத்துக்குள் முடிந்து விடும் என்றவர்கள் ஒன்றரை மணி நேரமாயும் முடிக்க முடியாமல் இருந்தனர். எனக்கு அவர்கள் பரிதவிப்பு புரிந்து கேட்டேன். பயப்பட ஒன்றுமில்லை என்று கூறி சிறிது நேரத்தில் முடித்தனர். எனக்கு BP கிடையாது சர்க்கரை நோய் கிடையாது கொலோஸ்திரல் கிடையாது இருந்தும் ஏன் இந்த அடைப்பு என்பது புரியாத புதிர். முக்கால் ,மணி நேர procedure  ஏன் தாமதமாயிற்று என்று கேட்டதற்கு ரத்தக் குழாயில் கால்ஷ்யம் டெபொசிட் இருந்தது என்று கூறி அது நான் சிகரெட் புகைக்கும் பழக்கமுள்ளவனாய் இருந்ததனால் இருக்கலாம் என்றார்கள் எனக்கு இந்த பிரச்சனை வந்தபோது நான் புகைப் பழக்கத்தை நிறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாகி இருந்தது.என்ன ஏதோ காரணம் கொண்டு அடைப்பு ஏற்பட்டு நான் ரூ மூன்று லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. என் மனதின் எங்கோஒரு ஓரத்தில் இது தேவை இல்லாத செலவோ என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படி பார்த்தால் சாலையில் நடந்து செல்வோரில் பத்துக்கு மூன்று பேராவது இம்மாதிரி சோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டால் சிகிச்சை தேவைப் படுபவராகவே இருக்கும்.


விருப்ப ஓய்வு பெற்று நான் பெங்களூரு வந்தபோதே எனக்கு அடிக்கடி சளி பிடிக்கத் தொடங்கியது. பெங்களூருவின் சீதோஷ்ண நிலை எனக்குஒவ்வாமை ஆயிற்று. பெங்களூருவில் இருக்கும் பார்த்தீனிய செடிகளின் மகரந்தத் தூள் காற்றில் பரவி இருப்பதால் இங்கு வசிக்கும் 25 சத வீதத்தினர் ஆஸ்த்மா அல்லது சளித் தொல்லையால் பீடிக்கப் பட்டு உள்ளனர் என்பது புள்ளி விவரம் சில நேரங்களில் நான் சாலையில் நடந்து செல்வதைக் காணும் பலரும் ஏன் இவர் அழுதுகொண்டு போகிறார் என்று எண்ணி இருந்தால் ஆச்சரியமில்லை.
Syncopy  என்றால் என்னவென்று தெரியுமா. காரணம் தெரியாமல் வீழ்ந்து விடுவதாம். ஒரு முறை அப்படி வீழ்ந்து இருந்ததை முன்னமே கூறி இருக்கிறேன். கடந்த சில மாதங்களாக ஒரு இருமல். அதை எவ்வாறு வகைப் படுத்துவது என்று தெரியவில்லை. தொடர்ந்து இருமல் வரும் . ஏதாவது உண்ணும்போதோ அருந்தும் போதோ புரை ஏறுகிறமாதிரி தொடங்கு மூச்சே நின்று விடும் போல் இருக்கும். என்னை ent ஸ்பெஷலிஸ்டிடம் போகச் சொன்னார்கள். அவர் இதை ஒவ்வாமையால் இருக்கும் என்று கூறி மாத்திரை கொடுத்தார். அதிக பலன் இல்லை. மீண்டுமொரு பொது வைத்திய நிபுணரிடம் காட்டினோம். எனக்கு PFT என்னும் நுரையீரல் செயல் திறமையைச் சோதித்துப் பார்த்தனர் சரியாகவே இருந்தது. இருந்தும் ஒரு puff மாதிரியான மருந்து கொடுத்து. உள்ளே இழுக்கச் சொன்னார்கள் இதுவரை பலன் தெரியவில்லை. ஆனால் அந்த பொது மருத்துவர் நான் எனது இதய சிகிச்சைக்காக எடுக்கும் மாத்திரைகளைக் குறை கூறினார். என் கார்டியாலஜிஸ்டும் அவரும் கருத்து வேறு பாடு கொண்டனர். என் கார்டியாலஜிஸ்ட் எனக்கு 24 மணிநேர ஈசீஜீ எடுக்கும் ஒரு கருவியை (holter monitor) பொறுத்திவிட்டார். அதிலும் எந்தக் குறைபாடும் வெளியாகவில்லை. நான் சென்ற முறை ஆலய தரிசனம் சென்றிருந்தபோது வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம் முடித்து வரும்போது வீழ்ந்து விட்டேன். அதன் பலன் எனக்கு எங்கும் தனியே போக உரிமை இல்லை. கூட யாராவது இருந்தால் என்ன பலன் கிடைக்கப் போகிறது. எனக்கு ஒரு முறை அமெரிக்கா போய் வர வேண்டும் என்னும் ஆசை உண்டு. அது நிறைவேறும் போல் இருந்த சமயம் இந்தமாதிரி syncopy ஆல் அவதிப்பட்டதால் என் மனைவியும் மக்களும் தடா போட்டு விட்டனர். எப்படியோ பல உபாதைகளுடன் மகிழ்ச்சியாகவே இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். பிறந்தவர் இறந்துதான் ஆகவேண்டும் அதையே நினைத்துக் கவலை படுவதில் அர்த்தமில்லை என்றே தோன்றுகிறது .என்ன சில நேரங்களில் நம்மால் பிறருக்குக் கஷ்டம் கொடுக்கிறோமே என்று தோன்றும் .நான் என்னைச் சார்ந்தவரிடம் அடிக்கடி கூறுவது THAT WHICH CAN NOT BE CURED MUST BE ENDURED. கவலைப் படுவதில் பலன் இல்லை. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலம் சில உபாதைகள் குறித்த ஒரு விழிப்புண்ர்ச்சி வாசகர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன் 
இந்த உபாதைகள் எனக்கு தனித்தனியாகவோ ஒன்றாகவோ வந்து கொண்டிருந்தது. ஆகவே கூறிய வரிசைகளில் மாற்றம் இருக்கலாம். இப்போதும் இந்த வித்தியாசமான இருமல் விட்டொழிந்தபாடில்லை. மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கிறேன் கண்களில் புரைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டேன் இருந்தும் இடது கண்ணில் ஏதோ நிழலாடுவதுபோல் வரும். படிக்கவும் தட்டச்சு செய்யவும் சற்று கஷ்டமாக இருக்கும். அது வயோதிகத்தினால் வருவது என்று சொல்கிறார்கள். காதும்கேள்வித்திறனை இழந்து கொண்டு வருகிறது. ஒரு செவிட்டு மெஷின் வாங்கிப் பொருத்திக் கொள்ள வேண்டும்வாழ்க்கையை அனுபவிக்க எல்லா உறுப்புகளும் செவ்வனே செயல் படவேண்டும். குறைகள் இருந்தாலும் சமாளித்துப்போகிறேன். இன்னும் வளர்த்தினால் யாரும் படிக்க வர மாட்டார்கள். ஆகவே முற்றும் கார்டு போடுகிறேன் பதிவு முடிகிறது. ஆனால் உபாதைகள் தொடர்கின்றன. . 
.   
               .  



37 comments:

  1. அதுதான் வாழ்க்கை என்று பதிவைப் படிக்கும் நான் சுலபமாகச் சொல்லி விடலாம். ஆனால் அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் கஷ்டம். வலியோடு வாழப் பழகி விட்டோம்!

    :))))))

    ReplyDelete
  2. நிச்சயமாக உங்களின் மருத்துவம் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் தொடர்பான அனுபவங்கள் வாசிப்பவர்களுக்கு உறுதுணையாக இருக்கும்.
    பெரும்பாலும் உயிரைக் காட்டி உடனே நாங்கள் சொல்வதைச் செய். இல்லாவிட்டால் அவ்வளவுதான் என்று மிரட்டுவது பெரும்பாலான மருத்துவர் தர்மமாகப் போய்விட்டது.
    ஆறுமாதம் முன்னால், ஓரிரவு நெஞ்சு கனப்பதுபோல் ஒரு உணர்வு.
    நான் செய்த தவறு சாதராண மருத்துவரிடம் போகாமல் நகரத்தின் இதயத்திற்கான சிறப்பு மருத்துவமனைக்குச் சென்றதுதான்.
    அதுவும் பைக்கை எடுத்துக் கொண்டுதான் சென்றேன்.
    பெரிதாக வலி யொன்றும் இல்லை.
    அங்கிருந்த மருத்துவர் என் வீ்ட்டுத் தொலைபேசி எண்ணைப் பெற்று வீ்ட்டிற்குப் பேசிவிட்டார்.
    வந்தவர்களிடம் எனக்கு இரண்டு அட்டாக் வந்துள்ளதாகவும் மேற்சிகிச்சையை உடனே தொடங்கவேண்டும் இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து என்றும் கூறி 25000 ரூபாய் வாங்கிவிட்டார்கள்.
    நான் ஒன்றுமில்லை என எவ்வளவோ மறுத்தும் உறவுகளின் கண்ணீர்முன் உடன்பட வேண்டியதாயிற்று.
    இதயத்தின் அடைப்பை நீக்க ஏற்றப்பட்ட மருந்தில் சற்று நேரத்தில் உடல் தூக்கிப் போட ஆரம்பித்துவிட்டது.
    பின் அதை நிறுத்திவிட்டு வேறு மருந்தை ஏற்ற ஆரம்பித்தார்கள்.
    காலையில் வந்த நிபுணர், ஆஞ்சியோ அது இது என்றார்.
    நான் முற்றிலும் மறுத்துவிட்டேன்.
    அதைக் கேட்டு அவர்கள் செய்த மிரட்டல் இருக்கிறதே!
    நன்றாய் இருப்பவர்களுக்குக் கூட அதைக் கேட்டால் நெஞ்சுவலி வந்துவிடும்.கடைசியில் என் உயிருக்கு ஏதாவது ஆனால் நானே பொறுப்பு (??? எப்படி இருக்கிறது ) என்று எழுதிவாங்கிக் கொண்டுதான் விட்டார்கள்.
    நிறுத்தி இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு நானே ஓட்டிய படி வீடுவந்தேன்.
    பிறகு வேலூர் சிஎம்சி யில் பார்த்த போது முதற் பார்வையிலேயே அங்கிருந்த ஜூனயர் டாக்டரே சொல்லிவிட்டார். உங்கள் இதயத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று.
    இருந்தும் விடாப்பிடியாக எல்லா டெஸ்டையும் எழுதி வாங்கிச் செய்து ஸீனியர் டாக்டரைப் பார்த்த பொது அவர் புன்னகைத்தபடி சொன்னது,

    “ கோளாறு உங்களுக்கு இல்லை.
    அது உங்களைச் சிகிச்சை செய்த மருத்துவருக்கு உள்ளது“என்று

    மனோதைரியம் அற்ற உலக அனுபவமற்றவர்கள் இதுபோன்ற மருத்துவர்களிடம் சிக்கினால் என்னாவர்கள் என்பதை நினைக்கவும் முடியவில்லை.
    உங்களின் பதிவு நிச்சயம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் உறைந்து கிடக்கும் இது போன்ற அனுபவங்களை உருகச் செய்யும்.
    நன்றி

    ReplyDelete
  3. உபாதைகள் பலவிதம் 2-ம் -3-ம் படித்தபிறகு, நான் குறிப்பிட்ட Healer Baskar book-ஐ தாங்கள்அவசியம் படிக்க வேண்டியவர் என்ற எண்ணமே மேலிடுகிறது...

    மாலி

    ReplyDelete
  4. இதுதான் வாழ்க்கை என்றும் பிறந்தவர் இறக்கத்தான் வேண்டும் என்றும் எளிதில் சொல்லிக் கடக்க முடியும்... அதை அனுபவிப்பவர் அவராக இல்லாத பட்சத்தில்...
    ஆனால் இப்படிப்பட்ட வலிகளை அனுபவிக்கும் போதுதான் தெரியும் இந்த வாழ்க்கை ஏன் என்று....
    தாங்கள் சுலபமாகக் கடந்து சென்றாலும்... வாலி படத்தில் விவேக் சொல்லும் நகைச்சுவை போல் இது... அது என எல்லாம் சொன்னாலும்... படிக்கும் எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது ஐயா...
    உடல் நலம் பார்த்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  5. உங்கள் தன்னம்பிக்கை என்னை வியக்க வைக்கிறது,நானும் தொடர்கிறேன் :)

    ReplyDelete

  6. பதிவு முடிகிறது. ஆனால் உபாதைகள் தொடர்கின்றன...
    ஐயா விசயம் படிப்பதற்கு வேதனையாக இருந்தாலும் அதையும் நகைச்சுவையாக சொல்லும் தங்களது அனுபவம் யாருக்கும் வராது காரணம் தன்னம்பிக்கை நீங்க நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. //பதிவு முடிகிறது. ஆனால் உபாதைகள் தொடர்கின்றன..//

    தங்கள் மனோதிடம் வியக்க வைக்கின்றது..

    உபாதைகள் குறைய வேண்டும். பதிவுகள் தொடர வேண்டும்..

    தங்களின் உடல் நலத்திற்காக வேண்டிக் கொள்கின்றேன் .. ஐயா!..

    ReplyDelete
  8. பதிவின் இறுதி அடிகள் தங்களது தன்னம்பிக்கையை வெளிப்படுத்துவதோடு தங்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது இன்னமும் உள்ளது என்பதை தெளிவுபடுத்தியது.

    ReplyDelete
  9. மன உறுதியே அனைத்திற்கும் துணை என்பது வாசிக்கும் அனைவருக்கும் பாடம்...

    ReplyDelete
  10. தங்களைப் போல மன உறுதி இருந்தால் அனைவரும் உடல் உபாதைகளை சமாளிக்கலாம், வெல்லலாம் ஐயா.
    மருத்துவத் துறையில், பல காலம் பலவித அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன், பல வித வணிக மருத்துவர்களால் பாதிக்கவும் பெற்றுள்ளேன்
    மருத்துவரை நம்பாமல், நம்மை நாமே நம்பினால், நலம்பெறுவோம் என்பதே என் கனிப்பு
    நன்றி ஐயா

    ReplyDelete
  11. // எனக்கு BP கிடையாது சர்க்கரை நோய் கிடையாது கொலோஸ்திரல் கிடையாது இருந்தும் ஏன் இந்த அடைப்பு என்பது புரியாத புதிர். //


    ஆம் சார் பல சமயங்களில் இப்படித்தான் வாழ்க்கை முரணாகின்றது. இவை எல்லாம் இருக்கும் நபருக்கு அடைப்பு வரவே வராது. அதே போன்று குடிப்பவர்கள், புகைப்பவர்களுக்கு இதய நோய் லிவர் நோய், லங்க்ஸ் பாதிக்கப்படும் என்றும் சொல்லுவோம். சரிதான்....ஆனால் குடிப்பவர்கள் எல்லோருக்கும் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் குடிக்காமல், புகைக்காமல் , உணவு கட்டுப்பாடு இருப்பவர்களுக்கும், 50 லியே ஹார்ட் அட்டாக் வந்து விடுகின்றது. மகன் சொல்லுவான் சில உபாதைகளுக்கும், நம் வாழ்நாளுக்கும் நெருக்கமன தொடர்புகள் இருந்தாலும், பல உபாதைகளுக்கும் வாழ்நாளுக்கும் அத்தனை தொடர்புகள் இருப்பதில்லை. மருத்துவர்கள் கையிலேயே கூட அது இல்லை. அதுதான் வாழ்க்கையின் முரண் என்பான்.

    சார், நீங்கள் காதுமெஷின் வாங்கப் போவதென்றால் மிகக் கவனமாக இருங்கள் சார். நானும் இந்த வயதிலேயே உபயோகிப்பவள் என்பதால் சொல்லுகின்றேன். எனது ஸ்டேப்பியஸ் போன் மந்தமானதால் இரு காதுகளிலும் கிட்டத்தட்ட ஈக்குவல் லாஸ். பாதி லாஸ். என் தம்பிக்கும் இருந்து அவன் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டான் ஆனால் பயன் இல்லை. அதனால் நான் அதை மேற்கொள்வதில் தயக்கம். மெஷின் காரர்ர்கள் செமையாக மார்கெட்டிங்க் டெக்னிக் உபயோகித்து மிக உயர்ந்த விலையில் உள்ள மெஷினை நம்மிடம் தள்ளப் பார்ப்பார்கள். மட்டுமல்ல அவர்கள் பேச்சு மிகவும் மயக்குவதாக இருக்கும். நமக்கு எது கம்ஃபர்டபிளாக இருக்கு என்பதை அவர்கள் கருத்திக் கொள்வதில்லை.

    உங்கள் உபாதைகளை வாசித்த பிறகு - உங்கள் மனோதிடம், வாழ்க்கையை எதிர்கொள்ளும் தைரியம், பாசிட்டிவ் எண்ணங்கள் மிகவும் எங்களைக் கவர்ந்ததால், நானும் ஒரு பதிவு இடலாம் என்றிருக்கின்றேன். எனது உபாதைகளை அம்பலப்படுத்த அல்ல, ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே..... உங்கள் இடுகை அதற்கு வழிவகுத்தமைக்கு மிக்க நன்றி சார்....

    தங்கள் உடல் நலம் சிறந்து நீங்கள் நெடுநாட்கள் எங்களுக்கு எல்லாம் ஒரு முன்னோடியாக இருந்து எழுத வேண்டும் என்று ஒரு சுயநலத்தில் பிரார்த்தனைகள்!

    ReplyDelete
  12. உடல் துன்பங்களை பொருட்படுத்தாது
    வாழக் கற்றுக் கொண்டீர்கள் என்பது தெரிகிறது.

    எந்த துன்பம் வந்தாலும் துவளா மனம் வரப்பிரசாதம்.

    அதை எண்ணியே கவலைபட்டுக் கொண்டு, மற்றவர்களையும் துன்பபடுத்தாமனம் இருப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    சரியான புரிதல். நான் சொல்ல விரும்புவதுஎன்னவென்றால் முடிந்தவரை நம் உடலை நம் கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். அட் லீஸ்ட் முயற்சியாவது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நமக்கும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும்தான் தொல்லை. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ ஊமைக்கனவுகள்
    என்பதிவின் மூலம் நான் அஜாக்கிரதையாக இருக்கச் சொல்லவில்லை. அனாவசியப் பயம் கூடாது என்பதுதான் வாழ்க்கையில் ஒரு முறைதான் சாவு. தினம் தினம் சாக வேண்டுமா பயத்தால். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ V.Mawley
    புத்தகத்தைப் படிக்கிறேன் சார். நன்றி.

    ReplyDelete

  16. @ பரிவை குமார்
    ஐயா, நான் இப்பதிவுகளின் தொடக்கத்திலேயே கூறியது போல் பதிவர்கள் ஒரு சிலரதுபதிவுகள் அச்சம் மூட்டுவதாய் தோன்றிற்று. அம்மாதிரி பயம் ஏதும் வேண்டாம் என்று கூறவே அனுபவப் பட்ட உபாதைகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன் சாவு ஒரு முறைதான் .பயத்தினால் ஏன் செத்து செத்து வாழவேண்டும். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  17. @ பகவான் ஜி
    பாராட்டுக்கு நன்றி. இடுக்கண் வரும்போது உங்கள் பதிவைப் படித்தால் அது பறந்து போகும்.

    ReplyDelete

  18. @ கில்லர்ஜி
    ஐயா நான் வேண்டியகாலம் வாழ்ந்துவிட்டேன்.இருக்கும் வரை வாழ்க்கைய தன்னம்பிக்கையோடு வாழ்வது நல்லதல்லவா. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    ஐயா இம்மாதிரி உபாதைகளை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கை தானாகவே வருகிறது. வாழ்த்துக்களுக்கும் வேண்டுதல்களுக்கும் நன்றி.

    ReplyDelete

  20. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நான் கற்றுக்கொண்டதைப் பகிர்ந்தேன் அவ்வளவுதான். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ திண்டுக்கல் தனபாலன்
    நமக்கு வரும் உபாதைகளை எதிர்கொள்வது வேறு. நம் உற்றாருக்கு வருவதை எதிர் கொள்வது வேறு. உங்கள் திடம் பற்றி நான் எண்ணி வியந்ததுண்டு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  22. @ கரந்தை ஜெயக்குமார்
    எனக்கு நீங்கள் எழுதி இருந்த பதிவு நினைவுக்கு வருகிறது. அதில் உங்கள் துணைவியாரின் உபாதை பற்றி எழுதி உங்கள் அனுபவங்களையும் கூறி இருந்தீர்கள். அதையே திரு தனபாலனுக்குக் கொடுத்த மறு மொழியில் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  23. @ துளசிதரன் தில்லையகத்து
    உங்கள் பின்னூட்டம் சில நேரங்களில் என்னை கன்ஃப்யூஸ் செய்கிறது. நீங்களும் கீதாவும் சேர்ந்து எழுதுவதால் என்று நினைக்கிறேன். எனக்கு காது மெஷின் வாங்குவதில் ஆர்வமில்லை. மொபைலில் இருக்கும் பாட்டுக்களைக் கேட்கக் கூட எனக்கு இயர் ஃபோன் வைத்துக் கொள்ளப் பிடிக்காது. ஆனால் இப்பொழுது கேட்கும் திறன் குறைவதால் பல இடங்களில் என்னை ஒரு இடியட் போல உணார்கிறேன். மெஷின் வாங்கும் போது உங்கள் அறி விரைகள் நினைவுக்கு வரும்

    ReplyDelete

  24. @ கோமதி அரசு. வருகைக்கு நன்றி. நான் என்னைப் பற்றிக் கவலைப்படுவதில்லையே தவிர என்னைப் பற்றி என் மனைவியும் மக்களும் நிறையவே கவலைப் படுகிறார்கள். இந்தக்கவலையால் என் சுதந்திரம் பல இடங்களில் பறி போகிறது.

    ReplyDelete
  25. தாங்கள் நெஞ்சுரம் கொண்டவர் என்பது தங்களின் பதிவு உணர்த்துகிறது. தங்களின் மனோ தைரியத்திற்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
  26. சற்று திடுக்கிட வைத்தப் பதிவு.

    எதையும் தாங்கும் இதயம் உங்களது.

    ReplyDelete

  27. @ வே.நடன சபாபதி
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  28. @ A.Durai
    உடல் உபாதைகளைக் கண்டு பலரும் துவண்டு விடுகின்றனர். அதைப்போக்க என்னையே முன்னிலைப்படுத்தி ஒரு அனுபவப் பதிவாக எழுதினேன். நீண்ட நாள் இடைவெளிக்குப் பின் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  29. சார் இங்கு கருத்துரை இட்டது கீதா.

    பொதுவாக இருவரும் கலந்து ஆலோசித்து பொதுவாகவே இடுவோம்.

    கீதா மட்டும் என்றால் பெயர் இடுவதுண்டு. இதில் அது தெரியாமல் விடுபட்டிருக்கிறது. சார் மன்னித்து விடுங்கள்

    ReplyDelete
  30. மனதுக்குப் பிடித்த வேலைகளில் ஈடுபட்டு உபாதைகளின் நினைப்பை மறக்க (diversion of the mind)முயற்சி செய் என்றார்.

    ReplyDelete

  31. @ துளசிதரன் கீதா
    அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன் தெளிவு படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete

  32. @ Gopal Uttam Ho
    முதல் வருகைக்கு நன்றி. உங்களுக்குப் பிடித்த வாக்கியமே பின்னூட்டமாகி விட்டதா.?

    ReplyDelete
  33. உபாதைகள் தொடர்கதை போல ஐயாவின் மனவலிமை சிந்திக்க வைக்கின்றது.

    ReplyDelete

  34. @ தனிமரம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  35. உங்கள் மனோபலம் போற்றத் தக்கது. உபாதைகள் குறையப் பிரார்த்தனைகள். பொதுவாக மருத்துவரிடம் செல்லும் முன்னர் அவர் சரியான நபரா என விசாரித்துக் கொண்டே போக வேண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் ஆஸ்பத்திரியின் வருமானத்துக்காக ஐசியூவில் கூட வைத்து விடுகிறார்கள். நமக்கும் எதுவும் சொல்வதில்லை; புரிந்து கொள்பவர்கள் சிலரே. ஐசியூ என்றால் பயந்து விடுகிறோம். :(

    ReplyDelete
  36. இந்நிலை மாற வேண்டும். நோயின் தன்மை குறித்து நோயாளிகளுக்கு மருத்துவர்கள் விளக்கிக் கூற வேண்டும். ஓரளவுக்குத் தான் மேற்கொள்ளும் சிகிச்சை முறை பற்றியும் சொல்லலாம். அப்போது தான் மருத்துவரிடம் நம்பிக்கை வரும்.

    ReplyDelete
  37. @ கீதா சாம்பசிவம்
    பகுதி இரண்டில் நான் கூறி இருந்தேன்.மலம் கருப்பாய்ப் போகிறதென்று கூறி ஒரு பிரபல மருத்துவ மனைக்குச் சென்றேன் என்ன ஏது என்று கேட்காமல் சோதனை என்னும் பெயரில் எண்டாஸ்கோபி எடுத்து அட்ரினல் இஞ்செக்‌ஷன் என்று ஒன்றை போட்டு என்னை நான்கு நாட்களுக்கு ஐ சி யு வில் சேர்த்தார்கள் வங்கி இருப்பில் கணிசமான தொகை குறைந்தது. பயம் என்பது ஆகும் செலவைப் பார்த்தும் ஆகிறதுநம் அவசரத்துக்கும் உடல் நலனுக்கும் நம்மால் ஏதும் பேச முடிவதில்லை. டாக்டர்கள் நம்மிடம் டிஸ்கஸ்செய்தால் ஒரு வேளை மாற்று வழி இருந்திருக்கலாம். வருகைக்கு நன்றி மேடம் .

    ReplyDelete