Saturday, May 23, 2015

இதோ ஒரு சிறுகதை......


                       இதோ ஒரு சிறுகதை
                       -------------------------------



(இதோ ஒரு சிறுகதை. சில நாட்களுக்கு/ மாதங்களுக்கு முன் ஒரு ஈழப்பெண் தான் எப்படி விபச்சாரத்தில் ஈடுபட நேர்ந்தது என்று கூறி இருந்ததைப் படிக்க நேர்ந்தது. அதே நேரத்தில் தலை நகரில் ஒரு பெண் சீரழிக்கப்பட நாடே கொந்தளித்து சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டது. இந்த மாதிரி நிகழ்வுகள் மனதில் ஆயிரம் எண்ணங்களைத் தோற்று விக்கிறது. நான் ஒரு எழுத்தாளன் அல்லவா.கற்பனைக் கதையாகப் புனைந்து விட்டேன் படித்து பாருங்களேன். சிலருக்கு இது ஏற்கனவே படித்தது போல் இருக்கலாம்  இருந்தால் என்ன.?எண்ணங்களைப் பதிக்கத் தடை ஏதுமில்லையே..)
 
இவளுக்கு பெயர் சூட்ட விரும்பவில்லை. பெயர் தெரியாமலேயே அபலையாக, ஆனால் எல்லோராலும் பேசப்படுபவர்களில் இவளும் ஒருத்தி.. இவள் இவளாகவே அறியப் படட்டும்.இவளுக்குப் பெயர்தான் கொடுக்கவில்லையே தவிர இவ்ளைப் பற்றி பலரும் பேசத்தான் செய்கிறார்கள். ஆனால் நடந்த விஷயங்கள் எல்லாம் இவளுக்கு மட்டும்தான் உண்மையாய்த் தெரியும். பாதிக்கப் பட்டவள் ஆயிற்றே. காலம் கடந்தபின் ஏதேதோ நிகழ்வுகளுக்குப்பின் இவளும் முக்கிய செய்தி ஆகிவிட்டாள். இவள் தைரியசாலி என்றோ வீராங்கனை என்றோ அழைக்கப் படுவதில்லை.. அப்படி அழைக்கப் படுவதை இவள் விரும்புவதுமில்லை.இவளை உபயோகித்தவர்கள் இவள் உயிரை எடுக்க வில்லையே. அப்படி நேர்ந்திருந்தால் இவளும் வீராங்கனையாகக் கருதப் படுவாளோ.? இப்போது அதுவா பிரச்சனை. ஆண்டுகள் பல கழிந்துவிட்டது. இவளையும் இவளுக்கு நேர்ந்ததையும் நாடே அசைபோடுகிறது. இதெல்லாவற்றுக்கும் ஆரம்பம்தான் என்ன.?நினைவுகள் சுழல்கிறது. 
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல,
 உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
 
என்று பாடவைத்தவன். பேசியே மயக்கியவன். இவளும் பெண்தானே. அம்சமாய் இருந்தாள். பருவம் பலரையும் சுண்டி இழுத்தது. ஆனால் இவள் விழுந்தது அவன் மிடுக்கில், தோரணையில்,நடையில் பேச்சில். சுருங்கச் சொன்னால் எப்போதும் அவனை நெஞ்சுக் கூட்டுக்குள் பொத்திப் பாதுகாத்து.வந்தாள். சராசரிக்கும் கீழான வாழ்க்கை நிலை. கனவு காணும் பருவம். அவனுக்கோ இவள் மேல் காதலிருந்தாலும், வாழ்க்கையை அனுபவிக்கத் துடிக்கும் ஆசையும் இருந்தது. கண்ணும் கண்ணும் கலந்தாயிற்று. காதலின் முதல் படி அது.  கையும் கையும் சேர வேண்டும். வேகம் பிறக்க வேண்டும். உடலில் வெப்பம் ஏறவேண்டும். அவளை அடைய வேண்டும். பிறகு யோசிக்கலாம் என்ன செய்வதென்று. மனம் கணக்குப் போட திட்டங்கள் உருவாக்க வேண்டும். அவனுக்கு எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும், திட்டமிட்டதைச் செய்யவேண்டும்.. இலக்கு நல்லதாக இருந்தால் நல்ல விஷயம்தான். 

அவனைப் பொறுத்தவரை முதலில் இவளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும். இவள் அவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்றால் அவனுக்குச் சொந்தமாக இருக்கவேண்டும் செய்து விட்டால் போயிற்று. என்று கணக்குப் போட்டவன் சாதாரணமாகப் பெண்கள் விழும் குழியைப் பறிக்கத் திட்டமிட்டான். முகஸ்துதிக்கு மயங்காதவரே இல்லாதபோது, காதலனின் புகழ்ச்சி பேச்சில் பருவப் பெண் விழுந்துவிட்டாள்.
“ உனக்கு உன் கழுத்தே அழகு சேர்க்கிறது. நீளமான கழுத்துள்ள பெண்கள் அழகானவர்கள்.
 முதல் அத்திரம். பாய்ந்தது. பொதுவாக தரை நோக்கி நடப்பவள் தலை நிமிர்ந்து ( கழுத்து தெரியும்படி) நடக்க ஆரம்பித்தாள்.
பெண்களுக்கு அழகு சேர்ப்பது அவர்களது கூந்தல்தான்.. உனக்கென்ன..கூந்தல் இருக்கும் மகராசி. பின்னி விட்டால் என்ன... அள்ளி முடிந்தால் என்ன.எல்லாமே அழகுதான்..
“ உன் தலைக்குப் பூ வைக்காதே. பூவில் வண்டுகள் மொய்க்கும்போது உன் கண்கள் எங்கே என்று தேடவைக்கிறது.
உனக்கு இருப்பது கண்ணா ?உன் முகத்தில் வண்டுகள் ஆடுகிறதே என்றல்லவா நினைத்தேன்.
வித்தை தெரிந்தவன் ஆட்டிப் படைக்க விழுந்துவிட்டாள் பேதைப் பெண். ஓரிரண்டு நாட்கள் இவளைக்காண வராமல் இருந்தான். மனம் சஞ்சலப்பட இவளுக்கு “ வேரூன்றி  வளருமென்று விதை விதைத்தேன் இரு விழியாலெ பார்த்திருந்து நீருமிறைத்தேன், பூ முடிக்கும் ஆசை கொண்டு சோலை அடைந்தேன் அங்கு புயல் வீசிக் காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன். என்ற பாடல் பின்னணியில் இசைக்கத் தொடங்கியது.
கண்ணும் கண்ணும் பேசியது காதலிசைப் பாடல் வரை வந்துவிட்டது. பெண்மனத்தில் தீபமும் ஏற்றியாகிவிட்டது. இனி என்ன.? கையும் கையும் இணைந்து உதடுகள் உராய்ந்து தீப் பிடிக்க வேண்டும். சமயமும் சந்தர்ப்பமும் சரியாக அமைய வேண்டும். இல்லாவிட்டால் அமைக்க வேண்டும்.

ஒரு நாள் மாலை. அந்திசாயும் நேரம் வண்டாடும் விழியாலே வலைவீசி வழிநோக்கிக் காத்திருந்தாள். அவன் வருகை கண்டு இவள் எழ , தோளிலிருந்து  துகில் சரிந்து விழ. பின்னிருந்த கூந்தல் முன்னால் சரிந்து, விண்ணென்று புடைத்திருந்த சாயாத இரு கொம்புகளைக் காண விடாமல் தடுத்தது. வந்தவன் வார்த்தைகளால் விளையாடி அவளை சரித்துவிட்டான். ஏந்திழையும் தன்னை ஆட்க்கொள்ளப் போகிறவன் தானே என்று வளைந்து கொடுத்தாள். சந்தர்ப்பம் சரியாய் அமைய இவள் அவன் கைகளில். பிறகென்ன. ? உடல் சூடேற இருவரும் முனைந்து வெப்பத்தை அடக்கினர்.

அன்று நடந்ததை இவள் தடுத்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா.? ஆனால் அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லையே. அன்று நடந்தது இன்று நினைத்தாலும் இன்பம் தருகிறதே.விரும்பியோ விரும்பாமலோ தெரிந்தோ தெரியாமலோ இணைந்தாயிற்று. இணைகையில் இன்பம் துய்த்ததும் உண்மை. காலம் கடந்து குய்யோ முறையோ என்று கூக்குரல் இடுவதால் என்ன லாபம்.. இருந்தாலும் இப்படி ஏமாற்றப் படுவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“ எனக்கு நீ உனக்கு நான் என்று முடிவாகிவிட்டது.ஆனால் இந்தப் பாழும் உலகம் திருமணம் இல்லாமல் இருப்பதை ஏற்காதே. நாம் யாரும் காணாத இடத்துக்குப் போய்விடுவோம். ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் ஊரார்முன் வந்து ஊர் அறிய மணமுடித்துக் கொள்வோம்என்றான் அவன்.

 “ மணம் முடித்துக் கொண்ட பிறகு போவோமேஎன்றாள் இவள்.

“ மணம் என்பது ஒரு சடங்கு. உனக்கு என்னைவிட சடங்கில் நம்பிக்கையா.? திருமணம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் உன்னை விட்டுப் பிரியமாட்டேன்என்று ஏதேதோ கூறி இவளை சம்மதிக்க வைத்து ஊரை விட்டுக் கூட்டிப்போனான். கையில் இருந்த காசெல்லாம் கரைந்து விட்டது. இருக்க இடம் உண்ண உணவு மிகவும் அத்தியாவசியத் தேவை அல்லவா. நேரம் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் உடலோடு உறவாடி அவனுக்கு இவள் என்று நிரூபித்துக் கொண்டிருந்தாள்.இருக்க இடத்துக்கு வாடகை கொடுக்க இயலாத போது நண்பன் ஒருவனிடத்தில் அடைக்கலம் புகுந்தான். வேலை தேடி ஒருநாள் வெளியே போனவன் அன்றிரவு வரவில்லை. நண்பனின் வீட்டில் அவனுடன் தனியே. இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நண்பன் மிகவும் பதவிசாக நடந்து கொண்டான்.மறுநாளும் இவளது காதலன் வரவில்லை. இரண்டாம் நாளும் நண்பன் நல்லவனாகவே இருந்தான். சந்தர்ப்பம் கிடைக்காதவரை எல்லா ஆண்களுமே நல்லவர்கள்தான்.ஆனால் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகிக்காமல் இருக்க நண்பன் ஒன்றும் சாமியாரில்லையே. இந்தக் காலத்தில் சாமியார்களையே நம்ப முடியவில்லையே. வயிற்றுப் பசியைத் தணிக்கும் நண்பனுக்குக் கடன் பட்டதுபோல் உணர்ந்தாள். காதலன் இன்று வருவான் நாளை வருவான் எனும் நம்பிக்கையில் நாட்கள் நகர. இவளுக்கு இவளது கடன்சுமை அதிகரிப்பதுபோல் தெரிந்தது. நெருப்பும் பஞ்சும் அருகருகே. கடனை அடைக்க தன்னையே நண்பனுக்குக் கொடுத்தாள். கரும்பு தின்னக் கூலியா. முதலில்

தான் தவறு செய்கிறோமோ என்று எண்ணியவள். தவற்றிலும் சுகம் இருப்பது உணர்ந்து தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டாள். நாட்கள் வாரங்களாகியும் காதலன் வராததால் இவளும் இந்த வாழ்க்கைக்குத் தன்னைப் பழக்கப் படுத்திக் கொண்டாள்.நண்பனின் குடும்பம் அவனிருக்குமிடத்துக்கு வரும் என்று தெரிந்ததும் நண்பன் இவளை இன்னோர் இடத்தில் குடியிருத்தினான். இவளுக்கும் வேறு போக்கிடம் தெரியவில்லை. ஊருக்குப் போனால் குடும்பத்தாரிடம் என்ன பதில் சொல்வது என்று யோசித்தும் , காதலன் வரும்வரை எப்படியாவது தன் காலிலே நிற்பதே சரி என்றும் தனக்குத்தானே வாதிட்டுக் கொண்டாள். மனசாட்சி என்பது அவ்வ்ப்போது குரல் கொடுத்து தான் இருக்கிறேன் என்று உணர்த்தும். மனசாட்சி என்பதே இஷ்டப்படி வளைந்து கொடுக்கக் கூடியதுதானே. செய்வது சரி என்று நிரூபிக்க ஆயிரம் காரணங்கள் கூறிக் கொள்ளலாம். பிறகு மனசாட்சியைத் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம்.


நண்பனுக்கு தன் குடும்பத்தையும் இவளையும் சேர்த்துப் பராமரிக்க முடியாமல் இவளை இன்னும் பலருக்கு அறிமுகப் படுத்தினான். ஒரு முறை சோரம் போனவளுக்கு மறுபடியும்  மறுபடியும் பிறருக்கு இன்பம் அளிப்பது தவறாகப் படவில்லை. பின் என்ன. ? நாளொரு கணவன் பொழுதொரு காதலன் என்று இவள் வாழ்க்கை இவள் அறியாமலேயே ஓடத்துவங்கியது. உடலின்பம் என்பது கொடுப்பது மட்டுமல்ல. பெறுவதிலும் இருக்கிறது என்பதை இவள் உணரத் துவங்கினாள். வாடிக்கையாளர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகப் படுத்தினர். அவரவர்கள் காரியத்துக்கு ஈடு செய்ய இவள் பணயம் வைக்கப் பட்டாள். இள வயதினர், நடுவயதினர் முதியவர்கள் என்றும் , அதிகாரிகள். காவல்துறையினர், அரசியல்வாதிகள் என்றும் பலரும் இவளிடம் இன்பம் தூய்த்தனர். இவளது வாழ்க்கையும் ஒரு திசையில் போக ஆரம்பிக்க. பின் எப்போது பிரச்சனை துவங்கியது.?

ஆம். இவளால் இன்பம் அனுபவிக்க முடிந்தவர்களால் தொந்தரவு இருக்கவில்லை. ஆனால் இன்பம் அனுபவிக்க இயலாதவர்கள் வக்கிர செயல்களில் இறங்கியபோதுதான். இவளுக்கு இதில் உள்ள கஷ்டங்கள் புரிந்தது. வேதனைதான் மிஞ்சியது. பலருடன் இவளும் சேர்ந்து இன்பம் அனுபவித்தவள்தான். ஆனால் வக்கிர செயல்கள் அத்து மீறியபோது அதிலிருந்து தப்பிக்க ஒரே வழி அங்கிருந்து ஓடுவதுதான். எங்கு போவது.?அப்போதுதான் இவளுக்கு தன் குடும்பத்தார்பற்றிய நினைப்பு வந்தது. அவர்கள் கேள்வி கேட்பார்களே. தான் வஞ்சிக்கப்பட்டதையும் தன்னை பலரும் உபயோகித்துத் தூக்கி எறிந்ததாகவும் கூறலாம்.பெண் என்றால் பேயும் இரங்கும்.

திட்டமிட்டபடி எல்லாம் நடந்தது. நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. குற்றவாளிகள் என்று பலரும் அடையாளம் காட்டப் பட்டனர். வழக்கு தள்ளுபடியாகலாம். குற்றவாளிகள் என்று கருதப் படுபவர்கள் தண்டிக்கப் படலாம். இவளுக்கு ஆதரவு வெகுவாகக் கிடைக்கலாம். உயிருடன் தப்பி வந்து விட்டதால் வீராங்கனை என்ற பட்டம் கிடைக்காமல் போகலாம். ஆனால் இன்னொரு வீராங்கனையின் தயவால் இவளுக்கு அபலை , ஆணாதிக்க வர்க்கத்தால் சீரழிக்கப் பட்டவள் என்ற அனுதாபம் கிடைக்கலாம். ஆனால் உண்மை இவளுக்கு மட்டுமே தெரியும்.

 

 

 

 





28 comments:

  1. அவ்வளவுதானா? தப்புத் தாளங்கள் கதையில் ஒரு வீச்சு குறைவது போல உணர்வு!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. வாழ்க்கையின் அவலங்கள் மனதை நோகப் பண்ணுகின்றன. இந்த மாதிரி நிகழ்வுகளை நம்மால் எப்படித் தடுக்கமுடியும் என்ற ஆற்றாமையினால் மனது குற்ற உணர்வு கொண்டு தவிக்கிறது. எதிர்காலம் என்ன ஆகும் என்ற வேதனை உண்டாகிறது.

    இத்தனைக்கும் காரணம் நீங்கள் எழுதிய சிறுகதைதான்.

    ReplyDelete
  4. கற்பனை என்று கூறிவிட்டீர்கள். இருந்தாலும் நிகழ்வுகள் தொடராக ஒன்றுக்கொன்று இணைந்துவருகின்றன. மன உணர்ச்சிகளை அனாயசமாகத் தாங்கள் தந்துள்ள விதம் அருமையாக உள்ளது. பதிவின் கடைசி வரி முத்தாய்ப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  5. இதெல்லாம் எதற்கு..

    காலத்தின் கோலமா!.. காலத்திற்கு அவசியமா?..

    ஒன்றும் புரியவில்லை..

    ReplyDelete

  6. @ ஸ்ரீராம்
    தாளங்கள் எங்கோ தப்பாகிறது என்று தெரிகிறது. அவரவர் மனம் என்ன தாளம் போடுகிறது என்று புரிய வைக்கவே இது. சரி இன்னும் வீச்சாகத் தாளம் தப்பாக்கச் சொல்கிறீஈகளா,?

    ReplyDelete

  7. @ டாக்டர் கந்தசாமி
    தவறு செய்பவர்களுக்காக நமக்கு ஏன் குற்ற உணர்வு வரவேண்டுமுப்பத் தின்றவன் தண்ணீர் குடிக்கிறான் வருகைக்கு நன்றிகதையைக் கதையாகவே பார்க்கவேண்டும்

    ReplyDelete

  8. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    ஐயா கதை கற்பனைதான் ஆனால் கதையின் கரு பற்றியும் எழுதி இருக்கிறேனே. வருகைக்கு நன்றி

    ReplyDelete

  9. @ துரை செல்வராஜு
    நாம் சம்பந்தப் படாத எதுவுமே அவசியமில்லை. டெல்லி நிகழ்வுக்குப் பின் சட்டங்கள் திருத்தப் பட்டன/ பெண்களே தவறுக்கு உடந்தையாய் இருந்து விட்டு காவல் துறையிடம் புகார் கொடுக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிகழ்வைக் கற்பனை செய்து பார்த்தேன். நடக்கக் கூடியதுதானே. காலத்திற்கு அவசியமா என்பது அவரவர் முடிவு. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  10. முன்பே படித்தாற்போலவே இருக்கிறது.

    ReplyDelete
  11. துணைக்கு அழைத்துக் கொள்வது ஒரு நாள் கொஞ்ச கொஞ்சமாக கொல்ல ஆரம்பித்து விடுமே...! அதுவும் உண்மை தானே...?

    ReplyDelete
  12. தொடக்கம் காதலாக இருந்தாலும் முடிவு ....
    இம்முடிவினை அனுபவித்தவர்கள் எவ்வளவு பேரோ

    ReplyDelete
  13. இது ஒரு முடிவில்லாத கதை போல் உள்ளது. அவளுக்கு என்னவாயிற்று என்பதை சொல்லியிருக்கலாம். எனினும் மனதை தொட்ட கதை.

    ReplyDelete
  14. கதை நகர்வு நன்று
    படிக்க தூண்டும் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete

  15. சொல்லிச்சென்ற விதம் அருமை ஐயா.

    ReplyDelete
  16. மனசுக்குக் கஷ்டமாப்போச்சு. பாவம் அவள். காதல் எனறு நம்பிக்கை துரோகம் செய்தவனை தண்டிக்க முடியலை பாருங்க:(

    ReplyDelete

  17. @ A.Durai
    அதைத்தான் சொல்லி இருக்கிறேனே.ஒரு ஷொட்டு கொடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் நினைவாற்றலுக்கு. இருந்தாலும் கருத்திட்டிருக்கலாமே/ வருகைக்கு நன்றிசார்

    ReplyDelete

  18. @ திண்டுக்கல் தனபாலன்
    ஒரு கதை பல புரிதல்கள். வருகைக்கு நன்றி டிடி.

    ReplyDelete

  19. @ கரந்தை ஜெயக் குமார்
    காதலுக்கும் ஒரு மனமுதிர்ச்சி வேண்டும் நடக்கக் கூடியவையே கற்பனையாகி விட்டது. தான் ஏமாந்து விட்டு அபலைப் பட்டமும் சுமக்கிறாள் இப்பெண். வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  20. @ வே. நடன சபாபதி
    முடிவைச் சொல்லி விட்டால் என் அபிப்பிராயத்தை வாசகர் மீது திணிப்பதாக இருக்கும். அதனால்தான்கட்டுரை வடிவம் தவிர்த்துசிறுகதை வடிவம் கொடுத்தேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  21. @ யாழ்பாவாணன் காசிராஜலிங்கம்
    கதை நகர்வினைப் பாராட்டியதற்கு நன்றி சார்

    ReplyDelete

  22. @ கில்லர்ஜி
    வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஜி.

    ReplyDelete

  23. @ துளசி கோபால்
    பொதுவாகவே பெண்பாத்திரங்கள் அனுதாபம் பெற்று விடுகிறார்கள்சட்டங்களும் அவளுக்கு சாதகமாகவே திருத்தப் படுகின்றன. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  24. அந்தப் பெண் விரும்பித் தானே இதை ஏற்றுக் கொண்டிருக்கிறாள்! பின்னர் விலகி வந்ததும் விருப்பத்தினாலேயே! இதில் சொல்ல ஒன்றும் இல்லை! :)முதலிலேயே இவளும் ஏதானும் வேலைக்குச் செல்ல முயன்றிருக்க வேண்டும். ஏதும் இல்லைனா சமையல் வேலைக்கானும் போயிருக்கலாம். இது தான் சுகம் என நினைத்துப் போனவளைக் குறித்து அனுதாபம் கொள்ள முடியவில்லை. :(

    ReplyDelete

  25. @ கீதா சாம்பசிவம்
    ஏறத்தாழ என் கருத்தோடு ஒத்துப் போகிறீர்கள் வருகைக்கு நன்றி

    ReplyDelete
  26. எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்தா வேலைக்கு வருவதுபோல், இவளும் தான் தயாராக இல்லாத ஒரு தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியவளாகி இருக்கிறாள். வாழ்வியல் உண்மையைக் கருத்தில் கொண்டு அதே தொழிலை மனதார ஏற்றுக் கொண்டு விடுகிறாள். அவளுடைய நியாயம் அவளுக்கு. - இராய செல்லப்பா

    ReplyDelete
  27. எம் எஸ் சி பயாலஜி படித்து விட்டு வங்கியில் குமாஸ்தா வேலைக்கு வருவதுபோல், இவளும் தான் தயாராக இல்லாத ஒரு தொழிலுக்கு தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டியவளாகி இருக்கிறாள். வாழ்வியல் உண்மையைக் கருத்தில் கொண்டு அதே தொழிலை மனதார ஏற்றுக் கொண்டு விடுகிறாள். அவளுடைய நியாயம் அவளுக்கு. - இராய செல்லப்பா

    ReplyDelete

  28. @ செல்லப்பா யக்ஞசாமி
    வருகைக்கு நன்றி சார். எந்த் செயலையும் மனசாட்சியைத் துணைக்கழைத்து நியாயப் படுத்தி விடலாமே....

    ReplyDelete