Saturday, August 20, 2011

ஊழலுக்கெதிராக....பாகம்..2.

ஊழலுக்கெதிராக ...பாகம் 2..
-------------------------------------
என் பதிவினைப் படிக்கும் அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்,
நான் எந்த கட்சியையோ பிரிவையோ ஆதரிக்க வில்லை. என்
கவனமெல்லாம் நாம் வெறுமே உணர்ச்சி வசப்பட்டு, உண்மை
நிலவரங்களைக் கோட்டை விடக் கூடாது என்பதுதான்,நான்
என் பதிவுகளில் என் ஆதங்கங்களை எழுதி வந்திருக்கிறேன்.
என் எழுத்து எனக்குத் தெரிந்தவரை அதற்கான காரணங்களை
வெளிப்படுத்தி வந்திருக்கிறது. மக்களுடைய அறியாமையை,
ஏற்ற தாழ்வுகளைப் பயன் படுத்திஅவர்களுடைய சின்ன ஆசை
அபிலாக்‌ஷைகள் நிறைவேற்றுவதாக அவர்களை நம்ப வைத்து
ஏமாற்றி லாபமடைந்தவர்கள் இன்று அரசியல் வாதிகளாகவும்
தலைவர்களாகவும்பவனி வருகிறார்கள்.அடக்கி வைத்திருக்கும்
உணர்ச்சிகளுக்கும் கோப தாபங்களுக்கும் வடிகால் கிடைக்காமல்
ஏங்கித் தவிப்பவர்கள்நம்பிக்கை நட்சத்திரமாக அண்ணா ஹசாரே
வந்துள்ளார் என்று நானும் முதலில் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால்....

நம்பிக்கை நட்சத்திரம் எரி நட்சத்திரமாக மாறிவிடுகிறதோ என்ற
என் அச்சத்தின் வெளிப்பாடே, என் முந்தைய பதிவு. ஊழல் என்பது
சட்டம் போட்டு மாய்த்து விடலாம் என்று யாரும் தவறாகக் கனா
காணக் கூடாது. ஆனால் கடுமையான சட்டம் நிச்சயமாக ஒரு
DETERENT-ஆக இருக்கும் என்று நம்பலாம். கடுமையான சட்டம்
இயற்றும்போது  நடை முறைக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்க
வேண்டும். இனி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளை கொஞ்சம் அலச
லாம். ஹசாரே அவர்கள் முதலில் உண்ணாவிரதம் இருந்தபோது
அவர்களும் அரசும் கலந்து ஒரு மசோதா தயாரிக்கலாம் என்ற
முடிவு எடுக்கப்பட்டு எண்ணப் பரிமாற்றங்களும் தொடங்கின.
சந்தடி சாக்கில் பாபாவும் புகுந்து அவரும் கருப்புப் பணம் வெளிக்
கொண்டுவர உண்ணா விரதம் இருந்தார் எதிர்பாரா விளைவுகளை
எதிர்பார்த்து அரசு சில நடவடிக்கைகள் எடுத்தது.பகலில் எடுக்கும்
நடவடிக்கை ஏடாகூடமான விளைவை உண்டாக்கலாம் என்று
பயந்தோ என்னவோ இரவில் ராம் தேவ் பாபாவை அப்புறப்
படுத்தினார்கள். அதுவும் எதிர்பாராத விளைவையே கொடுத்தது.
Once bitten twice shy -என்பது போல அண்ணாவை உண்ணாவிரதம்
துவங்க விட்டு தடுப்பதைவிட Prevention is better than cure -என்று
எடுத்த நடவடிக்கையும் அரசுக்கெதிராகவே முடிந்து விட்டது. யார்
என்ன நடவடிக்கை எப்போது எடுக்க வேண்டும் எடுத்திருக்க
வேண்டும் என்பதெல்லாம் நடந்து முடிந்த பிறகு அலச முடியும்.
நடவடிக்கை எடுப்பவர் எதையும் தவறு என்று தெரிந்து செய்வது
இல்லை. எதையும் சரி தவறு என்று சொல்வதல்ல என் நோக்கம்.
நடந்தவற்றை எனக்குத் தோன்றியபடி எழுதுகிறேன். எல்லாக்
கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அரசை ஏறி மிதிக்க ஒரு சான்ஸ்.
அவ்வளவுதான்.

ஜன் லோக் பால் மசோதாவுக்கும் அரசின் மசோதாவுக்கும் நிறைய
வித்தியாசங்கள் இருக்கலாம். அவை என்னவென்று கண்டறிந்து
அமல் செய்யும் சாத்தியக்கூறுகளை பரிசீலிப்பதே மக்கள் நலனில்
அக்கரை இருப்பவர்கள் செய்ய வேண்டியது. அரசின் மசோதாவா
இல்லை சிவில் சொசைட்டியின் மசோதாவா இல்லை அமல்
படுத்தக்கூடிய இரண்டுக்கும் நடுவிலான ,வேறு ஒரு மசோதாவா
என்பதைத் தீர்மானிக்க வேண்டும்

சரி. இப்போது இருக்கும் சாத்தியக் கூறுகள் என்னென்ன.?இந்த
நிலைமைக்கு கொண்டு வந்த அரசு அவர்களுடைய மசோதாவை
திரும்பப் பெறலாம். அப்படித் திரும்பப் பெற்றாலும் முதுகெலும்பு
இல்லாத அரசு என்று பழிக்கப் படும் அப்படி திரும்பப் பெறாமல்
சிவில் சொசைட்டியின் மசோதாவை இவர்கள் தாக்கல் செய்ய
முடியாது. அதை அமல் படுத்துவதில் நிறைய சிக்கல்கள் உள்ளன
என்பதால்தானே இவ்வளவு சங்கடங்களும்.  இருக்கும் கட்சிகள்
எல்லாம் இந்த அரசு கவிழவே முயற்சி செய்கிறார்கள். சரி. அரசு
கவிழ்க்கப்பட்டோ, ராஜினாமோ செய்தாலோ பிரச்சினைகள்
தீருமா. ? மற்ற கட்சிகளின் நிலைப்பாடென்ன. ?ஜனாதிபதி ஆட்சி
அல்லது தேர்தலுக்குப் பிறகான ஆட்சி என்பது பிரச்சனைகளுக்கு
தீர்வு கொடுக்குமா.?நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று
பிடிவாதம் பிடிக்காமல் தங்கள் அணுகுமுறையில் மாற்றம்
கொண்டு வருவதுதான் அண்ணா ஹசாரேவுக்கும் நாட்டுக்கும்
நல்லது..ஊடகங்களைப் பார்க்கும்போது அருமையாகக் கிடைத்த
சந்தர்ப்பத்தை அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டுஅறிவுக்கு
விடைகொடுத்து இழக்கிறார்களோ என்று தோன்றுகிறது.

பாராளுமன்றத்தை மதிக்காமல் சட்டம் கொண்டு வருவது
இயலாது. ஒத்த கருத்தை உருவாக்குவதே பலன் அளிக்கும்.
அரசியல் கட்சிகளின் நிலைப் பாட்டைப் பார்க்கும்போது
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவே துடிக்கிறார்கள் என்று
தெளிவாகிறது. இரண்டு மசோதாக்களுக்குமான வித்தியாசங்
களும்  இருவருடைய நிலைப் பாடுகளையும் உணர்ச்சிக்
கொந்தளிப்பில் இருக்கும் இளைஞர்கள் பெரும்பாலும் உணர
வில்லை என்றே தோன்றுகிறது.

முத்தாய்ப்பாக மீண்டும் கூறுகிறேன் கிடைத்த சந்தர்ப்பத்தை
தங்கள் அணுகுமுறையில் சற்று மாற்றம் கண்டு நழுவ விடா
மல் இருப்பதே அண்ணா ஹசாரே குழுவினருக்கும் நாட்டுக்கும்
நல்லது.
    
..  

13 comments:

  1. //முத்தாய்ப்பாக மீண்டும் கூறுகிறேன் கிடைத்த சந்தர்ப்பத்தை
    தங்கள் அணுகுமுறையில் சற்று மாற்றம் கண்டு நழுவ விடா
    மல் இருப்பதே அண்ணா ஹசாரே குழுவினருக்கும் நாட்டுக்கும்
    நல்லது.//

    மிகச்சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
    ஆனால், என்ன நடக்கப்போகிறதோ, தெரியவில்லை. பார்ப்போம். நடப்பதெல்லாம் நல்லதாகவே ந்டந்து முடிந்தால் சந்தோஷமே! vgk

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  3. // ஹசாரே அவர்கள் முதலில் உண்ணாவிரதம் இருந்தபோது
    அவர்களும் அரசும் கலந்து ஒரு மசோதா தயாரிக்கலாம் என்ற
    முடிவு எடுக்கப்பட்டு எண்ணப் பரிமாற்றங்களும் தொடங்கின.//

    ஐந்து கூட்டங்கள் ஒழுங்காக தான் போய் கொண்டிருந்தது. நடுவில் ராம்தேவ் குட்டையை குழப்பினார். ரம்தேவை அடக்கியது போல் அன்னா ஹசரேவையும் அடக்கிவிடலாம் என்ற தைரியம் வந்தவுடன் கபில் சிபல் வகையறா குறுக்கே திரும்பினார்கள்.

    லோக் பால் கொண்டு வரவேண்டும் என்பதே காங்கிரஸ் நோக்கம் அல்ல. லோக் பால் வந்தால் அதுவும் ஜன லோக் பால் வந்தால், அது எல்லா கட்சிக்கும் கஷ்டம் தான். ஆகவே அதை தடுக்க எல்லா வழிமுறைகளையும் பயன்படுத்துகிறார்கள்.

    ஜன லோக் பால் இருந்திருந்தால் 2G ஊழல் சுவான் டெலிகாம் 1661 கோடிக்கு வாங்கி 11000 கோடிக்கு வித்த உடனேயே கேஸ் போட்டு மொத்த ஏலத்தையும் கேன்சல் செய்திருக்கலாம். காமன் வெல்த் முறைகேட்டையும் அப்பொழுதே தடுத்திருக்கலாம்.

    பத்து இருபது கோடி செலவு செய்து எம் பி ஆனவங்க ஜன லோக் பாலை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. பிளாக் வைத்திருக்கும் சிலர் ஏன் எதிர்கிறார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete
  4. என் ப்ளாகுக்கு வருகை தந்துள்ள தமிழா, தமிழாவுக்கு நல் வரவு. எழுதுபவர்களின் நோக்கத்தையே தெரிந்து கொள்ளாமல் இருக்கும்படியா என் எழுத்து இருக்கிறது.?மாற்றுக் கருத்துக்களும் ஏதோ காரணத்துக்காகத்தான் என்று எண்ணுவதை உணரும்போது சற்று வலிக்கிறது. புரியாவிட்டால் என் பதிவுகளை பல முறை படியுங்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

    ReplyDelete
  5. இதில் இருக்கிற நடைமுறைச் சிக்கல்களையும், ஈகோவையும் விட்டுவிட்டு அரசாங்கம் அண்ணா சொல்கிற ஜன் லோக்பால் சட்டத்தையே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தாலும், அது லோக் சபாவைத் தாண்டி ராஜ்ய சபாவுக்குப் போகாது என்பது உண்மை. அப்படியிருக்க, அரசை மட்டுமே குறைகூறி ஆகப்போவது ஒன்றுமில்லை. எதிர்க்கட்சிகளில் பல ஜன்லோக்பால் சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்பதை ஏனோ அண்ணா ஹஜாரே ஏற்க மறுக்கிறார். ஆக, இந்த deadlock இன்னும் சில நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் என்பதே உண்மை.

    ReplyDelete
  6. இப்படிப்பட்ட சிக்கலான சூழலில் நடுநிலையிலிருந்து, அருமையான சில கருத்துக்களை கூறியிருக்கிறீர்கள் ஐயா. உங்களுக்கு எனது வணக்கங்களும் நன்றிகளும்!

    ReplyDelete
  7. தங்கள் பதிவு நடுநிலை நோக்கோடு
    தான் அமைந்துள்ளது
    இதைக் காலப் போக்கில்
    அனைவரும் உணர்வர்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  8. கிடைத்திருக்கிற நல்வாய்ப்பை
    ஹசாரே மட்டுமல்ல
    மக்களும் சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டிய
    நிலையில் உள்ளோம்
    இல்லையேல் அரசியல் பெருச்சாளிகளால்
    தொடர்ந்து ஏமாற்றப்படுவோம்
    சிந்தனையை தூண்டிச் செல்லும் பதிவு

    ReplyDelete
  9. //ஜன லோக் பால் இருந்திருந்தால் 2G ஊழல் சுவான் டெலிகாம் 1661 கோடிக்கு வாங்கி 11000 கோடிக்கு வித்த உடனேயே கேஸ் போட்டு மொத்த ஏலத்தையும் கேன்சல் செய்திருக்கலாம். காமன் வெல்த் முறைகேட்டையும் அப்பொழுதே தடுத்திருக்கலாம்.

    பத்து இருபது கோடி செலவு செய்து எம் பி ஆனவங்க ஜன லோக் பாலை எதிர்ப்பதில் நியாயம் இருக்கிறது. பிளாக் வைத்திருக்கும் சிலர் ஏன் எதிர்கிறார்கள் என்று தெரியவில்லை.
    //

    இதுதான் உண்மை.

    ReplyDelete
  10. எம்.பி க‌ளின் ச‌ம்ப‌ள‌த்தை மூண்று ம‌ட‌ங்காக‌ உய‌ர்த்த‌ ம‌ட்டும், ஒரே நாளில் ச‌ட்ட‌மாக்க‌ முடிந்த‌ இந்த‌ பார‌ளும‌ன்ற‌த்தில் ஏன், சமூக‌த்திற்கு நன்மை ப‌ய‌க்கும் ம‌ற்ற‌ ம‌சோத‌க்க‌ளை ச‌ட்ட‌மாக்க‌, இருப‌தாண்டுக‌ள் ஆனாலும் முடியாம‌ல் போகிற‌து?

    ReplyDelete
  11. என் ப்ளாகில் ஊழலுக்கெதிராக என்ற பதிவின் மூலம் ஒரு விவாதமே நடப்பது மகிழ்ச்சி. யாருமே ஊழலை ஆதரித்து எழுதாதது இன்னும் மகிழ்ச்சி. ஆனால் ஜன் லோக்பால் மசோதாவை அப்படியே ஏற்றுக்கொள்வதா என்பதில் தான் ஒட்டியும் வெட்டியும் விமரிசனங்களென் நோக்கமே எந்த மசோதாவும் , அதுவும் ஊழலுக்கெதிரானது போனற மசோதா வின் எல்லா விவரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.விருப்பு வெறுப்பு இல்லாது அணுக வேண்டும் என்று சொன்னால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மாற்றுகருத்தேதவறு என்று உணர்ச்சி வசப்படக் கூடாது. NGO-க்களும் corporate-களும் மெல்ல மெல்ல, மின்வசதி, கல்வி, சுகாதரம், தண்ணீர் சப்ளை, டெலிகம்யூனிகேஷன்ஸ் , சுரங்கம் என்பனவற்றை எடுத்தாளத் துவங்கும் கால கட்டத்தில் , இவை யாவும் ஜன் லோக் பாலின் கட்டுப் பாட்டுக்குள் வராது --என்பன போன்ற விஷயங்கள்
    உணர்ச்சி வேகத்தில்சிந்திக்கப் படாமலேயே போய் விடக் கூடாது என்பதே என் எண்ணம். 40-வருடம் பொறுத்திருந்த நாம் இன்னும் சில காலம் பொறுக்க மாட்டோம் என்பது நியாயமாகப் பட வில்லை. தொலைக்காட்சியை மட்டும் பார்த்தால் போதாது. பல விதக் கருத்துக்களை தாங்கி வரும் பத்திரிகை களை யும் படிக்க வேண்டும். நான் முன்பே ஒரு முறை கூறியது போல் எல்லா உண்மைகளையும் முதலில் தெரிந்து கொள்வோம். பிறகு அவற்றை எப்படி வேண்டு மானாலும் திரிக்க முயலலாம்.

    ReplyDelete
  12. ஊழல் என்பது
    சட்டம் போட்டு மாய்த்து விடலாம் என்று யாரும் தவறாகக் கனா
    காணக் கூடாது. ஆனால் கடுமையான சட்டம் நிச்சயமாக ஒரு
    DETERENT-ஆக இருக்கும் என்று நம்பலாம்.

    உண்மைதான் ஐயா.

    ReplyDelete
  13. உள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.

    நிஜம் தான். ஜொலிக்கிறது தங்கள் கருத்து.

    ReplyDelete