சனி, 1 ஜனவரி, 2011

சிறு துளி பெருவெள்ளம்

சிறு துளி   பெரு வெள்ளம்.
---------------------------------------
           பாடுபட்டு  உழைத்து   சொத்து
           பல  லட்சம்  சேர்த்தும்  கூடவே
           கொண்டா  செல்ல  முடியும்.
           படுக்கையில்  விழுந்தது   பெரிசு
          கேட்டதும்  பதறிய  பிள்ளைகள்
           ஐயோ  என்றலறி  வந்தனர்.

ஐயோ  என்றழைக்காதீர், அவள்  கணவன்
வருமுன்னே  என்சொல்  கேளீர்.
என் காலம் முடிந்த பின்னே
என் சொத்தை அனுபவிக்க
உள்ளதோ நீங்களிருவர்
கேடு  பல விளைக்காமல்
கட்டிக்காத்து  பல்கிப் பெருக்கி,
ஆண்டதை அனுபவிப்பீர் நலமுடன்
என்றவன் கூறி யமனுடன் சென்றுவிட்டான்.

           மாடு, மரம் சொத்தாக இருந்ததிலே
           பண்டொரு  நாள்  பாகம்  பிரிப்பதில்
           பக்கத்து  வீட்டில்  ஏற்பட்ட  சிக்கல்
           இருவரும்  அறிந்த  ஒன்று

இருந்த ஒரு மாடு, ஒரு தென்னை
ஒழுங்காகப்  பகிரப  பசுவின்
முன்பாதி  முன்னவனுக்கும்
பின்பாதி   சின்னவனுக்கும்
தென்னையின்  தாள்பாகம் தனயனுக்கும்
மேல்பாகம்  தம்பிக்கும்  என்று
ஆளுக்கொரு  பாகம் அழகாகப்  பிரித்தனர்

           முன்னவன் புல் கொடுத்து  மாடு வளர்த்து
            நீர்  வார்த்து  மரம் வளர்த்து
            வந்த  பலன்  பின்பாகப்  பாலும்
            தலைப்பாக  தேங்காயும  பாங்குடனே
            அலுங்காமல்  பெற்றான்  இளையவன்

நேர்ந்த  கதை  நன்றாக  அறிந்திருந்தான்  அண்ணனும்
சொத்ததனைப்  பிரிப்பதில் இருக்காது  சிக்கல்
இருப்பதென்ன  ரொக்கம்தானே என்றவன் எண்ணினான்
பாகம் பிரிக்கப்  பேச்சு  வார்த்தை  வேண்டாம்
இருப்பதோ  ரொக்கம்  சரிபாதி  பிரிப்போம்  என்றான்

             மூத்தவன்  நீ  பாவம்  சம்சாரி -சொத்தில்
             எனக்கு  வேண்டாம் சரிபாதி.
             இன்றொரு பைசா, நாளை இரண்டு,
             மறுநாள்  நான்கு,என்று நாளும் ,
             இரட்டிப்பாக்கி  தினம் தினம் ஒரு மாதம்
             நீ  தரும் பைசா போதும்
             மற்றதைப் பாவம் நீயே  அனுபவி
             என்றே நைசசியம் பேசிய
             தம்பியை  நம்பி  ஏமாந்த  அண்ணன்
             சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.
      ========================================= 















 

10 கருத்துகள்:

  1. இந்தக் கதையை என் தாத்தாவிடம் ஊம் கொட்டிக்கொண்டே கேட்டுத் தூங்கிப்போவேன்.தினமும் கேட்டாலும் அலுக்காத கதைகளின் பெட்டகம் என் தாத்தா.அவர் மண்ணில்தான் என் மரத்தின் வேர் பாவியிருக்கிறது என என் நம்பிக்கை.

    உங்களோட ப்ரசண்டேஷன் நன்றாக இருந்தது பாந்தமாக.

    அதுசரி பாலு சார்.நீங்க அண்ணாவா தம்பியா?

    பதிலளிநீக்கு
  2. சுந்தர்ஜி, இந்தக்கதை உங்கள் ரமணாவுக்கு இந்த தாத்தா சொன்னதாக இருக்கட்டும்.அவரிடம் அந்த பைசா கணக்குப் போடச் சொல்லுங்கள்.நான் சிலருக்கு அண்ணன் சிலருக்கு தம்பி.நன்றி.

    பதிலளிநீக்கு
  3. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய்
    மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கணக்கு; நல்ல கவிதை.

    //என்றே நைச்சியம் பேசிய
    தம்பியை நம்பி ஏமாந்த அண்ணன்
    சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தானில்லை.//

    இதை மட்டும் இப்படிப் படித்து

    என்றே நைச்சியம் பேசி
    நம்பிய அண்ணனை ஏமாற்றிய தம்பி
    சிறுதுளி பெரு வெள்ளம் அறிந்தவன்

    என்று தம்பியின் மீது ஒரு தார்மீகக் கோபத்தைக் காட்டியிருக்கலாமோ என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு
  5. அன்பு ஜீவி, அப்படியும் காட்டியிருக்கலாம்.சில கருத்துக்கள் சேர வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது.ஏமாற்றுகிறான் என்று சொல்வதும் ஏமாறுகிறான் என்று சொல்வதும் போல.வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. நல்ல கதை பாடல் திரு ஜி.எம்.பி. இந்த கதையைக் கொஞ்சம் வித்யாசமாய் படித்திருக்கிறேன். அதில் ஏமாற்றப்பட்டதைப் புரிந்து கொண்ட அண்ணன் தம்பி பால் கறக்கும்போது மாட்டின் கொம்பை முறுக்குவான். தம்பி உதைபடுவான். ஏனென்று கேட்டால், அண்ணன், முன்பக்கம் எனக்கே சொந்தம், அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பான். அதுபோலவே தம்பி மரமேறி காய் பறிக்கும்போது மரத்தின் அடிப்பாகம் எனக்கே சொந்தமென்று அதை வெட்டுவான். உயிருக்குப் பயந்த தம்பி திருந்தி சொத்துக்களை ஒழுங்காகப் பிரித்துக் கொள்வான் என்றிருக்கும்.இன்று நீ செய்வது நாளை உனக்கே திரும்பி வரும் என்று முடியும்.ஒரு பகிர்தலுக்காக எழுதினேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நான் இதை எழுதியதன் நோக்கமே ஏமாறுபவர், ஏமாற்றுபவர் பற்றிய கதையினூடே அந்த பைசா கணக்கு போட்டு பார்க்கவேண்டும் என்பதுதான். கதைகளின் ஐடியாவெ கருத்து சொல்வதுதான். சைக்கிள் கேட்ட கதையும் அந்த வகையில் ஒன்று.
    நான் கருத்தினூடே ஒரு கணக்கும் சொல்ல முயல்கிறேன். பகிர்ந்தமைக்கு சைக்கிளுக்கு நன்றி.
    பகிர்வுகள் தொடர வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  8. இந்தக்கதையை நன்றாக மெருகேற்றி, நகைச்சுவையாக, என் பேரன் பேத்திகளுக்குச் சொல்வதுண்டு. ஆசையாக மீண்டும் மீண்டும் சொல்லச் சொல்வார்கள்.

    பசுமாடு, தென்னைமரம் மட்டுமல்ல, போர்த்திக்கொள்ளும் ஒரு கம்பளியும் உண்டு, இந்தக்கதையில்.

    பதிலளிநீக்கு
  9. பல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  10. முதல் வருகை (?) க்கு நன்றி சார்

    பதிலளிநீக்கு