ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா.. எல்லாமறிந்தவரா

  
இவன் பேரன்


 
இவன் மகன்
                                                                                                   

        இவனும் அவனும் ஏதும் தெரியாதவரா எல்லாம் அறிந்தவரா.....
        --------------------------------------------------------------------------


ப. பிரகாஷ் என்பவர்  முதன் முதலாக என் கடைசிப் பதிவுக்கு வருகை தந்து பின்னூட்டமிட்டிருக்கிறார். அவரைப் பற்றி அறிய “ முகம் எனும் அவரது வலைத் தளத்துக்குச் சென்றேன்.அவரது கடந்த மூன்று பதிவுகளும் குழந்தைகள் பற்றியும் அவர்களது சில செயல்கள் குறித்தும் இருந்தது.

ஒரே ஊரில் இருந்தும் தவிர்க்க முடியாத காரணங்களால் என் பேரன் வருகை தந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. பிரகாஷின் பதிவுகள் என்னை என் பேரனையும் நினைக்க வைத்தது. ஏற்கனவே அவனைப் பற்றி எழுதி இருக்கிறேன்.



இப்போதும் அவனை நினைக்க வைக்கும் சில நிகழ்வுகள்.மூன்று வருடங்களுக்கு முன் (அவனுக்கு ஐந்து வயது). ஒரு முறை அவனை அழைத்துக் கொண்டு என் மனைவி அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்றாள். போகும் வழியில் ஒரு கோழிக்கடை இருக்கிறது. அதைப் பார்த்ததும் இவன் “ ஹை...! பாட்டி... சிக்கன் கடை. ! எனக்கு சிக்கன் வாங்கி  பிரியாணி  சமைத்துப் போடு “ என்றான். என் மனைவி என்னிடம் இப்போது காசு இல்லை. பிறகு பார்க்கலாம் “என்று கூறிவிட்டாள் இவனும் அடம் பிடிக்காமல் சமர்த்தாகக் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டான். அர்ச்சகர் தட்டில் என் மனைவி காசு போடுவதைப் பார்த்த என் பேரன், “ காசு வைத்துக் கொண்டே ஏன் இல்லை என்று சொன்னாய் பாட்டி “ என்று அவளை ஒரு பிடி பிடித்துவிட்டான். இவர்கள் என் வீட்டுக்கு வந்ததும் என் மனைவியின் தம்பி வந்திருந்தான். அவனிடம் என் பேரன் முறையிட்டான். என் மச்சினன் அவனை சமாதானப் படுத்தி “ நான் சிக்கன் வாங்கி உனக்கு சமைத்துத் தருகிறேன் “ என்றான். சொன்னபடியே அவனுடன் கடைக்குச் சென்று சிக்கன் வாங்கி வந்து பிரியாணியும் செய்து கொடுத்தான்.  அதை உண்ட பிறகு என் பேரன் சொன்ன வார்த்தைகள் என் மனதில் இன்னும் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறதுஹைய்யா. நௌ மை டம்மி இஸ் ஹாப்பி

இந்த நினைவுகளைத் தொடர்ந்து இன்னுமொரு நிகழ்வும் மனசில் தோன்றுகிறது. இது என் மூத்த மகனுக்கு மூன்று வயதாய் இருக்கும்போது நடந்தது.அப்போது  திருச்சியில் பி.எச்.இ.எல் குடியிருப்பில் இருந்தோம்.அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. உணவு அருந்தி நான் மதியம் உறங்கிக் கொண்டிருந்தேன். ஓடி விளையாடி கொண்டிருந்த என் மகன் ஒரு ஸ்டீல் டேபிளின் ஓரத்தில் தலை மோதிக் காயம் ஏற்பட்டது. என்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று என் மச்சினன் ( எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தவன் )பி.எச்இ.எல் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று டாக்டரிடம் காண்பித்திருக்கிறான். அவர்கள் குழந்தையைக் கண்காணிப்பில் வைத்திருக்கச் சொல்லி அவன் வாந்தி எடுத்தால் உடனே கூட்டி வரச் சொல்லி அனுப்பினார்கள்.
நான் உறக்கம் விழித்தவுடன் நடந்ததைச் சொன்னார்கள். நான் அப்போது அதிகம் கவலைப் படவில்லை. மாலை சுமார் ஆறு மணிக்கு என் மகன் சிறிது வாந்தி எடுத்தான். டாக்டர்கள் ஏதோ மருந்து கொடுத்திருக்கிறார்கள், அதனால் வாந்தி வரலாம் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள், என்று நினைத்துக் கொண்டு நானே மருத்துவ மனைக்குச் சென்றேன். சிரித்துக் கொண்டே “ டாக்டர், நீங்கள் எதிர்பார்த்தபடியே இவன் வாந்தி எடுத்திருக்கிறான்என்றேன் டாக்டர் என்னைக் கடுமையாகப் பார்த்து “IT IS NO LAUGHING MATTER. IT IS SERIOUS “ என்றார்.எனக்குக் கையும் ஒட்டவில்லை காலும் ஓடவில்லை. அதிர்ந்து போய்விட்டேன். அப்போதே அவனை மருத்துவ மனையில் அட்மிட் செய்தார்கள். 24 மணி நேரம் அப்செர்வேஷனில் இருக்க வேண்டும் என்றார்கள். என் மனைவிக்குத் தகவல் அனுப்பி நான் என் மகன் கூடவே இருந்தேன். இரவு முழுவதும் அவனையே பார்த்துக் கொண்டு கண்மூடாமல் விழித்துக் கொண்டிருந்தேன். நடு இரவில் என் மகன் கண்விழித்து என்னைப் பார்த்து.சாரி அப்பா... என்னால் உங்களுக்கு எவ்வளவு கஷ்டம்என்றான். மூன்றே வயதான அக்குழந்தை அதைச் சொன்னபோது மனசு மிகவும் கனத்துப் போய் விட்டது.

எத்தனையோ வருடங்கள் ஓடிவிட்டன. குழந்தைகள் பற்றிய பிரகாஷின் பதிவு என் நினைவலைகளை இயக்கிவிட்டது.
       



     
         
 

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

நானும் என் ஆரம்பகாலப் பதிவுகளும்


                               என் பதிவுகளும் வரவேற்பும்
                                --------------------------------------



திரு. தமிழ் இளங்கோ அவர்கள் முதல் பதிவின் சந்தோஷம் எனும் தலைப்பில் தொடர்பதிவுக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே என் கணினி அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இப்போது முதல் பதிவின் சந்தோஷம் என்று எழுதுவதைவிட என் பதிவுகளும் வரவேற்பும் என்ற தலைப்பில் எழுதுகிறேன்


எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரை வெறும் பொழுதைப் போக்குவதற்கு மட்டுமல்ல. என்னை மனசளவில் மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம் நம் மக்களிடையே நிலவும் ஏற்ற தாழ்வுகள்தான். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் இது குறித்து எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கிறார்களென்பது புரியாத ஒன்று.. நான் எழுதுவதன் மூலம் என் எண்ணங்களைப் பதிவிடுவதன் மூலம் அது குறித்த பிறரின் சிந்தனைகளை அறியவும்., முடிந்தால் ஒரு ஆரோக்கியமான சர்ச்சைக்கு வழிவகுக்கவும் உதவும் என்று எண்ணினேன்.என் பதிவுகளை வெறுமே பிறர் பாராட்ட வேண்டும் என்று மட்டும் நினைத்ததில்லை.அவர்கள் மாறுபட்ட கருத்துக்களை வெளியிடவும், அதை எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் ஏற்கவும் தயாராயிருந்தேன்.. ஆனால் என் அனுபவத்தில் பதிவுகளை வாசிப்பவர்கள் மிகவும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள். மாறுபட்டக் கருத்துக்களைக் கூறத் தயங்குகிறார்கள்.அதுவே கூறப்பட்ட கருத்துக்களுடன் உடன் படுகிறார்கள் என்று புரிதலும் தவறு. ஒவ்வாத கருத்துக்களைக் கண்டால் அதனைத் தாண்டி கருத்தெதுவும் சொல்லாமல் போகிறார்களென்பதே நிதர்சனம் எழுதும் பொருளுக்கு ஏற்றபடி கருத்துக்கள் இடப்படுவதில்லையே எனும் ஆதங்கம் எனக்குண்டு.அதை சில நேரங்களில் பகிர்ந்தும் இருக்கிறேன் .இதுவே பின்னூட்டங்களுக்கு நான் ஏங்குகிறேன் என்ற ஒரு தவறான கருத்துக்கும் வழி வகுத்து இருக்கிறது


ஆகஸ்ட் மாதம் 2010-ம் ஆண்டு எழுத ஆரம்பித்தேன். மூன்றாண்டுகாலம் ஆகிறது. 380 பதிவுகளுக்கு மேல் எழுதிவிட்டேன். ஆரம்பத்தில் ஓரிரு பதிவுகள் ஆங்கிலத்தில் எழுதினேன். தமிழ் மணத்திலிருந்து தமிழில் எழுத வேண்டினார்கள்.MUSINGS எனும் பதிவு எழுதினேன். பதிவுலகில் சற்றும் அறியப்படாதவன். இருந்தும் ஏறத்தாழ 70 பேர் படித்திருந்தனர். ஒருவராவது கருத்துப் பதிவு செய்யவில்லை அதன் பின் போராட்டங்கள் ஒரு கண்ணோட்டம் என்று தமிழில் எழுதினேன். அதுவும் சுமார் நூறு பேர்களால் வாசிக்கப் பட்டது. அதற்கும் யாரும் கருத்துப்பதிவு செய்யவில்லை. போகட்டும் நமது குணாதிசயத்தைப் பற்றி எழுதுவோம் என்று மறதி போற்றுவோம் என்று எழுதினேன். இதற்கும் எந்தக் கருத்தும் பதிவாகவில்லை. அதன் பின் வலைப்பூவில் பதிவுகள் ஒரு விமரிசனம் என்று எழுதி இருந்தேன்.அதற்கு சில கருத்துக்கள் கிடைத்தன. திரு காளிதாஸ் ( இவர் இப்போது முகநூல் பக்கம் போய்விட்டார்) திரு அப்பாதுரை. திரு சுந்தர்ஜி போன்றோரின் பின்னூட்டங்கள் சற்றே தெம்பைக் கொடுத்தது.
அதுவரை அந்தக் காலத்தில் எழுதிய சில காதல் கவிதைகளையும் இடுகையாக இட்டுக்கொண்டிருந்தேன். ஒரு மாறுதல் தோன்றி செய்யாத குற்றம் என்ற ஒரு பதிவு எழுதினேன். . உண்மையைச் சொன்னால் அந்தப் பதிவுக்கு கிடைத்த பின்னூட்டங்கள் நான் எழுதுவதை வாசித்து ரசிக்கவும் பதிவர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணம் எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்தது.அந்தக் காலத்தில் வாசிக்காதவர்கள் இப்போது வாசித்தால் எந்த மாதிரிப் பின்னூட்டங்கள் வரும் என்று அறிய, அதையே ஒரு பதிவின் லிங்க்காகக் கொடுத்திருந்தேன். பல பாராட்டுக்களைப் பெற்றுத் தந்தது அது.
அதற்கு அடுத்த பதிவாக என் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இயலாமை என்று ஒரு பதிவு எழுதினேன். அது குறித்த விமரிசனமாக பிற்காலத்தில் ஒரு பின்னூட்டம் வந்ததைக் குறிப்பிடலாம்
எழுத் எழுத வாசகர் வட்டம் சற்றே அதிகரிக்க பின்னூட்டங்களும் வர ஆரம்பித்தன. RANDOM THOUGHTS IN EIGHT HOURS  என்ற ஆங்கிலப் பதிவை தமிழாக்கி எண்ணத் தறியில் எட்டு மணி நேரம் என்று எழுதினேன்.

பின் என்ன ? சாதாரணன் ராமாயணம் என்னும் பதிவில் ஆறு காண்ட ராமாயணத்தை ஒரே வாக்கியத்தில் ஒரு அசாத்திய உந்துதலோடு எழுதினேன். பலரது பாராட்டுக்களைப் பெற்ற அதை நானா எழுதினேன் என்று சிலரைக் கேட்கவும் வைத்தது. இப்போது அதைப் படித்துப்பார்க்கும்போது எனக்கே அந்த சந்தேகமெழுகிறது....!இந்த நேரத்தில் ஆரம்ப காலத்தில் எனக்கு உற்சாகமும் ஊக்கமும் கொடுத்து எழுத வைத்தவர்களில் முக்கியமானவர்கள் சிலரைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். திரு. ஹரணி, திரு சுந்தர்ஜி, திருமதி.சக்தி பிரபா, டாக்டர் பழனி கந்தசாமி . அப்பாதுரை திரு ஜீவி ஆகியோருக்கு நிச்சயம் நான் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். அண்மைக் காலமாக திரு, திண்டுக்கல் தனபாலனை குறிப்பிட வேண்டும். எங்கோ ஓய்வு பெற்று இருக்கும் எனக்கு இப்போது உலகளாவிய வாசகர்கள் இருக்கிறார்கள் என்னும் எண்ணமே ஒரு ஊக்கமளிக்கும் டானிக் .!  

( சில பழைய பதிவுகளின் லிங்க் கொடுத்திருக்கிறேன்.படித்துப் பார்க்கலாமே. MUSINGS, மறதி போற்றுவோம், இயலாமை, எண்ணத் தறியில் எட்டுமணிநேரம் )    .     
       




     
         
 

 


 




திங்கள், 5 ஆகஸ்ட், 2013

நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு.?




நினைவுகள் எண்ணங்கள் ஒரு ஆய்வு?
--------------------------------------


நினைவுகள் சுவையானவை ஏனென்றால்
அவை நடந்து முடிந்தவற்றின் எச்சங்கள்
நல்லன அசைபோடலாம்
அல்லன எழும் முன்னே போக்கலாம்
நினைவுகள் நம் கட்டுப் பாட்டில் இருப்பவை..

எண்ணத்  தறியில்  எழில்  நினைவுப் பின்னிப்
பிணைந்திழையோட  இழையோட
கன்னக்குழியில்   வண்ணக்குமிழ்  கொப்பளிக்க
பைந்தமிழ்   மொழிபேசி   மொழிபேசி
மின்னலிடையில்   மனந்திளைத்த  எனைப்
புன்னகை    ஒளிவீசி   ஒளிவீசி
இன்னலிடை  யின்றவள்   மீட்டாள்
காதல்   பண்பாடி  பண்பாடி  |




   
கொஞ்சும்  விழிகள்  வேல்போல்  தாக்க
எஞ்சிய  உறுதியும்  காற்றில்  பறக்க
தஞ்சமேனப்புகு   என  மனமும்  நினைக்க
மிஞ்சியதென்னில்  அவள்  திருஉருவம்  |


அன்ன நடையழகி ஆடிஎன்முன்  நிற்க
பின்னிய  கருங்குழல்  அவள்   முன்னாட
என்ன  நினைததனோ  அறியேன்   அறிவேன்
பின்னர்  நிகழ்ந்தது   அதனைக்  கூறுவன்  கேளீர்  |


இருமன   மொன்றாய்  இணைய _அதனால்
இறுகிப் பதித்த   இதழ்கள்  கரும்பினுமினிக்க
இன்சுவை  உணர   ஊறி  கிடந்தேன்
இறுதியில்  உணர்ந்தேன்  கனவெனக்  கண்டது


கண்ட  கனவு  நனவாக  இன்று
காரிகையே   அழைக்கின்றேன் ; அன்புக்
கயிற்றால்   பிணைக்கின்றேன்கண்ணே
கட்டும்  பிணைப்பும்  பிரியாது  உறுதி  |     



என்றோ எழுதியது நினைவில்
ஆடுகையில் அனுபவிப்பது சுகமே

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

சொல்லிப் போனான் பாரதி  

அவனுக்கென்ன சொல்லிவிட்டான்
நல்லவே எண்ணல் வேண்டும்
ஒரு வேளை அவனுக்குத் தெரியவில்லையோ
எண்ணங்கள் கட்டுக்குள் அடங்காதவை
எது எண்ணக் கூடாதோ அதுவே முன்னே சதிராடும்
மருந்து அருந்துகையில் குரங்கின் எண்ணம்
வரக்கூடாது என்றாலும் அதுதானே முன் நிற்கும்


எண்ணம், சொல், செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம், விருப்பு வெறுப்பு, உயர்வு தாழ்வு,
எண்ணத்தின் நாடகமே;பிரபஞ்சத்தின்
ரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக்கப்பாலும் ஒன்றுமில்லை

மனவளக் கலை போதிக்கும் வேதாத்திரியார் வாக்கு


பிறந்தவன் ஒரு நாள் இறக்கத்தான் வேண்டும்
எண்ணத்தில் வாராமலேயே அது நிகழ்தல் வேண்டும்
உற்றவரின் இழப்பு நமக்கும் அதுதானே விதி
என்று எண்ண வைத்தாலும் அது எப்போதென்று
எண்ணாமல் இருக்க முடியவில்லை.
மூப்பினால் ஏற்படும் விளைவோ  என்னவோ
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும் என்பவர்
அதைக் கட்டுக்குள் வைக்க என்னென்னவோ சொல்கிறார்
நமக்கது இப்போது தோதாகும் என்று தோன்றவில்லை


நினைவுகள் அதுவும் சுகமான நினைவுகள் கொண்டு
வேண்டா எண்ணங்களைத் துரத்த முயல்கிறேன்
எத்தனையோ போராட்டங்கள் பார்த்தாயிற்று நான்
வெல்லவில்லையா.?நானில்லாவிடினும் ஏதும் மாறாது
எதுவும் கடந்து போகும், இதுவும் கடந்து போகும்.

( பதிவிட தலைப்பு ஏதும் சிக்கவில்லை. நினைவுகளும் , எண்ணங்களும் எழுத வைத்து விட்டன.)    .     
       
.

 



 





 

 




சனி, 3 ஆகஸ்ட், 2013

ஒரு இழப்பும், சில அதிர்வுகளும்





ஒரு இழப்பும் சில அதிர்வுகளும்.
--------------------------------

“ நானு இவங்கப்பாவக் கல்யாணம் கட்டி வந்த போது எனுக்குப் பதினாலு வயசு. வாழ்க்கைல எல்லாத்தையும் பாத்தாச்சும்மா.ஹூம்”- வயதானவர்கள்  சுபாவப்படி, அடிக்கடி பழைய நினைவுகளில் மூழ்கி விடுவார்.பொறுமை இருந்தால் பல சுவாரசியமான செய்திகளைக் கேட்கலாம்.இப்போதுதான் ஒரு இடத்தில் எங்கும் போகாமல் நினைவுகளிலேயே காலங்கழிக்கிறார், காலில் சக்கரம் கட்டாத குறைதான். ‘ உம்என்று நினைப்பதற்குமுன் அங்கே ஆஜராகிவிடுவார். இப்படித்தான் ஒரு முறை மகளுக்கு திடீரென்று அப்பெண்டிக்ஸ் ஆப்பரேஷன் என்று இரவு செய்தி கிடைத்தவுடன் இரவோடிரவாக பஸ்ஸைப் பிடித்து அதிகாலையிலேயே அங்கு போய் விட்டார். அவருடைய வரவே பாதி கவலையை போக்கிவிட்டது.

தன் சிறுவயதில் தங்களுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தார் தற்சமயம் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு ஊருக்குப் போய் துணிமணிகளுடன்  பணமும் கொடுத்து உதவியதோடு நில்லாமல் , சிறு வயதில் உதவியதைக் கூறி நன்றியும் தெரிவித்திருக்கிறார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களை அறியாதோரே இல்லை எனலாம். வாழ்க்கையை முழுவதும் வாழ்ந்து அனுபவித்த அவர் சிரித்துக் கொண்டே உயிர் விட்டது மறக்க முடியாதது.

காலையில் பாத் ரூமுக்குப் போக எழுந்தவர் ( பிறர் உதவி இல்லாமல் எழுவது கடினம் ) சற்றே நிலை தவறி சாய்ந்திருக்கிறார். சாய்ந்தவர் தலையில் சிறிது காயம் ஏற்பட்டு இரத்தம் வழியவே அடுத்து இருந்த மருத்துவர் ( லேடி டாக்டர் ) வரவழைக்கப் பட்டார். அவர் வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டு ஒரு இஞ்செக்‌ஷனும் போட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் தலைக் காயத்தைக் காண்பிக்கச் சொன்னார். இது நேர்ந்ததும் மூத்தமகன் அன்று காலையில் ரயிலில் வர இருந்தவனுக்கு செய்தி போயிற்று. தொலைபேசியில் பிரச்சனை ஏதும் இல்லை, வீட்டுக்குப் போய் நிதானமாக வந்தால் போதும் என்றிருக்கிறார். இரண்டாம் மகனிடமும் சிறிய காயம்தான் கவலை வேண்டாம் என்றிருக்கிறார். ரயில் தாமதமானாலும் மூத்தமகன் வந்தபோது சிரித்துக் கொண்டே , ‘எனக்கேதும் இல்லை கவலை வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார். பேசிக் கொண்டே இருந்தவர் “ என்னவோ செய்கிறது என்று சொல்லவும் மகன் அவரைத் தன் காரில் எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்குப் போயிருக்கிறார். அவரை பரிசோதித்த டாக்டர் தன் குறிப்பில் brought dead என்று குறிப்பிட்டு கூடவே head injury என்று எழுதி ஒரு கேள்விக்குறியும் இட்டிருக்கிறார்,இந்தப் பதிவே அதிலிருந்துதான் தொடங்குகிறது.

உடலை வீட்டுக்குக் கொண்டுவந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனிக்கலாமென்றால், உடலைப் பெற காவல்துறை அனுமதி வேண்டும் என்றார்கள். காவல்துறையினரோ தலையில் காயம் என்பதால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே உடலைப் பெறலாம் என்றார்கள். 85 வயது நிரம்பியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தவர்களை பிரேதப் அரிசோதனைக்கு உட்படுத்தல் நியாயமில்லை என்று எவ்வளவோ வாதாடியும் அவர்கள் தலையில் காயம் என்பது சந்தேகத்துக்குரியது. என்று கூறி உடலைத் தர மறுத்துவிட்டார்கள். பின் என்ன.? காவல்துறையினருக்குக் கப்பம் மருத்துவரை கவனிக்க என்றுஅவரவர் கையில் பணம் வைத்து சமாளித்து பிரேதப் பரிசோதனை செய்ததாக மருத்துவச் சான்று வாங்கி உடலை சேதமில்லாமல் பெறுவதற்குள் மாலை மணி ஆறாகிவிட்டது. அந்திமக் கிரியைகள் அடுத்த நாள்தான் சாத்தியமாயிற்று.. இந்த நிலைமை வசதியற்ற ஏழைகளுக்கு நேர்ந்திருந்தால்..? ஒருவரது இழப்பிலும் பணம் பார்க்க நினைக்கும் காவல்துறையினருக்கும் மருத்துவருக்கும் மனசாட்சியே கிடையாதா.?பணத்தின் முன் சட்டம் வளைந்து கொடுப்பதை இம்மாதிரி நிகழ்ச்சிகள் மூலம்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா.?

மனம் கனக்கிறது. பொறுக்க முடியாமல் இதை எழுதுகிறேன். உற்றவரின் இழப்பு ஒரு புறம் என்றால் அதன் அதிர்வுகள் வேறு வகையில். நாம் எங்கே போகிறோம்.?
       


   "


     
                              

திங்கள், 29 ஜூலை, 2013

கனவுகள்.... எண்ணச் சிதறல்கள்.


     


            கனவுகள் எண்ணச் சிதறல்கள்.


நண்பர்:--. இப்போதெல்லாம் வலைப் பூ பதிவுகளில் பதிவாகிக் கொண்டிருக்கும் சுவாரசியமான விஷயங்கள் என்ன என்று கூற முடியுமா.?

நான்:-- இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னால் பலரது துவேஷங்களையும் நான் சம்பாதிக்க வேண்டி இருக்கும். .ஒவ்வொருவர் பதிவிடும்போதும் அது சுவாரசியமாக இருக்கிறது என்று நினைத்துத்தான் பதிவிடுகிறார்கள்.

நண்பர்:-- அது சரி. உனக்குப் பதிவிட ஒரு தலைப்பு சொல்லட்டுமா.?

நான்:- நான் பல தலைப்புகளில் எழுதி விட்டேன். நகைச்சுவை என்னும் பெயரில் பலர் எழுதுவதுதான் எனக்கு சீரணிப்பதில்லை.என் வசப்படுவதுமில்லை.

நண்பர்:- இதிலிருந்தே தெரியவில்லையா உனக்கு வயது அதிகமாகிவிட்டது என்று.?

நான்:-ஒப்புக் கொள்கிறேன். , அதுவும் திரைப் படங்களில் நகைச் சுவை என்று அவர்கள் அடிக்கும் கூத்து சகிக்க முடியவில்லை. ஆனால் என்னைச் சுற்றி இருப்பவர் வாய்விட்டுச் சிரித்து நோய் அண்ட விடாமல் செய்கிறார்கள்.


நண்பர்:- ஒரு அந்தரங்கக் கேள்வி. கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே.

நான்:- அது கேள்வியைப் பொறுத்தது.

நண்பர்:- உனக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப் படும்.? உனக்கு வருமானம் எவ்வளவு.?

நான்:- இரண்டு கேள்விக்குமே பதில் கிடைக்காது. இருந்தாலும் எங்களுக்கு மாதச் செலவுக்கு எவ்வளவு பணம் தேவை என்பதே அபத்தமானது. எவ்வளவு பணம் கிடைத்தாலும் போதாது. ஆனால் கிடைக்கும் பணம் போதுமானது.

நண்பர்:- விதண்டா வாதமான பதில் . ஒரே கேள்விக்கு எப்படி இரண்டு முரணான பதில்கள் சரியாயிருக்கும்.?

நான்:- அங்குதான் சூட்சுமமே இருக்கிறது. பண வரவு அதிகமாக அதிகமாக தேவைகளும் அதிகமாகும். கிடைப்பது பற்றாக் குறையாய் இருக்கும். பண வரவு குறைவாக இருந்தால் தேவைகள் சுருங்கும். இருப்பதில் வாழ மனம் நினைக்கும்..

நண்பர்;-சற்று விளக்கமாகப் பதில் தரலாமே.

நான்:- சரி. விளக்கமாகவே கூறுகிறேன்.இங்கிருந்து சென்னைக்குப்போக வேண்டும். எப்படியெல்லாம் பயணிக்கலாம்.? சாதாரண அரசு பஸ்ஸில் செல்லலாம். தொடர் வண்டியில் பயணிக்கலாம் இரண்டாம் வகுப்பில் போகலாம் ஸ்லீப்பரில் போகலாம், குளிர்சாதன வசதியுடன் a/c யில் பயணிக்கலாம். காரில் பயணம் மேற்கொள்ளலாம். விமானத்தில் பறக்கலாம். இவற்றில் எந்த விதப் பயணம் மேற்கொள்வோம் என்பது கையிருப்பைப் பொறுத்தும் நம் மன திருப்தியைப் பொறுத்தும் அமையும். அதிக செலவு அதிக வசதி. ஆனால் இலக்கு ஒன்றுதான் சென்னை செல்ல வேண்டும். ஒரு காலத்தில் முன் பதிவு செய்யாமல் இரண்டாம் வகுப்பு ரெயிலில் பயணித்து இருக்கிறேன். இப்போது வசதி (என் மக்கள் உபயம்) கூடி விட்டதால் அதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை. இன்றும் அநேக மக்கள் முன் பதிவு இல்லாமல் இரண்டாம் வகுப்பில் பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் அதனால் அவர்களைவிட  நான் என்னை மாறுபட்டவனாக நினைப்பதில்லை. வசதி பெருக்கத்தால் நான் என்னை வித்தியாசப் படுத்திக் காண்பித்துக் கொள்வதில்லை.

நண்பர்:- இவ்வளவு விளக்கமும் எதற்காக.?

நான்:- இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும் என்று சொல்கிறேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்கிறேன்

நண்பர்:- நீதானே contentment  smothers improvement என்று சொல்வாய்.

நான்:- அந்த context- வேறு. அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஏற்ற தாழ்வுகள் மாற வேண்டும். இப்போது இருக்கும் நிலையில் எல்லாமே சரியென்று எண்ணத் துவங்கினால் முன்னேற்றம் இருக்காதுஆனால் ஒன்று சொல்லித்தான் ஆகவேண்டும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும் போது இன்னும் இன்னும்  என்று தேவைகளை அதிகரித்துக் கொள்கிறோம் திருப்தி அடைந்தால் முன்னேற்றம் இல்லை.ஒரு புறம் முன்னேற்றம் கருதி திருப்தி கூடாது. இன்னொருபுறம் நிம்மதி வேண்டி திருப்தி தேவை. THAT IS THE PARADOX. இரண்டுக்கும் வரையறை  தெரிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்:- அதையும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லேன்.

நான்:-சில நாட்களுக்கு முன் எங்கே நிம்மதி என்று எழுதி இருந்தேன். அதில் வாழ்க்கையில் சில தேவைகள் சரியாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று எழுதி இருந்தேன். அதில் குடியிருக்க சொந்தமாக ஒரு வீடும் தேவை என்று எழுதி இருந்தேன். நண்பர் ஜோசப் அவர்கள் அது குறித்துப் பின்னூட்டமிடும்போது நிம்மதிக்கு சொந்த வீடு... உண்மையில் அது தேவையா? அப்படியானால் ஏழைகள் எவருமே நிம்மதியாக இல்லையா, என்ற கேள்வியும் எழுகிறதே. அன்றைக்கு மட்டும் உழைத்து, ஈட்டியதையெல்லாம் அன்றே கரைத்துவிட்டு வெட்ட வெளியில் உறங்கி எழும் பலரும் நம்மைப் போன்ற நடுத்தரவாசிகளை விடவும் நிம்மதியாய் உறங்கி எழுகின்றனர் என்பதை மறுக்கமுடியுமா? வசதி வாய்ப்புகள் மட்டுமே மனிதனுக்கு நிம்மதியை அளித்துவிடுவதில்லை என்பதும் உண்மை இதைத் தான் நான் PARADOX என்று சொல்கிறேன். ஏழைகள் எல்லோருமே நிம்மதியாய் இருக்கிறார்கள் என்றால் நிம்மதி என்பதன் பொருளே விளங்காமல் போய் விடுகிறது. அவர்களது பிரதிதின வாழ்வே ஒரே போர்க்களமாகி விடுகிறது. வாய்க்கும் வயிற்றுக்கும் வழி வகுக்கவே அவர்கள் படாத பாடு படுகிறார்கள். இவை இருப்பவர்களுக்குப் புரிவது கஷ்டம்.

நண்பர்:- நீ அப்ஸ்ட்ராக்ட் ஆக ஏதோ எண்ணிக்கொண்டு பேசுகிறாய்.

நான்:- உனக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா.?பசிக்கும் நேரத்தில் உண்ண ஏதும் கிடைக்காமல் யாரிடமும் கேட்க வழியில்லாமல் அவதிப் படிட்டிருக்கிறாயா.? நேரம் தாழ்ந்தாவது உணவு கிடைக்கும் என்னும் நம்பிக்கை இல்லாமல் அரை வயிறோ கால் வயிறோ கஞ்சிக்கும் அல்லாடும் பலரது வாழ்வில் நிம்மதி எங்கிருந்து வரும்? முதலில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப் படவேண்டும்.இருந்தால்தான் மனம் அமைதியில் இருக்கும். எனக்கென்னவோ இந்த உண்மையைப் புரிந்துகொண்டுதான் இலவசமாகத் தேவைகளைக் கொடுத்து மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது.என்னதான் உழைத்து முன்னேற நினைத்தாலும் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்கும் இருக்கும் DISPARITY மிக அதிகம் என்று நினைக்கிறேன்.

நண்பர்:- இதற்கு நீயும் நானும் என்ன செய்ய முடியும்.?அதது பூர்வ ஜென்ம பலன் படி நடக்கும்.

நான்:- நீயும் நானும் என்ன செய்ய முடியும் என்பதை விட என்ன செய்யாது இருக்க வேண்டும் என்பதே முதல் காரியம். அடுத்தவன் கஷ்டப் படும்போது , உன்னுடைய பகட்டை வெளிச்சம் போட்டுக் காட்டாதே. பெரிய பெரிய மால்களிலும் ஷாப்பிங் காம்ப்லெக்ஸ்களிலும் அதிக செலவு செய்து பொருட்களை வாங்காதே. அடுத்து இருக்கும் நாடார் கடையிலோ அண்ணாச்சி கடையிலோ கிடைக்கும் பொருட்களுக்கு ஸ்டைலாகக் காரிலோ பைக்கிலோ போய்  பெரிய கடைகளில் வாங்கினால்தான் உன் மதிப்பு உயரும் என்று நினைக்காதே. பகட்டான கட்டிடத்துக்கும் குளிர்சாதன வசதிக்கும் அவர்கள் உன்னிடம்தான் பணம் வாங்குகிறார்கள். வீதியில் வண்டியில் வரும் காய்கறிகளை வாங்கினால் அந்த ஏழையின் வீட்டில் அடுப்பெரிய நீ வழி வகுப்பாய். தள்ளுவண்டியில் வியாபாரம் செய்பவனுக்கும் வாயும் வயிறும் இருக்கிறது

நண்பர்:- பேச விட்டால் பொதுவுடமைக் கொள்கைகளை பரப்பி விடுவாய் போலிருக்கிறதே.

நான்:-நமக்கு விருப்பமில்லாதவற்றை யாரும் நம் மேல் திணிக்க முடியாது. சூழ் நிலைக்கைதிகள் என்று சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. எனக்கும் உனக்கும் நன்றாகவே தெரியும். எத்தனையோ நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப் படும் பணத்தில் முழங்கையில் வழிவதே நமக்குக் கிடைக்கிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் என்பதை அடையாளப் படுத்த குடும்ப அட்டைகள் வழங்கப் படுகின்றன. ஆனால் புழக்கத்தில் இருக்கும் அட்டைகளோ இருப்பவர்களின் எண்ணிக்கைக்கு இரண்டு மடங்கு. இது எப்படி சாத்தியம். நலத் திட்டங்களின் பலன் அது தேவை இல்லாதவர்களால்பறிக்கப் படுகிறது

நண்பர்: இந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தால் அநேகமாக எல்லோரையும் குற்றவாளிகளாக்கி விடுவாய்.

நான்:- என் ஆதங்கமே நம்மிடத்தில் தேவையான புரிதல் இல்லையே என்பது தான் மீண்டும் கூறுகிறேன். இருக்கும் நிலையை இருப்பதுபோல் புரிந்து கொள்ளும் மனப் பக்குவம் எனக்குக் குறைவு. நான் அதிகமாகக் கனா காண்கிறேனோ.?