Friday, August 25, 2017

சீரியசான மொக்கைகள் ( விநாயகச் சதுர்த்தி )


                          விநாயகச் சதுர்த்தி சீரியசான மொக்கைகள்

                                           பிள்ளையார் செய்ய வேண்டுமா?
   மொக்கைகளுக்கிடையே சில சீரியசான செய்திகளையும் பகிர்கிறேன்  பதிவு சற்றே நீண்டு விட்டது குட் நாட் ஹெல்ப்
பண்டிகைகள் வரும்போது பதிவுகளைத் தேற்றி விடலாம்  என்று ஒரு பின்னூட்டத்தில் எழுதி இருந்தேன் கணேச சதுர்த்தி என்றதும் பிள்ளையார் குறித்த பலநினைவுகள். அவற்றில் சிறு வயதில் கேட்டவை பல. சில செய்திகளைக் குறிப்பிடும்போது அதன்  சோர்ஸ் நினைவுக்கு வருவதில்லை பல பெயர்களும்  நினைவுக்கு வருவதில்லை சரி  பிள்ளையார் குறித்த சிலகதைகள்
சிவ பெருமானும் பார்வதியும்  யானை உருவத்தில் காட்டில் சுற்றிக் கொண்டிருந்தபோது இணைந்ததில் பிறந்த குழந்தையே யானை முகன்  விநாயகன்
விநாயகப் பெருமான் ஒரு முறை தன் மூஞ்சூறு வாகனத்தில் ஏறி இந்திரன் சபைக்குப் போய்க் கொண்டிருந்தாராம். இவர் உடல் எடை தாங்காமல் மூஞ்சுறு தடுமாற  இவர் கீழே விழுந்து விட்டாராம். அதைப் பார்த்து சந்திரன் சிரிக்க இவர் கோபமடைந்து தன்னுடைய தந்தங்களில் ஒன்றைப் பிய்த்து சந்திரனைத் தாக்கினாராம். அதனால்தான் இவருக்கு ஏக தந்தன் என்னும் பெயர் வந்ததாம்.
வியாசர் மஹாபாரதம் சொல்லச் சொல்ல  விநாயகர் எழுதினாராம் அவ்வாறு எழுத தன் தந்தங்களில்  ஒன்றை முறித்து எழுது கோலாக உபயோகித்தாராம்
 ஒரு சமயம் பார்வதிதேவி குளிக்கச் செல்லும்போது தன் உடலிலிருந்து ஒரு அழுக்கை உருட்டி உருக் கொடுத்து அதைக் காவலுக்கு நிற்கச் சொன்னார். பரமசிவனுக்கும் வழி கொடுக்காத அந்த உருவத்தின் தலையை ஈசன் கொய்தார்.பிறகு தன் தவறு தெரிந்து தன் பூதகணங்களிடம் முதலில் எதிர்ப்படும் எந்த ஜீவராசியின் தலையாவது கொண்டுவரப் பணித்தார். அவர்கள் கொண்டு வந்த யானைத் தலையைப் பொருத்தி உயிர் கொடுத்தார். பிறகு குளித்து வெளியில் வந்த பார்வதி ‘இந்தப் பிள்ளை யார் ‘ என்று கேட்டாராம். அது முதல் இவருக்குப் பிள்ளையார் என்று பெயர் வந்ததாம். சிவனுடைய பூத கணங்களுக்குத் தலைவனாக நியமிக்கப் பட்டார்/ அதனால் கணபதி ( கணங்களுக்கு அதிபதி) என்று பெயர் வந்தது.
விநாயகரைத் தென்னாட்டில் திருமணம் ஆகாத பிரம்மசாரி என்று கூறுவர். கார்த்திகேயனை வள்ளி தேவானை மணாளன் என்பர். ஆனால் வட நாட்டில் கணேசருக்கு இரு மனைவி. முருகன் பிரம்மசாரி.
ஓம் என்னும் எழுத்துப்போல் இருப்பதால் ஓங்காரஸ்வரூபன் என்றும் பெயர்.
கதைகள் எப்படி இருந்தால் என்ன. ?மனித நம்பிக்கையே முக்கியம். கதைகளுள் இருக்கும் சாரத்தை மட்டும் கவனிப்போம்.. ஏழை எளியவரும் நினைத்த மாத்திரமே அருள் பாலிக்கும் கடவுள் என்பது நம்பிக்கை
பல்லவ அரசன் ஒருவர்  வதாபியை வென்று பில்லையாரைக் கொடு வந்ததாகப் படித்த நினைவு கேரளத்தில் கொட்டாரக்கராவில் இருக்கும் கண்பதி கோவிலில் எப்போதும் சூடாக அப்பம்  தயாராகிக் கொண்டிருக்கும்  பக்தர்கள் நிவேதனம்செய்வதற்கும்  உண்பதற்கும்      
தென் நாட்டில் விநாயகர் வழிபாடு அவரவர் வீட்டில் அவரவர் சக்திக்கேற்றபடி நடந்து வந்தது. மஹாராஷ்ட்ராவிலும் கர்நாடகாவிலும் கணபதி வழிபாடு பிரசித்தம். கடவுள் நம்பிக்கையைப் பயன் படுத்தி மக்களை ஒன்று திரட்டி , அவர்களுக்குள் சுதந்திர எண்ணங்களை எழுப்பியவர் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை indoctrinate  செய்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் துவங்கிய இந்த வழிபாட்டு முறை வளர்ந்து கூட்டு கணேச வழிபாட்டுக்கு ஒரு புதிய அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டது. தற்காலத்தில் அது தமிழ் நாட்டிலும் புகுந்து விட்டது. இதில் ஒரு சிந்திக்க வைக்கும் விஷயம் என்ன என்றால் பெரும்பாலான கூட்டு வழிபாடுகளை முன் நின்று நடத்துபவர்கள் ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்களாயிருப்பது தெரிகிறது.
மஹாராஷ்டிரத்தில் சுதந்திர உணர்வினை ஊட்டத் துவங்கிய இந்தக் கம்யூனிடி வழிபாடுகள் மத ஆதிக்கத்தை தூண்ட உபயோகப் படுத்தப் படுமோ என்னும் அச்சம் எழுகிறது.
எந்த ஒரு காரியம்  செய்யும்  முன்  விநாயகனை வழிபடவேண்டும்  என்பதும் ஒரு நம்பிக்கை
தேரில் சென்று கொண்டிருந்தவர் (அரசனோ சிவபெருமானோ நினைவுக்கு வரவில்லை) விநாயகனை வழிபடாததால் தேரின் அச்சு முறிந்து மேலே செல்ல முடியாமல் போன இடமே அச்சிறு பாக்கம் என்று அழைக்கப்படுகிறது
விநாயக வழிபாட்டில் பலரும்  கூறும் பாடல் ” “ பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலுங்கலந்துனக்கு நான் தருவேன்; கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே சங்கத் தமிழ் மூன்றும் தா.” இது போன்ற வேண்டுதல்கள் கடவுளிடம் பேரம்  பேசுவது போல் இருக்கிறது எல்லாம் தெரிந்தகடவுளுக்கு நமக்கு வேண்டுவது என்ன  தரக் கூடியது என்ன என்று தெரியாமலா இருக்கும்  நாம் உண்ண விரும்பியதைக் கடவுளுக்கு என்று படைத்து நாமே உண்பதும், நமக்கு வேண்டியது நடந்தால் காணிக்கை என்று உண்டியலில் பொன்னும் பண்மும் போடுவதும் கடவுளைக் குறித்த பக்குவப் பட்ட மனம் இல்லாதிருப்பதையே காட்டவில்லையா.?பண்டிகைகளும் விழாக்களும் உற்றமும் சுற்றமும் கூடி மகிழ என்பதால் உண்டு களிப்பதில் தவறிருக்காது. ஆனால் அதே சமயம் இல்லாதவருடன் பகிர்ந்து கொள்வது அதைவிடச் சிறந்ததல்லவா.?.
 இன்னொன்று. இன்ன கடவுளுக்கு இது பிடிக்கும் என்பது நமக்கு எப்படித்தெரியும்   பிள்ளையாருக்கு  கொழுக்கட்டையும்  சுண்டலும்   கண்ணனுக்கு சீடையும் முறுக்கும்  ராமனுக்கு பானகமும் முருகனுக்கு அப்பமும்  பொரியும்  ஐயப்பனுக்குப் பாயசமும் படைக்கிறோம் முன்பே ஒரு பதிவில் ஏன்  என்று காரணங்கள் கேட்டிருந்தேன்   கதைகளுக்கா பஞ்சம்  தெரிந்தவர்கள்பகிரலாமே
இன்னுமொரு கதை ஔவைப் பாட்டி கைலாயத்துக்குச் செல்ல  விநாயகன்  துணையால் ஒரே எட்டில்  அடைந்ததாகக் கேட்டிருக்கிறேன்  சேரமான்  அரசன்  முன்  செல்வதை கண்ட ஔவை அகவல் பாடி வேண்டியதால் அப்படி செல்ல நேரிட்டதாகவும் படித்தநினைவு  சில கதைகள்கோர்வை யில்லாமல் நினைவுக்கு வருகிறது  சரி இப்போது ஔவையின் அகவலுக்கு வருவோம்   என் மனைவியின்  தூண்டுதலில் விநாயகர் அகவல் படித்தேன்   எனக்குபொருள் விளங்கவில்லை. ஆனால் என்னைப் போல் பலரும்  பொருள்விளங்காமல் பாராயணம் செய்வது தெரிகிறது  ஔவையின்   அகவல் கீழே.  தெரிந்தவர்  அதற்குப் பின் வரும்  வரிகளை மட்டும் படிக்கலாம்
 சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்


வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!
 
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்


தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்


பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்


குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து


முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்


கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!
முதல் பத்து பதினைந்து வரிகள் விநாயகனைப் போற்றியும் புகழ்ந்தும் எழுதப்பட்டவை  அதன் பின்  வரும்  வரிகள்  எனக்குப் பொருள் விளங்கவில்லை  அங்கிங்கு தேடி பொருள் கற்றேன்  இருந்தாலும் விளங்காதவையே அதிகம்  தெரியாததைத் தெரியாது என்கிறேன்  தெரியாமல் வாய் மட்டும் ஏதோ சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை  கற்றதைப் பதிவிட்டிருக்கிறேன்  தெரியாதவர் தெரிந்து கொள்ளலாம்  இல்லை தெரியாமலேயே ஓசை எழுப்பலாம் அவரவர் பாடு  இருந்தும்  இதை நான்  ஏன்  எழுதுகிறேன்  என்றால்நம்பிக்கையோடு பாராயணம் செய்வோர் பொருள் தெரிந்து செய்தால் நன்று என்று தோன்றுகிறது  ஆனால் வேண்டப்படுபவை நம்மால் அடைய முடியுமா என்பதே பெரிய கேள்விக்குறி

சொற்களால் விபரிக்க முடியாத துரியம் எனப்படும் நிலையில் உண்மையான ஞானமானவனே, மா,பலா,வாழை ஆகிய மூன்று பழங்களையும் விரும்பி உண்பவரே, மூஞ்சூறினை வாகனமாக கொண்டவரே, இந்தக்கணமே என்னை ஏற்றுக்கொள்ள வேண்டி,தாயைப்போல் தானாக வந்து எனக்கு அருள் புரிபவரே, மாயமான இந்த பிறவிக்கு காரணமான அறியாமையை அறுத்து எறிபவரே, திருத்தமானதும் முதன்மையானதும் ஐந்து எழுத்துகளின் ஒலிகளின் சேர்க்கையினால் ஆனதுமான பஞசாட்சர மந்திரத்தின் பொருளை தெளிவாக விளங்க என்னுடைய உள்ளத்தில் புகுந்து, குரு வடிவெடுத்து மிக மேன்மையான தீட்சை முறையான திருவடி தீட்சை மூலம் இந்த பூமியில் உண்மையான நிலையான பொருள் எது என்று உணர்த்தி, துன்பமில்லாமல் என்றும் இன்பத்துடன் இருக்கும் வழியை மகிழ்ச்சியுடன் எனக்கு அருள் செய்து,கோடாயுதத்தால் என்னுடைய பாவ வினைகளை அகற்றி
வெளியாய் உபதேசிக்கக் கூடாத உபதேசத்தை எனது காதுகளில் உபதேசித்து, எவ்வளவு அனுபவித்தாலும் திகட்டாத ஞானத்தை தெளிவாய் எனக்கு காட்டி, தங்கள் இனிய கருணையினால் மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து பொறிகளினால் ஆன செயல்களை அடக்குகின்ற வழியினை இனிதாக எனக்கு அருளி, மேலே சொன்ன ஐந்து பொறிகளும் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து, நல்வினை தீவினை என்ற இரண்டு வினைகளையும் நீக்கி அதனால் ஏற்பட்ட மாய இருளை நீக்கி, 1) சாலோகம்2) சாமீபம் 3) சாரூபம் 4) சாயுச்சியம் என்ற நான்கு தலங்களையும் எனக்கு தந்து, 1) ஆணவம் 2) கன்மம் 3) மாயை என்ற மூன்று மலங்களினால் ஏற்படக்கூடிய மயக்கத்தை அறுத்து, உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களையும், ஐந்து புலன்களையும் ஒரே மந்திரத்தால் அடைக்கும் வழியினைக் காட்டி, 1) மூலாதாரம் 2) சுவாதிட்டானம் 3) மணிபூரகம் 4)அநாகதம் 5) விசுத்தி 6) ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களில் நிலை நிறுத்தி அதன் பயனாக பேச்சில்லா மோன நிலையை அளித்து,
இடகலை, பிங்கலை எனப்படும் இடது, வலது பக்க நாடிகளின் மூலம் உள்ளிழுக்கப்படும் காற்றானது நடு நாடியான சுழுமுனை வழியே கபாலத்தையடையும் மந்திர மார்க்கத்தைக் காட்டி, 1) அக்னி 2) சூரியன் 3) சந்திரன் ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படையாகச் சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து, குண்டலினி சக்தி உச்சியிலுள்ள சகஸ்ரதள சக்கரத்தை அடையும் போது உருவாகும் அமிர்தத்தின் நிலையையும் சூரிய நாடி, சந்திர நாடி ஆகியவற்றின் இயக்கத்தையும், குணத்தையும் கூறி, இடையிலிருக்கும் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் பதினாறு இதழ்களின் நிலையையும், உடலில் உள்ள எல்லா சக்கரங்களினதும் அமைப்புகளையும் காட்டி
உருவமான தூலமும் அருவமான சூட்சுமமும் எனக்கு எளிதில் புரியும்படி அருளி, மூலாதாரம் முதல் சகஸ்ரதளம் வரையிலான எட்டு நிலைகளையும் எனக்கு தெரிசனப்படுத்தி அதன் மூலம் உடலின் எட்டு தன்மைகளையும் புலப்படுத்தி கபால வாயிலை எனக்கு காட்டித் தந்து, சித்தி முத்திகளை இனிதாக எனக்க அருளி, நான் யார் என்பதை எனக்கு அறிவித்து, பூர்வ ஜென்ம கன்ம வினையை அகற்றி, சொல்லும் மனமும் இல்லாத பக்குவத்தை எனக்கு தந்து அதன் மூலம் எண்ணங்களை தெளிவாக்கி, இருளும் ஒளியும் இரண்டிற்கும் ஒன்றே அடிப்படையானது என்பதை உணர்த்தி, அருள் நிறைந்த ஆனந்தத்தை உன் காதுகளில் அழுத்தமாக கூறி
அளவில்லாத ஆனந்தத்தை தந்து, துன்பங்கள் எல்லாவற்றையும் அகற்றி, அருள் வழி எது எனக்காட்டி, சத்-சித் அதாவது உள்ளும், புறமும் சிவனைக் காட்டி, சிறியனவற்றிற்கெல்லாம் சிறியது பெரியனவற்றிற்கு எல்லாம் பெரியது எதுவோ அதை கணுமுற்றி நின்ற கரும்பு போல என் உள்ளேயே காட்டி, சிவவேடமும் திருநீறும் விளங்கும் நிலையிலுள்ள உள்ள உண்மையான தொண்டர்களுடன் என்னையும் சேர்த்து, அஞ்சக் கரத்தினுடைய உண்மையான பொருளை எனது நெஞ்சிலே அறிவித்து, உண்மை நிலையை எனக்குத் தந்து என்னை ஆட்கொண்ட ஞான வடிவான வினாயகப் பெருமானே மணம் கமழும் உமது பாதார விந்தங்கள் சரணம்.

கடவுளர் பற்றிய கதைகளில் சொல்லப் பட்ட பல சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் சக்கையை பிரதானமாக எண்ணுகிறோமோ என்னும் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பதிவு.
எல்லோருக்கும் அந்த விநாயகன் அருள் இருக்கட்டும்
,

                             -------------------------------------

34 comments:

  1. வணக்கம் ஐயா
    ஒரே பதிவில் எவ்வளவு கதைகள் இதில் சில கேட்டு இருக்கிறேன்.

    இனிய விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தெரியாத கதைகளையும் தெரிய உதவியதல்லவா வருகைக்கு நன்றி

      Delete
  2. Replies
    1. ரசிப்பீர்கள் என்று தெரியும் வருகைக்கு நன்றி

      Delete
  3. ரொம்ப நீளமான பதிவு. எதையும் மெகானிக்கலாகச் செய்யாமல் அர்த்தம் புரிந்து செய்தால், நல்லதுதான்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சற்றே நீளமாக இருந்தால்தான் என்ன அகவலைப் பொருள் தெரிந்து படிக்கலாம்தானே வாழ்த்துகளுக்கு நன்றி சார்

      Delete
  4. விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இதைவிட நீளமான பின்னூட்டம் எதிர்பார்த்தேன் வாழ்த்துகளுக்கு நன்றி மேம்

      Delete
  5. பேரன் இதே போல் வண்ண களிமண்ணில் செய்து இருக்கிறான் இதே போல் அவன் கைதொழில் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தபடி.
    இந்த பிள்ளையார் சதுர்த்திக்கு அவன் செய்த பிள்ளையார் தான்.

    சதுர்த்தி எண்ணங்கள், பொருள் விளக்கம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அதிக காசு கொடுத்து வாங்க வேண்டி இருப்பதைத் தவிர்க்கவும் கைவினையைப் பெருக்கவும் காணொளி வெளியிட்டேன் ஒருவராவது அது பற்றிக் குறிப்பிட்டது மகிழ்ச்சியே நன்றி மேம்

      Delete
  6. கதைகளில் சில கேட்டிருக்கிறோம்.

    விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. கேட்காதது இப்போது கேட்டு விட்டீர்கள் அல்லவா வாழ்த்துகளுக்கு நன்றி

      Delete
  7. எத்தனை கதைகள்... ஸ்வாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. கதைகளே பலரையு ம் கடவுள்பால் ஈர்க்கிறது பல கதைகளையும் நடந்த செய்திபோல் பாவிப்பவர்கள் நிறையவே வருகைக்கு நன்றி சார்

      Delete
  8. மொக்கைகள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் அவையும் சிறப்பாகவே அமைந்துள்ளன. இந்தாருங்கள் ஐயா, உங்களுக்கு பொக்கே (bouquet).

    ReplyDelete
    Replies
    1. மொக்கைகள் என்று நான் கருதியதையும் பொக்கே கொடுத்து பாராட்டியதற்கு நன்றி சார்

      Delete
  9. இப்போது வாக்கு அறுவடை செய்யத்தான் ,விநாயகர் பயன் படுத்தப் வருகிறார் என்பதை சரியாக குறிப்பிட்டு உள்ளீர்கள் :)

    ReplyDelete
  10. நான் அத்தனை ஓப்பனாகவா சொல்லி இருக்கிறேன் வருகைக்கு நன்றி ஜி

    ReplyDelete
  11. தெலு(ங்)கில் விவரித்த காணொளி இப்பொழுதுதான் பார்த்தேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஒரு கைவினை காணொளிக்கு மொழி தேவையா / முக்கியமா ஜி

      Delete
  12. புராணத் தகவல்கள், விநாயகர் அகவலும் அதன் பொருளும் என நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  13. பாராட்டுக்கு நன்றி மேம்

    ReplyDelete
  14. இந்த காணொளியை முன்பே பார்த்திருக்கிறேன். எங்கள் ஊரில் ஏரிக்கரைக்குப் போய் களிமண் எடுத்துவந்து பிள்ளையார் செய்வதுண்டு. ஆனால் சென்னை போன்ற இடத்தில் சாதாரண மண்ணிற்கே பஞ்சம் என்கிறபோது. களிமண்ணிற்கு எங்கே போவது அதனால்தான் அதிக விலையானாலும் காசு கொடுத்து வாங்கவேண்டியுள்ளது.

    பிள்ளையாரைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளை பகிர்ந்தமைக்கு நன்றி! நீங்கள் சொல்வதுபோல் லோகமான்ய பால கங்காதரத் திலகர். கூட்டுப் பிரார்த்தனை என்று கூறி மக்களை ஓரிடத்தில் கூட்டி சுதந்திர உணர்வை ஊட்டினார்.

    ஆனால் இப்போதோ விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் தெருவுக்கு தெரு மிகப்பெரிய சிலகலை வைத்து வழிபாடு செய்துவிட்டு, நீரில் அவைகளை கரைக்க செல்வதை ஒரு சடங்குபோல் ஆக்கி காவல் துறையினர் தலையிடும்படி செய்வதால் இது மதக்கலவரத்தை தூண்டுவதற்கு வழி வகை செய்யுமோ என்ற பயம் வந்துவிட்டது.

    இன்னொன்று. இன்ன கடவுளுக்கு இது பிடிக்கும் என்பது நமக்கு எப்படித்தெரியும் என்று வினவியிருக்கிறீர்கள். நமக்கு பிடித்த பலகாரங்களை கடவுளை வழிபடும்போது செய்து சாப்பிடுவது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே.

    சீரியசான மொக்கைகள் என தலைப்பிட்டு விட்டு சிந்திக்கக்கூடிய கருத்துக்களை சொன்னதக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. காசுகொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு இந்தக் காணொளி பயன்படலாம் எம்மதமு ம் சம்மதமே என்று இருப்போரை உசுப்பி விடும் சங்கதிகளுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லையே வருகைக்கு நன்றி ஐயா

      Delete
  15. இன்ன கடவுளுக்கு இன்ன தீனி பிடிக்கும் என்பது வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே? (சும்மா சொல்லி வைப்போம்)

    ReplyDelete
  16. யாருக்கும் சொல்லத்தோன்றவில்லையே

    ReplyDelete
  17. விநாயகர் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேர்த்துத் தந்து அசத்திவிட்டீர்கள் . பாராட்டுகிறேன் . பிள்ளையார் சுழி ?

    ReplyDelete
  18. எனக்கு பலரும் ஏதோ பாராயணம் செய்கிறார்கள் அதன் பொருள் பற்றி சிந்திப்பதே இல்லை என்று தோன்றியதுஅங்கும் இங்கும் தேடிப்பிடித்து அகவலுக்குப் பொருள் எழுதி விட்டேன் பாராட்டுக்கு நன்றி பிள்ளையார் சுழி?தெரியவில்லை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  19. suvaiyana thagalvalgaL. Ive also heard, goddess parvathi used to make ladooos and modhaka for Ganesha and hence he was fondof them. Probably a sweet more in practice when they were around in Himalayas!

    ReplyDelete
    Replies
    1. கதைகள் என்றுமே சுவாரசியமானவையே அதுவும் கடவுள் சார்ந்த கதைகள் சான்சே இல்லை வருகைக்கு நன்றி மேம்

      Delete
  20. கல்லிலே கலை வண்ணம் கண்டான் என்று ஒரு பாடல் உண்டு.இங்கே மண்ணிலே மிளிரும் கலை வண்ணம் அற்புதம்!//கடவுளர் பற்றிய கதைகளில் சொல்லப் பட்ட பல சத்துக்களை எடுத்துக் கொள்ளாமல் சக்கையை பிரதானமாக எண்ணுகிறோமோ என்னும் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பதிவு.//
    அப்படி இல்லை. உணர்ந்த எல்லோரும் தாம் உணர்ந்த விஷயங்களை வெளியே கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    பிள்ளையார் சுழி பற்றி மகா பெரியவர் தெய்வத்தின் குரலில் எழுதி இருக்கிறார். சுகி சிவம் விநாயக சதுர்த்தி அன்று தோலை காட்சியில் விளக்கினார்.

    ReplyDelete
    Replies
    1. அதுதான் தெரியவில்லை என்று கூறிவிட்டேனே தெட்ரிந்தவர்கள் அதுபற்றிக் கூறாமல் அவர் சொன்னார் இவர் சொல்லியிருக்கிறார் என்று சொல்லாமல் விளக்கமாக இல்லாவிடினும் சுருக்கமாகவாவது சொல்ல வேண்டாமா எல்லோருக்கும் உணர்த்த வேண்டும் என்றில்லை புரியவில்லை

      Delete