Tuesday, November 1, 2011

பசி......

                                             பசி...
                                         ---------

       அன்றொரு நாள் சாலையில் ஒரு சிறுவன் அழுது கொண்டு
இருந்தான்.என் பேரனிடம் அவன் அழுவதன் காரணம் தெரியுமா
என்று கேட்டேன்.பசியாயிருக்கும் என்றான்.பசி என்றால் என்ன
என்று தெரியுமா என்று கேட்டேன்.வயிறு காலியாயிருக்கும்
போது சாப்பிட வேண்டும் என்று தோன்றும் உணர்வே பசி
என்றான்.

       பசியைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. நாம்
உணவு உண்ணும்போது அதை செரிக்கச் செய்ய,வாயில் உமிழ்
நீர் முதல், குடலில் செல்லும்போது சுரக்கப்படும் திரவங்கள்
வரை, உடல் உற்பத்தி செய்கிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில்
உண்ணும் பழக்கத்தினால்,அந்த நேரத்தில் அவற்றைச் செரிக்க
இந்த திரவங்கள் அந்த நேரத்தில் சுரக்கத் தயாராய் இருக்கும்.
உணவு உள்ளே சென்றால் சுரக்கப்படும் திரவங்களுக்குப் பணி.
உணவைச் செரிக்க வைப்பது. உணவு செல்லாவிட்டால்
சுரக்கப்படும் திரவங்கள் தனது வெளிப்பாடைக் காட்டும். குடலை
லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று கொள்ளலாமா.?
அந்த நேரத்தில் உணவு உட்கொண்டால் செரிமானம் சரியாக
நடக்கும். நேரத்துக்கு உணவு உட்கொள்ளாவிட்டால் சுரக்கப்படும்
திரவங்கள் தன் கைவரிசையைக் காட்ட ஆரம்பிக்க குடல் புண்
போன்ற வியாதிகள் வர வாய்ப்பு அதிகம்.

        ஆகவே நேரத்துக்கு உண்பது அவசியமாகிறது.பசிக்கும்
நேரத்தில் உணவு கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
பசிக்கு உணவு கிடைக்காதபோது இருப்பது பட்டினி எனப்படும்.

         சிலர் வேண்டுமென்றேஉபவாசம் என்ற பெயரில் பட்டினி
கிடப்பார்கள்.அவர்களும் ஒரு விதத்தில் கொடுத்து வைத்தோரே.
ஏனென்றால் அது அவர்களாகவே மேற்கொள்வது.அதிலும் சிலர்
உபவாசம் என்னும் பெயரில் பல காரங்களாக பல ஆகாரங்கள் 
சாப்பிடுவதும் உண்டு. ஆனால் நம் நாட்டில் பசிக்கு உணவு
கிடைக்காமல் அரைப் பட்டினி,முழுப் பட்டினி, கொலைப் பட்டினி
என்று இருப்பவர்கள் ஏராளம். இவர்களை வறுமைக் கோடு
என்ற ஒன்றை உருவகப் படுத்தி அதற்குக் கீழே இருப்பவர்கள்
மேலே இருப்பவர்கள் என்று ஏதேதோ கூறுகிறார்கள்.

        ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை
அழித்திடுவோம்”என்று பாரதி பாடினான். அன்று.அப்படிச் செய்
வதாயிருந்தால் இந்த ஜகம் என்றோ அழிக்கப்பட்டு அழிந்து
இருக்கவேண்டும். கூடவே அவனே “வாய்ச் சொல்லில் வீரரடி”
என்றுமல்லவா பாடிச் சென்றிருக்கிறான்.( புத்திசாலிதான் )

       ஆதங்கங்களில் எழும் எழுத்துக்களும் உணர்வுகளும் செயல்
படுத்த முடியாதபோது ஒரு கையாலாகாத்தனம் தோன்றுகிறது.

       நாளும் பாடுபட்டு உழைத்தும் இந்த ஒரு சாண் வயிற்றுக்கு
உணவு கொடுக்க முடியவில்லை என்றால் யாரை நோவது.?
பசித்திருப்பவன் முன் கடவுளே உணவு ரூபத்தில்தான் வர
வேண்டும். சில இடங்களில் இருப்பவனுக்கு சாப்பிடத் தடை.
இல்லாதவனுக்கு சாப்பாடு கிடைப் பதில் முடை.

       லட்சக் கணக்கில் பணம் செலவு செய்து பட்டினி கிடப்பதைப்
பறை சாற்றிக் கொண்டு, புகழ் தேடும் பாவி மனிதர்களுக்கு
இல்லாதவனின் கொடுமை எங்கே தெரிகிறது.?

        சில நேரங்களில் இந்தப் பூவுலகில் இருப்பது எல்லோருக்கும்
பொதுவாக இருக்கும்போது, இருப்பதை அனைவருக்கும் பங்கு
போட்டுக் கொடுக்கும் சித்தாந்தம் ஏதாவது நடைமுறைக்கு
வந்தால் நலமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

       பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்பட்டு
வருகிறது.பணக்காரனின் பசி வேறு வகை.உடல் நலனுக்காகத்
திணிக்கப்படுவதுநடுவில் இருக்கும் மத்தியதரத்தினரின் பசிதான்
கொடுமையானது. கேட்டுப் பெறாதது; இரந்துண்ணவும் முடியாது.
ஒளவையார் பாடல் நினைவுக்கு வருகிறது. “ ஒரு நாள் உணவை
ஒழியென்றால் ஒழியாய்; இரு நாளைக்கு ஏலென்றால் ஏலாய்.
இடும்பைகூர் வயிறே ,உன்னோடு வாழ்தல் அரிது “என்ன
பிரயோசனம். வாழ்ந்துதானே ஆக வேண்டும்.சிலப்பதிகாரத்தில்
வரும் அட்சய பாத்திரம் எங்காவது கிடைக்குமா.?கிடைக்கா
விட்டால்தான் என்ன... இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத
ஒருவனுக்கு தினமும் ஒரு வேளை உணவாவது அளிக்கலாமே.
கொடுப்பதில் இன்பம் இருக்கிறது என்றும் உணர்ந்து கொள்ளலாம்

கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான் கற்பித்தானா
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான் ரட்சித்தானா
அல்லைத்தான் சொல்லித்தான் யாரைத்தான்
நோவத்தான் ஐயோவெங்கும்
பல்லைத்தான் காட்டத்தான் பதுமற்றான்
புவியிற்தான் பண்ணினானே.
(இது பழங்காலப் புலவர் ஒருவரின் புலம்பல் )

      என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.
இன்னதுதான் எழுத வேண்டும் என்று ஒன்றுமில்லையே. எப்படி
இருப்பினும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேனே.!
---------------------------------------------------------------------------------  















13 comments:

  1. //குடலை லேசாக அரிக்கும். அந்த உணர்வைப் பசி என்று கொள்ளலாமா.?// இது ஒரு வகையில் உண்மை.. ஆனால் ஆணித்தரமாக சொல்வதென்றால் நம் உடல் இயங்க சக்தி குறையும் பொழுது நமது மூளையானது வயிற்றுக்கு உணவை செரி என்று உத்தரவிடுவதே பசி என்று அழைக்கப் படுகிறது.. உணவு இருக்கிறதா இல்லையா என்ற கவலை பசிக்கு இல்லை என்பது தான் கொடுமை

    ReplyDelete
  2. பசி என்பது மிகவும் கொடுமை தான், சார். பசியைப்போக்கிக் கொள்ளக்கூடிய வசதியுள்ளவர்கள் மட்டுமே, அதில் கொஞ்சம் ருசியையும் எதிர்பார்க்க ஆரம்பிக்கின்றனர்.

    அழகான பற்பல விஷ்யங்களுடன் நல்ல பதிவொன்றைக் கொடுத்துள்ளது, செவிக்கு நல்ல உணவாக அமைந்து விட்டது, எங்களுக்கும்.

    பாராட்டுக்கள். vgk

    ReplyDelete
  3. பசி என்பது எல்லாருக்கும் தோன்றும் உணர்வுதான். பசித்துப்புசி என்பது பெரியோர்வாக்கு பசிக்கும்போது உனவு கிடைக்கனுமே.

    ReplyDelete
  4. சிந்தனையின் போக்கிலேயே போய்
    எழுதுவது ஒருவகை சுகம்
    ஆட்கள் இல்லாத சாலையில்
    வாகனம் ஓட்டிச் செல்வதைப் போல
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்
    த.ம 1

    ReplyDelete
  5. அழகான பற்பல விஷ்யங்களுடன் நல்ல பதிவொன்றைக் கொடுத்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. //அதிலும் சிலர் உபவாசம் என்னும் பெயரில் பல காரங்களாக பல ஆகாரங்கள் சாப்பிடுவதும் உண்டு//

    மும்பையில் ஒரு மராத்திய நண்பர் செவ்வாய்க்கிழமையன்று ’உபவாஸ்’ என்று சொல்லியபடி ஒரு டிபன் பாக்ஸ் நிறைய சாபுதானா கிச்சடி (ஜவ்வரிசி உப்புமா) சாப்பிட்டதைப் பார்த்தேன்.

    பசி குறித்த ருசிகரமான தகவல்கள் ஐயா. ஔவையார் சொல்லிவிட்டாரே!

    "மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
    தானம் தவருயர்ச்சி தாளாண்மை -தேனின்
    கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
    பசி வந்திடப் பறந்து போம்"

    ReplyDelete
  7. //என்னென்னவோ நினைத்து என்னென்னவோ எழுதி விட்டேன்.
    இன்னதுதான் எழுத வேண்டும் என்று ஒன்றுமில்லையே. எப்படி
    இருப்பினும் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளேனே.!//

    நம்முடைய ஆத்ம திருப்திக்காக எழுதுவது எப்படியும் இருக்கலாம். நல்ல கருத்துக்கள்.

    ReplyDelete
  8. the flow was so good, sir!! "stream of conscious" kind of writing..

    Beautiful!

    ReplyDelete
  9. பசிப்பதும் புசிப்பதும் பற்றிச் சொல்லக் கிளம்பி பசி உணவு உபவாசம் தொடர்பாய் வெளிப்பட்ட எல்லா எண்ணங்களுமே அதன் போக்கிலேயே சென்று இயல்பாய் வெளிப்பட்டிருக்கின்றன.சபாஷ் பாலு சார்.

    ReplyDelete
  10. நல்ல பதிவு! வறுமைக் கோடு இப்பொழுது நிறைய சதவிகிதம் இல்லாமல் ஆகிவிட்டதாய் தோன்றுகிறதே!...மெய்யா? பொய்யா?

    ReplyDelete
  11. இருப்பவன் ஒவ்வொருவனும் இல்லாத
    ஒருவனுக்கு தினமும் ஒரு வேளை உணவாவது அளிக்கலாமே.

    உண்மையான வார்த்தை.. உணவு அளித்து பார்க்கும் போது அதன் மூலம் கிட்டுகிற திருப்தி மிகப் பெரியது.

    ReplyDelete
  12. // பசியில் ஏழையின் பசி ஒருவகை.அவனுக்கு அது பழக்கப்பட்டு வருகிறது.பணக்காரனின் பசி வேறு வகை. உடல் நலனுக்காகத் திணிக்கப்படுவது​ //​


    ''பசிவர அங்கே மாத்திரைகள்... பட்டினியால் இங்கு யாத்திரைகள்... இருவேறுலகம் இதுவென்றால் இறைவன் என்பவன் எதற்காக" என்கிற பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. "அண்ணாந்து பார்க்கின்ற மாளிகையும் அதனருகே ஓலைக்குடிசைகளும்" நம் பார்வையில் வழக்கம்தானே...

    ReplyDelete
    Replies
    1. சுட்டியைத் தொடர்ந்து வந்து வாசித்ததற்கு நன்றி ஸ்ரீ

      Delete