Wednesday, December 3, 2014

உறவுகள்


                                                 உறவுகள்
                                                 --------------


இரண்டு பதிவுகள் பெண்களை மையமாக வைத்து எழுதினேன் நகைச் சுவையே முக்கிய நோக்கம். ஆனால் நகைச் சுவையானாலும் பெண்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது இந்தப் பதிவு உறவுகளை நான் காணும் விதத்தில் முடிந்த அளவு விருப்பு வெறுப்பில்லாமல் யதார்த்த உலகில் காண்பவற்றை வைத்து எழுதி இருக்கிறேன். கருத்துரைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் இந்தப் பதிவைத் தொடராக்க விரும்புகிறேன். பதிவுலகில் கோலோச்சும் என் மதிப்பிற்குரிய பெண்பதிவர்கள்
திருமதி.கீதா சாம்பசிவம்
திருமதி கோமதி அரசு,
திருமதி இராஜராஜேஸ்வரி
திருமதிகீத மஞ்சரி
திருமதிராஜலக்ஷ்மி பரமசிவம்
ஆகியோரை இது பற்றி பதிவு எழுத வேண்டிக்கேட்கிறேன் என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார்கள் என்றும் நம்புகிறேன். இனி என் பதிவு.

உறவுகளை கொஞ்சம் அலசவும் ,புரிந்து  கொள்ளவும், முடிந்தவரை 
விருப்பு  வெறுப்பின்றி எழுத  விரும்புகிறேன். எதை  எப்படி எழுத 
முயன்றாலும் ,என் அடிப்படை எண்ணங்களும்  குணங்களும் 
குறுக்கிடாது என்று உறுதியாகக் கூறமுடியாது. 

உறவுகளில் தலையாயது, தாய்__மகன், மகள் உறவுதான். தொப்புள் 
கொடி  உறவு உதிரம்  சம்பந்தப் பட்டது. அன்னையின்  வயிற்றில் 
சாதாரணமாக ஒன்பது மாதங்களுக்கும்  மேலாக உருவாகி வளர்ந்து 
வெளி வரும்போது, அதை வெளிக்கொணர ,அதில் அனுபவிக்கும் 
வேதனையும்,வெளிக்கொணர்ந்த பிறகு அனுபவிக்கும்  மகிழ்ச்சியும் 
என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில் நான் ஒரு ஆண் . கண்டதும் 
கேட்டதும் கூடவே இருந்து பங்கு கொண்டதிலும் அறிந்த மறக்க
மறுக்க முடியாத உண்மை.

ஒரு சேய  கருவுருவதோ இந்த  உலகில் உதிப்பதோ திட்டமிட்டு
செய்யப் படுவது அல்ல. தடுக்காமல் இருப்பதே திட்டமிடுதல்  என்றால்
என்னிடம் பதிலில்லை. என்னைப் பொறுத்தவரை நாம் எல்லோரும்
விபத்தின் விளைவுகளே. அறிந்தே விபத்து நடப்பதை தடுக்காததால்
தான் மக்கள் பெருக்கம் கூடுகிறது. அது  வேறு ஒரு தலைப்பு. அதை
நான் விவாதிக்க வரவில்லை.

தொப்புள் கொடி  உறவுக்கு உறுதுணையாய்  இருப்பவன் ,அந்தப்
பெண்ணின் கணவன்,குழந்தைக்குத் தந்தை. பிறந்ததிலிருந்தே
இவ்விருவரையும் சார்ந்தே (பெரும்பாலும் )வளரும் குழந்தை
அவர்களிடம் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பது  இயற்கை. அவர்கள்
இல்லாமல் குழந்தை இல்லை..ஆக, பிறந்த உடனே  சேய்,தன தாய்
தந்தையரிடமிருந்து, அன்பை, பரிவை, ஆதரவை தன்னையறியாமலே
எதிர்பார்க்கிறது..பெரும்பாலும் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

இந்த தாய் தந்தை -மக்கள்  உறவை ஒட்டியே மற்ற உறவுகள் அறியப்
படுகின்றன. இந்த தாய்,தந்தை ,மக்கள் உறவு நாட்பட, நாட்பட கிளை
விட்டுப் பெருகி, பெரிய மரமாக உருவாகிறது. இந்த குடும்ப மரத்தின்
அங்கத்தினர்கள்  ஆலின்  விழுதுகளுக்கு  ஒப்பாவார்கள். ஒவ்வொரு
வரும்  ஒரு தனி மரமாக இல்லாமல் தோப்பாக மாறி கிளைவிட்டு ,
விழுதூன்றி, உறவுகளை பலப் படுத்த வேண்டும்.

 ஆனால் தற்கால நிகழ்வுகளைப் பார்க்கும்போது, விதையிலிருந்து
புறப்பட்ட செடி, மரமாகிக் கிளைவிட்டு ,கனி தந்து, பட்டுப்போனால்
அந்தக் கனியிலிருந்து வேறு ஒரு மரமாக  உருவாகிவெவ்வேறு
இடங்களில் மரமாக நிற்கின்றன. பழைய ஆலின் உதாரணம்
எடுபடுவதில்லை.

இந்த மாற்றத்துக்கு காரணங்கள்தான் என்ன.?உறவுகள் ஒட்டுதலும்,
பரிவும் இல்லாமல், தானுண்டு, தன சேயுண்டு, (கவனிக்க:சேய்கள்
என்று சொல்லவில்லை நான். )என்று இருப்பதுதான். தற்காலத்திய
குழந்தைகள் உறவு முறைகள் தெரியாமலே வளர்கின்றன.

மக்களும் ,விலங்குகளைப் போல்  மாக்களாக மாறிவருகிறார்கள்.
தன்னால் விளைந்த விபத்துக்கு மட்டுமே பொறுப்பேற்று ,அதையும்
காலூன்றி நிற்கும் வரை பராமரித்து, விட்டு விடுகிறார்கள். உறவுகள்
எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு
காரணம். உறவுகள் " ஈன்று புறந்தருதல் தாய்க்குக் கடனே, சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே "என்ற வகையில் மட்டுமே அனுஷ்டிக்கப்
படுகின்றன. அதையும் மீறி, உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டு, உறவு
கள் ஒன்றோடு ஒன்று அன்பினால் பிணைக்கப்பட்டு, பல்கிப் பெருகி
கிளைவிட்டு, தோப்பாக இருந்த காலம் பழங்  கதையாய்ப் போய்
விட்டதோ.?

வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து
இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு
கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும்
காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே
தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில்
காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட
வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது. 
ஆங்கிலத்தில்  NO LUNCH IS FREE  என்றொரு சொல் வழக்கில் உண்டு .
எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும் 
கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம் 
வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது. 

பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்
ஆண்-பெண் (கணவன் -மனைவி)உறவிலும் யார் பெரியவர் யார் 
சிறந்தவர், யாருக்கு யார் பணிந்து செல்வது போன்ற கேள்விகளும் 
சர்வ சாதாரணமாகி விட்டது. அன்பின் பால் கட்டுப்பட்டு இருக்கும் 
உறவில் விட்டுக் கொடுத்தல்தானாக வருவதன்றோ.?

இன்றைய வாழ்க்கை முறையில் குறைந்த பட்ச வசதிகளுக்கு கணவன் 
மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்றாகி விட்டது. 
இந்த நிலையில் நாம் இருவர் நமக்கு ஒருவர் ( அதிக பட்சம்  இருவர் )
என்ற எண்ணங்கள் தானாகவே வந்து விட்டது. இது தவிர வேறு 
அனைவரும் வேண்டாதவர்களே என்ற எண்ணம் அவர்கள் அறியாமலே 
மனதில் பதிந்து விடுகிறது.

எதையெல்லாமோ  தாண்டி, மீதமிருக்கும் உறவுகளை.,பெண்கள்
ஓரளவுக்குப் பேணுகிறார்கள். ஆண்கள் உறவுகளைப் பேணுவதில்லை
என்று சொல்வதைவிட  பேண முடிவதில்லை என்பதே உண்மை. கணவன்
மனைவியின் உறவுகளில் மிகவும் அதிகமாக அறியப்படும் உறவு
தாய் வழி உறவே.உறவுகளைப் பேணும் பெண்களைப் பெற்றெடுப்பதில்
என்னதான் குறையோ.?பெண் சிசுக் கொலைகள் நிகழ்வது, மிகவும்
தவறான ,அடிப்படை உண்மைகள் உணராத மக்களின் அறியாமையின்
விளைவே. வயதான காலத்தில் மகன் பேணுவான் என்று எண்ணுவது
தற்கால சூழ் நிலையில் சரியாகத் தோன்றவில்லை.

ஒரு பெண்ணுக்கு தன வீட்டு உறவுகள் முக்கியமாகப் படுகிறது. அதுவும்
ஓரளவுக்குச் சரிதானோ ! பெண் நாற்றங்காலைப்  போன்றவள் , வேறு
ஒரு நிலத்தில் (  குடும்பத்தில் )விளைந்து பலன் கொடுப்பவள் என்பது
இப்போதெல்லாம் வெறும் கதையாக உள்ளது. என்ன இருந்தாலும்
கணவன் தேவை. அவன் உறவுகள்  தேவையா,?தன உதிரம்  சம்பந்தப் 
பட்ட உறவுகளிடம், ஒட்டுதல் இருப்பது சகஜந்தானே. ஆனால் நியாயமா
என்று கணவன்  கேட்க முடியாது.. தன மனைவி தன தாயைப் போல்
இருக்க வேண்டும் என்கிற  ஈடிபஸ்  காம்ப்ளெக்ஸ்  சாதாரணமாக
அநேக ஆண்களுக்கு உண்டு. தாய் தனக்குத  தாலாட்டாகப் பாடிய ,
அத்தை வீட்டு வாசலிலே, நித்தம் நித்தம் போகாதே. --பழிகாரி அத்தை
அவள்  பாம்பெடுத்து மேலிடுவள்" போன்ற வரிகள் உணர்வுகளால்
உந்தப்பட்டு வருவதே. எல்லோரும் தாலாட்டுக் கேட்டிருக்காவிட்டாலும்
அதில் பொதிந்துள்ள கருத்துக்களை  உணர்த்தப் பட்டவர்களே. அது தன
மனைவியிடமும் இருக்கும்போது கணவன் ஏதும் பேச முடியாதவன்
ஆகிவிடுகிறான். வாழ்க்கையில் அமைதிக்காக ,நிம்மதிக்காக, பெற்றவரை
விட்டுக் கொடுத்துப் போவதே உத்தமம்  என்று உணரத் துவங்குகிறான்.
சாதாரணமாக குழந்தைகளுக்கும்  தாய் வழி உறவே அதிகமாக அறிமுகம்
செய்யப்படுகிறது.. மீறி தந்தை வழி உறவுகள்  அவர்களாகவே வந்து
அன்பு செலுத்தினாலும்  வாய்ப்புக்கள் குறைக்கப் படுகின்றன. தாயின் 
அன்பும் அரவணைப்பும் HIGHLY POSESSIVE IN NATURE. பங்கு போட 
விரும்பாதது. அன்பென்ன பங்கு போட்டால் அளவில் குறையக் 
கூடியதா..?. அள்ள அள்ளக்  குறையாத அன்பினை வாரி வழங்கி 
அனைவரும் அன்பு மழையில் நனைந்து  உறவுகளைப் பேணிக் 
காப்போம். 
( இதைத் தொடர வேண்டியவர்களை ,விரும்பினால் பதிவைத் தொடரும் பெண்பதிவகளே குறிப்பிடலாம்)

  .


 


 

40 comments:

  1. படிச்சுட்டேன், மிச்சத்துக்கு அப்புறமா மெதுவா வரேன். :))))

    ReplyDelete
  2. சகோதரிகளின் தொடர் பதிவினை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன் ஐயா

    ReplyDelete
  3. இன்றைய உறவுகளை பற்றி நன்றாக அலசியது கட்டுரை! அவசர உலகில் உறவுகள் உதிர்ந்து போவது வேதனைதான்!

    ReplyDelete
  4. நீங்கள் சொல்வது போல உறவுகளும் ஒட்டுதலும் காணாமலே போய்விட்டன. இன்றைய டெக்னாலஜி இதில் முக்கிய பங்கு வகிக்கிறது! சீரியல்கள், கணினி, பேஸ்புக், செல்ஃபோன் ஆகியவை நேரத்தைத் திருடிக் கொள்கின்றன.

    உலகமயமாக்கல் கொள்கைகளுக்குப்பின் அதிகரிக்கப்பட்டுவிட்ட வருமானங்களால் உறவுகள் மதிக்கப் படாமல் போகின்றன.

    எனக்குத் தெரிந்த ஒரு பெண் வெளிநாட்டில் வேலை செய்பவர், தன் தந்தையின் மறைவுக்கு வரவேயில்லை. ஆறு மாதம் கழித்துதான் வந்தார். அந்தத் தந்தை ஒரு ஆபீசில் பியூனாக இருந்து மகளைப் படிக்க வைத்து வெளிநாட்டுக்கு அனுப்ப உறுதுணையாக இருந்தவர். காரணங்கள் 1000 சொல்லலாம். ஆனால் என் மனதை திகம் பாதித்த உதாரண நிகழ்ச்சி இது.

    ReplyDelete
  5. மறுபடியும் மாறுதலான சிந்தனையுடன் தனித்துவமான பதிவு!..

    தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்ப்பவர்களுடன் நானும் ஒருவன்!..

    ReplyDelete
  6. உறவுகள் என்பது தற்போது அருகிக் கொண்டே வருகிறது. தங்களது எழுத்தில் ஆதங்கம் தெரிகிறது. நல்ல ஒரு விவாதத்தைத் தொடங்கியுள்ளீர்கள். மற்றவர்களின் மறுமொழிக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  7. அன்பு என்பது ஒருவழி பாதை இல்லை.உறவுகளை பலபடுத்துவது அன்பு.

    ReplyDelete

  8. நல்லதொரு சர்ச்சையை தொடங்கி வைத்தமைக்கு நன்றி ஐயா நானும் ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  9. . உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்பின் அடிப்படையில் அமைவதே இந்த நிலைக்கு காரணம்.

    ReplyDelete
  10. ஆழமான அலசல் தேவைப்படும்
    கனமான விஷயத்தை முன்னுரையாகக் கொடுத்து
    அதற்கு மிகச் சரியாகப் பதில் எழுதத்தக்க
    பெண் பதிவர்களை குறிப்பிட்டவிதம் அருமை
    அவர்கள் பதிவையும் ஆவலுடன் எதிர்பார்த்து...

    ReplyDelete
  11. அனைத்து பெண் பதிவர்களும் தொடர வேண்டும்...!

    ReplyDelete

  12. பதிவுலகில் கோலோச்சும் மதிப்பிற்குரிய பெண்களின் கருத்தை அறிய காத்திருக்கிறேன்.

    ReplyDelete

  13. @ கீதா சாம்பசிவம்
    பொதுவாகவே பதிவர்கள் தொடர் பதிவுக்கு அழைப்பு என்றால் காத தூரம் போய் விடுகிறார்கள். தெரிந்தும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றால் உங்கள் கருத்துக்களை எவ்வளவு தூரம் மதிக்கிறேன் என்று புரிந்திருக்கும் என்று நம்புகிறேன் வீட்டு வேலை ஓரளவு முடிந்ததில் இதிலும் கவனம் செலுத்தும் வாய்ப்பும் அதிகம்தானே. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  14. @ கரந்தை ஜெயக்குமார்
    நானும் எதிர்நோக்குகிறேன் ஐயா. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  15. @ தளிர் சுரேஷ்
    பெண்களின் கண்ணோட்டம் தெரிய வேண்டுமே. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி சுரேஷ்.

    ReplyDelete

  16. @ ஸ்ரீராம்
    என் கட்டுரையின் மையக் கருத்து உறவுகளைப் பேணிக்காப்பதில் பெண்கள் ஒருதலைப் பட்சமாக இருக்கிறார்களொ என்பதுதான் அதை வெட்டியோ ஒட்டியோ பெண்பதிவர்களிடமிருந்து கருத்துக்களை அறிய விரும்புகிறேன்உங்கள் வருகையும் கருத்துப் பகிர்வும் மகிழ்ச்சி தருகிறது நன்றிஸ்ரீ

    ReplyDelete

  17. # துரை செல்வராஜு
    மாறுதலான கருத்துக்கு மாற்றுக் கருத்துக்களும் இருக்கும் அல்லவா. நானும் தொடர் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    விவாதத்தைத் துவங்கி இருக்கிறேன் சூடு பிடிக்கக் காத்திருக்கிறேன் ஆதங்கம் உணர்ந்ததற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

  19. @ கோமதி அரசு.
    உங்கள் கருத்துக்களை விலாவாரியாகக் கேட்பதற்கு ஆவலாய் இருக்கிறேன் நன்றி.

    ReplyDelete

  20. @ கில்லர்ஜி
    சர்ச்சை என்பதைவிட விவாதம் என்றால் சரியாய் இருக்கும் என்று எண்ணுகிறேன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  21. @ இராஜராஜேஸ்வரி
    உங்கள் கருத்துக்கலைக் கேட ஆவலாய் இருக்கிறேன் வருகைக்கு நன்றி மேடம்

    ReplyDelete

  22. @ ரமணி
    நான் குறிப்பிட்டுள்ள பெண்பதிவர்கள் அனைவரும் பெண்பதிவர்களின் பிரதி நிதிகளாகக் கருத்துக்களை எழுதுவார்கள் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  23. @ திண்டுக்கல் தனபாலன்
    பெண்பதிவர்களை அழைக்க என்னிடம் அவர்களது மின் அஞ்சல் முகவரி இல்லாததால் அவர்களின் பதிவிலேயே பின்னூட்டமாக அழைத்திருக்கிறேன். என் இந்தப் பதிவுக்குமூவர் வருகை தந்துள்ளனர். திருமதி ராஜலக்ஷ்மி, திருமதி கீதமஞ்சரி இவர்கள் இன்னும் வரவில்லை. எனக்கும் அவர்கள் முகவரி கிடைக்கவில்லை. உதவ முடியுமா டிடி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete

  24. @ வே.நடன சபாபதி
    கோலோச்சுபவர்கள் மனங்கனிய வேண்டுமே. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  25. GMB சார்,
    நான் சற்றே ஜாலியாக எழுதுபவள். சீரியஸ் பதிவு. அதுவும் நானா.....

    ReplyDelete

  26. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    உங்களுக்கென்று சில அபிப்பிராயங்கள் இருக்கும் அதை உங்கள் பாணியிலேயே எழுதலாமே. you can do it madam வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  27. எனக்குத் தெரிந்ததை எழுதுகிறேன்.

    ReplyDelete
  28. தொடர்பதிவு - அனைவரின் கருத்துகளைப் படிக்கும் ஆர்வத்துடன் நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete

  29. @ ராஜலக்ஷ்மி பரமசிவம்
    ஆவலோடு எதிர் நோக்குகிறே(றோம்)ன்

    ReplyDelete

  30. !@ வெங்கட் நாகராஜ்
    ஐவரிடம் வேண்டிக் கொண்டிருக்றேன் .பதிவுகளுக்காக வெயிட்டிங். வருகைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  31. தங்கள் மதிப்பைப் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்கிறேன் ஐயா. எனக்கும் அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி. விரைவில் உறவுகள் தொடர்பான என் கருத்தை வலையில் பதிவிடுகிறேன்.

    ReplyDelete

  32. @ கீத மஞ்சரி
    ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் நன்றி.

    ReplyDelete
  33. http://sivamgss.blogspot.in/2014/12/blog-post_7.html

    ஆரம்பிச்சு வைச்சிருக்கேன். எப்படிப் போகும்னு சொல்ல முடியலை. :))))

    ReplyDelete
  34. உண்மைதான் ,தந்தை வழிச் சொந்தங்களை குழந்தைகள் தொடர்வதை பெரும்பாலான மனைவிகள் விரும்புவதில்லை !

    ReplyDelete
  35. /பெற்ற தாய் தந்தையரையே பேண முடியாமல் முதியோர் இல்லங்
    களுக்கு அனுப்புவதை நியாயப் படுத்தவும் நிறைய பேர் இருக்கிறார்கள்

    இதில் நியாயப்படுத்த என்ன இருக்கிறது? என்னவோ அநியாயம் போல நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே?

    ReplyDelete

  36. @ A.Durai
    புரிந்து கொண்டால் சரி. வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  37. வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்திருந்த காலத்தில் ஒட்டுதலும்
    உறவும் இறுகி இருந்தது. குடும்பம் என்பது ஒருவரை ஒருவர் சார்ந்து
    இருந்ததில் மகிழ்ந்திருந்தது. அந்த நிலையை இன்றைக்கும் ஓரளவு
    கிராமங்களிலும், வறுமை கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களிடமும்
    காணலாம். வாய்ப்பு தேடி நகரத்துக்கு வந்து தங்கள் வேர்களையே
    தொலைத்து நிற்கும் மக்களையே பெரும்பாலும் நகரங்களில்
    காண்கிறோம். இங்கெல்லாம் வாழ்க்கையில் உறவு முறைகளில்கூட
    வியாபாரத் தன்மை வந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
    ஆங்கிலத்தில் NO LUNCH IS FREE என்றொரு சொல் வழக்கில் உண்டு .
    எதைச் செய்தாலும் அதற்கு ஒரு விலை உண்டு :எதிர்பார்ப்புகளும்
    கூடவே வருவதுண்டு. போதாக்குறைக்கு மேற்கத்திய கலாச்சாரம்
    வேரூன்றி உறவின் உன்னதங்களை சீரழித்துவிட்டது.//

    உண்மை உண்மை உண்மை! எத்தனை உண்மை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள் சார். ஆனால் அதுதான் உண்மை! டெக்னாலஜியின் பங்கும், பணம் ஈட்டுதலின் பங்கும், அந்தஸ்து என்ற ஒரு அங்கமும் இதில் மிகவும் பெரும் பங்கு வகிக்கின்றன....மிக அருமையான பதிவு சார். அன்பிற்கு மதிப்பு இல்லை. இந்த யதார்த்த உண்மை கசக்கத்தான் செய்யும்.

    ReplyDelete
  38. அந்தக் கசப்பிற்கு நாமும் பழகிக் கொண்டுதானே இருக்கின்றோம்....

    ReplyDelete
  39. தொடர் பதிவிற்கு காத்திருக்கின்றோம்...

    ReplyDelete
  40. தொடர் பதிவு என்றால் என்னுடைய வலைப்பூவில் தொடர வேண்டுமா? அல்லது கமெண்ட் பகுதியில் பதில் எழுத வேண்டுமா? தெளிவு படுத்துங்கள்.

    ReplyDelete