உரத்த சிந்தனைகள் பதிவு பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உரத்த சிந்தனைகள் பதிவு பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஆகஸ்ட், 2013

நான் கனாக் காண்கிறேன் நண்பா......


                                                 I HAVE A DREAM
                                                 ----------------------




இரண்டாம் உலகத் தமிழ்ப் பதிவர் விழாவில் பங்கெடுக்க வேண்டும் என்னும் ஆசை அளவில்லாமல் இருந்தது. எப்படியாவது பங்கேற்று விடலாம், அப்படி பங்கேற்க முடிந்தால் இவ்வுரையை அனைவர் முன்னிலையிலும் நிகழ்த்த வேண்டும் என்றிருந்தேன். ஆனால் என்னால் பங்கேற்க முடியவிலை. இருந்தால் என்ன. ? பதிவாக எழுதி விட்டேன்.

அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமாயுள்ள உலகத் தமிழ் பதிவர் பெருமக்களே,முதற்கண் என் வணக்கம் முகந்தெரியா நட்புகளை முகந்தெரிந்து முகமன் கூறி வரவேற்றுக் களிக்கும் நல் உள்ளங்களே, இந்த இனிய வேளையில் ஒரு கனமான தலைப்பில் நான் பேசுவேன் என்று நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்.ஒரே நேரத்தில் நூற்றுக் கணக்கான உள்ளங்களைச் சிந்திக்க வைக்க இது போன்ற சந்தர்ப்பம் அமையுமோ தெரியாது. அப்படியே அமைவதாய் இருந்தாலும் உங்களுடன் கருத்துக்களைப் பகிர நான் இருப்பேனோ தெரியாது. காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது சொல் வழக்கு, அதைத்தான் நான் செய்கிறேன்.


நண்பர்களே எனக்கு ஒரு கனவு உண்டு. “ பெரிய மார்ட்டின் லூதர் கிங் “ என்னும் நினைப்பு என்று நீங்கள் எண்ணலாம். ஏன் அவர் மட்டும்தான் கனவு காண முடியுமா.?அவர் அமெரிக்காவின் கறுப்பின மக்களுக்காகக் கனவு கண்டார். நான் நம் சமுதாய மககளுக்காகக் கனாக் காண்கிறேன்.
   கனவுகள் பகற்கனவாய் , நிகழ முடியாததாய் இருக்கக் கூடாது.உள்ளத்தின் ஆதங்கங்கள் நலம் விளைக்கும் கனவாய் மலர்ந்து நிஜமாய் நிகழக்கூடாதா.? பல முறை நான் என் பதிவுகளில் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட விஷயங்கள்தான் இப்போது உங்கள் முன் கொட்டக் காத்திருக்கிறேன். என் பதிவுகளைத் தொடர்பவர்கள் சுமார் நூறு பேர் இருக்கலாம். அவர்களிலும் எழுத்தை ஒருபொழுது போக்காய் நினைப்பவர்கள் அறுபது சதவீதத்துக்கும் மேலிருக்கலாம். மீதி இருப்பவர்களில் பலரும் கருத்துக்களில் இருந்து மாறுபடலாம். ஏதோ ஒரு சிலர் கருத்துக்களுடன் ஒன்று பட்டாலும் ஏதும் செய்ய முடியாது என்று எண்ணி தூரப் போகலாம். ஆனால் நான் கூறும் செய்திகளில் உண்மை ஒளிவீசுகிறது என்பதில் கருத்து வேறுபாடு இருக்காது என்பது அவரவர்  நன்னெஞ்சங்களுக்குத் தெரியும். இங்கு கூடியுள்ள அனைவருக்கும் தெரியும் , எல்லோரும் சொல்வதுதான் , வள்ளுவன் முதலே சொல்லி வருவதுதான். “பிறப்பொக்கும் இதை உண்மையில் உணர்கிறோமா. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் மார்ட்டின் லூதர் கிங்   I HAVE A DREAM என்று சொன்னான் I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the colour of their skin but by the content of their character.”
இங்கு நான் சொல்கிறேன் “ நான் ஒரு கனவு காண்கிறேன். நம்மிடையே ஒரு சமுதாயம் உருவாகும் கனவு காண்கிறேன், அதில் ஏற்ற தாழ்வு என்ற ஒன்று இல்லாதிருக்கக் காண்கிறேன் அரசியல் சட்டம் உறுதி அளிக்கும் சமத்துவம் உரிமை எல்லாம் எல்லோருக்கும் சென்றடையக் கனாக் காண்கிறேன் ஏனென்றால் இவை எல்லாம் ஏட்டளவிலேயே இருக்கிறது ஏட்டளவில் உறுதியளித்திருந்தாலும் மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வில்லையே.
நண்பர்களே பலருக்கும் தெரிந்திருக்கும் இக்குறைபாடுகள் நீங்க என்ன வழி..?
பிறப்பொக்கும் என்று நம்பும் நாம் . அவரவர் வாழ்க்கைமுறை அமைவது அவர்களது பூர்வ ஜென்ம பலன் என்று தப்பித்துக் கொள்ள முடியாது. இந்த சமுதாய நடைமுறைகளுக்கு நாமோ நம்முடைய முன்னோரோ காரணம் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியும்.அற்றைக் காலத்தில் குறிப்பிட்ட காரணங்களுக்காக பகுத்து விடப்பட்ட பணி முறைகள் யாரும் எதிர்பார்க்கா விதத்தில் ஆதிக்க முறைகளுக்கு வழி வகுத்து விட்டது. சரி எது தவறு எது என்று கேள்வி கேட்கும் திறன் தரக்கூடிய கல்வி பலருக்கும் மறுக்கப் பட்டது
இது அந்நியரின் ஆட்சிக்  காலத்தில்தான் வேர் பிடித்தது என்று கூறி சமாதானம் அடைய முடியாது. காரணகர்த்தா யாராவது இருந்து போகட்டும். இன்றும் இந்நிலை நீடிக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அங்கும் இங்குமாக COSMETIC  சரிகட்டல்கள் தென்படுகின்றன. ஒடுக்கப் பட்டோருக்கு ஒதுக்கீடுகள் என்று நடை முறையில் சில சட்டங்கள் காண்கிறோம் சட்டங்களால் கொண்டு வரக் கூடிய மாற்றங்கள் அல்ல.இவை. மன மாற்றங்கள் வர வேண்டும் அம்மாதிரியான மாற்றங்கள் நிகழ்த்தக் கூடிய சட்டங்கள் வேண்டும் எல்லோருக்கும் சம உரிமைகள்  என்பது மனசளவில் ஏற்றுக் கொள்ளப் பட வேண்டும் அது நடக்கும் என்று நான் கனாக் காண்கிறேன். சாதி மத பேதங்களும் ஏழை பணக்காரன் எனும் வேறுபாடுகளும் வளர்ந்து வரும் சமுதாயத்திடம் இருக்காது என்று கனாக் காண்கிறேன். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் வளரும் பிஞ்சுகள் . எதிர்காலத் தலை முறைகள் மனம் பாதுகாக்கப் பட வேண்டும். அது கல்விக் கூடங்களில்தான் தொடங்க வேண்டும். எல்லோருக்கும் கல்வியில் சம வாய்ப்பு என்று இருந்தால் சிறார்களின் சிந்தைகளில் வேற்றுமை எண்ணம் உருவாகாது. எல்லோருக்கும் இலவசக் கல்வி, இலவசச் சீருடை, இலவச உணவு என்று கட்டாயப் படுத்தினால் மலரும் பிஞ்சு மனங்களில் வேற்றுமை எண்ணங்கள் உருவாகாது. ஒதுக்கீடு என்று கீழே உள்ளோரை மேலே கொண்டுவரும் முயற்சியில் மேலே இருப்பவர் மனம் மாற வாய்ப்பில்லை. ஏழை பணக்காரன் என்று கல்வியை வியாபாரம் ஆக்கும் முயற்சி தொடரும். கல்வி என்பது அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் வர்க்க பேதமற்ற , ஏற்ற தாழ்வில்லாத கல்வி முறையே நம் அடுத்த சந்ததியினரிடமாவது “பிறப்பொக்கும் என்னும் உண்மை நிலையை நிலை நிறுத்தும் என்று நான் கனாக் காண்கிறேன்.

முகம் தெரிந்திராத பதிவுலக நண்பர்களைக் கண்டோம் , சிரித்தோம், உண்டோம் மகிழ்ந்தோம் என்று மட்டுமல்லாமல் சீரிய சிந்தனைகளின் விளை நிலமாகவும் இப்பதிவர் பெருவிழா இருக்க வேண்டும் என்ற  எண்ணத்தின் உந்தலே  இவ்வுரைக்குக் காரணம். அனைவருக்கும் வணக்கம். நன்றி.