புதன், 29 ஏப்ரல், 2015

தேவன் மஹாதேவன்


                                       தேவன் மஹாதேவன்
                                       ------------------------------------


VINGHIP   POTTIYA  HIRUTHAYAMUMAI   ஆங்கில  எழுத்துக்களில் எழுதப்பட்ட மலையாள  கடிதத்தின்  ஆரம்பம். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டது.
பழைய கடிதங்களைப் பாதுகாத்து அதைப் படித்து அந்தக் கடிதங்களின் பின்னணிகளை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில் சில மணி நேரம் வாழ்வது வாசுவின் பொழுது  போக்கு .இந்தக் கடிதத்தை எழுதிய  தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது  வாசுவுக்கு.  தேவனும் வாசுவும் பழகிய நாட்கள்  என்னவோ கொஞ்சம்தான்.இரண்டு  மாதத்துக்கும் சற்று ஏறத்தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இரண்டு மாத நட்பை ஞாபகப்படுத்திப் பார்க்க முடியுமா.. ?ஏன்  முடியாமல் ..? பழைய கடிதங்களைப   பாதுகாத்து  வைத்திருக்கிறானே ... ஆனால் தேவனோ  ...?
பெங்களூரில்  வேலைக்குச் சேர்ந்த  அந்தக் காலத்தில் தங்க நேர்ந்த அந்த லாட்ஜில் "த்ரீ மஸ்கிடீர்ஸ் "என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர்  வாசுவும் தேவனும் சந்துருவும் , இதில் சந்துரு எல்லோரையும் விட மூத்தவன். ஏதோ ஒரு கம்பனியில்  குமாஸ்தாவாக  இருந்தான். தேவன் வேலை தேடி  கேரளத்திலிருந்து  வந்தவன். வாசு  அப்போதுதான்  ஒரு தொழிலகத்தில்  பயிற்சியாளனாகச சேர்ந்திருந்தான் . மற்றவரை விட  இளையவன்.
"
இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..? எப்படி இருப்பான்..பார்க்க வேண்டும்   போல் தோன்றுகிறதே..! " எண்ணியதை  சொல்லில் கூறி செயலில் காட்டாவிட்டால்  வாசுவுக்கு  தலை  வெடித்துவிடும்போல்  தோன்றியது.
"
இந்த பழைய குப்பைகளையெல்லாம்  மாய்ந்து  மாய்ந்து படிப்பதில் அப்படி என்ன சுகமோ "--வாசுவின் மனைவி  தங்கம் அவன் நினைவுகளைக் கலைத்தாள்
"இந்தக் கடிதத்தைப்  படித்துப்  பாரேன் தங்கம் .முடிகிறதா  புரிகிறதா  சொல். "

"
உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லை என்றால் .. சரி  சரி ..காட்டுங்கள்   VINGHIP   POTTIYA  ...ஐயே .என்ன இது..?இங்கிலீஷில்  இங்கிலீஷுமல்லாமல்  எனக்கு முடியலைப்பா "
"
இங்கே  கொண்டா .நான் படித்துக்காட்டுகிரேன்.  விங்கிப  பொட்டிய ஹிருதயமுமாய்  நிங்களை  விட்டுப் போரேண்டி  வன்னதில் எனிக்கி  கூடுதல்  விஷமிச்சு. ..தேவனுக்குத  தமிழ்  தெரியாது.எனிக்கி மலையாளம்  கொறச்சு  அறியும். அதனால்தான் இந்த முறை.
தேவனைப்  பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது தங்கம். அவன் இந்த விலாசத்தில் இருப்பானா.. ? போய்ப்  பார்க்கலாம்... நீயும் வாயேன் ".

"
அவ்வளவு  தூரம்  பணம்  செலவு  செய்து  போய  அவர்  அங்கே  இல்லாவிட்டால்  எல்லாம்  விரயமாகும்."

"
ஏன்  விரயமாக  வேண்டும் .? நமக்கும் பொழுது  சற்று  மாறுதலாகப்  போகும். ஏற்பாடு  செய்கிறேன். ரெடியாக  இரு. "

பெருங்கோட்டுகா ... வழி திருச்சூர்  என்று  விலாசமிருக்கிறது. எப்படியும் திருச்சூர்  போய  அங்கிருந்து  விசாரித்துப்  போய்க்  கொள்ளலாம். திருச்சூருக்கு  டிக்கெட் புக்  செய்ய வேண்டும்  என்று  எண்ணியவாறே   வாசு  ரெயில்வே   ஸ்டேஷனுக்குப  புறப்பட்டுச்  சென்றான்.
 
"
நீளமாய  கழுத்துள்ள  பெண்கள்  சந்தமாய்  இருக்கும்....அறியோ   வாசு. ?"தேவனின்  குரல்  இப்போதும்  கேட்கிறது.

"
வேலை  தேடி  ஊர்  விட்டு  ஊர் வந்து  பெண்களின்  கழுத்தைப்  பற்றி ஆராய்ச்சி  செய்யாதே. முதலில்  வேலை."

"
ஆமாம், இவன்  பேசற  பாஷை  யாருக்கும்  புரியாது.
இவனுக்கெல்லாம்  எவன்  வேலை  கொடுப்பான் ", சந்துருவுக்கு  தேவன் சொல்வது   புரியாததால்  வரும் கோபத்தில்  சபிப்பான்.

"
அது  எந்தா.. ஆரும்   பணி  தரில்லே..இன்னால்   வேண்டா. ..சந்துரு  எனிக்கி  வேண்டி  ஒன்னும் செய்யண்டா.  ஞான   எங்கனே  எங்கிலும்   ஜீவிக்கும் ".

எப்படியாவது  பிழைத்துக்கொள்வேன்   என்று  சொன்ன தேவனுக்கு  அதை நிரூபிக்க   வேண்டிய  நிர்பந்தம்  கூடிய  சீக்கிரத்திலேயே  ஏற்பட்டது. ஊரிலிருந்து  செலவுக்குப்  பணம்  வரவில்லை. லாட்ஜில்  நெருக்கினார்கள். இல்லை என்றால்  காலி  செய்யச்  சொன்னார்கள்.
தேவனும்  வேறு  வழி இல்லாமல்  அவனுடையப்  பெட்டியை  வாசுவிடம்   கொடுத்து   பத்திரமாக  வைத்துக்கொள்ளும்படியும் , பணம்  கிடைத்ததும்  அதைத்  திரும்பப்  பெற்றுக்  கொண்டு  போவதாகவும்  கூறினான்.

"
தேவா, உனக்கு  நன்றாகத்தெரியும், எங்களுடைய நிலை. சந்துருவின்  பின்னால்  அவன் சம்பாதிப்பதைக்  கொண்டு  வாழ   ஒரு பட்டாளமே   இருக்கிறது. எனக்கோ  பயிற்சி  நேரத்தில் ரூபாய்  முப்பதுதான்  ஒரு  மாதத்துக்குக்  கிடைப்பது. ..இதில் என்னதான்  செய்ய  முடியும்..?"

"
ஏய்ய் .. வாசு  விஷமிக்கண்டா.. எனிக்கி  அறியும். .என்டே  சமயம்  இங்கனேயுண்டு .எந்து  செய்யாம்..?"

அடுத்தநாள்   தேவனின் பெட்டியைப்  பறிமுதல்  செய்ய , லாட்ஜ்  முதலாளி  முயன்றதும் வாசு  அதைக்  கொடுக்காமல்  தகராறு  எழுந்து, போலீஸ்  ஸ்டேஷன்  வரை   தகராறு   போனதும்  வேறு  கதை.
 ரயிலில்  இடம்  பிடித்து   அமர்ந்து, பயணம்  செய்யும்போது அந்த  வாலிப   நாட்களே  வந்தது  போலவும்  நிகழ்ச்சிகள்  எல்லாம்  நேற்று   நடந்தது  போலவும்   வாசுவுக்குத்   தோன்றியது.

”தங்கம் , உன்னைக்  காதலித்துக்  கலியாணம்  செய்து   கொள்ளும்   முன்பே   எனக்கு   ஒரு    காதலி   இருந்தாள்   தெரியுமா  உனக்கு,?"

"
நீங்கள்   ஆயிரம்   பெண்களைப்   பார்த்திருப்பீர்கள் எல்லோரையும்   மனசால்   காதலிக்கவும்  செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது  உங்களை  காதலித்து  இருக்கிறார்களா?”

  "என்னைக்  காதலிக்க  எந்தப்  பெண்ணுக்குத்தான்  கசக்கும்.? ஆனால்  நான்  சொல்லும்  இந்தக்  காதல்  தேவனால்  தடம்  புரண்டு  விட்டது..நாங்கள்  தங்கியிருந்த   லாட்ஜுக்கு  அருகே  ஒரு பால்  கடை   இருந்தது. அங்கு  பால்  வாங்க  ஒரு பெண்   தினமும்  வருவாள். நாங்கள்  இரவு   உண்ட  பிறகு  சில நாட்களில்  பால்  அருந்த  அங்கு   செல்
வோம். அவளை அங்கு   அடிக்கடி   பார்ப்போம் .ஹூம் .!  பார்த்தால்   எனக்கு உடம்பு  ஒரு  மாதிரியாய்  படபடக்கும் , நாக்கு  வறண்டு   பேச்சு  சரியாக  வராது. இதெல்லாம்   காதலின்   வெளிப்பாடுகள்   என்று தேவன்   விளக்கம்  சொல்லுவான். நானும்  அதை   நம்ப   ஆரம்பித்தேன். ஆனால்   அவளிடம்   எப்படிப்   பேசுவது, எங்கு   பேசுவதுஅவள்  பேசுவாளா   ஒன்றும்  புரியவில்லை. தேவன்   இதற்கு  ஒரு  வழி  செய்வதாகக்   கூறி   அபயமளித்தான். "--வாசு  கதைபோல்  விவரிக்க   தங்கத்துக்கும்    சற்றே   உற்சாகம்  பற்றிக்கொண்டது.

"
ஆமாம்.. அப்போது  உங்களுக்கு  என்ன  வயசிருக்கும், ?"
“பதினேழு பதினெட்டு இருக்கலாம்”
“அடப்பாவி...! பிஞ்சிலேயே பழுத்த கேசா.? “  
"இல்லை   தங்கம் ,.உலகத்தையே   புதிசாகப்   பார்க்கும்   வயசு.  எல்லாவற்றையும்   சோதனை   செய்து   பார்க்கும்   வயசு. யாரையும்   உடனே   நம்பும்   வயசு. சந்தர்பபங்கள்   அமைந்திருந்தால் , யார்  கண்டது, ..ஒரு சமயம்  பிஞ்சிலேயே  பழுத்திருக்கலாம்"

"
அது சரி . .அந்தப்பெண்ணுக்கு எவ்வளவு  வயசிருக்கும்   என்ன  பேர்  ஏதாவது   தெரியுமா?”
”அவளுக்கு பதினெட்டு இருபதுவயசிருக்கலாம்.பெயர் தெரியாது,ஆனால் என் மனசுகுள்நான் அவளுக்கு வைத்த பெயர் அகிலா. எனக்கு எல்லாமே இந்த அகிலமேஅவள்தான் என்று தோன்றும் “
“ சீ..! நீங்கள் இப்படிப் பட்டவர் என்று தெரிந்திருந்தால்.....”
“ ஏன்...என்னைக் காதலித்து இருக்கமாட்டாயா....கலியாணம் செய்திருக்க மாட்டாயா..?”
இப்போது அதைப் பற்றி நினைப்பது டூ லேட்.தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும் . இருந்தாலும் இப்போது நோ ரிக்ரெட்ஸ். வருத்தமேதும் இல்லை”  
”எனக்கு  அதுவும்  தெரியும். தேவனைப்  பற்றி  சொல்லிக்கொண்டிருந்தேன் . எப்படியாவது  அந்தப்  பெண்ணைப்  பற்றிய  செய்திகளை  சேகரிக்கப போவதாகக்  கூறினான். வேலை  இல்லாதவனுக்கு  நல்ல வேலை  என்று சந்துரு  கிண்டல்  பேசினான். அடுத்த  நாள் பயிற்சி  முடிந்து  அறைக்குத்  திரும்பும்போது  தேவன்  அங்கு  பொறுமையில்லமல்    எனக்காகக்   காத்திருப்பது   தெரிந்தது. வாசு ..ஆ  பெண்ணின்டே  ஸ்தலம் அறிஞ்சு என்று  கூவினான். பிறகு  அந்த  வீட்டையும்  காட்டினான். வீடு  தெரிந்தவுடன் அந்தப்  பெண்ணைப்  பார்க்காவிட்டால்  தலை  தெறித்து விடும்  போல்  தோன்றும் .அந்த  வீட்டின்  முன்பாக அங்குமிங்கும்  அடிக்கடி  நடப்பேன் வீட்டு  முன்னால்  ஷூவுக்கு  லேஸ்  கட்டும்  சாக்கில்  உள்ளே  ஆராய்ந்து  பார்ப்பேன். ஆனால் என்  கண்ணில்  மட்டும்  அவள் தென்பட  மாட்டாள்

தேவன்  என்னைத்  தமாஷ்  செய்கிறான்  என்று அவனிடம்  கோபித்துக்  கொண்டேன். தேவன்  சொன்னான் , நான்  அங்கு  போகும்  நேரத்தில்  அவள்  எங்கோ  தட்டெழுத்துப்  பயிலச் செல்கிறாளோ   என்னவோ என்று. அதன் பிறகு  அடுத்துள்ள  தட்டெழுத்துப்  பயில்விக்கும்  இடங்களுக்கு  முன்பு  நின்று  நோட்டம்  விட   ரம்பித்தேன். அவள் என்  கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது  நடந்தது. " என்றஒரு  சஸ்பென்ஸ்  கொடுத்து  நிறுத்தினான்  வாசு.

"என்ன  பெரிய சஸ்பென்ஸ் ...ஒரு  நாள்  அவளைப்  பார்த்தீர்கள் , பல்  இளித்தீர்கள்   அவள்  உங்களைக் கண்டு   கொள்ளவே இல்லை .பிறகு  சேச்சே ...இந்தப் பழம்  புளிக்கும்    என்று  வந்து  விட்டீர்கள் ..அவ்வளவுதானே "  என்று கிண்டல் செய்தாள்   தங்கம்.
 
"
அதுதான்  இல்லை. அவளுடைய  பெயரை  அறிந்து   வருகிறேன்  என்று  சொன்ன  தேவன் , அவர்கள்  வீட்டின்  அருகே  விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு   சிறுவனைக்  கூப்பிட்டு ,நிறைய  மிட்டாய்களைக்  கொடுத்து   அந்தச் சேச்சியின்  பெயரைக்  கேட்டு   வா --என்று  அனுப்பி   இருக்கிறான். அந்தப்  பையன்  வீட்டிற்குள்  சென்ற   சற்று   நேரத்
தில்  அந்தப்  பெண்  வெளியே  வந்திருக்கிறாள் .அந்தப்  பையன்  தூரத்தில்  இருந்த  தேவனைக்  காட்டி  ஏதோ சொல்ல , அந்தப் பெண்  உள்ளே சென்று  மறுபடியும்  வெளியே  வந்தபோது, பெரிய  மீசை  வைத்த  இரண்டு  ஆட்களும்  கூட  இருந்தனர். தூரத்தில்   நின்று  பார்த்துக்  கொண்டிருந்த  தேவன்   மெல்ல  நழுவப்  பார்க்க    ஓடி  வந்து  அவனை
பிடித்து  நன்றாக  தர்ம  அடி  கொடுத்து  அனுப்பி  இருக்கிறார்கள் . பாவம், தேவன்  முகமெல்லாம்  வீங்கி  உதடு  காயப்பட்டு  ரத்தம்  தெரிய  வந்ததை  நிறையப்  பேர்   பார்த்திருக்கிறார்கள் . அவமானமாக  இருந்ததுஎன்று  சொல்லிச் சொல்லி   மாய்ந்தான்  பாவம், என் காதலுக்காக  அடி  வாங்கினான் " --என்று  பெருமூச்சுடன்  கூறி  நிறுத்தினான் வாசு.

“அவர் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள் புடைக்கவில்லையா?”
“அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்” 
 "
திருச்சூர்  சென்று  அங்கு  ஒரு  ஹோட்டலில்  தங்கி , ஒரு நாள் இருந்து  பிறகு , பெருங் கோட்டுக்கா  என்ற இடம்  எங்கு  இருக்கிறது  என்று  விசாரித்து  அங்கு  சென்றால்  வாசுவிற்கு  முதலில்  ஒன்றுமே  புரிய வில்லை. அந்த  இடத்தில் ஒரே  கூட்டமாக  இருந்தது. அது  ஒரு ஆசிரமமாம். அதன்  தலைவர்  பிரம்ம  தேவ  சுவாமிகள்  அன்று  காலையில்தான்  இந்த  பூத  உடலை விட்டு உயிர்  நீத்தாராம்.  அவருக்கு  மரியாதை  செய்ய  கூட்டம்   கூட்டமாக  மக்கள்  சென்று  கொண்டிருந்தனர்.  வாசுவுக்கு   சற்றே  ஏமாற்றமாக  இருந்தது.  சரி  வந்ததுதான்  வந்தோம்  அந்த ச்வாமிகளையாவது  வணங்கி செல்லலாம்  என்று  அருகே  சென்றால்......
 
வயதான  தேவன்தான்  பிரம்மதேவ  சுவாமிகள்.  அருகில்  இருந்தது  யார்..? வயதான  தோற்றத்தில்  அகிலாவா..?   வாசுவின்  அகிலாவா...?!





என்ன நண்பர்களே கதையைப் படித்தீர்கள் இல்லையா. இதே கதையை சற்றே நீட்டி இரு பாகங்களாகவும் எழுதி இருக்கிறேன் நேரமும் ஆர்வமும் இருந்தால் சுட்டியைச் சொடுக்கிப்பாருங்களேன்
கதை கட்டுரை பாகம் 1 
கதை கட்டுரை பாகம் 2.







'
"


ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஒரு சுய தம்பட்டம்


                                ஒரு சுய தம்பட்டம்
                                 ----------------------------


நான் வலையில் எழுதத்துவங்கி கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஆகின்றன பதிவுகள் அறு நூறைத் தாண்டி விட்டது மனமொரு புறம் அப்படி என்னதான் எழுதிக் கிழித்துவிட்டாய் என்று கேட்கிறது. நானும் திரும்பிப் பார்க்கிறேன் அடாடா .... என்னவெல்லாம் எழுதி இருக்கிறாய் பாலா என்று எனக்கு நானே ஷொட்டு கொடுத்துக் கொண்டேன்  என் எழுத்துக்களை இவ்வாறுதான் இருக்கும் என்று வகை பிரிக்க முடியாது. பல நேரங்களில் பிறருக்குப் பின்னூட்டம் எழுதும் போது ஏறத்தாழ அதே தலைப்பில் நான் என்றோ எழுதி இருப்பது நினைவுக்கு வரும் அதன் சுட்டியும் கொடுப்பேன் பதிவர்கள் பலரும் அவர்களுக்கு என்று ஒரு பாணி வைத்துக் கொண்டிருக்கிறார்கள் சிலர் ஆன்மீகப் பதிவுகள், சிலர் பயணக் குறிப்புகள், சிலர் கவிதைகள், சிலர் வாழ்க்கைச் சரிதங்கள்  சிலர் நகைச்சுவைப் பதிவுகள், சிலர் சிறுகதைகள், சிலர் இலக்கியங்கள் சிலர் அரசியல் என்றவாறு எழுதி இனதைத்தான் எதிர்பார்க்கலாம் என்று கூறிவிடலாம் ஆனால் என் பதிவுகள் நான் பெருமையாகவே சொல்லிக் கொள்வேன் எல்லாச் சுவைகளிலும் இருக்கும் VARIETY IS THE SPICE IN MY POSTS என்று பெருமைப் பட்டுக் கொள்ள முடியும்   பதிவுலகில் நான் different. சிறுகதைகள் கட்டுரைகள் கவதைகள் பயணக் கட்டுரைகள் அனுபவப் பகிர்வுகள், நாடகம்  நெடுங்கதை ஆன்மீகப் பதிவுகள், என் சிந்தனைப்படி ஓடும் எண்ணங்கள் பதிவில் இருக்கும்
அவதாரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் எல்லா அவதாரக் கதைகளும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அந்தக் குறை போக்க நான் எழுதி உள்ள அவதாரக் கதைகள்,அதேபோல் பகவத் கீதையை நம்மில் பலரும் வாசித்திருக்க வாய்ப்பில்லை மொழி காரணமாகவும் நீளம் காரணமாகவும் இருக்கலாம் அந்தக் குறை நீங்க கீதையைத் தமிழில் எழுதி வெளியிட்டிருக்கிறேன் அதற்கு முன்னுரையாகவும் கடைசியில் என் கருத்தாகவும் எழுதி இருக்கிறேன் ராமாயணம் ஆறு காண்டங்களையும் ஒரே வாக்கியத்தில் எழுதி இருக்கிறேன் கிருஷ்ணன் கோபித்துக் கொள்ளக் கூடாது அல்லவா கிருஷ்ணாயணம் எழுதி இருக்கிறேன் . முருகனை வம்புக்கு இழுத்திருக்கிறேன் நீ அப்பாவியாஎன்று கேட்டு பாவைக்கு ஒரு பாமாலை என்று அந்தாதி வடிவில் என் மனைவிக்கு ஒரு பாமாலை  சார்த்தி இருக்கிறேன் மரபு வழிப்படிக் கவிதை எழுத வராவிட்டாலும் வெண்பா எழுதுவது எப்படி என்று
( நான் கவிதை கற்கிறேன்) எழுதி இருக்கிறேன் திருவெழுக்கூற்றிருக்கை என்னும் வகையிலும் எழுதி இருக்கிறேன் கம்ப ராமாயணத்தில் கம்பனுக்கு நாய் என்பதே மதிப்பைக் குறைக்கும்  மதிப்பீடு என்பதைக் காட்ட இலக்கிய இன்பம் எனும் தலைப்பில்கம்ப ராமாயணத்தில் கம்பன் நாய் என்று குறிப்பிட்டு இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறேன் பெண்களைச் சற்று கிண்டல் செய்வது எனக்குப் பிடிக்கும் .அப்படியும் பல பதிவுகள் எழுதி இருக்கிறேன்   கண்ணனின் கேசாதி பாதமும் காதலியின் கேசாதி பாதமும் எழுதி இருக்கிறேன் சுட்டி தேட வேண்டாம் கீழே மீண்டும் இடுகிறேன்
கேசாதி பாதம்---கண்ணன்
------------------------ 
கருநிறம் சுருட்டைமுடி
ரத்தினம் பதித்த தலையணி
மயில் பீலி செருக
வெண்ணிறப் பிறை நெற்றி ,
மேல்நோக்கி இடப் பெற்ற
குறியுடன் முடியும்
நெற்றியும் கண்ணாரக்
கண்டேன் நான் கண்ணனை

விபுவே.!அசைகின்ற புருவங்கள்
அடியில் அருள்தரும் உன் கண்கள்
ஒளிவீசி என் அகம் குளிர்விக்கக்
கண்டேன் நான் கண்ணனை

எடுப்பான நாசி கண்ணாடிக் கன்னங்கள்
சுடரிடும் மகர குண்டலங்கள்  அசைந்தாட,
ஒளிவீசும் முத்துப் பற்கள் செவ்விதழ்களின்
நடுவே பளீரிடப் புன்னகைக்கும் உன் முகம்
கண்டேன் நான் கண்ணனை

இரத்தினம் பதித்தக் கை வளைக் குலுங்க
செந்தளிர் விரல்கள் மீட்ட
வேணுகானம் காற்றில் தவழ
நாத கீதந்தனில் எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை

மென் கழுத்தில் மணிமாலைகள்
மலர்மாலைகள் தொங்க
நிற மாலைகளில் வண்டினம் வந்தாடக்
கண்டேன் நான் கண்ணனை

சந்தண மணம் பரப்பும் உன்
திருமேனியில் உலகமே  ஒன்றியிருந்தும்
மெல்லிடையோய் பொன்னிறப் பட்டாடையுடன்
கதிர் பரப்பும் மணி அரைஞாணின்
சலங்கைகள் சல சலக்கக் கண்டு
நீலவண்ணக் கண்ணா எனை மறந்து
கண்டேன் நான் கண்ணனை


அழகு தொடை இரண்டும் பருத்தவை
அழகுடன் உறுதியும் கலந்தவை
மனம் மயக்கும் கலங்கடிக்கும்
எனவே பட்டாடை மறைத்தனவோ
காணும் கணுக்கால்பிடித்து வணங்கக்
கண்டேன் நான் கண்ணனை

உன் கழலடி தொழலே இன்பம்
அறியாமையில் மூழ்கியவர்களை
மந்தார மலையை உயர்த்தும் ஆமைக்கு
ஒப்பாக உள்ளது உன் நுனிக்கால்
அடைக்கல மடைந்த  என் அறியாமை
துன்பங்கள் களைய வேண்டியே
கண்டேன் நான் கண்ணனை

குருவாயூரின் தலைவனே அருட்கடலே
கிருஷ்ணா.! உன் உறுப்புகளில் திருவடிகளே
சிறந்தவை மோட்சம் தருபவை தலைவைத்து
பற்றவே வந்த எனைக் காத்தருளக்
கண்டேன் நான் கண்ணனை

கேசாதி பாதம் ---காதலி
----------------------
வெங்காய சருகு சேலை
தலைப்பு காற்றில் படபடக்க
வெண்சங்குக் கழுத்தில் கருமணியில்
ஒற்றை டாலர் ஒளிவீச பவனிவரும்
நீ நடந்து வரும் அழகில் மதி மயங்கி
உன்னை நான் எதிரே கடந்து செல்கையில்
படபடக்கும் உன் கண் இமைகள் என்ன
பட்டாம் பூச்சிகளா பாவையே சொல் நீயே.
சிறிதே செம்பட்டையான கூந்தல் காற்றில்
புரள, எடுப்பான நாசி, இரு ஓரங்களில்
பெரிய வளையங்களுடன் காதுகள்
 புண்ணியம் செய்தவை; சிகையின் முத்தச்
சுருள்கள்(Kiss Curls)இனிதே வருடக் கொடுத்து வைத்தவை.
 உச்சந்தலை தொடங்கி உன் அழகை
ரசிக்க என் கண்கள் உன் உடல் மேய
அநிச்சையாயுன் கைகள் மாராப்பை நாட



எனக்கோ மறைக்க முயல்வதைக் காணத் துடிப்பு
சாயாத கொம்பு இரண்டு தலை நிமிர்ந்து பாயாது
என்றாலும் மங்கை உன் மென்
நடையின் சிறு அதிர்வில் குலுங்கும்
இரு கொங்கைகள் கீழ் இருக்கும் இடுப்பின்
அழகைக் கூட்டிக் காண்பிக்கிறதோ?
துகில் மறைக்கா அந்த இடைப் பகுதியின்
வழுக்கலில் விட்டு விட்டுக் காணும்
தொப்புள் கொடியும் சுண்டி இழுக்குதே மனசை.
அடியொன்று எடுத்து வைக்க பிடியானையின்
மதர்ப்பு, இருந்தாலும் பாதம் நோகுமோ
அந்தப் பூமிக்குத்தான் வலிக்குமோ
என்னவாயிருந்தாலும் பாதசரம் கிணு கிணுக்கையில்
உன் கேசாதி பாதக் காட்சியில் திளைக்கிறேன்
பாவையே எனை நான் மறக்கிறேன்.

சில கேட்ட கதைகளை சிறார்கள் தெரிந்து கொள்ள வேண்டி  கருத்துடன் சில பதிவுகளெழுதி இருக்கிறேன் மாதிரிக்கு ஒன்று

சிறுதுளி பெரு வெள்ளம்

          பாடுபட்டு  உழைத்து   சொத்து
          
பல  லட்சம்  சேர்த்தும்  கூடவே
          
கொண்டா  செல்ல  முடியும்.
          
படுக்கையில்  விழுந்தது   பெரிசு
         
கேட்டதும்  பதறிய  பிள்ளைகள்
          
ஐயோ  என்றலறி  வந்தனர்.

ஐயோ  என்றழைக்காதீர், அவள்  கணவன்
வருமுன்னே  என்சொல்  கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு  பல விளைக்காமல்
கட்டிக்காத்து  பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.

          
மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
           
பண்டொரு  நாள்  பாகம்  பிரிப்பதில்
          
பக்கத்து  வீட்டில்  ஏற்பட்ட  சிக்கல்
          
இருவரும்  அறிந்த  ஒன்று

இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப்  பகிரப  பசுவின்
முன்பாதி  முன்னவனுக்கும்
பின்பாதி   சின்னவனுக்கும்
தென்னையின்  தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம்  தம்பிக்கும்  என்று
ஆளுக்கொரு  பாகம் அழகாகப்  பிரித்தனர்

          
முன்னவன் புல் கொடுத்து  மாடு வளர்த்து
           
நீர்  வார்த்து  மரம் வளர்த்து
           
வந்த  பலன்  பின்பாகப்  பாலும்
           
தலைப்பாக  தேங்காயும  பாங்குடனே
           
அலுங்காமல்  பெற்றான்  இளையவன்

நேர்ந்த  கதை  நன்றாக  அறிந்திருந்தான்  அண்ணனும்
சொத்ததனைப்  பிரிப்பதில் இருக்காது  சிக்கல்
இருப்பதென்ன  ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப்  பேச்சு  வார்த்தை  வேண்டாம்
இருப்பதோ  ரொக்கம்  சரிபாதி  பிரிப்போம்  என்றான்

            
மூத்தவன்  நீ  பாவம்  சம்சாரி -சொத்தில்
            
எனக்கு  வேண்டாம் சரிபாதி.
            
இன்றொரு பைசா, நாளை இரண்டு,
            
மறுநாள்  நான்கு,என்று நாளும் ,
            
இரட்டிப்பாக்கி  தினம் தினம் ஒரு மாதம்
            
நீ  தரும் பைசா போதும்
            
மற்றதைப் பாவம் நீயே  அனுபவி
            
என்றே நைசசியம் பேசிய
            
தம்பியை  நம்பி  ஏமாந்த  அண்ணன்
             
சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.

பாரதி காலனை அருகில் வாடா என்றழைத்துக் கவிதை எழுதி இருந்தான் ஆனால் நான் நிஜமாகவே காலனைச் சவால் விட்டு அழைத்ததையும் எழுதி இருக்கிறேன் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று கேட்டு.
சுயதம்பட்டம் அடித்துக் கொள்வதில் மிகக் குறைந்த பதிவுகளையே உதாரணம் காட்டி இருக்கிறேன்  போதும் உன் பிரதாபம் என்று யாரோ சொல்வது கேட்கிறது
 நிறுத்திக் கொள்கிறேன் சில பதிவுகளுக்குச் சுட்டியில் சொடுக்கினால் பதிவு வரும் (வாசகர் தேடல் சுமையை குறைக்க)வாசித்து மகிழலாம்