Wednesday, December 10, 2014

நினைவடுக்குகளிளிருந்த ஒரு பயணம் -2


                              நினைவடுக்குகளிலிருந்த ஒரு பயணம்-2
                              ------------------------------------------------------


நாங்கள் ஒன்றரை நாள் தங்கலுக்குப் பின் 5-ம் தேதி மதியம் மதுரா வர ரயில் ஏறினோம்.(மீதி அடுத்தபதிவில்) என்று சென்ற பதிவை முடித்திருந்தேன்
நாங்கள் மதுரா வந்தபோது இருட்டி விட்டது. ரயில் நிலையத்தில் மின் வெட்டு காரணமாக விளக்குகளே இருக்கவில்லை. முன் பின் தெரியாத இடம் இருட்டு வேறு.ரயில் பெட்டிகளின் வெளிச்சத்தில் இறங்கினோம். நல்ல வேளை என் அண்ணாவும் அவரது மாப்பிள்ளையும் ரயில் நிலையம் வந்திருந்தார்கள். கண்டதும் ஒரு நிம்மதிப் பெருமூச்சு.
முதலில் திட்டமிட்டபோது மதுராவைப் பார்த்துவிட்டு ஆக்ரா சென்று அங்கிருந்து வாரணாசி செல்லலாம் என்றிருந்தோம். ஆனால் அண்ணா மதுராவிலிருந்தே ஆக்ரா சென்று வந்து மதுராவிலிருந்தே வாரணாசி பயணப் படலாம் என்றார். அதுவே சிறந்த ஐடியாவாகப் பட எங்கள் ரிசர்வேஷனை மதுராவிலிருந்து வாரணாசி என்று மாற்றினோம். அண்ணாவின் மாப்பிள்ளை ஊர் சுற்றிப் பார்க்க கார் ஏற்பாடு செய்திருந்தார். மதுராவும் சுற்றி உள்ள இடங்களும் கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடம் எனப் படுகிறது. ஆறாம் தேதி காலை முதலில் ஆக்ரா சென்று வருவதாகத் திட்டம் 
அண்ணா அண்ணியுடன் தாஜ் மஹால் முன்
தாஜ் மஹாலிலிருந்து யமுனை ஆறு ஒரு காட்சி.
ஆக்ராவில் டோங்கா ஓட்டினேன்
ஆக்ரா கோட்டை முன்பு.


ஆக்ரா பார்த்து முடித்தபின் ஃபடேபூர் சிக்ரி பயணமானோம் அக்பரின் மாளிகையும் கோட்டைத் தளமாகவும் இருந்தது காணக் கண்கொள்ளாக் காட்சி. படங்கள் எடுக்கத் தயார் ஆன நிலையில் காமிராவில் ஃபில்ம் தீர்ந்து விட்டிருந்தது தெரிந்தது. மிகவும் ஏமாற்றத்துடன்  சுற்றி வந்தோம். இப்போதுதோன்றுகிறது நம் வெங்கட நாகராஜ் மாதிரி இருப்பவர்கள் சென்றால் அதன் அழகு அத்தனையையும் சிறை பிடித்திருப்பார்கள். இப்போதைக்கு கூகிளில் சுட்ட படம் ஒன்றைப் பதிவிடுகிறேன் ஆக்ரா செல்பவர்கள் ஃபடேஹ்பூர் சிக்ரியை தவறாமல் காணச் செல்ல வேண்டும்
ஃபடெஹ்பூர் சிக்ரி ஒரு தோற்றம் ( கூகிள் உபயம்)
மதுராவில் ஒட்டக வண்டி


மறு நாள் 7-ம் தேதி மதுராவைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.கிருஷ்ணன் பிறந்த இடம் எனப்படும் மதுரா கிருஷ்ணா கோவிலுக்குச் சென்றோம். ஒரு குன்றின் மேல் அமைந்திருக்கிறது. எங்களுடன் அண்ணா அண்ணி அவரது மகள் மற்றும் பேத்தியும் உடன் வந்தார்கள். கிருஷ்ணன் கோவிலுக்கு அருகே ஒரு சிறை போல் தோன்றும் இடமே கிருஷ்ணர் பிறந்த இடம் என்றனர். அந்தக் கோவிலைச் சுற்றி வரும்போது அண்ணாவின் பேத்தி பாத்ரூம் தேடித் தனியாகப் போய்விட்டாள். வர நாழியானதும் எல்லோரும் கவலைப் பட ஆரம்பித்தார்கள். இதற்கு நடுவில் என் அண்ணியும் சொல்லாமல் கொள்ளாமல் பேத்தியைத்தேடிச் சென்று விட்டாள். இந்தக் களேபரத்தில் எதிலும் மனம் லயிக்கவில்லை.அந்த நேரம் முதல்தான் என் அண்ணிக்கு  அல்ஜீமர் என்னும் மறதி நோய் வந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு வழியாக அண்ணியையும் பேத்தியையும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டி வந்தார் அண்ணா.

மதுரா கிருஷ்ணன் பிறந்த்தாகச் சொல்லுமிடம் ஒரு மசூதியை ஒட்டி இருக்கிறது பாப்ரி மசூதி இடிப்புக்குப் பின் அங்கும் காசி விஸ்வநாதர் கோவிலிலும்( இதுவும் ஒரு மசூதியை ஒட்டியே இருக்கிறது) ஒரு பதட்டம் நிலவியதை உணர முடிந்தது. அங்கு எந்த புகைப்படமும் எடுக்கவில்லைமதுரா கோவில் படத்தை கூகிளில் இருந்து எடுத்துப் பதிவிடுகிறேன்
ஸ்ரீ கிருஷ்ணா கோவில் மதுரா.



கோவிந்த்ஜி கோவில் பர்சானா
துவாரகா தேஷ்  கோவில்
வெண்ணை திருடும் கண்ணன்.

கிருஷ்ணர் கதையில் வரும் பெயர்களுள்ள ஊர்கள் எல்லாம் சுமார் 30 கிமீ வட்டத்துக்குள் வரும் முடிந்தவரை எல்லா இடங்களுக்கும் போனோம். மதுராவில் உள்ள இஸ்கான் பங்கி பிஹாரி கோவிலில் கிருஷ்ணரின் சில கதை நிகழ்வுகள் அசையும் பொம்மைகளாகக் கண்ணாடிக் கூட்டுக்குள் வைக்கப் பட்டிருக்கின்றன. எனக்கு மதுராவில் போகுமிடங்களில் எல்லாம் பலரும் உழைக்காமல் கண்ணன் பெயரைச் சொல்லியே யாசகம் கேட்டது மனதை வருத்தியது அவர்கள தங்களைப்ரிஜ்வாசிகள் என்று பெருமையுடன் கூறிக் கொள்கிறார்கள் நந்த் காவ்ன், பர்சானா, கோவர்தன், த்வாரகேஷ் என்னும் இடங்களில் எல்லாம் கோவில்கள் இருக்கின்றன. ஒட்டக வண்டிகளை எங்கும் காண முடிந்தது. யமுனை ஆறும் ஓடுகிறது சில புகைப் படங்களைப் பதிவிடுகிறேன் படங்கள் இடம் மாறி பதிவாகி இருக்கிறது
இஸ்கான் (B)பங்கி பிஹாரி கோவில் மதுரா
அண்ணாவின் பேத்தி.-கண்ணாடி தடுப்பின் உள்ளே யசோதா கிருஷ்ணன்
 
கம்ச வதம் -தடுப்புக்கு வெளியே அண்ணா.
   
ராதாராணி கோவில்- பர்சானா
 
 கோவர்தன் முன்னால் மதுரா
.
 
மத்ராவில் யமுனா நதி பிரம்ம கட்டம்
  மீதி அடுத்த பதிவில் 



     




  

32 comments:


  1. பயணக்குறிப்பு அருமை ஐயா குறித்துக்கொண்டேன்... டோங்கா வண்டி ஸூப்பர்
    த.ம. 1

    ReplyDelete
  2. நினைவடுக்குகள் பிரமாதம். கைவசம் ஒரு தொழில் (டோங்கோவாலா) இருக்கிறது. பிழைத்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  3. ’ப்ரிஜ்வாசி’கள் என்றால்?

    படங்கள் அருமை.


    ReplyDelete
  4. அருமையான பதிவு. தொடருங்கள் ஐயா.

    ReplyDelete
  5. நல்லதொரு பயணக் குறிப்பு! தொடர்கின்றோம். டோங்கா பயணம் சூப்பராக இருந்திருக்குமே!

    ReplyDelete
  6. ஃப்ல்ம் ரோல் தீரும் பிரச்சனை, தற்போதிய வரம் டிஜிட்டல் கேமெராவால் தீர்ந்தது.

    இதிலும் ஒரு ப்ரச்சனை உண்டு. சமயம் பார்த்து பேட்டரி மண்டையைப் போட்டுரும்:(

    கூடுதலா ஒரு ஃபுல்லி சார்ஜ் செய்த பேட்டரியை மறக்காமல் எடுத்துப் போகணும்.

    டோங்காவாலா தொழில் அப்படி ஒன்னும் மோசமில்லை:-)))0

    நேரம் இருந்தால் துளசிதளத்தில் மதுரா, ஆக்ரா, ஃபடே(ஹ்)பூர்சிக்ரி பதிவுகளை ஒருமுறை பாருங்க. இன்னும் கொஞ்சம் நினைவலைகளைக் கிளறலாம்:-)

    பர்ஸானாவுக்கு நாங்க போகலை:(

    மதுரா, நம்ம கண்ணனின் ஊர் இல்லையோ! அதனால் அவனுக்கு பதிவுகள் பனிரெண்டு நம்ம தளத்தில்.

    http://thulasidhalam.blogspot.co.nz/2010/11/blog-post_24.html
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/12/blog-post_23.html
    http://thulasidhalam.blogspot.co.nz/2010/12/b-b.html


    ReplyDelete
  7. காணக் கண்கொள்ளாக் காட்சி. படங்கள்அருமை..

    ReplyDelete
  8. நீங்கள் பார்த்த இடங்களை எல்லாம் நாங்களும் பார்த்து வந்தோம்.
    முதன் முதலில் குடும்பமாய் போய் வந்த டெல்லி, ஆக்ரா படங்கள் பிலிம்ரோல் போட்டு எடுத்தது ஏதோ தவறால் அத்தனையும் போய் விட்டது. அப்புறம் போனவை எல்லாம் இருக்கிறது.

    படங்களும் செய்திகளும் அருமை.
    ஒட்டக வண்டி, டோங்காஓட்டுவது எல்லாம் அருமை.

    ReplyDelete
  9. படங்கள் மூலம் நாங்களும் பயணித்தோம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  10. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்களை பத்திரமாக வைத்திருகிறீர்களே. அருமை
    இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஆக்ரா சென்ற அங்கிருந்து பதேபூர் சிக்ரி செல்ல ம்யளும்போது கடும் சூறைக் காற்று காரணமாக பாதியில் திரும்பிவிட்டோம். அற்புதமான அரண்மனை அது/அதற்கு முன்னர் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  11. ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  12. ஐயா Word verification ஐ நீக்கி விட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  13. அருமையான பயணம் ஐயா
    தொடருங்கள்
    தொடர்கிறோம்

    ReplyDelete
  14. மதுராவிற்கும், ஆக்ராவிற்கும் தில்லியில் இருந்தபோது பல முறை சென்று வந்திருக்கிறேன். தங்களது பதிவு என்னை பழைய நாட்களுக்கு அழைத்து சென்றது. அதற்கு நன்றி! அப்போதெல்லாம் கிருஷ்ண ஜென்ம பூமி இத்தனை பிரமாண்டமாக இருக்காது. மதுராவை சுற்றியுள்ள இடங்கள் பிரிஜ் பூமி என்றும் அங்குள்ளவர்கள் தங்களை பிரிஜ்வாசிகள் என்றும் சொல்வார்கள். அவர்கள் பேசும் மொழி பிரிஜ் பாஷை இந்தியிலிருந்து சிறிது மாறுபட்டிருக்கும்.

    ReplyDelete
  15. பயண நினைவுகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

  16. @ கில்லர்ஜி
    @ டாக்டர் கந்தசாமி
    @ ஸ்ரீராம்
    @ உமேஷ் ஸ்ரீநிவாசன்
    @ துளசிதரன்
    @ துளசி கோபால்
    @ இராஜராஜேஸ்வரி
    @ கோமதி அரசு
    @ திண்டுக்கல் தனபாலன்
    @ டி. என். முரளிதரன்
    @ கரந்தை ஜெயக் குமார்
    @ வே, நடனசபாபதி
    @ தளிர் சுரேஷ்
    அனைவரது வருகைக்கும் நன்றி. வேர்ட் வெரிஃபிகேஷன் நான் வைத்துக் கொள்ள வில்லை. கூகிளின் குறைபாடு. ஆனால் என் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இட அதை ignore செய்தாலும் பின்னூட்டம் வருகிறது
    பொதுவாக என் பதிவுகளை நானே தமிழ் மணத்தில் இணைத்துக் கொள்வேன்.இந்தப் பதிவையாரோ இணைத்திருக்கிறார்கள் தயவு செய்து அப்படிச் செய்வதைத் தவிர்க்க வேண்டுகிறேன் மீண்டும் நன்றி.

    ReplyDelete
  17. மதுரா சென்றுள்ளேன். பிற இடங்களுக்குச் செல்லவில்லை. தங்களின் பதிவை அவ்விடங்களுக்கு என்னை அழைத்துச்சென்றுவிட்டது.

    ReplyDelete
  18. இன்னும் சில இடங்களுக்கு அழைத்துப் போகிறேன். வருகைதாருங்கள் நன்றி.

    ReplyDelete
  19. நாங்கள் மத்ரா சென்ற நினைவுகள் வருகின்றன. அங்கே சுற்றிப் பார்க்க ஓர் நாள் போதாது. நாங்கள் சென்ற போது மழைக்காலம் வேறு. உத்தரப் பிரதேசத்துக்கே உரிய மின்வெட்டு, சேறு, சகதியோடு பேருந்து நிலையத்திலிருந்து ஆட்டோவில் சென்றோம். வழியில் அந்த ஆட்டோ தகராறு செய்ய இன்னொரு ஆட்டோக்காரரிடம் ஏற்பாடு செய்து கொடுத்தார். முதல் ஆட்டோக்காரர் மொத்தப் பணத்தையும் வாங்கிச் சென்றுவிட்டார். இரண்டாவது ஆட்டோக்காரரும் திரும்பப் பணம்கேட்க நாங்கள் கொடுக்கவில்லை.

    ReplyDelete
  20. பொதுவாகவே உத்தரப் பிரதேசம் ஏழ்மை நிறைந்த மாநிலம். அதிலும் மத்ராவில் பெரும்பாலும் சுற்றுலாவை நம்பியே பிழைப்பு நடத்துகிறவர்கள். அங்கே சுற்றுலாப் பயணிகள் என்றால் ஏதோ லக்ஷாதிபதிகளும், கோடீஸ்வரர்களும் தான் என நினைக்கிறார்கள் போலும்.

    ReplyDelete
  21. நாங்கள் சென்ற வருஷம் நைமிசாரணியம் சென்றபோதும் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூடத் தங்கள் குழந்தைகளைப் பிச்சை எடுக்கப் பழக்கி இருப்பதைப் பார்த்துக் கண்டித்தோம். ஆனால் அவர்கள் நம்முடன் சண்டைபோடுகின்றனர். வருகிற வரை வரட்டுமே என்னும் எண்ணம் போலும். :( இது எவ்வளவு அவமானகரமான விஷயம் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

    ReplyDelete
  22. ஆட்டோ டிரைவர்கள், டாக்சி டிரைவர்கள், ஹோட்டல்காரர்கள் என எல்லோருமே அதிகப் பணமே கேட்பார்கள். நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்

    ReplyDelete

  23. @ கீதா சாம்பசிவம்
    நல்ல வேளை அந்தப் பிரச்சினை எங்களுக்கு இருக்கவில்லை. அண்ணாவின் மாப்பிள்ளையே கார் ஏற்பாடு செய்து தந்தார். பயணம் செய்து 11 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது அல்லவா. எல்லா நிகழ்வுகளும் நினைவில் இருப்பதில்லை.மதுராவில் ஏழ்மை மட்டுமல்ல அசுத்தமும் நிறையவே இருந்தது. வருகைக்குநன்றி மேடம்.

    ReplyDelete
  24. உத்திரப் பிரதேசம் எங்கு சென்றாலும் இந்த அழுக்கு தான்! :(

    ப்ரிஜ்வாசி - கிருஷ்ணர் பிறந்து வளர்ந்த இடங்களை ப்ரஜ்/ப்ரிஜ் என்று அழைக்கிறார்கள். அந்த இடத்தில் வசிப்பவர்கள் (ப்ரஜ்)ப்ரிஜ்வாசி. ஸ்ரீராம் அவர்களின் கேள்விக்கான பதில்.

    ஃபதேபூர் சிக்ரி அருமையான இடம் தான். நான் எடுத்த படங்கள் இருக்கின்றதா எனப் பார்க்கிறேன்....

    பதிவில் எனது பெயரையும் குறிப்பிட்டதற்கு நன்றி.

    ReplyDelete
  25. இந்தப் பக்கம் பழங்காலத்தில் வ்ரஜபூமி ன்னு அழைக்கப்பட்டதாம். விருந்தாவன், கோகுலம், கோவர்தன், மதுரா எல்லாம் சேர்ந்த ஒரு நிலப்பரப்பு. கிருஷ்ணன் சம்பந்தப்பட்ட பல இடங்கள் இங்கேதான் இருக்கு.

    வடக்கிகளுக்கு வ வராததால் இது ப என்று ஆகி வ்ரஜ் பூமி இப்போ ப்ரஜ்?ப்ரிஜ் ன்னு ஆகிப்போச்சு.

    வடக்கே போகப்போக விஜயா கூட பிஜயா தான்:-)

    ReplyDelete

  26. @ வெங்கட் நாகராஜ்
    ஸ்ரீராமின் கேள்விக்கு எனக்குப் பதில் தெரியவில்லை வே நடன சபாபதி ஒரு பதில் எழுதி இருந்தார் அடுத்து உங்கள் பதிலுக்கு விளக்கமாக மேடம் துளசி எழுதி இருக்கிறார்.. இன்னொரு முறை என் அமெரிக்க நண்ப்ர் குடும்பத்துடன் ஃபடேபூர் சிக்ரி போயிருக்கிறேன் என் நண்பர் புகைப் படங்களுக்குப் பதில் வீடியோவாக எடுத்துவிட்டார். புகைப் படம் என்றவுடன் ஒரு சிலர் நினைவுக்கு வருகிறார்கள் . வருகைக்கு நன்றி வெங்கட்

    ReplyDelete

  27. @ துளசி கோபால் விஜயா பிஜயா ஆவது வங்காளப் பக்கம் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.மீள் வருகைக்கு நன்றி மேடம் .

    ReplyDelete
  28. இனிமையான பயணம். இனிமையான நினைவுகள். அப்பொழுதெல்லாம் யாரேனும் காணாமல் போய் விட்டால் அவ்வளவுதான். இப்போது எல்லோர் கையிலும் செல்போன். அதனால் பிரச்சினை இல்லை. எனது சிறு வயதில். நானும் ஒருமுறை உறவினர் ஊர்த் திருவிழாவில் காணாமல் போய், மீண்டும் பெற்றோரிடம் சேர்ந்தது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  29. Please read my blog in which I wrote about "URAVUGAL' www.thambattam.blogspot.com

    Regards,

    Banuvenky

    ReplyDelete
  30. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2015

    வாழ்க வளமுடன்!
    திகழ்க நலமுடன்!

    நல்லாசி வேண்டும்,
    புதுவை வேலு

    ReplyDelete
  31. இன்றைய வலைச்சரத்தில் தங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளேன்.

    http://blogintamil.blogspot.in/2015/01/blog-post.html

    முடிந்து போது பார்த்து கருத்திடுங்களேன்.

    ReplyDelete