Saturday, June 18, 2011

யாதுமாகி நின்றாய்...

யாதுமாகி   நின்றாய்     (இது  என் நூறாவது  பதிவு.)
-    --------------------------

ஆண்டவனைக் கண் கொண்டு யாரும் கண்டதில்லை.
காண்ப தெல்லாம் அவரவர்   கற்பனைத் திருவுருவே. 
தூணிலும் துரும்பிலும்  அண்டம்  பேரண்டம்  என 
எங்கும் நீக்கமற   நிறைந்திருக்கும்  அவனுக்கு ஓர் 
உருவம்  தருதல் முறையோ. .?

ஆத்தல்   காத்தல்  அழித்தல் என  எல்லா 
செயல்களும் ,யாரும்   அறியாமல்   புரியாமல் 
நித்தம்  நிகழ்தல் கண் கூடன்றோ..!
படைத்தவனே அவனைக் காண்பிக்க  இயலாத 
நிலையில் , பத்துமாதம் பாரம் சுமந்து,  பாரினில் 
பெற்றுப் போடும் அன்னையே   மண் மீது 
அவன்  மறு  உருவம் என்பாரே..!

அன்னையே, என் உயிரீந்து ,உடல் தந்த 
அமுதமே, அம்மணியே , உன்னைக் கண்டுன் 
அன்பில் திளைக்க எனக்கேன் தரவில்லை  வரமே..

இருந்தாலென்...?

இல்லாத ஒன்றை  இருப்பதாக பாவித்து, 
இருக்கும் அனைத்தையும்  மறுத்தலும்               
மறத்தலும்  சரியோ..?

பொன்காட்டும்  நிறங்காட்டி, 
மொழி பேசும் விழி காட்டி, 
மின் காட்டும் இடை காட்டி, 
முகில் காட்டும் குழல் காட்டி, 
இசை காட்டும் மொழி காட்டி, 
இணையவே  என்னுடனே, 
ஈன்றெடுத்த  உன்னிலும்  மேலாக, 
நாளெல்லாம் பரிவுடன்  பாங்குடன் 
ஏழை  எனை ஏற்றுக்கொண்ட 
ஏந்திழையும் தாயுளம்  கொண்டவளே. 

இருக்கின்ற  ஒரு மருந்தை அறியாமல் 
இன்னலுற்றேன்  இடர் படவேண்டும்..?

அருமருந்தே  அன்னை  என்றால் 
அவதி போக்க வந்த  இவளை  என் 
அன்னை எனக் கொளல்  தவறோ. ?

அன்னை உனைத் தேடி நான் அலைந்தபோது, 
சுந்தரி  இவளைக் கண்டேன் என் சிந்தையுள்ளே ,
நிறுத்தினேன்  இவளை என் அகத்தினுள்ளே.,
தொலைந்ததே என் துயரங்கள் என்னை விட்டே.
!
யாதுமாகி  நின்ற உன்னைத  தாயுமாகக் 
காணாது   தாரமாக  வந்தவளை நெஞ்சமெலாம் 
நிரப்பி , என்  சஞ்சலங்கள் நீக்கிய  சேய்  நான்.
பிள்ளையாய்ப்  பிறந்து ,பாலனாய் வளர்ந்து, 
காளையாய்க்  காமுற்று, எனதவளைக் கைப்பிடித்து, 
இளமை ஒழிந்து  மூப்புறும்  நிலையில்
 எல்லாம் செத்து, நாளை  எண்ணுகையில் 
எனக்கு நானே  அழாதிருக்க, 

காக்கின்ற  கண்களால்  கருணை வெள்ளம்
கரைபுரள, பூக்கின்ற  புன்னகையால் ,
ஆறாத  மனப் புண்ணின்  அசைவலைகள் 
அடங்கவே  அளித்தருளி அன்னையே,என்னை ஆட்கொள்ள 
வேண்டும் தாயே ,எனை ஆளும் சமய புரத்தாளே. .
---------------------------------------------------------- 

24 comments:

  1. வணக்கம் சார்!

    யாதுமாகி நிற்கின்றீர்கள் சார்!

    தங்களின் 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. அழகாக உங்களைப்பற்றியெல்லாம் எழுதி சமயபுரத்தாளுக்கு விண்ணப்பித்துள்ள பாமாலை படித்தேன்.

    நீங்கள் சமயபுரத்தாள் அருளால் மேலும் பல்லாண்டுகள் நோய் நொடியின்றி வாழ்ந்து, மேலும் பல நூற்றுக்கணக்கான பதிவுகள் தரவேண்டி நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  3. 50 பின்தொடர்பவகளோடு
    இன்று நூறாவது பதிவை தந்துள்ள தாங்கள்
    நூறாண்டு தாண்டி வாழவும்
    பதிவுகள் ஆயிரம் தாண்டித் தரவும்
    அருளுமாறு நானும் சமயபுரத்தாளை
    மனமார வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  4. WOW!! Happy 100th, sir! :)

    May your thoughts flourish forever!

    ReplyDelete
  5. /////
    ஆண்டவனைக் கண் கொண்டு யாரும் கண்டதில்லை.
    காண்ப தெல்லாம் அவரவர் கற்பனைத் திருவுருவே.
    தூணிலும் துரும்பிலும் அண்டம் பேரண்டம் என
    எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அவனுக்கு ஓர்
    உருவம் தருதல் முறையோ. .?/////

    அருமையா வரிகள்...
    உருங்கள் மட்டும் இல்லையென்றால் ஏது இங்கு இவ்வளவு பிரச்சனைகள்...

    ReplyDelete
  6. சமயபுரத்தாலை தன்னுடைய தாயாக பாவித்த தங்கள் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது...

    அற்புதமான படைப்பு..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. 100 பதிவுகள் தங்கள் பணி இன்னும் சிறப்படைய வாழ்த்துகிறேன்..

    ReplyDelete
  8. அன்னையே, என் உயிரீந்து ,உடல் தந்த
    அமுதமே, அம்மணியே , உன்னைக் கண்டுன்
    அன்பில் திளைக்க எனக்கேன் தரவில்லை வரமே..

    அற்புதம் தேன் மதுரத்தமிழில்
    அன்னையின் அன்பை
    அழகாய் அளித்த விதம்
    மனதை கொள்ளை கொண்டது ஐயா

    சதம் அடித்த உங்கள்
    பதம் பணிகிறேன்

    ReplyDelete
  9. கண்டவர் விண்டிலர்!
    விண்டவர் கண்டிலர்!!

    ReplyDelete
  10. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    வலைப்பக்கம் வந்து வெகு நாளாயிற்று. நேரம் கிடைப்பதில்லை. மன்னிக்கவும்.
    சமயபுரத்தாள் அருளால் தாங்கள் நூறாண்டு வாழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. அன்னையின் அன்புக்கு சற்றும் குறைந்ததில்லை மனைவியின் பாசம் என்பதி வெகு அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

    ReplyDelete
  12. லயித்துப் படிக்கமுடிந்தது சார்! நூறாம் பதிவுக்கு என் பணிவான வணக்கங்கள் உங்களுக்கு... நிறைய இன்னும் எழுதுங்கள்.

    "ஆயிரம் பதிவு கண்ட அற்புத ஜி.எம்.பி"
    எனும் பட்டத்தைக் கையில் ஏந்திக் காத்திருக்கிறேன்

    ReplyDelete
  13. அன்னையைக் காணாத ஏக்கத்தையும் உடனே தன் ஆறுதலையும் உங்கள் வரிகளில் கண்டேன். அணைத்து மகிழ்பவளும் தாயல்லவோ...ஒரு அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ...
    அகில அன்னைக்கு வேண்டுதலும் அற்புதம். மோகன்ஜியின் கருத்தை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  14. 100-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. என் பதிவினைப் படித்து வாழ்த்து சொன்ன அனைவரிடமும். “மன்னிக்க வேண்டு கிறேன்” எங்கோ தவறு , என்னிடமா தெரியவில்லை. என் டாஷ் போர்டில் கடந்த பதிவின் போது 99/-வது பதிவு என பார்த்ததாக நினைவு. ஆகவே இதை என் 100/- வது பதிவு என்று எழுதிவிட்டேன். இந்தப் பதிவும் டாஷ் போர்ட் 99/-வது எனக் காண்பிக்கிறது. ப்லாக் ஆர்சிவ்ஸ் -ல் கூட்டிப் பார்த்தால் இதையும் சேர்த்து 95/- காட்டுகிறது. அதைப் பார்த்துவிட்டு வாளா இருக்க முடியவில்லை. அதனால்தான் இந்த மன்னிப்பு கோரிக்கை. சரியாகவே நூறு பதிவுகலும் அதற்கும் மேலாகவும் எழுதுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
    பதிவை ரசித்துப் பாராட்டியவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  16. 100க்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் நட்பணி.

    ReplyDelete
  17. அருமையாக் தாய் அன்பைப்பற்றி சொல்லி இருர்க்கிறீர்கள்.
    ஒரு புத்தகத்திலோ , தொலைக்காட்சியிலோ கேட்டது.
    பெண் தன் முதல் குழந்தையாக நினைக்கிறாள் கணவனை, ஆண் தன் இரண்டாவது அம்மாக நினைக்கிறான் என்று.

    இன்னொருவர் சொல்கிறார்,வாழ்க்கைதுணை தேடும் போது பெண் தன் முதல் குழந்தையை தேடுகிறாள், ஆண் தன் இரண்டாவது அன்னையை தேடுகிறான் என்று.


    அது போல் உங்கள் தாய் பாசம் தேடும் மனதுக்கு உங்கள் மனைவி வந்தது மனதுக்கு மகிழ்ச்சி. யாதுமாகி நின்ற அவர்களை போற்றுவது இன்னும் கூடுதல் மகிழ்ச்சி.
    சிறப்பான பதிவை படிக்க தந்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  18. தாய்ப் பாசத்தைத் தேடி அலையும் உங்கள் சோகம் எனக்குப் புரிகிறது. மீண்டும் படிக்கிறேன்.

    ReplyDelete
  19. ஆழ்மனம் வெளிப்படுத்திய அற்புதமான எண்ணப்பகிர்வு. தாயிடம் மட்டுமே தாய்மையைக் காணும் குறுகிய கண்ணோட்டம் மாறவேண்டும். தாய்மையை மனத்தில் சுமக்கும் யாவரும் அன்னையே... அதன்படி தாயாய்த் தாங்கும் தாரம் தாய்க்கு நிகர் என்னும் உண்மையை உரத்துச் சொல்லும் படைப்புக்குப் பாராட்டுகள். மனைவியின் அன்பில் தாயைக் கண்ட தங்களுக்கும் தங்களை அங்ஙனம் உணரச் செய்த அன்னைக்கும் வந்தனம்.

    ReplyDelete
  20. அருமருந்தே அன்னை என்றால்
    அவதி போக்க வந்த இவளை என்
    அன்னை எனக் கொளல் தவறோ. ?//

    தாய்க்குப்பின் தாரம் என்பார்கள். தாயைக் காணமுடியாத ஏக்கம் உங்களை எவ்வளவு தூரம் வருத்துகிறது என்பது புரிந்து மனம் வருந்தினேன். தாரத்திடமே தாயன்பையும் கண்டது ஆச்சரியமே இல்லை. அன்பில், பாசத்தில் ஒவ்வொரு மனைவியும் இன்னொரு தாய் தான் அவரவர் கணவனுக்கு.

    ReplyDelete

  21. @ கோமதி அரசு
    @ கீதா சாம்பசிவம்.
    @ கீத மஞ்சரி.
    அன்னையர் தின வாழ்த்துக்கள் கண்டபோது என் அன்னையின் நினைப்பு வந்ததென்னவோ உண்மை. இந்த வயதுக்கு மேல் ஏக்கம் என்பது சரியாகாது ஆகவேதான் இரண்டாண்டுகளுக்கு முன் நான் எழுதிய இப்பதிவை உங்கள் பார்வைக்கு வைத்தேன்.இல்லாத ஒன்றுக்கு ஏங்குவதை விட இருப்பதைக் கொண்டாடுவது சிறப்பல்லவா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  22. வணக்கம் ஐயா!

    கண்கள் பெருகிடக் கைதொழுதேன் தந்தையே!
    உங்கள் உளமறிந்து ஊமையானேன்! - தங்களின்
    தாரமும் தாய்தான்! தவிப்பேது? என்றுமிதை
    வீரமாய்ச் சொல்வேன் விரைந்து!

    எத்துணை பெருமை! அருமை!
    உங்கள் கவிதை கண்டு உள்ளம் நெகிழ்ந்தேன் ஐயா! வார்த்தைகள் இல்லை மேலும் சொல்ல....

    எண்ணக் கருத்தை எழுத மரபெதற்கு?
    கிண்ணம் நிறைத்தீர் கீர்!

    ஐயா! கவிதை என்றால் மரபுக் கவிதான் என்று நினைப்பவள் இல்லை நான்!
    உள்ளக்கிடக்கையை, எண்ணங்களை எழுதுவதற்கு கொஞ்சம் மொழியறிவு போதுமே!..

    மரபுக் கவிதை இன்னும் அழகு படுத்துகிறது. இலக்கண வரையறைக்குள் வரும்போது இனிமை மேலும் அதிகரிக்கலாம்.
    அதற்காக புதுக்கவிதை இனிமை இல்லை என்றோ வசனக் கவிகளில் வார்த்தைகள் ரசனை அற்றதென்றோ அர்த்தம் இல்லையே.

    இன்றைய திரைப்படப் பாடல்கள் சில மனதில் அப்படிப் பதிகிறதே. (அதிலும் சிறிது இலக்கணச் சுவடு இருக்கின்றனதான்.) மரபில்லாக் கவிதைகளும் சக்கைபோடு போடுகின்றன!.

    உங்களாலும் முடியும் ஐயா! இதுவே போதிய எதுகை மோனையோடு நல்ல இனிமைச் சந்தமும் சேர்ந்தே இருக்கின்றது!

    என் உளம் தொட்ட கவிதை இது ஐயா!

    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
    தொடருங்கள் இன்னும் இன்னும்...


    ஐயா!.. என் வலைத்தளத்திற்கு நீங்கள் பலமுறை வந்தும் நான் இங்கு அவ்வப்போதுதான் வரமுடிந்துள்ளது. காரணம் என் பணி - கடமை அத்தகையது!

    12 வருடங்களாக விபத்தொன்றினால் கோமா நிலையான என் கணவரை வீட்டிலேயே வைத்து நானே பார்க்கின்றேன். என் மொழிப்பற்று, ஆர்வம், மற்றும் ஆறுதலுக்காவும் வலையில் என் உலா.
    ஆனாலும் பலரிடமும் தகுந்த நேரத்தில் போகமுடியாமலும் கருத்திட முடியாமலும் தவிக்கின்றேன்!
    தலைக்கனம் எனக்கு என்றெண்ணிவிட வேண்டாம் என்பதற்காக இங்கு இதனைக் கூறினேன் ஐயா! முடிந்தவரை உங்கள் பதிவுகளுக்கும் வந்து படித்துக் கருத்திட முயல்கிறேன்!.

    அன்பு நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete

  23. @ இள மதி. மிக்க நன்றி. உங்கள் ஒரு பதிவில் உங்கள் கணவர் பற்றியும் உங்கள் நிலைமை குறித்தும் எழுதி இருந்ததைப் படித்தவன் நான் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே தலைப்பில் எழுதிய பதிவு என்பதாலேயே உங்கள் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். என் மகள் போன்றவர் நீங்கள்.. உங்களிடம் கோபம் கொள்ள என்னால் முடியாது, மீண்டும் நன்றி.

    ReplyDelete