மன சாட்சி ( நாடகம் )
காட்சி.:-10
இடம்.:- கனகசபை வீடு.
பாத்திரங்கள்.:-கனகசபை, வேதவதி, சபாபதி, பத்திரிக்கை
நிருபர்.
கனகசபை.:-வேதம்.......வேதம்...... ! ஏ..வேதா........! எங்கே
தொலஞ்சா இவ....
வேதவதி.:- நான் எப்போ தொலைவேன்னுதானே காத்துக்
கிட்டிருக்கீங்க..? அந்தப் பாழாப் போன எமனுக்குஎன்னை பார்க்க மட்டும் இன்னும்
கண்ணு தெரியலை.......
கனகசபை.:-அது எப்படிம்மா தெரியும். ? ஒவ்வொருத்தி தன்
புருஷன் பாத்திட்டு வான்னா பேத்துக்கிட்டு வர்றா....எள்ளுன்னா எண்ணையா
இருக்கா....அப்பேர்ப் பட்டவங்களைத்தான் எமன் நல்லாப் பார்த்து வெச்சிருக்கான்.
.... ஆனா நீதான் கூப்பிட்ட குரலுக்கு ஏன்னுகூடக் கேட்காம புரட்சி பண்றியே....
வேதவதி.:- இப்ப நான் என்ன செய்யணுங்கறீங்க......
கனகசபை.:- தாகம் எடுத்து நாக்கு வரண்டு போகுது.குடிக்கக்
கொஞ்சம் தண்ணீர் கொடேன்.
வேதவதி.:- நீங்களே போய் எடுத்துக் குடிக்கறது தானே . ஏதோ
உயிர் போற மாதிரி.....ரொம்பத்தான்.....
கனகசபை.:-அம்மா... தாயே....! சாவித்திரி , சத்தியவான் உயிரை
எமன் கிட்டேயிருந்து மீட்டு வந்ததாகக் கதை. சொல்வாங்க.ஆனால் நீ என்னை சீக்கிரமே
எமன்கிட்டெ அனுப்பிச்சுடுவே போலிருக்கு. ...........
வேதவதி.:- இருங்க வாரேன்......
கனகசபை.:- சொல்றமாதிரி சொன்னா இந்தப் பொம்பளைக்கும்
சுருக்குனு குத்துது... பரவாயில்லை....பரவாயில்லை.
வேதவதி>;- ( உள்ளிருந்து ஒரு உலக்கையுடன் வருகிறாள்)
ஏங்க.... நீங்க இப்ப கொஞ்சம் சாகணும்....
கனகசபை.:- சாகணுமா.... கொஞ்சம் சாகணுமா..... எதுக்கு
வேதா......?
வேதவதி.:- சாகலைன்னா எப்படி உங்களை எமன் கிட்டருந்து
மீட்டுட்டு வரதாம்...? கொஞ்சம் தலையைக் காட்டுங்க....! வலிக்கவே வலிக்காது.... ஒரே
அடில் உங்களை க்ளோஸ் செய்துட்டு அப்புறம் உங்க உயிரை எமன் கிட்டருந்து மீட்டுட்டு
வரேன்..! என்ன.....!( என்று உலக்கையை ஓங்க )
கனகசபை.:-ஐயோ
வேதா ..வேண்டாம் வேதா...( என்று ஓட
அப்போது அங்கு வந்த பத்திரிக்கை நிருபர் இருவருக்கும் குறுக்கே நின்று)
பத்திரிக்கை நிருபர்.:- உங்கள் சண்டைக்கான காரணத்தை முதல்ல
சொல்லுங்க சார்... இன்னிக்கி காலைல இருந்து ஒரு நியூஸ் கூடக் கிடைக்கலை...
திடீர்ன்னு உலகமே யோக்கியமா மாறிடிச்சோன்னு சந்தேகப் பட்டேன். நல்ல வேளை.... அலறல்
சத்தம் கேட்டு வந்தேனோ நியூஸ் கிடைச்சுதோ. ம்ம்ம்ம்.. சொல்லுங்க சார்...(என்று
பென்சில் நோட் எடுக்கிறான்.)
கனகசபை.: - உன்னை யாருய்யா கூப்பிட்டது....?
ப.நிருபர்.:=”கணவனை மனைவியின் உலக்கை வீச்சிலிருந்து மீட்ட
நிருபருக்கு ஏச்சு.” ... ஆங்.. என்ன கேட்டீங்க .. என்னை யாரும் கூப்பிட வேண்டாம் சார்...
எங்கெங்கே தர்மத்தை அதர்மம் அடிக்குதோ.....அங்கங்கே நானும் வந்து காட்சி
அளிப்பேன். ...
சபாபதி.:- ( அடிபட்ட கோலத்தில் ) சார் நீங்களா....என்ன்
சார் இப்படிப் புளுகறீங்க..? எங்கெங்கே தர்மத்தை அதர்மம் அடிக்குதோ அங்கங்கே
வருவீங்களா....?கொஞ்சம் முன்னாடிதான் தர்மத்தை அதர்மம் போட்டுப் போட்டு
அடிச்சுதே....! நீங்க வரலியே......
ப.நிருபர்.:- நீங்க தப்பாச் சொல்றீங்க. ...தர்மம் அதர்மத்தை
அடிச்சிருக்கும்.... ! இருந்தாலும் சொல்லுங்க.....! ஒரே இடத்துல ரெண்டு
நியூஸ்....!
சபாபதி.:- சும்மா எழுதிக்குங்க சார்.....இப்ப வர்ற
நியூசெல்லாம்தான் கண்ணு, காது, மூக்கு வெச்சு எழுதறதாச்சே. ....! இருக்கிறது ஒண்ணுன்னா
இல்லாதது ஒன்பது இருக்கும்.....அது போகட்டும்...சார்... நீங்க ஒரு ஆம்பிளையா....
ப.நிருபர்.:- என்னைய்யா இது உனக்கு திடீர்னு
சந்தேகம்....?என்னைப் பார்த்தா எப்படி இருக்கு..?
சபாபதி.:- அதெல்லாம் தெரியாது... நீங்க ஆம்பிளையா ...?
ப.நிருபர்.:- (கனகசபையைப் பார்த்து ) சார் உங்க சன் கொஞ்சம்
முன்னாலே நல்லாத்தானே இருந்தார்...என்னவோ தெரியலை..ஒரேயெடத்துல நியூசுக்கு மேல
நியூசா கெடைக்குது. நாளையப் பத்திரிக்கையை நெரப்ப சேதி இங்கயே கெடச்சுடும்
போலிருக்கு. ...
சபாபதி.:- உங்களுக்குக் கோபமே வரலியே சார்...இந்த
மாதிரித்தான் நான் கொஞ்ச நேரத்துக்கு மின்னே ஒரு ஆளைப் பார்த்து ‘ நீ
ஆண்பிள்ளையான்னு’ கேட்டேன். சாத்து சாத்துனு சாத்திட்டான் சார்...தப்பினதே தம்பிரான்
புண்ணியம்னு ஓடி வந்துட்டேன். ஆண்பிள்ளையான்னு கேட்டா கோபம் வர்ற ஆசாமியப் பத்திய
நியூஸ் வேண்டாமா...?
ப.நிருபர்.:-ஆஆ......க்ராண்ட் நியூஸ்... ! முதல்ல அதைக்
குறிப்பெடுத்தாகணும். நான் வரேன் பிரதர்....( சொல்லி ஓடுகிறான்)
சபாபதி.:- சார்... சார்.... இப்படித்தான் அவனவன் அட்ரஸ்
இல்லாம ஓடறானுங்க... ஹும்... ஆஆ... அம்மாடி.....!பேச்சு சுவாரசியத்துல அடியையும்
வலியையும் மறந்திட்டேன்.....ஹாங்... அப்பாடா....
வேதவதி.:- என்னடா.... எங்கண்ணா......! எந்தக் கட்டைல
போறவண்டா இப்படி அடிச்சான் உன்னை....? ஏங்க இப்படி சிலையா நிக்கறீங்க.....(
கனகசபையின் நெஞ்சில் கை வைத்துப் பார்த்து) அப்பாடா..... இருதயமே நின்னு
போச்சோன்னு சந்தேகப் பட்டேன். .....
கனகசபை.:- நின்னாதான் என்னடீ...? நீதான் இருக்கியே....
எமன்கிட்டருந்து உயிரை மீட்டு வரதுக்கு......
சபாபதி.:- அவருக்கு எப்படிம்மா இருதயம் நிக்கும். .? அதான்
கெடையவே கெடையாதே....
கனகசபை.:- கேட்டியாடி நம்ம புத்திர பாக்கியம் பேசறதை.....!
வேதவதி.:- அவனுக்கு மூளை ஜாஸ்தின்னு சும்மாவாச் சொல்றாங்க.
எங்கண்ணு....!( என்று சபாபதிக்கு திருஷ்டி கழிக்கிறாள்.)
கனகசபை.:- வேற வெனையே வேண்டாம் போ.....! இப்படி ஒரு மகனும்
சம்சாரமும் இருந்தா மனுஷன் தூக்கு போட்டுத்தான் சாகணும்.....!
சபாபதி.:- அப்பா.... சாகறதுதான் சாகறீங்க .. ஷீலாவோட அப்பா
மாதிரி வில்லங்கம் செய்து வெக்காம என் பேருக்கு உயிலை ஒழுங்கா எழுதி வைய்யுங்க....ஆமா...
நீங்க பாட்டுக்கு ‘ சபாபதி கலியாணம் செய்துக்கிட்டாதான் சொத்துன்னு ‘ எழுதித்
தொலைக்காதீங்க. ....! ஏன்னா ஒரு பொண்ணாவது என்னைக் கட்டிக்குவாங்கற
நம்பிக்கைஎனக்கில்லை.....!அப்படியே கட்டிக்கிட்டாலும் குழந்தை பிறக்கும்னு
நம்பிக்கை நிச்சயமில்லை.
( திரை ) ( தொடரும்.)
ஹா... ஹா... நகைச்சுவையுடன் சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...
பதிலளிநீக்குரசித்தேன். எல்லா பாகங்களையும் படிக்கவேண்டும்?
பதிலளிநீக்குநகைக்சுவை வாரம்
பதிலளிநீக்குஜோக்ஸ் நாசூக்குன்னாலும் சிரிப்பு. உலக்கை எடுத்துட்டு வந்தது போல ஒரு சம்பவம் நேரில் பார்த்திருக்கிறேன். அப்போது போலவே இப்போதும் சிரித்தேன்.
பதிலளிநீக்குவேதம் அம்மாள் செய்வது சரிதான். கணவனை எமனிடமிருந்து மீட்க வேண்டுமானால் அவனை முதலில் சாகடிக்கத்தான் வேண்டும். அதுவும் எப்படி? வலியில்லாமல்... உலக்கையால் ஒரே போடு... நல்ல கற்பனை. மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு