கோவிலும் கோவிலைச் சார்ந்தும். .....
--------------------------------------------------
வலைப் பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இடைவெளிக்குப் பின் எழுதும்
போது கடவுள் பற்றியும் கோவில் பற்றியும் எழுதினால் பலரும் படிப்பார்கள் என்று
தோன்றுகிறது. நாங்கள் வசிக்கும் பகுதி ஏறத்தாழ ஒரு மினி கேரளா என்று சொல்லலாம்.மலையாளிகளுக்கு
பகவதிக்கு அடுத்தது ஐயப்பன் வழிபாடு பிரதானம் நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு
ஐயப்பன் கோவில் உண்டு.பெங்களூரில் சற்று பிரசித்தியானது. ஜலஹள்ளி ஸ்ரீஐயப்பன்
கோவில் என்று பெயர். வழக்கம் போல் இந்த வருடமும் கார்த்திகை மாதம் முதல் ஐயப்ப
சீசன் களை கட்டி விட்டது. ஏராளமான ஐயப்ப பக்தர்களின் கூட்டம் எப்பொழுதும் கோவிலில்
– மாலை போடுவதும் இருமுடி
கட்டுவதும் சபரிமலைக்குப் பயணம் செய்வதுமாக இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்
குதர்க்க புத்தி மீண்டும் எனக்குள் கேள்விகள் கேட்கிறது.
பொதுவாக சபரிமலைக்குப் போகிறவர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதியிலிருந்து
ஒரு மண்டல காலம் விரதம் இருந்து
இருமுடிகட்டி சபரிமலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த
ஒரு மண்டல கால விரதம் அவர்களை மனசும் உடலும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்க
வைக்க உதவும் உடல் தூய்மை, மனக் கட்டுப்பாடு. இந்திரியங்களை கட்டுக்குள் வைத்தல்
ஆண்டவன் நாமஸ்மரணம் போன்றவை அனுஷ்டிக்கப் பட்டால் மற்ற காலங்களிலும் அது நம்மை
நாமே அடக்கியாள உதவும் என்பது பொதுவாக அறிந்து கொண்டது. மலைப் பயணம் கடினமாக
இருக்கும் என்பதால் காலணி இன்றியும், மிதமாக உணவருந்தியும் , மற்றவர்களுக்கு இந்த
மாதிரி விரதம் இருப்பவர் என்பதைத் தெரியப்
படுத்தவும் வேண்டி கருப்பு உடை அணிந்து
முக ஷவரம் செய்யாமல் இருப்பது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால்
தற்காலத்தில் மாலை அணிந்து மறுநாளே மலைக்குப் பயணிக்கிறார்கள். சபரிமலை ஐயப்ப
தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது.
விரதமிருப்பது என்பது போயே போச். ஒரு மண்டல விரதம் என்றால் கார்த்திகை
முதல் நாள் தொடங்கினால் மார்கழி மாதம் பத்தாம் தேதிவாக்கில்தான் முடிவடையும் பயணம் மேற்கொள்ள முடியும். சபரி மலை ஐயப்பதரிசனத்தில் practically , everything is compromised. எது எப்படியோ இருக்கட்டும் , இதனால்
சபரிமலைக்குப் போவோர் எண்ணிக்கை அபரிமிதமாகக் கூடிவிட்டது. பக்தர்கள் எண்ணிக்கை
அதிகம் ஆனால் பலன் பலருக்கும் போய்ச் சேருகிறதே. அது போதாதா. ?
ஜலஹள்ளி ஐயப்பன் கோவில் விழாவுக்கு வருவோம். டிசம்பர் மாதம் பதினாறாம் நாள்
எங்கள் ஏரியா பூஜையுடன் கொடி ஏற்றப்பட்டது.அருகில் இருக்கும் கருமாரியம்மன்
கோவிலிலிருந்து ஊர்வலம். வாணவேடிக்கைகள் சூழ கேரளத்தின் பாரம்பரிய கலைகள் , காட்சிகளுடன் பஞ்ச வாத்தியங்களுடன் கொட்டு மேளம்
முழங்க பெண்குழந்தைகள் தாலத்தில் விளக்கு வைத்து ஏந்திவர ஸ்ரீஅயப்பன்
தேரிலும் யானை மீதும் வருவதைப் பார்க்கும்
போது ஒருபுறம் இப்படியாவது பாரம்பரியக் கலைகள் பாதுகாக்கப் படுவது மனசுக்கு
இதமளிக்கிறது. , நகரங்களில் வசிக்கும் இளைய தலைமுறையினர் கண்டு உணர ஒரு வாய்ப்பு,
என் கைபேசியில் எடுத்த சிலகாணொளிகளை இத்துடன் வெளியிடுகிறேன். தரமாக இல்லை
என்றாலும் ஒரு ஐடியா கிடைக்கும். முதலில் ஏரியா பூஜை முடிந்து கொடி யெற்றம் . அதன்
பிறகு தினமும் சுற்றுவட்டார மக்களின் பூஜைகள் தினமும் நடக்கும். 16-ம் தேதி
துவங்கிய விழா 22-ம் தேதி பள்ளிவேட்டை,
23-ம் தேதி ஆராட்டு என்று நடந்து 26-ம் தேதி மண்டல விளக்கு பூஜையுடன் நிறைவு
பெற்றது.
இப்பொழுதெல்லாம் கோவிலில் மதியம் தினமும் அன்னதானம் நடக்கிறது, விழாக்காலங்களில்
தினமும் விருந்தே படைக்கின்றனர்.
மலைக்கு போவோர் வசதிக்காக கோவிலிலேயே எல்லாவிதப் பொருட்களும் கிடைக்கும்
படியாக ஒரு கடையும் இயங்குகிறது. சபரிமலைக்குப் போவோர் வசதி கருதி கட்டு
நிறைத்தலுக்காகவும் வசதிகள் இருக்கின்றன. கோவில் ட்ரஸ்டின் மேற்பார்வையில் சகல
வசதிகளுடன் கூடிய பள்ளி இறுதிவரை படிக்க வசதியாக கல்விக்கூடங்களும் இருக்கிறது.
ஒரு திருமண மண்டபம் ஒரு மருத்துவமனை எல்லாம் இருக்கிறது. இப்போது கோவிலை
விஸ்தரிக்க ஒரு அடி நிலம் அளிக்க வேண்டியும் கோரிக்கை இருக்கிறது. கோவிலை
அடுத்துள்ள இடத்தை வாங்கும் முயற்சியே இது. ஒரு அடி நிலம் ரூ.7000-/ ஆகிறது
முன் காலத்தில் கோவிலைச் சுற்றியே எல்லா வளர்ச்சிகளும் இருந்ததாக
அறிகிறோம் அதேபோல் இங்கும் கோவிலை மைய்யமாகக்
கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள்
எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில்
நிகழ்வது நிறைவாய் இருக்கிறது.
.
(மேற்கண்ட காணொளிகள் 2010-ம் ஆண்டைய விழாவின் போது எடுத்த்து இந்த ஆண்டு யானை வரவில்லை. ஆனால் இன்னும் சிறப்பான ஊர்வலம் நடந்தது.)
//சபரிமலை ஐயப்ப தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது. //
பதிலளிநீக்குஉண்மைதான் ஐயா. நான் கோட்டயத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தபோது ஆந்திராவிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும், கர்நாடகாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுலாப் பயணிகள் போல் சபரி மலைக்கு வந்ததை பார்த்திருக்கிறேன். ஏன் மலையாளிகளே மலைக்கு கிளம்பும் நாள் அன்று மாலை அணிந்து மலைக்கு போய் வந்தையும் கண்டிருக்கிறேன். இந்த பக்திச் சுற்றுலா வணிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை. அதற்காக சபரி மலை வருவோரெல்லாம் சுற்றுலாப் பயணிகள் என சொல்லவில்லை. உண்மையான பக்தர்களும் வருகிறார்கள். பெரும்பாலோர் சபரி மலை செல்வதை ஒரு வருடாந்திர சடங்கு போல் எண்ணுகிறார்கள் என்பது சரி எனத் தோன்றுகிறது.
காணொளியை இரசித்தேன்.
ஐயப்பன் பூஜைக்கு மாலை போடுவோர் கண்டிப்பாக அனுஷ்டானங்களைப் பின்பற்றுவோர் நிறையவே இருக்கிறார்கள். நீங்கள் சொல்வது போல பேக்கேஜ் டூர் போல போய் வருபவர்களும் இருக்கிறார்கள்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா... இப்போதெல்லாம் சபரிமலை செல்வது ஒரு பேஷன்...! ம்...
பதிலளிநீக்குகாணொளிகள் நன்று. இங்கே தில்லியிலும் சில ஐயப்பன் கோவில்கள் உண்டு. தலைநகரில் இது போல சென்ற ஊர்வலங்கள் பிறிதொரு சமயத்தில் பகிர்கிறேன்.
பதிலளிநீக்குசபரிமலைப் பயணம் - நீங்கள் சொல்வது சரிதான்.....
அனைத்திலுமே இரண்டு பக்கங்கள் உண்டு
பதிலளிநீக்குஎன்பதைப் போல பக்தர்களிலும் உண்டு
பாத்திரம் பொருத்துத்தானே பெறுமானமும்
காணொளியுடன் பதிவு நேரடியாக பார்க்கிற
உணர்வினைத் தந்தது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
கோவிலை மைய்யமாகக் கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது. //
பதிலளிநீக்குஆம், நீங்கள் சொல்வது சரிதான்.
காணொளி மூலம் திருவிழாவை பார்த்து விட்டேன்.
சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது.
பதிலளிநீக்குகாணொளிகள் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.
//சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது. //
பதிலளிநீக்குஅது உண்மையே!
காணொளிகள் நன்றாக இருந்தன.
பெரும்பாலோர் சபரி மலை செல்வதை ஒரு வருடாந்திர சடங்கு போல் எண்ணுகிறார்கள் என்பது சரி என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅலுவலகத்தில் பணிபுரிபவர்கள் அடிக்கடி தேநீர் குடிப்பது மாதிரி, ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதும் சிந்தனையின்றிச் செய்யப்படும் ஓர் வருடாந்திரப் பழக்கமே என்று தோன்றுகிறது. அதிலும் தமிழ்நாட்டுக்கு விரோதமாகவே பெரும்பாலும் செயல்படும் கேரளத்திற்குத் தமிழ்நாட்டுப் பணம் சுமார் பத்தாயிரம் கோடிரூபாய் அளவில் ஆண்டுதோறும் செல்லவும் இந்தப் பழக்கமே காரணமாகிறது.சிந்திக்கவேண்டும். பெரும்பாலும் மூடநம்பிக்கை சார்ந்த விஷயமாகவே இதை பார்க்கவேண்டியிருக்கிறது. சிலர் உண்மையிலேயே பக்திபூர்வமாகச் செல்லக்கூடும், ஆனால், அவர்களின் எண்ணிக்கை அதிகம் இல்லை என்று தோன்றுகிறது.
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா.
சிறப்பான பதிவு.சபரிமலைக்கு செல்வது இப்போ பக்கத்து ஊருக்கு செல்வது போல ஆகிட்டு வாழ்த்துக்கள் ஐயா.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
// வலைப் பக்கம் வந்து சில நாட்கள் ஆகிவிட்டது. இடைவெளிக்குப் பின் எழுதும் போது கடவுள் பற்றியும் கோவில் பற்றியும் எழுதினால் பலரும் படிப்பார்கள் என்று தோன்றுகிறது.//
பதிலளிநீக்குGMB அய்யா அவர்களுக்கு வணக்கம்! நீங்கள் சொல்வது சரிதான். வலைப்பதிவில் சினிமா, கோயில், அரசியல் என்றால் நிறையபேர் படிக்கிறார்கள்.
// சபரிமலை ஐயப்ப தரிசனம் என்பது ஒரு சீசனல் டூர் ஆகிவிட்டது. விரதமிருப்பது என்பது போயே போச்.//
ஒருவிதத்தில் இதுவும் நல்லதுதான். இல்லையெனில் நிறையபேர் எங்கே போவது என்று தெரியாமல் வீட்டையே சுற்றிக் கொண்டு இருப்பார்கள்.
// முன் காலத்தில் கோவிலைச் சுற்றியே எல்லா வளர்ச்சிகளும் இருந்ததாக அறிகிறோம் அதேபோல் இங்கும் கோவிலை மைய்யமாகக் கொண்டு பல நல்ல விஷயங்கள் நிறைவேறுவது மனசுக்கு இதமாய் இருக்கிறது. தனிப்பட்ட மனிதர்கள் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். சில நல்ல காரியங்கள் கோவிலின் அடிப்படையில் நிகழ்வது நிறைவாய் இருக்கிறது. //
எப்படியோ நல்லன எல்லாம் தரும்படி கோயில்கள் இருந்தால் நல்லதுதான்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இம்மாதிரியான யாத்திரைகளில் எனக்கு எவ்வித உடன்பாடும் இல்லை. அருகில் வசிக்கும் மனிதர்களை நேசிக்காத பலரும் தொலைதூரத்தில் இருக்கும் தெய்வங்களை தரிசிக்க செல்வதை பார்த்திருக்கிறேன். இறைவன் எங்கும் உள்ளார் என்பதை நம்புபவன் நான். அதுவும் இதை ஒரு சம்பிரதாயமாக தெய்வக் குற்றம் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் வருடா வருடம் கடனே என்று சென்று வருபவர்களும் உண்டு. இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். நானும் ஒரு காலத்தில் இதில் நம்பிக்கை கொண்டிருந்தவந்தான். என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதெய்வ வழிபாடு ஒரு சுற்றுலா தரத்திற்கு வந்துள்ளது ஒரு துக்ககரமான விஷயம்.எல்லாம் அவன் சித்தம்.
பதிலளிநீக்குநம்பிக்கைகள் !!!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு@ வே.நடனசபாபதி.
@ ஸ்ரீராம்
@ திண்டுக்கல் தனபாலன்
@ வெங்கட் நாகராஜ்
@ ரமணி
@ கோமதி அரசு
@ கோபு சார்
@ ராஜலக்ஷ்மி பரமசிவம்
@ கரந்தை ஜெயக்குமார்
@ செல்லப்பா யக்ஞ்சாமி
@ ரூபன்
@ தமிழ் இளங்கோ
@ டி.பி.ஆர்.ஜோசப்
@ டாக்டர் கந்தசாமி
@ அப்பாதுரை
அனைவரது வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. நான் மூன்று முறை சபரிமலைக்குப் போய் வந்தவன்.1970-ல் கன்னியாகவும் 1971-ல் என் ஐந்து வயது மகனுடனும் ப்ங்களூர் வந்தபிறகு என் மனைவியுடனும்( அவளுக்காக) எல்லா விரதமும் கடுமையாகக் கடை பிடித்து பயணம் செய்தவன். என் அனுபவங்களைப் பதிவாக எழுதி இருக்கிறேன். நான் இப்பதிவில் எழுதி இருப்பது என் அனுபவங்களின் வெளிப்பாடே. முதல் நாள் மாலையிட்டு அடுத்த நாள் பயணம் மேற்கொள்வோர் எப்படி விரதம் காக்க முடியும்.?கோவிலுக்குப் போய் வாருங்கள் .வேண்டாம் என்று சொல்ல முடியாது. வேஷங்கள் ஏன் என்பதே என் கேள்வி. அப்பாதுரை கூறுவதுபோல் நம்பிக்கைக்கள் .....!?