Wednesday, August 28, 2013

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி.


                     
                   

  


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
கண்ணன் பிறந்த நாளான இன்று கண்ணனைப் பற்றிய நினைவலைகள் பதிவில். கண்ணன் என்றதும் அவனது மாயைகள் தான் நினைக்கத் தோன்றுகிறது. பிறக்கும்போதே தான் கடவுளின் அவதாரம் என்று தெரிந்தே வாழ்ந்த கிருஷ்ணன் அவ்வப்போது தன் மாயாஜாலங்களைக் காட்டிச் சொல்லிப் போனதுதான் என்ன.?
இல்லாததை இருப்பது போல் தோற்றுவதும் , இருப்பதை இல்லாதது போல் தோற்றுவிப்பதும்  மாயையின் விளைவு என்று புரிதல் தவறல்லவே .உலகே மாயம் வாழ்வே மாயம் என்பதும் சரிதானே.. நிரந்தரம் என்பது ஏதுமில்லை, நிகழ்வதுகளிலும் நிச்சயமில்லை.  
கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
னத்தின்  மயக்கமே  மாயை என்றறிவோம்
உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
பேதம் பாராமல் பகிர்ந்துண்டு  வாழ்தல்  பெருமை தரும் 
ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும் முன்பொரு முறை நான்   எல்லாமே மாயைதான் என்ற பதிவில் எழுதி இருந்தது.படிக்க விரும்புவோர் இதைச் சுட்டுங்கள்





அவன் பிறந்த நாள் என்று நாம் கொண்டாடும் இந்நாளில் இம்மாதிரி எண்ணங்கள் தோன்றுவதும் சரிதானே. ஆனால் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி என்னும் இந்நாளில் சில மனசுக்கு இதந்தரும் நினைவுகளும் இல்லாமல் இல்லை. பண்டிகைகள், திருவிழாக்கள் எனும் போது இளம்பிராயத்து நினைவுகளும் முட்டி மோதி முன் வருகிறது. நான் என்னுடைய பத்து பதினோரு வயதுகளில் என் தந்தை வழிப் பாட்டியின் வீட்டில் கோவிந்தராஜபுரம் என்னும் ஒரு அக்கிரகாரத்தில் ( கல்பாத்திக்குப் பக்கம்) இருந்தேன். ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அன்று கிராமம் பூராவும் குட்டிக் கிருஷ்ணர்களின் தோற்றமாகவே இருக்கும். சிறுவர்கள் கிருஷ்ண வேடத்தில் ஆளுக்கொரு கொம்பைக் கையில் ஏந்தி கையில் ஒரு சொம்பும் எடுத்துக் கொண்டு வீடு வீடாகப் போய் “ ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி, சிவராத்திரி ஜெயந்திஎன்று ஏதோ சொல்லிக் கொண்டு (சரியாக நினைவுக்கு வரவில்லை) போவார்கள். சில வீடுகளில் சிறுவர்களுக்குக் கோவணமாகத் துண்டுதுணிகள் குச்சியில் கட்டுவார்கள். சில வீடுகளில் கொண்டு போகும் செம்பில் எண்ணை ஊற்றிக் கொடுப்பார்கள்.சிறுவர்களே அன்றுமாலை சப்பரம் ஒன்று செய்து அதில் கண்ணனை இருத்தி ஊர்வலம் கொண்டு செல்வார்கள். பிற்காலத்திய நினைவுகள் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைக் கண்ணனின் பாதச் சுவடுகளை அவன் வந்ததுபோல் தெரியப் பதிப்பார்கள்.பிறகு சீடை முறுக்கு போன்ற பட்சணங்கள் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும். 





கிருஷ்ணனின் பிறந்த நாளில் நாங்கள் மதுராவுக்குச் சென்றுவந்ததும் நினைவுக்கு வருகிறது ஜெய்ப்பூரில் இருந்து மதுரா வந்தோம். என் அண்ணாவின் பெண் அங்கிருந்தாள். இரண்டு நாட்கள் தங்கினோம். கண்ணன் பிறந்த ஜென்மத் தலம் என்று கூறப்படும் சிறைச் சாலையையும் கண்டோம், அங்கு பாது காப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகம். அதற்கான காரணம் அதற்கு முன் நிகழ்ந்திருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புத்தான் என்பது புரிந்தது..மத வெறியைத் தூண்ட ஒரு சிறு பொறி போதும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் historically நம் பிரபலக் கோயில்களைச் சுற்றிலும் (அல்லது வெகு அருகாமையில்) மசூதிகள் இருக்கின்றன. காசி விசுவநாதர் கோயிலும் சரி , மதுரா கிருஷ்ணர் கோயிலும் சரி மசூதிகளை ஒட்டியே இருக்கின்றன, இனம் மதம் மொழி இவை எப்போதுமே மிகவும் சாக்கிரதையாக கையாளப் படவேண்டும் மனிதனை சிந்திக்க வைக்காமலேயே வன்முறையைத் தூண்டும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது


மதுராவைச் சுற்றி சுமார் முப்பது கிலோமீட்டருக்குள் கண்ணனின் லீலைகள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கோவர்தன், நந்த்காவ்ன்,,பர்சானா, த்வாரகேஷ் என்னும் இடங்கள், மற்றும் யமுனா நதி. அண்மையில் ISCON  நிறுவியுள்ள் கிருஷ்ணர் கோயில் எல்லாமே நினைவுக்கு வருகிறது. ISCON  கோயிலில் கண்ணாடிக்குள் கண்ணனின் லீலைகளைக் கூறும் பல சிலைகள் ( எல்லாம் அசைந்து செயல்படும்) இருக்கின்றன. கம்சனைக் கண்ணன் போரிட்டுக் கொல்வது அசையும் பொம்மைகளால் காட்டப் படுகிறது. அருகில் ராதா ராணி கோயில்
(பர்சானாவிலா?) அழகானப் பின்னணியில் காணப் படுகிறது. அங்கு அப்போது எடுத்த  புகைப் படங்களைப் பார்க்கும்போது மலரும் நினைவுகள் இனிமை சேர்க்கின்றன. புகைப் படச் சுருளில் எடுத்த படங்கள், பதிவில் சேர்க்கத் தெரியவில்லை.


அங்கு சென்றிருந்தபோது மனதை பாதித்த விஷயம் என்னவென்றால் கண்ணன் வாழ்ந்த இடங்களில் தற்சமயமிருக்கும் மக்களின் ஏழ்மையே.. தங்களை ப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்ளும் மக்கள் அவன் பேரைச் சொல்லியே பிச்சை எடுக்காத குறைதான்

கடைசியாத் தோன்றுவது ஆண்டவனின் அவதாரமே என்று அறிந்தே பிறந்தவன் ஏதோ சாபத்தால் யாதவர்களிடையெ நிகழ்ந்த சண்டையில் காலில் அம்பு பட்டு இறந்தான் என்பது சீரணிக்க முடியவில்லை. அவதாரக் கதைகளும் அவற்றுக்கான காரணங்களாகச் சொல்லப் படும் கதைகளும் நம் சந்ததியினர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் இப்போது இருந்து வரும் nucleus  குடும்பங்களில் அவற்றைச் சொல்லிக் கொடுக்கவே ஆளில்லாதது பெருங்குறையே.
--------------------------------------------   


 


 


  

14 comments:

  1. GMB அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்! உங்களது பழைய மலரும் நினைவுகள், அந்தக் கால மக்கள் வாழ்க்கையைக் காட்டுவதாக உள்ளன.

    // அங்கு அப்போது எடுத்த புகைப் படங்களைப் பார்க்கும்போது மலரும் நினைவுகள் இனிமை சேர்க்கின்றன. புகைப் படச் சுருளில் எடுத்த படங்கள், பதிவில் சேர்க்கத் தெரியவில்லை. //

    ஒரு நல்ல போட்டோ கலர் லேபில் கொடுத்தால், அவர்கள் நெகட்டிவிலிருந்து படங்களை சிடி அல்லது பென் டிரைவ்விற்கு மாற்றித் தருவார்கள். நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்து கொள்ளலாம்.

    // இனம் மதம் மொழி இவை எப்போதுமே மிகவும் சாக்கிரதையாக கையாளப் படவேண்டும் மனிதனை சிந்திக்க வைக்காமலேயே வன்முறையைத் தூண்டும் சக்தி அவற்றுக்கு இருக்கிறது //

    உண்மைதான். எல்லோரும் உணரவேண்டும்.


    ReplyDelete
  2. ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அன்று கிராமம் பூராவும் குட்டிக் கிருஷ்ணர்களின் தோற்றமாகவே இருக்கும்.//

    ஆஹா!, அருமையான காட்சி பகிர்வு.
    மனக்கண் முன் அப்படியே விரிந்து கோகுலம் வந்து விட்டது.

    ReplyDelete
  3. என்னுள்ளும் பால்ய நினைவுகளை
    கிளறிப்போனது பதிவு
    கிருஷ்ணதார முடிவு சென்ற யுகத்தில்
    வாலியை ஒழிந்திருந்து கொன்ற செயலுக்கு
    கர்ம வினையாக வாலியே வேடனாகப் பிறந்து
    கண்ணன் காலாட்டி அமர்ந்திருந்ததை மானாகக் கருதி
    அதே போல் கொன்றதாக எங்கோ படித்த நினைவு
    கண்ணனின் தஞ்சைபாணி ஓவியங்கள் அருமை
    சிறப்புப் பதிவு வெகு சிறப்பு

    ReplyDelete
  4. கோவர்தன்க் கிரி, மிக நன்றாக இருக்கும், கோவர்த்தன கிரியை ,கிரிவலம் வரும் மக்கள் அடிக்கு அடி கீழே விழுந்து நமஸ்காரம் செய்வதை பார்க்கும் போது அவர்களின் பக்தி மெய்சிலிர்க்க வைக்கும்.

    படங்கள்(தஞ்சை ஓவியங்கள்) எல்லாம் மிக அழகு எல்லாம் நீங்கள் செய்தவையா?
    உங்கள் மலரும் அனுபவங்கள் மிக அருமை.

    ReplyDelete
  5. நிரந்தரம் என்பது ஏதுமில்லை, நிகழ்வதுகளிலும் நிச்சயமில்லை.
    கருத்துப் பிழைகளும் காட்சிப் பிழைகளும் நிறைந்ததே வாழ்க்கை

    மலரும் நினைவுகளை இனைமை சேர்த்து அளித்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  6. அருமையான மலரும் நினைவுகளின் பதிவு!..கிருஷ்ண ஜன்ம பூமியைத் தரிசித்த புண்ணியம்!..எல்லாருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
  7. இனிய கோகுலாஷ்டமி நல்வாழ்த்துகள்.

    காட்டியுள்ள அந்தக்கால படங்கள் அழகோ அழகு தான்.

    ReplyDelete
  8. Finally wrote the tag you gave me sir! "kanini anubavam..." thank you for tagging...

    ReplyDelete
  9. சிறுவயதில் சப்பரம் இழுத்துக் கொண்டு ஓடியது நினைவில் வந்தது ஐயா நன்றி

    ReplyDelete
  10. வர வர பிரபலமான கோவில்களுக்கு போவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.நானும் இதை கவனித்திருக்கிறேன். எல்லா ஹிந்து கோவில்களுக்கு அருகில் ஒரு மஸூதி இருக்கிறது. அக்காலத்தில் மதம் என்பது தனி மனிதனைப் பொறுத்தது என்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு போயிருப்பார்கள் என்றே தோன்றும்.

    ReplyDelete
  11. மாயையின் பிடியில் மயங்கி இருப்பதே வாழ்க்கையின் நிதர்சனம்
    மனத்தின் மயக்கமே மாயை என்றறிவோம்
    உண்டு உறங்கி எழுவது நிச்சயமில்லை போகுமிடம்
    தெரியாமல் போகாத ஊருக்குப் பொருள் ஈட்டி யாருக்கென்ன லாபம்
    பேதம் பாராமல் பகிர்ந்துண்டு வாழ்தல் பெருமை தரும்
    ஈதலின் இன்பம் கொடுத்தனுபவித்தால் புரியும்” //

    ஆஹா... அருமையான வரிகள்....

    ReplyDelete
  12. அங்கு பாது காப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகம். அதற்கான காரணம் //அதற்கு முன் நிகழ்ந்திருந்த அயோத்தி பாபர் மசூதி இடிப்புத்தான் என்பது புரிந்தது..மத வெறியைத் தூண்ட ஒரு சிறு பொறி போதும். ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் historically நம் பிரபலக் கோயில்களைச் சுற்றிலும் (அல்லது வெகு அருகாமையில்) மசூதிகள் இருக்கின்றன. காசி விசுவநாதர் கோயிலும் சரி , மதுரா கிருஷ்ணர் கோயிலும் சரி மசூதிகளை ஒட்டியே இருக்கின்றன,//


    :))))) போகட்டும். எப்போவுமே கிருஷ்ண ஜன்ம பூமியில் பாதுகாப்புக் கெடுபிடிகள் உண்டு. கண்ணன் அவதார நோக்கம் முடிந்தது. கலி பிறக்கும் நேரம் நெருங்கியது. யாதவர்கள் அனைவரும் சாபத்தில் மடிந்தனர். ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு. அப்போது தன் குலத்தினர் யாரும் இல்லாமல் அவன் மட்டும் தனித்திருக்க விரும்பவில்லை என்பதோடு அவன் வந்த நோக்கமும் நிறைவேறியது. ஒவ்வொருத்தராகச் சென்றுவிட்டனர். ஆதிசேஷன் அவதாரம் எனப்படும் பலராமரும் பிலத்துவாரத்தின் மூலம் சென்றதாய்க் கூறுவார்கள். குஜராத் சோம்நாத்தில் இந்த இடங்களைக் காணலாம். கிருஷ்ணருக்கும் சாபம் இருந்தது. கால் குதிகாலில் அம்பு பட்டு உயிரை விடுகிறார். இது அவரே வலிந்து ஏற்றுக்கொண்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete

  13. @ தி. தமிழ் இளங்கோ
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. என்னிடம் இருக்கும் படங்களை ஸ்டூடியோவில் கொடுத்து கணினியில் சேர்ப்பதென்பது ஒரு ப்ராஜெக்ட் ஆகிவிடும். நானே ஒரு ஸ்கானர் வாங்க முடியுமா என்று பார்க்கவேண்டும்.

    @ கோமதி அரசு
    ஸ்ரீகிருஷ்ண ஜெயந்திப் பதிவு சற்றே வித்தியாசமாக இருக்கட்டும் என்றே மலரும் நினைவுகளாய் எழுதினேன். இதில் காணும் ஓவியங்கள் என் கை வண்ணமே. நான் ஒவியம் வரையத் தொடங்கியது பற்றி ஒரு பதிவு எழுதி இருந்தேன்” நான் ஒரு ஏகலைவன்” என்று. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

    @ ரமணி
    வருகைக்கும் உற்சாகமூட்டும் பாராட்டுக்கும் நன்றி. அந்தக் கதை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

    @ இராஜராஜேஸ்வரி
    /மலரும் நினைவுகளை இனைமை சேர்த்து அளித்த அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்/ பாராட்டுக்கு நன்றி மேடம்.

    @ துரை செல்வராஜ்
    @ கோபு சார்
    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    கோயிலுக்குப் போகும் போது ஒரு இறுக்கமான சூழல் நினைவுக்கு வந்தது வருகைக்கு நன்றி.

    @ டி.பி.ஆர். ஜோசப்
    வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியதற்கு நன்றி.

    @ கீதா சாம்பசிவம்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இந்தக் கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். கடவுளின் அவதாரமே தான் என்று அறிந்திருந்தவரின் முடிவு நெருடியது. அதனால்தான் குறிப்பிட்டு எழுதினேன்.

    ReplyDelete