செவ்வாய், 22 ஏப்ரல், 2014

களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள்


            களவு கொடுத்த மற்றும் ஏமாந்த நிகழ்வுகள் நினைவுகள்.

         ----------------------------------------------------------------------------------

எத்தனை பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும் என்று தெரியாது. ஆனால் சென்னையில் பேரூந்தில் பயணம் செய்திருப்பவர் பலருக்கும் ஏற்பட்டிருக்கும். 1976 ல் என்று நினைக்கிறேன். திருச்சியில் பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் பணி செய்து கொண்டிருந்த என்னை சற்றும் எதிர்பாராத வகையில் பணி மாற்றம் செய்தார்கள். அனல்மின் தயாரிப்பு இந்தியாவின் பல பாகங்களில் நடந்து கொண்டிருந்தது. அதன் தென் பிராந்திய அலுவலகம் சென்னையில் இயங்கி வருகிறது. எனக்கு எந்த இடத்தில் போஸ்டிங் என்று தெரியும் முன் சென்னை அலுவலகத்தில் பணி. இடமாற்றம் பல பிரச்சனைகளை உருவாக்கியது. அதில் தலையாயது என் பிள்ளைகளின் படிப்பு. எங்கு போஸ்டிங் என்று தெரியாத நிலையிலும் , ஏற்கனவே பள்ளிகள் திறந்து விட்ட படியாலும் முதலில் அவர்களை சென்னையில் குடியமர்த்திவிட்டு பள்ளியில் சேர்த்து விடலாம் என்று முடிவெடுத்தேன் நுங்கம்பாக்கத்தில் ஒரு பள்ளியில் அட்மிஷன் வாங்கி கோடம்பாக்கம் ட்ரஸ்ட் புரத்தில் வீடும் பார்த்துக் குடியமர்த்தினேன். என்று எனக்கு எந்த இடத்துக்குப் போஸ்டிங் என்று தெரியாத நிலையில் தினமும் கோடம் பாக்கத்திலிருந்து நந்தனம் வரை பேரூந்தில் பயணம் என்பது வாடிக்கையாய் இருந்தது. அப்படி இருக்கும் போது ஒரு மாதம் சம்பளம் வாங்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். ஏதோ உள்ளுணர்வு கூற என் பாண்ட் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தால் என் பர்ஸ் போயிருந்தது. கூச்சல் போட்டு பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்துக்குப் போனோம். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை கடிந்து கொண்டார். சம்பளம் வாங்கிய ஒரு நாளாவது ஆட்டோவில் பயணிக்கக் கூடாதா என்றார். என்ன சொல்லி என்ன. பர்ஸ் போனது போனதுதான்
வீட்டில் மனைவியிடம் தெரியப்படுத்தி வாங்கிக் கட்டிக்கொள்வது நினைத்து மனம் சஞ்ச்லப் பட்டது நான் சம்பளம் வாங்கியதும் அதை பர்சில் வைக்க முயன்று அது மிகவும் பல்ஜ் ஆகி துருத்திக் கொண்டிருந்ததால் ஒரு நூறு ரூபாய் மட்டும் பர்சில் வைத்து மீதிப் பணத்தை பாண்ட் பாக்கெட்டில் தனியே வைத்திருந்தேன் ஆக என் பர்சும் அதில் இருந்த சில முக்கிய பேப்பர்களும் களவு போயிற்றே தவிர பணம் போகவில்லை. பர்ஸ்  களவு போயிருந்தாலும் என் சாமர்த்தியத்தால் சம்பளப் பணம் போகாமல் தப்பித்ததைக் கூறி என் மனைவியின் வசவுகளை மட்டுப்படுத்தினேன் ..!
ஒரு முறை என் மகன் பேரூந்தில் பயணிக்கும் போது ஒருவர் பர்சைத் திருடுவதைக் கண்ணால் கண்டு கத்த வாயெடுத்திருக்கிறான். அப்போது அவனது கழுத்தில் ஒருவன் கத்தியை வைத்து அழுத்திக் கத்தாதே என்றானாம் . இவன் வெலவெலத்துப் போய் ஏதும் செய்ய முடியாமல் இருந்திருக்கிறான் இதைப் பொருட்படுத்தாது அவன் கூச்சல் போட்டு இருக்க வேண்டுமோ...தெரியவில்லை.
ஒரு முறை ஒரு மழைநாளில் பஸ்ஸில் ஏறும்போது என் பாக்கட்டில் ஒருவன் கைவிட எத்தனித்த்போது நான் அவன் கையைப் பிடிக்க அவன் அதை உருவிக் கொண்டு கூட்டத்தில் மாயமானான்.
நானும் என் மனைவியும் மூகாம்பிகா கோவில் போய் திரும்பி வரும்போது என் மனைவியின் கைப்பை காணாமல் போயிருந்ததை நாங்கள் வீடு வந்த பிறகுதான் அறிந்தோம். அதில் அவள் பொக்கிஷமாய்க் கருதும் பல தோத்திரப் புத்தகங்களும் வீட்டின் உள் அறைச் சாவிகளும் இருந்தன. வீட்டுக்கு வந்து மெயின் கதவைத் திறந்து அறைக் கதவுளைத் திறக்க வேண்டியபோதுதான் கைப்பைக் காணாமல் போனது தெரிந்தது. உடனே ஆட்டோபிடித்து பஸ் டெப்போவுக்குப் போய் நாங்கள் வந்த பஸ்ஸைக் கண்டு பிடித்து  பை இருக்கிறதா என்று தேடினோம்  ஏமாற்றமுடன்  வீட்டுக்கு வந்து தாழ்ப்பாள்களை உடைத்து அறைக் கதவுகளைத் திறந்தோம்.
என் வீட்டில் அப்போது முதல் தளத்தில் தங்கிக் கொண்டிருந்தோம் . கீழ் போர்ஷனை வாடகைக்கு  ஒரு டாக்டருக்கு வாடகைக்கு விட்டிருந்தோம். வீட்டுக்கு யாராவது வந்தால் சன்னல் கதவு வழியே பார்த்து தெரிந்து கொள்வோம் . ஆள் யாரென்று தெரியாமல் கதவைத் திறப்பதில்லை. ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி அளவில் ஒருவர் அவசரமாக மாடிக் கதவைத் தட்டினார், ஆசுபத்திரியில் யாரோ உடல் நலமில்லாமல் இருப்பதாகவும் அவருக்குக் காஃபி வாங்கிக்கொடுக்க ஒரு தெர்மோஸ்ஃப்லாஸ்க் எங்களிடம் வாங்கிக் கொள்ளுமாறு கீழ் வீட்டில் குடி இருந்த டாக்டர் சொன்னதாகவும் கூறினார். என் மனைவி எங்களிடம் இருந்த ஒரு பெரிய நல்ல ஃப்லாஸ்கை சன்னல் வழியே கொடுத்தார். இரவு டாக்டர் கிளினிக்கிலிருந்து வந்தவுடன் அவரிடம் நடந்ததைத் தெரிவித்தார். டாக்டர் தான் அப்படி யாரிடமும்சொல்ல வில்லை என்றதும் நாங்கள் ஏமாந்தது தெரிந்தது.



இதை எழுதும்போது நினைவுக்கு வருவது. நான் சிறு வயதில் என் தந்தைவழிப் பாட்டியின் வீட்டில் பாலக் காட்டில் கோவிந்தராஜபுரம் எனும் கிராமத்தில் சுமார் ஓராண்டு காலம் இருந்தேன். ஒரு நாள் இரவில் உறக்கத்தின் நடுவே என் பாட்டி என் அப்பா சித்தப்பா பெயர்களை சத்தமாகக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார் மறுநாள் காலை இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் இரவில் ஏதாவது சந்தேகமான சப்தம் எழுந்தால் வீட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று (வந்த, வராத ) திருடனுக்குத் தெரிவிக்க என்றாரே பார்க்கலாம்.....!  . 
. 

   

 

32 கருத்துகள்:

  1. என்னுடைய ஏமாந்த அனுபவங்களைக் கூட எங்கள் ப்ளாக்கில் எழுதி இருக்கிறேன்! பிக் பாக்கெட் விட்டதில்லை. வேறு சில அனுபவங்கள் எனக்கும் இருந்ததுண்டு - மிரட்டல், பொடனியில் ஒரு அடி உட்பட!

    பதிலளிநீக்கு
  2. சென்னையில் நானும் சில ரூபாய்களை இழந்து இருக்கிறேன்! பிறிதொரு சமயம் என் வலையில் பகிர எண்ணம் உள்ளது! நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இந்தக் காலத்தில் தூங்கினால் கூட காலை ஆட்டிக் கொண்ட தூங்க வேண்டும் என்று சொல்வார்கள் ஐயா

    பதிலளிநீக்கு
  4. சென்னை பேருந்துகளின் சில வழித்தடங்களில் இந்த மாதிரியான பிக் பாக்கெட் திருடர்கள் ஏறுவது நடத்துனருக்குத் தெரியுமாம். அப்படி அவர்கள் ஏறியதும் மெதுவாக பயணிகள் அருகில் வந்து ‘விருந்தாளிகள் இருக்கிறார்கள். கவனமாக இருங்கள்.’ என சொல்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படியும் பலர் பணத்தை கோட்டை விட்டுக்கொன்டுதான் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  5. சென்னை என்று இல்லை, எல்லா ஊர்களிலுமே நடத்துனர்களுக்கு தெரிந்துதானிருக்கும். லேசாக 'க்ளூ' தருவார்கள்!

    பதிலளிநீக்கு
  6. ஏமாந்த நிகழ்வுகள் மீண்டும் ஏமாறாமல் இருக்க
    எச்சரிக்கையாய் அமையும் ..!

    பதிலளிநீக்கு
  7. 12 ஆண்டுகளுக்கு முன் - உயர் ரக நோக்கியா Cell Phone 3510 - எனது Net Cafe ல் இருந்து களவு போனது. அப்போது அந்த மாடல் ஊருக்குப் புதுசு. அதன் பின், நோக்கியா smart N73 வீடு புகுந்து களவாடியதில் பறி போனது.

    நாம் என்னதான் கவனமாக இருந்தாலும் - பொருட்கள் களவு போவது வேறொரு அசம்பாவிதத்தினைத் தடுப்பதற்காக என்று கூட சொல்வார்கள்..

    பதிலளிநீக்கு
  8. பிக் பாக்கெட் அனுபவம் எனக்கும் உண்டு. என் கணவருக்கும் உண்டு. அதோடு இல்லாமல் ரயில் பயணங்களில் அவர் ஒரு சின்ன பர்ஸில் சில்லறையும் நோட்டுமாக நூறு, இருநூறுக்கு வைத்துக்கொள்வார். பேப்பர் வந்தால் வாங்க, வேறு ஏதானும் வாங்க எனக் காசு எடுக்கத் திண்டாடாமல் இருக்கவேண்டி வைப்பது வழக்கம். ஒருதரம் அப்படிப் பர்ஸை எடுத்துக்கொண்டு பேப்பர் வாங்குகையில் அங்கேயே பர்ஸைக் கடையின் கண்ணாடி டேபிள் மேல் வைத்துவிட்டுத் திரும்ப எடுக்காமல் வந்துவிட்டார். பின்னர் தெரிந்து போய்க் கேட்டால் போயிந்து, கான்!

    பதிலளிநீக்கு
  9. காய்கறிகள் வாங்குகையில் இம்மாதிரி விட்டுவிட்டுப் பின்னர் திரும்பப் போய் கடைக்காரர் எடுத்து வைத்திருந்து பெற்ற அனுபவம் உண்டு. மளிகை சாமான் வாங்குகையிலும் இப்படித் தான் நடந்தது. இப்போதெல்லாம் பயணங்களில் அவரிடம் பர்சையே கொடுப்பதில்லை. :))))

    பதிலளிநீக்கு
  10. பதிவே எழுதலாம். அவ்வளவு அனுபவங்கள் உண்டு. :)

    பதிலளிநீக்கு
  11. எல்லா ஊர்களிலும் இது போல் உண்டு... இன்றைக்கு எப்போதும் விழிப்போடு தான் இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  12. சென்னையில் மாநகரப் பேருந்தில் பணத்தை இழந்தவர்களுள் அடியேனும் ஒருவன்.இருசக்கர வாகனம் வாங்கியபிறகு பேருந்தில் சென்றதே இல்லை.

    பதிலளிநீக்கு
  13. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

  14. @ ஸ்ரீராம்
    வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றிஸ்ரீ.

    பதிலளிநீக்கு

  15. @ தளிர் சுரேஷ்
    சுவையான ஏமாந்த செய்திகளைப் பகிரலாமே. வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  16. @ கரந்தை ஜெயக் குமார்.
    தூங்கும் போது காலை ஆட்டிக் க்ண்டுஇருப்பவர்கள் உண்டா.? வருகைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  17. @ வே. நடனசபாபதி
    நீங்கள் சொல்லும் விஷயம் நான் ஜேள்விப்படாதது. எச்சரிக்கப்பட்டும் கோட்டை விடுகிறார்களா.?வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு

  18. @ ஸ்ரீராம்
    /சென்னை என்று இல்லை, எல்லா ஊர்களிலுமே நடத்துனர்களுக்கு தெரிந்துதானிருக்கும். லேசாக 'க்ளூ' தருவார்கள்!/ நடத்துனர்களுக்குத் தெரிந்து இருக்கலாம், க்ளூ தருகிறார்களா ? மீள் வருகைக்கு நன்றி

    A

    பதிலளிநீக்கு

  19. @ இராஜராஜேஸ்வரி
    ஏமாறாமலேயே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது மேடம்

    பதிலளிநீக்கு

  20. @ துரை செல்வராஜு
    எப்படியெல்லாம் கூறி மனதைத் தேற்றிக் கொள்கிறோம் எனக்குப் புரியாத விஷயங்களிலிதுவும் ஒன்று. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  21. @ டாக்டர் கந்தசாமி
    ரசனைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  22. @ கீதா சாம்பசிவம்
    நான் ஏமாந்த விஷயங்களைப் பதிவிடலாமா என்று நினைத்திருந்தேன் பலரது அனுபவங்களும் நான் மட்டும் ஏமாளி அல்ல என்பதை அறிய உதவியது இப்பதிவு. வருகைகு நன்றிமேடம் சுவையான ஏமாந்த சம்பவங்கள் இருந்தால் பகிரலாமே/

    பதிலளிநீக்கு

  23. @ திண்டுக்கல் தனபாலன்
    வருகைக்கும் எச்சரிக்கைக்கும் நன்றி டிடி

    பதிலளிநீக்கு

  24. @ டி.பி.ஆர் ஜோசப்
    வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சார்

    பதிலளிநீக்கு
  25. என்னைப் பொருத்தவரையும்
    ஏமாந்த கதை நிறைய
    குறிப்பாக மிக மிக முட்டாள்தனமாக...

    எல்லோருமே சம்பாதித்ததில்
    ஒரு குறிப்பிட்டசதவீதம் ஏதோ ஒரு வகையில்
    ஏமாந்தும் தொலைத்தும் இருப்போம் என நினைக்கிறேன்

    இந்தப் பதிவைப் படிக்க நீங்கள்
    பரவாயில்லை எனத்தான் படுகிறது எனக்கு

    பதிலளிநீக்கு
  26. வணக்கம்
    ஐயா

    விழிப்பின் அவசியம் பற்றி நன்றாகசொல்லியுள்ளீர்கள்..இந்த காலத்தில் சொல்லவா வேண்டும்....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  27. ஒரு புத்தகமே வெளியிடக் கூடிய அளவுக்கு சிறியதும் பெரியதுமாய் ஏமாந்திருக்கிறேன் . ஆனால் ஒரு தரம் ஏமாந்த மாதிரியே மறுதரமும் ஏமாந்ததில்லை . அதாவது ஒரு தரம் செய்த தப்பை மறுபடியும் செய்வதில்லை .ஆனால் புதியதாக வேறு தினுசில்தான் ஏமாறுவேன்.

    பதிலளிநீக்கு

  28. @ ரமணி
    வருகைதந்து என் நிலை தேவலாம் என்று கூறியதற்கு நன்றி ரமணி சார்

    பதிலளிநீக்கு

  29. @ ரூபன்
    யான் பெற்ற பேறு பெருக இவ்வையகம் என்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. நான் ஏமாந்திருக்கிறேன் என்னைப் போல் இல்லாமல் கவனம் காக்க என்று நினைத்து எழுதியதைப் புரிந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு

  30. @ அபயா அருணா
    ஆக தொடர்ந்து புத்திதாக ஏமாறுகிறீர்கள் என்றா சொல்கிறீர்கள். வருகை தந்து பதிவுக்குப் பின்னூட்டம் இட்டதில் மகிழ்ச்சி மேடம்.

    பதிலளிநீக்கு
  31. பல்லவனில் ஒரு முறை வடபழனியில் இருந்து பணிக்காக ஸ்டேர்லிங் ரோடுவரை செல்கையில் பர்ஸை அடித்து விட்டார்கள். ஆனால், அதில் இருந்தது வெறும் 3 ரூபா மட்டுமே. அங்கே இறங்கி சோழா ஷெரட்டன் வரை செல்லக் கையில் பணமில்லாமல் அருகில் இருந்த தெரிந்த பெண்ணின் அலுவலகம் சென்று,நிலமை விளக்கி 10 ரூ பெற்றுப் பயணத்தைத் தொடர்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  32. எல்லா இடங்களிலும் இவர்கள் உண்டு.....

    தில்லியில் சமீப காலமாக மெட்ரோ ரயிலில் பிக்பாக்கெட் அடிப்பது அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக பெண்கள் நிறைய பேர் இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கிறார்கள் - மெட்ரோ ரய்லில் பொருத்தவரை.....

    பதிலளிநீக்கு