எண்ணச் சிறகுகளில்..
------------------------------
அந்திசாயும் நேரம், அழகான மாலை வேளை
பகல் இறந்து இரவு உயிர்க்கும்போது,
வாழ்வின் மாலையில் மதி மயங்கி,
எண்ணச் சிறகுகள் என்னுள்ளே படபடக்க
எண்ணிப் பார்க்கிறேன், இதுகால் இருந்த இருப்பை.
அன்றொரு நாள் எந்தையும் தாயும் மகிழ்ந்து குலவ,
விபத்தின் விளைவாய், எங்கிருந்தோ என்னைக்
கேளாது இங்கெவனோ தூக்கி எறிந்திட்டான்,
இன்னும் எங்கோ எனைக் கேளாது எறியப்படுவேனோ
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
நாளை என்பது நிஜமாகும்.
கடந்த காலம் ,வாழ்ந்த வாழ்க்கை
கடந்ததுதானே; மாற்றல் இயலுமோ.
அந்த நாள் அக்குயவன் கை
ஆட்டத்தால் நேர்ந்த பிழைக்கு(பிழையா.?)
இந்த நாளில் ஏழையெனை
ஏனோ குறைகள் கூறுவரே.
நெஞ்சே, நீயும் எத்தனை நாள்
நெருப்பில் மூழ்கி நின்றிடுவாய்.
வஞ்ச உலகில் எல்லாம் ஒழித்திட்டு,
மறந்து நீக்கிச் சென்றிடவே
சித்தத்தில் நீயும் தயாரா, எண்ணுவாய் நீயே.
எண்ணி எண்ணி உன் குறைகள் மட்டும் ஏனோ
உன்னுகின்றாய். மண்ணில் நீயோர் ஒளிவட்டம்
மற்றவ் வட்டம் காண்போர் விழியின் வளைவே
வளைவெல்லாம்.என்றறிந்தவந்தானே நீ.
வாழ்வின் விடியல்,பகல்,மாலை வரை வந்து
விட்டாய்,வென்றுவிட்டாய். வாழ்க்கை நிறைவேயன்றோ
நீ சென்ற பின்னே பழிக்கும்படியா இருப்பாய்.
உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
அறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.
என்னுயிர்ப் பறவையே,
நான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.
மூடிய கண்கள் விழித்து விட்டால்
இன்னும் இன்னும் எண்ணச் சிறகடிப்பாயே.
------------------------------------------------------------
//உன் உயிர்ப் பறவை இன்னும் இருக்கிறது
ReplyDeleteஅறம் ,பொருள் ,இன்பம் கழித்தாயிற்று;
வீடு நோக்கிப் பறப்பதே மீதி.//
வாழ்வை அசைபோடும் வரிகள்...
எதுக் கவிதையென கேட்டுவிட்டீர்
ReplyDeleteஇதுக் கவிதையென தீட்டுவிட்டீர்
புதுக் கவிதை அல்ல! அல்ல!!
மதுக் கவிதை! அத்தனையும் மரபுக்
கவிதை
அருமை!
புலவர்கள் வாக்கு பொய்யாவதில்லை
நேற்றே சொன்னேன் நன்று
பலித்தது பாரீர் இன்று
புலவர் சா இராமாநுசம்
கண்மூடி உறக்கம் விழித்தெழுந்தால்
ReplyDeleteநாளை என்பது நிஜமாகும்.
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
//என்னுயிர்ப் பறவையே,
ReplyDeleteநான் கண்களை மூடிக் கொள்கிறேன்
நீ உன் சிறகசைப்பை துவக்கலாம்.
என் நெஞ்சுக்கூட்டை விட்டு
அழகாக வெளியேறிவிடு, யாரும் அறியாமல்.//
இதுதான் அனாயாச மரணம் என்பது. கோடியில் ஒருவருக்கே இது வாய்க்கும்.
நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்.
எது கவிதை என்பது போல்
ReplyDeleteமுதல் பதிவில் கேட்டு
இதுதான் கவிதை என்பதுபோல்
இப்பதிவைத் தந்துள்ளமைக்கு மிக்க நன்றி
தொட்டு தொடர்ந்து தொடர்கதையான வாழ்வையும்
விட்டு விலகி விடுதலையாகத் துடிக்கும் உணர்வையும்
நீங்கள் உணர்ந்தது போல் நானும் உணர்ந்தேன்
இதுதானே கவிதை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
எனக்கென்னவோ இந்தக் கவிதை சுத்தமாய்ப் பிடிக்கவில்லை. எதற்கு நீங்கள் மரணம் பற்றியெல்லாம் பேச வேண்டும். வாழச் சொல்லுங்கள். வாழ்கிறோம்.. இன்னும் இருபது வருசத்துக்கு இது பற்றி பேசக் கூடாது நீங்க.
ReplyDeleteவாழ்வை எண்ணி அசை போடுகையில் என்னையறியாமலேயே இம்மாதிரி வரிகள் தான் உள்ளத்தில் உதிக்கின்றன.
ReplyDeleteகலாநேசன் சொல்வதுபோல் வாழ்வை அசைபோட்டு எழுதியதுதான். புலவர் ஐயாவும் ரமணி சாரும் கவிதை என்ற பெயரில் நான் எழுதுவதற்கு உற்சாகமூட்டுகிறார்கள். நன்றி. கோபு சார் கூறுவதுபோல் அந்த கோடியில் ஒருவனாக நான் ஏன் இருக்கக்கூடாது. வாழ்த்துங்கள்.என் மகன் சொன்னதையே
மோகன் ஜியும் கூறுகிறார்.நெருப்பென்றால் வாய் சுடுமா.?
மோகன் அண்ணா சொன்னது தான் என் கருத்தும். ( சுயநலம் தான் ) பிறகு என் கவிதைகளுக்கு ரசிகர்களை எங்கே போய் தேடுவேன். என் பையன் கேட்கிறான்.<" என்ன அப்பா, உங்களுக்கு சுப்பு தாத்தா, GMB , வை.கோ, காஷ்யபன் என்று அந்தக் காலத்து ரசிகர்களாகவே இருக்கிறார்கள் " என்று.
ReplyDelete