Friday, August 5, 2016

எண்ண எண்ண..................


                                              எண்ண எண்ண ......
                                              -----------------------
 நான் 1960 களின்  முன்பாதியில் பெங்களூரில் இருந்த ஹிந்துஸ்தான்  ஏர்க்ராஃப்ட்  தொழிற்சாலையில் பயிற்சி முடிந்து பணியில் இருந்தேன் எட்டுமணிநேர வேளையில் மனம் சும்மா இருக்குமா. அது ஒரு குரங்காயிற்றே  பல்வேறு திசைகளில் எண்ணங்கள் ஓடும் அவற்றை அப்போது RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்று எழுதி வைத்திருந்தேன் தமிழில்  மொழி  மாற்றம்  செய்து  எழுதியது.ஆங்கிலப்பதிவுக்கு  இங்கே சொடுக்கவும் ( 1)  ( 2 )

             மனித இயந்திரங்களை இயங்க வைக்கும் ஆலைச் சங்கு ஊதுகிறது. ஒ...! சங்கோசையால்  கட்டுப்படுத்தப்படும் வாழ்க்கையும்  ஒன்றா.? விரக்தி ஏற்படுவதால்  என்ன பயன். .?வேலையைத் துவங்க வேண்டியதுதான்....நடக்கட்டும்.  மெஷினை   ஆன் செய். கருவிகளை  சுத்தம்  செய். திருத்தப்பட  வேண்டிய  பாகம்  மெஷினில்   பொருத்தப்படட்டும். ஹூம்..!  " ட்ரேசர் "  ஊடுருவும்  வழியில் பாகமும்   கடையப்படும் .

            மாற்றங்கள் இல்லாத, கட்டாயப்  படுத்தப்படும்  சங்கோசையால் கட்டுப்படுத்தப்படும் , இயந்திர வாழ்க்கை. அப்படி இல்லையென்றால் யாருமே வேலை  செய்ய மாட்டார்கள். காலையில் "பஞ்ச" செய்வதற்கு ஓடிவரும் ஆட்களைப் பார்க்கிறாய். அந்தக் கட்டாயமும் கட்டுப்பாடும் இல்லையென்றால் நேரத்துக்கு வேலைக்கு வருவார்களா.?"பஞ்ச்" செய்ய வேண்டாத சூப்பர்வைசர்களும்   அதிகாரிகளும் எத்தனை முறை எவ்வளவு நிதானமாக வருகிறார்கள். நீள்பாதை  போட வேண்டியவர்களே  கிட்டப்  பார்வையினராகிறார்கள் . போதாக்குறைக்கு  "டிசிப்ளின்"  பற்றி  எல்லோரும் பாடம்  நடத்துகிறார்கள்
            மெஷினில் வேகம் கூடுதலாக உள்ளது. சரிசெய். ஹூம் ! என்ன நினைத்துக் கொண்டிருந்தாய். டிசிப்ளின், ஒழுங்கீனம் அல்லது கட்டுப்பாடின்மை இதற்கு என்ன காரணம். ஒன்று தோன்றுகிறது. வேலைக்கு மூன்று நிலைகளில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.தொழிலாளி, மேற்பார்வையாளர், அதிகாரி.-- இவர்களெல்லாம் எப்படிப் பட்டவர்கள் .கிட்டத்தட்ட ஒரே நிலையில்  இருப்பவர்கள். மொழி, இனம், கலாச்சாரம், பின்னணி, வயசு  போன்றவற்றில்  மெத்த  மாறுதல்  இல்லாதவர்கள்.  வித்தியாசம்தான்  என்ன.? சிலபல  ஆண்டு  படிப்பறிவு. .-- இது  எவ்வளவு  பெரிய  மாற்றத்தை  ஏற்படுத்துகிறது.  புத்திசாலியான, சூட்டிகையான
கடினமாக  உழைக்கும்   இளைஞர்கள்  கீழ்  மட்டத்தில்  நிறைந்த  அளவிலும், .- எல்லா விதத்திலும்   சாதாரணமான  அல்லது  அதற்குச்  சற்றே  குறைவான, ஆனால்  கொடுத்து  வைத்த  இளைஞர்கள் உயர்  மட்டத்தில் நிறைந்த  அளவிலும் .-- இரண்டு   குழுவிலும்  அனுபவம்  இல்லாத, சூடான  இரத்தமுள்ள, மன  முதிர்ச்சியடையாத   இளைஞர்கள் .  இங்கு ஒழுக்கமும்  கட்டுப்பாடும்  எப்படி  காயப்படுத்தப்  படுகிறது.? தொழிலாளிக்கு  உள்ள  பிரச்சனைக்குத்  தீர்வு  கொடுக்க  வேண்டியது  மேற்பார்வை  யாளரின்  கடமை. அவருக்கு  ஏற்படும் தொல்லைகளுக்கு  தீர்வு  காண்பது  அதிகாரிகளின்   கடமை . ஆனால்  தொழிற்சாலைகளில்  மூன்றாண்டு , ஐந்தாண்டு  தொழிற்கல்வி  பட்டப்படிப்பு  வெறும்  ஏட்டுச்சுரைகக்காயதானே.?.
பிரச்சனைக்குத் தீர்வு காணும் அனுபவம் எங்கே அனுபவம்  ஏற்படும்  முன்னே உயர் பதவி --படிப்பின்  அடிப்படையில் அமர்த்தப் படுகிறார்களே. வேண்டுமானால்  பிரச்சினையை  எடுத்துச்  சொல்லும்  முறையில்  மாறுதல்  இருக்கலாம். தொழிலாளி  தமிழில்  சொன்னால்   அதிகாரி  ஆங்கிலத்தில்  சொல்லுவார். கீழ்மட்டத்  தொழிலாளிகளால்  சொல்லப்படும்  பிரச்சினைகள்  அநேகமாக  தொழில்  ரீதியில்  தீர்க்கப்  படாமலேயே  இருக்கும் . தேவைகள்   மாற்றி  அமைத்துக்  கொள்ளப்படும் . காம்ப்ரமைஸ்  செய்யப்படும் .தொழிலாளிக்கு  இது  புரிந்தாலும்  காட்டிக்கொள்ள  மாட்டான். அவனுக்கு  மேலதிகாரிகளின்  தயவு தேவை..தாமதமாக  வர, சீக்கிரம்  போக, ஓவர்டைம்   வேலை  கிடைக்க..- சலுகைகள் தேவை. தனிப்பட்ட  முறையில் அதிகாரிகளும்  ஆட்களை  இந்தச சில்லரைப் பிச்சைகள்  மூலம்  அடக்கி  வைக்கின்றனர். அதிகாரிகளிடம்  மதிப்பு, மரியாதை, விசுவாசம்  தேய்கிறது. அதிகாரி,  குறி, இலக்கு இவற்றுக்கு  கொண்டு  செல்பவனாக  இல்லாமல்  உத்தரவு  பிறப்பிப்பவனாக  இருக்கிறான். எங்கிருந்து  ஒழுங்கு  வரும், எங்கிருந்து  கட்டுப்பாடு  வரும் . மேலிருப்பவன்  முன்  மாதிரியாக  இருக்கவேண்டும். எல்லோரும்  ஏனோதானோ  என்று  இருக்கிறோமே  தவிர, கட்டுக்கோப்பாக  சரியான  முறையில்  சிந்தித்து  செயல்படுவதில்லை.

          இவையெல்லாம்  விவாதத்துக்கு  உட்பட்டவையாக  இருக்கலாம். சில  நேரங்களில்  விவாதங்களினால்  நல்ல  தீர்வுகள்  கிடைக்கிறதோ  இல்லையோ , ஆற்றாமையை  வெளிப்படுத்திய  திருப்தியாவது  கிடைக்கும். இன்னுமொரு எண்ணம்.பதவி உயர்வு...! எங்கிருந்துதான்
 இவர்களுக்கு   இப்படி ஒரு கொள்கை கிடைத்ததோ.  இன்ன பதவியில்   இவ்வளவு  வருடங்கள்  கழித்தால்  பதவி உயர்வு. அதுவும்  எப்படி?.
உயர்  மட்டத்தில்  மூன்று  நான்கு  ஆண்டுகளில்  பதவி உயர்வும்  ஒரு தொழிலாளிக்கு  எட்டு  பத்து  ஆண்டுகளுக்குப் பிறகுமாம்  ஒரு தொழிலாளி  வேலை செய்து  குறைந்தது  நான்கு ஐந்து  பதவிகள்  பெற  முடிந்தால்தான்  ஒரு மேற்பார்வையாளராக   வர முடியும்.. இதற்குள்  அவன் தலை  நரைத்து, பல்  போய் படு கிழவனாகி  விடுவான். இதற்கெல்லாம்  அடிப்படை  காரணம்  என்ன. ? மூன்று, ஐந்து  ஆண்டுகள்  படிப்பா.? என்ன இது. ? என்னதான்  வேலை செய்தாலும்  முன்னேற  முடியாத  முட்டுக்கட்டை.

             மெஷினில்   பொருத்தப்பட்ட   பாகம் முடிவடைந்து விட்டது.  அதை   எடுத்து   கருவிகளை   சுத்தம் செய். இன்னுமொரு  திருத்தப்பட  வேண்டிய   பாகம்   பொருத்தப்  படட்டும். " ட்ரேசர்"  ஊடுருவட்டும். கவனமாகப்   பார்த்துக்கொள்.  கொஞ்சம் இரு.  ஒரு  சிகரெட் புகைத்து  விட்டு  வரலாம்.  யாராவது   நண்பன்  கிடைப்பான். எவ்வளவோ   சங்கதிகளை   விவாதிக்கலாம்

             கோவிலில் சிலைகளை கும்பிடுவது  பற்றி என்ன   எண்ணுகிறாய்.. விசேஷமாக   எதுவுமில்லை.  இது  விவாதிக்கக் கூடிய  விஷயமல்ல.  முடிவு  ஏற்பட  முடியாத  விவாதங்களும்   பிரயோசனமில்லை. ஆனால் தனிப்பட்ட  முறையில்   சிலைகள் வணங்கப்  படுவது  குறித்து  எனக்கு ஆட்சேபணை இல்லை . வணங்குதல்  அல்லது  தொழுதல்  அல்லது   வேண்டுதல்  என்றால்  என்ன.? யார்  யாரை  வேண்டுகிறார்கள்.? சுலபமானது. கோவிலில்  வேண்டுபவன்  அவன் ஆத்மா  விடுதலைக்காகவும்,  மன நிம்மதிக்காகவும்  தொழுகிறான். அவன் ஆத்ம  விடுதலை   யார் செய்ய  முடியும்.? அவனேதான். அவன் அவனைத்தான் அவன் விடுதலைக்காக   வணங்க  வேண்டும் .! குதர்க்கமாகத்  தோன்றலாம். ஆனால் அதுதான்   வேதங்களும்   ஞானிகளும்  கூறுவதாகத்  தோன்றுகிறது. ஒரு சிலையோ  படமோ  ஒருவனின்  பிரதிபலிப்பைத்தான் தோற்றுகிறது. உண்மையில்  ஒரு பூவோ பழமோ    நிவேதனமாக   வைத்து   ஆராதிக்கையில்   வேண்டுபவனும் வேண்டப்படுபவனும்  ஒரே  நிலையில் நிறுத்தப்படுகிறார்கள். சிலையோ படமோ தன் உள்ளத்தின்  மெல்லிய திரையிடப்பட்ட பிரதிபலிப்பேயாகும் . அந்நிலையில்  எண்ணத்தின்  வாயிலாக  அகமும் புறமும்  ஒன்றோடோன்று  கலந்து  தேடுபவனும்  தேடப்படுபவனும்  ஒன்றாகிறது. இந்நிலையில்  ஒரு  கண்ணாடி  முன் அமர்ந்து , " நீதான்  அது, " என்று   தன பிரதிபிம்பத்தைப்  பார்த்து  சொல்லமுடிந்தால் , படம் ,சிலை , பிம்பம்  எல்லாம்   ஒன்றுதான்.. ஒ...! இதெல்லாம்  சற்று  கூடுதலோ. .நமக்கு  ஒத்து  வராது. சிலையை   வணங்குபவர்  வணங்கட்டும்.  மற்றவர்  வேண்டாம்.
            சிகரெட்   புகைப்பதில் நேரம் செலவாகி  விட்டது. வேலை தொடரவேண்டும். இரண்டாவது   பாகம் முடிந்ததா..? இன்று செய்து முடிக்க  வேண்டியது  ஏழு  பாகங்களா. ? முடிக்கலாம்.

            ஏன் சிகரெட் புகைக்கிறாய். ? உன்னையே  தெரிந்தவன்  படித்தவன்  பகுத்தறிவு   உள்ளவன்  என்று பீற்றிக்கொள்பவன் உடலுக்குக்  கெடுதல்  என்று   தெரிந்தும்  ஏன்   புகைக்கிறாய்.? புகைத்துச்  சாகிறாய்.?  புகை பிடிப்பவர்கள்  அனைவரும்  அதனால்  சாகிறார்களா.? ஆனாலும்  ஏன் புகைக்கிறாய் ? பழக்கத்துக்கு   அடிமை  ஆகிவிட்டாயா.? இல்லை.. ஏதோ  ஒரு சிறிய  இன்பம். நரம்புகளை கிளுகிளுக்கச் செய்து புத்துணர்வு  ஊட்டுகிறது. என்றைக்கானாலும் சாகத்தானே வேண்டும். இந்த சில்லறை   இன்பங்களையாவது   அனுபவிக்கக்கூடாதா.? ஒ.... எவ்வளவு   விந்தையான அடி முட்டாள்தனமான   எண்ணங்கள்.  உன்னை எப்படித்  திருத்துவது.  உன்னை நம்பி  எத்தனை  பேர்  இருக்கிறார்கள். நீ  ஒரேயடியாக   சாகாமல் நொடி நொடியாகச் செத்தால்  யார்  அவதிப்படப்  போவது..? உனக்கு  மன  உறுதியில்லை. வெறும்  பேச்சுத்தான்.  கட்டுப்பாடு  கிடையாது. உன்னை  நீயே  ஏமாற்றிக் கொள்கிறாய். இல்லை.  என்னால்  புகை  பிடிப்பதை  நிறுத்த முடியும். இது  சவால்.! பார்க்கலாம்.
             மெஷினில்  பொருத்தப்பட்ட  பாகம் முடிந்ததா, சரியாகப் போகிறதா என்று   பார்ப்பதுதான்  வேலை. எல்லாம்  இயந்திரத்தனமானது. வாழ்க்கையே   மாற்றமில்லாத   இயந்திர கதியில் ஓடுகிறது. இல்லை. ..வாழ்க்கை இயந்திரமானது   அல்ல.  அப்படி  ஒரு எண்ணம்  ஏற்பட சூழ்நிலையும்   அணுகுமுறையும்தான்   காரணம். வேலை  செய்பவன்  மாற்றமில்லை  என்று  ஏங்குகிறான். இல்லாதவன் வேலையே  இல்லை  என்று மறுகுகிறான். " கும்பி கூழுக்கு  அழுகிறது, குடுமி  பூவுக்கு   அழுகிறது."  பொருத்திய  பாகம்  முடிந்தது. மாற்று.

             பஞ்சசீலம்  பாண்டுங்  மாநாட்டில்  பிரஸ்தாபிக்கப்பட்டது  என்பார்கள். இங்குள்ள  பஞ்சசீலம்  என்ன தெரியுமா.. காலையில்  பஞ்ச இன் ,காபி  இடைவேளை, உணவு  இடைவேளை, தேநீர்  இடைவேளை, மாலையில்  பஞ்ச அவுட். இந்த முக்கியமான  ஐந்து குணங்கள் வழிமுறைகளாக   அப்பழுக்கற்று   கடை பிடிக்கப்படுகிறது. 

             இதோ வருகிறார் குட்டி  அதிகாரி. ஏதாவது   கேட்பாரோ. ...இல்லை. .அவருக்கு  வேண்டியது  ஒரு வணக்கம். அதுவும்  கூழைக்  கும்பிடாக  இருநதால்  இன்னும்  நல்லது.  இவர் அதற்குத்  தகுதி  உள்ளவரா.? மரியாதையும்  மதிப்பும்  கடைப்பொருளா   வாங்குவதற்கு. ? கொடுத்துப்  பெற  வேண்டியது  அல்லவா..?  மேலதிகாரி  என்ற  ஒரே  தகுதி  போறுமா. ? அடடா.. .. நீ கேள்வி  கேட்காத  இடமே  இல்லையா.? அவருக்கு  வேண்டிய  வணக்கத்தைக்  கொடுத்து  ஆளை  விடுவாயா.. அதில்லாமல்... .. மேலதிகாரிகள்  என்று  சொல்லும்போது  எத்தனை பேர். எத்தனை  வகை   இவர்களுக்கெல்லாம்  உண்மையிலேயே  என்ன  வேலை.. உற்பத்தி  ஏன்      பெருகவில்லை  என்று எல்லோரும்  கேட்கிறார்களே  தவிர  உண்மையான  காரண   காரியங்களை  ஆராய்ச்சி  செய்து  மாற்று  நடவடிக்கைகள்  எடுப்பதில்லை. எந்த   நேரத்திலும்  அவர்களைத்  தவிர   மற்றவர்கள்தான்  தவறுகளுக்குப்  பொறுப்பு.

            உண்மையிலேயே   உற்பத்தி  ஏன்  பெருகவில்லை.. அதிகாரிகள்   கூறும்   காரணங்கள் பணமுடக்கம், கச்சாப் பொருட்கள்  இல்லாமை,  ஊழியர்களிடம்   ஒழுங்கின்மை  இத்தியாதி   இத்தியாதி . ஆனால்  நடைமுறையில்  நாம்  பார்ப்பது  ஒரு  வருடத்தில்  ஐம்பது  சதவீதத்துக்கும்  மேல் கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில்தான்   உற்பத்தியாகிறது. கடைசி  இரண்டு  மூன்று  மாதங்களில் மட்டும் மூலதனமும்,  கச்சாப்பொருள்   தட்டுப்பாடும்   ஊழியர்களின்   ஒழுங்கீனமும்   மாயமாய்   மறைகிறதா.
யார் காதில்  பூசசூடுகிறார்கள் ? இந்த அவசர  அடிவேலையில்  பாதிக்கப்  படுவது   உற்பத்திப்  பொருளின்  முக்கிய  அம்சமான  தரமல்லவா

             இந்த நிலையில் நாம் பீற்றிக்கொள்வதில்  மட்டும் எந்தக் குறையும்  இல்லை.  தொழில் நுட்ப தேர்வு  பெற்ற, உயர் கல்வி  பயின்ற  வல்லுனர்களை  மூலாதாரமாக   உபயோகித்து  முன்னேறுகிறோம்  என்று முழங்குகிறோம். ஆனால் நாம்  காணும்  தொழில் நிலையும் ஒழுக்க  நிலையும்,  உற்பத்தி   நிலையும் நமக்குச்  சொல்லும்  செய்தியே  வித்தியாசமாக  அல்லவா  இருக்கிறது.  இங்கு  வெடிக்கும்  உண்மைதான்  எது. ? ஆராயலாமா.?

              எங்குதான்  பிரச்சினை. ?  அரசாங்க  நிலையிலா,  நிர்வாக நிலையிலா,  ஊழியர்கள் நிலையிலா, .?யார்தான்  இதற்குப்  பொறுப்பு.?  எங்குதான்  பாட்டில்நேக்
(BOTTLE  NECK ).? ஆம். . கேள்வியிலேயே   பதில் தெரிவதுபோல்  தோன்றுகிறதே. .சீசாவின்   கழுத்து  மேல்   பாகத்தில்தானே.. . புரிந்ததா..?  விவாதிக்கலாமா..?

              இதுவரை நான் என்ன செய்தேன்  என்று கேள்வி கேட்கிறார்   என்  மேற்பார்வையாளர . எண்ணிப்  பார்க்கிறேன் . ஏழு  செய்ய  வேண்டிய  இடத்தில்  எட்டு.  ஷொட்டு கொடுப்பாரா. ? ஊஹூம் ..! வீண்  எதிர்பார்ப்பு.. அனைவரையும்  இயக்கும்  ஆலைச் சங்கு  இனிமையாக  ஒலிக்கிறது.  ஆஹா .. வீடு  நோக்கி  ஓடு

    

35 comments:

  1. மனம் ஒரு குரங்கு என்பது ரொம்பச்சரி. அடங்குதா பாருங்க!

    ஒரு நாளில் இவ்வளவு சிந்தனையா? அறுபடாத சங்கிலிபோல் தொடராக வரும்போதே எங்கெங்கோ போய் வருகிறது....

    ReplyDelete
  2. இத்தனையும் ஒரு நிமிட நேரத்தில் நினைக்கப்பட்டிருக்கும். மனதின் வேகம் கட்டுக்கு அடங்காதது!

    ReplyDelete
  3. அவ்வப்போது எழுதியதன் தொகுப்பு இல்லையோ இது? மூன்று பதிவுகள் வரும் விஷயங்களை ஒரே பதிவில் அடக்கி விட்டீர்கள். மனதுக்கும் சிந்தனைக்கும் ஏது கட்டுப்பாடு?

    ReplyDelete

  4. @ துளசி கோபால்
    எட்டுமணிநேரப் பணியின் போது எழுந்த சிந்தனைகள் இன்னும் எவ்வளவோ. அன்று ஆங்கிலத்தில் எழுதி இருந்ததைத் தமிழில் வடித்தேன் வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  5. எண்ணத்தின் வேகத்திலேயே எழுத்தும் பரபரக்கிறது. பூவுக்கு அழும் குடு்மியை ரசித்தேன்!

    ReplyDelete

  6. @ கீதா சாம்பசிவம்
    மனதின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது. ஆனால் இச்சிந்தனைகள் spaced during eight hours நினைத்தது எல்லாம் எழுத்தில் வரவில்லை

    ReplyDelete

  7. @ ஸ்ரீராம்
    ஒரு நாளில் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களின் தொகுப்பே இது பதிவு பற்றிய சிந்தனைகள் எல்லாம் வலை உலகுக்கு வந்தபின் தான் வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete

  8. @ மோகன் ஜி
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி ஜி

    ReplyDelete
  9. அறுபதை எழுபதாக்கி என்னை உங்கள் இடத்தில் வைத்து HAL என்பதற்கு பதிலாக ISRO என்று கற்பனை செய்தேன். கிட்டத்தட்ட இதே மாதிரி எண்ணங்கள் தான் உருவாகின என்றாலும் அச்சமயத்தில் இந்த வேலை போலும் இல்லாத பலர் உள்ளனர் என்ற சின்ன தன்னுணர்வும் கிடைத்த வேலையை ஒழுங்காய் செய்து குடும்பத்திற்கு உதவிட வேண்டும் என்று கடமை உணர்வும் மற்ற எண்ணங்களை அடக்கின. ஆகவே மேலதிகாரிகளின் கட்டுப்பாடுகளுக்கு வளைந்து கொடுத்து ( ஆயில் இட்டு) பதவி உயர்வுகளும் பெற்று கடைசியில் அந்த மேலதிகாரியாகவே ஓய்வும் பெற்றேன். தாங்களும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.

    ஒரு சின்ன உதாரணம் சொன்னால் மறுக்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இலக்கு என்பதை பாரம் ஏற்றி செல்லும் மாட்டு வண்டியாக கற்பனை செய்யுங்கள். தொழிலாளர்கள் மாடு. ஓட்டுநர் மேலதிகாரி பாரம் இலக்கு அதாவது செய்து முடித்த பொருள். வண்டி என்பது நிறுவனம். இதில் எந்த ஒன்று பிழையானாலும் எல்லாம் பிழையாகிவிடும். மற்றவை நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்.

    தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்.

    --
    Jayakumar

    ReplyDelete

  10. @jk 22384
    /ஆகவே மேலதிகாரிகளின் கட்டுப்பாடுகளுக்கு வளைந்து கொடுத்து ( ஆயில் இட்டு) பதவி உயர்வுகளும் பெற்று கடைசியில் அந்த மேலதிகாரியாகவே ஓய்வும் பெற்றேன். தாங்களும் அவ்வாறே என்று நினைக்கிறேன்/
    மன்னிக்க வேண்டுகிறேன் ஜெயகுமார் சார் அம்மாதிரி இருந்திருந்தால் நான் எங்கோ போயிருப்பேன் என்னை நான் உணர்த்தியதால் இழந்தது ஏராளம் இருந்தும் என் தகுதிகளாலும் நேர்மையாலும் என்னை புறக்கணிக்கவும் முடியாமல் நான் ஓரளவு உயர்வு பெற்றேன் என்பதே உண்மை எண்ணங்கள் பணி பற்றி மட்டுமல்லவே என்னை ஓரளவு செதுக்கியவையும் இடம் பெற்றிருக்கின்றனவே வருகைக்கு நன்றி

    ReplyDelete
  11. இப்பதிவின் நடை மிக மிக
    வித்தியாசமாக, வேகமாக
    மிகவும் இரசிக்கும்படியாக

    நினைவுப் பயணம் விட்டு
    யதார்த்தம் வந்து மீண்டும
    தொடந்த இடங்களை
    மிகவும் இரசித்தேன்

    முடிவில் இயந்திரத்தனமாக
    உடல் மாறிப்போனதை
    சூசகமாகச் சொல்லிப் போனதையும்

    ReplyDelete
  12. சிந்தனைகள் மாறுபடும் ஆலையில் சங்கு ஊதும் போது.

    ReplyDelete
  13. ஏழு செய்ய வேண்டிய இடத்தில் எட்டு.. பாராட்டு கிடைக்குமா?..

    எட்டு என்ன?.. எண்பது செய்தாலும் பாராட்டு மட்டும் கிடைக்கவே கிடைக்காது!..

    ஆலைச் சங்கு இனிமையாக ஒலிக்கிறது. ..

    அது ஒன்று தான் மாதாந்திர சம்பளத்திற்கான நம்பிக்கை.. அவ்வளவு தான்..

    ஓடு.. ஓடு.. வீடு நோக்கி ஓட்டமாக ஓடு!..

    ReplyDelete
  14. படிக்கத் தொடங்கிய நான் ஒரே மூச்சில் படித்து முடித்த பிறகுதான் நிறுத்தினேன் ஐயா.
    காரணம் எழுத்தில் அவ்வளவு வேகம் பிரேக் பிடிக்காத கார் போல் பறந்து சென்றது வார்த்தைகள சில நேரங்களின் மனிதர்களின் எண்ணத்தின் வேகம் மின்னலையும் தோற்கடிக்கும் என்பார்கள் உண்மைதான் போலும்.

    ReplyDelete

  15. @ ரமணி.
    வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார் உடல்தானே இயந்திரத்தனமாக மாறுகிறது. எண்ணங்கள் இல்லையே

    ReplyDelete

  16. @ தனிமரம்
    ஆலையில் சங்கு ஊதும்போதுசிந்தனைகள் வேறு விதத்தில் பயணிக்கும் வீடு வாசல் பற்றாக்குறை இத்தியாதி இத்தியாதி வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @ துரை செல்வராஜு
    மாதாந்திர சம்பளத்துக்காகத் தான் உழைக்கிறோம் ஆனால் பணி புரியும் இடம் பலருக்கும் அனுகூலமாக இருப்பதில்லை. வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  18. @ கில்லர்ஜி
    வாயுவேகம் மனோவேகம் என்பார்களே அதுபோலா வருகைக்கு நன்றி இதன் மூலம் ஆங்கிலத்தில் எழுதி இருக்கிறேன் சுட்டியில் படித்தீர்களா வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  19. நல்ல பகிர்வு ஐயா....
    ரசித்தேன்...

    ReplyDelete

  20. @ டாக்டர் கந்தசாமி
    பாட்டில் நெக் பற்றிக் கருத்துசொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  21. @ பரிவை சே குமார்
    வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி சார்

    ReplyDelete
  22. உங்களுக்கோ உரித்தான பாணியில் எழுதியுள்ளீர்கள், சுவாரசியாமாக இருக்கிறது.
    ட்ரேசர்க்கு நடுவில் சிலை (உருவ) வழிபாடு, சிகிரெட், பஞ்சசீலம், கூழைக் கும்பிடு, கம்யூனிசம் என்று எல்லா இடத்தையும் டச் பண்ணிவிட்டீர்கள்.

    ஆலை சங்கொலி கேட்டு, வீடு திரும்பி ஓடு!! உண்மைதான். இன்றெல்லாம் வாரத்தின் முதல் நாளே வார இறுதி நாளைப் பற்றிய ஏக்கத்தில் ஓடுகிறது.

    ReplyDelete

  23. @ அருள் மொழி வர்மன்
    இன்னும் என்னவெல்லாமோ எண்ணங்கள் கம்யூனிஸ்ம் எங்கே என்றுதான் புரியவில்லை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  24. நான் மேலதிகாரிகளை அனுசரித்துப் போனேன் என்றால் அந்த மேலதிகாரிகளும் மிக மிக நேர்மையானவர்கள்.அவர்களுடைய நேர்மையை நான் கடைசி வரையிலும் கடைப்பிடித்தேன்.அதன் காரணமாக அவர் ஒய்வு பெற்ற பின் வந்தவருடைய பழி வாங்களால் கடைசி பதவி உயர்வு 15 வருடங்கள் கழிந்தபின்னரே அவர் போனபின்பு கிடைத்தது. பதவி உயர்வுக்காக நான் என் நேர்மையைக் கை விடவில்லை. எனக்கு ஜூனியர் எல்லாம் என்னை மிதித்து மேலே சென்றார்கள்.

    --
    Jayakumar

    ReplyDelete

  25. @ jk 22384
    உங்கள் பின்னூட்டத்தில் கண்ட ஆயில் இட்டு என்னும் வார்த்தைகள் என்னை வேறுவிதமாக நினைக்கச் செய்தது அனுசரித்துப் போவதற்கும் ஆயில் இடுவதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருப்பதாக எண்ணுகிறேன் என் மறு மொழி seems to have ruffled your feelings That was not intended மீள்வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  26. ஒரு நாளின் எண்ணங்கள் இவ்வளவா? ஆனால் மனோ வேகம் அளவிட முடியாது தான். உங்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் பதிவு.

    ReplyDelete
  27. கட்டுப்பாடற்ற மன ஓட்டங்களை மிகத்துல்லியமாகப் பகிர்ந்த விதம் அருமை.

    ReplyDelete

  28. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    மனோவேகம் அளவிடமுடியாததுதான் எழுதும் போது நினைவில் வந்த எண்ணங்கள் மட்டுமே இவை வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  29. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    கட்டுப்பாடற்ற மன ஒட்டங்கள் என்பது மிகச்சரி ஐயா வருகைக்கு நன்றி

    ReplyDelete
  30. எண்ணங்கள் அருமை.
    //அனைவரையும் இயக்கும் ஆலைச் சங்கு இனிமையாக ஒலிக்கிறது. ஆஹா .. வீடு நோக்கி ஓடு//


    ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் ஆலைசங்கு ஒலிக்கிறது, முன்னது வேலையை தொடர வேண்டுமே என்ற அலைப்பையும், பின்னது வீடு நோக்கி ஓட வேண்டும் என்ற நிம்மதியையும் குறிக்கிறது, அருமை.

    எத்தனை எத்தனை எண்ணங்கள்!

    ReplyDelete

  31. @ சூப்பர் டீல்
    என் வலைத்தளம் விளம்பரத்துக்காக அல்ல

    ReplyDelete

  32. @ கோமதி அரசு
    இரண்டு சங்கு ஒலிப்புகளுக்கு இடைப் பட்ட நேர சிந்தனையே பதிவு வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete
  33. கட்டுக்குள் அடங்காத சிந்தனைகள்......

    அவற்றை கட்டுப்படுத்த முயற்சித்தாலும் முடிவதில்லை!

    ReplyDelete

  34. @வெங்கட் நாகராஜ்
    எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் contour ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete