திங்கள், 25 ஜூலை, 2011

எதுவும் கடந்து போகும்.

  
                                                  
                                        கிளாஸ் பெயிண்டிங்
                                         ---------------------------
                       ராதா கிருஷ்ணன் ராஜஸ்தானி ஸ்டைல்
                      ----------------------------------------------------------  
       பத்து வயதிருக்கும்போது, டைஃபாய்ட் வந்து ஆஸ்பத்திரியில் 
அட்மிட் ஆகியிருந்த விவரங்களை என் அரக்கோண நாட்கள் 
பதிவில் எழுதியிருந்தேன்.டாக்டர்களுடன் எனக்கான அனுபவங்
களை எடுத்துக் கூற முடியாத வயது அது.

      HAL -லிருந்து மேல் பயிற்சிக்காக நான் அம்பர்னாத் அனுப்பப் 
பட்டேன். அது என் தந்தையார் இறந்த மூன்று வாரங்களுக்குள் 
இருந்தது. பெரும் பொறுப்பும் ,மனோ வியாகூலமும் சேர்ந்து 
நோயிருக்கவில்லை என்றாலும்,  எனக்கு உடல் அடிக்கடி 
சோர்ந்து தளர்வடையச் செய்யும். இடுப்பின் இடது பக்கம் ஒரு 
வலி ஓயாது இருந்து கொண்டே இருக்கும். அங்குள்ள மருத்துவ 
மனையில்( attached to the defense factory.) காண்பித்து வந்தேன்.அவர்
களும் ஒருவழியாக எல்லாவிதமான மருந்துகளும் கொடுத்தும்
பலன் தராத நிலையில்,எனக்கு மில்க் இன் ஜெக்‌ஷன் என்று 
ஏதோ ஊசி போட்டார்கள். அது எதற்கு என்று நான் கேட்டபோது, 
பால்வினை நோய் ஏதாவது இருக்குமோஎன்று சந்தேகப்படுவ
தாக கூறினார்கள்.! குடிக்கும் பால் தவிர வேறு எந்தப் பாலும் 
அறியாத எனக்குஇது அதிர்ச்சியாக இருந்தது. என் சந்தேகத்தைக் 
கூறினேன். நான் டாக்டரா அவர்கள் டாக்டரா என்று என்னிடம் 
கோபம் கொண்டு, பிறகு என்னை பாம்பே கொலாபாவில் இருந்த 
நேவல் ஆஸ்பத்திரிக்கு என்னை ரெஃபெர் செய்தார்கள். அங்கு 
என்னை அட்மிட் செய்ய படுக்கைகள் இல்லாத காரணத்தால்
பிறிதொரு முறை வரச் சொன்னார்கள்.நான் ஏன் போகிறேன். ?
வலியை பொறுத்துக்கொள்வதே நலம் என்று இருந்து விட்டேன்
           அங்கு நான் இருக்கும்போது, பல் வலி வந்து, ஆஸ்பத்திரி
யில் பல் டாக்டர் இல்லாத காரணத்தால் பம்பாய்க்கு அனுப்பி
னார்கள்..பம்பாய் ஜேஜே ஆஸ்பத்திரி என்று நினைவு,அங்கே
என்னை பரிசோதித்த பல் மருத்துவரின் (பெண் டாக்டர்)அழகில்
மயங்கி நான் வாய் பிளந்திருந்த நிலையில் என் பல்லைப் 
பிடுங்கி அனுப்பி விட்டார்கள்.

           அதன்பிறகு திருச்சியில் நான் BHEL-ல் பணியிலிருந்தபோது
எனக்கு நெஞ்செரிச்சல், பசியின்மை,  சோர்வு எல்லாம் சேர 
டாக்டரை அணுகினேன். அவர்கள் என்னை பரிசோதித்து மருந்து
கொடுத்தார்கள்.எந்த பிரயோசனமும் இல்லாதிருந்ததால் மறுபடி
மறுபடியும் டாக்டரிடம் போனேன். ஒரு கட்டத்தில் என்னைப் பரி
சோடித்து மருந்து கொடுத்துவந்த டாக்டர்,என் தலையைப் 
பார்த்ததுமே, எனக்கு குறை ஒன்றும் இல்லை என்று கூற ஆரம்
பித்தார். உடல் உபாதை எனக்கல்லவா இருந்தது. ?அவர் மருந்து 
கொடுத்தும் எப்படி எனக்கு குணமாகாமல் இருக்கும் என்பது 
அவர் சந்தேகம்.!
       
          அதன்பிறகு பெரிய டாக்டரைப் பார்த்தபோது அவர் பேரியம் 
மீல் சோதனை (பேரியம் என்ற வஸ்துவை திரவ நிலையில் 
ஒன்று இரண்டு டம்ளர்கள் குடிக்கக் கொடுத்து, எக்ஸ் ரே எடுத்து
பார்ப்பது) செய்துகுடலில் புண் இருக்கிறதா என்று 
ஆராய்ந்தார்கள் புண் ஏதும் இல்லாதிருந்தும் எனக்கு ஒரு                 இஞ்செக்‌ஷன் கொடுத்தார்கள்.(EMETINE  INJECTION ) என்ற 
நினைவு..ஒரு வாரத்துக்கு என் காலை அசைக்க முடியவில்லை.
எதற்கும் டாக்டர்களை அணுகவே பயமாக இருந்தது. கொஞ்சம் 
கொஞ்சமாக என் உபாதைகளுடன் சேர்ந்திருக்கப் பழகிக் 
கொண்டேன்.
         பிறகு விஜயவாடா அனல் மின் நிலைய கட்டுமானப் பணிக்கு
என்னை மாற்றல் செய்தார்கள். பொட்டல் காடாக இருந்த 
இடத்தில் இரண்டு 210-/mw அனல் மின் நிலையங்கள் ஆதியில்
இருந்து மின் உற்பத்தி துவங்கும் வரை பணியிலிருந்தேன். 
காலை ஏழு மணியள்வில் சென்றால், எப்போது திரும்பி வருவோம் 
என்று தெரியாத அளவுக்கு வேலைப் பளு. ஒரு தடவை  எதிர்
பாராத முறையில் வேலையில் சிக்கல்கள் ஏற்பட்டு, இரவு பகல் 
பாராமல் மூன்று நாள் வேலை செய்து, சிக்கல்களை சரி செய்து, 
வீட்டிற்கு வந்தும், என்னையறியாமல் நான் வேலை பற்றிய 
விஷயங்களையே பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்த என் மனைவி, 
என்னை அருகிலிருந்த டாக்டர் சமரம் என்பவரிடம் அழைத்துச் 
சென்றார். ( அவர் ஆந்திராவின் பெரியார் என்று சொல்லத் தகுந்த
கோரா என்பவரின் மகன்.)அவரிடம் எங்களுக்கு நல்ல பழக்கம்
இருந்தது. அப்போது அவர் கொடுத்த மருந்தை விட அவர் கொடுத்த 
அறிவுரைகளே பெரிய மருந்தாக இருந்தது. “ என்னதான் நடக்கும்
நடக்கட்டுமே, “என்பார். “ எதுவும் கடந்து போகும்” என்ற மந்திர 
வார்த்தைகளை உபதேசித்தார். மருத்துவரின் துணை நாடுவோரின் 
மனமறிந்து சிகிச்சை செய்வது, டாக்டர்களுக்கு முக்கிய பாடமாக 
இருக்க வேண்டும். 

         ஒரு முறை காலையில் படுக்கையிலிருந்து எழ முடியாதபடி 
இடுப்பிலும் காலிலும் வலி. டாக்டர் சோதித்துப் பார்த்து டிஸ்க் 
ப்ரொலாப்ஸ் ஆகியிருக்கிறது குண்டூரில் ஆர்தோ ஸ்பெஷலிஸ்ட்
டிடம் சென்று சிகிச்சை பெறச் சொன்னார். அங்கு சென்று பரிசோ
தனைக்குப் பின் அவர், நான் மூன்று வாரகாலம் கட்டைப் படுக்கை
யில் தலையணை இல்லமல் மல்லாந்து படுத்திருக்க வேண்டும் 
என்றும் , அதன் பிறகும் குணம் தெரியவில்லை என்றால் 
அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

          எனக்கிருந்த பொறுப்பிலும், வேலைப் பளுவிலும், மூன்று 
வாரகாலம் படுத்திருப்பது,கனவில் கூட எண்ண முடியாத 
ஒன்று. ஒரு வாரத்துக்குள்ளாகவே நான் பணியில் இருக்க 
வேண்டிய  கட்டாயங்களால் உந்தப்பட்டு ,வேதனையுடனே
வேலைக்குச் சென்றேன்.இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு 
க்விக் ஃபிக்ஸ் தீர்வாக அக்குபங்சர் முறை யில் சிகிச்சை 
எடுத்துக்கொள்ள பலர் ஆலோசனை வழங்கினார்கள்.குண்டூரில் 
ஒரு அக்குப் பங்சர் ஸ்பெஷலிஸ்டைப் பார்க்க என் மனைவி
யுடன் சென்றேன்.என்னை பரிசோதித்த அந்த டாக்டர், நான் 
தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள
வேண்டும் என்றும், சிகிச்சையினால் எனக்கு எந்த பாதிப்பும் 
இருக்காது என்றும், நான் எல்லா வேலைகளையும் எப்போதும் 
போல் செய்யலாம் என்றும் கூறினார். சிகிச்சை காலத்தில் 
நான் அகலமாகக் கால்களை வைக்கக் கூடாது என்றும், ஜெர்க் 
எதுவும் இருக்கக் கூடாது என்றும் கூறினார். சிகிச்சையில் 
இருந்த சில பேரை நாங்கள் பார்க்க நேர்ந்தது. என் மனைவி 
பயந்து போய் விட்டாள்.உடலின் பல பாகங்களில் மெல்லிய 
ஊசிகள் செருகப் பட்டு (ஐம்பது, அறுபது இருக்கும்.)உட்கார்ந்
திருந்தனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு ஊசிகளை எடுப்
பார்களாம். இந்த சிகிச்சைக்கு ஃபீஸ் ஆக அவர் ரூ.400/-
கேட்டார்.(1979-ல்)அவரிடம் விடை பெற்று நாங்கள் திரும்பி
வரும்போது, என் மனைவி ரூ.1000/- திருப்பதி உண்டியலில் 
போடுவதாக வேண்டிக்கொண்டார். 

        நானும் விஜயவாடாவில் இரண்டு அனல் மின் நிலை
யங்கள் மின்சார உற்பத்தி செய்யும்வரை  பணி புரிந்துவிட்டு
டாக்டர்களின் ஆலோசனைப்படி திருச்சிக்கே மறுபடியும் 
மாற்றலாகி வந்தேன். வேதனைகளுடனும் வலிகளுடனும் 
வாழப் பழகிக் கொண்டுவிட்டேன். நான் வேண்டுமானால் 
என் வேலைக்குப் பயப்படலாம். ஆனால் எனக்கிருந்த உடல் 
உபாதைகள் எனக்குப் பயப்படவில்லை. தொடர்ந்து தொல்லை 
கொடுத்துக் கொண்டிருந்தது.

        மறுபடியும் பி எச். இ.எல் டாக்டர்களிடம் சிகிச்சை.இடுப்பு 
வலியுடன் கூட செர்விகல் ஸ்பாண்டிலைடிஸ் என்ற கழுத்து 
வலியும் சேர்ந்து கொண்டது. கழுத்துக்கும் காலுக்கும் தினம் 
அரை மணி நேரம் ஆஸ்பத்திரியில் ட்ராக்‌ஷன்.கழுத்துக்கு 
ட்ராக்‌ஷன் போடுபவரிடம் தமாஷாக எனக்கு தூக்குப் போடு
மாறு கூறுவேன். ஸ்கூட்டர் ஓட்டக்கூடாது என்ற டாக்டர் 
என்னை ஸ்கூட்டரில் பார்த்தால் மறுநாள் ஒரு பிடி பிடிப்பார். 

       இப்படியாக நான் அவதிப் படுவதைக் கண்ட என் மனைவி
திருப்பதி வேண்டுதல் இருப்பதை நினைவுபடுத்திக் கொண்டு 
இருந்தாள். வேண்டுதலை நிறைவேற்றி வரும் வழியில் 
மெட்ராசில், நியுரோ நிபுணர் டாக்டர் ராமமூர்த்தியையும் 
பார்த்து வருவது என்று தீர்மானித்தோம். ஒரு சுபயோக சுப 
தினத்தில் குடும்பத்தோடு திருப்பதி சென்று வேண்டுதல் 
கடன் கழித்து மெட்ராசில் டாக்டர் ராமமூர்த்தியின் 
அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காமல் திருச்சி திரும்பினோம். 
பிறகு கொஞ்ச நாள் கழித்து என் உடல் உபாதைகள் தொந்தரவு 
தரவில்லையே என்ற எண்ணம் வந்தது. டாக்டரும் என்னை 
ஒருமுறை க்ளப்பில் பார்த்து ஏன் ஆஸ்பத்திரிக்கு வருவ
தில்லை என்று கேட்டார். நான் அவரிடம் உலகிலேயே 
சிறந்த மருத்துவரிடம் என் மனைவி என்னை அழைத்துப் 
போயிருந்தாள் என்று கூறினேன். அவர் கொஞ்சம் முழிக்க 
அந்த தலை சிறந்த மருத்துவர் ஏழுமலையான் என்று விளக்கம் 
கூறினேன். 

        எனக்கே தெரியாமல் என் வலிகள் குறைந்து நான் குணமாகி
விட்டேன் என்று எண்ணத் துவங்கினால் “இல்லையடா, நான் 
உன்னைவிட்டுப் போகவில்லை” என்று அவ்வப்போது வந்து 
ஆஜர் கொடுத்து இரண்டொரு நாட்கள் இருந்து செல்லும்.

        உடல் உபாதைகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் 
கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு அவற்றின் ஆதிக்கம் நம் 
மேல் இருக்கும்BHEL-ல் திரு. நாகப்பா என்றொரு அதிகாரி 
இருந்தார். அவருக்குப் பக்கவாதம் வந்து மூன்று நான்கு 
மாதங்கள் சிகிச்சைக்குப் பிறகு ஒரு வயதுக் குழந்தை நடப்பது 
போல் தட்டுத்தடுமாறி வாக்கிங் ஸ்டிக்குடன் வேலைக்கு வர 
ஆரம்பித்தார். அவர் கூறும் ஒரு வாசகம் என் மனதில் நீங்கா
இடம்பிடித்துள்ளது. நாம் நம் உடல் இதற்கு மேல் தாங்காது
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது , என்று நினைக்கும் 
நிலையை விட ஆறு மடங்கு அதிகம் வேதனைகளையும் 
கஷ்டங்களையும் தாங்கக் கூடியது என்பார்.இதையும் 
டாக்டர் சமரத்தின் எதுவும் கடந்து போகும் , இது நடக்கா
விட்டால் உலகம் உன் தலையில் விழாது என்ற அறிவுரை
யையும் நான் உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்கிறேன்

(சில டாக்டர்களின் குணாதிசயங்களைப் பற்றி எழுத நினைத்தது .என்னை 
அறியாமலேயே எங்கோ சென்று முடிந்து விட்டது. அதுவும் நல்லதற்கே)

    
  
        
               



                                                                                         
-
  

6 கருத்துகள்:

  1. நல்லதொரு அனுபவப்பகிர்வு. நமக்கு உடம்பில் என்ன கோளாறு என்பதை மிகச்சரியாக நாம் முதலில் போகும் டாக்டரே கண்டுபிடித்து, நல்ல மருந்து மாத்திரைகளும், அறிவுரைகளும் கூறி அது சரியாக நமக்கு அந்த ஏழுமலையான் போன்ற யாராவது தான் அருள் புரிய வேண்டும். இல்லாவிட்டால் பல டாக்டர்களிடம் தொடர்ந்து சென்று ஏதேதோ சோதனைகள் செய்து, பாடாய்ப்படுத்தி, பணமும் கறந்து, நிம்மதியையும் இழந்து தவியாய்த்தவித்து, கடைசியில் அப்படியே அந்தக்கோளாறுகளுடன் ஒரு வித உறவும் நட்பும் தோழமையும் ஏற்படுத்திக்கொண்டு விடுவோம்.

    நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //நாம் நம் உடல் இதற்கு மேல் தாங்காது
    நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாது , என்று நினைக்கும்
    நிலையை விட ஆறு மடங்கு அதிகம் வேதனைகளையும்
    கஷ்டங்களையும் தாங்கக் கூடியது//

    உண்மைதான். நமது மனமும் அப்படியே..

    நல்ல பகிர்வு. மிகவும் சுவராசியமாகவும் இருந்தது.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல சுவையான பகிர்வு அய்யா
    மனம் தெளிவானது

    பதிலளிநீக்கு
  4. ஐயா!
    துன்பத்திலும் இன்பம்
    காணும் உங்கள் உள்ளமும்
    வேங்கடவன் அருளும் நல்லதே
    செய்யும் நம்புங்கள்
    நல்லபதிவு
    நன்றி
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  5. என் இந்த பதிவு க்கு வந்துள்ள பின்னூட்டங்கள் எனக்கு ஏதோ உடல் நலக் கோளாறு இருக்கிறதோ என்ற எண்ணத்தைக் கிளப்பி விட்டதோ என்று அஞ்சுகிறேன்.பல டாக்டர்களிடம் ஏற்பட்ட அனுபவப் பதிவே இது. நான் நலமாகவே உள்ளேன். எந்த உடல் நலக்கெடும் இல்லை. என் மீது கொண்டுள்ள அக்கறைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு