நாடகம் தொடராக..... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடகம் தொடராக..... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

மனசாட்சி ( நாடகம் )-12




                       மனசாட்சி.( நாடகம் )
காட்சி.:- 13    இடம்.:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:- ரவி, ஷீலா.
( திரை உயரும்போது ஷீலா பீதியுடன் அமர்ந்திருக்கிறாள். பின்னணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை. அவளுக்கு திடீரென்று கண்களை இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருக்கிறது. அடி வயிற்றைப் பிடித்துக் கொள்கிறாள். அவள் மனம் பேயாய் அலைக்கழிக்கிறது. )



ஷீலா ...நீ இருக்க வேண்டிய நிலை என்ன....? இருந்த முறை என்ன.? ச்சே..... நீயும் ஒரு பெண்ணா.....?

இந்த நிலையில் இதைவிட  வேறென்ன செய்திருக்க முடியும்..? மனசாட்சிக்கு விரோதமில்லாமல்தானே இதெல்லாம் நடந்திருக்கிறது..
மனசாட்சி....... ஹஹஹஹ...மனசாட்சி...!கொண்ட கணவன் இருக்கக் கண்டவனுடன் சேர்ந்து கற்பு நெறி தவறுவதை எந்த மனசாட்சியம்மா அனுமதிக்கிறது. ...?
ஷீலா.:- இல்லை...இல்லை... ஆனால் கணவன் கணவனாக இல்லாதபோது......
(குரல்) நெஞ்சத்திலே உரம் வேண்டும்....முடிந்தால் விவாகரத்து செய்து வேறொருவனை மணந்திருக்க வேண்டும்...
ஷீலா.:- ஆனால் இந்த சமூகத்தில் அப்படி நடக்க வழியில்லையே...
(குரல்) இல்லையென்றால் கன்னியாகவே இருந்து விடுவதுதானே...? அப்படி என்னம்மா ஒரு சோரம் போன வாழ்க்கை வேண்டி இருக்கிறது....?

ஷீலா.:- ஆம்..... சோரம் போன வாழ்க்கைதான்....எல்லாம் அவருக்காகத் தானே செய்தேன். .....என்ன செய்தும் நிம்மதி இல்லையே.....ஆ...ஆ....ஐயோ ( வலியால் துடிக்கிறாள். அதைக் கண்டு கொண்டு வந்த ரவியின் மூளை மெல்லப் பேதலிக்கிறது...அவன் ஷீலாவை மெல்ல நெருங்குகிறான். அவள் அவனைக் கண்டு மிரண்டு எழுந்து ஓடுகிறாள். அவன் அருகில் வர கால் தடுக்கி கீழே விழுகிறாள். : வீல் என்று கூக்குரலிடுகிறாள். மயங்கிச் சாய்கிறாள். சிறிது நேரம் செய்வதறியாத ரவி..கீழே இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஷீலாவைப் பார்க்கிறான். பிறகு வெறி பிடித்துச் சிரிக்கிறான். )


ரவி.:- ஹஹஹஹா......நான் தந்தையாகி விட்டேன்........ஷீலா... நீயும் தாயாகி விட்டாய். ஹஹஹஹா......என்னை இப்போது ஊருலகம் ஒரு ஆண்மையுள்ள ஆண்பிள்ளைஎன்று ஒப்புக் கொள்ளும்...உனக்கு உன் சொத்தும் கிடைக்கும்... ஹஹஹஹா....இதைக் கொண்டாட எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க வேண்டாமா....ஷீலா.....Oh… my dear SHEELA….. இரு இதோ வந்திடறேன். இனிப்பு வாங்கிட்டு வரேன்.... ஹஹஹஹா.....( போகிறான் )
                  ( திரை )         ( முற்றும் )


என்னுரை:

திருமணம் பற்றி யார் என்ன சொன்னாலும் , அது ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் கூடி இன்பம் தூய்க்கவும் சந்ததிப் பெருக்கம் செய்யவும் , ஊருலகமும் சட்டமும் அனுமதி அளிக்கும் ஒரு லைசென்ஸே, என்பது மறுக்க முடியாதது. அதன் மூலம் ஒரு ஆண் தன் ஆண்மையையும் ஒரு பெண் தன் தாயாகும் தகுதியையும் நிரூபிக்கக் குறியாய் இருப்பதும் மறுக்க முடியாது. ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையுள்ளவன் என்றும் , ஒரு பெண்ணுக்கு அவள் மலடியல்ல என்றும் நிரூபிப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று உறுதியாகிறது. ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையில் வம்ச விருத்தி சாத்தியமாகவில்லை என்றால் மன ஆறுதலுக்கு குழந்தையை தத்து எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் மனசாட்சி நாடகத்தில் ரவிக்கு உடலுறவுக்கே தகுதி இல்லாதவன் எனும் அவனது குறை அவனுக்குத் தெரியும். ஆகவேதான் ஷீலாவுடன் மணவாழ்க்கைக்கு  அவன் விருப்பம் காட்டவில்லை. தன் இயலாமையை மறைக்க உடலுறவே மிருக உணர்ச்சி என்று ஏதேதோ கூறுகிறான். உடலுறவுக்குத் தான் தகுதி இல்லாதவன் என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் கூற அவனது ஈகோ அனுமதிக்கவில்லை. ஷீலாவும் மணம் என்று நடந்து முடிந்தால் ரவியும் வசப் படுவான் என்று நம்பினாள். உயிலும் அதில் கண்ட ஷரத்துகளும் கதையை நகர்த்த உத்திகளே. அதன் மூலம் குழந்தை பிறக்க வேண்டிய கட்டாயத்தை அவள் அவனுக்கு உணர்த்தியும்  மாற்றம் ஏதும் இல்லாததால் அவளுக்கு சந்தேகம் வலுத்து  பின் அதுவே அவனை உதாசீனப் படுத்தவும் செய்கிறது.
கதையின் சிக்கலான பகுதியே ரவி ஷீலாவிடம் வாழ்க்கையை அனுபவிக்கவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் சூழ்நிலைகளை
ஏற்படுத்துவதும் அவளும் அதில் விழுவதுமாகும். ரவிக்கு தன் இயலாமை ஊருலகத்துக்கு தெரியக் கூடாது என்பதும் அந்த அவமானத்தை தாங்க முடியாது என்பதும் முக்கியம் ஷீலாவும் சூழ்நிலைக் கைதியாகி வேறொருவன் மூலம் கருத்தரிக்கிறாள். இருந்தாலும் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறாள். ஏதோ உந்துதலில் அவள் கருத்தரிக்க உதவி செய்த ரவியும் மனம் பேதலிக்கிறான். ஷீலாவின் கருச்சிதைவும் ரவியின் மனச் சிதைவும் , என்னதான் வித்தியாசமாக நினைத்து செயல் பட்டாலும் அவரவர் மனமே எதிரியாகச் செயல் படுகிறது என்பதே கதை.
வேறு மாதிரிக் கற்பனை செய்து எழுதி இருக்கலாம். ரவியும் ஷீலாவும் lived happily thereafter  என்று எழுதினால் நான் சொல்ல வந்ததைச் சொல்லி இருக்க முடியாது.
நாடகத்திலேயே இவற்றை வெளிக் கொணர்ந்து இருக்கிறேன் என்றாலும் இந்த என்னுரையும் வலுவூட்டும் என்று நம்புகிறேன். 
---------------------------------------------------------