Sunday, April 10, 2016

Just wondering


                                                  Just  wondering
                                                  --------------------

ஒரு விஷயம் என்னை ஆச்சரியத்துடன் சிந்திக்க வைக்கும். இப்பூவுலகில் கோடானுகோடி மக்கள் ஆண் பெண் என்று இருக்கிறார்கள். உயரமானவர்கள், குட்டையானவர்கள்,கட்டையானவர்கள், ஒல்லியானவர்கள், சிவந்தவர்கள், கருத்தவர்கள், மாநிறத்தவர் என்று பல இடங்களில் பலவிதமாக வாழ்பவர்கள். இவர்கள் எல்லோருக்கும் ஆணுக்குப் பெண் என்று ஜோடிகள் இருக்கின்றன. 90% மேலானவர்கள் திருமணம் செய்து கொண்டு அவரவர் வம்ச விருத்தியில் ஈடுபடுகின்றனர். இதில் ஆச்சரியப் படுவதற்கும் சிந்திப்பதற்கும் என்ன இருக்கிறது என்றுதான் தோன்றும். இந்த ஜோடி சேர்வதுதான் என்னை ஆச்சரியப் படுத்துகிறது. ஒவ்வொருவருக்கும் அவருடைய ஜோடி பற்றிய எண்ணங்கள்/கனவுகள் நிறைவேறுகிறதா.?சமூகத்தில் எத்தனையோ பொருத்தங்கள் பார்க்கப் பட்டு திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு மூன்றாம் மனிதனாய் இருந்து இந்த ஜோடிகளைப் பார்க்கும்போது ,அவரவர் எதிர்பார்ப்புகள்தான் என்ன, அவை எல்லாம் ஈடேறி விடுகிறதா, என்றெல்லாம் சமயங்களில் நான் நினைப்பதுண்டு.

எனக்கு நெருங்கிய ஒரு உறவினர். நன்றாகப் படித்தவர். இப்போது சினிமாக்களில் வரும் ஹீரோக்களை விட லட்சணமாகவும் அழகாகவும் இருப்பார். அவருக்குத் திருமணம் செய்வது குறித்து முயற்சிகள் பல எடுக்கப் பட்டன. அவர் ஒரு விஷயத்தில் தீர்மானமாய் இருந்தார். அவருடைய கனவுக்கன்னியை முடிவாகத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவருக்கே என்றார்.  அவர் குடும்பத்தில் இதற்கு எதிர்ப்பு இருக்கவில்லை. பெரியவர்கள் எல்லாப் பொருத்தங்களும் பார்த்து பெண்ணைக் காண்பிப்பார்கள். இவர் முறைப்படி பெண் காணச் செல்வார். பலதடவை ,பல பெண்களைப் பார்த்தும் எதுவும் தோதாக அமையவில்லை. இவர் ஒவ்வொரு பெண்ணையும் பார்க்கப் போகும்போது, பெண்ணுக்கு மதிப்பெண் போடுவார்( male chauvinism ?). குறைந்தது 60 விழுக்காடாவது பெண் எடுக்க வேண்டும் என்பதே இவரது எதிர்பார்ப்பு . உயரம் நிறம், படிப்பு, அழகு என்று பல பிரிவுகளுக்கும் மதிப் பெண் போடுவார். சாதாரணத் தேர்வுக்கான மதிப்பெண்கூட அவரிடமிருந்து பெண்களால் வாங்க முடியவில்லை. அநேகமாக எல்லோரும் சோர்ந்து போனார்கள். இவருக்கும் தன் கட் ஆஃப் மார்க் கூடுதலோ என்று ஐயம் வந்து விட்டது. எட்டு பத்து பெண்களை பார்த்தபிறகு பாஸ் மார்க் வாங்கும் பெண்ணாவது கிடைக்குமா என்று

எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கும்போது, ஒரு பெண்ணைப் பார்த்து இவர் சம்மதம் சொல்லி விட்டார். இவ்வளவு தேர்வுகளுக்குப் பிறகு வந்த பெண்ணை பார்த்தபோது பலரும் ஆச்சரியப் பட்டனர். தேர்வான பெண் மிகச் சாதாரணமாக இருந்தார். சராசரிக்கும் மேலாக அந்தப் பெண்ணிடம் இருந்த ஒரே குவாலிஃபிகேஷன்  அவர் நன்றாகப் பாடுவார்.என்பதுதான். இவருக்கு இவர் என்பது யாருக்குத் தெரியும்.?

இன்னொரு நண்பர் வீட்டில் பெண் பார்த்து அவர் வீட்டுக்கு மருமகளாய் வந்தவர் ஒல்லியாக, கருப்பாக, முன்பல் துருத்திக் கொண்டு எந்த அழகும் இல்லாமல் இருந்தார். கல்யாணப் பையனிடம் என்ன இப்படி என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எல்லோர் வாயையும் அடைத்து விட்டது. அவர் சொன்னார், எனக்குப் பிடிததது , மணம் செய்து கொண்டேன் .அவ்வளவுதான்.

ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. YOU CAN NOT MARRY ANOTHER MAN’S WIFE.”  உலகில் இருக்கும் அத்தனை மனிதனுக்கும் அவனுக்கென்று ஒரு ஜோடி இருக்கிறது. அவனுக்கென்று ஒரு இல்லற வாழ்வு இருக்கிறது. படிப்பும் பொருளும் அழகும் மட்டுமே ஜோடிகளைத் தீர்மானிப்பதில்லை. இவையெல்லாம் அதிகமாகப் பேசப் பட்டாலும் எல்லோர்க்கும் எல்லாம் அமைவது இல்லை என்று சொல்வது கூடத் தவறாகும். சில நேரங்களில் எனக்குத் தோன்றுவது பலருக்கும் தவறாகத் தோன்றலாம். அந்தந்த வயதின் தேவைகள் மற்ற எல்லா விஷயங்களையும் பின்னுக்குத் தள்ளிவிடலாம். மேலும் அழகு என்பதற்கு எந்த Definition  -ம் கிடையாது. BEAUTY LIES IN THE EYES OF THE BEHOLDER  இதையெல்லாம் ஆராய்ந்து பார்த்தால் விடை கிடைக்காது என்று தெரிந்துதான் “ இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைத்தானே தேவன் அன்று “ என்று அறிய முடியாக் கடவுளிடம் பாரத்தை (பழியை ?) போடுகிறோமோ.? 
நம் கலாச்சாரத்தில் ஒரு திருமணம் நடக்கும் முன்  இருவருக்கும்  உள்ள பொருத்தங்களை ஜாதக மூலமாகப் பார்க்கின்றனர் ஆனால் பண்டைக் காலத்தில் கடி-மணம், கரணம், மன்றல், வதுவை, வரைவு என்று பல பெயர்களில் அறியப் பட்டிருந்தது. அந்தக் காலத்திலேயே பொருத்தம் பார்த்து திருமணங்கள் நிச்சயிக்கப் பட்டிருக்கின்றன.
பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டோடு உருவு, நிறுத்த காமவாயில் ,நிறையே, அருளே உணர்வோடு திருவென முறையுளக் கிளந்த ஒப்பினது வகையே என்று தொல்காப்பியர் குறிப்பிடுகிறார்.

இப்பொழுதும், இளமை ,வனப்பு, வளமை, கல்வி, அறிவு என்று பல பொருத்தங்கள் பார்த்துத்தான் திருமணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன, ஆனால் பல குடும்பங்களில் உறவின் வழியே நிச்சயமாகும் திருமணங்களில் பெரும்பாலும் இதையெல்லாம் கவனிப்பதில்லை.அறிந்த மனிதர் ,இனம் குலம் எல்லாம் ஒத்தது இதையெல்லாம் விட சொத்து பத்துகள் குடும்பத்தைவிட்டு வெளியேறாது என்னும் எண்ணமும்கலந்தெ மணங்கள் நிச்சயிக்கப் படுகின்றன. இந்த வகைத் திருமணத்தில் ACCOUNTABILITY ---GUARANTEED  என்று எண்ணுகிறார்கள், இந்த வகைத் திருமணத்தில் பெரும்பாலும் பெண்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்கிறார்கள். இம்மாதிரி உறவில் விளையும் திருமணங்கள் வாயிலாகப் பிறக்கும் சந்ததிகள் உடல் நலம் குன்றி இருக்க வாய்ப்பு அதிகம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
என்ன இருந்து என்ன? சில கேள்விகள் மனதில் எழுகின்றன 
பருவ வயசில் ஒரு ஆணைப் பெண்ணிடமோ பெண்ணை ஆணிடமோ ஈர்ப்பது எது. ?காதலா ?பருவ வயதில் காதலுக்குக் கண்ணில்லை என்பது சரியா ? இதற்கு சரியான டெஃபினிஷன்  உண்டா.?இந்த ஈர்ப்பு நாளாக நாளாக ஒரே மாதிரி இருக்கிறதா?வயதானபின் கிழவனையும் கிழவியையும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கச் செய்வது எது?ஒருவரை ஒருவர்ச் சார்ந்து இருக்க வேண்டிய கட்டாயமா? இந்தக் கட்டாயத்தை ஏற்படுத்திச் செல்வது எது?பாரதக் கலாச்சாரமா? இல்லை எல்லாம் தலைவிதி என்று எண்ணமா? அப்படியானால் இது அப்படியே தொடருமா?கேள்விகள் கேள்விகள்..கேள்விகள...............!
 எப்போதெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் வந்து நான் கேள்விகள் கேட்கிறேனோ அப்போதெல்லாம் வாசகர்களிடமிருந்து பதில்கள் வருவதற்குப் பதில் திசை மாறிப் புரிந்து கொண்ட கருத்துக்களே பின்னூட்டங்களாக வருகிறது ஆனால் இம்முறை பதிவைப் புரிந்து கொள்ள  சந்தர்ப்பம் மிகக் குறைவு/  ஆனால் கேள்விகள் பலதரமான பதில்களைக் கொண்டு வரலாம்  I am prepared .Let us see.         













41 comments:

  1. யாருக்கு மாப்பிள்ளை யாரோ?..
    அவர் எங்கே பிறந்திருக்கின்றாரோ!..

    - என்றும் ஒரு பாடல் உண்டு..

    வயோதிகத்திலும் ஓயாத சண்டையும் சச்சரவுமாக -
    பலரைக் கண்டிருக்கின்றேன்..

    ஏழு ஜன்மம் தொடர்வது என்கின்றார்களே -
    அதுவாக இருக்குமோ?..

    இப்போதைக்கு ஒன்றும் புரியவில்லை!..

    ReplyDelete
  2. என் புக்ககத்தில் நான் தான் அந்நியள்! அனைவரும் ஒருவருக்கொருவர் சொந்தமே! இன்றளவும் அந்த அந்நியத் தன்மையை அவர்களும் காப்பாற்றி வருகின்றனர்! :) என் அப்பா, அம்மா வீட்டில் கலந்து கட்டி இருக்கும். :) எல்லா ஊர்களின் சம்பந்தங்களும் இருக்கும். :) சண்டை, சச்சரவு போடுவதால் ஒருவருக்கொருவர் அன்பில்லைனு சொல்ல முடியாது. அன்பும் இருக்கும். புரிதலும் இருக்கும்.

    ReplyDelete
  3. திருமணம் மட்டுமல்ல, வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளும் அவரவர் மனதைப் பொறுத்து அமைவது. பொருத்தமாக அமைவது என்பதில்தான் சிக்கல். ஓரளவு அட்ஜஸ்ட் செய்துகொண்டால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

    ReplyDelete
  4. பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பு உடல் ஹார்மோன் சம்பந்தப் பட்டது. வீரியமான காலம். பார்க்கும் பெண்ணில் எல்லாம் காதல் என்ற பெயரில் காமத்தைத் தேடும் உடல். அங்கு ஒரு முடிச்சு விழுந்து உறவு ஏற்பட்டு விட்டால், கலாச்சாரமோ, கடமையோ ஒரு பந்தம் ஏற்பட்டு விடுகிறது. எப்படியும் ஒருவருக்குள் ஒருவர் புரிதல் என்பது ஏற்பட்டு விட்டால் பின்னர் காமம் மறைந்த நாளில் அன்பும் அனுசரணையும் உண்டாகிக் காதல் என்கிற வஸ்து அங்கு காணப்படுவதற்கான சாத்தியக்கூறுகள்!

    இப்போதெல்லாம் எவ்வளவு பெண் பார்க்க முயன்றாலும் மணம் முடிக்க இயலா வாலிபர்கள் ஏராளம் இருக்கின்றனர்! காலத்தின் கோலம். இளம் வயதிலேயே காதல் என்கிற பெயரில் ஒரு பெண்ணைத் தெரிவு செய்து விடுவது கூட நல்லதே என்று தோன்ற வைக்கும் காலம்!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா விரிவாக அலசி இருக்கின்றீர்கள்...

    மணவாழ்க்கையை நமக்கு இறைவன்தான் தீர்மானிக்கின்றான் என்று பொதுவாக எல்லோருமே நம்புகின்றோம் அதன் அடிப்படையில்தான் ஜாதகப் பொருத்தம், மதப்பொருத்தம், ஜாதிப்பொருத்தம் பார்க்கின்றோம் அப்படியிருக்கும் பொழுது இந்தப் பொருத்தங்கள் அனைத்தையும் மறந்து காதல் என்ற வட்டத்துக்குள் மனம் நுழையக்காரணம் என்ன ?

    காலமாற்றமா ? இல்லை மனிதன் ஜாதி மதத்தை துறந்து விட்டானா ? இல்லை உணர்ச்சிகளின் வெளிப்பாடா ? இப்படித்தான் இருக்கவேண்டும் காரணம் பெரும்பாலான மனிதர்கள் காதலிக்கின்றார்கள் அதில் வெற்றி பெற பெற்றோர்களை எதிர்க்கின்றார்கள் ஆனால் ? தான் தந்தை என்ற நிலையைத் தொடும் பொழுது மக்களின் காதலை ஏற்றுக்கொள்வதில்லை (இது 90 சதவீதம்)

    தான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை நிச்சயமாக குடும்பம் ஏற்காது என்பது திட்ட வட்டமாகவே தெரிகின்றது (இதுவும் 90 சதவீதம்) அதேநேரம் இன்றைய காதல் பெறும்பாலும் உணர்வுகளால் மட்டுமே பிறக்கின்றது அதாவது ‘’டைம்பாஸ் லவ்’’ பிறகு இருவரும் வெவ்வேறு வழி.

    நன்றாகவே தெரிகின்றது இன்றைய மாணவர்களும், மாணவிகளும் எங்கும் ஜோடியாகவே திரிகின்றார்கள் இதில் வறம்பு மீறுவதும் அதிக சதவீதமே ஆனால் இதில் 99 சதவீதம் கண்டிப்பாக சேர்வதில்லை.

    காதலில் வெற்றி பெற ஒரு மனிதன் படிப்பை முடித்து வேலையைத்தேடி பெற்றோர்களின் சுதந்திர உரிமையைப முழுமையாக பெற்று அதன் பிறகு திருமண வாழ்க்கைக்காக ஒரு பெண்ணை தேர்வு செய்வதற்கு காதலிக்கத் தொடங்கினால் ? அந்தக்காதல் நிச்சயம் வெற்றி பெறும்.

    அனைத்து மக்களுமே மனதால் ஜாதி மதத்தை மறந்தால் காதல் மணங்கள் சுலபமாக வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு உண்டு அதேநேரம் மக்கள் மறக்க நினைத்தாலும், இனிவரும் அரசியல் தலைவர்கள் அதை வளர்ப்பார்கள் இதற்கு அறியாமை மக்கள் உடந்த இதன் காரணமாகவே முற்போக்குவாதிகளும் சமூக சாதிச்சந்தையில் சிக்கி வீழ்கின்றனர் – கில்லர்ஜி

    ReplyDelete
  6. இளம் வயதில் ஏற்ப்படும் ஈர்ப்பு, காமம் மற்றும் வம்ச விருத்தி சார்ந்தது. நடு வயதில் உள்ள ஈர்ப்பு குடும்பம் என்ற கட்டுக்கோப்பு உடையாமல் பாதுகாக்கவும் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும் தேவைப் படுகிறது. வயதானபின் முதுமையின் சோர்வு எட்டிப் பார்க்கும் போது
    ஆதரவு அனுசரித்தல் என்ற தேவை ஏற்படும்போது ஈர்ப்பு அவசியமானதாக ஆகிறது.

    ஆக எல்லா புரிதலும் எல்லா ஈர்ப்பும் தேவை என்ற ஒன்றின் அடிப்படையில் தான் ஏற்படுகின்றன. வயதிற்கு ஏற்ப தேவைகள் மாறலாம்.ஆனால் தேவைகள் நிரந்தரம். அதுவே காரணம் காரணி.
    --
    Jayakumar

    ReplyDelete
  7. இந்த மாதிரி கேள்விகள் என் மனதிலும் அவ்வப்போது உதிப்பதுண்டு. இது ஒரு பெரிய வேதாந்த ஆராய்ச்சி. ஒரு சிறு பட்டி மன்றம் போட்டு விவாதிக்க வேண்டியவை. ஆனாலும் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியுமா என்பது தெரியவில்லை.

    ReplyDelete
  8. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமைவரை கூட வரும். என்று கவிஞர் பாடியது போல் அன்பு ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு மாதிரி உணரப்படும்.
    சண்டையும் உரிமையானல் மட்டும் தான். சிறு, சிறு சண்டையாக மட்டும் இருக்க வேண்டும் நீடிக்க விட கூடாது. நீடிக்க விட்டால் விளைவுகள் படு மோசமாகி விடுகிறது.
    உருவம் பார்த்து அன்பு மலருவதில்லை, உள்ளம் பார்த்து அன்பு மலருகிறது. அழகு மாறி கொண்டே இருக்கும், அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்.
    முதுமையில் ஒருத்தருக்கு ஒருத்தர் ஆதரவாய் அன்பாய் இருந்தால் தான் நல்லது.

    ReplyDelete
  9. பருவ வயது ஈர்ப்பு என்பது பெரும்பாலும் ஈர்ப்புதான்..ஒரு சில புரிதலுடன் கூடிய வலுவான அன்பாக/காதலாக விதிவிலக்குகள் இருக்கலாம்.

    பருவ வயதில் தோன்றும் காதலிற்குக் கண்ணில்லை என்பது சரிதான். அதாவது அறிவுக் கண். உணர்ச்சிகளால் அல்லாமல், அறிவால் அந்த வயதில் தோன்றும் காதல் உண்மையானதா, இல்லை ஈர்ப்பா, அது உண்மையான அன்பா, நீடிக்குமா, என்ற நல்லது கெட்டதை ஆராய்ந்து சுய அலசல் செய்யவதற்கான பக்குவப்பட்ட அறிவுக் கண் இல்லாது போவதைத்தான் சொல்லுவது என்பது எனது புரிதல்.

    அந்த ஈர்ப்பு, நாளாக நாளாக... காதல் திருமணமாக இருந்தாலும் சரி, பார்த்துச் செய்ப்பட்டத் திருமணமாக இருந்தாலும் சரி, அந்த ஈர்ப்பு உடல் சார்ந்தது என்றால் குறையும். அல்லாமல், அந்த ஈர்ப்பு நல்ல புரிதலுடன், அன்புடன் என்றால் குறையாது.

    பருவ வயதில் ஏற்படும் ஈர்ப்பு பின்னர் தொடர்கிறதா என்றால் பெரும்பாலான குடும்பங்களில் இல்லை என்று சொல்லலாம். குழந்தைகள், பெற்றோர் வயதானவர் பொறுப்பு என்று பல காரணங்களால் அது தேய்ந்துவிடுகிறது. ஈர்ப்பிற்கும் மனம்தானே காரணம். அந்த ஈர்ப்பு என்பது அன்புடன், இத்தகைய பொறுப்புகளின் இடையிலும் இருக்குமேயானால் வயதாகும் போது ஏற்படும் சலிப்பு ஏற்படாது சார்.
    கணவன் மனைவி இருவருமே குடும்பத்தில் பொறுப்புகள் மிகுந்தாலும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொறுப்புகளையும் தனித்தனியாகப் பார்க்கக் கற்றுக் கொண்டால் ஈர்ப்பும் அன்பும் மிகும். இவற்றை இணைத்து தனிப்பட்டத் தருணங்களில் இருந்து விலகி இருப்பதால்தான் ஈர்ப்பு குறைந்து பிரச்சனைகள் உருவாகின்றன. திருமணம் ஆன புதிதில் ஒருவருக்கொருவர் தெரியாத குறைகள், குற்றம் சொல்லாதவை எல்லாம் வயதாகும் போதும் பொறுப்புகள் ஏற்படும் போதும் தான் வெளிப்படுகின்றன. இதுதான் பெரும்பாலான குடும்பங்களில் நிகழ்கின்றது.
    எனவே எப்போதும் கணவன் மனைவி, அது பார்த்துச் செய்யப்பட்ட திருமணம் என்றாலும், காதல் திருமணம் என்றாலும் சரி, தங்களுக்குள் இருக்கும் ஈர்ப்பையும் அன்பையும் தொலைக்காமல் எந்தத் தருணத்திலும் தங்கள் தனிப்பட்டத் தருணங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துத் தொடர்ந்து வந்தால் புரிதலும் இருக்கும் சலிப்பும் ஏற்படாது சார். திருமண வாழ்க்கை வயதானாலும் மகிழ்வாக அமையும்.

    வயதான பின்னும் கிழவனையும் கிழவியையும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கச் செய்வது என்பது பெரும்பாலாக இல்லை. ஏனென்றால் மேலே சொல்லப்பட்டக் காரணங்கள். அப்படி இருந்தார்கள் என்றால் பெரும்பாலோர் சமுக நிர்பந்தங்களுக்காதவே. அல்லது கடமை என்பதாலும். தாலி செண்டிமென்ட். அதற்கு மீறியும் இருந்தார்கள் என்றால் அதற்கும் மேலே சொல்லப்பட்ட காரணங்கள் அதாவது புரிதல் அன்பு, ஈடுபாடு, இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்தை மகிழ்ந்து அனுபவிப்பது, ஆர்வங்கள், என்று பல காரணங்கள். ஆனால் பல குடும்பங்களில் அது இருப்பதில்லை. ஏனென்றால் அவர்கள் அதுவரை சமூகத்திற்காகத்தான், குழந்தைகளுக்காக என்றுதான் வாழ்ந்திருக்கின்றார்களே அல்லாமல் தங்களுக்காக என்று வாழ்ந்ததில்லை ஆதலால். எத்தனைக் கணவர்கள் மனைவிகள் தங்கள் துணையின் ஆர்வங்களுக்கு மதிப்புக் கொடுத்து ஆதரிக்கின்றார்கள்? வயதான பிறகு சேர்ந்துப் பயணம் செய்யும் ஆர்வத்துடன் பயணம் செய்கின்றார்கள்? இவை எல்லாம் இருந்தால் ஈர்ப்பு குறையாது. மட்டுமல்ல...அப்படியே அவர்களுக்குள் சலிப்பு வந்தால் அவர்களுக்கும் ஒரு சிறு ஸ்பேஸ் தேவைப்படுகிறது என்று அர்த்தம். ஒரு சிறிய காப் (gap) குழந்தைகள் இருந்தால் அவர்களில் ஒரு வீட்டில் அம்மாவும் மற்றொருவர் வீட்டில் அப்பாவும் என்று வைத்துக் கொள்வதில் தவறு இல்லை. (எங்கள் குடும்பத்தில் என் மாமனார் மாமியாரை நாங்கள் அப்படித்தான் வைத்துக் கொண்டோம். அவர்களுக்குள் சலிப்பும் ஆற்றாமையும் வந்ததால். அதற்கு எங்கள் குடும்பத்திலேயே எதிர்ப்புகள் வந்தது. ஆனால், நானும், எனது மற்றொரு மச்சினரும் சேர்ந்து அப்படிச் செய்ததால் மாமனார் மாமியார் இருவருமே சற்று நிம்மதியாகவும் மகிழ்வாகவும் இருந்தார்கள். அப்படியே இருவரையும் எங்கள் வீட்டில் வைத்துக் கொண்ட போதும், நாங்கள் அவர்களைத் தனித்தனியாகத்தான் இருக்கச் செய்தோம், நிறைய நேரம் அவர்களுடன் தனித் தனியாகச் செலவு செய்தோம். இப்போது மாமனார் இல்லை 90 வயதில் இறந்தார். மாமியார் மட்டும் 90 வயது.) யாரும் இல்லை என்றாலோ இல்லை ஒரு பையன் ஒரு மகள் என்றாலோ இருவரும் தங்கள் ஸ்பேசை வகுத்துக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் கலாச்சாரம் அது இது என்று செண்டிமென்ட் பேசி ஒருவரது பெர்சனல் ஸ்பேசிற்கு முக்கியத்துவம் கொடுக்காத காரணத்தால்தான் சலிப்பு ஏற்படுகின்றது. இன்னும் நிறைய பேசலாம் இதைப்பற்றி. ஏற்கனவே பெரிதாகிவிட்டதால் இங்கு நிறுத்திக் கொள்கின்றேன் சார்.

    கீதா





    ReplyDelete
  10. வாகானவை உங்கள் கேள்விகள் .
    வகையானவை வந்த பதில்கள்.
    உங்களின் கேள்விகள் ஆணித்தரமானவை. ஒரு ஆணின் தரப்பாகவே கேள்விகளின் தொனி உள்ளதாய் எனக்குத் படுகிறது.
    அஷ்டகோணல் ஆம்பிளைக்கும் ஐஸ்வர்யாராய் போலவே மனைவி வேண்டியிருக்கிறது.
    அழகைத் துரத்தினவர்கள் கதையும் அதை அடையும் வரைதான். அடைந்தபின்னர் அழகு சற்று
    பின்வாங்கி குணத்தை முன்னிறுத்தும் வாழ்க்கையின் ஓட்டம்.

    அடையாத அழகோ நிராசையாகி உள்ளே தங்கி,தன்னையும் துணையையும் வதைக்கிறது. அல்லது
    வேறொன்றாய் வெளிப்படுகிறது. எழுத முடிந்தவனுக்கு கவிதையாகவோ,கதையாகவோ ஊடாடுகிறது.
    முடியாதவனுக்கு, அந்த ஏக்கம் விரியும் ஆக்கங்கள் நெஞ்சைத்தொடும் ரசனையாகிறது.

    சிக்கலும் பல சுழல்களும் எதிர்கொள்ளப்படும் வாழ்க்கை பயணத்தில், இந்த பதிலில்லா கேள்விகள் முனைமழுங்கி மனதின் ஓர் மூலைக்குத் தள்ளப் படுகின்றன.

    தள்ளப்படும் இடம் மனதின் மூலைக்குத்தான்....மனதிற்கு வெளியே அல்ல .

    ReplyDelete
  11. அருமையான பதிவு ஐயா....
    நீங்கள் பதிவில் சொல்லி
    இருக்கிறபடி இன்னார்க்கு
    இன்னார் என்று எழுதி
    வைத்தானே தேவன் அன்று...
    இதுதான் இயற்கை நியதி...

    மண வாழ்க்கைக்கு பின்
    இப்படிதான் வாழ வேண்டும்
    என்ற எண்ணங்கள் பலருக்கும்
    இருக்கும்,ஏன் எனக்கும் இருக்கு...
    ஆனால் எண்ணங்கள் நன்றாக
    அமைந்தால் வாழ்க்கையும்
    நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  12. அருமையான பதிவு ஐயா....
    நீங்கள் பதிவில் சொல்லி
    இருக்கிறபடி இன்னார்க்கு
    இன்னார் என்று எழுதி
    வைத்தானே தேவன் அன்று...
    இதுதான் இயற்கை நியதி...

    மண வாழ்க்கைக்கு பின்
    இப்படிதான் வாழ வேண்டும்
    என்ற எண்ணங்கள் பலருக்கும்
    இருக்கும்,ஏன் எனக்கும் இருக்கு...
    ஆனால் எண்ணங்கள் நன்றாக
    அமைந்தால் வாழ்க்கையும்
    நன்றாக இருக்கும்....

    ReplyDelete
  13. திருமணத்தைப் பொறுத்தவரை எனக்கென்ன தோணுதுன்னா.....

    கடவுள் (!) மனிதரைப் படைக்கும்போது ஒரு ஐட்டமா உருவாக்கறார். ஒரு உருண்டை களிமண்ணுன்னு வச்சுக்கலாம். அதை ரெண்டாப் பிரிச்சு ஒன்னு ஆணாகவும் ஒன்னு பெண்ணாகவும் எங்கெங்கோ தனித்தனியாக பிறந்துருது.

    மனுஷனும் மனுஷியும் வளர்ந்து பெருசானதும் வீட்டுலே பொண் பார்த்தோ, இல்லை காதலித்தோ எதோ ஒரு முறையில் கல்யாணம் ஆகிருது. இங்கே எங்க பக்கங்களில் நூத்துக்கு நூறு காதல் மணங்கள்தான். இப்படிக் காதலிச்சுக் கட்டுனவங்க ஏன் சில வருசங்களில் பிரிஞ்சு போயிடறாங்க?

    சிலர் திரும்பத்திரும்பக் காதல் கல்யாணம் பிரிவுன்னு இருக்கும்போது, சிலர் முதல் கல்யாணமோ, இல்லை விவாகரத்து செஞ்சபின் திரும்ப செஞ்சுக்கிட்ட கல்யாணமோ என்ற வகையில் வந்தாலும்..... எப்படிப் பிரியாமல் கடைசிவரை சந்தோஷமா வாழ்றாங்க?

    இங்கேதான் முதலில்நான் நினைச்ச ஹாஃப் ஹாஃப் வருது. கடவுள் பிரிச்சுப்போட்ட அதே ரெண்டு ஹாஃப்கள் ஜோடி சேர்ந்தால் கடைசிவரை ஒன்னா இருக்காங்க. அப்படி இல்லாம வெவ்வேற ஹாஃப்கள் ஜோடி சேர்ந்தால்தான் பிரிஞ்சு போறாங்க. சிலருக்கு ஸேம் ஹாஃப் கிடைச்சுருது. சிலருக்கு பலமுறை தப்புத்தப்பா சேர்ந்து எப்பவாவது சரியான ஹாஃப் கிடைச்சுருது. சிலருக்குக் கிடைப்பதே இல்லை......

    இதெல்லாம் நானும் அப்பப்போ யோசிக்கும் விஷயம்தான்.

    சொல்ல நினைச்சதைச் சரியாச் சொன்னேனான்னு தெரியலை.

    ReplyDelete
  14. ஒருவருக்கு ஒருவர் மீதான ஈர்ப்பு என்பது உருவம் சார்ந்தது அல்ல என்று எண்ணுகின்றேன்
    மனம் சார்ந்தது
    புறத் தோற்றத்தல் மட்டுமே கவரப் பட்டவர்கள் நீண்டநாட்கள் சேர்ந்து வாழ்வது என்பது இயலாத காரியம்.சில நாட்களிலேயே அக்கவர்ச்சித் திரை விலகிவிடுவதற்கான ஆபத்துகள் அதிகம்.
    எனவே கவர்ச்சியையும் தாண்டி ஏதோ ஒன்று தேவைப்படுகிறது
    அது அன்பு, ஒருவரை ஒருவர் நேரித்தல் விட்டுக் கொடுத்தல், தான் என்ற அகந்தை இன்றிப் பழகுதல் இவையே இருவரையும் நீண்ட காலத்திற்கு, அவர்கள் வாழும் வரை இணைத்து வைத்திருக்கும்

    ReplyDelete
  15. மனைவி(கணவன்) அமைவதெல்லாம், இறைவன் கொடுத்த வரம். அது வரமா, சாபமா என்பது அவரவர் அணுகுமுறையைப் பொறுத்து வேறுபடும். பொதுவாகவே விட்டுக் கொடுத்து வாழும் தம்பதிகளின் தாம்பத்யம் நீண்ட நாள் நிலைக்கும். இடையினில் வாழ்வில் சலிப்புத் தட்டாமல் இருக்கவே குழந்தைகள். காலப்போக்கில் அழகைவிட அரவணைப்பே பிரதானமாகும்.

    ReplyDelete

  16. @ துரைசெல்வராஜு
    என்னென்னவோ சொல்கிறார்கள். துணை தேடும் போது என்ன என்ன தகுதிகள் நோக்கப்படுகின்றன? எல்லாம் சரியாகும் போதும் இல்வாழ்க்கை இனிமையாக இருக்கிறதா ?பதில்கள் திருப்திகரமாகக் கிடைக்க வில்லை. கிடைப்பதும் அரிது என்றும் தெரிகிறது வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    மணமுடித்துப் போன பின் அன்னியமெங்கே.? எல்லாம் உறவுதானே. அன்னியம் என்று நினைக்கத் தூண்டுவது எது?விட்டுக் கொடுத்தல் இல்லாமல் இல்வாழ்க்கை இனிதாகுமா? ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்னும் கேள்விகள் எழுவதில்லையா? வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அட்ஜஸ்ட் செய்து கொள்ளும்போது அவரவர் தனித்தன்மை பாதிக்கப் படுவதில்லையா?பின் எதற்கு இந்தப் பொருத்தங்கள் பார்ப்பது ? வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  19. @ ஸ்ரீராம்
    எனக்கு ஏற்பட்டிருக்கும் சிந்தனைகள் நான் கூறி உள்ள படி ம்யூட்டெட் தாட்ஸ் ! பதில் கிடைத்து திருப்தி அடைவது சிரமம் . இருந்தாலும் நினைக்காமல் இருக்க முடியவில்லையே உங்களிடம் இருந்த வ்ந்த சற்றே நீளமான பின்னூடம் ஆச்சரியம் தருகிறது நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  20. @ கில்லர்ஜி
    நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் அரசியல் வாதிகளைக் குறை கூறுவதில் எனக்கு உடன்பாடில்லை. மேலும் நடக்கும் நிகழ்வுகளுக்குப் பொறுப்புத் துறத்தலே ஆண்டவன் ஜாதி மதம் என்றெல்லாம் கூறுவது / நீங்களும் கேள்விகேட்டுப் பின்னூட்டம் எழுதி இருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete

  21. @jk 22384
    ஓரளவுக்கு லாஜிகலாகப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ டாக்டர் கந்தசாமி
    எண்ணங்கள் ஆயிரம் உதயமாகின்றன. பதிவுலக வாசகர்களையும் சிந்திக்க வைக்கிறேன் இதற்கு எல்லாம் தீர்மானமான பதில் கிடைக்காது என்பதும் தெரியும் ஜஸ்ட் ஷேரிங் ஐடியாஸ் . வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  23. @ கோமதி அரசு
    /உருவம் பார்த்து அன்பு மலருவதில்லை, உள்ளம் பார்த்து அன்பு மலருகிறது. அழகு மாறி கொண்டே இருக்கும், அன்பு ஊறிக் கொண்டே இருக்கும்./தயைகூர்ந்து திரு ஜேகேயின் பின்னூட்டத்தைப் பாருங்கள் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  24. @ துளசிதரன் தில்லையகத்து
    கீதா
    /தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பொறுப்புகளையும் தனித்தனியாகப் பார்க்கக் கற்றுக் கொண்டால் ஈர்ப்பும் அன்பும் மிகும். இவற்றை இணைத்து தனிப்பட்டத் தருணங்களில் இருந்து விலகி ஈர்ப்பு குறைந்து பிரச்சனைகள் உருவாகின்றன/ அதுதானே நேச்சுரல் மேம் ஒவ்வொருவரின் ஸ்பேஸ் என்று சொல்லும் போது ஈகோ எங்கே போகும் அதற்கும் இடமுண்டு அல்லவா அதாவது ஸ்பேஸ்? நான் தான் புரியாமல் ஏதேதோ கிறுக்கிக் கேள்விகள் கேட்கிறேனென்றால் ஒரு பதிவினும் நீளமான பின்னூட்டம் என்னைத் திகைக்க வைக்கிறது இப்பதிவின் மூலம் பலரது சிந்தனைத் தடங்களை அறிய முடிகிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  25. @ மோகன் ஜி
    /
    சிக்கலும் பல சுழல்களும் எதிர்கொள்ளப்படும் வாழ்க்கை பயணத்தில், இந்த பதிலில்லா கேள்விகள் முனைமழுங்கி மனதின் ஓர் மூலைக்குத் தள்ளப் படுகின்றன.
    தள்ளப்படும் இடம் மனதின் மூலைக்குத்தான்....மனதிற்கு வெளியே அல்ல/ சரியாகச் சொன்னீர்கள் ஜி/ எழுத முடிந்தவனுக்கு கவிதையாகவோ,கதையாகவோ ஊடாடுகிறது/ பதில் தெரியாக் கேள்விகளால் நான் வாசகர்களின் சிந்தனையைத் தூண்டி விடுகிறேன் பதிவாக கதையாக அல்ல கவிதையாக அல்ல வருகைக்கு நன்றி ஜீ .
    .

    ReplyDelete

  26. @ அஜய் சுனில்கர் ஜோசப்
    /மண வாழ்க்கைக்கு பின்
    இப்படிதான் வாழ வேண்டும்
    என்ற எண்ணங்கள் பலருக்கும்
    இருக்கும்,ஏன் எனக்கும் இருக்கு...
    ஆனால் எண்ணங்கள் நன்றாக
    அமைந்தால் வாழ்க்கையும்
    நன்றாக இருக்கும்..../ மண வாழ்க்கை என்பது இரு மாடுகள் இழுக்கும் வண்டி. ஒத்த சிந்தனை அவசியம் அல்லவா சார் வருகைக்கு நன்றி .

    ReplyDelete

  27. @ துளசி கோபால்
    நாம் செய்யும் காரியங்களுக்கு எல்லாம் கடவுளை சொல்வது எனக்கென்னவோ ஒரு எஸ்கேபிஸ்ம் என்று தோன்றுகிறது சரியோ தவறோ நம்செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று நினைப்பவன் நான் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  28. @ கரந்தை ஜெயக்குமார்
    இப்படி இப்படி நிகழும் நிகழ்வுகளுக்குக் காரணம் காண் விழைந்ததே இப்பதிவு
    நேரான சரியான பதில்கள் கிடைப்பது கடினம் என்றும் தெரிகிறது/ ஆர்வத்துடன் வந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி சார்

    ReplyDelete

  29. உமேஷ் ஸ்ரீநிவாசன்
    விட்டுக் கொடுத்து வாழுதல் என்பதே காம்ப்ரமைஸ் என்பது என் புரிதல் திரு ஜேகேயின் பின்னூட்டத்தைப் பார்க்க வேண்டுகிறேன் வருகைக்குநன்றி உமேஷ்

    ReplyDelete
  30. எனக்கு ரொம்பவும் பழக்கமான ஒரு அம்மாள் தன் கணவனை 'நீ, வா, போ, உனக்கு' என்று தான் விளித்துப் பேசுவார்கள். ஆனால் வெளி ஆட்கள் மத்தியில் அவர் அவரது கணவரை, 'இவர், அவருக்கு, என்னவர்' என்றெல்லாம் சொல்லும் பொழுது எனக்கு இவர் இவரது இயல்பு மாறி ரொம்ப கஷ்டப்பட்டு வரவழைத்துக் கொண்டு பேசுவதைப் போலத் தோன்றும்.

    அதே மாதிரி எனக்குத் தெரிந்த இன்னொரு அம்மாள் தன் கணவரைப் பற்றி பிரஸ்தாபிக்கும் பொழுதும் சரி, வழக்கமாக வீட்டிலும் சரி 'நீங்க, உங்களுக்கு, இவர், அவர், அவருக்கு' என்று எந்நேரமும் மரியாதை காட்டித் தான் பேசுவார். கணவர் நின்றிருக்கும் பொழுது அவருக்கு எதிரில் உடகாரக் கூட மாட்டார்.

    இந்த இரண்டு பேர்களில் யாருக்கு தங்கள் கணவர் மீது அதிக அன்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

    விலகி அல்ல, ஒரு விதத்தில் இந்தப் பதிவு சம்பந்தப்பட்டது தான் இந்தக் கேள்வியும்.

    ReplyDelete
  31. //மணமுடித்துப் போன பின் அன்னியமெங்கே.? எல்லாம் உறவுதானே. அன்னியம் என்று நினைக்கத் தூண்டுவது எது?//

    இதுக்கெல்லாம் மனம்தான் ஐயா காரணம்! அவங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே பிறந்து வளர்ந்தவர்கள், அல்லது பழைய தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பேசும் மொழி, பேசும் விதம், பழக்க வழக்கம், சொல்லப் போனால் கோலம் போடுவதில் இருந்து வித்தியாசம் உண்டு.:) இந்தக் கோலம் போடுவது என் கல்யாணத்தில் ஒரு சண்டையாகவே வர இருந்து பின்னர் தவிர்க்கப்பட்டது. :) நானும், என் பிறந்தகத்து உறவினர்கள் அனைவரும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள்! :) எங்க வீட்டிலிருந்து இப்படி வேறே ஊருக்குப் போனது நான் தான் என்று சொல்லலாம். ஆகவே என்னுடைய பேச்சு, பழக்க, வழக்கங்கள் எல்லாம் மாறுபடும்!

    ReplyDelete
  32. //இந்த இரண்டு பேர்களில் யாருக்கு தங்கள் கணவர் மீது அதிக அன்பு என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?//

    இரண்டு பேருக்குமே தான். முதலில் சொன்னவர் உரிமை கலந்த அன்பையும், அடுத்தவர் பக்தி கலந்த அன்பையும் காட்டுகிறார். இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல! :)

    ReplyDelete
  33. புருஷனை 'நீ, போ' என்று ஒருமையில் பேசும் மனைவி, புருஷனின் அப்பா, அம்மா என்றால் அவர்கள் மேல் அத்தனை பாசம் வைத்திருக்கிறாள். நாத்தனார் என்றால் உயிர்த் தோழி அவளுக்கு. சுருக்கமாகச் சொல்லப் போனால் கணவனின் குடும்பம் இல்லாமல் தன் கணவன் இல்லை, தன் கணவனின் சுகம் இல்லை என்று நினைப்பவள் அவள். இதில் ஏகப்பட்ட பெருமை அவள் கணவனுக்கு.

    புருஷனுக்கு எந்நேரத்தும் பெரும் மதிப்புக் கொடுக்கும் மனைவியோ 'தன் புருஷன் தனக்கு மட்டுமே சொந்தம்' என்று நினைப்ப்வள். திருமணத்தன்று இரவே தனிக்குடித்தனத்தைப் பக்குவமாக கணவனிடம் வற்புறுத்தியவள். பாசக்கார கணவன் தன் பெற்றோரை ஒதுக்கி வைத்து விட்டு தன் முந்தானையைப் பிடித்துக் கொண்டு வந்ததில் ஏக சந்தோஷம் அவளுக்கு. இந்த அடிப்படையிலேயே கணவன் மேல் ஏக மரியாதை அவளுக்கு.
    அவள் கொடுக்கும் மரியாதையில் ஏகப்பட்ட சந்தோஷம் அவள் கணவனுக்கு.

    ஆணுக்குப் பெண் அமைவதோ,பெண்ணுக்கு ஆண் அமைவதோ அவர்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் எப்படியோ நிகழ்ந்து விடுகிறது..

    இந்த இருவகை மனைவிமார்களில் எந்த மனைவி தன் கணவனுக்கு சந்தோஷ வாழ்க்கையை நிச்சயம் செய்திருக்கிறாள் என்று நினைக்கிறீர்கள் நீங்கள்?

    ReplyDelete

  34. @ ஜீவி
    எத்தனையோ நிகழ்வுகளுக்குக் காரணம் ஏதும் சொல்ல முடிவதில்லை. ஜோடி சேர்வது பற்றி எழுந்த வினாக்கள் என் பதிவில் மனைவியின் குணநலனுக்கான கேள்வி உங்கள் பின்னூட்டத்தில் எத்தனையோ மண வாழ்க்கைகள் suppressed emotionல் கழிகின்றன. இருந்தாலும் எதையும் சகித்துக் கொண்டு போகும் குணம் நல்லதாஎன்று இன்னொரு கேள்வியும் எழுகிறதுஎல்லாவற்றையும் மீறி வாழ்க்கை நடந்து கொண்டுதான் இருக்கிறதுசந்தோஷமாகவோ அல்லது சந்தோஷம் என்று நினைத்துக் கொண்டோ.என் சில கேள்விகளுக்குப் பதிலாகஜேகேயின் பின்னூட்டம் இருப்பது போல் இருக்கிறது வருகைக்கு நன்றி

    ReplyDelete

  35. @ கீதா சாம்பசிவம்
    கேள்விகளையும் பதில்களையும் ஆராயும்போது வாழ்க்கையே எதற்கொ எங்கோ விட்டுக் கொடுத்துப் போவதுதான் சரி என்று தோன்றுகிறது/இதுக்கெல்லாம் மனம்தான் ஐயா காரணம்! அவங்க எல்லோரும் கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களிலே பிறந்து வளர்ந்தவர்கள், அல்லது பழைய தஞ்சை மாவட்டத்துக்காரர்கள். பேசும் மொழி, பேசும் விதம், பழக்க வழக்கம், சொல்லப் போனால் கோலம் போடுவதில் இருந்து வித்தியாசம் உண்டு.:) இந்தக் கோலம் போடுவது என் கல்யாணத்தில் ஒரு சண்டையாகவே வர இருந்து பின்னர் தவிர்க்கப்பட்டது. :) நானும், என் பிறந்தகத்து உறவினர்கள் அனைவரும் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டத்துக்காரர்கள்! :) எங்க வீட்டிலிருந்து இப்படி வேறே ஊருக்குப் போனது நான் தான் என்று சொல்லலாம். ஆகவே என்னுடைய பேச்சு, பழக்க, வழக்கங்கள் எல்லாம் மாறுபடும்!/ இந்தபதில் சொல்லிச் செல்வதைவிட சொல்லாமல் செல்வதில் இருக்கும் சப்ரெஸ்ட்வாழ்க்கை முறையையே காட்டுகிறது என்று தோன்று கிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  36. @ கீதா சாம்பசிவம்
    ஜீவியின் கேள்விக்கு பதில் சொல்ல நினைக்கிறீர்கள் முதலாமர் இயல்பை மீறி வெளியில் நடிக்கிறார். பின்னவர் தானே பாரதீய நாரியின் பிரதிபலிப்பு என்று நினைக்கிறார் பதில் இல்லாக் கேள்விகள் பதில்கள் ஒவ்வொருவருக்கும் மாறு படும் நன்றி மேம்

    ReplyDelete
  37. @ ஜீவி
    /ஆணுக்குப் பெண் அமைவதோ,பெண்ணுக்கு ஆண் அமைவதோ அவர்கள் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்காமல் எப்படியோ நிகழ்ந்து விடுகிறது../ இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடுண்டு வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  38. மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு
    அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

    ReplyDelete
  39. ஐயா! எப்பொழுதோ அழைத்திருந்தீர்கள். ஆனால், என்னால் இப்பொழுதுதான் வர முடிந்தது. வருந்துகிறேன்!

    நான் தற்பொழுது எழுதியிருக்கும் பதிவுக்கும் இதற்கும் ஒரு வகையில் தொடர்பு இருக்கிறது. இரண்டுமே திருமண உரிமை பற்றிப் பேசுகின்றன. மணம் புரிந்து கொள்வதில், பெற்றோர், குடும்பம் போன்றோரின் தலையீட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். ஆனால், "என் சாதியில் பிறந்தால் என் சாதியைச் சேர்ந்தவனைத்தான் மணந்து கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், வெட்டிக் கூறு போடுவேன்" என மூன்றாம் மனிதர்களான சாதிச் சங்கத்தினர், கட்சியினர் போன்றோர் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் காலம் இது. இப்படிச் சொன்னால், பதிவு போட்டால், அப்படிச் சொல்பவனையும் காறித் துப்பி, திட்டிக் குவிக்கும் நாகரிக சமூகம் இது. சாதி மீறித் திருமணம் செய்து கொண்டால் பெற்ற மகளின் தாலியை அப்பனே அறுத்துப் போடும் அருமையான காலக்கட்டம் இது. இப்படிப்பட்ட சூழலில் உங்கள் கேள்விகளுக்கு நான் என்ன பதிலளிக்க!...

    ReplyDelete

  40. @ இ.பு ஞானப்பிரகாசன்
    ஐயா காலங்கடந்து போகவில்லை. வருகைக்கு நன்றி எனக்கு ஒரு குறை நீங்கள் எழுதிய பதிவை நினைத்துக் கொண்டே பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். என் பதிவில் திருமண உரிமை பற்றிப் பேசவில்லை. ஜோடி சேர்வது குறித்துத்தான் என்னை ஆச்சரியப்படுத்தும் கேள்விகள் சில கேள்விகள் எழுப்பி இருக்கிறேன் ஆனால் அவை சாதி சார்ந்த திருமணங்கள் பற்றியவை அல்ல. இம்மாதிரி மாற்றுக் கருத்தில் புரிந்து கொள்ளப்படுவது குறித்ட்க்ஹும் என் பதிவின் கடைசியில் அங்கலாய்த்த்கிருக்கிறேன் உங்கள் பதிவையும் படிப்பேன் நன்றி

    ReplyDelete
  41. ஆம் ஐயா! பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்ததையும் படித்தேன். ஆனால், நான் அப்படித் தவறாகப் புரிந்து கொண்டு மேற்படி கருத்தை இடவில்லை. இப்படி ஒரு கோணமும் இருக்கிறதே என்கிற வகையில்தான் அப்படிச் சொல்லியிருந்தேன். :-)

    ReplyDelete