என்றாவது ஒரு நாள்.......என் கருத்துரை
-------------------------------------------------------------
என்றாவது ஒரு நாள் சிறுகதைத் தொகுப்பு.
இதுவரை எந்த நூலுக்கும் கருத்துரையோ விமரிசனமோ எழுதி இராத எனக்கு
ஆஸ்திரேலியாவில் வாசம் செய்யும் “ விமர்சன வித்தகி” கீதா மதிவாணனின் மொழிபெயர்ப்புச் சிறு கதைத் தொகுப்புக்கு கருத்துரை வழங்குவது முள்ளின் மேல் நடப்பது போன்றது. சிறுகதைகளின் நீள அகல ஆழங்களில் கைதேர்ந்தவரின் நூலுக்கு சற்று கவனத்துடனேயே கருத்துரை எழுதுகிறேன் பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளரின் கதைகளை திருமதி கீதா மதிவாணன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். மொழிபெயர்ப்பு செய்யும் போது சாதகங்களும் இருக்கிறது பாதகங்களும் இருக்கிறது.கதைகளின் கருப்பொருளுக்கு இவர் பொறுப்பல்ல.சொல்லப்படும்விதத்துக்குமிவர் பொறுப்பல்ல ஆனால் பலதரப்பட்டவிதத்தில் எழுதப்பட்ட உபயோகிக்கப்பட்ட மொழியை ஆங்கிலம்தானென்றாலும் உள்வாங்கி அதை மொழிமாற்றம் செய்வது கடினமான காரியமே, அதை திருமதி கீதா மதிவாணன் செவ்வனே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும் ஏனென்றால் கதைகளைப் படித்துச் செல்லும் போது கொடுக்கப்பட்ட விவரணைகளிலும் கதையின் கருத்தோடு ஒன்றும் போதும் கவனங்கள் சிதறுகிறது. அந்த விவரிப்புகளை உள்வாங்கும்போது இடம் பொருள் ஏவல் பற்றிய சிந்தனைகளில்கற்பனை செய்யும் மனம் அலை பாய்கிறது.அதையும் மீறி ரசிக்க ஒன்றுக்கு இருமுறை வாசிக்க வேண்டி உள்ளது.அதறகு கீதா மதிவாணன் எப்படி பொறுப்பாவார் .?
இங்கிலாந்திலிருந்து குடி பெயர்க்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை ஆதாரங்களையும் வாழ்வு முறைகளையும் மனித சுபாவங்களையும் சொல்லிப் போகின்றன கதைகள், ஆசாபாசங்கள் மனிதருக்கு எங்கிருந்தாலும் ஒருபோல்தான் என்று தெளிவாக்கிச் செல்கின்றன இக்கதைகள் மேற்கத்தியவரின் வாழ்க்கை முறையை கற்றுத் தெரிந்து கொண்ட நமக்கு பல கதை மாந்தர்கள் நம்மில் சிலரைப் போல் இருப்பது புதிதாய் இருக்கிறது
முதல் சிறுகதை மந்தையோட்டியின் மனைவி என்னும் சிறு கதையைப் படிக்கும் போது நான் என் பதிவில் என் அனுபவங்களை ஓ பாம்பு என்னும் பதிவாக எழுதி இருந்தது நினைவிலாடியது.அதில் என் வீட்டில் பாம்பென்று நினைத்து இரவெல்லாம் கண்விழித்து காலையில் வெளியே தலை காட்டிய ஜந்துவை நாங்கள் அடித்துக் கொன்று விட்டோம் . பிறகு பார்த்தால் அது ஒரு அரணை ..! மரக் கம்பங்களாலும் பலகையாலும் கட்டப் பட்டிருந்த வீட்டுக்குள் பாம்பு ஒன்று நுழைய அதை அடித்துக் கொல்வதுதான் கதை என்றாலும் கூடவே அவர்களது வாழ்க்கை முறைகளையும் சொல்லிச் சென்றது சிறப்பு
மந்தை ஓட்டிச் சென்ற கணவன் இல்லாத நேரத்தில்குழந்தைகளுடன் இருக்கும் ஒரு தாயின் பரிதவிப்பு நன்றாகவே சொல்லப் பட்டிருக்கிறது
அரண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான் இருளில் தனியே செல்லும் போது பின்புறமிருந்து எழும் ஒலி காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட ஒரு சீனத்தவனின் ஆவி என்று பயந்து நடுங்கியதும் காலையில் தன் தொப்பியிலிருந்து கட்டித் தொங்கவிடப்பட்டிருந்த நாடாக்கள் காற்றில் அசையும் போது எழுப்பிய ஒலி என்று தெரிந்து கொள்வதும் அசல் திகில்தான் என்னவோ தெரியவில்லை. இந்தக் கதையும் நான் எழுதி இருந்த அரண்டவன் கண்ணுக்கு என்னும் பதிவை நினைவு படுத்தியதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.
பணியிலிருந்து களைத்து வரும் கணவன் எப்போதும் தொண தொணக்கும்மனைவி, அனுசரணை உள்ள குழந்தைகள் ஒவ்வொருவர் மனநிலை. ஏனோ நம் கிராமத்துக் கதை ஒன்றுபோல் தோன்றுகிறதுஒற்றைச் சக்கர வண்டிநம்பிக்கையோடு அடுத்த ஆண்டின் துவக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம்
எந்தக் குழுவிலும் ஒரு அசட்டு மனிதன் இருக்கலாம் அவனைப் பலரும் கலாய்க்கலாம் அவனுக்கும் ஆசாபாசம் பந்தம் எல்லாம் உண்டு என்று சொல்லிப்போகும் கதை மலாக்கி.அவன் இறக்கும் நிலையில்தான் அவன் தாய் பற்றியும் கண்தெரியாத தம்பி பற்றியும் தெரிகிறது மனதை கனக்க வைத்தகதை.
ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம் ஒருதலைக்காதல் வீண்வம்புக்கு அலையும் மனிதர்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம் எல்லாக் கதைகள் பற்றிச் சொல்லி விட்டால் வாசிக்கும் போது புதுமையான உணர்வு கிடைக்காது சிறுகதைத் தொகுப்பின் பெயர் தாங்கி வரும் என்றாவது ஒரு நாள் சிறுகதைப் பற்றியும் சொல்ல வேண்டும். ஒரு அழகில்லாத ஆண்மகன் தாழ்வுமனப்பான்மையால் தான் காதலிக்கும் பெண்ணின் மனம் தெரியாமல் வெளியூர் போகும் சமயம் தன்னை வழி அனுப்ப வந்தவளுக்குத் தன் மேல் காதல் இருப்பது தெரிந்தும் வெளியூர் செல்வதைத் தடுக்க முடியாமல் என்றாவது ஒரு நாள் ஒன்று சேரலாம் என்னும் நம்பிக்கையே வாழ்வாகக் கதை போகிறது
நிறைகளை மட்டுமே சொன்னால் விமரிசனம் ஆகாது. இம்மாதிரிக் கதைகளை மொழி மாற்றம் செய்வதால் படிக்கும் நமக்கு ஏதோஅந்நியத்தனம் தெரிகிறது. அவை அந்நியக் கதைகள்தானே. இருந்தாலும் கதையின்கருத்தை உள்வாங்கி தமிழில் மொழி பெயர்க்காமல் மொழியாக்கம் செய்திருந்தால் ஒரு நேடிவிடியும் இருந்திருக்கும் என்பது என் கருத்து. புத்தகத்தின் பின் அட்டையின் நிறமும் எழுத்துக்களும் படிக்க மிகவும் சிரமம் தருகிறது. என்ன செய்ய முடியும்.?அந்நிய மண்ணில் இருந்து கொண்டு பதிப்புகளை செக் செய்து குறை நிறைகளை கண்டறிவதும் சிரமம்தான் .
.
.