Tuesday, September 21, 2010

PORATTANGAL ------ ORU KANNOTTAM

         
                               போராட்டங்கள்      ----    ஒரு   கண்ணோட்டம்
காலையில்  எழுந்ததும்   பத்திரிகைகளைப்  பார்த்ததும்  தெரிவது , தொலைக்காட்சியை  இயக்கினால்  செய்திகளில்  தெரிவது , எங்கோ  எதற்கோ  யாரோ  போராட்டம்  நடத்துவதுதான் . இத்தகைய  போராட்டங்கள்  நடக்க   பல்வேறு   காரணங்கள்   இருக்கலாம். இப்போது  அந்த   காரண  காரியங்களை   ஆராய்வது அல்ல   இந்தப்  பதிவின்  நோக்கம் . போராட்டம் என்றாலே  ஏதோ   மனக்கசப்பை ,  திருப்தியின்மையை , கையாலாகாத்தனத்தை   வெளிப்படுத்த  ஒரு   உத்தியாகும் . அது சரியா இல்லையா  என்று  ஆராய்வதும்   நம் நோக்கம்  அல்ல .
                     வாழ்க்கையில்   உண்ண   உணவு , உடுக்க உடை , இருக்க  இடம்   என்று   மட்டும்   கிடைத்தால்   போதவில்லை . நம் வாழ்க்கையின்   நிலை    மற்றவரைவிட கீழான   நிலையில்   இருந்தால் , ஒப்பிட்டு  நோக்கி  அதிருப்தி  ஏற்படுகிறது .மற்றவர்  
நிலையை விட   தாழ்ந்து   இருப்பதற்கான   காரண காரியங்கள்   ஆராயப்படுகின்றன .   
ஏற்ற  தாழ்வுகள்  கண்முன்னே   காரணங்களாக  விரிகின்றன .
                    " நானும்  இந்த  நாட்டுக்  குடிமகன் . எனக்கும்  அவனுக்கும்  ஒரே  வயது .என்ன   வித்தியாசம்  ? நான் ஏழை , வசதியற்றவன் --அவன் பணக்காரன் ,வசதி  மிகுந்தவன் . கல்வியில்   நான்  முன்னேற  வாய்ப்புகள்   குறைவு --அவனுக்கு  அதிகம் .--நான் கிராமத்து   இளைஞன் , அவன் பட்டணத்து வசதிகளுடன்  வாழ்பவன் ---- நான் வாழ்க்கையில்   முன்னேற  தாண்ட வேண்டிய   தடங்கல்கள்   அதிகம் . அவனுக்குக் குறைவு ---எனக்கு   இரண்டு  வேளை  உணவு   கிடைப்பதே  மிகவும்   கஷ்டம் .அவன்  எல்லா வித   போஷாக்கு களுடன்  கூடிய  உணவு வகைகளில்  மிதக்கிறான் ----பசி  என்பது எனக்கு  சாதாரணமாக  நிகழ்வது . பசி என்னவென்றே  அறியாதவன்  அவன் ---- மானத்தை  மறைக்க   உடை உடுத்துவதே  எனக்கு   சாதனை    படாடோப உடை வகைகளில்  பலவற்றை   வைத்திருப்பவன்  அவன் "
                 இந்த  மாதிரி  மனசின்  அடிப்பகுதியில்   ஒருவனுக்குத் தெரியாமலேயே   ஏற்ற  தாழ்வுகள் பாதிப்பை  ஏற்ப்படுத்துகின்றன .வாழ்கையின்  மேல்நிலையில்  இருப்பவன் வசதிகளைப் பெருக்கிக்கொள்கிறான். பணக்காரன் மேலும் பெரிய  பணக்காரனாகிறான் .வாழ்க்கையின்  கீழ்நிலையில்  இருப்பவன் முன்னேறத்  துடிக்கிறான் ,.இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு  காரணம்  என்ன ?
                ஒருவன்  ஏழையாகப்  பிறப்பது  அவன் தவறா ? வாழ்க்கையில்  உயர  வாய்ப்புகள்  சமமாக  இருக்கிறதா ? கீழே  உள்ளவன்  அடக்கப்பட்டு   இருப்பவனாகவும்  மேலே  உள்ளவன் அடக்குபவனாகவும்  இருப்பது சமூக  நிலையா  ?
                காந்தி   பெரியார்   அம்பேத்கர்  போன்றவர்கள் தாழ்த்தப்  பட்டவர்களுக்கும்   ஒடுக்கப் பட்டவர்களுக்கும்  குரல்  கொடுத்து ஓரளவு விழிப்புணர்வை  ஏற்ப்படுத்தினார்கள் . விழிப்புணர்வின் அடிப்படையில்   வாய்ப்புகள்  வேண்டி போராட  வேண்டும்  என்ற நிலை  உருவானது .இத்தகைய  போராட்டங்களை  நடத்தி செல்ல வேண்டியவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா  என்ற கேள்வி  எழும்போது   பதில் வல்லவர்களாக  இருக்கிறார்கள்  என்பதுதான் நிதர்சனம் . தலைவர்கள்  வசதிகளுடனும்   வாய்ப்புகளுடனும்  முன்னேறுகிறார்கள்
               தலைவர்களுக்கு  தெரியும்  எங்கே  தட்டினால் பலன்  கிடைக்கும் , எந்த நிலை  நீடித்தால்  தாங்கள்  மேலும் முன்னேறலாம்  என்று ..இனம் மொழி மதம் போன்ற உணர்வுகளைத் தூண்டும் அவலங்களை வெளிச்சம்   போட்டுக் காட்டி  அதன்  மூலம்
அவர்களுடைய முன்னேற்றத்திற்கு  வழி வகுத்துக்கொள்கிறார்கள் .இதனால் ஏற்பட்டிருக்கும்  ஏற்ற தாழ்வுகள்  குறைவதில்  அவர்களுக்கு  லாபம்  இல்லை .STATUS  QUO  தொடர வேண்டும் .ஆனால் , மக்களுக்காக அவர்கள் சேவை  செய்வது போன்ற மாயத் தோற்றம்  தொடரவேண்டும் .
             சாதி  அடிப்படையில்  ஒதுக்கீடு  கேட்டுப் போராடுபவர்கள் , சாதிகள் மறைய என்ன செய்கிறார்கள் ? சாதிகள் மேலும் மேலும் வலுவடைந்து அவை சமூகத்தின் மறையாத அங்கங்களாக மாறிவிடும் அபாயம்தான்  தோன்றுகிறது .
             கல்வியறிவும்   வாழ்க்கையின்  தரமும்  உயரும்போது சாதிகள் தானாகவே  மறையும் .ஏதோ ஒரு அடிப்படையில் வாழ்க்கையில் சலுகைகளைப் பெற்றவன்  மேலும் மேலும் அதே அடிப்படையில் மேலும் சலுகைகள் பெறுவது தடுக்கப்படவேண்டும் வாழ்க்கையில் ஓரளவு உயர்ந்தவர்கள் மற்றவர்களுக்கு  ஒதுங்கி வழி விட வேண்டும் .ஆனால் நடை முறையோ வேறு விதமாக உள்ளது .
             வாழ்க்கைச் சக்கரம்  உருண்டு கொண்டுதான் இருக்கிறது .ஆதி  காலத்தில் சமூகத்தை  நான்கு  வர்ணங்களாகப் பிரித்து  அவரவர்களுக்கு  இன்ன  வேலை என்று
பகுத்தளிக்கப்பட்டு  இருதது.----- க்ஷத்ரியர்கள்  பிராமணர்கள்  வைசியர்கள்  சூத்திரர்கள் ---மனித குணம்  எப்போதுமே மற்றவனை  அடககியாளத்துடிக்கும்.. இந்த நிலையில் முதலில்  க்ஷத்ரியர்கள் (அரசர்கள் ) எல்லோரைவிடவும்   சக்தி  உள்ளவர்களாகவும் மற்றோரை அடக்கி ஆள்பவர்களாகவும்  இருந்தனர் .காலப்போக்கில் பிராமணர்கள் ( மதகுருக்கள் ) அரசர்களுக்கே  அறிவுரை சொல்லி அதன் மூலம் மிகுந்த சக்தி பெற்று விளங்கினர் . பிற்காலத்தில் வைசியர்கள் எனப்படும் வணிகர்கள் (CAPITALISTS)
கை  ஓங்கி எல்லா சக்தியும் வல்லமையும் கொண்டு வாழ்ந்தார்கள் , இன்னும்  வாழ்ந்துகொண்டும்  இருக்கிறார்கள் .வாழ்க்கையின்  சுழற்சியில்  எஞ்சி நிற்பவன் சூத்திரனே ..அவனுக்குள்ள  வாய்ப்பும் கிடைக்கத்தானே  வேண்டும் ! ஒடுக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள்  சாதியின் அடிப்படையில்  மட்டுமல்ல  வாய்ப்பின் அடிப்படையிலும் சூத்திரர்களே . வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியில்  அவர்கள் மேலே வரும்  காலம்தான்  நிகழப்போவது ,
               போராட்டங்களின்  முடிவு  ஒரு நல்ல தீர்வுக்கு  மக்களை  கொண்டுபோகுமானால்  அது வரவேற்கத்தக்கதே . போராடுபவர்கள்  எதற்கு  போராடுகிறோம்   யாருக்காகப் போராடுகிறோம் என்று அறிந்து    மந்தை குணம் நீக்கி   சிந்திக்க  தொடங்குவார்கள்  என்று நம்புவோம் .
                                              ------------------------------------------ --------------             





















 

No comments:

Post a Comment