மனசாட்சி.(
நாடகம் )
காட்சி.:- 13
இடம்.:- ஷீலா வீடு.
பாத்திரங்கள்.:- ரவி, ஷீலா.
( திரை உயரும்போது ஷீலா பீதியுடன்
அமர்ந்திருக்கிறாள். பின்னணியில் இடி, மின்னலுடன் கூடிய மழை. அவளுக்கு திடீரென்று
கண்களை இருட்டிக் கொண்டு வருவதுபோல் இருக்கிறது. அடி வயிற்றைப் பிடித்துக்
கொள்கிறாள். அவள் மனம் பேயாய் அலைக்கழிக்கிறது. )
” ஷீலா ...நீ இருக்க வேண்டிய நிலை என்ன....? இருந்த
முறை என்ன.? ச்சே..... நீயும் ஒரு பெண்ணா.....?
”இந்த நிலையில் இதைவிட வேறென்ன செய்திருக்க முடியும்..? மனசாட்சிக்கு
விரோதமில்லாமல்தானே இதெல்லாம் நடந்திருக்கிறது..”
” மனசாட்சி.......
ஹஹஹஹ...மனசாட்சி...!கொண்ட கணவன் இருக்கக் கண்டவனுடன் சேர்ந்து கற்பு நெறி தவறுவதை
எந்த மனசாட்சியம்மா அனுமதிக்கிறது. ...?
ஷீலா.:- இல்லை...இல்லை... ஆனால் கணவன் கணவனாக
இல்லாதபோது......
(குரல்) நெஞ்சத்திலே உரம்
வேண்டும்....முடிந்தால் விவாகரத்து செய்து வேறொருவனை மணந்திருக்க வேண்டும்...
ஷீலா.:- ஆனால் இந்த சமூகத்தில் அப்படி நடக்க வழியில்லையே...
(குரல்) இல்லையென்றால்
கன்னியாகவே இருந்து விடுவதுதானே...? அப்படி என்னம்மா ஒரு சோரம் போன வாழ்க்கை
வேண்டி இருக்கிறது....?
ஷீலா.:- ஆம்..... சோரம் போன வாழ்க்கைதான்....எல்லாம்
அவருக்காகத் தானே செய்தேன். .....என்ன செய்தும் நிம்மதி இல்லையே.....ஆ...ஆ....ஐயோ
( வலியால் துடிக்கிறாள். அதைக் கண்டு கொண்டு வந்த ரவியின் மூளை மெல்லப்
பேதலிக்கிறது...அவன் ஷீலாவை மெல்ல நெருங்குகிறான். அவள் அவனைக் கண்டு மிரண்டு
எழுந்து ஓடுகிறாள். அவன் அருகில் வர கால் தடுக்கி கீழே விழுகிறாள். :” வீல் ” என்று
கூக்குரலிடுகிறாள். மயங்கிச் சாய்கிறாள். சிறிது நேரம் செய்வதறியாத ரவி..கீழே
இரத்த வெள்ளத்தில் இருக்கும் ஷீலாவைப் பார்க்கிறான். பிறகு வெறி பிடித்துச்
சிரிக்கிறான். )
ரவி.:- ஹஹஹஹா......நான் தந்தையாகி
விட்டேன்........ஷீலா... நீயும் தாயாகி விட்டாய். ஹஹஹஹா......என்னை இப்போது
ஊருலகம் ஒரு ஆண்மையுள்ள ஆண்பிள்ளைஎன்று ஒப்புக் கொள்ளும்...உனக்கு உன் சொத்தும்
கிடைக்கும்... ஹஹஹஹா....இதைக் கொண்டாட எல்லோருக்கும் இனிப்பு கொடுக்க
வேண்டாமா....ஷீலா.....Oh… my dear SHEELA….. இரு இதோ வந்திடறேன். இனிப்பு வாங்கிட்டு வரேன்.... ஹஹஹஹா.....( போகிறான் )
( திரை ) ( முற்றும் )
என்னுரை:
திருமணம் பற்றி யார் என்ன சொன்னாலும் , அது
ஒரு ஆணும் பெண்ணும் கலவியில் கூடி இன்பம் தூய்க்கவும் சந்ததிப் பெருக்கம்
செய்யவும் , ஊருலகமும் சட்டமும் அனுமதி அளிக்கும் ஒரு லைசென்ஸே, என்பது மறுக்க
முடியாதது. அதன் மூலம் ஒரு ஆண் தன் ஆண்மையையும் ஒரு பெண் தன் தாயாகும் தகுதியையும்
நிரூபிக்கக் குறியாய் இருப்பதும் மறுக்க முடியாது. ஒரு ஆணுக்கு அவன் ஆண்மையுள்ளவன்
என்றும் , ஒரு பெண்ணுக்கு அவள் மலடியல்ல என்றும் நிரூபிப்பதன் மூலம் அவர்கள்
வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று உறுதியாகிறது. ஏதோ ஒரு காரணத்தால் வாழ்க்கையில்
வம்ச விருத்தி சாத்தியமாகவில்லை என்றால் மன ஆறுதலுக்கு குழந்தையை தத்து எடுத்துக்
கொள்கிறார்கள்.
ஆனால் மனசாட்சி நாடகத்தில் ரவிக்கு உடலுறவுக்கே தகுதி
இல்லாதவன் எனும் அவனது குறை அவனுக்குத் தெரியும். ஆகவேதான் ஷீலாவுடன்
மணவாழ்க்கைக்கு அவன் விருப்பம்
காட்டவில்லை. தன் இயலாமையை மறைக்க உடலுறவே மிருக உணர்ச்சி என்று ஏதேதோ கூறுகிறான்.
உடலுறவுக்குத் தான் தகுதி இல்லாதவன் என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் கூற
அவனது ஈகோ அனுமதிக்கவில்லை. ஷீலாவும் மணம் என்று நடந்து முடிந்தால் ரவியும் வசப்
படுவான் என்று நம்பினாள். உயிலும் அதில் கண்ட ஷரத்துகளும் கதையை நகர்த்த உத்திகளே.
அதன் மூலம் குழந்தை பிறக்க வேண்டிய கட்டாயத்தை அவள் அவனுக்கு உணர்த்தியும் மாற்றம் ஏதும் இல்லாததால் அவளுக்கு சந்தேகம்
வலுத்து பின் அதுவே அவனை உதாசீனப்
படுத்தவும் செய்கிறது.
கதையின் சிக்கலான பகுதியே ரவி ஷீலாவிடம் வாழ்க்கையை
அனுபவிக்கவும் குழந்தை பெற்றுக் கொள்ளவும் சூழ்நிலைகளை
ஏற்படுத்துவதும் அவளும் அதில் விழுவதுமாகும். ரவிக்கு தன்
இயலாமை ஊருலகத்துக்கு தெரியக் கூடாது என்பதும் அந்த அவமானத்தை தாங்க முடியாது
என்பதும் முக்கியம் ஷீலாவும் சூழ்நிலைக் கைதியாகி வேறொருவன் மூலம்
கருத்தரிக்கிறாள். இருந்தாலும் குற்ற உணர்ச்சியால் தவிக்கிறாள். ஏதோ உந்துதலில்
அவள் கருத்தரிக்க உதவி செய்த ரவியும் மனம் பேதலிக்கிறான். ஷீலாவின் கருச்சிதைவும்
ரவியின் மனச் சிதைவும் , என்னதான் வித்தியாசமாக நினைத்து செயல் பட்டாலும் அவரவர்
மனமே எதிரியாகச் செயல் படுகிறது என்பதே கதை.
வேறு மாதிரிக் கற்பனை செய்து எழுதி இருக்கலாம். ரவியும்
ஷீலாவும் lived happily thereafter என்று எழுதினால் நான் சொல்ல வந்ததைச் சொல்லி
இருக்க முடியாது.
நாடகத்திலேயே இவற்றை வெளிக் கொணர்ந்து இருக்கிறேன்
என்றாலும் இந்த என்னுரையும் வலுவூட்டும் என்று நம்புகிறேன்.
---------------------------------------------------------
அவரவர் மனமே அவரவர்களுக்கு எதிரி என்று அருமையாக முடித்தது சிறப்பு... பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குமற்றுமொரு நாடகத்தை தொடர வாழ்த்துக்கள் ஐயா...
இந்த முடிவைத் துளியும் எதிர்பார்க்கவில்லை. ஷீலாவின் மேல் நான் வைத்திருந்த நம்பிக்கையும் நம் கலாச்சாரத்தின்பால் கொண்ட பிடிப்பும் நிகழ்வை இன்னும் ஏற்கவொட்டாமல் தடுக்கின்றன. இறந்தகால நிகழ்வுகளின் விளைவாய் நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் எப்படி பிரச்சனைகள் உருவாகும் என்று யோசிக்கிறேன். ஒருமுறை சோரம் போகத் துணிந்த ஷீலா அந்த ஒருமுறையுடன் நிறுத்த மாட்டாள். அவளுடைய பலவீனம் அறிந்தவர்கள் அவளை விடவும் மாட்டார்கள். அதனால் அவளுடைய எதிர்காலம் என்னவாகும்? அவள் விரும்பிய நிம்மதியான வாழ்க்கை கிடைக்குமா? கள்ளம் ஒருநாள் இல்லையென்றாலும் ஒருநாள் ஊருக்கும் உலகுக்கும் வெளிப்பட்டே தீரும். அப்போது அவள் அதனை எப்படி எதிர்கொள்வாள்?
பதிலளிநீக்குரவியைப் பொறுத்தவரை சொத்து ஒன்றே அவனது குறிக்கோள் என்றால் அதை அவன் அடைந்துவிட்டான் என்றே சொல்லவேண்டும். ஆனால் இயலாமையும் குற்றவுணர்ச்சியும் நிறைந்திருப்பவன் இனி மனைவியை எப்படி உண்மையாய் நேசிக்க முடியும்? இனியும் இருவரும் இணைந்து வாழ்வது சாத்தியம்தானா? பல கேள்விகளை எழுப்பி விழுகிறது திரை.
ஆரம்பக் காட்சியை இறுதியில் காட்டி அப்போது இட்ட முடிச்சை அவிழ்த்தது பாராட்டுக்குரியது. கதையில் கதாபாத்திரங்களின் மனசாட்சியே அவர்களை வழிநடத்துவதால் மனசாட்சி என்பது மிகவும் பொருத்தமான தலைப்பு. மிகவும் சிக்கலான ஒரு கருவை மேடை நாடகவடிவில் எளிமையாய் வடிவமைத்துத் தந்தவிதம் அருமை. மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.
பதிலளிநீக்கு@ திண்டுக்கல் தனபாலன்
@ கீதமஞ்சரி
உடன் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.ஷீலா ஒரு சூழ்நிலைக் கைதி. அவள் எடுத்த முடிவுகள் எல்லாமே on the spur of the moment ல்தான்.ரவி சொத்துக்கு ஆசைப்பட்டவன் என்று எங்குமே கூறப்படவில்லை. அவனுக்கு அவனது இயலாமை ஊருலகத்துக்குத் தெரிந்தால் அவமானம். அது தாங்க முடியாததாலும் ஷிலாவின் மேல் கொண்ட அன்பாலுமேஅவளை அந்த முடிவுக்குத் துரத்துகிறான். எத்தனையோ நிகழ்வுகள் நம்ப முடியாமலேயே இருக்கின்றன. இதுவும் அதுபோல் ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். இதன் கரு சிக்கலானது என்று தெரிந்தே மேடையேற்றினேன். மிகவும் பரபரப்பாக பேசப் பட்டது.ரவியின் கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினவர்களும் உண்டு என்று முன்பே எழுதி இருக்கிறேன். மீண்டும் நன்றி. .
விதி விலக்குகளை எப்போதும்
பதிலளிநீக்குவிதிகளுக்குள் அடக்கி புரிந்து கொள்ள முயன்றால்
குழப்பமே மிஞ்சும்.நீங்கள் குழப்பமில்லாதுதான்
படைப்பைக் கொடுத்துள்ளீர்கள்.ஆனாலும்
படிப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்களோ இல்லையோ
என்கிற குழப்பமே உங்களை நீண்ட பின்னுரை
எழுதத் தூண்டி இருக்கிறது என நினைக்கிறேன்
அருமையான தொடர் நாடகம்
பகிர்வுக்கு மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
//வேறு மாதிரிக் கற்பனை செய்து எழுதி இருக்கலாம். ரவியும் ஷீலாவும் lived happily thereafter என்று எழுதினால் நான் சொல்ல வந்ததைச் சொல்லி இருக்க முடியாது. //
பதிலளிநீக்குநிகழ்வுகளில் சிக்கலே கிடையாது. சில தீர்வுகள் தாம் நிகழ்வுகளைச் சிக்கலாக்குகிறது. எந்த நிகழ்வுக்குமான சரியில்லாத ஒரு தீர்வு நிகழ்வுகளின் போக்கை திசை திருப்பி கலைத்துப் போட்டு மேலும் அதனைச் சிக்கலாக்கும் என்பது அடிப்படை உண்மை. நிகழ்வுகளின் போக்கினூடான விஞ்ஞானபூர்வ விளைவும் இதான்.
சொல்ல நினைத்ததை சொல்ல வேண்டும் என்று தோன்றிய பொழுதே ரவியையும் ஷீலாவையும் நேர்வழியில் வாழ வைக்க வேண்டும் என்று நீங்கள் முடிவெடித்திருந்தால்
சிக்கலுக்கான தீர்வு சுலபமாகக் கிட்டியிருக்கும். அப்படி நினைக்காததினால் தான் கதையின் கருவும் சிதைவுற்றுப் போயிற்று.
கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் 'சாரதா' படம் பார்த்திருப்பீர்கள்.
பெண்கள் அனுதாபப்படும் கேரக்டராக சாரதாவைப் படைத்தும் சாரதாவை வாழவைக்க முடியாமல் அவரால் போயிற்று. நோய்க்கான டாக்டரின் பிரிஸ்கிரிப்ஷன் சரியில்லை. அதான் காரணம்.
இன்னொன்று. இந்த மாதிரி கதைக் கருக்களை கையாளும் பொழுது அதற்கான உடற்கூறு அம்சங்களை படித்துத் தெளிய வேண்டும். ஹார்மோன் குறைபாடுகள் வாழ்க்கையையே வீணாக்குவது கதாசிரியர்களின் கற்பனைக் குறைபாடே தவிர பிரச்சனைக்கான சரியான தீர்வாகாது.
யாரும் முகஞ்சுளிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாடக வசனத்தைக் கையாண்டதில் அக்கறை எடுத்து எழுதியிருக்கிறீர்கள். அதைப் பாராட்டியே ஆக வேண்டும். ரவியின் தவறான பரிந்துரைக்கு ஷீலாவின் மன எதிர்ப்பை லேசாகவேனும் பதிவு செய்திருக்கிறீர்கள். அது கூட இல்லாது போயிருந்தால் அந்த கேரக்டர் அதல பாதாளத்திற்கு போயிருக்கும். ஸ்ரீதர் பாணியில் அடுத்தடுத்து நகைச்சுவை காட்சி வருகிற மாதிரி பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது நாடகத்தின்
சீரியஸ் தன்மையை லேசாக்க வெகுவாக உதவியிருப்பது கண்கூடு.
சொல்வது சுலபம். ஆனால் நடத்திக் காட்டுவது எளிதல்ல. இந்த நாடகத்தை மேடையேற்றுகையில் என்னவெல்லாம் சிரமப்பட்டிருப்பீர்கள் என்பதை நினைக்கையில் உங்கள் நாடக மேடை ஆர்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த காலகட்டத்தில் இப்படியெல்லாம் எழுதுவது ஒரு 'புரட்சிகரமாக' எண்ணப் பட்டது. அதனால் தான் இதுவும் முடிந்திருக்கிறது.
பாலகுமாரனின் கதைகளைப் பற்றி நான் விமரிசித்து எழுதிய பொழுது
என் கதைகளை யாராவது இப்படி விமர்சித்து எழுத மாட்டார்களா என்று பின்னூட்டமிட்டிருந்தீர்கள்.
அப்படி நீங்கள் சொல்லியிருந்தது தான் இதையெல்லாம் சொல்லத் தோன்றியது. அதனால் ஒரு விமர்சகரின் விமரிசனப் பார்வையில் சொல்லப் பட்டவை இவை என்று எடுத்துக் கொள்ளும் பாங்கும், பண்பும் உங்களுக்கு உண்டு என்பது நான் அறிந்ததே.
இளைஞர்களுக்கு வழிகாட்டும் நல்ல கருத்துக்களை உங்கள் படைப்பாக்கம் கொள்ளட்டும் என்று வேண்டி வாழ்த்துவதில் மகிழ்வு கொள்கிறேன், ஜிஎம்பீ சார்!
அருமையாக முடித்திருக்கின்றீர்கள் அய்யா.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ரமணி-
/விதி விலக்குகளை எப்போதும்
விதிகளுக்குள் அடக்கி புரிந்து கொள்ள முயன்றால்
குழப்பமே மிஞ்சும்/ மிகச் சரியாகச் சொன்னீர்கள்.எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை. மேலும் தெரிந்தேதான் இக்கருவை கையாண்டிருக்கிறேன். என் நீண்ட விளக்கத்துக்க்குக் காரணமே கதையைப் படிப்பவர்கள் சரியாகப் புரிதல் இல்லாமல் அவர்கள் விரும்பும் வண்ணம் பொருள் கொள்ளக் கூடாது என்பதால்தான்.நன்றி.
பதிலளிநீக்கு@ ஜீவி. -
நீண்ட கருத்துரைக்கு முதலில் என் நன்றி.நிகழ்வுக்கு சரியான தீர்வு இது, சரியான தீர்வு இது அல்ல, என்ற எண்ணத்தில் புனையப்பட்டது அல்ல இக்கதை.நான் இதைத்தான் சொல்ல நினைத்தேன் என்று முடிவு கட்டி கருத்து எழுதப் பட்டிருக்கிறது. என் எழுத்துக்களை நான் எப்போதுமே யாருடைய எண்ணங்களோடு பொருத்துவதில்லை. நான் என்ன சொன்னாலும் எழுதியதை defend செய்கிறேன் என்ற கருத்தே எழும். ரவியின் இயலாமைக்கு நான் எந்தக் காரணமும் கொடுக்கவில்லை. அவனைப் பொறுத்தவரை it was a matter of fact. அந்த நிலையில் அவனது எண்ணங்களும் செயல்களும் வடிவமைக்கும்போது. ஒரு சாதாரண இளைஞனின் தவிப்புகளும் அவன் நாடும் தீர்வுமே சொல்லப் பட்டிருக்கிறது. ஷீலாவும் ஒரு சாதாறணப் பெண்மணி. ஏதோ உந்துதலில் தவறு செய்து விட்டு அதற்காக வருந்துபவள். இவர்களின் மனப் போராட்டங்களையே கதையின் கருவாக சொல்ல வந்தேன். விமரிசனங்களை நான் வரவேற்கிறேன்./இளைஞர்களுக்கு வழிகாட்டும் நல்ல கருத்துக்களை உங்கள் படைப்பாக்கம் கொள்ளட்டும்/என்று கூறுவது சரியான விமரிசனம் என்று நினைக்க முடியவில்லை. நேரமும் சிரமமும் எடுத்துக் கொண்டு இதை அலசியதற்கு என் நன்றி ஜீவி சார்.!
பதிலளிநீக்கு@ கரந்தை ஜெயக்குமார். பாராட்டுக்கு நன்றி ஐயா.
எதிர்பாராத, சற்றே துணிச்சலான, நிச்சயம் நடக்கக்கூடிய முடிவு.
பதிலளிநீக்கு