Tuesday, August 9, 2022

நான் யார் 12

 

      சாந்தியைக் காண்பதிலேயே மகிழ்ச்சி அடைந்த நான், அவளுக்கு என் மேல் விருப்பம் உள்ளதா என்று அறிவதில் குறியாயிருந்தேன்.என் எண்ணத்தை அவர்கள் குடும்ப நண்பனான சாமிநாதனிடம் கூறினேன்.அவனும் எனக்கு உதவுவதாக வாக்களித்தான்.சாந்தியின் அக்கா, ( அவள். பெயர் அம்மணி என்னும் சரோஜா ) அவள் திருமணம் முடிய வேண்டும். திருமந்த்துக்கு நான் அவசரப் படவில்லை. என் எண்ணம் முழுவதும் திட்டமிட்டுச் செயல்படுத்துவதில்தான் இருந்தது. நான் எப்படியும் வெற்றியடைவேன் என்ற நம்பிக்கைஇருந்தது. இரு வீட்டாருக்கும் பரஸ்பரம் போக்குவரத்து இருந்தது. என்னைப் பற்றிய அவர்கள் அபிப்பிராயம் நான் பொறுப்பாக இருக்கிறேன் என்பதாக உயர்ந்திருந்தது..ஒரு முறை குடும்பத்துடன் லால்பாக் சென்றிருந்தோம். எனக்கு ஒரு ப்ளாக் அண்ட் வைட் படம் பிடிக்கும் காமெரா கிடைத்தது. படம் பிடிப்பதில் எனக்கு ஆர்வம் இருந்தது. லால்பாக் பயணத்தில் எல்லோரையும் படம் பிடிக்கும் சாக்கில் சாந்தியையும் என் அம்மாவையும் சேர்ந்து படம் பிடித்தேன்.அதில் இருவரது படங்களையும் தனித்தனியாக என்லார்ஜ் செய்து வைத்துக் கொண்டேன். அவளுடைய படத்தின் பின்னே ஒரு கவிதை எழுதி, அதை என் தம்பி விச்சுவின் மூலம் அவளிடம் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்தேன். எங்களுக்கு நடுவே இவன் தூது. என் எண்ணங்களை தெரியப் படுத்த உதவியது. விச்சுவைக் கண்டாலே பயம் வரும் என்று பிற்காலத்தில் சாந்தி கூறுவாள்..அவளுடைய மாமாவின் நண்பன், மாமாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயம்,அவளுக்கே ஒன்றும் சரியாகத் தெரியாத ஒரு வயசு, எல்லாமாக ஏதோ ஒரு கன்ஃப்யூஷனில்தான் இருந்திருக்க வேண்டும். பிடிக்கவில்லை என்று சொல்லாதவரை ,நான் சம்மதம் என்று எண்ணியே என் முயற்சிகளைக் கூட்டினேன்.இதன் நடுவே என் நண்பன் ரவி, சாந்தியின் அக்கா மீது அன்பு கொண்டிருந்தான். அவனுக்கு என்னைப்போல் அவர்கள் குடும்பத்தில் பழக வாய்ப்பிருக்கவில்லை. அவனுக்கு நான் யாரை விரும்புகிறேன் என்பதில் ஆவல் இருக்க, என்னைக் கேட்டே விட்டான். என் பதில் தெரிந்த பிறகே அவன் மனசஞ்சலம் அகன்றது. எனக்கு அவர்கள் திருமணம் நடைபெறுவதில் அக்கறை இருந்தது. ரவி என் நண்பன். சரோ சாந்தியின் அக்கா.இவர்கள் திருமணம் முடிந்தால் எனக்கு லைன் க்ளியர் ஆகும். ஆக அவர்கள் திருமணத்தில் நான் அக்கறை காட்ட ஆரம்பித்தேன்.

 

       இந்த நிலையில் ரவியின் அப்பாவுக்கும் அவனுக்கும் நிறைய மனஸ்தாபங்கள் இருந்தன. காரணங்கள் எனக்குத் தெரிய வில்லை. தெரிந்து கொள்ள நான் அக்கறையும் காட்டவில்லை..ஆனால் ஸ்ரீதரனுக்கு ரவி மேல் நல்ல எண்ணமே இருக்கவில்லை. தந்தைக்கு அடங்காதவனுக்கு எப்படி நம் வீட்டுப் பெண்ணைத் திருமணம்செய்வது என்று கலியாணப் பேச்சுக்கே இடமில்லை என்பதுபோல் இருந்தான்.இந்நிலையில் ரவியின் அப்பாவே திருமணப்பேச்சை எடுத்தால் ஸ்ரீதரனின் ரப்பை எதிர்கொள்வது எளிதாக இருக்குமென்று தோன்றியதால் ரவியின் அப்பாவிடம் நான் நிறையவேப் பேசினேன் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அன்பால் கட்டுண்டிருந்தனர். எப்படியொ அவர் திருமணம் குறித்துப் பேசினார்.சாமிநாதனும் கூடவே இருந்து கிரியா ஊக்கியாய்ப் பணி புரிந்தான்.ஸ்ரீதரனுக்கும் பெரிதாகக் கூற எதுவுமிருக்கவில்லை.திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு கே.ஜீ/எஃப்- ல் நடந்தது. நான் ஒரு நாள் முன்னதாகவே அங்கே சென்றேன். அந்தக் கலியாணத்துக்கு முதல் நாள் என் மூக்குக் கண்ணாடியின் ஃப்ரேம் உடைந்து அன்றிரவே அதை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.இல்லையென்றால் கண்பார்வைக் குறைவால் மிகவும் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப் பட்டு எல்லா மகிழ்ச்சியையும் இழந்திருப்பேன்.

 

      திருமணம் இனிதே நடந்து முடிந்தது.இந்தத் திருமணத்தில் நடந்த இன்னொரு விஷயம் சுவாரசியமானது.ரவியின் குறைகளையே கூறிவந்த ஸ்ரீதரனுக்கு ரவியின் தங்கையைப் பிடித்துப் போய் ,ரவியின் தந்தைக்கு ஸ்ரீதரனைப் பிடித்துப் போயது 

இன்னொரு திருமணத்துக்கு அடிகோலியது. விளைவு ஸ்ரீதரன்-லீலா திருமணம்.ஆக இரண்டு திருமணக்களுக்குப் பிறகு எனக்கு வழி திறந்தது.

 

       இடைப்பட்ட காலங்களில் என் மனதில் எப்போதுமே சாந்தியின் நினைவே இருந்து வந்தது. அவளைக் கண்டால் மகிழ்ச்சி. அவளைக் காண்பதற்கென்றே 

இடைப்பட்ட காலங்களில் என் மனதில் எப்போதுமே சாந்தியின் நினைவே இருந்து வந்தது. அவளைக் கண்டால் மகிழ்ச்சி. அவளைக் காண்பதற்கென்றே சிவாஜிநகர் வருவேன்..காணாவிட்டால் ஏக்கமாக இருக்கும். அவள் இருந்த சூழ்நிலை, வளர்க்கப்பட்ட விதம், எல்லாம் சேர்ந்து, அவளுக்குப் புற உலக எண்ணங்களே ஏதுமில்லாமல் இருந்தது. BLESSED ARE THOSE THAT ARE IGNORANT என்பதற்கேற்ப இருந்தாள்.. இருந்தாலும் அவள் என்னுள் ஏகப்பட்ட சலனங்களைத் தோற்றுவித்தாள். ஒரு சமயம்,நண்பர்களிடையே ஏற்பட்ட சில சம்பாஷணைகளில் பெண்களைப் பற்றிய என் எண்ணங்கள் கேட்கப்பட்டது. நான் அப்போது கூறினேன்.என் மனம் அல்லது உள்ளம் ஒரு நெகடிவ் ஃபில்ம் போன்றது ஒரு முறை அதை எக்ஸ்போஸ் செய்து விட்டேன். இன்னொரு பிம்பம் அதில் பதியாது. காதல் என்பது இரண்டு மனங்கள் ஒருமித்து உள்ளத்தில் சங்கமமாவதில் உணரப் பட வேண்டும். என் மனசை நான் திறந்து விட்டேன். அவள் மனசு என்னிட மிருந்தது., எனக்குத் தெரிந்தது. ஆனால் அவற்றைக் காண்பிக்கும் அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. என் கடிதங்களுக்கு அவள் பதில் மிகவும் பயத்துடனே இருக்கும். அதுவும் நான் கோபப் பட்டுவிட்டேன் என்று தெரிந்தால் மட்டுமே ஓரிரு வரிகள் வரும். அதிலும் காதல் தெரியாது. பயமே தெரிந்திருக்கும். அவளுடைய இந்த சுபாவம் ஒரு பக்கம் எனக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் என்னை நிராகரிக்கவில்லை என்ற எண்ணம் தெம்பைக் கொடுத்தது. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.? எண்ணித் துணிந்து விட்டேன். எப்படியும் அவளை மணப்பதென்று. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். நான் அம்மியை நகர்த்தவில்லை. என் அன்பை நகர்த்தினேன். ஒரு முறை அவள் வாட்ச் ஃபாக்டரியில் இருந்து வரும்போது, ஓல்ட் புவர் ஹௌஸ் ரோடில் அவள் முன் சைக்கிளை நிறுத்தி நேராகவே ஒரு கடிதம் சேர்ப்பித்தேன். நான் சைக்கிளில் போவது பார்க்கப் பிடிக்கும் என்று பிறிதொரு நாளில் ( மணமான பிறகு )சாந்தி கூறினாள்.ஒரு முறை அவள் என்னை HMT-க்கு மதிய உணவு இடைவேளையில் வந்து சந்திக்கக் கூறினாள். அதன்படி நான் சென்று பார்த்துப்பேசினேன்.என்ன பேசினோம் என்பது எதுவும் இப்போது நினைவுக்கு வரவில்லை.நிச்சயமாகக் காதல் வார்த்தைகள் கிடையாது

 

              இதனிடையே கலியாணப் பேச்சை எடுத்தாலே அம்மாவுக்குப் பிடிக்காமல் போனது. என் கடிதத்தைக் கொண்டுபோகும் விச்சுவை ஒரு முறை கடிந்து கொண்டு, அவர்கள் எதிர்ப்பைக்காட்டினார்கள். நான் திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டால் அவர்கள் நிர்க்கதியாக விடப் படுவார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருந்தது.எனக்கும் தொழிற்சாலையில் பிரச்சினைகள் அதிகமாக இருந்தது..நண்பர்கள் பலர் பதவி உயர்வு பெற, எனக்குக் கிடைக்குமா என்றே தெரியாமல் இருந்தது. சாந்தியின் வீட்டிலும் திருமணத்துக்குக் காலம் தாழ்த்துவதையே விரும்பினார்கள். கலியாணம் செய்ய வேண்டுமென்றால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதனால் ஸ்ரீதரன் ஆர்வம் காட்டவில்லை.

 

       எனக்கு இதையெல்லாம் எழுதும்போதுஎன்னென்னவோ எண்ணங்கள் தோன்றுகிறது. அந்தக் கால நிகழ்வுகள் நினைவில் கோர்வையாக வருவதில்லை. நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு திரைப் படம். முத்துராமன், தேவிகா, கல்யாண்குமார் நடித்தது. அப்போது வெளியான சமயம் குமுதம் பத்திரிகையில் ஒரு போட்டி, பெண்களுக்கு அறிவித்திருந்தனர். கதாபாத்திரங்களை விமரிசனம் செய்யக் கேட்டிருந்தார்கள்.நானும் போட்டிக்கு எழுதினேன். அது பெண்களுக்கானது என்பதால் சாந்தியின் பெயரில் எழுதி அனுப்பினேன். தேர்வு செய்யப்பட்ட இரண்டு கட்டுரைகளில் ஒன்று நான் எழுதியது. அதற்குப் பரிசாக ரூ.25-/ கிடைத்தது. சாந்தியின் பெயரில் அனுப்பும் முன்பே அவர்களிடம் கூறி இருந்தேன். பரிசுத் தொகை என் அன்பளிப்பாக அவளுக்கு இருக்கட்டும் என்று நான் கூறிக் கொடுத்தது,அவர்கள் எல்லோருக்கும் என் ஆசையையும் காதலையும் உணர்த்தி இருக்க வேண்டும்..

 

       இடைப்பட்ட காலங்களில் நான் சாந்திக்கு விடாது கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தேன்.அவளும் அவ்வப்போது சுருக்கமாக பயத்துடன் ஏதாவது பதில் எழுதுவாள். இந்தக் கடிதங்களை எல்லாம் நான் எடுத்து வைத்திருந்தேன்.அவளும் வைத்திருந்தாள்.திருமணமாகிப் பல நாட்களுக்குப் பிறகு,நாங்கள் திருச்சியில் இருந்தபோது, அவை எல்லாவற்றையும் படித்துப் பார்த்து பைத்தியக் காரத்தனமாக தோன்றியதால் கிழித்துப் போட்டு விட்டோம். இப்போது அந்த செயலுக்கு மனசு மிகவும் வருந்துகிறது. என்னுடைய பழைய டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தபோது அவளுக்கு நான் எழுதிய கடிதம் ஒன்றின் நகல் இருந்தது. அதை இப்போது படித்துப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இன்றைக்கும் அவளுக்கு தமிழில் மோகமோ, பாண்டித்தியமோ கிடையாது. எழுதப் படிக்கத் தெரியும் அவ்வளவுதான்.அப்படிப் பட்டவளுக்கு, அந்தக் காலத்தில் ஒரு காவிய நாயகனின் பாணியில் நான் எழுதி இருந்த கடிதம் பொருளிலும் நடையிலும் நான் என் எண்ணங்களைத் தெரிவித்திருந்த விதம், அப்போதைய அவளுக்கு சத்தியமாகப் புரிந்திருக்காது.நான் ஏதோகாதலில்பிதற்றி இருக்கிறேன் என்று எண்ணாதிருந்தால் சரி.

 

       இப்போது எண்ணிப் பார்த்தாலும் ஒன்று நிச்சய மாகத் தெரிகிறது. நான் சாந்தியிடம் காதல் வயப் பட்டிருந்தது என்னவோ உண்மை. காதல் என்றால் ஏனோதானோ காதல் அல்ல.பித்துப் பிடித்தலைந்த காதல். இருந்தாலும் நான் என் காதலைத் தெரிவிதிருந்த போதெல்லாம் அதிலொரு கண்டிப்பு இருக்கும். அவள் என்னை மறுக்க முடியாது என்ற தோரணை இருக்கும். அப்படியே மறுத்தாலும் நான் ஒன்றும் தவறாக எண்ணிக் கொள்ளப் போவதில்லை, என்பது போல் இருக்கும். ஒரு முறை கூட அவள் என்னிடத்தில் காதல் இல்லை என்ற விதத்தில் நடந்து கொண்டது இல்லை.எது நடந்தாலும் வீட்டில் சொல்லி விடுவாள் என்றே தோன்றியது.அவள் வீட்டிலும் எதிர்ப்பு இருக்கவில்லை. ஆனால் நாட்கள் கடத்த விரும்பினார்கள். இந்த நிலை எனக்குச் சரியாகப் படவில்லை. வீட்டில் அம்மா அக்கறை காட்டவில்லை. அவர்கள் பயம் அவர்களுக்கு.என்னைப் புரிந்து கொண்ட அளவு அவ்வளவுதான் ..அவர்களும் காலம் கடத்தவே விரும்பினார்கள். அவர்களுடைய பிள்ளைகள்  அவர்கள் கால்களில் நிற்கத் தொடங்கும் வரை காலம் தாழ்த்த விரும்பினார்கள். சாந்தியின் வீட்டில் அவளுக்குக் கிடைக்கும் ஸ்டைபெண்ட் பணம் மணம்  முடித்துக் கொடுத்து விட்டால் போய்விடும் என்றும் கூடவே அம்மணியின் கலியாணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க வேண்டும் என்ற நிலை.இதையெல்லாம் யோசித்தபோது எனக்கு என் திருமணம் நடந்துதான் ஆக வேண்டும் என்ற எண்ணம், இந்தக் காரணங்களெல்லாம் அதை நடக்க விடாதபடி தடுக்க கூறப்படுவதாகவே தோன்றியது. ஒரு நாள் சாந்தி வேலை முடித்து வரும்போது என்னை டபுள் ரோடில் சந்திக்க வேண்டும் என்று ஏற்பாடு செய்தோம். எப்படி அவளிடம் தெரிவித்தேன் எப்படி அவள் அதற்கு உடன்பட்டாள் என்று எதுவுமே நினைவுக்கு வருவதில்லை. ஆனால் முன்னேற்பாடுகள் படி நாங்கள் டபுள் ரோடில் சந்தித்தோம். அவள் அவளுடைய ஃப்ரெண்ட் ஒருத்தியுடன் வந்தாள். என்னிடமவளை ஒப்படைத்துவிட்டு அந்த ஃப்ரெண்ட் சென்று விட்டாள். சுமார் ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம்வரை பேசிக்கொண்டிருந்தோம். காதல் வார்த்தைகளோ அன்பு மொழிகளோ அல்ல. அவளைக் கண்டதும் அருகில் இருந்த ஒரு கடைக்குச் சென்று சில லாஸெஞ்செஸ் மிட்டாய்கள் வாங்கிக் கொடுத்தேன். திருமணத்துக்கு எதிர்ப்போ, காலங்கடத்தலோ, ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என்று தீர்மானமாகக் கூறினேன். அப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும், காலங்கனிந்து வரும்போது வீட்டில் சொல்லிக் கொள்ளலாம் என்றும் கூறினேன். அதற்கு அவள் அவளுடைய தாயிடம் என் அம்மாவைப் பேசச் சொல்லிநிச்சயதார்த்தம் நடத்திக் கொள்ளலாம் என்று கூறினாள். அவளுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்துஎனக்கு முடிவைத் தெரிவிக்க வேண்டினேன்.

 

       காதலைப் பற்றித் திரைப் படங்களிலும் ஊடகங்களிலும் காட்டப் படும் எந்த ஒரு நிகழ்வும் எங்கள் நிஜ வாழ்வில் நடக்கவில்லை. ஏன். திருமணத்துக்கு முன் சாந்தியை நான் தொட்டது கூட இல்லை.ஆனால் அவளை நான் உருகி உருகிக் காதலித்தது மட்டும் உண்மை. சில நாட்கள் கழித்து சாந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவள் ,அவளது தாயிடம் எல்லாவற்றையும் கூறியதாக எழுதி இருந்தாள். அதாவது பதிவுத் திருமண எண்ணம் தவிர்த்து எல்லாவற்றையும் என்று எழுதி இருந்தாள். அவளுடைய தாயிடம் என்னை வந்து பேசுமாறு கேட்டிருந்தாள். என் தாயார் இருக்கையில் அவர் இல்லாமல் நான் திருமணம் பற்றிப் பேசுவது எனக்குச் சரியாகப் படவில்லை..என் தாயை அவமதிப்பதுபோல் ஆகும். என்னவெல்லாமோ நடந்து கடைசியில் என் அம்மா, பெரிய அண்ணா, மன்னி, சின்ன அண்ணா, மன்னி, என் தம்பிகள் என்று எல்லோரும் ஒரு நாள் சாந்தியின் வீட்டுக்குச் சென்று, முறையாகப் பெண் பார்த்து நிச்சய தார்த்தமும் ஒப்புக் கொள்ளப் பட்டது. நான் எப்படியும் 1964-ம் ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விட வேண்டும் என்பதில் குறியாய் இருந்தேன். நவம்பர் 8-ம் தேதி கல்யாணம் நடத்தலாம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஆனால் அதற்குத் தேவையான பணம் புரட்டுவதில் அவர்கள் மிகவும் கஷ்டப் பட்டார்கள். ஸ்ரீதரன் எந்த உதவியும் செய்வதாகத் தோன்றவில்லை.அதனால் திருமணம் தள்ளிப் போகும் நிலை வந்தவுடன், நான் சாந்தியின் தாயாரிடம் திருமணத்துக்கு வேண்டிய பணத்தை நான் கடன் வாங்கித் தருகிறேன், நிதானமாகத் திருப்பலாம் என்று ஒரு கூக்லி போட்டேன். அது ஸ்ரீதரனுக்குத் தெரிந்தவுடன் திருமணப் பொறுப்பேற்க ஒப்புக் கொண்டான். திருமணம் நடந்தாலும் சாந்தியின் சம்பளப் பணத்திலிருந்து அவர்களுக்கு உதவுவாள் என்றும் வாக்குக் கொடுத்தேன். திருமணத்துக்கு என் பக்கச் செலவுக்காக, ரூ.600-/ வரை கடன் வாங்கினேன். திருமணத்தேதி நவம்பர் 11- ம் நாளுக்கு மாற்றப் பட்டது. மஞ்சள் சரடு தாலியாகவா, பொன்னால் செய்த தாலியா எந்த முறைப்படி திருமணம் என்றெல்லாம் வேண்டாத விவாதங்கள் நடந்தன. சாதி மாறிய திருமணத்தில் அதுவும் காதல் வயப்பட்டு செய்யும் திருமணத்தில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு உடன்பாடில்லை. சுருங்கச் சொன்னால் சொன்னபடி 11-ம் தேதி நவம்பர் மாதம் 1964-ம் வருஷம் என்னுடைய 26-ம் பிறந்த நாளில் எங்கள் திருமணம் நிகழ்ந்தது. திரை படங்களிலும் கதைகளிலும் சுபம் போட்டு திருமணத்தோடு எல்லாம் முடிந்து விடும். ஆனால் நிஜ வாழ்க்கையில் திருமணத்தன்றுதான் ஒரு புது வாழ்வும் புது சவால்களும் எதிர் கொள்ளப் படுகின்றன. சகிப்புத் தன்மையும் விட்டுக் கொடுக்கும் மனோபாவமும் உறுதியும் உண்மையும் இல்லாவிட்டால் திருமணங்கள் சிறப்பதில்லை. இதோ ஆயிற்று ,எங்கள் திருமணம் முடிந்து 56-வது வருடம் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்னுடைய வலைப் பூவில் “ஆசி கொடு இறைவா, “ என்றும் “ பாவைக்கு ஒரு பாமாலை.என்றும் கவிதைகள் எழுதி உள்ளேன்.அவை உண்மையில் உணர்ந்து எழுதியவை. அது கமலா என்றும் பேபி என்றும் அழைக்கப் பட்டு வந்த என் மனைவிக்கு எங்கள் திருமண நாள் முதல் இரவில் சாந்தி என்று பெயர் சூட்டினேன். அவள் வரவு எங்கள் வாழ்வில் சாந்தி நிலவ உதவ வேண்டும் என்றேன். அந்த நாளிலேயே வாழ்க்கையில் நிறைய அடிபட்டு விட்ட நான் கவன்; வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாத பெண்ணாக என் மனைவி, வாழ்க்கை வண்டியை இழுக்கத் தயாரானோம்.

 

              நான் எதிர்பார்த்தபடியே எங்கள் திருமணம் நடந்ததே தவிர,அதனால் பிரச்சனைகள் தீரவில்லை. என் தாயாருக்கு இந்தத் திருமணம் தவிர்க்க முடியாமல் நடத்தப் பட்ட ஒன்றாகவே இருந்தது. எங்கே நான் என் மனைவியுடன் சேர்ந்து அவர்களைத் தவிக்க விட்டு விடுவேனோ என்ற பயத்தில் இருந்தார்.இருந்தாலும் வீட்டில் அவர்கள் வைத்ததே சட்டம் என்ற நிலைப்பாட்டை உறுதிப் படுத்துமாறு செயல்கள் புரிந்தார். புதுமணத் தம்பதிகள் எங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது. எங்களுக்குத் தனிமையில் ஏதாவது பேசவோ பகிர்ந்து கொள்ளவோ முடியாத நிலை. அம்மாவோடு நான்கு தம்பிகளும் கூட ; சின்ன வீடு. சந்தர்ப்பங்களுக்கு ஏங்க வேண்டும். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள நிறையப் பேச வேண்டும்.ஆனால் அது மட்டும் ஒன்று நடக்காததாக இருந்தது. அவளுக்கு எச்.எம்.டி.யில் ட்ரெயினிங்.ஸ்டைபெண்ட் ஆக வரும் பணத்தில் பஸ் சார்ஜ், இத்தியாதி வகைகள் போக வரும் பணத்தை அம்மாவிடம் கொடுக்க வேண்டும்.என்ற எதிர்பார்ப்பு. அவர்கள் வீட்டில் திருமணத்துக்கு வாங்கிய கடன்களை அடைக்க அவள் சம்பளத்தை நான் கூறியிருந்தபடி எதிர் பார்க்க ஆரம்பிதார்கள். ஒரு கோல்ட் வார் நடந்து கொண்டுதான் இருந்தது. சாந்திக்கு எதுவுமே புரியாத ஒரு வயது. எந்த அனுபவமும் கிடையாது. ஏதாவது பேசினால் அழுகைதான் வரும். காலையில் வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பினால் வேலைகள் எதிர்பார்த்து நிற்கும். சுருங்கச் சொன்னால் நான் திருமணத்துக்கு அவசரப் பட்டு விட்டேனோ என்று தோன்றும். இருந்தாலும் என் செயல்களிலும் கணிப்பிலும் எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு. நிகழ்ச்சிகள் கட்டுக்கடங்காமல் போகு முன்பே நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அத்தியாவசியம் ஆயிற்று. எனக்குத் தோன்றிய ஒரு வழி பெங்களூர் விட்டு வேறு வேலைக்குச் சேறுவதுதான் என்று தோனற, வேலைக்கு முயற்சி செய்தேன். அந்த முயற்சிகளைப் பட்டியலிடுவதைவிட எனக்கு இரண்டு இடங்களில் வேலைக்கு வாய்ப்பு வந்தது என்பதையும், நான் மெட்ராசில் லூகாஸ்  டீவிஎஸ் கம்பனியில் சூப்ரவைசராகச் சேர்ந்தேன் என்பதை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன். ஆவடி டாங்க் ஃபாக்டரியில் வந்த வேலை வாய்ப்பு திருப்தி தராததால் லூகாஸில் சேர்ந்தேன். 1965-/ம் வருடம் ஏப்ரல் மே  மாத வாக்கில் ( தேதிகள் தேடினால் கிடைக்கும்.) வேலையில் சேர்ந்தேன். எச் ஏ எல்- லில் நான் இருந்தவரை, எனக்கு மனசில் பட்டதை யாருக்கும் பயப்படாமல் செய்யும் துணிவு கொண்டவனாக இருந்தேன். அந்த சுபாவம் நிறைய பேருக்குப் பிடிக்காமல், எனக்குப் பிரமோஷன் கிடைப்பதும் தள்ளிப் போடப் பட்டது.கிடைத்த பதவி உயர்வு, டிபார்ட்மெண்ட் மாற்றத்தோடு நடந்தது,ப்ரொடக்‌ஷனிலிருந்து தரக் கட்டுப்பாடு துறைக்கு மாற்றப் பட்டேன். லூகாஸ் டீவீஎஸ் சென்றபோது என்னை நான் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், நான் உண்டு என் வேலை உண்டு என்ற நிலையில் தொடர வேண்டும் என்றும் முடிவு செய்தேன்.

       எச் ஏ எல்- லிலும் , லூகாஸ் டீவீஎஸ்  ஸிலும் பணியில் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூர்ந்து பார்ப்பது உண்டு. அதில் கிடைத்த அனுபவங்களே என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை எனக்கு ஊட்டியது. நம்முடைய செயல்கள் மற்றவர்களுக்கு ரசனையாக இருக்கலாம் உதவியாக இருக்கலாம். ஆனால் நேர்மை நியாயம் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, மேலதிகாரிகளுக்கு ஒத்து ஊதும் குணம் படைத்தவர்களே, முன்னேறுகிறார்கள் என்ற படிப்பினை கிடைத்தது. முன்னேற வேண்டும் என்பதற்காக என் அடிப்படை குணங்களை, நான் என்னையே மெச்சிக் கொள்ளும் நல்ல குணங்களை மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. நம்மைப் போல் பணியிலிருப்பவர்களுக்காக நாம் செயல்படுவது அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், நமக்குத் தோள் கொடுக்க முன் வர மாட்டார்கள் என்ற பாடம் கற்ற வேளை அது. எடுத்துக்காட்டாக நிகழ்ச்சிகள் ஏராளம் கூறலாம். ஆனால் கற்ற பாடம் மட்டும் சொன்னால் போதும் என்று அவற்றை விவரிக்க வில்லை.(தொடரும்)

 

 









9 comments:

  1. என்னுடைய வயது...உங்கள் திருமண வாழ்வு... ஆச்சர்யமாக இருக்கிறது

    ReplyDelete
  2. நேர்மை நியாயம் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, மேலதிகாரிகளுக்கு ஒத்து ஊதும் குணம் படைத்தவர்களே, முன்னேறுகிறார்கள் என்ற படிப்பினை கிடைத்தது.
    உண்மை
    உண்மை

    ReplyDelete
    Replies
    1. நிறைய பட்ப்பினைகள்

      Delete
  3. மடல் ஏறாத கடித மடல்களுடன், காதலின் உறுதி அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. மடல் ஏறாத புரியவில்லை

      Delete
  4. சுவாரஸ்யமான சம்பவங்கள். காதல் அத்தியாயம் முடிந்து வாழ்க்கை அத்தியாயம் ஆரம்பிக்கும்போது நிறைய சவால்களையும், சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிட்டிருக்கும்.

    ReplyDelete
  5. உங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கும். சிறு வ்யதிலேயே வாழ்வில் அடிபட்டு...எத்தனை அனுபவங்கள்.

    காதல் கதை வெகு சுவாரசியம். பொறுப்புகளும் கூடியிருக்கும் திருமணத்திற்குப் பிறகு. அதுவும் சென்னையில் வேலை, குடும்பத்திற்கு இருவருமே உதவ வேண்டிய சூழல்.

    கீதா



    கீதா

    ReplyDelete
    Replies
    1. சமாள்த்து விட்டேன்

      Delete