கற்றது -கடுகளவு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கற்றது -கடுகளவு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 மார்ச், 2012

நிர்வாக விளையாட்டுக்கள்.


                                          நிர்வாக விளையாட்டுக்கள்
                                          --------------------------------------
                                            (  MANAGEMENT GAMES..)

     ஒரு நிர்வாகத்தில் பல அடுக்குகளில் பணி புரிபவர் இருக்கிறார்கள்..ஒவ்வொரு நிலையில் இருக்கும் பணியாளருக்கும் ஒரு மேலதிகாரி இருப்பார். இப்படி பல அடுக்குகளிலும் பணி புரிபவர்கள் ஒற்றுமையுடனும் புரிதலுடனும் பணி புரிய வேண்டியது அவசியம். இதை விளக்கும் முகமாக இந்த விளையாட்டுப் பயிற்சி.

இந்த விளையாட்டை விளையாட குறைந்தது மூன்று குழுக்கள். வேண்டும்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருக்க வேண்டும். 1.மேலதிகாரி 2. மேற்பார்வையாளர். 3. தொழிலாளி. மேலதிகாரி குறியீடுகளை நிர்ணயம் செய்து, மேற்பார்வையாளர் வழிமுறைகளை வகுக்க தொழிலாளி அதை செய்து முடிக்க வேண்டும்.

இந்த விளையாட்டில் குறியீடு TARGET  என்பது எத்தனை கன சதுரங்களை (CUBES) ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க வேண்டும் என்பதே. மேலதிகாரி குறிப்பிடும் இலக்கை அடைய மேற்பார்வையாளர் தன் கீழ் பணியெடுக்கும் தொழிலாளிக்கு தன் கைப்பட செய்வது தவிர எல்லா உதவிகளையும் செய்யலாம். தொழிலாளியின் கண்கள் கட்டப் பட்டிருக்கும். அது தொழிலாளிக்குள்ள CONSTRAINT ஐ குறிப்பிடுவதாகும்.

இப்போது விளையாட்டைத் துவக்க ஒரு மேசை வேண்டும். தேவையான அளவு கனசதுரங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் தனித் தனியாகப் பிரிக்கப் பட்டு ஒரு குழுவின் டார்கெட் மற்ற குழுவுக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். மேலதிகாரி குறிப்பிடும் இலக்கு தொழிலாளிக்குத் தெரியக் கூடாது. மேற்பார்வையாளர் தொழிலாளிக்கு நிர்ணயிக்கும் இலக்கு மேலதிகாரிக்குத் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மூன்று கற்பனைக் குழுக்கள் விளையாடுவதைக் காணலாம்.

முதல் குழுவின் மேலதிகாரி-- மேற்பார்வையாளரிடம், “ இன்னும் அரை மணிநேரத்தில் 25-/ க்யூப்ஸ் அடுக்கப் பட்டிருக்க வேண்டும் நீங்கள் என்ன செய்வீர்களோ எனக்குத் தெரியாது I WANT THE RESULTS.  இலக்கு அடையப் படாவிட்டால் நிலைமை உங்களுக்கு எதிராக இருக்கும். YOU KNOW THAT I AM VERY STRICT. சொன்னது ந்டக்காவிட்டால் ...........

இரண்டாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம். “ உங்களுக்கு நாம் இலக்கை அடைய வேண்டிய அவசியத்தை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. நாம் எவ்வளவு க்யூப்ஸ் அடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்.? நீங்கள் எதையாவது செய்து 25-/ அடுக்கிவிட்டால் எல்லோருக்கும் நல்லது. 23-ஆவது நிச்சயம் அடுக்க வேண்டும். இல்லையென்றால் முதலாளிக்கு பதில் சொல்வது கஷ்டமாகிவிடும்.

மூன்றாவது குழுவின் மேலதிகாரி:-, அவரது மேற்பார்வையாளரிடம் “ கடந்த முறை
23-/ க்யூப்ஸ் இலக்கு அடைந்திருக்கிறோம். இதில் உங்கள் அனுபவமும் பங்கும் நான் சொல்லத் தேவை இல்லை.. தொழிலாளியின் திறமையும் தேவையும் உங்களுக்குத் தெரியும். 23-/ க்யூப்ஸ் அடுக்கியவர் இன்னும் சற்று முயன்றால் உங்கள் ஒத்துழைப்புடன் 25-/ அடுக்குவது முடியாததல்ல. 25-/க்கு மேல் செய்வதெல்லாம் கூடுதல் போனஸ் பெற வழிவகுக்கும். ALL THE BEST. !”

 இதை ஊன்றி கவனித்தால் நிர்வாகத்தின் மூன்று வித்தியாசமான அணுகு முறைகளைக் காணலாம்

இனி மேற்பார்வையாளர்கள் இதை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

முதற்குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக மிரட்டப் பட்டிருக்கிறார், விரட்டப் பட்டிருக்கிறார். மேலதிகாரியின் இலக்கை 27-/ ஆக மாற்றினால்தான் 25-/ ஆவது செய்ய முடியும், விரட்டாவிட்டால் வேலை நடக்காது. மிரட்டி உருட்டிஎப்படியாவது இலக்கை அடைய வேண்டும் நம் இலக்கை அடையாவிட்டாலும் மேலதிகாரியின் இலக்காவது எட்டலாம்  என்று எண்ணிக் கொண்டு களத்துக்கு வருகிறார்.

இரண்டாம் குழுவின் மேற்பார்வையாளர் நன்றாக யோசிக்கிறார். 25-/ தான் இலக்கு என்றாலும் 23-/  அல்லது 24-/ ஆவது செய்ய வேண்டும். 22-/ ஆனாலும் எதாவது சமாதானம் சொல்லி சமாளிக்கலாம்  என்ற ரீதியில் அவரது எண்ண ஓட்டம் இருக்கிறது.

மூன்றாவது குழுவின் மேற்பார்வையாளர், எந்த வழிமுறையைக் கையாளலாம் என்று யோசிக்கிறார். அவரது அனுபவத்தையும் சாமர்த்தியத்தையும் ஒருங்கே உபயோகிக்க வேண்டும். தொழிலாளிக்கு அவரது திறமையின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும். எங்கே சமயம் விரய மாகிறதோ அதை நீக்க வேண்டும். தொழிலாளியை ஊக்கப் படுத்தி உற்சாகப் படுத்த வேண்டும் இருக்கும் நிலையை அவருக்கும் சொன்னால் புரிந்து கொண்டு முழுத் திறமையையும் காண்பிப்பார். முதலில் ரிலாக்ஸாக  இருக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்துக் கொண்டு தயாரகிறார்.

எந்த மாதிரி நிலையில் மேற்பார்வையாளர்களின் செயல் பாடுகள் உருவாக்கப் படுகின்றன என்பது தெரிய வருகிறது

இனி திட்டங்களும் அணுகுமுறைகளும் என்ன பலன் தருகிறது என்று பார்க்கலாம்
முன்பே கூறியபடி தொழிலாளியின் கண்கள் கட்டப் படுகின்றன முதல் குழு தொழிலாளியிடம் கண்கள் கட்டப் படும் முன்பே தேவைகளும் இலக்குகளும் விளக்கப் படவில்லை.இலக்கு 27-/ க்யூப்ஸ் அடுக்கப் பட வேண்டும் இல்லையென்றால் தண்டனை கிடைக்கலாம் என்று பயமுறுத்தப் படுகிறார். ( விளையாட்டில் கண்களைக் கட்டுவது நடைமுறை குறைபாடுகளை குறிக்கவே என்று கூறி இருந்தேன். மேற்பார்வையாளரின் கைகளும் கட்டப் படும். அவர் தொழிலாளியை வேலை வாங்க வேண்டும். அவரும் சேர்ந்து செய்யக் கூடாது என்பதுதான் காரணம்.) முதல் குழுவில் அடுக்குதல் துவங்கு முன்பே ஒரு வித இறுக்கமான சூழ்நிலை இருக்கும். இந்தச் சூழலில் அவரது கண்கள் இன்னும் இருக்கமாகக் கட்டப் பட்டுவிடும். ( SHOWS MORE CONSTRANTS ) மேசையில் க்யூப்ஸ் ஒழுங்காக இல்லாமல் இருக்கிறது. இலக்கைச் சொல்லி விட்ட மேற்பார்வையாளர் தொழிலாளி எப்படி வேலை செய்கிறார் என்று கவனிக்காமல் அதை முடிக்க வேண்டியது அவன் பொறுப்பு எனும் பாவத்தில் இருப்பார் .நடுநடுவே வந்து முடிந்து விட்டதா என்று கேட்பார்.

இரண்டாவது குழுவில் மேற்பார்வையாளர் தொழிலாளியிடம் கெஞ்சாத குறையாக இலக்கினை அடைய வேண்டிய காரணத்தைக் கூறுகிறார். அடையாவிட்டால் தானும் சேர்ந்து தண்டிக்கப் படுவொம் என்று கூறுகிறார். எப்படியாவது கடந்த இலக்கான 23-/வது அடுக்க வேண்டும். ஓவர்டைம் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். மேசையில் எவ்வளவு க்யூப்ஸ்கள் இருக்கிறது என்று கவனிக்கவில்லை.

மூன்றாவது குழுவில் மேற்பார்வையாளரும் தொழிலாளியும் எப்படி இலக்கை அடையலாம் என்று சேர்ந்து சிந்திக்கிறார்கள். க்யூப்ஸ் அடுக்க வேண்டிய மேசை ஆடாமல் இருக்கிறதா என்று சோதிக்கப் படுகிறது. அடுக்கப் படவேண்டிய க்யூப்ஸ் தேவையான எண்ணிக்கையில் இருக்கிறதா என்று பார்க்கப் படுகிறது. கூடிய மட்டும் ஒரு ரிலாக்ஸான சூழல் கொண்டு வரப் படுகிறது. வேலை துவங்குமுன் தொழிலாளியும் மேற்பார்வையாளரும் கை குலுக்கிக் கொள்கிறார்கள்.

விளையாட்டு முடிந்து மூன்று குழுக்களும் அடைந்த இலக்கை கவனிக்கலாம்.
முதல் குழு 20-/ க்யூப்ஸ் அடுக்கியிருந்தது. இரண்டாவது குழு 24-/ க்யூப்ஸ் அடுக்கி யிருந்தது. மூன்றாவது குழு 27-/ க்யூப்ஸ் அடுக்கி இருந்தது.



ஒவ்வொரு குழுவையும் விசாரிக்கும்போது


குழு 1-/ன் மேலதிகாரி:-தொழில் தெரியாத தொழிலாளியும் உருப்படாத மேற்பார்வையாளரும் இருந்தால்  எப்படி இலக்கை அடைய முடியும்.?

குழு 1-/ன் மேற்பார்வையாளர் இலக்கு நிர்ணயித்து விட்டால் போதுமா.? இந்தமாதிரியான தொழிலாளியை வைத்துக் கொண்டு இதைச் செய்ததே அதிகம்.. வெறுமே மிரட்டினால் வேலை நடக்குமா.?

குழு 1-/ன் தொழிலாளி. அங்கிருந்த க்யூப்ஸ்களை அடுக்கினதே என் சாமர்த்தியம். தேவையான க்யூப்ஸ்களே இல்லாதிருக்கும்போது இலக்கு மட்டும் நிர்ணயித்து எந்தக் கவலையும் இல்லாமல் குறை சொல்லும் அதிகாரிகளிடம் வேலை செய்வதே என் தலை எழுத்து.

குழு 2-/ன் மேலதிகாரி.. கடந்த முறையை விட இந்தமுறை அதிக இலக்கை அடைந்து விட்டோம் என்ன.... ஒரு குறை என்னவென்றால் இலக்கை அடைய செலவு கூடிவிட்டது

குழு 2-/ன் மேற்பார்வையாளர்.. தொழிலாளி அடுக்கும்போது கூடவே இருந்து அவரை உற்சாகப் படுத்திக் கெஞ்சிக் கூத்தாடி ஓவர்டைம் எல்லாம் கொடுத்து அப்பப்பா என் தாவு தீர்ந்து விட்டது. நானும் சேர்ந்து செய்திருந்தால் என் கை கட்டில்லாமல் இருந்திருந்தால். 30-/ க்யூப்ஸ் கூட வைத்திருக்கலாம்.

குழு 2-/ன் தொழிலாளி. ஓவர்டைம் இல்லாமல் இவர்கள் சொல்வதை செய்தால் நம் மேல் குதிரை ஏறிவிடுவார்கள். இலக்கு நிர்ணயிக்கிறார்களே , இவர்களால் இதை செய்ய முடியுமா. நம் பாடு இவர்களுக்கு எங்கே தெரிகிறது.

குழு 3-/ன் மேலதிகாரி.. ஊக்கப்படுத்தி வசதிகள் செய்து கொடுத்தால் இலக்கை அடைய முடியும். என் குழுவில் நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை. நான் ஒரு ஊக்குவிப்பானாக செயல்படவே விரும்புவேன்.



குழு 3-/ன் மேற்பார்வையாளர். என் மேலதிகாரிக்கு என் மேல் நம்பிக்கை. எனக்கு என்னோடு பணி செய்யும் தொழிலாளியிடம் நம்பிக்கை. திறமை இருக்கும் இடத்தில் தட்டிக் கொடுத்தால் இலக்கை அடைய முடியும்.


குழு 3-/ன் தொழிலாளி. எனக்கு வேலை செய்ய பூரண சுதந்திரம் உண்டு, என் தேவைகளை உணர்ந்து வேண்டிய சமயத்தில் உதவும் மேற்பார்வையாளர். க்யூப்ஸ் அடுக்கும்போது பக்கத்தில் இருந்து கோணலாகப் போகாமல் நேராக வர அவ்வப்போது எனக்கு உதவியது மட்டுமல்ல, மேசை ஆடாமல் இருக்கவும் கைக்கெட்டியவாறு க்யூப்ஸிருக்கும்படியும் பார்த்துக்கொண்டு ஊக்கப் படுத்தும் மேற்பார்வையாளருக்கும் இதில் பெரும் பங்குண்டு.

MANAGEMENT  என்பதில் MAN-MANAGEMENT பெரும் பங்கு வகிக்கிறது. நான் வேலையில் சேர்ந்ததில் இருந்து பலதரப் பட்ட அதிகாரிகள், மேற்பார்வையாளர்கள் தொழிலாளிகள் என்று பார்த்து விட்டேன். தொழிலாளிகளை அவர்களின் திறன் அறிந்து அவர்களுடைய முழு ஆற்றலையும் வெளிக் கொண்டு வருவது மேலதிகாரிகளின் கையில் இருக்கிறது. என் பழைய பதிவு ”எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் “ நான் அந்தக் காலத்தில் எழுதியது. அதில் ஓரளவுக்கு ஒரு தொழிலாளியின் மன நிலையைப் பிரதிபலிக்க முயன்றிருக்கிறேன்.

எந்த ஒரு தொழிலாளியும் தான் வேலைவாங்கப் படுவதாக எண்ண விரும்புவதில்லை..வேலை வாங்கும்போது அது அவர்களாக விரும்பிச் செய்வதாக இருக்க வேண்டும்.அதிகாரிகள் தொழிலில் நெளிவு சுளிவுகள் தெரிந்தவராக இருக்க வேண்டும்.வேலை தெரிந்த அதிகாரிகளுக்கு தொழிலாளர் மத்தியில் என்றும் மதிப்பு உண்டு..
---------------------------------------------------------------              .         .                            




.

புதன், 16 நவம்பர், 2011

கடவுளோடு ஒரு உரையாடல்....

                               கடவுளோடு ஒரு உரையாடல்..
                              --------------------------------------------
( கனவொன்று கண்டேன்.அதில் கடவுளைக் கண்டேன். 
  அவருடன் உரையாடினேன். விழித்துப் பார்த்தேன். கண்டது 
  அனைத்தும் தெளிந்தும் தெளியாமலும் உள்ளத்தில் ஓட, 
  காகிதத்தில் எழுதி வைத்தேன்.உங்களிடம் பகிர்கிறேன். ) 


கடவுள்:-என்னைக் கூப்பிட்டாயா.?

நான் :-    கூப்பிட்டேனா.? இல்லையே...யார் நீங்கள் .?

கடவுள்:-நான் தான் கடவுள். உன் வேண்டுதல்கள் எனக்குக்
                  கேட்டது.உன்னுடன் கொஞ்சம் உரையாடலாமே
                  என்று வந்தேன்.

நான்:-    நான் அவ்வப்போது வேண்டுவது உண்டு. வேண்டும்
                போது மனம் லேசானதுபோல் தோன்றும். இப்போது
                 நான் மும்முரமாய் ( BUSY )இருக்கிறேன்


கடவுள்:-நீ எதில் மும்முரமாய் இருக்கிறாய்.? எறும்புகளும்தான்
                  வேலையில் மும்முரமாய் இருக்கின்றன..

நான்:-    தெரியவில்லை. ஆனால் எனக்கு நேரம் கிடைப்பது
                 இல்லை. வாழ்க்கை எப்போதும் ஒரே ஓட்டமாய்
                 இருக்கிறது

கடவுள்:-உண்மைதான். செயல்பாடுகள் (ACTIVITIES )உன்னை
                 மும்முரமாக்கும். பயன்பாடுகள் (PRODUCTIVITY )பலனை
                 தரும்.செயல்பாடுகள் நேரத்தைக் குடிக்கும். பயன்பாடு
                 அந்தத் தளையிலிருந்து விடுவிக்கும்.

நான்:-    புரிகிறார்போல் இருக்கிறது. இருந்தாலும் பூராவும்
                 விளங்க வில்லை. எப்படியானாலும் நீங்கள் பேசவருவீர்.
                கள் என்று நான் எண்ணவில்லை.

கடவுள்:-உன் நேரத்துக்கு எதிரான போராட்டத்துக்கு தீர்வு
                 காணவும்,சில தெளிவுகளைச் சொல்லவும் வந்துள்ளேன்

நான்:-    வாழ்க்கை ஏன் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது.?

கடவுள்:-முதலில் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்வதை நிறுத்து.
                  வாழ்க்கையை வாழ். அதை ஆராய்ச்சிசெய்வதே அதை
                  சிக்கலாக்கும்.

நான்:-    ஏன் வாழ்க்கை எப்போதும் சந்தோஷமாக இல்லை.?

கடவுள்:-உன்னுடைய இன்று பற்றி, நேற்றின் நாளையாய் இருந்த
                  போதேஆராயத் தொடங்கி விட்டாய்.ஆராய்ந்து கவலைப்
                  படுவதே உன் வாடிக்கையாகிவிட்டது அதுவே நீ மகிழ்ச்சி
                  யாக இல்லாததன் காரணம்.

நான்:-     இவ்வளவு நிச்சயமில்லாத்தன்மை இருக்கும்போது
                  எப்படிக் கவலைப்படாமல் இருக்க முடியும்.?

கடவுள்:-நிச்சயமின்மை தவிர்க்க இயலாதது. கவலை தேவை
                  இல்லாதது; தேடிக்கொள்வது.

நான்:-     நிச்சயமின்மை வலி தருகிறதே.

கடவுள்:-வலி தவிர்க்க முடியாதது; ஆனால் வேதனையாக
                  எண்ணுவது நாமே தேடுவது. ( PAIN IS INEVITABLE. BUT
                  SUFFERING IS OPTIONAL )

நான்:--  வேதனையால் வாடுவது நாம் தேடுவதென்றால் ஏன்
                 எப்போதும் நல்லவர்கள் கஷ்டப் படுகிறார்கள்.?

கடவுள்:-வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது,மின்னாது.
                  தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.
                  நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள்,ஆனால்
                  வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள்
                 அவர்களை சிறப்பிக்கும். கசப்பிக்காது.

நான்:-    இந்த வெதனைகளும் சோதனைகளும் உதவும் என்று
                 சொல்கிறீர்களா.?

கடவுள்:-அனுபவம் ஒரு ஆசான். அவன் முதலில் தேர்வு வைத்து
                  பின் அதன் மூலம் பாடம் கற்பிக்கிறான்.

நான்:-    இருந்தாலும் நாம் ஏன் இந்த சோதனைகளுக்கு உட்பட
                 வேண்டும். ?இவற்றிலிருந்து விடுபட முடியாதா.?

கடவுள்:-சோதனைகள் என்பது, மனோதிடத்தை அதிகரிக்க 
                  உதவும் ,விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் 
                  பாடங்களே. போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன
                  வலிமை வரும். சோதனைகள் இல்லாதபோது அல்ல.

நான்:-    உண்மையில், இவ்வளவு வேதனைகளுக்கு உள்ளாகியும்
                 எங்குதான் போகிறோம் என்பதே புரிவதில்லை.

கடவுள்:-புறமே தேடினால் போகுமிடம் தெரியாது. உன் அகத்தில்
                  தேடு. வெளியே தேடினால் கனவாய்த் தெரியும். உள்ளே
                  தேடினால் காட்சிகள் விரியும். கண்களால் காண்பது
                  பொருட்களின் காட்சி. இதயக் கண் காட்டும்
                  பொருண்மையின் மாட்சி.

நான்:-     நேரான வழியில் செல்வதைவிட, வேகமாக வெற்றி
                  கிடைக்காதிருப்பதே நோகிறது. இதற்கு என்ன செய்ய.?

கடவுள்:-வெற்றி என்பது மற்றவர் தரும் குறியீடு. கடக்கப்போகும்
                   பாதையை உணர்ந்து, நீ நிர்ணயிக்கும் திருப்தி எனும்
                  வெற்றியின் அளவுகோல் கடந்துவந்த பாதையினால்
                  ஏற்பட்டதைவிட சிறப்பாக இருக்கும்.நீ திசைமானியை
                  உபயோகி. மற்றவர்கள் கடிகாரத்தை உபயோகிக்கட்டும்.

நான்:-     கஷ்ட காலங்களில் எப்படி திசை நோக்கி நிற்பது.?

கடவுள்:-கடக்கப்போகும் பாதையைவிட கடந்து வந்த பாதையை
                  கணக்கில் கொள்.உனக்குக் கிடைத்த வரங்களை
                  எண்ணில் கொள்.கிடைக்காததையும் தவறவிட்டதையும்
                  நினைத்துத் தளராதே.

நான்:-     மக்களிடம், உன்னை ஆச்சரியப் படுத்துவது எது.?

கடவுள்:-கஷ்டங்களை அனுபவிக்கும்போது “ ஏன் எனக்கு “
                  என்பவர்கள் வளர்ச்சி யடைகையில் ”எனக்கு ஏன் “ என்று
                  கேட்பதேயில்லை. உண்மை அவர்கள் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் அநேகர். உண்மையின் பக்கம் இருப்பதை
                  விரும்புவோர் சிலரே.

நான்:-   சில நேரங்களில்“ நான் யார்.? நான் ஏன் இங்கிருக்கிறேன்?”
                 என்று கேள்வி எழுகிறது. பதில்தான் கிடைப்பதில்லை.

கடவுள்:- நீ யார் என்று கேள்வி கேட்டு வீணாகாதே. நீ யாராக
                   வேண்டும் என்று தீர்மானி. ஏன் வந்தேன் என்று
                   கேட்காதே. காரணத்தை ஏற்படுத்து. வாழ்க்கை என்பது
                   கண்டுபிடிப்புகளின் ( DISCOVERY ) தொகுப்பல்ல.
                  தோற்றுவிப்பின் செயல்பாடே. (WORK OF CREATION.)

நான்:-      வாழ்வில் ஏற்றமளிக்க ,பலன் கிடைக்க என்ன செய்ய
                   வேண்டும்.?

கடவுள்:-கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்.
                  நிகழ் காலத்தை ஊக்கத்துடன் அணுகு. வருங்காலத்தை
                  தைரியமாக எதிர்கொள்.

நான்:-     கடைசியாக ஒரு கேள்வி சில நேரங்களில் என் வேண்டு
                 தல்களுக்கு விடை கிடைப்பதில்லை என்று
                 உணர்கிறேன்.

கடவுள்:-விடை கிடைக்காத பிரார்த்தனைகள் என்று சொல்வதை
                  விட, விடை “ இல்லை “ என்பதே பதிலாயிருக்கும்.

நான்:-    உங்கள் வரவுக்கும் அறிவுரைக்கும் நன்றி.புதுப்பொலி
                வுடன் ஒவ்வொரு புது நாளையும் எதிர் கொள்வேன்.

கடவுள்”-நன்று. பயத்தைக் களை. நம்பிக்கையை தக்கவை.
                  சந்தேகங்களை நம்பாதே. நம்பிக்கையை
                  சந்தேகிக்காதே.
                  -----------------------------------------------------------------------      


 



திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கவிதைகற்கிறேன்

கவிதை கற்கிறேன்


உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களுக்கு வார்த்தைகளைக்
கோர்வையாகக் கட்டி கவிதை என்று நான் எண்ணி எழுதிக்
கொண்டிருந்தாலும்,என் அடி மனசில் அது திருப்தி தருவதாய்
இருக்கவில்லை. இதையே எது கவிதை என்று ஒரு பதிவு
எழுதினேன். பலரும் பலவிதக் கருத்துக்களைக் கூறி இருந்தனர்
எது எப்படியாயினும், நான் எப்படி எழுதி இருந்தாலும், எனக்கு
மரபு வழிக் கவிதைகளின் விதிகளாவது தெரிந்திருக்க வேண்டும்
என்ற உந்துதலில், கணினியில் பல இடங்களில் தேடினேன்.
அதற்கு முதல் தூண்டுதலாக “ நாட்டாமை “ அவர்களின் பின்னூட்
டத்தில் ,நான் படிக்க ஒரு முகவரி கொடுத்திருந்தார். அதிலும்
இன்னும் பல வலைகளிலும் கொடுக்கப் பட்டிருந்த விபரங்கள்
என் ஆர்வத்தை இன்னும் தூண்டியது. அப்படிப் படித்துக் கொண்டு
வரும்போது ஓரிடத்தில் நான் எழுதிக் கொண்டிருந்ததைப்போல்
எழுதுவதை சாடியிருந்தார்கள். உரைநடை ஆளுமை, 
எழுத்தாண்மை, கருத்தாண்மை ,வசன நடை என்று கூறலாம். 
கவிதை என்று சொல்லாதீர்கள்.அது யாப்பிலக்கணம் படைத்த 
தமிழனுக்கு இழுக்கு என்று சற்று காட்டமாகவே எழுதியிருந்தனர்

தொடர்ந்து படித்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்வதைப் பார்த்த
என் மனைவி அன்றே அறிந்திருக்க வேண்டியது அல்லவா என்று
பழித்துக் காட்டினார். என்னதான் வலையில் படித்து தெரிந்து
கொண்டாலும் என் தவறுகளைத் திருத்த ஓர் ஆசிரியர் தேவை
என்று உணர்ந்து கொண்டேன். நான் திரு ரஜினி ப்ரதாப் சிங் அவர்
களை நாடினேன். நான் எழுதியவற்றின் குறைகளை சுட்டி காட்டி
என்னால் எழுத முடியும் என்று ஊக்கம் கொடுத்தார். நான் கீழே
எழுதி இருப்பது இன்னும் திருத்தப் படாதது. குறைகளை பதிவின்
பின்னூட்டத்தில் குறிப்பிடக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான்
அறிந்து கொண்ட சில பாடங்களையும் விதிகளையும் கூடவே
பதிவிடுகிறேன். ஆர்வம் இருப்பவர் அறிந்து கொள்ளலாம். .  

அசைகள் நேரசை, நிரையசை எனப் பிரிக்கப்பட்டுள்ளது


குறில் தனித்தும் (எ.கா.--” க” )
குறில் தனித்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”கல்” )
நெடில் தனித்தும் ( எ.கா,--”நா” )
நெடிலுடன் ஒற்றடுத்தும் ( எ.கா.--” நாள்” )   வருவது 
நேரசையாகும். 


குறிலிணைந்தும்( எ.கா.--”பல” )
குறிலிணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”களம்”)
குறில் நெடில் இணைந்தும் ( எ.கா.--”பலா” )
குறில்நெடில் இணைந்தும் ஒற்றடுத்தும் ( எ.கா.--”விளாம்” )
வருவது நிரையசை ஆகும்

அசை பிரிக்க சில உதாரணங்கள் 


மன்/னன்----- மெய்யெழுத்து வந்தால் ஒரு கோடு.
மா/ னம்------ஒரு நெடில் வந்தால் ஒரு கோடு. 
மரு/ து-------இரண்டு குறில் வந்தால் ஒரு கோடு.
வரா/ மல்----ஒரு குறிலும் அதன் பின் ஒரு நெடிலும்
மருந்/து ------இரு குறிலும் ஒரு மெய்யும்
பராத்/ பர---குறிலுடன் நெடில் பின் மெய்
பிறர்க்/கு--இரு மெய்களுக்குப் பிறகு

தளை தட்டுதல் 


தேமா, புளிமா என வரும் சீர்களை அடுத்து வரும் 
நிரை கொண்டு துவங்க வேண்டும். மற்ற சமயங்களில்
 நேர்கொண்டு துவங்க வேண்டும் 

சீர்கள்
நேர் நேர்---தேமா 
நிரை நேர்---புளிமா
நேர் நிரை ---கூவிளம்
நிரை நிரை ---கருவிளம் 
நேர் நேர் நேர்---தேமாங்காய்
நிரை நேர் நேர்--புளிமாங்காய்
நிரை நிரை நேர்--கருவிளங்காய்
நேர் நிரை நேர்---கூவிளங்காய்
நிரை நிரை நிரை--கருவிளங்கனி
நேர் நிரை நிரை --கூவிளங்கனி
நேர் நேர் நிரை --தேமாங்கனி
நிரை நேர் நிரை --புளிமாங்கனி  


இது தவிர இன்னும் பல விதிகள் சொல்லப் பட்டுள்ளது.
ஏதோ ஆர்வக் கோளாரால் நானும் இவற்றைப் படித்து
புரிந்து எழுத முயற்சி செய்து ஒரு சில தவறுகள் செய்து
திருத்திக் கொண்டுள்ளேன் என நினைத்து எழுதியதைப்
பதிவிடுகிறேன். ஒன்று நன்றாகப் புரிந்து கொண்டேன்.
மரபுக் கவிதையின் விதிகள் தெரிந்திருந்தாலும்
எண்ணங்களைக் கவிதையாய் வடிக்க கூடவே வார்த்தை
களும் எழுத்தும் நம் வசப்பட வேண்டும். அது படைத்தவர்கள்
தமிழன்னையால் அனுக்கிரகிக்கப் பட்டவர்கள்.

                இது என் கவிதை.
             

எதுதான் கவிதை எனநான் எழுதினேன்
ஏதும் சரியே எனவே இயம்பினர்
ஏற்காத உள்ளம் உணர்ந்தது யாப்பியல் 
கற்றுத் தெளிதல் சிறப்பு. 


மரபியலில் பாட்டெழுதக் கற்க அலகிட்டு
சீர்பிரித்தால் மாமுன் நிரையும் விளமுன்நேர்
சீராய் வருதல் தளைதட்டா திருத்தல் 
வேண்டும் புரிந்து கொள் 


எது/தான்--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
கவி/தை--நிரைநேர்---புளிமா--( மாமுன் நிரை )
என/நான்-நிரை நேர்--புளிமா---(மாமுன் நிரை )
எழு/தி/னேன்-நிரை நேர் நேர்--புளிமாங்காய்(காய் முன் நேர் )


ஏ/தும்--நேர் நேர்--தேமா--(மாமுன் நிரை )
சரி/யே--நிரை நேர்--புளிமா--( மாமுன் நிரை )
என/வே--நிரை நேர்--புளிமா (மாமுன் நிரை )
இயம்/பி/னர்--நிரைநேர்நேர்- புளிமாங்காய் (காய் முன் நேர் )


ஏற்/கா/த-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )
உள்/ளம்--நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
உணர்ந்/தது-நிரைநிரை--கருவிளம்--( விளமுன் நேர் )
யாப்/பி/யல் நேர்நேர்நேர்--தேமாங்காய் (காய் முன் நேர் )


கற்/றுத் நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
தெளி/தல்--நிரைநேர்--புளிமா (மாமுன் நிரை )
சிறப்பு (ஈற்றடி கடைசி சீர்.)


மர/பிய/லில்-நிரைநிரைநேர்-கருவிளங்காய்(காய் முன் நேர் )
பாட்/டெழு/தக் நேர்நிரைநேர்-கூவிளங்காய் (காய் முன் நேர் )
கற்/க --நேர்நேர்--தேமா--( மாமுன் நிரை )
அல/கிட்/டு-நிரைநேர்நேர்--புளிமாங்காய்--(காய்முன் நேர் )


சீர்/பிரித்/தால்--நேர்நிரைநேர்--கூவிளங்காய்( காய் முன் நேர் )
மா/முன்--நேர்நேர்--தேமா (மாமுன் நிரை )
நிரை/யும்--நிரைநேர்--புளிமா--(மாமுன் நிரை )
விள/முன்/நேர் --நிரைநேர்நேர்--புளிமாங்காய்(காய்முன்நேர் )


சீ/ராய்--நேர்நேர் -தேமா--( மாமுன் நிரை )
வரு/தல்--நிரைநேர்--புளிமா ( மாமுன் நிரை )
தளை/தட்/ டா--நிரைநேர்நேர்-புளிமாங்காய்--( காய் முன் நேர்)
தி/ருத்/தல்-நேர்நேர்நேர்--தேமாங்காய்--( காய் முன் நேர் )


வேண்/டும்--நேர்நேர் --தேமா -( மாமுன் நிரை )
அவ/சியம்-நிரை நிரை --கருவிளம் ( விளம் முன்நேர் )
கல் ( ஈற்றடி கடைசி சீர் )


    ( வலையுலகுக்கு வந்து ஓராண்டு 28-08-2011 -டன் முடிகிறது, 
        ஒரு தேர்வு எழுதியதுபோல் இருக்கிறது. தேறினேனா இல்லையா
        என்பது ஆசிரியர்கள் கையில் )




   



















        

             



-




















வியாழன், 28 ஜூலை, 2011

எது கவிதை.?



    குடந்தை ஸ்ரீ சாரங்கபாணி கோயிலில் கண்ட ரதபந்தன கவிதை
          -----------------------------------------------------------------------                   
                                    திருவெழுக்கூற்றிருக்கை
                                    -----------------------------------
     
எது கவிதை.?
-----------------
     -


  பாட்டெழுதுவது என்ன பெரிய பாடா, பாட்டா,
  என்றென் பேரன் கேட்டது ,கவிதை எழுத 
  கருவுக்காக காத்திருந்தபோது நினைவிலாடியது.
  உணர்வினால் உந்தப்பட்டு எழுதினால்
  அதில் உயிரிருக்கும், கவிதையும் வசமாகும்
 என்று நான் கூறியதும், உணர்வை சொல்லில்
 குழைத்துப் பார்த்தால் உதடு உதிர்ப்பதும்
 கவிதையாகும் என நண்பர் ரமணி எழுதியதும்
 என் சிந்தனையில் வந்து மோதியது.

       உணர்வுகள் முட்டி மோத நிகழ்வுகள்
       நடந்திருக்க வேண்டும். மனசும் பாதிப்படைந்து
       இருக்க வேண்டும்.புனைவுகளில் சாத்தியமா.?
       எழுதும்போது சொல்லாடல் செய்து
       இல்லாததை இருப்பதாய் கற்பிதம் செய்தால்,
       எழுதும் எழுத்தில் உயிர் இருக்குமோ ,உண்மை
       இருக்குமோ , எண்ணங்கள் கடத்தப்படுமோ.?

எண்ணியதை சொல்லவே தட்டுத் தடுமாறும்
நெஞ்சம் மரபுப்படி எழுத அறிந்திருக்க வேண்டியது
என்னென்ன.?நிலவைப் பிடித்து அதன் கறைகள்
துடைத்து குறுமுறுவல் பதித்த முகம் என்று
எழுதும்போது அது புனைவுதான் என்றாலும்,
எழுதியது உருவகப் படுத்தினால் தோன்றுவதென்ன.?
பார்க்க மனம் விழையுமா, இல்லை சகிக்குமா.?

     சில கவிதைகள் படிக்கையிலே எழுத்தின் பின்புலம்
    அறியப்படாவிட்டால், மொழி அறிவிருந்தும்
    பொருளறிவு தெரியாமல் போகும்.

அடி சீர் தளை என்று அநேகம் உண்டு,
இலக்கணமுண்ர்ந்து கவிதை வடிக்க
எனக்கியலுமோ, தெரியவில்லை. 
    
     அண்மையில் குடந்தையில் திருவெழுக்கூற்றிருக்கை 
     ரதபந்தனக் கவியாகக் கண்டேன். இறைவனிடம் 
     இறைஞ்சும் கவிதை என்றமட்டில் புரிந்தது.
    புரிந்ததன் விளக்கம் வேண்டி பதிவுலகை அணுகினேன். 
    பலரும் உதவினர். கணினியும் உறுதுணை செய்தது. 
    படிக்கப் படிக்க நான் எழுதுவது கவிதை என்றெண்ணுதல் 
    அறியாமையின் உச்சம் என்றே உணர வைத்தது. 

கவிதைக்கு இலக்கணமுண்டு, மரபுண்டு, நியமமுண்டு, 
இன்னும் என்னென்னவோ இருக்க, வெறும் வார்த்தை 
அலங்காரங்களால் போர்த்த முயலுதல் அறியாமையின் 
விளைவன்றி வேறென்ன சொல்ல.?
      
     உணர்ச்சிகளும், உணர்வுகளும் உந்த எழுதுதல் 
     படிக்கப் பலனளிக்கலாம்.நம்மை அறிய உறுதுணை
    செய்யலாம்.. ஆனால் கவிதையாகுமா.?
  --------------------------------------------------------------