நினைவுகள் பழையது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நினைவுகள் பழையது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 அக்டோபர், 2016

இவன் இப்படித்தான்



                                           இவன்  இப்படித்தான்
                                           -----------------------------


இவன் எப்பவும்  இப்படித்தான்
 -------------------------------------------------------
பதிவு எழுதுவதற்கு விஷயங்கள் தேடுவதே ஒரு வேலையாய்ப் போய்விட்டது என் பதிவுகளில் நிறையவே அனுபவம் சார்ந்த பதிவுகளாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் அண்மையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த அதிரடி தாக்குதல் பற்றி நிறையவே கேள்விப்படுகிறோம் அந்த நேரத்தில் நான் முதன் முதலில் பள்ளியில் மூன்றாம் வகுப்பில்  சேர்க்கப்பட்டபோது அந்தக்காலத்துப் போர் பற்றிய (வீர ரைம்ஸ் என்று சொல்லலாமா) பாடல் கற்ற நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் அந்தமாதிரி பாடங்கள் சொல்லிக் கொடுக்கிறார்களா தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால் என் நினைவில் ஆடும் அந்தக் காலத்தில் படித்த ஒரு போர் முழக்கம் பற்றிய பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது பாடல் முழுவதும்  நினைவிலில்லை. நினைவுக்கு வந்ததை எழுதுகிறேன் என் போன்றோர் படித்த நினைவிருந்தால் பகிரலாம்

ஒன்றிரண்டு ஒன்றிரண்டு என்றே ஏகுவோம்
என்றுமென்றும் வெற்றி பெற்று நாங்கள் மீளுவோம்,
கொடிய பகைவர் குலை நடுங்க கொற்றம் வீழ்த்துவோம் ,
நெடிய வாள்கள் பளபளவென  நெருங்கித் தாக்குவோம்,
மாறி மாறி குதிரை ஏறி படையைத் துரத்துவோம் 
மீறி மீறி வெற்றி கூவி விரைந்து கலக்குவோம்
வந்தோம் வந்தோம் என்று கூவி வீரம்  முழக்குவோம்,
வென்றோம் வென்றோம் என்று சொல்லி முரசு கொட்டுவோம்.....





இதற்குமேல் யாருக்கும்  நினைவுக்கு வரவில்லை என்றால்  இதன்  தொடர்ச்சியாக கற்பனை செய்தும் எழுதலாம்  நான் பதிவுலகுக்கு வந்த புதிதில் இதையே எழுதி இருந்தேன்  அப்போது ஒரு வாசக நண்பர் இங்ஙனம்  எழுதி பின்னூட்டமிட்டிருந்தார்
செவியினிக்க செவியினிக்க கவி முழக்குவோம்
புவியிலெங்கும் தமிழ்பரப்பி தலை நிமிர்த்துவோம்
மதமொழித்து மனந்திருத்தி மனிதம் போற்றுவோம்
நிதமுழைக்கும் எளியர்வாழ விதி இயற்றுவோம்
இருள்விலக்கி ஒளிபரப்பி இடர்கள் தாண்டுவோம்
அருள்பொழிக்கும் அரன்பதங்கள் பணிந்து வேண்டுவோம்.
அப்போது இது எனக்கு அவ்வளவாக திருப்தி அளிக்க வில்லை போர் முழக்கம்  போல் இருந்தால் நன்றாயிருக்கும்  என்று மறு மொழி கொடுத்தேன். நண்பரும் அதையே சவாலாக ஏற்றுக்கொண்டு மீண்டும் சில வரிகளை எழுதி இருந்தார்  அவை
 நாடுகாக்க போர்முனையில் போய் நொறுக்குவோம்.
ஊடுருவும் பேர்வழிகள் வால் நறுக்குவோம்.
பதுங்கு குழி குண்டுமழை பழகிக் கொள்ளுவோம்
எதிரிகளை கடமைக்காக நின்று கொல்லுவோம் .
பனிஇரவில் மலைமுகட்டில் படை நடத்துவோம்
இனியஇல்லம் தனைமறந்து நொடி கடத்துவோம்.
பேறுகால மனைவி எண்ணம் ஓரம் கட்டுவோம்
நூறு கோடி மக்கள் வாழ வீரம் காட்டுவோம்.
ஆன்றவிந்த வீரர்களின் ஆசி வாங்குவோம்
மூன்றுவண்ணக் கொடியசைவில் மூச்சு வாங்குவோம்
(இந்த வரிகள் இன்றைய போர் வீரரின் நிலையைக் காட்டுவதுபோல்  இருக்கிறது அல்லவா)




 
என்ன நண்பர்களே ரசித்தீர்களா.பின்னூட்டமாகப் பாடல் எழுதியது யார் என்று சொல்ல முடிகிறதா  முயற்சித்துப் பாருங்களேன்  அன்று இருந்த மாதிரி பின்னூட்டங்கள் இப்போதெல்லாம் வருவதில்லைஎழுதுபவன் யாராய் இருந்தாலும்  எழுத்துக்கு மதிப்பு கொடுத்த காலம் அது என்று தோன்றுகிறது  இது குறித்து அடுத்தபதிவில் எழுதுவேன்