வியாழன், 30 ஜூன், 2011

வேலை தேடு படலம். ...

   வேலை தேடு படலம். .
---------------------------
 பள்ளி இறுதி முடித்துவிட்டு, வேலை வெட்டியில்லாமல் விரயமாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப் பான்மை, என்னை முழுமையாக ஆக்ரமித்திருந்த காலமது. வீட்டில் வசதிகளும் மிகவும் குறைவு. நான் முன்பே கூறியிருந்ததுபோல, வளர்ச்சியும் இல்லாமல், மிகவும்சிறிய பையன் போல் காட்சி அளித்திருந்தேன். இருந்தாலும் வேலைக்குப்போய் வீட்டிற்கு உதவியாய் இருக்க வேண்டும், என்ற எண்ணம் மனம் முழுக்க வியாபித்துருந்த காலம். ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று அப்பாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். என் தொந்தரவு தாங்க முடியாமலும், என்னால் ஏதாவது உதவி வராதா என்ற நப்பாசையிலும், அவர்
அவருடைய நண்பர்கள் சிலரிடமென் வேலைக்காக கூறியிருந்தார். கோவையில், ஒரு நண்பருடைய ஒரு கடையில், வேலைக்கு, எஸ். எஸ். எல் சி. படித்த ஒருவர் தேவைப் படுவதாகக் கேள்விப் பட்டு, அந்த நண்பரிடம் பேசியிருக்கிறார். அவரும் என்னை அனுப்பச் சொல்லிக் கேட்டார். எனக்கு தலைகால் புரியாத சந்தோஷம். முதன் முதலாக இரண்டு கால் சராய்களும் (பேண்ட்)ஒரு ஜோடி செருப்பும் வாங்கப் பட்டது. போக வேண்டிய இடம், நாங்கள் ஏற்கனவே கோயமுத்தூரில் குடியிருந்த குவார்டர்ஸ் வளாகம்தான். கையில் ரூபாய் பத்துடன் கோயமுத்தூர் போய்ச் சேர்ந்து, அந்த நண்பரின் கடையை அடைந்தேன். என்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, அப்பா அனுப்பிய பள்ளி  இறுதி படித்த அவருடைய மகன் நான் தான் ,வேலைக்கு வந்திருப்பதாகக் கூறினேன். அவர் என்னைக் கீழிருந்து, கீழாக(மேலிருந்து கீழாக என்று சொல்லிக் கொள்ளும்படி நானிருக்க வில்லை. ) ஒரு முறை நோக்கி, “ தம்பி, மஹாதேவன் ,படித்த ஒரு பையன் இருப்பதாகச் சொன்னபோது, நான் ஒரு வளர்ந்த பையனை நினைத்திருந்தேன் நீ, ஒரு குழந்தை போல் இருக்கிறாய். உனக்கு வேலை தரும் நிலையில் நீ இல்லை. அப்பாவிடம் விவரம் கூறி என்னைத் தவறாக நினைக்க வேண்டாம், என்று கூறிவிடு. என்றார்.. எனக்கு அழுகை வந்து கண்களில் நீர் தளும்ப, “ நான் நன்றாக வேலை செய்வேன் “ என்று கூறிமன்றாடினேன். பலனிருக்கவில்லை. முதல் வேலை தேடும் படலம் தோல்வியாக முடிந்தது.
   ( ஏமாறத்துடன் வெல்லிங்டன் திரும்பிய நான் பெங்களூர் சென்று விதான சௌதாவில்
ஒரு மாதம் சம்பளமில்லாமல் வேலை செய்த அனுபவத்தை என் “பூர்வ ஜென்ம கடன்”
என்ற பதிவில் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்)                                                      
         மறுபடியும் வெல்லிங்டன், மறுபடியும் அப்பாவிடம் நச்சரிப்பு, , மறுபடியும் அப்பாவின் முயற்சி என்று என் வேலை தேடும் பணி தொடர்ந்தது.

       கூனூரில் ஒரு ஓட்டல். மைசூர் லாட்ஜ் என்று பெயர். அதற்கு ஒரு அன்னெக்ஸ் கூனூர் ரயில் நிலையத்துக்கு எதிரில், சுமார் நூறு அடி உயரத்தில் இருந்தது. அதன் உரிமையாளர் கிருஷ்ண போத்தி. அங்கு வேலை செய்ய ஒரு படித்த , சற்றே ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்கும் இளைஞன் தேவை என்றும் தெரிவித்திருக்க, அப்பா அவரிடம் பேசி இருக்கிறார். என்னையும் அறிமுகப் படுத்தினார். என்னை வேலையில் சேர்த்துக் கொண்டார்கள். வாரம் ஆறு நாட்கள் வேலை. அங்கேயே தங்கி இருக்கவேண்டும். ஞாயிற்றுக் கிழமை வீட்டிற்குப் போய் வரலாம்.என் செலவு போக மாதம் ரூ.25/-சம்பளம். வேலையில் சேர்ந்து விட்டேன். அங்கு நான் தங்கி இருந்த நாட்கள் என்னை சிறிய பையனிலிருந்து, ஒரு இளைஞனாகவும் உலகம் தெரிய வழி செய்யும் வகையிலும் அமைந்தது.

                  காலையில் ஆறரை ஏழு மணிக்குள் நான் தயாராகி, கல்லாவில் இருக்க வேண்டும். சாதாரணமாக உள்ளஓட்டல்களிருந்து, சற்றே வித்தியாசப் பட்டதாக அமைந்திருந்தது. மேசை நாற்காலிகளுக்குப் பதில் சோஃபா.டீபாய்.இருக்கும்.  ஒரே நேரத்தில் இருபது நபர்களுக்கு மேல் சேவை செய்ய முடியாது. அங்கு அறை வசதிகள் இருந்தன. மாத வாடகைக்குத் தங்குபவர்கள் சிலர் இருந்தனர். ஒரு நாள் இரு நாள் தங்கிச் செல்வோரும் இருந்தனர். மொத்தத்தில் சற்றே போஷ்  ஆன இடமாக இருந்தது. என் வேலை கல்லாவைக் கவனித்துக் கொள்வதும், அறையில் தங்குபவரின் தேவைகளை பார்த்துக் கொள்வதுமாக இருந்தது. கூனூரின் மேல்தட்டு மத்தியதர
மக்கள் வந்து போயினர். அதிகக் கூட்டம் இருக்காது. இரவு ஒன்பது மணி வரை வேலையில் இருக்க வேண்டும்.

       வேலைக்குச் சேர்ந்த சில நாட்களிலேயே என்னிடம் இரண்டு கணக்குப் புத்தகங்களை பராமரிக்கச் சொன்னார்கள். ஒன்றில் சரியான வரவுக் கணக்குகளும், மற்றொன்றில் , அதில் இருபது சதவீதமே வரவாகக் காட்ட வேண்டுமென்றும்
கூறினார்கள். குறைந்த வரவு எழுதிய புத்தகமே விற்பனை வரிக் கணக்குக்குக் காட்டப்படும் என்றும் கூறினார்கள். அது தவறெனப்பட்டு நான் கூறியபோது, “சொன்னதைச் செய்என்று கட்டாயப் படுத்தினார்கள் அப்போது மது விலக்கு அமலில்
இருந்தது. அறையில் வாடகைக்கு வருபவர்கள் மது பானங்களை உபயோகிக்கக் கூடாது. ஆனால் சில பெரிய மனிதர்கள் விதியை மீறுபவராகவே  இருந்தனர். நான் பார்ப்பதற்கு மிகச் சிறியவனாக இருந்ததால், யாரையும் கேள்வி கேட்க முடியவில்லை.  முதலாளியிடம் கூறினால் கண்டு கொள்ளாமல் இருக்கப் பணித்தார்கள். சில பெரிய மனிதர்கள் அவர்களுடைய மனைவி என்று கூறிக்கொண்டு சில பெண்களுடன் தங்குவார்கள். பகல் நேரங்களில் அந்தப் பெண்கள் காட்டும் அதிகாரம், என் தன்மானத்தை பாதிப்பதாக இருக்கும். மாத வாடகைக்குத் தங்கும் சிலர் அந்தப் பெண்களிடம் பேச முயற்சி செய்து, அவர்களைவசப்படுத்த முயல்வார்கள். அந்தப் பெண்கள் என்னிடம் புகார் கூற, நான் மாத வாடகை அறைவாசிகளிடம் ஏதாவது கேட்கப் போனால், அவர்கள் எனக்குப் பாடம் நடத்துவார்கள் அவர்கள் விலை மாதர்கள் என்றும் அவர்களை நான் மதிக்க வேண்டாம் என்றும் கூறுவார்கள். இந்த மாதிரி அறைகளில் தினமும் படுக்கை விரிப்புகளை மாற்றச் சொல்வார்கள். அந்த விரிப்புகள் காட்டும் கோலம், அங்கு நடந்தவைக்குச் சான்றாக இருக்கும். இந்த நாட்கள் adolescent
ஆக இருந்த நான் அடல்ட்- ஆக மாற பெரிதும் காரணமாக இருந்தன. உலக நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தெரிய வந்தது. இதையெல்லாம் நான் முதலாளியிடம் கூறினால் என்னைக் கடிந்து கொள்வார்கள். காலையில் தொடங்கும் பணி இரவு ஒன்பது வரை ஒரேமாதிரி, காப்பி, இட்லி, வடை தோசை, என்ற சொற்களோடும், அறை சுத்தம், தங்குபவரின் தகாத செயல்கள் இவற்றைப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. வாரம் ஆறு நாட்கள் வேலை பார்த்தால்ஞாயிறு ஒரு நாள் மட்டும் வீட்டிற்குப் போய் வரலாம், என்ற நிலை. எல்லாம் சேர்ந்து எனக்கு சலிப்பை உண்டாக்கியது, இருந்தாலும் வீட்டின் நிலை அறிந்தும், எனக்கு வேறு வேலை கிடைக்க வாய்ப்பு குறைவு என்பதாலும் சகித்துக் கொண்டிருந்தேன். இந்த நிலையில், அங்கு வருவோர் சிலரிடம், நல்ல தொடர்பு இருந்தது. அதில் குந்தா ஹைட்ரோ பவர் ஸ்டேஷனில்வேலையிலிருந்த, எக்ஸிக்யூட்டிவ் எஞ்சினேர்,மற்றும், டெல்கோ கம்பெனியில் வேலையிலிருந்த ஒரு மார்கெட்டிங் மானேஜர், பர்மா ஷெல் கம்பெனி இன்ஸ்பெக்டர் ஒருவரும், முக்கியமானவர்கள். குந்தா ப்ராஜெக்ட்டில்  வேலை வாங்கித் தருவதாக ஒரு காண்ட்ராக்டருக்கு, சிபாரிசு கடிதம் ஒன்றை அந்த எஞ்சினீயர் கொடுத்தார். நானும் எங்கெல்லாமோ வேலைக்கு மனு போட்டுக்கொண்டிருந்தேன் .இந்த நிலையில் ஓட்டல் முதலாளியிடம் நான்   என்னுடைய வேலை நேரத்தைக் குறைக்கும் படியும்,,தவறான முறைகளில் கணக்கு வழக்குகள் எழுதுவதை என்னிடம் கட்டாயப் படுத்தாமல் இருக்கவும் முறையிட்டேன். அவர்கள் என்னிடம் எதையுமே பேச விரும்பவில்லை. என்னுடைய தந்தையார் மூலம் நான் வேலைக்கு வந்ததால், அவரை வந்து பேசச் சொல்ல சொன்னார்கள். இதற்கு என் தன்மானம் இடங்கொடுக்கவில்லை.வேலை செய்வது நான், என் தந்தை பெயரைச் சொல்லி மிரட்டுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது.அப்பாவிடம் சொன்னால் வருத்தப் படுவார்கள் என்பதாலும், குடும்ப நிலைமை நான் வேலைக்குப் போவதை தேவைப் படுத்துவதாலும், யாரிடமும் சொல்லாமல் நான் வேலையை விட்டு விலகுவதாக, என் முதலாளியிடம் கூறி எனக்குச் சேர வேண்டிய சம்பளப்பணம்  சுமார் ரூ. 20/- பெற்றுக் கொண்டு, என் பெட்டியுடன் கோயமுத்தூர் சென்றேன்.எங்காவது வேலையில் சேர்ந்து, அப்பாவை சமாதானப் படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன். அந்த முடிவு வாழ்க்கையில் முக்கியமான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.

      கோயமுத்தூரில் எங்கு தங்குவது, எப்படி வேலை தேடுவது, யாரைப் பார்ப்பது, என்று எதுவுமே யோசிக்க்ச்வில்லை. அப்போது கோயமுத்தூரில் சில சத்திரங்கள் இருந்தன. அங்கு ஒரு இரவு தங்க, ஒரு கட்டில் தருவார்கள். வாடகை எட்டணா. பல் விளக்க, குளிக்க எந்த வசதியும் கிடையாது. சாலையோரத்தில் உள்ள குழாய்களில்காலையில் பல் விளக்கி முகம் கழுவுவேன்.பிறகு கோயமுத்தூரில் நிறைய மில்கள் இருப்பது கேள்விப் பட்டிருந்ததால், ஏதாவது மில்லில் ஏதாவது வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன், காலையில் நடக்கத் தொடங்குவேன். ஒவ்வொரு மில் வாசல் முன்பு செல்லும்போதே, அங்குள்ள காவல்காரர்கள் உள்ளே அனுமதிக்க மாட்டார்கள். மீறி ஒன்றிரண்டு மில் உள்ளே சென்று வேலை கேட்டால், உன் படிப்பு என்ன, டைப்பிங் தெரியுமா, ஷார்ட் ஹேண்ட் தெரியுமா, சான்றிதழ்கள் எங்கே, என்று கேட்டுத் துரத்தி விடுவார்கள். வெயிலில் அங்கங்கே சுற்றும்போது, சோடாவும் கலரும் வாங்கிக் குடிப்பேன். மிகவும் பசித்தால் ஏதாவது ஓட்டலில், எதையாவது வாங்கிச் சாப்பிடுவேன். இந்த நிலையில் கோவையில் நான் படித்தபோது ,என்னுடன் படித்த, பி. டி. ஆல்ஃப்ரெட். என்ற ஆலியின் நினைவு வந்து, அவனைப் பார்க்கப் போனேன். மிகவும் மகிழ்வுடன் என்னை வரவேற்ற அவன் என் கதையைக் கேட்டதும் மிகவும் கடிந்து கொண்டான். முடிந்தவரை எனக்கு உதவுவதாகவும் கூறினான். அவன் எஸ். எஸ். எல். சி.  ஃபெயில். ஏதோ ஒரு மில்லில் அட்டெண்டராக வேலை பார்த்து வந்தான். என்னை அந்த மில்லுக்கு அழைத்துச் சென்று அவனுடைய மேலாளரிடம், எனக்கு ஏதாவது வேலை தரும்படிக் கேட்டான். அங்கும் அதே கதைதான். அட்டெண்டர் வேலை எதுவும் காலி இல்லை என்றும்,வேறு எந்த வேலைக்கும் எனக்குத் தகுதி இல்லை, என்றும் கூறி அனுப்பிவிட்டார்கள். உடற்சோர்வு, மனச் சோர்வு என்று சேர்ந்து வாட்டியது. கையில் இருந்த காசும் கரைந்து கொண்டு வந்தது..என்ன செய்வது என்று தெரியாத நிலையில், டெல்கோ கம்பெனி மார்க்கெட்டிங்  மேனேஜரின் நினைவு வந்தது.அவருடைய அலுவலக விலாசம் தெரிந்து, அவரைத் தேடிப் போனேன். என்னைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியுடனும், மரியாதையுடனும், என்னை வர வேற்ற அவர், “ஓட்டல் மேனேஜருக்கு மசால் தோசையும் காப்பியும் கொண்டு “ வரப் பணித்தார். என்னை அவர் மேனேஜர் என்றுதான் அழைப்பார். அந்த வரவேற்பையும் மரியாதையையும் பார்த்த பிறகு, அவரிடம் என் நிலையைக் கூறி, வேலை கேட்க என் “ஈகோஇடந்தரவில்லை. சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அவரிடம் விடை பெற்று வந்து விட்டேன். அப்பாவுக்கோ, அல்லது வீட்டில் யாருக்கோவாவது, நான் இப்படி அவதிப் படுவதும் ஊர் சுற்றி வேலை தேடுவதோ தெரியாது. அவர்கள் என்னை ஞாயிற்றுக்கிழமை எதிர் பார்த்துக் கொண்டிருப்பார்கள். கையிலும் காசில்லை ,வேலையும் கிடைத்த பாடில்லை. மிகவும் வருத்தப் பட்டுக்கொண்டிருந்தபோது, ஆலி என்னை ஓரிடத்துக்கு அழைத்துப் போவதாகக் கூறி வரச் சொன்னான். அவன் என்னை அழைத்துச் சென்ற இடம் கோயமுத்தூர் ரெயில் நிலையம். எனக்கு வெல்லிங்டனுக்கு ஒரு டிக்கெட் வாங்கிரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டான். நானும் வேறு வழியின்றி வெல்லிங்டன் சென்று வீட்டிற்குப் போனேன். சனிக்கிழமையே நான் வந்து விட்டதாக நினைத்து, எனக்கு உடல் நலம் சரியில்லையோ என்று நினைத்துப் பதறி விட்டார். நான் ஏதும் கூறாமல் சாதாரணமாக இருப்பதுபோல்ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இருந்து விட்டேன். நான் ஓட்டலுக்குத் திரும்பிச் செல்லாதது ஏன் என்று கேட்ட போது நான் வேலை பிடிக்கவில்லை என்று கூறினேன்.கோயமுத்தூரில் அலைந்ததையோ, ஏமாற்றமடைந்ததையோ சொல்லவில்லை. அப்பாவும் என்னை வற்புறுத்தவில்லை.இந்த சின்ன வயதில் உன்னை வேலைக்குப் போகச் சொன்னதே என் கையாலாகாத்தனம் “என்று கூறி மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டார். நான் குந்தா ப்ராஜெக்டுக்குப் போய் அந்த எஞ்சினீயரின் சிபாரிசுக் கடிதத்துடன் வேலைக்குப் போவேன் என்று அப்பாவுக்கு தைரியம் கூறினேன். நான் மைசூர் லாட்ஜில் இருந்தபோது பல இடங்களுக்கு வேலைக்கு மனு போட்டிருந்தேன். அந்த நேரத்தில் எச்.ஏ.எல். ல் இருந்து ட்ரேட் அப்ப்ரெண்டிஸ்  ட்ரெயினிங்கில் சேர தேர்வுக்கு மெட்ராஸ் வரச் சொல்லி கடிதம் வந்திருந்தது. அதன் முடிவு தெரிந்த பிறகு குந்தாவில் முயற்சிக்கலாம் என்றிருந்தேன். ஆனால் மெட்ராசுக்கு தேர்வுக்குச் செல்லப் பணம் வேண்டுமே.வழக்கம்போல் அப்பாவிடம் பணம் இருக்கவில்லை. ரூபாய் பத்தோ பன்னிரண்டோதான் அவரால் சமாளிக்க முடிந்தது. அப்போது வெல்லிங்டனிலிருந்து மெட்ராசுக்கு ரெயில்வே கட்டணம் மூன்றாம் வகுப்புக்கு ரூபாய் பத்து என்று நினைவு. போக வரவும் அங்கு ஓரிரு நாட்கள் இருக்கவும் குறந்தது ரூபாய் முப்பது தேவைப் பட்டது. பணமில்லாததால் நேர்முகத் தேர்வுக்குப் போக முடியாத நிலை. அந்த நேரத்தில் மைசூர் லாட்ஜுக்கு அடிக்கடி வந்து செல்பவரும் என் மீது மிகவும் அன்பு வைத்திருந்தவரும் “ குழந்தே “என்று கூப்பிடுபவருமான பர்மா ஷெல் இன்ஸ்பெக்டர் திரு. சுப்பிரமணியம் நினைவு வந்து, அவரை அவர் வீட்டில் சந்தித்தேன். என் நிலைமை எடுத்துக் கூறினேன். அவர் என்னை ஆறுதலாகத் தட்டிக் கொடுத்துநான் இண்டர்வியூவுக்கு மெட்ராஸ் செல்ல உதவுவதாகவும் கூறினார். ஈரோடில் அவருக்கு ஒரு வேலை நிமித்தம் செல்ல வேண்டி இருப்பதாகவும் என்னை அவருடைய காரிலேயே ஈரோடு வரைக் கூட்டிச் சென்று, அங்கிருந்து மெட்ராஸுக்குரெயிலில் டிக்கெட் வாங்கி ஏற்றி விடுவதாகவும் கூறினார். எனக்கு மனதில் கொஞ்சம் தெம்பும் உற்சாகமும் வந்தது. அவர் கேட்டுக் கொண்டபடி அவருடைய வீட்டுக்கு காலை பதினொரு மணி அளவில் சென்றேன். அவருடன் அவருடைய காரில் ஈரோடு வரை பயணித்தேன். போகும் வழியெல்லாம் அவர் என்னை எப்படி நேர்முகத் தேர்வை சந்திக்க வேண்டும் என்று பயிற்சி அளித்தார். என்னை கேள்விகள் கேட்டு, நான் பதில் சொல்வதுகேட்டு, என்னை ஊக்கப் படுத்தி, எனக்கு அந்த தேர்வில் வெற்றி கிடைக்கும் என்றும் வாழ்த்தினார். ஈரோடில் என்னை ரயில் ஏற்றியும் விட்டார். ஆக காலணா செலவில்லாமல் தேர்வுக்கு மெட்ராஸ் வந்து விட்டேன். ரயிலில் இருந்து இறங்கி ராயப்பேட்டா பைக்ராஃப்ட்ஸ் ரோட் க்ராசில் இருந்த என் சித்தப்பா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வீட்டுக்குச் சென்று குளித்து உடையணிந்து, வேப்பேரியில் குறிப்பிட்ட இடத்துக்கு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். அந்த தூரங்களையெல்லாம் நடந்தே சென்றேன் என்பதை இப்போது நினைத்தாலும் வியப்பாயிருக்கிறது. என்னிடம் இருந்த ஒரு நல்ல பேண்ட்டோடு, ஷ்ர்ட்டும் அணிந்து, ஒரு டையும் கட்டிக் கொண்டு( உபயம். திரு. சுப்பிரமணியம்.)நான் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களையெல்லாம் கவனித்தபோது, அந்த இண்டர்வியூவுக்கு டை அணிந்து சென்றது நான் மட்டுமே என்று உணர்ந்தபோது, கொஞ்சம் கூச்சமாகவும் வெளிக்குப் பெருமையாகவும் இருந்தது. அதுதான் என் வாழ்க்கையில் பங்கு பெற்ற முதல் இண்டர்வியூ. நன்றாகவே நினைவுக்கு வருகிறது. என்னுடைய முறை வந்து என்னை கூப்பிட்டபோது,மிடுக்காகவே சென்று, வணங்கி இருக்கையில் அமர்ந்தேன். என் பெயர், தகுதி குடும்பம் போன்ற விஷயங்களைப் பற்றிக் கேட்டார்கள்.நானும் தைரியமாகவே பதில் சொன்னேன். படிப்பில் நான் காம்பொசிட் மாத்ஸெடுத்திருப்பதாகக் கூறி அதில் என்ன கற்றுக் கொடுத்தார்கள் என்பதையும் கூறினேன். அப்போது தேர்வுக் குழுவின் தலைவர் எனக்கு பித்தாகோரஸ் தீரம் தெரியுமா என்று கேட்டார்கள். நானும் பித்தாகோரஸ் தீரமை தமிழில்சொன்னபோதுதான் அவர்களுக்கு நான் தமிழ் வழிக் கல்வி பயின்றது தெரிந்தது. என்னுடைய ஆங்கில பதிகளை கேட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு நான் தமிழில் கற்றவன் என்ற செய்தி வியப்பளித்தது. அந்த தேற்றத்தை என்னால் ஆங்கிலத்தில் கூற முடியுமா என்று கேட்க, நானும் அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அது அவர்களுக்கு திருப்தி அளித்திருக்க வேண்டும். தேர்வு முடிந்து என்னைப் போகச் சொல்லி, மற்றவர்களைக் கூப்பிட ஆரம்பித்தனர். வெளியே வந்தவன் தேர்வின் முடிவு தெரியாததால் காத்திருந்தேன். உணவு இடைவேளைக்கு வெளியே வந்த தேர்வுக் குழு தலைவரிடம்முடிவு பற்றிக் கேட்டேன். மிகவும் விறைப்பாக தேர்வானால் தபாலில் தெரிவிப்பதாகக் கூறினார். முடிவு தெரியாத நிலையில் சற்றே மனபாரத்தோடு, வீடு வந்து , அன்று மாலையே ரயிலில் வெல்லிங்டன் செல்லப் பயணப் பட்டேன். இவ்வளவு விலாவாரியாக நான் இங்கு இதை விவரிப்பது, என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளுக்கு இவையெல்லாம் அஸ்திவாரமாக இருந்ததாலும், என் வாழ்க்கைடின் பாதையையே எனக்கு காட்டிய நிகழ்ச்சிகள் என்பதாலும்தான்


 (எச்.ஏ.எல். ட்ரேட் அப்ரெண்டிஸ் பயிற்சி தேர்வுக்கு மெட்ராஸ் சென்று 
நேர்காணல்  முடிந்து வெல்லிங்டன் திரும்பிய சில நாட்களில்
(மார்ச், ஏப்ரல் 1955 என்று நினைவு.)நான் தேர்வு செய்யப்பட்டதாகவும் 
மே மாதம் முதல் தேதியன்று சேருமாறு கடிதம் வந்தது.)



















திங்கள், 27 ஜூன், 2011

. கதை கட்டுரை இறுதி பாகம்

 ..கதை கட்டுரை  (.இறுதி பாகம் )
----------------------------------------- 

  ( முன் கதை .    பழைய கடிதம்  ஒன்றினைக் காண  நேரிட்டு  அந்தக் 
     கடிதம் எழுதியவன்  இன்று எப்படி இருக்கிறான்  என்று அறியும் 
    ஆவலால் உந்தப்பட்டு, வாசுவும் அவன் மனைவி தங்கமும் ,
     கடிதத்தில் இருந்த முகவரி தேடி பயணிக்கிறார்கள் )

           திருச்சூர்  சென்று, அங்கு ஒரு ஓட்டலில் தங்கி, ஒரு நாள் இருந்து, 
பிறகு பெருங்கோட்டுகா  என்ற இடம் எங்கிருக்கிறது  என்று விசாரித்து ,
தேடிக் கண்டுபிடித்து அங்கு சென்றால் வாசுவுக்கு முதலில் ஒன்றுமே 
புரியவில்லை. அந்த இடம் ஒரு ஆசிரமமாம் .அதன் தலைவர் யாரோ 
ஒரு பிரம்ம தேவ  சுவாமிகளாம். வாசுவுக்கும் தங்கத்துக்கும் ஒரே 
ஏமாற்றமாகப்  போய்விட்டது. .சரி. வந்ததுதான் வந்தோம் அந்த சுவாமி 
களையாவது தரிசித்துச் செல்லலாம்  என்று  உள்ளே சென்றால், வயதான 
தேவன்தான்   பிரம்ம தேவ சுவாமிகளா.?.. வாசுவுக்கு தலையே சுற்றும் 
போலாகி விட்டது. .பிரம்மதேவசுவாமிகள் என்னும் வாசுவின் பழைய 
நண்பன் தேவன்  வாசுவைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போய்
பிறகு சுதாரித்துக்  கொண்டார். அருகில் வர வாசுவை சைகை காட்டி 
அழைத்தார். வாசு அருகில் சென்றதும்  எதுவும் பேசு முன்பாக கண்களில் 
இருந்து தாரை தாரையாக நீர் வழிந்தது.  வாசுவுக்கு ஒன்றும்
விளங்கவில்லை. 

           "தேவா ....நீயா ...நீங்களா  ..பிரம்மதேவ  சுவாமிகள். ?"

           "அதே... வாசு.. ஞான் தன்னே. .. அப்போள் ஞான் ஆடிய  ஆட்டம் ..
இப்போள்  அனுபவிக்குன்னு. "

            " என்ன சுவாமி, அனுபவங்கள் சுவையாய்  இருந்திருக்கும் போலத் 
தோன்றுகிறது. உங்களுடைய மதிப்பும் உயர்ந்து விட்டது மாதிரியும் 
தெரிகிறது. "

            "வாசு  சத்தியம் அதல்லா. ..தினை வெச்சவன் தினை அறுக்கும்,
வினை வெச்சவன் வினை அறுக்கும்  கேட்டுட்டில்லே "

             "புரியவில்லையே. ..சற்று விளக்கமாகக் கூறுங்களேன் "

             " வாசு, கொறச்சு  காலம்  மும்பு  நிங்கள்  வன்னிருன்னு  எங்கில்
என்னெக் காணான்   காத்திரிக்கேண்டி  இருக்கும்.  எப்பொழும் என்னே 
சுத்தி  ஒரு கூட்டமிரிக்கும் . பட்சே  இப்போள் எனிக்கி தேகம் சுகமில்லா. 
ஆரும் என்னேக் காணான் வருனில்லா"

              வாசு சுவாமிகளே  சொல்லட்டுமென்று பேசாமல் இருந்தார். 
இதற்குள் காப்பி கொண்டு வரப்பட்டது. வாசுவும் தங்கமும் காப்பி 
அருந்தத் துவங்கும்போது ,......"வாசு, இப்போள் இவிடேயுள்ளோர்
ஞஙகளிடமிருன்னு  வெள்ளம்போலும்  வாங்கிக்  குடிக்காரில்லா. . 
எந்து கொண்டறியோ .....எனிக்கி எய்ட்ஸ் ஒண்ட. .. எல்லார்க்கும் 
அறிஞ்சு போய்.. நம்மளே எல்லாரும்  ஒதுக்கி வெச்சு."

             வாசுவுக்கு புரையேறியது. "என்னது... உங்களுக்கு எய்ட்ஸ்  நோயா.?
நம்பவே முடிய லியே "

            " அதே வாசு.இன்னோ நாளையோ  ஜீவன் எப்போலேங்கிலும் 
போவாம். தேகம் வல்லாண்டு  ஷீணிச்சு போய்., கோரே திவசமாய்க் 
காணும். பழைய பாவங்களுக்கு இப்போள்  அனுபவிக்கின்னு. " சற்று 
நேரம் தாமதித்து மறுபடியும் சுவாமிகள் கூறினார். " வாசு, ஞான்  செத்தை 
தன்னே. ( கெட்டவன்தான் ) கூடாத காரியங்கள்  பலதும் செய்துட்டுண்டே..
பட்சே ஞான்  மாறி  வாசு மாறி. நல்லவனாயிட்டு  மாறி இருபது 
கொல்லங்களின்   மேலே ஆயி.  ஈ  தேவன் பிரம்மதேவ சுவாமிகளாயி..
ஈஸ்வர  விசாரங்க்கொண்டு  பிராயசித்தம் செய்யுன்னு. .. பட்சே பழைய 
பாவங்களெல்லாம்  அத்தர  வேகம் மாறுவோ. ..ஹூம்.! பகவான் என்னே 
 சிட்சிக்குன்னு..!"

            இதுவரை எதுவுமே பேசாமல் இருந்த தங்கம் இப்போது வாசுவிடம் 
கேட்டாள்."எனக்குத் தெரிந்த வரையில எய்ட்ஸ் வியாதிக்கான HIV எனும் 
வைரஸ் கண்டு பிடிக்கப் பட்டதே இருபது வருடங்களுககுள்ளாகத்தானே
அப்படிஎன்றால் அதற்கு முன் இந்த வைரசே இல்லை என்றுதானே 
அர்த்தம்..?"

          "  HIV வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டது இருபது வருடங்களுக்குள்தான் 
என்றாலும் அந்தக் கிருமி அதற்கு முன்பே  இருக்கவில்லை  என்று 

அர்த்தமாகுமா.? டைபாய்ட்  மலேரியா,  பெரியம்மை  இதற்கெல்லாம் 
காரணமான  கிருமிகளை அடையாளம்  கண்டு,  அதற்கு மருந்தும் 
கண்டு பிடித்திருக்கிறார்கள் . ஆனால் அதற்கு முன்பு அந்த வியாதிகள் 
இருக்கவில்லை என்றாகுமா. ?அதுபோல் தான் இதுவும்  " என்றார் வாசு 

             தேவன் எனும் பிரம்மதேவ சுவாமிகள் இவர்களுடைய பேச்சை 
சற்று ஆர்வமுடன்  கேட்கத் துவங்கினார். 

             "பெரியம்மை  டைபாய்ட், மலேரியா போன்ற வியாதிகளுக்கு 
மருந்து கண்டு பிடிக்கும் முன்பே  அந்த வியாதி இருப்பது அனைவர்க்கும் 
தெரியும். ஆனால் எய்ட்ஸ் நோய் இருப்பதே இப்போதுதானே தெரிய 
ஆரம்பித்திருக்கிறது. "

             "தங்கம், நீ சொல்வதைப் பார்த்தால்  சுவாமிகளுக்கு இந்த நோய் 
வர வாய்ப்பே இல்லையே. அவர்தான் இருபது வருடங்களுக்கு  மேலாக 
நல்வாழ்க்கை ...அதுவும் ஆன்மீக  வாழ்க்கை  வாழ்வதாகக்  கூறுகிறாரே..
நீ கூறுவது  உண்மையானால் சுவாமிகளுக்கு  எய்ட்ஸ் நோய் இருக்காது. 
அப்படி இல்லை என்றால் அவருக்கு இந்த நோய்  ஏற்கனவே  பல வருடங்களுக்கு  முன்பே தாக்கி இருக்க வேண்டும். அதன் சுய ரூபம் 
டாக்டர்கள்  சொல்வது போல் பல வருடங்களுக்குப் பிறகு முற்றிப்போய் 
தெரிய வந்திருக்கிறது.

             இந்தக் கேசைப் பார்க்கும்போது எனக்கென்னவோ அடிப்படையே 
எங்கோ நெருடுகிறது. பூதக் கண்ணாடி  வைத்துப் பார்க்கிறோமோ  என்று 
தோன்றுகிறது.  ஒன்றை நீ யோசித்துப்பார்.  ஆதிகாலத்திலேயே  மனிதன் 
பல தாரங்களை வைத்துக் கொண்டு இருந்திருக்கிறான் .தாசிகளை நாடிப் 
பல  பெரியவர்களே சென்றதாகக் கதைகள்  இருக்கின்றன.  செக்ஸ்தான் 
இந்த நோய்க்கு  மூல  காரணம்  என்றால் நாட்டில் பலருக்கும்  பல 
வருஷங்களுக்கு முன்பே  இந்த நோய் இருந்திருக்க வேண்டும். அது 
பரவுவது பற்றிய  விழிப்புணர்ச்சி  மூலம் ......அதாவது ரத்தத்தின்  மூலம் 
பரவுகிறது. அதனால் பரிசோதனை செய்த ரத்தம் செலுத்துவது; ஒருமுறை 
உபயோகித்த ஊசியை மறுமுறை உபயோகிக்காமல் இருப்பது. ஆணுறை 
உபயோகிப்பது, போன்றவை  வேண்டுமானால்  எந்தப் பாவமும் செய்யாத 
அப்பாவி மக்கள் இந்த நோய் வந்து அவதிப்படுவதை  தடுக்கலாம். 

              உலகத்தில் சுமார் பத்து சதவிகித மக்களாவது இந்த நோயால் 
தாக்கப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானால்  இந்தியாவில் 
மட்டும் சுமார் பத்து கோடி மக்களுக்குமேல் இந்நோய் இருக்க வேண்டும். 
நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. முன்பெல்லாம் இந்தியனின் 
சராசரி வயது  35-/ லிருந்து  40-/ க்குள்  இருந்தது. இப்போது சுமார் 
அறுபதுக்கும் மேல் என்கிறார்கள். மருத்துவம் வளர வளர  வியாதிகளும் 
காரணமும் கண்டு பிடிக்கப்பட்டு,  மருந்தும் கண்டு பிடிப்பதால்தான் 
சராசரி வயது உயர்ந்திருக்க வேண்டும். எயட்சுக்கும் மருந்து கண்டு 
பிடித்தால் நம்முடைய  வாழ்க்கை  நிலை மேலும் உயரும். "என்று கூறி 
அந்த சம்பாஷணைக்கு முற்றுப் புள்ளி  வைக்கப் பட்டது. 

            வாசு பிரம்ம தேவ சுவாமிகளிடம் விடை பெற்றுக்கொள்ளும்போது. 
"சுவாமி, இந்த நோய் ஒருவரை ஒருவர்  தொடுவதாலோ ஒருவருடன் 
பழகுவதாலோ பரவுவதில்லை. உடலுறவு மூலமும்,  வியாதி 
இருப்பவரின் ரத்தம் மற்றவருடைய ரத்தத்தில் கலப்பதாலேயோதான் 
பரவும்.  நீங்கள் எதற்கும் கவலைப் படாதீர்கள். தங்கம் நினைப்பதுபோல் 
இந்த நோயே இருபது வருடங்களுக்குள் தான்  தோன்றியது என்றால் ஒரு 
சமயம்  உங்களுக்கு இந்த வியாதியே இருக்காது. உங்களால் முடிந்த 
அளவுக்கு  மற்றவர்களுக்கு நல்லது செய்து உங்கள் ஆன்மீக வாழ்விலே
கவனம் செலுத்துங்கள். ஆண்டவன் அருளிருக்கும். நாங்கள்  விடை 
பெறுகிறோம். " என்று கூறி மிகவும் வருத்தத்துடன்  தங்கத்துடன் 
கிளம்பினான். 

              இருவரும் ஆழ்ந்த  சிந்தனையில் வந்து கொண்டிருந்தனர். 
 மிகுந்த நேர  மௌனத்துக்குப் பிறகு  தங்கம் வாசுவிடம்  கூறினாள்
"எது எப்படி இருந்தாலும்  பெருங்கோட்டுக்கா  போய் வந்ததில் பல 
எண்ணங்களும் அடிப்படை சந்தேகங்களும்  நமக்கு வந்துள்ளது. .
இதையே ஒரு கதை  கட்டுரையாக  விழிப் புணர்ச்சிப் பதிவாக 
உங்கள்  வலைப்பூவில் வெளியிட்டால் என்ன. ?"
---------------------------------------------------------------------------------  .











.
 .

சனி, 25 ஜூன், 2011

..கதை...கட்டுரை.---பாகம் 1.

 கதை...கட்டுரை  (  சிறு  கதை. )        

           ஆங்கில எழுத்துக்களில் எழுதப் பட்ட மலையாள கடிதத்தின்
ஆரம்பம். சுமார் ஐம்பது  வருடங்களுக்கு முன்பு எழுதப் பட்டது. 

           பழைய கடிதங்களைப் பாதுகாத்து ,அதைப்படித்து, அந்தக் 
கடிதங்களின் பின்னணியை நினைத்து , அந்தப் பழைய வாழ்க்கையில்.
சில மணி நேரம்  வாழ்வது, வாசுவின் பொழுதுபோக்கு. இந்தக் கடிதம் 
எழுதிய தேவனைப் பார்க்க வேண்டும் போல் தோன்றியது வாசுவுக்கு. 
தேவனும் வாசுவும் பழகிய நாட்கள் என்னவோ கொஞ்சம்தான். இரண்டு 
மாதத்துக்கும் சற்று ஏறத்  தாழத்தான் இருக்கும். இருந்தாலும் அந்த 
நாட்கள் .....ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, இரண்டு மூன்று மாத நட்பை 
ஞாபக  படுத்திப் பார்க்க முடியுமா,? ஏன் முடியாமல்....?பழைய  கடிதங்களை 
பாதுகாத்து  வைத்திருக்கிறானே,...ஆனால் தேவனோ ....?


           பெங்களூரில் வேலைக்கு சேர்ந்த அந்த காலத்தில் தங்க நேர்ந்த அந்த 
லாட்ஜில்  த்ரீ  மஸ்கிடீர்ஸ்  என்று தங்களைத் தாங்களே கூறிக்கொண்டனர் 
வாசுவும் தேவனும் சந்துருவும்..இதில் சந்துரு எல்லோரையும் விட
மூத்தவன். ஏதோ கம்பனியில் குமாஸ்தாவாக இருந்தான். தேவன் வேலை தேடி கேரளத்திலிருந்து வந்தவன். வாசு அப்போதுதான் ஒரு தொழிலகத்தில் 
பயிற்சியில் சேர்ந்திருந்தான். மற்றவரைவிட  இளையவன்.

        "  இப்போது தேவன் என்ன செய்து கொண்டிருப்பான்..?எப்படி இருப்பான்.?
பார்க்க வேண்டும்போல்  தோன்றுகிறதே...." எண்ணியதை சொல்லில் கூறி 
செயலில் காட்டாவிட்டால் , வாசுவுக்கு தலை வெடித்து விடும் போல் 
தோன்றியது. 

          " இந்தப் பழைய குப்பைகளை எல்லாம் மாய்ந்து  மாய்ந்து  படிப்பதில் 
அப்படி என்ன சுகமோ.. " வாசுவின் மனைவி தங்கம் அவன் நினைவுகளைக் 
கலைத்தாள்

           " இந்தக் கடிதத்தைப் படித்துப் பாரேன் ,தங்கம். முடிகிறதா...புரிகிறதா .சொல் ".

          " உங்களுக்குத்தான்  வேறு வேலை இல்லையென்றால் .....சரி..சரி..
காட்டுங்கள். VINGHIP  POTTIYA....ஐயே   என்ன இது.  இங்கிலீஷில்  ஆனால் 
இங்கிலீஷுமல்லாமல் ...எனக்கு முடியவில்லையப்பா. ".

          "இங்கே  கொண்டா, நான் படித்துக் காட்டுகிறேன். . விங்கிப  பொட்டிய 
ஹிருதயமுமாய்  நிங்களை விட்டுப்  போரேண்டி வன்னதில் எனிக்கி 
கூடுதல்  விஷமிச்சு. ....தேவனுக்குத் தமிழ்  தெரியாது. ஆங்கிலத்தில் எழுத 
திறமை  இல்லை. எனக்கு மலையாளம்  கொறச்சு அறியும் .அதனால்தான் 
இந்த முறை.  தேவனைப் பார்க்க வேண்டும். போல் தோன்றுகிறது.தங்கம். 
அவன் இந்த விலாசத்தில் இருப்பானா..போய்ப் பார்க்கலாம் . நீயும் வாயேன்" 

        "அவ்வளவு தூரம் பணம் செலவு செய்து போய் அவர் அங்கே இல்லா 
விட்டால், எல்லாம் விரயமாகும். "

          " ஏன் விரயமாக வேண்டும்.?நமக்கும் பொழுது சற்று மாறுதலாகப் 
போகும். ஏற்பாடு செய்கிறேன் . ரெடியாக இரு."
  
          பெருங்கோட்டுக்கா  வழி திருச்சூர்  என்று விலாசமிருக்கிறது. 
எப்படியும் திருச்சூர் போய்  அங்கிருந்து விசாரித்துப் போய்க் கொள்ளலாம். .
திருச்சூருக்கு டிக்கட்  புக் செய்யவேண்டும், என்று எண்ணியவாரே  வாசு 
ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுச் சென்றார்..

        " நீளமாய கழுத்துள்ள  பெண்கள் சந்தமாண ,அறியோ வாசு "-தேவனின் 
குரல் இப்போதும் கேட்கிறது. 

        " வேலை தேடி  ஊர் விட்டு ஊர் வந்து, பெண்களோட கழுத்தைபற்றி 
ஆராய்ச்சி செய்யாதே. முதலில் வேலை."

        " ஆமாம், இவன் பேசற பாஷை யாருக்கும் புரியாது.இவனுக்கெல்லாம் 
எவன் வேலை கொடுப்பான்.?" சந்துருவுக்கு தேவன் சொல்லுவது புரியாத 
தால் வரும் கோபத்தில் சபிப்பான். 

         " அது எந்தா ,ஆரும பணி தரில்லே..? இன்னால் வேண்டா. சந்துரு 
எனிக்கி வேண்டி ஒன்னும் செய்யண்டா. ..ஞான்  எங்கனே யானங்கிலும் 
ஜீவிக்கும்."
            எப்படியாவது பிழைத்துக் கொள்வேன்  என்று சொன்ன தேவனுக்கு, 
அதை நிரூபிக்க வேண்டிய  நிர்பந்தம்  கூடிய சீக்கிரத்திலேயே ஏற்பட்டது. 
ஊரிலிருந்து செலவுக்குப் பணம் வரவில்லை. லாட்ஜில் நெருக்கினார்கள். 
இல்லையென்றால் காலி செய்யச் சொன்னார்கள். 
       
           தேவனும் வேறு வழியில்லாமல் அவனுடைய பெட்டியை வாசுவிடம் 
கொடுத்து பத்திரமாக வைத்துக் கொள்ளும் படியும் பணம் கிடைத்ததும் 
அதை திரும்பப் பெற்றுக்கொண்டு போவதாகவும் கூறினான்.

          " தேவா,உனக்கு நன்றாகத் தெரியும் எங்கள் நிலை. சந்துருவின் பின் 
அவன்  சம்பாதிப்பதைக் கொண்டு வாழ ஒரு பட்டாளமே இருக்கிறது. 
எனக்கோ பயிற்சி நேரத்தில் கிடைப்பது என் ஒருவனுக்கே போதாது. 
இப்படி இருக்க நாங்கள் என்னதான் செய்ய முடியும்.?"


            "  ஏய் ய ..வாசு விஷமிக்கண்ட. எனிக்கி அறியும். எண்டே சமயம் 
இங்கனே  உண்டு. எந்து செய்யாம்.?"
           
             அடுத்த  நாளே தேவனின் பெட்டியை பறிமுதல் செய்ய ,லாட்ஜ் 
முதலாளி முயன்றதும், வாசு அதைக் கொடுக்காமல் தகராறு  எழுந்து 
போலீஸ்  ஸ்டேஷன் வரை விவகாரம் போனதும் வேறு கதை. 

             ரயிலில் இடம் பிடித்து அமர்ந்து பயணம் செய்யும்போது ,அந்த 
வாலிப நாட்களே  வந்தது போலவும் , நிகழ்ச்சிகள் எல்லாம் நேற்று 
நடந்தது போலவும் வாசுவுக்குத் தோன்றியது. 

            "தங்கம், உன்னைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொள்ளும் 
முன்பே, எனக்கு ஒரு காதலி இருந்தாள் தெரியுமா. உனக்கு.?:"

          "  நீங்கள் ஆயிரம் பெண்களைப் பார்த்திருப்பீர்கள். எல்லோரையும் 
மனசால் காதலிக்கவும் செய்திருப்பீர்கள். ஆனால்  யாராவது உங்களைக் 
காதலித்திருக்கிறார்களா.?".

            "என்னைக் காதலிக்க எந்த பெண்ணுக்குத்தான் கசக்கும். ஆனால் 
நான் சொல்லும் இந்தக் காதல் தேவனால் தடம் புரண்டு  விட்டது.
   
              நாங்கள் தங்கி இருந்த லாட்ஜுக்கு அருகே ஒரு பால் கடை 
இருந்தது. அங்கு பால் வாங்க ஒரு பெண் தினமும் வருவாள். நாங்கள் 
இரவு உண்ட பிறகு சில நாட்களில் பால் அருந்த அங்கு செல்வோம். 
அவளை அங்கு அடிக்கடி பார்ப்போம். ஹூம்.!பார்த்தால் எனக்கு 
உடம்பெல்லாம் ஒரு மாதிரி படபடக்கும்., நாக்கு வரண்டு விடும், பேச்சு 
சரியாக வராது. இதெல்லாம் காதலின் வெளிப்பாடுகள்  என்று தேவன் 
விளக்கம் சொல்லுவான். நானும் அதையே நம்ப ஆரம்பித்தேன். ஆனால் 
அவளிடம் எப்படி பேசுவது.,எங்கு பேசுவது, அவள் பேசுவாளா ஒன்றும் 
புரியவில்லை. தேவன் இதற்கு ஒரு வழி செய்வதாகக் கூறி அபயம் 
அளித்தான். --" வாசு கதைபோல விவரிக்க தங்கத்துக்கும் சற்றே உற்சாகம் 
பற்றிக் கொண்டது. 

            " ஆமாம், அப்போது உங்களுக்கு என்ன வயசிருக்கும்.?"
            " பதினேழு, பதினெட்டு  இருக்கலாம்."
            " அடப் பாவி  பிஞ்சிலே  பழுத்த கேசா.?"
            " இல்லை  தங்கம். உலகத்தையே புதுசாப் பார்க்கும் வயசு. எதையும் 
சோதனை செய்து பார்க்கும் வயசு.. யாரையும் உடனே நம்பும் வயசு. .யார் 
கண்டது, சந்தர்ப்பங்கள் சரியாக அமைந்திருந்தால் ஒருசமயம் பிஞ்சிலே
பழுத்திருக்கலாம். "

            " அதுசரி.அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு வயசிருக்கும்.?என்ன  பேர் , 
ஏதாவது தெரியுமா..?"

            " அவளுக்கு பதினெட்டு  இருபது  வயசிருக்கலாம். பெயர் தெரியாது. 
ஆனால் என் மனசுக்குள் நான் அவளுக்கு வைத்த பெயர்  அகிலா. எனக்கு 
எல்லாமே, இந்த அகிலமே அவள்தான் என்று தோன்றும். "

            "ச்சீ .! நீங்கள் இப்படிப்பட்டவர்  என்று தெரிந்திருந்தால் ...."

            " ஏன் , என்னைக் காதலித்து இருக்க மாட்டாயா. ..கலியாணம் 
செய்திருக்க  மாட்டாயா..."

            "இப்போது  அதைப் பற்றி நினைப்பது.  டூ  லேட். நீங்கள் சொல்வது 
போல ,தவிர்க்க முடியாததை அனுபவிக்கத்தானே வேண்டும்.
இருந்தாலும் இப்போது நோ  ரிக்ரேட்ஸ்..வருத்தம் ஏதுமில்லை. "

            " எனக்கு அதுவும் தெரியும். தேவனைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தேன் .எப்படியாவது அந்தப் பெண்ணைப் பற்றிய  சேதிகளை 
சேகரிக்கப் போவதாகக் கூறினான். வேலை இல்லாதவனுக்கு நல்ல 
வேலை என்று சந்துரு  கிண்டல் பேசினான். அடுத்த நாள் பயிற்சி முடிந்து 
அறைக்குத்  திரும்பும்போது, தேவன் அங்கு பொறுமை இல்லாமல் 
எனக்காக காத்திருப்பது  தெரிந்தது.. வாசு, அப்பெண்ணிண்டே ஸ்தலம் 
அறிஞ்சு ..என்று  கூவினான். பிறகு அந்த வீட்டையும்  காட்டினான்.வீடு 
தெரிந்தவுடன் , அந்தப் பெண்ணை பார்க்கா விட்டால் தலை வெடித்து
விடும்போல்  தோன்றும். அந்த வீட்டின் முன்பாக அங்கும் இங்குமாக் 
அடிக்கடி நடப்பேன். வீட்டு முனனால் ஷூவுக்கு லேஸ்  கட்டும் சாக்கில் 
உள்ளே ஆராய்ந்து பார்ப்பேன். ஆனால் என் கண்ணில் மட்டும் அவள் 
தென்படமாட்டாள். தேவன் என்னைக் கிண்டல் செய்கிறான் என்று 
அவனிடம் கோபித்துக் கொண்டேன். நான் அங்கு போகும் சமயம் அவள் 
எங்கோ தட்டெழுத்து  பயில செல்கிறாளோ என்னவோ, என்று தேவன் சொன்னான். அதன் பிறகு அடுத்துள்ள தட்டெழுத்துப் பயில்விக்கும் 
நிலையங்களுக்கு முன் நின்று நோட்டம் விட ஆரம்பித்தேன். அவள் என் 
கண்களில் படவே இல்லை. பிறகுதான் அது நடந்தது. "-என்று ஒரு  சஸ்பென்ஸ கொடுத்து நிறுத்தினான் வாசு.
          " என்ன பெரிய சஸ்பென்ஸ். ...ஒரு நாள் அவளைப் பார்த்தீர்கள்...ஈ 
என்று பல்லிளித்தீர்கள்..அவள் உங்களைக் கண்டு கொள்ளவே இல்லை. 
பிறகு, சேச்சே ..இந்தப் பழம் புளிக்கும் என்று வந்து விட்டீர்கள் ....
அவ்வளவுதானே. .- "என்று கிண்டல் செய்தாள் தங்கம். 
         " அதுதான் இல்லை. அவளுடைய பெயரை அறிந்து வருகிறேன் என்று சொன்ன தேவன் அவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 
ஒரு சிறுவனைக்  கூப்பிட்டு, நிறைய மிட்டாய்கள் கொடுத்து, ..- அந்த 
சேச்சியின் பெயரை  கேட்டு வா..- என்று அனுப்பி இருக்கிறான். அந்தப் 
பையன் வீட்டுக்குள் சென்ற சற்று நேரத்தில் அந்தப் பெண் வெளியே 
வந்திருக்கிறாள். அந்த பையன் தூரத்தில் இருந்த தேவனைக் காட்டி, ஏதோ 
சொல்ல, அந்தப் பெண் உள்ளே சென்று, மறுபடியும் வெளியே வந்தபோது 
பெரிய மீசை வைத்த இரண்டு ஆட்களும்  கூட இருந்தனர்.தூரத்தில் 
இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவன் மெல்ல நழுவப் பார்க்க , ஓடிவந்து 
அவனாப் பிடித்து நன்றாக தர்ம அடி கொடுத்து  அனுப்பியிருக்கிறார்கள் .
பாவம் ,தேவன் முகமெல்லாம் வீங்கி, உதடு காயப் பட்டு  ரத்தம் தெரிய வந்ததை நிறைய பேர் பார்த்திருக்கிறார்கள். அவமானமாக இருந்தது 
என்று சொல்லிச் சொல்லி மாய்ந்தான். பாவம் என் காதலுக்காக அடி 
வாங்கினான்."என்று பெருமூச்சுடன் நிறுத்தினான் வாசு. 

             " அவன் உங்களைக் காட்டிக் கொடுத்து, உங்களையும் அவர்கள் 
புடைக்க வில்லையா ..?"

             " அந்த மட்டில் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.:ஆனால் 
அந்த சம்பவம் அவன் வாழ்க்கை  முறையையே  மாற்றி விட்டது. 
பெண்கள் மேல் அவனுக்கு வெறுப்பே வரக் காரணமாகவும் இருந்தது. 
பிறகு அவன் தன்னுடைய விமானப் பிரிவில் இருந்த ஒரு நண்பனுடன் 
தங்க ஆரம்பித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனை பார்க்க நேரிட்டபோது,
"வாசு  சந்தொஷிச்சு இருக்கான் ஞான்  வழி கண்டு. ஒரு பெண்ணு 
காரணம் தல்லு வாங்கியதில் வளரே அவமானிச்சு. இப்பொழ  கொரே
பெண்ணுங்களே அவமாநிக்கான் படிச்சு ஞான். அன்னு வாசு ச்நேகிச்ச 
பெண்ணின் சேர்க்கான் சாதிச்சில்லா. இன்னு வாசு இஷ்டப்படும்  
பெண்ணினே தெரன்செடுக்காம். என்னோடு வன்னால்அசலாயிட்ட 
சரக்குகளே  காணிககாம் "-என்றான். எனக்கு பயம் அதிகமாகி இருந்ததால் 
அவனை பார்ப்பதை தவிர்த்து வந்தேன். 

           " இப்போது அதற்கு வருத்தப் படுகிறீர்களா என்ன. ?"

           " சேச்சே. ..அதெல்லாமில்லை. நான் வளர்ந்த விதமும், குடும்ப 
பாரமான சூழ் நிலையும் எனக்கு வேலி மாதிரி இருந்திருக்க  வேண்டும்.
பிறகு நான் எப்போதாவது அவனைப் பார்த்தால் , உலகத்தில்  உள்ள 
சந்தோஷங்களை அனுபவிக்கத் தெரியாதவன் என்று கேலி செய்வான். 
பிறகுதான் கொஞ்ச நாள் கழித்து இந்தக் கடிதம் வந்தது. நானும் அவனை மறந்து  விட்டேன். இப்போது பார்க்க வேண்டும் காலம்  என்னென்ன 
மாற்றங்களை  யார் யாருக்கு எப்படியெப்படி செய்திருக்கிறது  என்று 
தெரிந்து கொள்ள வேண்டும்.  அதற்குத்தான் இந்த பயணம். " என்று 
கூறி நிறுத்தினான் .

                  ( நீளம்  கருதி  மீதி  அடுத்த பகுதியில்.).
              ---------------------------------------------------------------------------  .






.                         
 






   


            
. .
 


          
 


புதன், 22 ஜூன், 2011

உறவுகள்.

உறவுகள்   (தொடராக்கலாமே )
-------------

உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

உறவுகளில் தலையாயது, தாய்__மகன், மகள் உறவுதான். தொப்புள் 
கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 
சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 
வெளி வரும்போது, அதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 
வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 
என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 
கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க , 
மறுக்க முடியாத உண்மை.

 ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு 
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால் 
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும் 
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை 
நான் விவாதிக்க வரவில்லை. 

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப் 
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே 
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை 
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள் 
இல்லாமல் குழந்தை இல்லை..ஆக, பிறந்த உடனே  சேய்,தன தாய் 
தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே 
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. 

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை 
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின் 
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு 
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும். 

ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து 
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால் 
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு 
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம் 
எடுபடுவதில்லை. 

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும், 
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள் 
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய 
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள். 
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும் 
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். உறவுகள் 
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன் 
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப் 
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு 
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி 
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய் 
விட்டதோ.?

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும் 
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து 
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு 
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும் 
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே 
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில் 
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட 
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல் தானாக வருவதனறோ.?

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 
மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )
என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 
அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 
மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டி, மீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள் 
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை 
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன் 
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு 
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில் 
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வது, மிகவும் 
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின் 
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது 
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை. 

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும் 
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் , வேறு 
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது 
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும் 
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப்  
பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா 
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல் 
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக 
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
"  அத்தை வீட்டு வாசலிலே, நித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால் 
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும் 
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன 
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன் 
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காக, பெற்றவரை 
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான். .

சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம் 
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து 
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 
அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 
விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 
கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 
அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 
காப்போம். 
------------------------------------------------------------------------------------------
.  .                   ( எனக்குத் தெரியும். இதற்கு எதிர்மறை கருத்துக்கள் 

                         நிறையவே இருக்கும். வழக்கம்போல் என் கருத்துக்கள் 
                 
                         அநேகம் வாசகர்களை சிந்திக்கத் தூண்டும்  என்று 

                         நம்புகிறேன். இந்தத் தலைப்பில் இதை ஒரு தொடராக 

                          பலரும் எழுதினால் நலம் விளையும் என்று நம்புகிறேன். 

                          நானாக இன்னவர் எழுதலாம் என்று கூறுவதைவிட 

                          அவர்களாகவே பங்கு கொள்வது நன்றாயிருக்கும். 

                          ஆண்  பெண் இரு சாராரும் எழுதுவது பல கருத்துக்கள் 

                          வெளிவர உதவும். நன்றி. )
 


           





   












திங்கள், 20 ஜூன், 2011

பதி சொல் தட்டா பத்தினி.

பதி  சொல்  தட்டா  பத்தினி
-------------------------------------

ஆண்டாண்டு  காலம்  பாடுபட்டு  உழைத்துச்
சேர்த்த  பணத்தை மரித்த பின்னும்  கூடவே 
எடுத்துச்  செல்ல விரும்பினான், உலோபி  ஒருவன்.

வாழ்நாளில் பெரும்பகுதி அவன் கூடவே
இருந்து குப்பை கொட்டிய மனைவியிடம் 
அவனை அடைக்கும் சவப் பெட்டியில் 
அவன் கூடவே அவன் சேர்த்த பணமும் 
அவனுடன் தொடரப்  புதைக்கப் பட 
வாக்களிக்க  வேண்டிக்  கேட்டுக் கொண்டான். 
பார  புகழும்  பத்தினியவள்  பதிக்கு 
நிச்சயம் செய்வதாய் சத்தியம் செய்தாள். 

அவன் மூச்சுப் பிரிந்த நாளில் 
சொன்ன சொல்லைக் காக்க சவப் பெட்டியில்
கூட  வைத்தாள் ஒரு பேழையை.

இதை கண்ட அவள் சகி,
இவளுக்கென்ன  புத்தி மட்டா, 
சவத்துடன் பணப்பேழை வைப்பது
சரியான செயலா - சந்தேகம்
தீர்க்கவே  சிநேகிதியைக் கேட்டாள்
புவியில் யாரும் செய்யும் செயலோ இது.. 
புத்தி மழுங்கி விட்டதா உனக்கு என்றாள். 

சத்தியம் அல்லவா செய்து விட்டேன். 
சவப் பெட்டியில் பணம் எடுத்துச் செல்லல் 
அவனுக்கு இடர்கள் பல அளிக்கும் --ஆகவே 
அவன் பணமனைத்தும் வங்கியில் இட்டு 
காசோலையாக்கி அவனுடன் அனுப்புகிறேன்
அவன் செல்லுமிடத்தில்  பணமாக்கிக் கொள்ளட்டும்
என்றே புன்னகை புரிந்தாள்  பதி சொல் தட்டா பத்தினி. 
--------------------------------------------------------------







சனி, 18 ஜூன், 2011

யாதுமாகி நின்றாய்...

யாதுமாகி   நின்றாய்     (இது  என் நூறாவது  பதிவு.)
-    --------------------------

ஆண்டவனைக் கண் கொண்டு யாரும் கண்டதில்லை.
காண்ப தெல்லாம் அவரவர்   கற்பனைத் திருவுருவே. 
தூணிலும் துரும்பிலும்  அண்டம்  பேரண்டம்  என 
எங்கும் நீக்கமற   நிறைந்திருக்கும்  அவனுக்கு ஓர் 
உருவம்  தருதல் முறையோ. .?

ஆத்தல்   காத்தல்  அழித்தல் என  எல்லா 
செயல்களும் ,யாரும்   அறியாமல்   புரியாமல் 
நித்தம்  நிகழ்தல் கண் கூடன்றோ..!
படைத்தவனே அவனைக் காண்பிக்க  இயலாத 
நிலையில் , பத்துமாதம் பாரம் சுமந்து,  பாரினில் 
பெற்றுப் போடும் அன்னையே   மண் மீது 
அவன்  மறு  உருவம் என்பாரே..!

அன்னையே, என் உயிரீந்து ,உடல் தந்த 
அமுதமே, அம்மணியே , உன்னைக் கண்டுன் 
அன்பில் திளைக்க எனக்கேன் தரவில்லை  வரமே..

இருந்தாலென்...?

இல்லாத ஒன்றை  இருப்பதாக பாவித்து, 
இருக்கும் அனைத்தையும்  மறுத்தலும்               
மறத்தலும்  சரியோ..?

பொன்காட்டும்  நிறங்காட்டி, 
மொழி பேசும் விழி காட்டி, 
மின் காட்டும் இடை காட்டி, 
முகில் காட்டும் குழல் காட்டி, 
இசை காட்டும் மொழி காட்டி, 
இணையவே  என்னுடனே, 
ஈன்றெடுத்த  உன்னிலும்  மேலாக, 
நாளெல்லாம் பரிவுடன்  பாங்குடன் 
ஏழை  எனை ஏற்றுக்கொண்ட 
ஏந்திழையும் தாயுளம்  கொண்டவளே. 

இருக்கின்ற  ஒரு மருந்தை அறியாமல் 
இன்னலுற்றேன்  இடர் படவேண்டும்..?

அருமருந்தே  அன்னை  என்றால் 
அவதி போக்க வந்த  இவளை  என் 
அன்னை எனக் கொளல்  தவறோ. ?

அன்னை உனைத் தேடி நான் அலைந்தபோது, 
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
!
யாதுமாகி  நின்ற உன்னைத  தாயுமாகக் 
காணாது   தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 
நிரப்பி , என்  சஞ்சலங்கள் நீக்கிய  சேய்  நான்.
பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து, 
காளையாய்க்  காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து, 
இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்
 எல்லாம் செத்து, நாளை  எண்ணுகையில் 
எனக்கு நானே  அழாதிருக்க, 

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையே,என்னை ஆட்கொள்ள 
வேண்டும் தாயே ,எனை ஆளும் சமய புரத்தாளே. .
---------------------------------------------------------- 

புதன், 15 ஜூன், 2011

செல்லி....எங்கள் செல்லம்.

செல்லி.....எங்கள் செல்லம்
--------------------------------------
              என் மனைவியின் பாட்டியின் காரியத்துக்கு 
திருச்சியிலிருந்து பெங்களூர் வந்து திரும்பிய என் மனைவியும் 
என் மூத்த மகனும்,எனக்கு ஒரு எதிர்பாராத பரிசு என்று ஒரு 
கூடையைக் கொடுத்தனர். அதைத் திறந்து பார்த்தபோது, உண்மை
யிலேயே,நான் எதிர்பார்க்காததுதான்.ஒரு கறுப்பு நாய்க் குட்டி.
பிறந்து நான்கு வாரங்களாம். வால் இல்லை. காக்கர் ஸ்பானியல் 
ஜாதியின் கலப்பு நாய். பெண் குட்டி. என்னைவிட என் இளைய 
மகன் அதிக சந்தோஷமும் ஆச்சரியமும் அடைந்தான். எப்படி என் 
மனைவி  இதற்கு சம்மதித்து கொண்டு வந்தாளோ என்பதே ஒரு
புதிர். 

              வீட்டிற்கு வந்ததும் அது (அவள் )வீட்டின் சுவரோரமாக 
எல்லா இடங்களையும் சுற்றி வந்து, முகர்ந்து பார்த்துப் பின் ,முன் 
கால்கள்முன்னேயும், பின் கால்கள் பின்னேயுமாக நீட்ட்ட்ட்ட்டிப்
படுத்தது. பெண்கள் இல்லாத வீட்டுக்கு வந்த பெண் குட்டிக்குப்
பெயர் என்ன வைக்கலாமென்று ஒரு பெரிய சர்ச்சையே நடந்தது
என் பிள்ளைகளுக்குத் தங்கை என்ற பொருளில் செல்லி என்று 
( தெலுங்கில் தங்கை ) பெயர் வைத்தோம். என் பிள்ளைகள் அதை 
ஸ்டைலாக  ஷெல்லி என்று கூப்பிட ஆரம்பித்தார்கள். முதல் சில 
நாட்கள் என் மனைவிக்கு அதை கவனிப்பதே ஒரு பெரிய வேலை
ஆகிவிட்டது. முதலில் அது அசுத்தம் செய்யும் இடங்களை சுத்தம்
செய்வது தொடங்கி, அதற்கு உணவு கொடுத்துப் பார்த்துப் பார்த்து
வளர்ப்பதே முக்கிய அலுவலாகிவிட்டது. எல்லா வேலைகளை
யும்  அதைப் பற்றிய பயத்திலேயே செய்து வந்தாள். எங்கள் 
வீட்டில் நாங்கள் சைவம். நாயையும் சைவமாகவே வளர்த்தோம்.
செல்லிக்கு காரட் ,பீன்ஸ் , காபேஜ், என்றால் மிகவும் பிடிக்கும்.
காய்கறி நறுக்கும்போது அருகில் வந்து வாயில் எச்சில் ஊறக் 
காத்திருக்கும். காய்கறிகளில் முதல் பங்கு அதற்கே.காரட் என்ற 
பெயர் கேட்டாலேயே, சொன்னவரைப் பிடித்திழுத்து,  ஃபிரிட்ஜ்
பக்கம் நிறுத்தி எடுத்துக் கொடுக்கக் கேட்கும். ஆகவே நாங்கள் 
காரட் என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் ஆகத்தான் சொல்வோம்.
           நான் அதை மாடிக்குக் கூட்டிச் சென்று, சொன்ன பேச்சைக் 
கேட்கப் பழக்கினேன். நில், உட்கார், நட , ஷேக் ஹாண்ட், என்று 
சொன்னதைச் செய்யும். ஏதாவது ஆகாரப் பொருளைத் தின்னாதே
என்றால் சாப்பிடாது. பர்மிஷனுக்காகக் காத்திருக்கும். அதற்கு 
வீட்டில் எஜமானன் நான் என்று நன்றாகத் தெரியும்..ஒருசமயம் 
எங்கள் வீட்டு ரேஷன் கார்டை கடித்துக் கிழித்திருந்தது. இதை 
யார் கிழித்தது என்று நான் கேட்டவுடன் ,அடங்கி ஒடுங்கி சோஃபா
அடியில் போய்ப் படுத்துக் கொண்டது. அது ஏதாவது தவறு 
செய்தாலோ, அதற்கு விருப்பமில்லாததை செய்யச் சொன்னாலோ
( உதாரணத்துக்கு-குளிர் கலத்தில் குளிக்க )சோஃபாவின் அடியில் 
போய்விடும். கட்டாயப் படுத்தினால் உறுமித் தன் எதிர்ப்பைத் 
தெரிவிக்கும். 

           என் பிள்ளைகள்  எங்காவது வெளியே போகும்போது, அவர்
களுடன்  கூடப் போக முயற்சிக்கும். அவர்கள் அதை அதட்டிக்
கதவைச் சாத்திக் கொண்டு வெளியே போய் விட்டால், யார் 
போனார்களோ அவர்களது  ஏதாவது  உடையை ( ஜட்டி, பனியன்)
தேடி எடுத்து, அதை அங்கும் இங்கும் போட்டுப் புரட்டித் தன் 
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளும். ஆடைகளை கிழிக்காது. 
வீட்டிற்கு வரும் பாத் ரூம் சுத்த்ம் செய்ய வருபவரை அதற்கு 
பிடிக்கவே பிடிக்காது. அவர் வருவது கண்டு குரைக்க ஆரம்பிக்கும்.
நாங்கள் அதை ஒரு அறையில் விட்டு கதவை சாத்துவோம். 
பாத்ரூம் சுத்தம் செய்பவர் போன பின் கதவைத் திறப்போம்.
இருக்கும் ஆத்திரத்தோடு கதவைத் திறந்ததும் வெகு வேகமாகப் 
பாய்ந்து  வந்து வெளியே பார்த்துக் குரைக்கும்.

            நான் அலுவலகத்திலிருந்து மாலை திரும்பும்போது, என் 
காரின் சத்தத்தை தூரத்தில் வரும்போதே அறிந்து என்னை 
வரவேற்கத் தயாராகிவிடும். நான் வந்த உடனே, என் மேல் 
தாவி , என் கையை நக்கித் தன் சந்தோஷத்தைத் தெரிவிக்கும். 
நான் குளித்து உடை மாற்றி ஈஸி சேரில் உட்கார்ந்து அன்றைய 
பத்திரிகையை வாசிக்கத் தொடங்குவேன். சற்று நேரம் பொறுமை
யாய்க் காத்திருக்கும். பின் என்னைப் பிறாண்ட ஆரம்பிக்கும். 
மாலை அதை வாக்கிங் கூட்டிச் செல்லவேண்டும். கழுத்தில் 
செயினை மாட்டி வாக் போக படி இறங்க போனால் அது வராது. 
திரும்பி திரும்பி வீட்டைப் பார்க்கும். என் மனைவியும் வந்தால்
தான் படியிறங்கும். வாக்கிங் போகும்போது அதன் காலில் 
ஏதாவது கல்லோ, முள்ளோ குத்திவிட்டால் அந்தக் காலை 
தூக்கிக்கொண்டு அப்படியே நின்றுவிடும். நாம் அதனை எடுத்து
எறிய வேண்டும். அதேபோல அது சைவ நாயாதலால்  பீன்ஸ்
போன்ற காய்களைத் தின்று  அது மலம் கழிக்கும் போது அதன் 
ஆசன வாயில் ஏதாவது நார்  போன்றிருந்தால் அது நகராது. 
அதை சுத்தம்செய்து எடுத்தால்தான் மேலே நகரும். அதற்காக 
நாங்கள் நடக்கும்போது கையில் கொஞ்சம் வேஸ்ட் பேப்பர் 
எடுத்துச் செல்வோம்.

           அதன் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் அதற்கு
வேண்டிய ஊசிகளைப் போடவும், ஒரு மிருக வைத்தியரை
நாடுவோம். அவரை வீட்டிற்கு அழைத்து வந்து, பிறகு கொண்டு
விடவேண்டும். ஒரு வருகைக்கு ரூபாய் ஐம்பது கொடுப்போம். .
அவருக்கு செல்லியைப் பார்த்து பயம். செல்லிக்கு அவரைப்
பார்த்து பயம். ஊசி போட அதை சன்னலின் ஒரு பக்கம் சேர்த்து
அழுத்திப் பிடிப்போம். மறுபக்கம் இருந்து டாக்டர் ஊசி போடுவார்.
ஊசி வேண்டாத நாட்களில், அவர் தூர நின்று பார்த்து நாய் நல
மாக இருப்பதாகக்  கூறி பீஸ் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.

            அசைவ நாய்க்கு சைவ உணவு கொடுத்து வருகிறோமே,
பாவம், என்று ஒரு முறை மட்டன் வாங்கி வந்து, வேக வைத்துக்
கொடுத்தோம். பழக்க மில்லாமல் சாப்பிட்ட அதற்கு, எலும்பு
ஒன்று அதன் மேலண்ணம் கீழண்ணமாக நேராக மாட்டிக்
கொண்டது. அது எவ்வளவோ முயன்றும் எடுக்க முடிய வில்லை.
என் மகன் அதன் வாயுக்குள் கை விட்டு அதை எடுக்க முயற்சி
செய்தான். நாய் எதிர்பாராமல் அவன் கையைக் கடித்து விட்டது.
பிறகு அது அவனையே , மன்னிப்பு கேட்பதுபோல் சுற்றி சுற்றி
வந்தது. அதை மிருக ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று, எலும்பை
எடுக்க வேண்டினோம்.அதை ஒரு கேட்டில் நகர முடியாமல்
கட்டி, ஒரு நீள கம்பியை வளைத்து, வாயில் இட்டு இழுத்து
எலும்பை எடுத்தனர். அது சரியாகி வர என் மனைவி, வேளாங
கண்ணி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய , அங்கு சென்று
நிறைவேற்றி வந்தோம்.

            எல். டி சி. மூலம், ஒரு டாக்சி ஏற்பாடு செய்து, திருச்சி,
கோவை, ஊட்டி, முதுமலை, மைசூர், பேளுர்ஹலேபேட் ,
சரவண பெலகுளா, பெங்களூர், என்று டூர் போனோம். முதுமலை
பண்டிபூர் வழியே மைசூர் செல்லும்போது, ஒற்றை காட்டு யானை
ஒன்று குறுக்காக பாதையில் நிற்க, நாங்கள் மிகவும் பயந்து
விட்டோம். செல்லி எங்கள் காலடியில் தூங்கிக் கொண்டிருந்தது.

              ஒரு முறை செல்லியின் மூக்கில் ஒரு தேனி கொட்டிவிட,
அது மயங்கி விழ, நாங்கள் முதலில் மிகவும் பயந்து போனோம்.
சற்று நேரத்தில் தட்டுத் தடுமாறி  எழுந்து நின்று, மாடிக்கு ஓடியது,

             ஏழே வருடங்கள் எங்களுடன் இருந்த செல்லி, பாத்ரூம்
சுத்தம் செய்பவர் வந்து போக, ஒரு முறை பாய்ந்து வெளியே
வர, எங்கோ மூலையில் இடித்து, அதற்கு கண் பார்வை குறையத்
தொடங்கியது. என் மனைவி அடிக்கடி கூறுவாள், பக்கத்தில்
மாமியார் இல்லாத குறையை செல்லி போக்குகிறது என்று.
அப்படி பார்த்துப் பார்த்து கவனித்துக் கொள்வாள். செல்லி இறந்த
இரண்டு நாட்களுக்கு என் இளைய மகன் உண்ணவே இல்லை.

             செல்லிக்குப் பிறகு நாங்கள் வேறு செல்ல நாய் வாங்கவே
இல்லை. நாய்களுக்கு வளர்ப்போரிடமும், பூனைக்கு வளரும்
இடத்திலும் விசுவாசம் அதிகம். செல்லி கதை கேட்க என் பேர
குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகம். எத்தனை முறை கேட்டாலும்
சலிக்காது.
-------------------------------------------------------------------------------.

 









.

சனி, 11 ஜூன், 2011

சாதாரணன் இராமாயணம்

சாதாரணன்   இராமாயணம்.
---------------------------------------

                        பால   காண்டம்.
                        ----------------------
      பூதேவி ஸ்ரீதேவி  இருபுறம் இருக்க,
      அனைத்துலகாளும்  ஆபத்பாந்தவன், 
      அனாதரட்சகன், பாம்பணையில் துயிலும்
      பரந்தாமன , அமரர் ம்ற்றேனையோர் துயர் 
      துடைக்க, தீவிலங்கை அரக்கர்கோனை
      வேருடன் அழிக்க, தயரதன்தன் வேள்விக்குப் 
      பலனாய், ரவிகுலத் திலகமாய் கோசலை மகனாய்
      பரத இலக்குவன் சத்துருகனன் எனும் 
      மூவருக்கும்  மூத்தவனாய் இராமனாய்
      அயோத்தியில் அவதாரம் செய்து 
       சகலகலாவல்லவனாய்த் தேறி வரும் வேளை,
       காட்டில் செய்யும் வேள்விக்கு 
        ஊறு விளைக்கும் அரக்கரை அழிக்க
        இராமனைத் தன்னுடன் அனுப்பப் பணித்த 
       விசுவாமித்திரன்  சொல் தடுக்க இயலாது, 
        வசிட்டனும் கூற , இளவல் இலக்குமனன் 
        கூடச்செல்ல தயரதன் வழியனுப்பக் காடேகி
         வேள்விக்கிடையூறு  ஈந்த சுபாகு உயிரெடுத்து, 
        அவன் தம்பி மாரீசனைத்  தன் அம்பால் கடலில் வீசி
         தாய் அரக்கி  தாடகையை வதம் செய்து, 
         மறைமுனியின்  வேள்வி காத்து ,அவன் 
         பின் செல்லக்  கானகத்தில் கால் இடர
         கல்லும் பெண்ணாக மாற,  பின் மிதிலை
         மாட வீதியில் அண்ணலும் நோக்க அவன் 
         மணக்க இருந்த அவளும் நோக்க
         சுயம்வரப் பந்தலில் சனகனின் சிலையறுத்து
         மைதிலியை மணம் புரிந்து, அயோத்தி 
         மீள்கையில் மூவேழு தலைமுறை  மன்னரை 
         அழிக்கச் சூளுரைத்த அந்தணன் பரசுராமன் 
         வில் இறுத்து , அவன் தவம் முற்றும் பெற்று
         அரசாள அயோத்தியில் அவன் தந்தை நாள் குறிக்க, 

                       அயோத்தியா    காண்டம்
                        ----------------------------------

           தாதி கூனி சொல்கேட்டுத் தரணி தன்னைத்
          தன் மகன் பரதன் ஆளக் குலக் குமரன் காடேக
           முன் பெற்ற வரம் கொண்டு கைகேயி வேண்டக்  
          கேட்ட தயரதன் மனம் மயங்கிச் சாய,
          கோசலை மைந்தன் இளவல் இலக்குவன் கூடவர
          வைதேகி பின் தொடர அனைத்தும் துறந்து
           மரவடி அணிந்து கானகம் சென்று, குகன் உதவிட
          கங்கைகடந்து, சித்திர கூடத்தில் இருக்க,
           அயோத்தியில் மயங்கி சாய்ந்த மன்னனும் வானேற
          தாயுரை கொண்டு தாதை உதவிய தரணி நீத்து
           குவலயமாள  பணிந்து  வேண்டிய  பரதனும்
           மன்னன் மரவடி பணயம் பெற்றுத் தானும் மீள,
          வனவாசம் துவங்க தண்டகாருண்யம்  புகுந்து,

                               ஆரணிய  காண்டம்.
                               ---------------------------

           ஆரணியத்தில்  அனைவருக்கும் அஞ்சேலென
           அருள் கொடுத்து, அகத்தியன் கை வில் பெற்றவன்
            பால், சீதைக்குத் தான் நிகரென்று காமத்தால் 
            முன் வந்த சூர்ப்பனையின் காதிரண்டும் கொடி மூக்கும்
            இலக்குவன் வாளால் அறுபட, அவள் துணை வந்த
            கரனொடு தூடணன் உயிரெடுக்க அவள் கதறி
            இலங்கையர் கோன் இராவணனிடம் முறையிட
             சீதையை அகல்விக்க மாயமான் உருக்கொண்ட
            மாரீசனால் அலைக்கழிக்கப்பட தவமுனிவேடம் பூண்ட
            அரக்கர்கோன் வஞ்சனையால் சீதையைக் 
            கடத்திக் கடல் சூழ்  இலங்கையில்  கடிகாவில் 
            சிறை வைக்க, மாயமானைச் செற்று வந்தவன் ,
            காதல் மனையாளைக் காணாது வருந்திக் கானகத்தில் 
            தேடியலைய, கோமகளைக் காக்க இயலாத 
            சடாயுவுக்குக் கிரியை செய்து மோட்சமளித்து
            கணையொன்றினால்  கவந்தனை மடித்து,
            சபரி ஈந்த கனி உவந்து உண்டு, 

                           கிஷ்கிந்தா  காண்டம்.
                            ------------------------------

             வைதேகிதனைத்தேட கானகக்  கவியரசன் 
             நட்பு நாட, மராமரம் ஏழு எய்து, தன் திறன் காட்டி
             அவனண்ணன் வாலியைக் கணையொன்றால்   
              முடித்து,தம்பிக்கு முடி சூட்ட,அவன் அமைச்சன்
             திறன் விளங்கு மாருதியும்  மாயோன் தூதுரைத்தல் செப்ப,

                            சுந்தர  காண்டம். 
                            ----------------------

             கடலேறி மும்மதில் சூழ்  இலங்கை புகுந்து,
             கடிகாவில் சிறையிருந்த சீதைதனைக் கண்டு 
             அண்ணல் இராமன் அனுப்பிய தூதன் ,அவன் 
             சொல் கேட்க, அன்னையிடம் விண்ணப்பித்து ,
             அடையாளம் தெளிவிக்க, கைகேசி வரம் கேட்க
             தந்தை சொல் தட்டாது இலக்குவன் சீதையோடு
             இராகவன் கானகம் சென்றதும் ,நால்வரோடு
             ஐவராகிய குகன் கங்கை கடத்தியதும், சித்திர 
             கூடத்தில் பரத நம்பிக்கு மரவடி பணயம் வைத்ததும்
             ஒரு நாள் அண்ணல் மடியில் தலை வைத்திருக்க, 
             ஒரு காக்கை துயர் கொடுக்க அதனை அத்திரம் 
              துரத்த வானெங்கும் பறந்தோடி, அபயம் தேடிக்
             கண் இழந்ததும், பெம்மான் பொன்மானைத்தேடி 
             சிலைபிடித்தேக, ஆங்கே இலக்குவனைப் பிரிந்ததும் 
              கூறி, அயோத்தியர்கோன் அடையாளம்  என அவன்
              கை மோதிரம் காட்ட, அடையாளம் ஒக்கும் 
              என்று உச்சி மேல் வைத்து  உகக்க,மாருதியும் 
             அரக்கர்கோன் மாக்கடிகாவை அழித்து, 
             ஆங்கிருந்த அனைவரையும் கொன்று இலங்கைதனை
             தீக்கிரையாக்கி, அரக்கர்கோன் சினமெழுப்பி, மீண்டு
              அன்பினால் அயோத்தியர்கோன் அடியினைப் பணிய,

                            யுத்த  காண்டம்
                            ----------------------

               அண்ணலும் இளவலும் வானரக் கோனுடன்
               அனுமன் மற்றனைவரோடும் இலங்கை புகல் வேண்டி, 
                கடற்கரையில் வீற்றிருக்க, இராவணன் தம்பி 
                வீடணன் அடைக்கலம் நாட,நல்லாசி புரிந்து
                நுரைகடலைத் தன் அம்பால்  விலக வைத்து
                விலங்குகள்  பணி செய்ய,  கல்லால் அணை கட்டி, 
                மறுகரை ஏறி, இலங்கைப்  பொடியாக்க 
                செஞ்சரங்கள் பல எய்யக் கும்பனொடு நிகும்பனும்
                மாள, இந்திரஜித்தும் அழிய ,கும்பகர்ணன் பட, 
                அரக்கர் அனைவரும் புறங்காட்டி  ஓட
                இலங்கை மன்னன் அத்திரமும் சத்திரமும் அழிந்து
                நிற்க,அன்று சென்று மறுநாள் வர அண்ணலும் கூற,
                பின் வந்தவன் தலை ஒரு பத்தும்,தோள் இருபதும்
                இராமன் விடுத்த சரம் உதிர்க்க,
                வெற்றி கண்ட களத்தில் வானோர் பூமாரி பொழிய, 
                மணிமுடி  தானேற்க ,வீடணன் வானரக் கோனுடன்
                அழகு தேர் ஏறி அனைவரும்  பின் தொடர 
                அயோத்தி எய்தி, நன்னீராடி, மாலைகள் சூடி,
                 திருமுடி தரித்து , மலர்க் குழலாள் சீதையுடன்
                 பரதனும் தம்பி சத்துருக்குனனும் இலக்குமனும்
                அனுமனோடு   அடியேனும்  அடிபணிய 
                 சீரிய சிம்மாசனம் அமர்ந்து , அனைத்துலகும் 
                 அவர் கோல் செலுத்த வாழ்வித்தருளினார்
            ===========================================


          (   இராமாயண காவியம் ஒரு கடல் .எத்தனையோ மகான்கள்
             இராகவனின் அருள் வேண்டி, அவன் கதையை யாத்திருக்கிறார்கள்
             நானும் ஆவலால் உந்தப்பட்டு  ஒரே வாக்கியத்தில்  இந்த 
             சாதாரணனின் இராமாயணம் எளிய கவிதை வடிவில் 
             எழுதி உள்ளேன். படித்துக் கருத்து கூறுங்கள் )
 


             .