Tuesday, July 15, 2014

பழையன கழிதலும் புதியன புகுதலும்....


                              பழையன கழிதலும் புதியன புகுதலும்......
                             ----------------------------------------------------------


எனக்கு பழைய நிகழ்வுகளைப் புதுப்பித்துக் கொள்ள புகை படங்கள் பேருதவியாய் இருக்கும். எண்ண அலைகள் ABSTRACT-ஆகத் தோன்றும்போதுபுகைப்படங்கள் தெளிவாக்கும்  எனக்கு இன்னொரு பழக்கமும் உண்டு. என் பேரக் குழந்தைகள் பிறந்த பிறகு அவர்களது புகைப் படங்களை பத்து பனிரெண்டு வயதுவரை chronological ஆக எடுத்து வைத்திருக்கிறேன் அந்தப் புகைப்படங்களைப் பார்க்கும்போது அவற்றை எடுத்த நேரங்கள் மனசில் விரியும் இதுவுமல்லாமல் என்னுடைய டேப் ரெகார்டரில் எனக்கு வேண்டியவர்களது குரலையும் பதிவு செய்து வைத்திருக்கிறேன் இம்மாதிரிக் குரல் பதிவுகள் ஏறத்தாழ முப்பது வருடத்தவையும் உண்டு. ஆனால் இப்போதைய தொழில் நுட்ப வளர்ச்சியில் டேப் ரகார்டர்கள் காலாவதி ஆகிப் போகின்றன. என் டேப் ரெகார்டர் பழுதானபோது டாக்டர் கந்தசாமி ஐயா என் வீட்டுக்கு வந்திருந்தபோது அவர் குரலைப் பதிவு செய்யவோ ஏற்கனவே பதிவு செய்திருந்த குரல்களைப் போட்டுக் காண்பிக்கவோ முடியவில்லை. என் இருபது முப்பது வருடகுரல் பதிவுகளைக் கேட்க முடியாமல் போனதுமிகவும் வருத்தத்தைக் கொடுத்தது.

 இதற்கு மாற்றுவழி என்னிடம் இருக்கும் காசட் டேப்புகள் எல்லாவற்றையும் குறுந்தகடுகளாக்க வேண்டியதுதான் அந்தக் காலத்தில் முப்பது ரூபாய்க்கும் நாற்பது ரூபாய்க்கும் டேப்புகள் வாங்கி அவற்றில்குரல்களைப் பதிவு செய்து வைத்திருந்தேன் இப்போது குறுந்தகடுகளாக மாற்ற நிறையவே செலவாகலாம். நான் அந்தமாதிரி மாற்றி வைத்தாலும் அவை என் பிள்ளைகளுக்கோ அவர்களது பிள்ளைகளுக்கோ தேவை என்று உணரப்படுமா தெரியவில்லை. என் இந்த டேப்பில் பதிவான குரல்களை கணினியில் இணைக்க  டேப்பை ஓடவிட்டுக் கைபேசியில் அதைப் பதிவு செய்து கணினியில் இணைத்துப் பார்த்தால் திருப்திகரமாக இல்லை
.இதேபோல் நாங்கள் பல இடங்களுக்குச் சென்று வந்ததும் புகைபடமாக இருக்கிறது நான் இதையெல்லாம் குறிப்பிடுவதே நாங்கள் சில ஆண்டுகளுக்கு முன் ஹம்பி க்கு சென்று வந்ததை எழுத முயன்றபோது படங்கள் இல்லாமல் பதிவு நிறைவைத் தராது என்று தோன்றியதே காரணம் நாங்கள் ஹம்பியில் எடுத்த புகைப் படங்களை மீண்டும் என் காமிராவில் எடுத்து அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்து பதிவாக்கினேன்
தொழில் நுட்பங்கள் மிகவும் முன்னேறி வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்தில் என் போன்றோர் அன்று பெரிதாய் எண்ணி செயல் பட்டதும் காலாவதியாகப் போய் விடுகிறது. எண்ண அலைகள் மனசில் தோன்றலாம் அவற்றைப் பதிவாக்கி நான் சக பதிவர்களுடன் பகிரவும் செய்யலாம். ஆனால் குரல்கள். அந்தநாளையக் குரல்கள்....?அதில் இருப்பவர் குரல்களும் உண்டு  இருந்தவர் குரல்களும் உண்டு. என் பேரக்குழந்தைகள் மழலையில் பேசத்துவங்கியது முதல் பாடியது வரை டேப்புகளில் பதிவாகி இருக்கின்றன 
விஜயவாடாவில் இருந்தபோது நண்பர் ஒருவர் வந்து நிறையப் பாடல்கள் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.என்னைப் பார்க்க வந்திருந்த பதிவர்கள் பாடி இருப்பதும் பதிவு செய்திருக்கிறேன் டேப் ரெகார்டரைப் பழுது பார்க்கச் சொன்னால் அதெல்லாம் மிகவும் சிரமம் வேஸ்ட் என்கிறார்கள். இருந்தாலும் அதைப் பழுது பார்த்து வைத்திருக்கிறேன். அந்த மாதிரிய டேப் ரெகார்டர்கள் இப்போது யாரும் வைத்துக் கொளள விரும்புவதில்லை. வைத்துக் கொள்வதும் இல்லை. ஏதோ நான் இருக்கும்வரை கேட்டு மகிழவாவது அவை எனக்குத் தேவை
அதேபோல் என் மகன்களின் திருமண வைபவங்களை டேப்பில் பதிவாக்கி வைத்திருந்தேன் நாள்பட்டதில் fungus  வந்து கெட்டு விட்டன. இருப்பதை குறுந்தகடாக்க டேப் சரியில்லாததால் யாரும் முன் வரவில்லை. சில நாட்களுக்கு முன் அமெரிக்காவில் இருந்து வந்திருந்த நண்பன் மிகவும் சிரமப் பட்டு அவற்றைக் குறுந் தகடுகளாக்கிக் கொடுத்தான் அவை அவ்வளவு தரமாயில்லை. இருந்தாலும் காட்சிகள் தெரிகின்றனவே என்று திருப்தி பெற்று கொள்கிறேன்
காமிராவில் படமெடுத்துப் பிரிண்ட் போட்டு சேமித்து வைத்திருக்கும் படங்கள் நிறைய இடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. நாளாவட்டத்தில் களை இழந்துபோய் விடுகின்றன. ஒரு முறை என் நண்பன் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சுட்டிப் பையன்கள் இருவரை புகைப் படம் எடுத்தேன் மறு வினாடியே அவர்கள் ஓடிவந்து படத்தை காண்பிக்கச் சொன்னார்கள்.அவர்கள் இந்தக் கால டிஜிடல் காமிராக்களையே பார்த்து இருக்கின்றனர். ....!அவர்களுக்கு என் காமிரா புதிதாயிருந்திருக்க வேண்டும்....!
 


47 comments:

  1. வணக்கம்
    ஐயா
    தாங்கள் சொல்வது உண்மைதான்
    தங்களின் குரலில் பேசியதை வீடியோவாக போட்டிருந்தால் நாங்களும் கேட்டு மகிழ்ந்திருப்பபோம் ஐயா
    பகிர்வுக்கு நன்றி

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ஏராளமான பொருட்செலவில் அப்போதெல்லாம் விசிடி க்களாக எடுத்துவைத்தவை, இடத்தை அடை த்துக்கொண்டும், பயனற்றும் போய்விட்டன. பாசி படர்ந்து போனது மட்டுமல்ல, அவற்றை இயக்கிப் பார்க்க இப்போது விசிஆர் களும் இல்லை. குப்பையில் போடவேண்டியதுதான். மனசுக்கு வருத்தமாக இருக்கிறது. என்ன செய்ய? காலம் மாறும்போது இம்மாதிரி creative destructions ஏற்படுவதை யாரால் தவிர்க்க முடியும்?

    ReplyDelete
  3. மிகத்தரமான நேஷனல் பானாசோனிக் டேப் ரெகார்டர் - எனது வீட்டில் வேலையற்றுக் கிடக்கின்றது. நூற்றுக் கணக்கான கேசட்டுகளும் அப்படியே!.. அவற்றைப் பார்க்கப் பார்க்க மனம் வலிக்கின்றது. ஏனெனில் 25 ஆண்டு கால வெளிநாட்டு வாழ்க்கையில் ஒவ்வொரு சாதனத்திற்குப் பின்னாலும் ஒரு சரித்திரம் இருக்கின்றது.

    சில ஆண்டுகளுக்கு முன் டேப்ரெகார்டரை சரி செய்ய திருச்சி வரையிலும் சென்று முயற்சித்தேன்.. கடைக் காரன் என்னை ஒரு அல்பம் போல நடத்தினான். வேதனையுடன் வீட்டுக்குத் திரும்பி விட்டேன்.

    ஐயா.. என் தந்தை வைத்திருந்த அலாரம் கடிகாரத்தைத் திறந்து சரி பார்க்க யாருக்கும் தெரியவில்லை!..

    உள்ளங்கையளவு samsung galaxy . அதில் என்னென்னவோ வைத்திருக்கின்றான்.. ஆனால் மனம் லயிக்கவில்லை..

    என்ன செய்வது? காலம் மாறி விட்டது.

    ReplyDelete
  4. கவலைப் படாதீர்கள்... இதையும் சரியாக மாற்றுவதற்கு ஆட்கள் உள்ளார்கள் ஐயா... உடனே விசாரித்து தொடர்பு கொள்ளவும்...

    ReplyDelete
  5. மறைந்த என் அம்மா, தாத்தா முதலியோர் குரல்களும், இப்போது வேலைக்குப் போகும் என் மகன் மழலையில் பேசியதும், இன்னும் நான் பாடியும், நான் கூட டேப்பில் பதிவு செய்து வைத்திருந்தேன். சிலவைதான் இன்னும் இருக்கின்றது. நல்ல டேப்ரெகார்டர் கிடைத்தால் அதை கணினியுடன் இணைத்து நீங்களே அதை அப்படியே நேராகக் கணினியில் சேமித்து, பின்னர் அவற்றை எம் பி த்ரீ ஃபார்மேட்டில் மாற்றி விடலாம். பொறுமைதான் வேண்டும்!

    ReplyDelete
  6. பழைய டேப்களை சில வருடங்கள் முன்பு வரை குறுந்தகடுகளில் பதிவு செய்து தருபவர்கள் இருந்தார்கள். நெய்வேலியில் ஒரு கடை அப்படி இருந்தது. இப்போது யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

    புகைப்படங்கள் இருப்பதை எல்லாம் Scan செய்து சேமித்துக் கொள்ளலாம். யாரிடமாவது இப்போதைய Printer cum Scanner இருந்தால் கேட்டுப் பாருங்களேன்....

    இருந்தாலும் ரெக்கார்ட் செய்து வைத்த குரல்களை கேட்க முடியாமல், சேமிக்க முடியாமல் இருப்பது வருத்தம் தான்.

    ReplyDelete
  7. அறிவியல் வளர வளர சில தாக்கங்களை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். பல புதிய பயன்களைப் பெறும்போது சில பழைய பதிவுகளை இழக்கவேண்டிய நிலை ஏற்படுவது தவிர்க்கமுடியாததே.

    ReplyDelete
  8. என்னிடம் அதிக டேப்புகள் இருந்தன. நல்ல கர்னாடக இசைப் பாடல்கள். மாறி வரும் தொழில் நுட்பத்திற்கேற்ப, நானே கம்ப்யூட்டர் மூலம் டெக்னாலஜி கற்றுக்கொண்டு, டேப்பிலிருந்து கம்ப்யூட்டருக்கு அவைகளைக் கொண்டு வந்தேன். பிறகு அவைகளை சிடி களாக்கி வைத்திருக்கிறேன். ஒரே வருத்தம். அவைகளை போட்டு கேட்க பொறுமையும் மனநிலையும் அமைய மாட்டேன் என்கிறது.

    ReplyDelete
  9. மாற்றம் செய்வதற்கு ஆட்கள் இருக்கிறார்கள் ஐயா. அருகில் உள்ள ஸ்டுடியோவில் கேட்டாலே, கூறுவார்கள். செலவு ஒன்றும் அதிகமாக ஆகாது என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. //ஐயா.. என் தந்தை வைத்திருந்த அலாரம் கடிகாரத்தைத் திறந்து சரி பார்க்க யாருக்கும் தெரியவில்லை!..//

    உண்மை தான், எங்க மாமனார் வீட்டில் இருந்த பழைய சுவர்க்கடிகாரத்தைச் சரி செய்ய யாருக்குமே தெரியவில்லை. கடைசியில் அதைப் பாதுகாத்தாவது வைக்க நினைத்தோம். வீட்டை வாடகைக்கு விட்டுட்டுப் போனதில் யாரோ காலி செய்கையில் அதையும் எடுத்துச் சென்று விட்டார்கள். :(

    ReplyDelete
  11. இந்த விஷயத்தில் எனக்கு முக்கியமாய் எங்க இருவருக்குமே அவ்வளவு பரிச்சயம் இல்லை. டேப்ரிகார்டர் இருந்தது. அதிலே கிரேசி மோகன், எஸ்வி சேகர் ஆகியோரது நாடகக் காசெட்களைப் போட்டுக் கேட்போம். அது டேப்ரெகார்டர் கம் ரேடியோ. இப்போவும் இருக்கு. ஆனால் எங்கே இருக்குனு தான் தெரியலை. காசெட்களை அடிக்கடி போட்டுப் பார்க்கும் வழக்கமும் இல்லை. யாருடைய குரலையும் பதிவு பண்ணியும் வைச்சதில்லை. கர்நாடக சங்கீத காசெட்கள் குறிப்பான சிலவும், நாடகக் காசெட்களும் தான் இருந்தன. இப்போது சங்கீதம் இணையத்திலேயே முழங்குகிறது. :)

    ReplyDelete
  12. மூன்றாவது பின்னூட்டம் கொடுக்கையில் திடீர்னு ஹாங் ஆகி விட்டது. மீண்டும் வந்தேன். முக்கியமாய் இதற்கெல்லாம் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லை என்பது தான் காரணம். :) பழைய ரேடியோவைக் கொடுத்துவிட்டு மேற்கொண்டு சேமிப்புப் பணத்தைப் போட்டுத் தான் புது ரேடியோ கம் டேப் ரெகார்டர் வாங்கினோம். அப்போ அதுவே பெரிய விஷயம்.

    டேப்கள் நண்பர் ஒருவரால் பரிசாகக் கொடுக்கப்பட்டது. அவங்க கேட்டு அலுத்துப் போனது எங்களுக்குக் கொடுத்தாங்க. :) ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாட்கள் தான் ஆர்வமாக இருக்கும். பின்னால் அலுத்துவிடுகிறது. இப்போல்லாம் பொதிகை, எஸ்விபிசி பக்தி சேனல், சங்கரா தொலைக்காட்சி, மக்கள் தொலைக்காட்சி சங்கீதக் கச்சேரிகள் தான் அதிகமாய்க் கேட்பது. :)

    ReplyDelete
  13. இப்போது இருக்கும் கருவிகள் இன்னும் பத்து வருஷங்களில் பழைமையானதாகி விடும். :))))

    ReplyDelete
  14. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்
    வழுவல கால வகையினானே’

    என்று நன்னூல் சொல்வதை தலைப்பிலேயே சொல்லிவிட்டீர்களே! வேறு வழியில்லை காலம் செய்யும் மாற்றத்தோடு அனுசரித்துப் போகவேண்டியதுதான்.

    ReplyDelete
  15. நமக்குப் பொக்கிஷமாக தெரிவது இந்தக்கால தலைமுறைகளுக்கு அற்பமான்வைகளாக ஆகிப்போனது
    காலத்தின் கோலம் தான்..!

    ReplyDelete
  16. பழையன கழிதலும் புதியன புகுதலும். வேறு வழியில்லை!
    தொழில்நுட்பம் வளர வளர நாம் பயன்படுத்திய பொருட்கள் நாளடைவில் பயன்படுத்து / தூக்கியெறி (USE AND THROW ) வழியில் நம் காலத்தோடேயே போய் விடுகின்றன.

    நானும் சில பதிவு செய்த கேஸட்டுகளை வைத்து இருக்கிறேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. எனது அப்பா (88) பழைய டைப் பாக்கெட் டிரான்சிஸ்டர் வாங்கித் தரச் சொன்னார். எங்கு அலைந்தும் கிடைக்கவில்லை. அவருக்கு செல் போனில் உள்ள ரேடியோ சிஸ்டம் ஒத்துவரவில்லை.

    ReplyDelete

  17. @ ரூபன்
    நான் பேசி இருப்பதும் பதிவாகி இருக்கிறது. என் டேப் ரெகார்டர் இப்போது பழுது பார்க்கப் பட்டு இருப்பதால் கேட்க முடியும். ஆனால் கணினியில் எப்படி ஏற்றுவது தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  18. @ செல்லப்பா யக்ஞசாமி
    இருக்கும் வீடியோகாசட்டுகளைக் குறுந்தகடுகளாக்கவும் முயற்சி பலனளிப்பதில்லை. ஏதோ ஒன்றிரண்டு நண்பன் தயவில் குறுந்தகடுகளாகி இருக்கின்றன. ஆனால் அவற்றின் தரம் திருப்தியாக இல்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  19. @ துரை செல்வராஜு
    பொருட்களின் விலை மதிப்பைவிட அவற்றில் பதிவு செய்திருப்பவைகள் எனக்கு முக்கியமானதாகத் தெரிகிறது.
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  20. @ திண்டுக்கல் தனபாலன்
    தெரிகிறது. அதற்காக அலைந்து விலையும் கொடுத்தால் யாராவது சரி செய்யலாம். ஆனால் எனக்கிருக்கும் ஆர்வம் என்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு இல்லையே. வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துக்கும் நன்றி டிடி.

    ReplyDelete

  21. @ ஸ்ரீராம்
    பொறுமை அல்ல. நான் நாடும் மனிதருக்கு அதைச் செய்து தர வேண்டும் என்னும் உற்சாகம் இருக்க வேண்டுமே. என் சொற்ப கணினி அறிவில் செய்ய முடியும் என்று தோன்றவில்லை. பார்ப்போம். வேலைக்குப் போகும் வயதுள்ள மகனா.? நம்ப முடியவில்லையே ஸ்ரீ...!

    ReplyDelete

  22. @ வெங்கட் நாகராஜ்
    நானும் எல்லாவற்றையும் முயற்சித்துக் கொண்டுதான் இருக்கிறேன் பார்க்கலாம். வருகைக்குக் ஆலோசனைகளுக்கும் நன்றி சார்.

    ReplyDelete

  23. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    அப்படித்தான் தேற்றிக் கொள்ள வேண்டி இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  24. @ டாக்டர் கந்தசாமி
    பலவித இசையும் படங்களும் கணினியிலேயே இருக்கின்றன. ஆனால் நமக்கு வேண்டியவர்களின் குரல்கள் நம்மிடம்தானே இருக்கிறது. அவற்றைக் கேட்க முடியாமல் போவது வருத்தம் தருகிறது. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  25. @ கரந்தை ஜெயக்குமார்
    ஒரு வீடியோக் காசட்டை குறுந்தகடாக்க என் நண்பன் ரூ. 600/- செலவு செய்தான். இருந்தும் தரமில்லை. டேப்பில் பாசி படர்ந்து விட்டதால் யாரும் முன் வருவதில்லை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete

  26. @ கீதா சாம்பசிவம்
    மீண்டும் கூறுகிறேன். நான் பதிவு செய்திருந்தது எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களது குரல்கள். அவை கணினியிலோ விலைக்கொ கிடைக்காது. பல பழைய புகைப்படங்களும் நினைவலைகளை தூண்டுபவை.வெங்கட் சொல்வது போல் ஸ்கான் செய்து படங்களை கணினியில் இணைக்கலாம் It might cost exorbitantly. அப்படியே செலவு செய்தாலும் என் காலத்துக்குப் பின் அவை சீந்தப் படுமா தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி மேடம் .

    ReplyDelete

  27. @ வே.நடன சபாபதி
    ஆம். காலத்தோடு அனுசரித்துப் போக வேண்டியதுதான் வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete

  28. @ இராஜராஜேஸ்வரி
    / நமக்குப் பொக்கிஷங்களாகத் தெரிவது இந்தக் காலத் தலைமுறைகளுக்கு அற்பமானதாகத் தெரிவது காலத்தின் கோலம்தான்/ மிகச்சரியாகச்சொன்னீர்கள். வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  29. @ தி. தமிழ் இளங்கோ
    பொருட்களைத் தூக்கி எறிவதைப்போல் நாம் பொக்கிஷமாகக் கருதுபவைகளைத் தூக்கி எறிய முடிவதில்லையே இளங்கோ சார்.

    ReplyDelete
  30. நானும் உங்களைப்போலத்தான் ஐயா! என் மகள்களின் மழலைக்குரல்களையும், அவங்க திக்கித் திணறி பாடம் படிச்சதையும் கேசட்டில் பதிவு செய்திருக்கேன்.

    ReplyDelete
  31. என்னிடமும் நூற்றுக்கணக்கில் ஒலிநாடாக்கள் இருந்தன. ஆனால் ஊர் ஊராக மாறி சென்றதில் பலவற்றை இழந்துவிட்டேன்.மீதம் உள்ளவை பயனில்லாமல் போய்விட்டன. குறுந்தகடுகளும் அப்படித்தான். இப்போது எதையும் பதிவு செய்வதில்லை. நீங்கள் சொன்னதுபோல் எல்லாமே கொஞ்சம் நாளைக்குத்தான். தொழில்நுட்பம் மாற மாற பழையவைகளால் பயனேதும் இல்லை.

    ReplyDelete

  32. @ ராஜி
    வாருங்கள் ராஜி.இன்று பதிவு செய்யும்போது இருக்கும் இன்பத்தை விட பல ஆண்டுகள் கழித்துக் கேட்கும்போது கிடைக்கும் இன்பமே தனி. பிற்காலத்திலும் கேட்கும்படிக்கு ஏற்பாடு எய்து கொள்ளுங்கள். நன்றி

    ReplyDelete

  33. @ டி.பி.ஆர் ஜோசப்
    ஏற்கனவே பதிவு செய்த கடைகளில் வாங்கிய ஒலி நாடாக்கள் போனால் பாதகமில்லை. மார்க்கெட்டில் கிடைக்கும். என்னிடம் இருப்பவைகளில் நான் என் உற்றார் உறவினர் குரல்களை அல்லவா பதிவு செய்திருந்தேன். அவை உபயோகப் படாமல்போகும்போது வருத்தமே மிஞ்சுகிறது. வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  34. உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    MP3-யில் கேசட் டேப்களைப் போட்டுக் கேட்கலாமே?.. நான் அதைத் தான் செய்கிறேன்.

    ReplyDelete
  35. என் சிறு வயதில் கிராமபோனும் (HMV logo இன்னும் நினைவில்- என்ன அழகு!) அதன் தட்டுகளும் களையிழந்ததைப் பார்த்தேன். இப்போ கேசட் டேப்புகள்!

    ஆனால் புராதனப் பொருட்களுக்கு அவற்றை நேசிப்போரிடம் இருக்கும் மதிப்பே அலாதி தான்!

    ReplyDelete
  36. என் சிறு வயதில் கிராமபோனும் (HMV logo இன்னும் நினைவில்- என்ன அழகு!) அதன் தட்டுகளும் களையிழந்ததைப் பார்த்தேன். இப்போ கேசட் டேப்புகள்!

    ஆனால் புராதனப் பொருட்களுக்கு அவற்றை நேசிப்போரிடம் இருக்கும் மதிப்பே அலாதி தான்!

    ReplyDelete
  37. //எனது அப்பா (88) பழைய டைப் பாக்கெட் டிரான்சிஸ்டர் வாங்கித் தரச் சொன்னார்.

    - தமிழ் இளங்கோ //

    சென்னை பாண்டி பஜாரில் ரூ.200/- அளவில் மிக சிறப்பான செட் கிடைக்கிறது.

    ReplyDelete

  38. @ ஜீவி
    Mp-3 ல் காசட்டுகளைப் போட்டுக் கேட்கமுடியுமா. ?கணினியில் இருந்து தரவிறக்கம் செய்த பாட்டுகளைக் கேட்க உதவும் கருவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் பிள்ளைகளிடம் கேட்கிறேன். உபயோகப் படாத புராதனப் பொருட்கள் பெருமூச்சைத்தான் வரவழைக்கும். என் மூத்த மகனின் முதல் பிறந்த நாளையொட்டி ஒரு மர்ஃபி ரேடியோ ( பெரியது )வாங்கி இருந்தேன். அதற்கான வால்வுகள் கிடைக்காமல் காலாவதி ஆகிப் போயிற்று. வருகை த்ந்து எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஜீவி சார்.

    ReplyDelete
  39. நமக்குப் பிடித்த நாம் பார்த்துப் பார்த்து ரசித்து சேகரித்த பல விஷயங்கள் நம் காலத்துக்குப் பிறகு நம் பிள்ளைகளுக்கும் அவற்றில் ஆர்வம் இல்லாத நிலையில் பயனற்றவையாய்ப் போய்விடுகின்றன. One man's trash is another man's treasure என்பது போல் One man's treasure is other's trash என்றானது ஆற்றாமையைக் கூட்டுவது உண்மைதான்.

    ReplyDelete
  40. ஆர்வமில்லாது பயனற்றுப் போவது ஒரு புறம் தொழில் நுட்ப மேம்பாட்டினால் ஆர்வமிருந்தும் சில நேரங்களில் உபயோகிக்க முடியாத ஆற்றாமையும் மறுபுறம் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete
  41. //Mp-3 ல் காசட்டுகளைப் போட்டுக் கேட்கமுடியுமா. ?//

    முடியும். CD-க்கு, காஸ்ட்டுக்கு என்று தனித்தனி slot-கள் இருக்கின்றன.
    இதைத் தவிர ரேடியோ பங்கஷனும் உண்டு. உங்கள் மூன்று விதமான விருப்பங்களும் பூர்த்தியாகும்.

    ReplyDelete
  42. குறை தட்டுகள் காலாவதியாகி பத்து வருசத்துக்கு மேலாகுதே?

    Google drive. எளிய இலவச காப்பகம்.

    ReplyDelete

  43. @ அப்பாதுரை.
    குறை தட்டுகள் ...?

    ReplyDelete
  44. உண்மை சார்! டேப்புகள் இப்போது குறுந்தகடுகளாக மாற்றிக் கொடுப்பதில்லை! அவை எல்லாம் அவுட் டேட்டட்! ஃப்ப்ட்டோக்களை ஸ்கான் செய்து கணினியில் சேர்த்து வைத்துக் கொள்ளலாம் சார்!

    எத்தனையோ வீடுகளில் கல்யாண வீடியோக்கள் அப்படியே உறங்கிக் கொண்டு இருக்கின்றன! தூசி அடைந்து, அதைப் போட்டுப் பார்க்க கூட வழியில்லை! அறிவியல் வளர வளர, எல்லாம் அவுட் டேட்டட் ஆகிவிடுகின்றன! காலத்தின் நீரோட்டதில் நாமும் நீந்திப் போகத்தான் வேண்டியிருக்கின்றது சார்! பெற்ற தாய் தந்தையரையே முதியோர் இல்லத்தில் கொண்டு விடும் நிலைமை...அதுவும் பழையன கழிதல்?

    ReplyDelete
  45. பெற்றோர் முதியோர் இல்லத்தில்
    பெற்றோரின் புகைப்படங்கள் சுவரில், கணினியில்!

    ReplyDelete

  46. @ துளசிதரன் தில்லையகத்து.
    நான் அதிகமாக உணர்வது, நமக்கு வேண்டப்பட்டவர்களது குரல்களைக் கேட்க முடியவில்லையே என்பதுதான். அவற்றில் என் பேரக் குழந்தைகள் பேசத் தொட்ங்கியது முதலான மழலைகளும் நண்பர் ,உற்றார் ,உறவினர் போன்றோர் பேசியது பாடியது எல்லாம் அடங்கும். இவற்றை நான் என் சந்ததிகளுக்கு விட்டுச் சென்றாலும் அதை அவர்கள் கேட்டு மகிழ முடியாதே என்பதுதான்.
    பழையன கழிதலுக்கு இன்னொரு நடைமுறை உதாரணம் . ரசித்தேன். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  47. குறுந்தட்டுக்கள்னு டைப் அடிச்சா குறை தட்டுகள்னு வந்திருக்குதே!

    ReplyDelete