சனி, 5 ஏப்ரல், 2014

தாய் மொழி சில சந்தேகங்கள்


                                         தாய்மொழிசில சந்தேகங்கள்
                                          ----------------------------------------



சென்றபதிவில் என் பதிவிற்காக என் ஒன்பது வயது பேரன் எழுதிக் கொடுத்த ஒரு ஆங்கில சிறுகதை பதிவிட்டேன். அதற்கு பின்னூட்டமிட்ட சிலர் அவனுக்குத் தமிழ்போதிக்கும்படியும் கூறினர். தாய்மொழி ஒருவனுக்கு அவசியம் தெரிந்திருக்கவேண்டும் என்பதில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் ... ஒரு பெரிய்ய்ய்ய்ய ஆனால்...... எது தாய்மொழி என்பதுதான் சிக்கல் விலாவரியாகக் கூறினால்தான் சிக்கல் புலப்படும். என் பேரப் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்கும் போது அவர்களது தாய்மொழி மலையாளம் என்று கொடுத்தனர். என் மகன்களிடம் கேட்ட போது அவர்களது தாயின் மொழி மலையாளம்தானே என்று கூறினர். அதாவது தாய் பேசும் மொழி என்னும் பொருள் கொண்டிருந்தனர். சந்தேகத்துக்கு இடமில்லாமல் என் தாய்மொழி தமிழ். நான் ஒரு மலையாளப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டாலும் வீட்டில் பேசும் மொழி தமிழே இருந்தது. என் மகன்கள் வளர்ந்து திருமணம் செய்து கொண்டது மலையாளப் பெண்களையே. ஆனால் இவர்கள் தமிழிலும் அவர்கள் மலையாளத்திலும் பேசுவார்கள் அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்ததும் வீட்டில் இரு மொழி புழக்கம் இருந்தது. பேரக் குழந்தைகள் தந்தையிடம் தமிழிலும் தாயிடம் மலையாளத்திலும் பேசுவது பார்ப்போருக்குப் புதிதாய் இருந்தது. என் பிள்ளைகள் துவக்கத்தில் தமிழ் படித்து வந்தனர். ஆனால் என் பணி மாற்றம் காரணமாக விஜயவாடாவில் ஹிந்தி பயிலத் தொடங்கினர். ஆக தமிழில் கஷ்டப் பட்டுப் படிக்க முடிந்தாலும் தேர்ச்சி பெற முடியவில்லை. என் பேரக் குழந்தைகள் இரு மொழியிலும் நன்கு பேசக் கற்றாலும் எழுதப் படிக்க என்பது ஆங்கிலம் ஆகி விட்டது  நான் பேரக் குழந்தைகள் கட்டாயம் தமிழ் எழுதப் படிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அப்படிச்செய்தால் ஒரு வேளை மொழி வெறியன் என்னும் பெயர் வரலாம் என் மகன்கள் தமிழ் ஆங்கிலம் மலையாளம் ஹிந்தி கன்னடம் தெலுங்கு என்று பல மொழிகளில் சரளமாகப் பேசுவார்கள். என் பிள்ளைகளாவது தமிழைப் படிக்கவும் பேசவும் கற்றிருக்கிறார்கள். ஆனால் என் பேரப் பிள்ளைகள் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மொழிகளையே கற்கிறார்கள். எனக்குப் பல முறை சந்தேகம் வருவதுண்டு. தாய்மொழி என்பது வ்ளரும்போது பழகும் மொழி என்றால் என் பேரக் குழந்தைகளின் தாய் மொழி ஏது. நிச்சயம் தாய் பேசும் மொழி என்று எடுத்துக் கொள்ள முடியவில்லை. இணையத்திலும் அகராதியிலும் அப்படிச் சொல்லவில்லை

இம்மாதிரிக் குழந்தைகள் எந்த மொழி பேச வேண்டும் என்பது சூழ்நிலைகளைப் பொறுத்தே இருக்கிறது என் சின்ன பேரன் அவன் தாயிடம் அதிக நேரம் செலவு செய்வதால் ஓரளவு மலையாளம் பேசுகிறான். தந்தையை விடுமுறை நாட்களில் பார்ப்பதோடு சரி. அவரோடு பேச ஆங்கிலம் இருக்கிறது. தமிழில்தான் பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது சரியல்ல என்றே நினைக்கிறேன் மற்ற இரு பேரக் குழந்தைகளும்  மும்மொழிகளிலும் உரைடாடுவதில் வல்லவர்கள்.

காலத்தின் கட்டாயத்துக்காக ஆங்கிலக் கல்வி பெறுகிறார்கள். நம் மொழியைப் பயிலும் வாய்ப்பும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் என்னுடனே இருந்தால் நான் அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முயன்றிருக்கலாம் . //  

( சென்ற பதிவில் ஒரு ஆங்கிலக்கவிதை பதிவிட்டு அதத் தமிழில் மொழி பெயர்க்கவோ மொழியாக்கம் செய்யவோ பதிவர்களிடம் வேண்டி இருந்தேன் ஆங்கிலத்தில் பட்டப் படிப்பும் முதுகலைப் படிப்பும் படித்தவ்ர்கள் என் தளத்துக்கு வருகை தருவதை நான் அறிவேன் நிச்சயம் மொழி வல்லுனர்கள் இருக்கிறார்கள். ஏன் தயங்குகிறார்கள் தெரியவில்லை.இதன் மூலம் மீண்டும் என் அழைப்பைப் புதுப்பிக்கிறேன்)





       
 

42 கருத்துகள்:

  1. ஐயா, மொழி என்பதை பலரும் பேசும் கருவியாகத்தான் பார்க்கின்றார்கள்.
    தமிழ்மொழியில் பண்டிதம் பெற்றவர்கள் கூட, தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்க்கும் அவலம் இன்று அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

    மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம்.
    ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால், அந்த மொழியினை அழித்தாலே போதும், அந்த இனம் அழிந்துவிடும்.
    சகோதரி என்று யாரைப் பார்த்து வேண்டுமானாலும் அழைக்கலாம், ஆனால் தாயை மட்டும்தானே அம்மா என்று அழைக்கின்றோம்.
    அதுபோலத்தான் மொழியும், பேசுவதற்கு மட்டுமல்ல,,,,

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. அவர்கள் என்னுடனே இருந்தால் நான் அவர்களுக்குத் தமிழ் கற்பிக்க முயன்றிருக்கலாம் . /////

    நம் வாரிசுகளே ஆனாலும் மொழியை கட்டாயப்படுத்தி திணிக்கமுடியாதுதான்..

    பதிலளிநீக்கு

  4. @ கரந்தை ஜெயக்குமார்
    பதிவின் உட்கருத்த சரியாகப் போய்ச் சேரவில்லை என்றே எண்ணுகிறேன் தாய் மொழி எது என்றே சந்தேகம் இருப்பதை பதிவிட்டுள்ளேன் பணி நிமித்தம் அயல் மாநிலங்களில் வசிப்பவர்களுகு படிக்கும் மொழியைத் தேர்வு செய்வதில் எந்த சாய்ஸுன் கிடையாது. இங்கு எங்களைப் பலரும் அப்பா அம்மா என்றே அழைக்கிறார்கள். மொழி என்பது பேசும் கருவி மட்டுமல்ல. அது வாழும் கருவியும் கூட.

    பதிலளிநீக்கு

  5. @ இராஜராஜேஸ்வரி
    சரியாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  6. இத்தனை மொழிகளைக் கற்றவர்களுக்கு தமிழ் கற்பதும் பெரிய விஷயமில்லை. தேவை வரும்போது தானாகக் கற்பார்கள். சிறு வயதில் கற்பது என்பது எளிது.

    பதிலளிநீக்கு
  7. தாய்நாட்டினர் பேசும் மொழி தாய் மொழி என்பது என் கருத்து. எந்த ஒரு மொழியையுமே திணிப்பதால் உபயோகம் கிடையாது. நாளடைவில் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு ஆர்வம் ஏற்படின் தமிழ் கற்கட்டும்! எந்த வயதிலும் கற்க எளிமையான மொழி தமிழ் என்பதில் எனக்கு ஐயம் இல்லை! என்னுடைய தளத்திற்கு வந்து கருத்துரை நல்கியமைக்கும் நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. பாலு சார்,
    பல்வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வாழ நேரிடுகயில், தாய் மொழியின் தாக்கம் மாறுவது இயல்பே. நான் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவன். ஆனால் பிறந்தது, வளர்ந்தது தமிழகத்தில். தற்போது வசிப்பது பெங்களூரில். அதனால் தெலுங்கு பேச மட்டுமே தெரியும். ஏதோ ஒரு தலைமுறை இடம் பெயர்கையில், அதன்பின் வருகிற தலைமுறைகளும் மொழிவாரியாக, கலாச்சார ரீதியாக பாதிக்கப்படுவது இயல்பானதொரு விசயம்.

    நான் அடிக்கடி சந்திக்கும் கேள்வி - "நீ ஏன் எப்பவுமே தமிழ்லேயே எழுதற (ஃபேஸ்புக் உட்பட)?"
    என் பதிலோ மிக எளிமையானாது - "எனக்கு கொஞ்சம் உருப்படியா தெரிஞ்ச மொழினா அது தமிழ்தான்".

    என்னைப் பொறுத்தவரை ஏதோ ஒரு மொழியில் ஆளுமைக் கொண்டால் போதுமானது (ஆங்கிலம் தவிர). மேலும் அந்த மொழியறிவை நாம் எவ்வண்ணம் பயன்படுத்துகிறோம் என்பதுதான் மிக முக்கியம்.

    என் நண்பர்கள் பலரும் இப்போது தமிழ் படிக்கவே திணருகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் - "+2 க்கு பின்னாடி தமிழ் டச்-சே இல்லடா"

    எவராலும் நான்கு வரிகள்கூட பிழையில்லாமால் எழுத முடியவில்லை :(

    பதிலளிநீக்கு
  10. அருமையான கருத்துகள். இதற்கு சாலமன் பாப்பையா தலைமையில் ஒரு பட்டி மன்றமே நடத்தலாம்.

    பதிலளிநீக்கு
  11. தகப்பன் வழி மூதாதையர் மொழி அதாவது தகப்பன் மொழி எதுவோ அதுதான் அவர்களது தாய்மொழி. இருப்பினும் எந்த மாநிலத்தில் கடைசிக்காலம் வரை பெற்றோர் குழந்தைகளுடன் தங்கிவிட முடிவு செய்து இருக்கிறார்களோ, அந்த மாநில மொழியை எழுத பேச தெரிந்து கொள்வது நல்லது.

    பதிலளிநீக்கு
  12. என் கணவருக்குப் பல மாநிலங்களில் பணி செய்ய நேரிட்டதால் எங்கள் குழந்தைகள் படித்தது முழுக்க முழுக்க கேந்திரிய வித்யாலயா. ஆகவே அவர்களும் தமிழ் நன்கு பேசுவார்கள். வீட்டில் நாங்கள் கட்டாயமாய்த் தமிழில் பேசியதால் அவர்களும் பேசுவார்கள். எழுதப் படிக்கத் தெரியாது. இப்போதும் அவர்களுக்குள்ளாகத் தமிழில் தான் பேசிக் கொள்வார்கள். ஆனால் இங்கே நான் எழுதுவதை அவர்களால் படிக்க முடியாது. நானும் எவ்வளவோமுயன்றேன். பெண்ணுக்கு ஓரளவு எழுத்துக் கூட்டிப் படிக்க வரும். பிள்ளைக்கு அதுவும் வராது. அவரவர் விருப்பம்னு விட்டாச்சு. ஆனால் தமிழ்க் கதைகள், கதாசிரியர்கள் என்று தெரியும். ஏனென்றால் முக்கியமான கதைகளை நான் படித்துச் சொல்லுவேன். அவர்கள் கேட்டுக் கொள்வார்கள். கதைச் சுருக்கமெல்லாம் இல்லை. அப்படியே புத்தகத்தைப் பார்த்துப் படிப்பேன். புரியாத இடங்களில் மட்டும் சந்தேகம் கேட்டுக் கொள்வார்கள். அவர்களுக்கு தேவன், கல்கி கதைகளோடு நல்ல பரிச்சயம் உண்டு.

    பதிலளிநீக்கு
  13. பொன்னியின் செல்வன் படிக்க வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்துப் படிக்கச் செய்தேன்.

    பதிலளிநீக்கு
  14. காற்றின் மொழி ஒலியா...? இசையா...?
    பூவின் மொழி நிறமா...? மணமா...?
    கடலின் மொழி அலையா...? நுரையா...?
    காதல் மொழி விழியா...? இதழா...?

    காற்று வீசும் போது -
    திசைகள் கிடையாது
    காதல் பேசும் போது -
    மொழிகள் கிடையாது
    பேசும் வார்த்தை போல -
    மௌனம் புரியாது
    கண்கள் பேசும் வார்த்தை -
    கடவுள் அறியாது
    உலவி திரியும் காற்றுக்கு -
    உருவம் தீட்ட முடியாது
    காதல் பேசும் மொழியெல்லாம் -
    சப்தக் கூட்டில் அடங்காது

    வானம் பேசும் பேச்சு -
    துளியாய் வெளியாகும்
    வானவில்லின் பேச்சு -
    நிறமாய் வெளியாகும்
    உண்மை ஊமையானால் -
    கண்ணீர் மொழியாகும்
    பெண்மை ஊமையானால் -
    நாணம் மொழியாகும்
    ஓசை தூங்கும் ஜாமத்தில் -
    உச்சி மீன்கள் மொழியாகும்
    ஆசை தூங்கும் இதயத்தில் -
    அசைவு கூட மொழியாகும்

    இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதரின் மொழிகள் தேவை இல்லை
    இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
    மனிதர்க்கு மொழியே தேவை இல்லை


    திரைப்படத்தின் பெயர் : மொழி

    பதிலளிநீக்கு

  15. @ ஸ்ரீராம்
    /இத்தனை மொழிகளைக் கற்றவர்களுக்கு தமிழ் கற்பதும் பெரிய விஷயமில்லை. தேவை வரும்போது தானாகக் கற்பார்கள். சிறு வயதில் கற்பது என்பது எளிது./நீங்களுமா ஸ்ரீ.?
    என் பதிவின் மையக் கேள்வியே தாய் மொழி பற்றியது. எனக்கு என் வாரிசுகள் தமிழில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவா. .அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு நேரமிருந்தால் எந்த மொழியும் கற்று தேர்ச்சி அடையலாம் வருகைக்கு நன்றி


    பதிலளிநீக்கு

  16. @ தளிர் சுரேஷ்
    /தாய்நாட்டினர் பேசும் மொழி தாய் மொழி என்பது என் கருத்து/நம் தாய் நாடு இந்தியா. இங்கு கணக்கில்லா மொழிகள் பேசப் படுகின்றன. எது தாய் மொழி.? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு

  17. @ நாகசுப்பிரமணியம்
    தாய் மொழி தெலுங்கு என்று தெரிகிறதே . எது என்று தெரியாத நிலையே என் பதிவின் உட்கருத்து. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி நாகா.

    பதிலளிநீக்கு

  18. @ டாக்டர் கந்தசாமி
    பட்டிமன்றத்துக்குப் பதிலாகத்தான் இப்ப்திவு. கருத்துக்கள் பதிவாகும்போது பட்டிமன்ற விடை இங்குக் கிடைக்கலாம் வருகைக்கௌ நன்றி சார்.

    பதிலளிநீக்கு

  19. @ தி தமிழ் இளங்கோ
    /தகப்பன் மொழி எதுவோ அதுவே தாய் மொழி/ இந்த மாதிரிக் கருத்து வேற்று மொழி பேசும் மனைவியர் ஏற்றுக் கொள்வார்களா. ? ஆணாதிக்கம் எனும் புகார் வராதா.? வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  20. @ கீதா சாம்பசிவம்
    /வீட்டில் நாங்கள் கட்டாயமாகத் தமிழில் பேசியதால் அவர்களும் பேசுவார்கள்/ என் வீட்டில் என்னிடம் பேசும்போது தமிழிலேயே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் அவர்களுக்குள் (என் மருமகள்கள் என் மனைவி உட்பட ) இந்த மொழியில்தான் பேசவேண்டும் என்று கட்டாயப் படுத்த முடியாதே. மற்றபடி யாருக்கும் எந்த மொழி மீதும் துவேஷம் கிடையாது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்

    பதிலளிநீக்கு

  21. @ திண்டுக்கல் தனபாலன்
    ஒரு கவித்துவமான பின்னூட்டத்துக்கு நன்றி. நடை முறைக்கு ஒத்து வராது. என் பேரக் குழந்தைகள் எந்த மொழியைத் தாய் மொழி எனலாம் . பள்ளிச் சான்றிதழ்கள் உட்பட எதுவாக இருக்க வேண்டும் மொழியே தேவை இல்லை என்பது அந்த திரைப்படத்துக்கு ஒத்து வரலாம் . மௌனமே மொழியாகக் கொள்ள நான் என்ன ஊமையர்களா? பாடல் வரிகளுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. என் குடும்பத்திலும் இதே பிரச்சினைதான். நான் பல மாநிலங்களில் பணியாற்ற வேண்டியிருந்ததால் என் இரு குழந்தைகளுக்குமே தமிழை பள்ளியில் தெரிவு செய்யவில்லை. ஆனால் வீட்டில் பெரும்பாலும் தமிழ்தான். இரு குழந்தைகளுக்குமே தமிழ் எழுத படிக்க சரளமாக வராது. என் முதல் மருமகன் தமிழர்தான் என்றாலும் மலேசியர் என்பதால் தமிழ் சுமாராக பேச மட்டுமே தெரியும். பேத்திக்கும் அதே நிலைதான். ஆகவே அவர்கள் மூவருமே வீட்டில் கூட ஆங்கிலத்தில்தான் பேச வேண்டிய சூழல். இது ஒருபெரிய விஷயமே இல்லை. தமிழ் ஒரு இனத்தின் மொழி. தமிழ் என் இனத்தின் மொழி. ஆனால் அதை அந்த இனத்தைச் சார்ந்தவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றில்லை. மொழி ஒருவரை வாழவைக்க வேண்டும். அது தமிழ்நாட்டில் மட்டுமே சாத்தியமாகிறது. தமிழகத்தைவிட்டு வெளியில் சென்றால் தமிழ் செல்லாக் காசாகிவிடுகிறது. ஆகவே தமிழ், தமிழ் என்று கொண்டாடுவதெல்லாம்.....வேண்டாம், நான் ஏதாவது சொல்லி வைக்க இந்த பதிவின் நோக்கமே திசை மாறிவிடக் கூடும். உங்களுடைய பேரக் குழந்தைகளுக்கு எந்த மொழி தேவை என்பது அவர்களுடைய பெற்றோருக்கு தெரியும். அவர்கள் விருப்பப் படியே ஆகட்டும்.

    பதிலளிநீக்கு
  23. ஆங்கிலமோ, ஹிந்தியோ, எந்த மொழியானாலும் முதலில் முழுவதும் கற்றுக் கொள்கிறோமா....? என்றால் கிடையாது... எல்லாவற்றையும் இங்கு தமிழில் புரிந்து கொண்டு கற்கிறோம்... கற்க வைக்கிறோம்... கற்க வைக்கிறார்கள்... அப்படியானால் முதலில் தமிழில் முழு தேர்ச்சி பெற்று உள்ளோமா...? - சந்தேகம் தான்... சரி, அது இருக்கட்டும் ஐயா...

    எந்த மொழியானால் என்ன..? ஐந்து மொழி கற்றுக் கொண்டால், அவர் ஐந்து பேருக்கு சமம்... உலகில் எந்த மூலைக்கும் செல்லலாம்-யாருடைய துணையுமின்றி....!

    இதைத் தான் சொல்ல வந்தேன்... எனக்குப் பிடித்த பாட்டு : என்று மேலே உள்ள பாடல்....

    அதற்குள் மின்சாரமும் போய் விட்டது... உங்களின் மறுமொழியும் வந்து விட்டது...

    நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  24. நம் தாய்நாடு, அதாவது நாம் பிறந்த மண் இந்தியா. நம் நாட்டைப் பொறுத்தவரை பன்மைச் சமுதாயம் (pluralistic society) என்ற நிலையில் மாநில அடிப்படையில் பல மொழிகளை அந்தந்த மாநிலத்திற்கேற்ப கொண்டுள்ளோம். அந்நிலையில் நாம் பிறந்த மாநிலத்தில் உள்ள மொழியையே தாய்மொழியாகக் கொள்ளலாம். (நம் நாட்டைப் பொறுத்தவரை ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக மட்டுமே கொள்ளலாம்). தந்தை ஒரு மாநிலத்தவராகவும், தாய் ஒரு மாநிலத்தவராகவும் இருக்கும் நிலையில் அவ்விருவோர் மொழிகளில் ஏதேனும் ஒன்றை குழந்தைக்குப் பயிற்றுவித்து மேம்படச் செய்யலாம். சரியான விவாதத்தைத் தூண்டி அனைவரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  25. வீட்டில் அம்மா-அப்பா இருவரின் மொழியும் வேறாக இருக்கும் போது எது தாய்மொழி என்பதில் தெளிவு இல்லாது தான் போய் விடுகிறது.

    எனது நண்பர் ஒருவர் பஞ்சாபி. மணம் புரிந்து கொண்டது ஒரு பெங்காலியை. அவர் மகன் இப்போது பஞ்சாபியை விட பெங்காலி மொழியையே அதிகம் பேசுகிறார். பஞ்சாபி மொழி பேசினால் புரிந்து கொள்ளும் திறன் உண்டு. இரண்டையும் எழுதத் தெரியாது. தில்லியில் இருப்பதால் ஹிந்தி தான்! இத்தனை மொழிகளையும் பேசும் ஆற்றல் இருப்பதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டியது தான்.

    குழந்தைகளை இந்த மொழி தான் பேச வேண்டும் எனச் சொல்வது சரியில்லை என்று தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

  26. @ டி.பி.ஆர் ஜோசப்
    தமிழ் என் இனத்தின் மொழி என்பதால் என் வாரிசுகள் என்னால் கட்டுப் படுத்த இயலாத காரணங்களால் தமிழ் எழுதப் படிக்கவோ தேர்ச்சி பெறவோ சாத்தையமில்லாமல் இருப்பது எனக்கு ஆதங்கமே. என் பிள்ளைகள் பல மொழிகளில் பேசும் திறமை கொண்டவர்களாக இருப்பது ஒரு ஆறுதல். சிந்தித்து எழுதிய பின்னூட்டத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  27. @ திண்டுக்கல் தனபாலன்,
    நம்மில் பலரும் கற்கும் மொழியைச் சரிவரக் கற்பதில்லை என்பதில் எனக்கும் உடன்பாடே. என் பதிவிலிருந்தும் மறு மொழிகளில் இருந்தும் வெளிப்பட்டுள்ள கருத்துக்கள் என் ஆதங்கத்தின் வெளிப்பாடே என்பது தெரிந்திருக்கும். பொதுவாக அந்தப் பாட்டும் கருத்தும் எனக்கும் பிடித்தது ஆகவேதான் கவித்துவமான பதில் என்று எழுதினேன் . மீண்டும் வருகை தந்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

  28. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    /தந்தை ஒரு மாநிலத்தவராகவும், தாய் ஒரு மாநிலத்தவராகவும் இருக்கும் நிலையில் அவ்விருவோர் மொழிகளில் ஏதேனும் ஒன்றை குழந்தைக்குப் பயிற்றுவித்து மேம்படச் செய்யலாம். சரியான விவாதத்தைத் தூண்டி அனைவரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்/ அப்படி தாய் தந்தை இருவரும் முயன்றால் தேவையற்ற மனக் கசப்பு ஏற்படலாம். சிந்திக்க வைக்கவே இப்பதிவு. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி ஐயா.


    பதிலளிநீக்கு

  29. @ வெங்கட் நாகராஜ்
    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் பெரும்பாலும் தாயின் விருப்பமே குழந்தைகள் விருப்பமாகிப் போகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  30. தேவையை முன்னிட்டே மொழியைக் கற்றுக்கொள்ள நேர்கிறது. மொழி என்பது வெறும் ஒரு கருவி மட்டுமே. எப்படி, பலப்பம் போய் பென்சில் வந்ததோ, பென்சில் போய் பவுன்ட்டன் பேனா வந்ததோ, பிறகு பால்பேனா வந்ததோ, அதேபோலத்தான் ஒரு மொழிபோய் இன்னொரு மொழிவரும். அதில் வருந்துவதற்கு ஒன்றுமில்லை. வயதில் பெரியவர்களின் கடமை என்னவென்றால், எதிர்காலத்தில் யார் விரும்பினாலும் நம் மொழியைப் படிப்தற்கு எதுவாகும்வகையில் கருவிகளையும், புத்தகங்களையும், அகராதி, இலக்கணம் முதலியவற்றையும் அடிக்கடி புதுப்பித்து வெளியிட்டுக் கொண்டிருப்பதே ஆகும்.

    பதிலளிநீக்கு
  31. முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  32. ஜி.எம்.பி. சார், ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்வது இருக்கட்டும், எத்தனை பேருக்கு தமிழிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க தெரியும்? எத்தனை பாசுரங்களை நமது முன்னோர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள்? அருணகிரிநாதரின் திருப்புகழை அர்த்தம் புரிந்து பாடினால் அதன் இனிமை என்னவென்று புரியும். அந்த சந்தர்ப்பம் இன்றைய தலைமுறைக்கு இல்லை என்பதே துரதிர்ஷ்டம். எனென்றால், அவர்களுக்கு சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களே மோசமாக இருக்கிறார்களே.

    இன்றைய நிலை என்னவென்றால், தமிழ் என்பதை தமில் என்றும், ஏழு ரூபாய் என்பதை ஏளு ரூவாய் என்றும், வாழ்க என்பதை வால்க என்றும் கூறுவது சர்வசாதாரணமாகி விட்டது. அதை "நடைமுறை" தமிழ் என்று மனம் ஒப்புக்கொள்ள மறுக்கிறது. எனக்கென்னவோ அது நாராச தமிழாக தான் படுகிறது.

    பதிலளிநீக்கு

  33. @ செல்லப்பா யக்ஞசாமி
    நான் எழுதியது பிள்ளைகளுக்கு தாய்மொழிஎது என்று தெரிவிப்பதும் பள்ளி சான்றிதழில் எந்த மொழி குறிப்பிடப் பட வேண்டுமென்பதும் பற்றியே.( பல நேரங்களில் ஸ்ட்ரெயிட் ஃபார்வார்ட் பதில் இல்லாதபோது என்பதே.) வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  34. @ வே.நடனசபாபதி
    அதைத்தான் பதிவின் மூலம் செய்வதாக நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு

  35. @ எக்ஸ்பாட்குரு
    ஒப்புக் கொள்கிறேன் . எனக்கும் பல பழந்தமிழ் பாடல்களுக்கு பொருள் தெரிவதில்லை. இதே சந்தேகம் வந்து ஔவையாரின் விநாயகர் அகவலுக்கு பொருள் தெரிந்து பாட இணையதில் நுழைந்து பொருள் எழுதி இருந்தேன். அருணகிரி நாதரின் பல பாடல்களுக்கும் அர்த்தம் தெரியாது. தமிழ் அகராதி என்னிடம் இல்லை என் ஒரிரு பதிவுகளின் சுட்டி தருகிறேன் படித்துப் பாருங்கள். காது காத்த பாடல்
    gmbat1649.blogspot.in/2012/11/blog-post_14.html
    பொருள் தெரிந்து பாட
    gmbat1649.blogspot.in/2012/08/ blog-post_17.html

    பதிலளிநீக்கு
  36. நல்லதொரு சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு ஐயா! எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் சேர்ந்து எழுதுகின்றோம்! நானும் எனது தோழி கீதாவும்! நான் பிறப்பால் தமிழகத்தான்...படித்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு! பெற்றோர் கேரளா. மொழி மலையாளம். பின்னார் கேரளா.. கேரளா சென்ற பிறகுதான் நான் மலையாளம் சரிவரக் கற்றுக் கொண்டேன். ஆனால் தமிழில் தான் சிந்தனை முழுவதும். எனவே, நான் எதை என் தாய்மொழி என்பது?!!
    தோழியின் மொழி தமிழ். என்றாலும் மலையாளம்மும் அறிந்தவர் பேசுவதற்கு. தாங்கள் கூறியுள்ளது போல தாய் மொழி என்பது சூழலுக்கு ஏற்ப மாறுபடத்தான் செய்கின்றது!

    DD சொல்லியிருக்கும் பாடலைத்தான் சொல்ல விழந்தோம். அவரே சொல்லிவிட்டார்!

    எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது!

    தாய்மொழியைக் கற்றிருந்தாலும் எத்தனை பேர் தாஉமொழியானத் தமிழை பிழையில்லாமல் எழுதுகின்றனர்!?? பேசுகின்றனர்?!

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  37. நல்லதொரு சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு ஐயா! எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் சேர்ந்து எழுதுகின்றோம்! நானும் எனது தோழி கீதாவும்! நான் பிறப்பால் தமிழகத்தான்...படித்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு! பெற்றோர் கேரளா. மொழி மலையாளம். பின்னார் கேரளா.. கேரளா சென்ற பிறகுதான் நான் மலையாளம் சரிவரக் கற்றுக் கொண்டேன். ஆனால் தமிழில் தான் சிந்தனை முழுவதும். எனவே, நான் எதை என் தாய்மொழி என்பது?!!
    தோழியின் மொழி தமிழ். என்றாலும் மலையாளம்மும் அறிந்தவர் பேசுவதற்கு. தாங்கள் கூறியுள்ளது போல தாய் மொழி என்பது சூழலுக்கு ஏற்ப மாறுபடத்தான் செய்கின்றது!

    DD சொல்லியிருக்கும் பாடலைத்தான் சொல்ல விழந்தோம். அவரே சொல்லிவிட்டார்!

    எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது!

    தாய்மொழியைக் கற்றிருந்தாலும் எத்தனை பேர் தாஉமொழியானத் தமிழை பிழையில்லாமல் எழுதுகின்றனர்!?? பேசுகின்றனர்?!

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  38. நல்லதொரு சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு ஐயா! எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் சேர்ந்து எழுதுகின்றோம்! நானும் எனது தோழி கீதாவும்! நான் பிறப்பால் தமிழகத்தான்...படித்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு! பெற்றோர் கேரளா. மொழி மலையாளம். பின்னார் கேரளா.. கேரளா சென்ற பிறகுதான் நான் மலையாளம் சரிவரக் கற்றுக் கொண்டேன். ஆனால் தமிழில் தான் சிந்தனை முழுவதும். எனவே, நான் எதை என் தாய்மொழி என்பது?!!
    தோழியின் மொழி தமிழ். என்றாலும் மலையாளம்மும் அறிந்தவர் பேசுவதற்கு. தாங்கள் கூறியுள்ளது போல தாய் மொழி என்பது சூழலுக்கு ஏற்ப மாறுபடத்தான் செய்கின்றது!

    DD சொல்லியிருக்கும் பாடலைத்தான் சொல்ல விழந்தோம். அவரே சொல்லிவிட்டார்!

    எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது!

    தாய்மொழியைக் கற்றிருந்தாலும் எத்தனை பேர் தாஉமொழியானத் தமிழை பிழையில்லாமல் எழுதுகின்றனர்!?? பேசுகின்றனர்?!

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு
  39. நல்லதொரு சிந்திக்க வைக்கும் ஒரு பதிவு ஐயா! எங்கள் தளத்தில் நாங்கள் இருவர் சேர்ந்து எழுதுகின்றோம்! நானும் எனது தோழி கீதாவும்! நான் பிறப்பால் தமிழகத்தான்...படித்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு! பெற்றோர் கேரளா. மொழி மலையாளம். பின்னார் கேரளா.. கேரளா சென்ற பிறகுதான் நான் மலையாளம் சரிவரக் கற்றுக் கொண்டேன். ஆனால் தமிழில் தான் சிந்தனை முழுவதும். எனவே, நான் எதை என் தாய்மொழி என்பது?!!
    தோழியின் மொழி தமிழ். என்றாலும் மலையாளம்மும் அறிந்தவர் பேசுவதற்கு. தாங்கள் கூறியுள்ளது போல தாய் மொழி என்பது சூழலுக்கு ஏற்ப மாறுபடத்தான் செய்கின்றது!

    DD சொல்லியிருக்கும் பாடலைத்தான் சொல்ல விழந்தோம். அவரே சொல்லிவிட்டார்!

    எந்த மொழியையும் யாரிடமும் திணிக்க முடியாது!

    தாய்மொழியைக் கற்றிருந்தாலும் எத்தனை பேர் தாஉமொழியானத் தமிழை பிழையில்லாமல் எழுதுகின்றனர்!?? பேசுகின்றனர்?!

    நல்ல பகிர்வு!

    பதிலளிநீக்கு

  40. @ தில்லையகத்து துளசிதரன்
    ஒரே மாதிரி நான்கு பின்னூட்டங்கள்.......! உங்கள் பள்ளி சான்றிதழில் தாய்மொழி மலையாளம் என்றுதானே இருக்கும் தமிழ்நாட்டில் பிறந்ததாலும் வளர்ந்ததாலும் தமிழில் பாண்டித்த்யம் இருந்தாலும் தாய் மொழி சரிவரக் கற்காததால் உங்கள் தாய்மொழி மலையாளம் இல்லை என்றாகிவிடுமா. என் சந்தேகமே தாய்மொழியென்று எதைக் கூறுவது என்பதுதான் எனக்கு நான்கைந்து மொழிகள் பேசினால் புரிந்து கொள்ள முடியும் . எந்த மொழிக்கும் எதிரி அல்ல. தொடர்ந்து வாருங்கள். YOU WILL FIND VARIOUS SUBJECTS DISCUSSED IN MY POSTINGS

    பதிலளிநீக்கு
  41. தமிழ் படித்தே ஆக வேண்டும் என்பதில்லை.

    பதிலளிநீக்கு
  42. நம்மால் எந்த மொழியில் எழுத,படிக்க,சிந்திக்க, நம்முடைய கருத்துக்களை வெளியிட முடிகிறதோ அந்த மொழியையே நாம் தாய் மொழி என்று கருத வேண்டும்.

    பதிலளிநீக்கு