Sunday, May 3, 2015

கல்வி- இனி ஒரு விதி செய்வோம்


                            கல்வி-- இனி ஒரு விதி செய்வோம்
                             ------------------------------------------------

 எத்தனை முறை எழுதினாலும் சரியாகச் சொல்லவில்லையோ என்ற எண்ணம் அவ்வப் போது எழுகிறது. இந்தக் கல்வி பற்றிதான் கூறுகிறேன் இப்போது அளிக்கப் படும் கல்வி பலருக்கும் திருப்தி தருவதாயில்லை. .கல்வி என்பதுதான் என்ன? வெறுமே எழுதப் படிக்கக்கற்பிப்பதா? கணக்குப்போடச் சொல்லிக் கொடுப்பதா.? என்னை பொறுத்தவரை கல்வி என்பது மனிதனை சிந்திக்க வைக்க வேண்டும். ஆனால் எழுதப் படிக்கத் தெரிந்தாலே போதும் கல்வி அளித்ததாக ஆகுமென்றுதான்  பலரும் நினைக்கிறோம்

ஏனென்றால் நூற்றாண்டுகளாக அதுவே மறுக்கப் பட்டு வந்த நிலைக்கு இது முன்னேற்றம்தான் அல்லவா? இதிலும் இப்போது நூறுசதவீதம் கல்வி என்பதே அவசியமாகப் படுகிறதுமுதலில் எழுதப் படிக்கத்தெரிந்தால் பல செய்திகள் நிகழ்வுகள் அவற்றின் தாக்கம் எல்லாம் தெரிய வரலாம் எனக்கு மக்கள் கல்வி அறிவு கிடைக்கப் பெறாமல் போனதற்கு நம் நாட்டில் உலவி வந்த வருணாசிரம முறைதான் முதல் காரணம் என்று தோன்றுகிறது,இதைப் படிக்கும்போதே சிலர் மனசு படபடப்பது தெரிகிறது. நான் யாரையும் குற்றம் சொல்லவில்லை.
 எல்லோரும்  படித்து  முன்னுக்கு  வந்துவிட்டால், சிலருடைய  ஆதிக்கத்துக்கு  முற்றுப்  புள்ளி  வந்துவிடும் என்ற நிலையில்  ஒடுக்கி  வைக்கப்பட்ட  மக்கள்  தொகை மிகவும்  அதிகமாக  இருந்தது. ஆயிரங்காரணங்களை கூறி  அடிமைப் படுத்தப்பட்டிருந்தனர் .காரணங்களை நான் விவரிக்க  விரும்பவில்லை. ஆனால் எல்லோரும்  படிப்பறிவு  பெற்றால் சுயமாக  சிந்திக்க  துவங்குவார்கள்  என்ற பயம்  ஆண்டைகளிடம்  இருந்தது. அடிமைத்தளை  இறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு அஸ்திவாரம் பலப்பட,
அவர்களது  அலுவலகப்  பணிகளுக்கு  குமாஸ்தாக்கள்  தேவைப்பட மெகாலே  கல்வி  நடைமுறைப்  படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம்
இந்த வாய்ப்பை அதிகம் பயன் படுத்தி தங்கள் நிலையினை உயர்த்திக் கொண்டனர் உயர் சாதியினர்.நாம் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம் என்னும் எண்ணமே இல்லாமல் அடிமை வாழ்வில் இன்பம் கண்டவர் நம் முன்னோரில் பலர். இருந்தாலும், இந்த மெக்காலே கல்வி முறையில் கல்வி கற்றவரின் எண்ணங்கள் சற்று விசாலமடையத் தொடங்கியது கல்வி கற்றவர்களில் சிலர் சிந்திக்கத் தொடங்க நம் நாடு அடிமைத்தளையிலிருந்து மீண்டது.சுதந்திரம் பெற்றபோது கல்வியிலும் வாய்ப்பிலும் பின் தங்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று உணரப் பட்டது சுதந்திர இந்தியாவில் குறிப்பிட்ட சதவீதம் மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கல்வியிலும் அரசு பணிகளிலும் ஒதுக்கீடு பெறவேண்டும் என்னும் எண்ணம் பரவலாக இருந்ததுகுறிப்பிட்ட சதவீதம் போதாதென்று பொராட்டங்கள் நிகழ்ந்ததும் அதற்கு எதிராகவும் போராட்டங்கள் நிகழ்ந்ததும் அண்மைய சரித்திரம் இந்த ஒதுக்கீட்டின் தேவை எத்தனை காலத்துக்குத் தேவைப் படும்? இதை இப்படியே PERPETUATE செய்வது சரியா என்றும் கேள்வி எழுகிறது தற்போதைய உலக மயமாக்கலின் காரணமாக இன்னொரு ஜாதியும் தலை தூக்கி இருக்கிறது அதுதான் பணக்கார ஜாதி
            நம்மை  நாமே  ஆளும்போது ,நாம் எல்லோரும்  சமம்  எனும்போது , வாய்ப்புகளும்  சமமாக  இருக்க வேண்டும். வாய்ப்பு  வேண்டிப்  போராட  கல்வி அறிவு  அவசியம். அதுவும் பரவலான  நூறு   சதவீதக்   கல்வி அவசியம்.  நாம் படித்தவற்றை
பகுத்தறிந்து   உணர்ந்தால் அறிவுள்ளவர்களாக  ஆவோம். படித்தவர்கள்  எல்லோரும்    அறிவுள்ளவர்கள்  அல்ல. படிக்காதவர்கள்  அனைவரும்  அறிவில்லாதவர்களும் அல்ல.
ஆனால் ஒருவனை  அறிவாளியாகக படிப்பறிவு மிகவும் உதவும்.
              தற்சமயம்  நிலவி வரும் சூழ்நிலையில் கேக்   ஊட்டப்பட்டு   ஊக்கப்படுத்தப்   படுபவர்கள்  முகவரி  தெரியாமல்  போய்விடுகிறார்கள்  என்ற அச்சமும்  கல்வியறிவே  காசு கொண்டு  வாங்கப்பட  வேண்டிய  அவல நிலையில் நாம் உள்ளோம்  என்ற கவலையும்  இருப்பது சகஜம்

              
மேலே குறிப்பிடப் பட்டுள்ள பிரிவில் படாமல் எந்த ஒரு உந்து   சக்தியும் இல்லாமல்  படித்துயர்ந்து  வந்தவர்களும்  ஏராளம்  உண்டு. நகரங்களில்  வசிக்கும்  நம் கண் முன்னே படுவது  கான்வென்ட்  படிப்பும்  கூடவே வரும் அதிக  செலவினங்களும்தான் .இல்லாதவன் தன  தலைமுறைக்குப்  பிறகு  தன பிள்ளைகள்  நன்றாக   இருக்கவேண்டும்  என்று பாடுபடுவதையும்  பார்க்கிறோம்.  இயற்கைதானே.  ஆனால் கான்வென்ட் படிப்பும் ஆங்கிலப்  படிப்பும்தான்  மேலானது  என்ற ஒரு மாயத் தோற்றத்துக்கு  அடிமையாகும்போதுதான்  சந்திக்கும்  இன்னல்கள்  ஏராளம்

              
எழுத்தறிவும் கல்வியறிவும்   பரவலாக்கப்பட்டால் சுயமாக சிந்திக்கும்   திறனை அவர்கள் வளர்த்துக்கொள்வார்கள்.  முனிசிபல், கார்ப்பரேஷன்  பள்ளிகளில்  படித்துப்  பெயர் வாங்கும்  சிறார்  சிறுமிகளும்  இருக்கிறார்கள்.,என்பது நமக்குத்  தெரிந்ததே. நாம் எந்த   ஒரு விஷயத்தையும்  விவாதிக்கும்போது  மிடில்  கிளாஸ்  மேன்டாலிடியைத்தான் அளவு கோலாகப்  பயன்படுத்துகிறோம். ஏழை பாழைகளின்  கருத்தைக்  கேட்கவோ  எடுத்துச் சொல்லவோ  நம்மில் பலரும்  முன்  வருவதில்லை   இந்நிலையில் நூறு சதவீத எழுத்தறிவும்  படிப்பறிவும்  இருநதால்  அவர்களை  அவர்களே  மேம்படுத்திக்  கொள்வார்கள்

               
நான் ஒரு முறை லலிதாம்பிகா   கோவிலுக்குச் செல்ல  திருமீயச்சூர்  சென்றிருந்தேன்  அங்கு  பள்ளிக்கு  சென்று வர  சீருடை  அணிந்த  சிறுவர்  சிறுமிகள்  சைக்கிளில்  செல்வதைக் கண்டபோது மனசுக்கு  கொஞ்சம்  உற்சாகமாக  இருந்தது.  பசியாற  மதிய  உணவுசீருடை, மற்றும்  சென்றுவர  இலவச  சைக்கிள்  இவை எல்லாம்  கல்வியறிவு  பரவலாகச்  செய்யும்  உந்து  சக்திகள்தானே. மேலும்   தற்போது
கல்வி உரிமைச்  சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள் . இதன்படி  எல்லாப்  பள்ளிகளிலும் ( தனியார் உட்பட ) 25% இடங்கள்  ஏழைகளுக்கு  ஒதுக்கப்படவேண்டும் .
கல்வி போதிக்கும்  முறையில் ஏற்ற  தாழ்வு  குறைந்து  சம வாய்ப்பு   கிடைக்கும்  ஒரு திட்டம் .ஆனால் இதை  நடைமுறைப்படுத்த  ஏகப்பட்ட  எதிர்ப்புகள்.  இந்த எதிர்ப்புகளுக்கு  எதிராக  குரல்  கொடுப்போம்
In a gist, எல்லோருக்கும் கல்வி போய்ச் சேரவேண்டும் தெரிந்தோ தெரியாமலோ நம் வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் நிலவுகிறது இருக்கும் நிலை போதாதென்று ஏழை பணக்காரன் எனும் பாகுபாடும் கூடிக் கொண்டே போகிறது பிறப்பொக்கும் என்று கூறும் நாம் வாய்ப்புகளையும் சமமாக்க வேண்டும் காலம் காலமாக ஒதுக்கீட்டு முறையை அமல் படுத்துவது இந்த ஏற்ற தாழ்வுகளைக் களைய முடியாது என்னும் எண்ணத்தினால் இருக்கலாம் அல்லது இந்தஏற்ற தாழ்வுகள் மறையக் கூடாது என்பதாகவும் இருக்கலாம் பூர்வ ஜன்ம காரணங்களையும் விதியையும் நம்புபவர்கள் எப்படியாவது எதையாவது சொல்லி சமாதானப் படுத்திக் கொள்ளலாம் ஆனால் அது சரியல்ல எல்லோரும் சமம் என்று எண்ணவைக்க சூழ்நிலைகள் உருவாக்க வேண்டும்  இதை எப்படித்தான் செய்வது. ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்னும் எண்ணங்களை சிறு வயதிலேயே சிறார்கள் மத்தியில் வரவிடாமல் செய்ய வேண்டும் இன்றைய சிறார்கள் நாளைய குடிமக்கள் நம்மை ஆளப் போகிறவர்கள்.அவர்களுக்கு இந்தமாதிரியான பேதங்கள் தோன்றாமல் செய்யும் இடம் கல்விக்கூடமே. பள்ளியில் படிப்பவர் அனைவரும் சமம் என்னும் எண்ணம் இளம் பருவத்திலேயே விதைக்கப் பட வேண்டும் அதை எப்படிச் செய்வது எனக்கு அதிகாரமும் சக்தியும் இருந்தால் நான் கல்விச்சாலைகளை முதலில் அரசிடம் கையகப்படுத்துவேன் எல்லோருக்கும் இலவசக் கல்வி கட்டாயம் என உத்தரவு போட்டு அமல் படுத்துவேன் கல்வி மட்டுமல்ல சீருடையும் மதிய உண்வும் கட்டாயமாக  இலவசமாக்குவேன் எல்லோருக்கும் சமகல்வி உணவு சீருடை என்றாகும்போது சிறார்களிடம் உயர்வு தாழ்வு எண்ணங்கள் வராது. பள்ள் இறுதி வரை படிக்க வைத்து முன்னேற்றம் காண்பவர்களுக்கு உயர் கல்வி அளிப்பேன் இலவசமாக எல்லாம் வழங்குவது உய்ர்வு தாழ்வுகளை நேர் செய்யவே அல்லாமல் பெறப்போகிறவர்கள் எல்லாம் இல்லாதவர்கள் என்ற காரணமல்ல
கல்வியை வியாபாரமாக்கும் குடிமக்கள் நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் நான் சொல்லும் வழி எளிதானதல்ல. செயல் படுத்த COURAGE AND CONVICTION மிகவும் தேவை இந்த வழிமுறைகள் ஒரு ஏற்ற தாழ்வில்லாத சந்ததியினரை உருவாக்கும் என நம்புகிறேன்
நடை முறை சிக்கல்கள் ஏராளம் இருக்கலாம் அதைஎல்லாம் தாண்டி இதை ஒரு புனித வேள்வியாக நினைத்துச் செயல் படுத்த வேண்டும்
நண்பர்களே ஒன்றுக்கு இருமுறைபடித்துப் புரிந்து கொள்ளுங்கள்/ ஒத்த கருத்து என்பது சிக்கலான விஷயம் என் உரத்த சிந்தனையின் விளைவே இப்பதிவு. மனசில் உள்ளதை உள்ளபடி கருத்திடுங்கள் 

40 comments:

  1. கல்விக் கூடங்கள் வியாபாரக் கூடங்களாகி பல ஆண்டுகள் ஆனாலும் உங்களின் திட்டங்களும் எண்ணங்களும் சரியே... வழி பிறக்குமா என்பதே பெரிய ?

    ReplyDelete
  2. 'ஆசை இருக்கு தாசில் பண்ண......' கதைதான்.

    அதிகாரத்தில் இருந்தாலும் ஆணை பிறப்பிக்க முடியாமல் தடைகள் ஆயிரம் வரும். மக்கள் அல்ல, அரசியல்வாதிகள்தான் ஜாதியை அழிய விடாமல் காப்பாற்றுகிறார்கள். அவர்கள் பிழைப்பு ஓடணுமே....

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. இந்தியக் கல்வித்திட்டம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது; அதை ஒழித்துக் கட்டத் தோன்றியதே மெக்காலே கல்வித் திட்டம். இதை மாற்றத் தான் ராஜாஜி காலை படிப்பு, மதியம் அவரவர் பாரம்பரியத் தொழில் கல்வி என்னும் திட்டம் கொண்டு வந்தார். அப்படிக் கற்றுக் கொடுத்தாலாவது கல்வி பெறுவோரின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என்பது அவர் எண்ணம். அவருடைய நல்லெண்ணம் "குலக்கல்வி" என்னும் பெயரில் குற்றம் சாட்டப்பட்டு ஒழித்துக் கட்டப்பட்டது. இப்போதைய மத்திய அரசு இதையே வேறு வகையில் கொண்டு வர முயற்சிக்கிறது. முயற்சிகள் பலிக்க வேண்டும். பார்ம்பரியத் தொழிலை நசித்து ஒழித்த பின்னர் பல அரிய கலைகள் வாரிசுதாரர்கள் இல்லாமல் முற்றிலும் அழிந்து போய்விட்டன. இப்போது அவற்றை ஓரளவு மீட்டெடுக்க முயல்கின்றனர். முயற்சிகள் பலிக்க வேண்டும்.

    ReplyDelete
  5. மற்றபடி வருணாசிரமம் வேறு, ஜாதி வேறு குலம் வேறு நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்கிறீர்களோ என நினைக்கிறேன். வருணாசிரம தர்மப்படி அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ற வர்ணம் தான்கொடுக்கப்பட்டுள்ளது. ஜாதி அல்ல. க்ஷத்திரிய அரசன் பிராமணப் பெண்களை மணந்ததும், வைசியர் பிராமணர்களை மணந்ததும், பிராமணர் வேற்று வர்ணத்தவர் ஜாதியினரை க்ஷத்திரியப் பெண்களை மணந்தது என எல்லாமும் நடந்திருக்கிறது எதற்கும் தடை இருந்தது இல்லை.

    ReplyDelete

  6. @ திண்டுக்கல் தனபாலன்
    ஏற்கனவே நிலவும் ஏற்றதாழ்வுகளை சமன் செய்ய முடியாமல் செய்யும் இன்னொரு ஜாதி கல்விக்கூடங்கள் வியாபாரத்தலமாக இருப்பதால் உருவாகி விட்டது.திட்டங்கள் சரியாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த கரேஜ் ஆஃப் கன்விக்‌ஷன் தேவை. வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    அரசியல் வாதிகள் ஜாதி ஒழிய விடாமல் தடுக்கிறார்கள்/ இதை முறியடிக்க அனைவருக்கும் சமமான கல்வியே துணை செய்யும் . என் சிறு வயதில் எங்கள் கிராமத்தில் தாழ்த்தப்பட்டோர் தெருவிலேயே வர முடியாத நிலையைப் பார்த்திருக்கிறேன். இப்போது அக்கிரகாரம் பெயரளவில்தான் இருக்கிறது வேற்று ஜாதியினரும் வீடு வாங்கிக் குடியேறி இருப்பதைக் கண்டேன்மனதளவில் அனைவரும் சமம் என்னும் எண்ணம் வர விடாமல் தடுப்பது இந்த ஜாதி உணர்வே. அவை பல்கிப் பெருகி வருவதும் கண்கூடு. இதுகண்ட ஆதங்கத்தின் விளைவே இப்பதிவு. குறைகளை மட்டும் சொல்வதோடு நிற்காமல் என் மனதுக்குப்பட்ட தீர்வினையும் கூறி உள்ளேன் மற்றபடி தாசில் பண்ண ஆசையில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஸ்ரீ.

    ReplyDelete

  8. @ கீதா சாம்பசிவம்
    மெகாலே கல்வித்திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் மேட்டுக் குடியினரே. இன்றும் அதன் சுவடுகள் தெரிய வருகிறது. ”அவருடைய நல்லெண்ணம் “ இதுவே கேள்விக்குரியது. பெரும்பான்மை மக்கள் அவர்களது பாரம்பரியத்தொழிலைகற்றுக் கொண்டாக வேண்டும் என்று சட்டம் போடுவது அவரது நல்லெண்ணத்தை எடுத்துக்காட்டுவதாக இருக்க வில்லை. இருப்பதை அப்படியே பெர்பெசுவேட் செய்யும் முயற்சியாகவே கருதப்பட்டது. இப்போதைய அரசு அதையே கொண்டுவரநினைத்தால் ராஜாஜியின் திட்டத்துக்கு நேர்ந்த கதியே இதற்கும் நேரும்.பாரம்பரியத்தொழிலை யாரும் மீட்டெடுக்க வேண்டாம் மக்களுக்கு நன்மை எதுவோ அது தெரியும் மேலும் பாரம்பரியக் கதை பேசி ஒருவரை ஒருவர் அடக்கி ஆள்வது இனி நடக்காது. இப்போதைய உயர் ஜாதி பணம் பெற்றோர்தான் அவர்கள் சம வாய்ப்புகளுக்கு இணங்க மாட்டார்கள். அதனால் தான் அரசே இத் திட்டத்தை ஒரு benevolent சர்வாதிகாரி மாதிரி செயல் பட வேண்டும் என்கிறேன் வருகைக்கும் மாற்றுக்கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம்

    ReplyDelete

  9. @ கீதா சாம்பசிவம்
    வருணாசிரமத் தருமம் குலம் ஜாதி இவற்றைப் பற்றிய குழப்பங்களேதுமில்லை எனக்கு. இந்த தர்மத்தினாலேயே ஜாதிகள் வளர்ந்தது மனதளவில் உயர்வு தாழ்வு நினைக்கப் பட்டது. ஆண்டவன் அடிமை எண்ணம் நிலை நிறுத்தப் பட்டது. நம்மை ஆள வந்த ஆங்கிலேயன் அதனால் பலன் அடைந்தான் மனிதர் எல்லாம் பிறப்பால் சமம் என்று எண்ணும் மனம் நம்மிடம் இல்லை. நம்மில் பலரும் இனவெறி கொண்டவர்கள்நிறவெறி கொண்டவர்கள் மனதளவில் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும் என்றால் அது பள்ளிப்பருவத்தில் சிறார்களிடையே விதிக்கப்பட வேண்டும் வேற்றுமையை இனம் காட்டும் எந்த சுவடும் இல்லாத கல்வி அவசியம் அதையே பதிவிட்டிருக்கிறேன் வருகை தந்து க்ருத்துப் பதிவிட்டதற்கு நன்றி மேடம்

    ReplyDelete
  10. //கீதா சாம்பசிவம்
    மெகாலே கல்வித்திட்டத்தால் பயன் அடைந்தவர்கள் மேட்டுக் குடியினரே. இன்றும் அதன் சுவடுகள் தெரிய வருகிறது.//

    மேட்டுக்குடியினர் பலனடைந்தார்களா? இல்லை ஐயா! தங்கள் தனித்தன்மை கௌரவம், பெயர், புகழ், கற்ற வித்தைகள் அனைத்தையும் இழந்தார்கள். இழக்க வைத்தது ஆங்கிலேயரின் திட்டமிட்ட மெக்காலே பாடத் திட்டம். மேட்டுக்குடியினரை மட்டும் குறி வைத்துத் தாக்க ஏற்படுத்தப்பட்டதே இந்தக் கல்வித் திட்டம். நம்முடைய பாரம்பரியங்களைத் திட்டமிட்டு அழித்தனர். கலைகளை ஒழித்தனர்! மருத்துவத்தை, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைச் செய்யும் சிற்பிகளை அழித்தனர். அருமையான தச்சு வேலைப்பாடு, கைத்தறி நெசவு ஆகியன அடியோடு ஒழிந்தன. நமக்கென இருந்த பாரம்பரிய மருந்துகளைத் தனதாக்கிக் கொண்டனர். காப்புரிமை பெற்றனர். நம் உரிமைகளை வேரோடு கட்டறுத்தனர். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்.

    ReplyDelete
    Replies
    1. இந்தியர்களிடையே பிரிவினையை உண்டாக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து, இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைக்க முதலில் கலாச்சாரத்தை உடைக்க வேண்டும் என்றெல்லாம் அறிக்கைகள் அனுப்பப் பட்டு, திட்டமிட்டே இந்தக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று நானும் படித்த நினைவு இருக்கிறது.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  11. மிக சரியான கருத்துகள். இதில் என்ன பிரச்னை என்றால் கல்வி பற்றி மத்தியஅரசு தனியாகவும், மாநில அரசு தனியாகவும் முடிவு செய்கின்றன. தமிழ் நாடு அரசு இந்த விசயத்தில் தங்கள் கூறிய ஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டு வந்தால் நிச்சயம் நல்ல மாற்றம் வரும்.
    சக மனிதரும் முன்னேற வேண்டும் என்று பலரும் நினைப்பதில்லை. இருந்தும் கற்றறிந்த மேற்குடி மக்கள்சிறிதும் சக மனிதர் நிலை எண்ணி பார்பதில்லை. சரியான வழிகாட்டுதல் தேவை.

    ReplyDelete
  12. மெக்காலே கல்வி முறை என்பது என்ன? அது எப்போது உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படை அம்சங்கள் என்ன ?
    இவற்றையும் விவரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

  13. வணக்கம் ஐயா நான் ஒருமுறையே படித்தேன் நன்றாக ஆழ்ந்து சிந்தித்து வார்த்தைகளை கோர்த்து இருக்கிறீர்கள் தாங்கள் எவ்வளவு பெரிய அனுபவசாலி 80 பலரும் அறிந்ததே...
    யாரையும், காயப்படுத்தி விடாமல், பிரட்சினையை தலை தூக்கவிடாமல் அழகாக எழுதியிருக்கின்றீர்கள் இதில் பலருக்கும் உடன்பாடு இல்லாதிருக்கலாம் ஆனால் நான் தங்களது கருத்துடன் ஒத்து வருகிறேன் காரணம் சுயநலமின்றி பொதுநலத்துக்காக எழுதி இருக்கின்றீர்கள்.
    கல்வித்துறை 80 அரசாங்கமாக இருந்தால்தான் 100 சதவீதம் நியாயமான கல்வியை வழங்க முடியும் 80 எமது கருத்து.
    இதையே வலியுறுத்திதான் ‘’கனவில் வந்த காந்தி’’ படிவில் சொல்லியிருந்தேன்
    அருமையான சிந்தனைக்குறிய பதிவு தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  14. இன்று வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி படித்தேன்.
    //கோவிலை இடித்து பள்ளிக் கூடம் கட்டினோம், தவறில்லை
    ஆனால் உண்டியலைத்தான் எடுக்க மறந்து விட்டோம்//
    ஐயா, கல்வி என்பது இன்று வணிகமயமாகிவிட்டது
    தேர்ச்சி சதவீதத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட கல்வி, கல்வியே அல்ல.
    அன்று நீங்கள் படித்தீர்கள், நாங்களும் படித்தோம்,
    ஆனால் அன்று மதிப்பெண் முதன்மையானதாக நமக்குத் தெரியவில்லை
    ஆகவே நாம் படித்த செய்திகள் நினைவில் நிற்கின்றன.
    ஆனால் இன்றோ மதிப்பெண் பெறுவதற்காக மட்டுமே மனப்பாடம் செய்கிறார்கள். இதனால் யாருக்கு என்ன பயன்
    இந்நிலை மாற வேண்டும்
    நன்றி ஐயா

    ReplyDelete
  15. அய்யா, எல்லோருக்கும் கல்வி என்பதும், இந்தியாவில் ஜாதீய அடுக்குமுறை என்பதும் வேறு வேறு. இரண்டினையும் ஒன்றாக வைத்து பார்க்க இயலாது.

    தொழிற் புரட்சி, தொழில் நுட்பப் புரட்சி ஏற்பட்ட பிறகு, இன்று பலர் அவரவர் குலத் தொழில்களை செய்வது இல்லை. ( உதாரணம்: ஒரு காலத்தில் மருத்துவத்தை குறிப்பிட்ட வகுப்பாரே செய்து வந்தனர். இன்றோ அந்த மருத்துவ (டாக்டர்) படிப்பிற்கு அனைத்து ஜாதியினரும் போட்டி போடுகின்றனர்)

    எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்றால், நீங்கள் குறிப்பிட்டவாறு கல்வி-- இனி ஒரு விதி செய்வோம்; அரசாங்கமே அனைத்து கல்விக் கூடங்களையும் ஏற்று நடத்தி, அனைவருக்கும் அனைத்து கல்வியையும் இலவசமாகத் தரவேண்டும்.

    ReplyDelete
  16. உலக தரத்தில் நூறில் ஒரு பல்கலைக் கழகம்கூட இந்தியாவில் உருவாகவில்லை என்று சமீபத்தில் வந்த செய்திகள் கூறுகின்றன .காரணம் ,தனியார்மயமான கல்வி கூடங்கள்தான் ,காசுக்கு எதனையும் செய்யும் ஊழல் கூடங்கள் ஆகிவிட்டன ,கல்வி நிலையங்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு ,நீங்கள் சொல்வது போல் பாரபட்சமின்றி அனைவருக்கும் கல்வி தர முன் வர வேண்டும் .ஆனால் .உலக வங்கியின் அடிமைகள் இதை செய்வார்களா ?

    ReplyDelete
  17. வணக்கம்
    ஐயா
    கல்விச்சாலைகள் எல்லாம் இப்போது வியாபாரமாக ஆகிவிட்டது.தங்களின் எண்ணக்கருத்து நல்லதை சொல்லுகிறது..
    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. கல்வி என்பது தற்போது முழுக்க முழுக்க வியாபாரமாகிவிட்டது. கல்வி முறையில் மாற்றம் அவசியமே. அவ்வாறாக மாற்றம் வந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த விடுவார்களா தற்போதுள்ள, கல்வியை வணிகமயமாக்குவோர்? நல்ல கருத்துக்களைக் கூறியுள்ளீர்கள். நன்றி.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    ReplyDelete
  19. ***மனிதர் எல்லாம் பிறப்பால் சமம் என்று எண்ணும் மனம் நம்மிடம் இல்லை.***

    எதையும் சரி செய்ய முயலும்போது, நம் தவறை நாம் முதலில் ஒத்துக் கொள்ளணும். நீங்க மேலே கூறிய நம்மிடம் உள்ள குறைபாட்டை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை! ஏற்றுக்கொள்ளவே இல்லைனா அதை எப்படி சரிப்படுத்துவது??? அதான் இங்கே பிரச்சினை.

    ஒரு ஆய்வகத்தில் ஒரு ஆராய்ச்சியாளன் ஒரு தவறு செய்துவிடுகிறான். அதனால் எதிர் பார்த்த "விளைவு" வரவில்லை. இப்போ இதைசரி செய்து எதிர்பார்த்த விளைவைக் கொண்டு வரணும்னா தான் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மனநிலை அவனிடம் இல்லை என்றால்,வரும் தீர்வை சரி செய்ய முடியாது. நான் தப்பு செய்யவில்லை, எவனோ எதையோ தவறுதலாக செய்துவிட்டான் என்று சொல்லும் மனநிலை நம்மில் பலரிடம் இருக்கு, சார். அதனால் இதை சரி செய்வது கஷ்டம். :)

    ReplyDelete

  20. @ கீதா சாம்பசிவம்
    /
    மேட்டுக்குடியினர் பலனடைந்தார்களா? இல்லை ஐயா! தங்கள் தனித்தன்மை கௌரவம், பெயர், புகழ், கற்ற வித்தைகள் அனைத்தையும் இழந்தார்கள். இழக்க வைத்தது ஆங்கிலேயரின் திட்டமிட்ட மெக்காலே பாடத் திட்டம். மேட்டுக்குடியினரை மட்டும் குறி வைத்துத் தாக்க ஏற்படுத்தப்பட்டதே இந்தக் கல்வித் திட்டம். நம்முடைய பாரம்பரியங்களைத் திட்டமிட்டு அழித்தனர். கலைகளை ஒழித்தனர்! மருத்துவத்தை, நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களைச் செய்யும் சிற்பிகளை அழித்தனர். அருமையான தச்சு வேலைப்பாடு, கைத்தறி நெசவு ஆகியன அடியோடு ஒழிந்தன. நமக்கென இருந்த பாரம்பரிய மருந்துகளைத் தனதாக்கிக் கொண்டனர். காப்புரிமை பெற்றனர். நம் உரிமைகளை வேரோடு கட்டறுத்தனர். இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம்/ மேடம் இது ஒரு கண்ணோட்டம் ஆனால் பாரம் பரியம் கௌரவம் பெருமை என்று நாம் சொல்லிக் கொள்வது எதை என்பதும் கேள்விக்குறியேஅந்நாளில் ஒரு லட்ச ரூபாய் கல்வி சீர்திருத்தி அமைக்க செலவு செய்ய வேண்டும் என்ற ஆணையை அவர் வழியில் நிகழ்த்தினார். அதுவே இப்போது நாம் பிற நாட்டினரைப் போல் முன்னேறவும் வழிவகுத்திருக்கிறது. ஆனால் அதனாலும் பயன் பட்டவர்கள் அக்காலத்தில் கல்வி கற்கத் தகுதி பெற்றிருந்த மேட்டுக்குடியினரேவருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  21. @ ssk tpj
    நீண்ட இடைவெளிக்குப்பிறகு வருகைக்கு நன்றி சார். மத்திய அரசோ மாநில அரசோ ஏதாவது ஒன்றுதான் கல்விக்குப் பொறுப்பாக முடியும் கல்வியை concurrent list-ல் இருந்து நீகக வேண்டும் சமவாய்ப்பு சமகல்வி எல்லோருக்கும் இலவசமாக வழங்கினால் மட்டுமே வருங்கால சந்ததியினர் மனசு மாசுபடாது இருக்கும்

    ReplyDelete

  22. @ ஸ்ரீராம்
    இந்தியர்களிடையே பிரிவினையை உண்டாக்க என்ன செய்யலாம் என்று ஆராய்ந்து, இந்தியர்களின் ஒற்றுமையைக் குலைக்க முதலில் கலாச்சாரத்தை உடைக்க வேண்டும் என்றெல்லாம் அறிக்கைகள் அனுப்பப் பட்டு, திட்டமிட்டே இந்தக் கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று நானும் படித்த நினைவு இருக்கிறது/ ஸ்ரீராம் முடிந்த அளவு சுருக்கமாக இந்தக் கல்வி முறை வந்ததை திரு முரளிதரனின் கேள்விக்குப் பதிலாக எழுதிகிறேன் வாசியுங்கள் மீள்வருகைக்கு நன்றி. .

    ReplyDelete

  23. @ டி.என். முரளிதரன்

    மெக்காலே கல்வி முறை பற்றி விளக்க திரு. டி.என். முரளிதரன் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதைப் பின்னூட்ட மறு மொழியாகக் கூறுவது சற்றுக் கடினம் நானே அவர்களது அலுவலகப் பணிகளுக்கு குமாஸ்தாக்கள் தேவைப்பட மெகாலே கல்வி நடைமுறைப் படுத்தப்பட்டது. இதெல்லாம் சரித்திரம் என்று எழுதி இருக்கிறேன் மெக்காலே ஆங்கிலக் கல்வியை அறிமுகப் படுத்தினார். அதனால் அந்த மொழியைக் கற்ற இந்தியர்கள் அப்போதைய ஆங்கில அரசுக்கு மொழி பெயர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல் சிந்தனை ரீதியிலான அடிமைகளையும் உருவாக்க முடியும் என்றார் அவருடைய மொழியில் "We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste" ஆனால் அது மட்டுமே அவருடைய சிந்தனை என்று கூறுவதும் தவறாகும் "In one point I fully agree with the gentlemen to whose general views I am opposed. I feel with them, that it is impossible for us, with our limited means, to attempt to educate the body of the people. We must at present do our best to form a class who may be interpreters between us and the millions whom we govern; a class of persons, Indian in blood and colour, but English in taste, in opinions, in morals, and in intellect. To that class we may leave it to refine the vernacular dialects of the country, to enrich those dialects with terms of science borrowed from the Western nomenclature, and to render them by degrees fit vehicles for conveying knowledge to the great mass of the population. "
    அவருடைய கூற்றுப் படி அந்தக் காலத்தில் கல்வி என்பது பெரும்பாலும் மத போதகமாகவே இருந்தது அது சம்ஸ்கிருதத்திலும் அராபிய மற்றும் பெர்சிய மொழிகளில் மட்டுமே இருந்தது. அவரது கணிப்புப் படி 15-ம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் கிரேக்கமொழியின் வளர்ச்சி இருக்கவில்லை. ஆனால் ஆங்கிலம் பிறமொழிகளில் இருந்த நல்லவற்றை தன்னகத்தே ஏற்றுக் கொண்டது. அதேபோல் இந்தியாவிலும் ஆங்கிலத்தை உள்வாங்கிக் கொள்வதன் மூலம் இந்திய மொழிகள் பயன் அடையக் கூடும்
    ஆக மெக்காலே ஆங்கிலக் கல்வியை அமுல் படுத்துவதன் நோக்கம் ஒரு வழியில் இந்தியர்கள் உலகத்தின் செல்வங்க்களை இந்தியாவுக்குக் கொண்டுவர உதவியாய் இருந்தது
    ஆனால் என்ன நேர்ந்தது என்றால் ஆங்கிலக்கல்வியை அக்காலத்திய மேட்டுக்குடி மக்களே பயில முடிந்து ஆண்டை அடிமை மனோபாவம் தொடர வழி செய்தது.மெக்காலேயின் ஆங்கிலக் கல்வி இந்திய மக்களின் கண்களைத்திறந்து சுதந்திரத்துக்கும் அடிகோலியது. மெக்காலேயின் கல்வி முறை வந்திருக்காவிட்டால் அந்நாளைய வழக்கம் தொடர்ந்து இருந்து ஹிந்து முஸ்லிம்கள் தங்கள் தங்கள் மதங்களைப பரப்புவதில் நாடு ஒன்றாய் சேர்ந்திருக்கும் வாய்ப்பே இல்லாமல் போயிருக்கும்




    ReplyDelete

  24. @ டி.என். முரளிதரன்
    மெக்காலே என்பரின் முழுப் பெயர்
    THOMAS BABINGTON MACKAULAY.இவர் லார்ட் பெண்டிங் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது இந்தியாவில் கல்வி முறையை அமுல்படுத்த நியமிக்கப்பட்டவர் இவரது ஆலோசனைகளை முழுவதும் ஏற்றுக் கொண்டார் லார்ட் பெண்டிங்.

    ReplyDelete

  25. @ கில்லர்ஜி
    வருகைக்கும் கருத்துப்பதிவில் பாராட்டியதற்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ கரந்தை ஜெயக்குமார்
    என் முதல் விருப்பம் எல்லோருக்கும் சம வாய்ப்பு சம கல்வி என்பதே. அதை முன்னிட்டே என்கருத்துக்களை எழுதி இருக்கிறேன் என்ன கல்வியானாலும் அது அனைவருக்கும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதே என் அவா. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  27. @ தி.தமிழ் இளங்கோ
    /அய்யா, எல்லோருக்கும் கல்வி என்பதும், இந்தியாவில் ஜாதீய அடுக்குமுறை என்பதும் வேறு வேறு. இரண்டினையும் ஒன்றாக வைத்து பார்க்க இயலாது./ ஜாதிய அடுக்குமுறை காரணமாகவே பெருபாலோர் கல்வி கற்க இயலாது போயிற்று. ஒன்றின் விளைவெ மற்றது பிரித்துப் பார்க்க முடியாமல் செய்கிறது. வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  28. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்

    ஏழை சொல் அம்பலம் ஏற வேண்டுமே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  29. @ பகவான் ஜி
    தற்போதைய கல்வி முறையில் சீர்கேடுகள் அதிகம் என்பதே பலரது கருத்தும் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜி.

    ReplyDelete

  30. @ ரூபன் என் எண்ணக் கருத்து பகிரப்பட்டது/ வாசகர்களின் கருத்துக்களும் பின்னூட்டமாக. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  31. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இந்த சீர்கேடுகள்களையப் பட வேண்டுமானால் நம் நாட்டில் ஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரி வரவேண்டும் நான் ஆணை இட்டால் அது நடந்து விட்டால்.... வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  32. http://www.samanvaya.com/dharampal/

    இங்கே சென்று http://www.samanvaya.com/dharampal/frames/downloads/3beautiful-tree.zip

    இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்க்கவும். பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியக் கல்வியைப் பற்றிய புரிதல் கிடைக்கும். உங்களுக்குப் புத்தகத்தை அட்டாச்மென்டில் அனுப்பி வைக்கிறேன்.

    ReplyDelete

  33. @ வருண்
    காரண காரியங்களைக் கூறி இருக்கிறேன் ஏகோபித்தக் கருத்து உருவாக வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால் நம்பிக்கை வேண்டும் ஓரளவுக்கு கல்வி வழங்கப்பட ஆரம்பித்ததில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் இரத்தத்தில் ஊறி இருக்கும் பண்பை சீர் செய்ய காலம் பிடிக்கும். சீக்கிரம் சீர்செய்ய வே வழிகூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  34. அருமையான கட்டுரை ..தொடரட்டும் உரத்த சிந்தனைகள்.

    ReplyDelete

  35. @ மதுரை சரவணன்
    நான் எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன் , நீங்கள் படிக்கிறீர்களா? வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  36. அரசு கையில் கல்வியைக் கொடுத்தால் கோவிந்தா. இருக்கும் தரமும் குறைந்து இதிலும் ஊழல் பிய்த்துக் கொண்டு ஆடும்.

    ReplyDelete

  37. @ A.Durai
    அப்பாதுரைசார் அரசு கையில் கல்வியைக் கொடுத்தால் கோவிந்தா என்கிறீர்கள். நான் சொல்வது அரசுஒரு பெனெவொலெண்ட் சர்வாதிகாரியிடம் அரசு இருக்க வேண்டும் என்பதையே எனக்கு அதிகாரமிருந்தால் என்று சொன்னேன் இருக்கும் முறைகள் முற்றிலும் மாற்றப் படவேண்டும் முக்கிய நோக்கமே எல்லோருக்கும் சமவாய்ப்பு, சமகல்வி என்பதுதான். அதைத்தான் விளக்கமாகக் கூறி இருக்கிறேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  38. அன்புடையீர்,

    தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

    http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

    அன்புடன்,
    எஸ்.பி.செந்தில்குமார்

    ReplyDelete