Friday, August 29, 2014

கீதைப் பதிவு -அத்தியாயம் -1.


                                             கீதைப் பதிவு---அத்தியாயம் --1.
                                             --------------------------------------------




மஹாபாரதமெனும் இதிகாசத்தில் பீஷ்ம பர்வத்தில் 25-வது அத்தியாயத்திலிருந்து 42-வது அத்தியாயம் வரையில் உள்ள 18 அத்தியாயங்களில் கூறப்பட்டவை ஸ்ரீமத் பகவத் கீதை எனப்படுகிறது.இவற்றில் அமைந்துள்ள சுலோகங்களின் எண்ணிக்கை எழுநூறு(என்று கூறப்படுகிறது. எண்ணிப் பார்க்கவில்லை)
குருக்ஷேத்திரப் போரில் நடப்பவற்றை நேரில் காணும் சக்தியை வியாச பகவான் ஸ்ஞ்ஜயனுக்கு( விருப்பு வெறுப்பு இல்லாதவன் எனும் பொருள்) அருளி இருந்தார். அவர் திருதராஷ்டிரனுக்கு நடப்பவற்றைக் கூறுவது போலும் அர்ஜுன ஸ்ரீகிருஷ்ண சம்பாஷ்ணைகளுமாக  கீதை விரிகிறது (பதிவின் நீளம் தவிர்க்க இயலாதது) 
அத்தியாயங்களின் சுருக்கம்
1)       அர்ஜுனவிஷாத யோகம்46 சுலோகங்கள் கொண்டது
2)       ஸாங்கிய யோகம் 72 சுலோகங்கள்.
3)       கர்ம யோகம்---43சுலோகங்கள்
4)       ஞானகர்ம ஸன்யாஸ யோகம் 42 சுலோகங்கள்.
5)       ஸன்யாஸ யோகம்29 சுலோகங்கள்
6)       தியான யோகம்---47 சுலோகங்கள்
7)       ஞானவிக்ஞான யோகம்30 சுலோகங்கள்
8)       அக்ஷப்பிரம்ம யோகம்---28 சுலோகங்கள்
9)       ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்---34 சுலோகங்கள்
10)    விபூதி யோகம்42 சுலோகங்கள்
11)    விச்வரூபதர்சன யோகம்55 சுலோகங்கள்
12)    பக்தி யோகம்---20 சுலோகங்கள
13)    க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்34 சுலோகங்கள்
14)    குணத்ரய விபாக யோகம்---27 சுலோகங்கள்
15)    புருஷோத்தம யோகம் ---20 சுலோகங்கள்
16)    தெய்வாஸுர ஸம்பத் விபாக யோகம்24 சுலோகங்கள்
17)    சிரத்தாத்ரய விபாக யோகம்---28 சுலோகங்கள்
18)    மோக்ஷ ஸன்யாஸ யோகம் ---78 சுலோகங்கள்.
(கீதை சம்ஸ்கிருதத்தில் இரண்டு வரி சுலோகங்களாக எழுதப் பட்டிருக்கிறது. அவற்றின் தமிழ்ப் பதவுரைகளாகப் பதிவிடுகிறேன் வருகை தந்து படித்துப் பயன் பெறவும்) 
             அர்ஜுன விஷாத யோகம் -அத்தியாயம் -1 
திருதராஷ்டிரர் சொன்னது
ஓ ஸஞ்ஜயா !தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் யுத்தம் செய்ய விரும்பித் திரண்டநம்மவர்களும் பாண்டவர்களும் என்னதான் செய்தார்கள்.? (1)
ஸஞ்ஜயன் சொன்னது
அப்போது ராஜாவாகிய துரியோதனன் அணிவகுத்து நின்ற பாண்டவர்களுடைய படையைப் பார்த்ததும்( துரோண ) ஆச்சாரியாரை அணுகி( பின்வரும் ) வார்த்தையைச் சொல்லுவானாயினன் (2)
ஆச்சாரியாரே, உமது சிஷ்யனும் துருபதன் புதல்வனுமாகிய அவ்வல்லவனால் அணி வகுக்கப் பட்டிருக்கும்  இப்பெரிய பாண்டவப் படையைப் பாரும்(3)
இங்கே( பாண்டவப் படையில்) சூரர்களாகவும் ,பெரிய வில்லாளிகளாகவும் யுத்தத்தில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமானவருமான யுயுதானனும், விராட தேசத்து அரசனும் மகாரதனுமாகிய துருபத தேசத்து அரசனும், திருஷ்ட கேதுவும், சேகிதானனும், வீரியமுடைய காசி ராஜனும், புருஜித் என்பவனும், குந்திபோஜனும், மனிதருள் முதன்மை வகிக்கும் சைபியன் என்பவனும், பேராற்றல் படைத்திருக்கும் யுதாமன்யுவும், வல்லமை உடைய உத்தமௌஜஸ் என்பவனும், சுபத்திரையின் புதல்வனும், திரௌபதியின் புதல்வர்களும் கூடி இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் மகாரதர்களேயாவர். (4-6 )
பிராம்மண சிரேஷ்டரே, நம்மவர்களுள் யார் சிறந்தவர்களோ அவர்களைக்கூடத் தெரிந்து கொள்ளும்.என்னுடைய சேனையின் நாயகர்களைப் பற்றி உமக்குத் தகவல் தெரிவித்தற்பொருட்டுச் சொல்கிறேன் (7)
தாங்களும்,பீஷ்மரும்,கர்ணனும், போர்முனையில் வெற்றியே வடிவெடுத்துள்ள கிருபாச்சாரியாரும், அசுவத்தாமாவும், விகர்ணனும், சோமதத்தன் புதல்வன் பூரிசிரவஸும், ஜயத்ரதனும் இருக்கின்றீர்கள்.(8)
மேலும் எல்லோரும் என் பொருட்டு உயிரைக் கொடுக்கத் துணிந்தவர்களாகவும்,பலவிதமான ஆயுதங்களையும் அம்புகளையும் உடையவர்களாயும், யுத்தத்தில் மிகத் தேர்ந்தவர்களாயும் பல சூரர்கள் இருக்கின்றனர். (9)
பீஷ்மர் பாதுகாக்கும் நமது படை பரந்து அளவு கடந்து இருக்கிறது. பீமன் பரிபாலிக்கும் அவர்கள் படையோ கட்டுக்கு அடங்கியது. (10)
படை வகுப்புகள் அனைத்திலும் அவரவர் இடங்களில் நின்று கொண்டு எல்லோரும் பீஷ்மரையே காப்பாற்றுக. (11)
வல்லமை வாய்ந்தவரும், குருகுல வயோதிகருமாகிய பாட்டனார் அவனுக்கு (துரியோதனனுக்கு)உற்சாகத்தை ஊட்ட உரக்கச் சிம்மநாதம் செய்து சங்கை ஊதினார்.(12)
பிறகு சங்குகளும் பேரிகைகளும் தம்பட்டங்களும் பறைகளும் கொம்புகளும் திடீரென்று முழங்கின. அது பேரொலியாயிருந்தது. (13)
பிறகு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய சிறந்த தேரில் வீற்றிருந்த மாதவனும் பாண்டவரும் தங்கள் தெய்வீகச் சங்குகளை உரக்க ஊதினார்கள். (14)
ஹிருஷிகேசன் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஊதினான். தனஞ்ஜயன் தேவ தத்தம் என்ற சங்கை நாதித்தான்.பெருவினையாற்றுபவனாகிய பீமசேனன் பௌண்டரம் என்ற பெரிய சங்கை ஊதினான்.(15)
குந்தியின் புதல்வன் ராஜா யுதிஷ்டிரன் அனந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் சுகோஷம் மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினார்கள்.(16)
விற்படையில் தலை சிறந்த காசிராஜனும், மகாரதிகனான சிகண்டியும், திருஷ்டத்யும்னனும் விராட தேசத்து அரசனும், பிறரால் வெல்லப்படாத சாத்யகியும்(17)
மண்ணாள்பவனே,துருபதனும் த்ரௌபதியின் புதல்வர்களும், தோள் வலிவுடையவனாகிய சுபத்திரையின் மகனும்,ஆக எல்லோரும் தனித்தனியே சங்குகளை ஊதினார்கள்.(18)
மேலும் அப்பெருமுழக்கம் விண்ணையும் மண்ணையும் சேர்ந்தொலிக்கச் செய்வதாய் திருதராஷ்டிரனின் கூட்டத்தாரின் நெஞ்சுகளை வீறப்பிளந்தது.(19)
அரசே.! அப்பால் குரங்குக் கொடியுடையோனாகிய அர்ஜுனன் போர் துவக்கத் தலைப்பட்டிருந்த திருதராஷ்டிரக் கூட்டத்தைப் பார்த்து, அம்புகள் பறக்க ஆரம்பிக்கும் முன் வில்லை ஏந்திக்கொண்டு கிருஷ்ணனுக்கு இச்சொல்லை உரைத்தான் (20)
அர்ஜுனன் சொன்னது
அச்யுதா ! படைகள் இரண்டுக்கும் இடையில் என் தேரை நிறுத்துக. இப்போரில் நான் யாரோடு யுத்தம் செய்ய வேண்டுமென்பதையும் போரை விரும்பி முன் நிற்பார் யார் என்பதையும் கவனிக்கிறேன் (21,22)
புல்லறிவாளனாகிய துரியோதனனுக்குப் பிரீதி பண்ணும் பொருட்டு போர் புரிய இங்கு திரண்டிருப்போரை நான் காண வேண்டும் (23)


ஸஞ்ஜயன் சொன்னது

திருதராஷ்டிரரே,குடாகேசனால் இங்ஙனம் சொல்லப்பட்ட ஹிருஷிகேசர் இரண்டு சேனைகள் நடுவில் பீஷ்மர் துரோணாச்சாரியர்களுக்கு எதிரிலும் எல்லா வேந்தர்களுக்கெதிரிலும் மாண்புடைய தேரை நிறுத்தி பார்த்தா, கூடியுள்ள இக்கௌரவர்களைப் பார்என்று பகர்ந்தார். (24,25)

அங்கேஇரண்டு சேனைகளிலும் இருக்கும் தந்தையரையும், பாட்டன்மாரையும் ,ஆச்சாரியர்களையும், மாதுலரையும், அண்ணன் தம்பிகளையும், மக்களையும், பேரர்களையும், தோழர்களையும்,மாமனார்களையும், அன்பர்களையும் அவன் பார்த்தான் (26)

குந்தியின் மகனாகிய அர்ஜுனன் நிற்கின்ற பந்துக்கள் எல்லோரையும் உற்றுப் பார்த்து பேரிரக்கம் படைத்தவனாய் இங்ஙனம் பகர்ந்தான். (27)
அர்ஜுனன் சொன்னது
கிருஷ்ணா, போர்புரிதற்குக் கூடியுள்ள உற்றாரைப் பார்த்து என் உறுப்புகள் சோர்வடைகின்றன.வாயும் வறள்கிறது(28)
என் உடலில் நடுக்கமும் மெய்ச்சிலிர்ப்பும் உண்டாகின்றன. கையிலிருந்து காண்டீவம் நழுவுகிறது.மேலெல்லாம் தோலும் எரிகிறது(29)
கேசவா, என்னால் நிற்க இயலவில்லை.மனது சுழல்கிறது.கேடுடைய சகுனங்களையும் காண்கிறேன்(30)
கிருஷ்ணா, போரிலே சுற்றத்தாரைக் கொல்லுதலில் நன்மையை நான் காண்கிறேனில்லை.வெற்றியையும், ராஜ்ஜியத்தையும் இன்பங்களையும் நான் வேண்டவில்லை.(31)
கோவிந்தா, யாவர் பொருட்டு நாம் ராஜ்ஜியத்தையும் போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ அவர்களாகிய ஆசாரியர், தந்தையர், மக்கள், பாட்டன்மார், மாதுலர், மாமனார், பேரர் மைத்துனர், சம்பந்திகள் முதலாயினோர் உயிரையும் செல்வங்களையும் துறந்தவராய் இங்கு வந்து நிற்கின்றனர்.நமக்கு ராஜ்ஜியத்தால், போகத்தால் அல்லது ஜீவித்திருப்பதால்தான் ஆவதென்ன,?(32-34)
மதுசூதனா, நான் கொல்லப்படினும் மூவுலகை ஆள்வதற்கென்றும்  இவர்களைக் கொல்லேன். பூமியின் பொருட்டுக் கொல்வேனா?(35)
ஜனார்தனா, திருதராஷ்டிரப் புதல்வர்களைக் கொன்று நமக்கு என்ன இன்பம் வரப் போகிறது?இந்த ஆததாயிகளைக் கொல்வதால் பாபமே நம்மை வந்தடையும்(36)
ஆதலால் நம் சுற்றத்தாராகிய திருதராஷ்டிரப் புத்திரர்களைக் கொல்லுதல் நமகுத் தகாது. மாதவா உற்றாரைக் கொன்று நாம் இன்புற்றிருபது எங்ஙனம்?(37)
ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலநாசத்தால் விளையும் கேட்டையும் மித்திர துரோகத்தால் விளையும் பாதகத்தையும், காண்கிலராயினும், குல நாசத்தால் உண்டாகும் கேட்டை, நன்கு உணர்ந்த நாம்.ஏன் ஜனார்த்தனா இப்பாபத்திலிருந்து பின் வாங்கத் தெரிந்து கொள்ளலாகாது?(38-39)
குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.(40)
அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா, மாதர் கற்பிழக்கும்போது வர்ணக் கலப்பு உண்டாகிறது.(41)
கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்(42)
குல நாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலை குலைக்கப் படும்.(43)
ஜனார்தனா, குலதர்மத்தை இழந்தவர் நரகத்தில் நெடிது வசிக்கின்றனர் என்று கேட்டிருக்கிறோம்.(44)
அரச சுக ஆசையினால் சுற்றத்தாரைக் கொல்லத் துணிதல் என்ற பெரும் பாவத்தைச் செய்யத் தலைப்பட்டோம் .அந்தோ.!(45)
எதிர்க்காமலும் ஆயுதமில்லாமலுமிருக்கிற என்னை கையில் ஆயுதம் பிடித்து திருதராஷ்டிர மக்கள் யுத்தத்தில் கொல்வார்களேயானால் அதுவே எனக்குப் பெரு நன்மையாகும்.(46)
ஸஞ்ஜயன் சொன்னது
இங்ஙனம் இயம்பி, அம்பையும் வில்லையும் அரங்கத்தில் எறிந்து விட்டு துயரம் துய்க்கும் மனத்தினனாய் அர்ஜுனன் தேர்த்தட்டில் உட்கார்ந்தான்(47)
          ( அர்ஜுன விஷாத யோகம் நிறைவு )                                                

             


                                      

             


    
















25 comments:

  1. அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அர்ஜுனன் மனதைப் புரிந்து கொள்ள முடிகிறது, பாசப் போராட்டம்.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.
    மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கீதை பற்றி அதிக செய்திகள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  4. பலருக்கும் கீதைப் படிக்க ஏதுவாக இருக்கும். இதைப் படிக்கும் போது நாம் ஒவ்வொருவரும் அர்ஜுனனே என்றே தோன்றும். உங்கள் கீதைப் பதிவைத் தொடர்கிறேன்.....
    வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  5. மகாரதர்கள்

    நாதித்தான்

    சாத்யகி

    மாதுலர்

    ஆததாயி

    -- இந்த வார்த்தைகளுக்கு தமிழில் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் தொடர்ந்து படிக்க சிரமமில்லாது இருக்கும். அருள்கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. பகவத் கீதையை பதிவில் வழங்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete

  7. @ கீதா சாம்பசிவம்
    கருத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete

  8. @ டாக்டர் கந்தசாமி
    வருகைக்கு நன்றி

    ReplyDelete

  9. @ ரூபன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete

  10. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    நம்மில் பலருக்கும் கீதை படிக்கும் வாய்ப்பு அமைவதில்லை. அந்தக் குறை இதை வலைப்பூவில் இடுவதால் ஓரளவுக்கு குறையும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன் பலமாதிரி கேள்விப்பட்டதும் அறியாததும் தெரிய வரலாம். வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  11. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    தொடர்ந்து வாருங்கள். அப்போதுதான் கீதை முழுவதும் படிக்கும் நிறைவு கிடைக்கும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  12. @ ஜீவி
    மகாரதர்கள் = மகாவீரர்கள் என்னும் பொருளில் உபயோகிக்கப் படுகிறது
    நாதித்தான் = நாதமெழுப்பினான், சப்தம் எழுப்பினான் (இங்கு)ஊதினான்
    சாத்யகி = பாரதக் கதையில் ஒரு பாத்திரம் கிருஷ்ணனுக்கு பங்காளி முறை. யுயுதானன் எனும் பெயருமிவனுக்குண்டு.
    மாதுலர் = அம்மான்மார்
    ஆததாயி = பாபி
    வருகைக்கும் தெளிவு வேண்டியதற்கும் நன்றி

    ReplyDelete

  13. @ கரந்தை ஜெயக்குமார்
    வாசகர்களின் தொடர் வருகை எனக்கு எழுத ஊக்கமளிக்கும் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  14. @ துரை செல்வராஜு
    நான் படித்ததைப்பகிர்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. தொடர் வருகை உற்சாகம் அளிக்கும் நன்றி.

    ReplyDelete
  15. அதிரதர்கள், மஹாரதர்கள் ரதங்களை வேகமாய் ஓட்டும்போதே யுத்தம் புரிவதில் வல்லவர்கள் என்ற பொருளிலேயே வரும்.

    ReplyDelete
  16. உங்கள் மூலம் நாங்களும் கீதை படிக்கிறோம்.....

    தொடர்கிறேன்...

    ReplyDelete

  17. @ கீதா சாம்பசிவம்
    நன்றி மேடம்

    ReplyDelete

  18. @ வெங்கட் நாகராஜ்
    தொடர்ந்து படிக்க வாருங்கள். பதிவர்கள் படிக்கிறார்கள் என்பதே ஊக்கமளிக்கும் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  19. என்னுடைய கருத்துரையை காணவில்லை..

    பலமுறை கீதை வகுப்புகளுக்குச்சென்று ஆர்வமுடன் படித்ததால் பதிவு சுவாரஸ்யமாக இருக்கிறது..
    பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  20. முதல் முறையாக கீதையை தமிழில் படிக்கும் வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. தொடர்கிறேன்.

    ReplyDelete

  21. @ டி.பி.ஆர்.ஜோசப்
    அந்த வாய்ப்பைக் கொடுப்பதற்கென்றே இப்பதிவுகள். தொடர் வருகை உற்சாகமூட்டும் நன்றி சார்.

    ReplyDelete
  22. கீதையை தமிழில் தந்தமைக்கு நன்றி. தொடர்கிறேன்.

    ReplyDelete
  23. இன்றிலிருநது உங்களுடைய கீதைப் பதிவை தொடர்ந்து படித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் தொடங்கி உள்ளேன். காலையில் எழுந்தவுடன் இப்போதுதான் இந்த அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்து, உங்கள் தேர் நிற்கும் இடத்திற்கு வந்து விடுவேன்.

    ReplyDelete