Wednesday, September 28, 2016

ஒரு சில சமன்பாடுகள்


                                   ஒரு சில சமன் பாடுகள்
                                 ---------------------------------------

முருகா, எனக்கு உன்னைப் பிடிக்கும்.....


முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும்....
--------------------------------------------------------

           நாளும் பொழுதும் என் நாவில்
           தவறாது வந்தமரும் முருகா,
           எனக்கு உன்னைப் பிடிக்கும்.

முருகு என்றால் அழகு
அழகு என்றால் முருகன்
என் கண்ணுக்கும் சிந்தைககும்
இந்த அண்டமே அழகாகத் 
தெரியும்போது அது நீயாகத்தானே 
இருக்க வேண்டும், தெரிய வேண்டும். 
            அழகை ஆராதிப்பவன் உன்னை 
            ஆராதிப்பதில் முரண் எங்குள்ளது.?

முருகா எனக்கு உன்னைப் பிடிக்கும் 
உன்னைப் பற்றிய கதைகள் பிடிக்கும் 
ஏன் எனக்குப் பிடிக்கவேண்டும் என்றென்
மூளையைக் கசக்கினால் ,உன்னைக் கூறும் 
கதைகள் மூலம் நமக்குள் இருக்கும் 
சமன்பாடு நன்றாகத் தெரிகிறது. 

            உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
            உன் தாயின் பெயர் பார்வதி,
            உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
            என் தந்தையும் மகாதேவன்
            என் தாயும் பார்வதி
            நானும் பாலசுப்பிரமணியம்.
            புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை

கந்தா, குமரா எனக்கு உன் கோபம் பிடிக்கும்.
பந்தயத்தில் நீ தோற்க உன் பெற்றோரே
வழி வகுக்க வந்த கோபம் தணிய
பழனிமலை மீதேறி தண்டம் பிடித்த
கதையில் உன் கோபம் பிடிக்கும்
நேர்வழி கொள்ளாது குறுக்கு வழியில்
வென்றால் பின் வாராதா கோபம்.?
எனக்கும் வரும்..

             பிரணவத்தின் பொருள் அறியா
             பிரம்மனின் ஆணவம் அடக்க
             அவனை நீ சிறை வைத்தாய்.
             உனக்குத் தெரியுமா, கற்பிப்பாயா
             என்றுன் அப்பன் உனைக்கேட்க
             பொருளுணர்த்தி நீ தகப்பன் சாமியான
             கதை எனக்குப் பிடிக்கும்.
             அறியாதார் யாரேயாயினும் நானறிந்தால்
             கற்பித்தல் எனக்குப் பிடிக்கும்.

புரமெரித்தவன் நுதல் உதிர்த்த
ஜ்வாலையில் உருவானவன் நீ.
தேவர்களின் அஞ்சுமுகம் தோன்ற
ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில்
அஞ்சேல் என வேல் காட்டி,
சூரபதுமன் உடல் பிளந்து
இரண்டான உடலை மயிலென்றும்,
சேவல் என்றும் ஆட்கொண்ட உன்
அருள் எனக்குப் பிடிக்கும்.
எதிரியை நேசித்தல் எனக்கும் பிடிக்கும்.

              நாவல் பழம் கொண்டு,
             அவ்வைக் கிழவியின் தமிழ்
             ஆழத்தின் மயக்கம் தெளிவித்த
             உன் குறும்பு எனக்குப் பிடிக்கும்.
             தமிழைக் குத்தகை எடுத்து
             கொள்முதல் செயவதாய்க் கருதும்
             சிலரைச் சீண்டுதல் எனக்கும் பிடிக்கும்.

தேவசேனாதிபதி  உனக்குப் பரிசாக
வந்த தெய்வானைக் கரம் பிடித்த
கந்தா உன் கருணை எனக்குப் பிடிக்கும்.
மனமுவந்து செய்த பணிக்கு மணமுடிப்புப்
பரிசானால் எனக்கு அது ஒப்புதலே
ஆக அதுவும் எனக்குப் பிடிக்கும்.

              ஆனைமுகன் அண்ணன் துணை கொண்டு,
               காதல் குறமகள் வள்ளியின் கரம் பிடிக்க,
               நீ நடத்திய நாடகங்கள் எனக்குப் பிடிக்கும்.
               தம்பியின் துணை நாடி கைத்தலம் பற்றிய
               எனக்கு காதலும் பிடிக்கும்.

அசை  சீர் தளையுடன் மரபு மாறா
யாப்பிசை எனக்குத் தெரியவில்லை.
தெரிந்ததை அறிந்தவரை மனசில் பட்டவரை,
எனக்குனை ஏன் பிடிக்கும் என்றே கூறியுள்ளேன்
உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
=========================================
(இது ஒரு மீள் பதிவு)

45 comments:

  1. முருகனை எனக்குப் பிடிக்கும். எதற்கெடுத்தாலும் என் வாயில் வரும் வார்த்தை "முருகா" தான். காரணம் தெரியாமல் அல்லது இல்லாமல் (புராணக்) கதைகள் படிக்காமல், சிறு வயதிலிருந்து எப்படியோ ஏற்பட்ட ஒரு பழக்கம்! நான்காம் வகுப்போ, ஐந்தாம் வகுப்போ படிக்கும்போது ஏதோ ஒரு வேண்டுதலாக உணர்ச்சி வசப்பட்டு வாழ்நாள் முழுவதும் தினமும் கந்தர் சஷ்டி கவசம் சொல்கிறேன் என்று வேண்டிக்கொண்டு, இன்றுவரை செய்து வருகிறேன்!!!!

    ReplyDelete
  2. >>> நாளும் பொழுதும் என் நாவில்
    தவறாது வந்தமரும் முருகா,
    எனக்கு உன்னைப் பிடிக்கும்!..<<<

    உனக்கும் என்னைப் பிடிக்கும்!..

    அழகு என்ற சொல்லுக்கு முருகா!.. - என்று, அத்தனையும் அழகு!....

    ReplyDelete
  3. முருகா என்றதும் உருகாதோ மனம், மோகனப்புன்னகை மணவாளா! உருகாதா மனம் உருகாதா! :)

    ReplyDelete
  4. பக்திக்கு எதற்கு அசை, சீர், தளை, மரபு, யாப்பு என்று

    வடிவேலன், கடம்பன், சண்முகன் போன்ற பெயர்கள் மட்டும்தான் மிஸ்ஸிங்க்.

    "அஞ்சுமுகம் தோன்ற ஆறுமுகம் காட்டி, அவர் நெஞ்சமதில் அஞ்சேல் என வேல் காட்டி" - சூலமங்கலம் (?) பாட்டில் கேட்ட வரிகள் மாதிரி இருக்கே.

    ReplyDelete
  5. முருகனுக்கு தமிழ் பிடிக்கும்
    உங்களுக்கும் தமிழ் பிடிக்கும்.
    எனக்கு இருவரையும் பிடிக்கும்.

    ReplyDelete
  6. முருகனுக்கோர் கவிதை அருமை ஐயா.

    ReplyDelete
  7. தங்களைப் போல அனைவருக்கும் முருகனைப் பிடிக்கும் ஐயா

    ReplyDelete
  8. முருகனுக்கும் உங்களைப் பிடித்துத்தான்
    ஆகணும்.வேறு வழியில்லை
    ஏனெனில் அத்தனைக் காரணங்களையும்
    மிக மிக அற்புதமாக அவனுக்குப்
    பிடித்தத்தமிழில் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete

  9. @ ஸ்ரீராம்
    மனதுக்குப் பிடித்ததைச் செய்வதில் மன நிறைவு கிடைக்கிறது எனக்கும் முருகா என்று அவ்வப்போது கூப்பிடும் வழக்கம் இருக்கிறது வருகைக்கு நன்றி ஸ்ரீ

    ReplyDelete
  10. உங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது ஒரே வாக்கிய ராமாயணத்தைக் காட்டினீர்கள். இந்த முருகாயணத்தைப்பற்றி ஏன் ஒன்றும் சொல்லவில்லை? (அப்போதிருந்த மாதிரி உங்கள் எழுத்து இப்போது இல்லை என்று நான் சொன்னதாக ஞாபகம்.) இந்த முருக பக்தி வெளிப்பாடு (ஓ! பக்தி என்று சொல்லப்படாதோ!)-இந்த முருகஸ்துதி அந்தக்காலகட்டத்தில்தான் எழுதப்பட்டதா?

    ReplyDelete

  11. @ துரை செல்வராஜு
    உனக்கும் என்னைப் பிடிக்கும் என்று நம்புகிறேன் வருகைக்கு நன்றி ஐயா

    ReplyDelete

  12. @ கீதா சாம்பசிவம்
    முருகா என்றதும் மனம் உருகுகிறதோ. வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  13. @ நெல்லைத் தமிழன்
    அவ்வப்போது ஆங்காங்கே கேட்பவைதான் எழுத்தில் வருகிறதோ வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  14. @ மோகன் ஜி
    உங்களுக்கு என்னைப் பிடிக்கும் என்பது கேட்க மகிழ்ச்சி சார் வருகைக்கு நன்றி

    ReplyDelete

  15. @ கரந்தசி ஜெயக்குமார்
    அருமை ஐயா/ சமன் பாடுகள் அருமையா வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  16. @ கில்லர் ஜி
    முருகனுக்கும் எனக்குமான பந்தம் அருமை என்று சொல்லுங்கள் வருகைக்கு நன்றிஜி

    ReplyDelete
  17. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    எனக்கும் முருகனுக்கும் உள்ள ஒற்றுமைகளால் எனக்கு அவனை பிடிக்கும் என்கிறேன் அனைவருக்கும் அப்படியா தெரியவில்லை. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  18. @ ரமணி
    பதிவை ஆழ்ந்து வாசித்த உங்களுக்கு நன்றி சார்

    ReplyDelete

  19. @ ஏகாந்தன்
    கடவுள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியதுதான் சிறந்த எழுத்து என்று நினைக்கிறீர்கள் போலும் முருகன் பற்றி இன்னும் வரும் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  20. ஒருவனுக்கு ஒருத்தி என்பது தமிழர் பண்பாடு ,அதை மீறி தவறான முன்னுதாரணம் ஆன முருகனை எனக்கு பிடிக்காது :)

    ReplyDelete
  21. எங்களுக்கும் பிடித்த முருகன்!!!!! அவர்புகழ் பாடிய விதம் அருமை சார்! உன் தந்தையின் பெயர் மகாதேவன்.
    உன் தாயின் பெயர் பார்வதி,
    உன் பெயர் பாலசுப்பிரமணியம்.
    என் தந்தையும் மகாதேவன்
    என் தாயும் பார்வதி
    நானும் பாலசுப்பிரமணியம்.
    புரிகிறதா நமக்குள்ள ஒற்றுமை// அட!!!!

    ரசித்தோம் சார்...பிடித்து எழுதுவதற்கு எதற்கு சார் சீர் தளை எல்லாம்..

    கீதா: எனக்கு மிகவும் பிடித்த இறைவன்!! முருகன். என் மகனுக்கும்! அவனுக்குக் கந்தசஷ்டிக்கவசம் மனப்பாடம். நான் தினமும் கேட்பதுண்டு. கந்த குரு கவசமும்.

    ReplyDelete

  22. @ பகவான் ஜி
    வருகை மகிழ்ச்சி தருகிறது நான் எனக்கு முருகனைப் பிடிப்பதற்கு காரணங்களைக் கூறி இருக்கிறேன்தமிழர் பண்பாடு என்ன என்று எனக்குத் தெரியாது மனதளவில் ஒருவருக்கும் மேலாக ரசிப்பவர்களையும் சந்தர்ப்பம் அமையாததால் ஒருவனுக்கு ஒருத்தி என்று சொல்பவர்களையும் தெரியும் மேலும் தேவா சேனாதி பதிக்கு தெய்வயானை நன்றி தெரிவிக்க மணமுடிக்கப் பட்டவள் முருகன் காதலித்துமணந்தது வள்ளி என்றே நினைக்கிறேன்

    ReplyDelete

  23. @ துளசிதரன் தில்லையகத்து.
    பதிவை ரசித்ததற்கு நன்றி. கந்தசஷ்டிக் கவசம் நானும் கூறுவேன் அது இரவில் உறக்கம் வராதபோது சொல்லச் சொல்லி என் மனைவியின் மருத்துவம்

    ReplyDelete
  24. @பகவான் ஜி, நிச்சயமா முருகன் கோவிச்சுக்கப் போறதில்லை! :) நம் மனித வாழ்க்கை முறையோடு அதன் நடைமுறையோடு கடவுளரையும் நினைப்பதால் தான் இப்படி எல்லாம் தோன்றுகிறது. உண்மையில் முருகன் ஞான சக்தி என்றால் வள்ளி இச்சா சக்தி, தெய்வானை கிரியா சக்தி! இச்சா சக்தி என்பது நாம் எடுத்துக்கொள்ளும் பொருளில் அமையும். அந்த இச்சை இருந்தால் அதை ஊக்குவிப்பது கிரியா சக்தி! இவை இரண்டும் சேர்ந்தால் தான் நாம் ஸ்கந்த தரிசனம் அடைய முடியும். அந்த ஸ்கந்த தரிசனமே நமக்குக் கிடைக்கும் பேரானந்தம்! அதை அவ்வளவு எளிதில் அடைய முடியாது! இதை அடைய நாம் எத்தனை மனிதப் பிறவி எடுக்கணுமோ தெரியாது! அதை எல்லாம் பூடகமாய்ச் சுட்டிக் காட்டத் தான் பெரியோர் முருகனுக்கு இரு மனைவியர் என்று பூடகமாகவே சொல்லிச் சென்றிருக்கின்றனர். இந்த இச்சையை நாம் வெறும் உலகியலில் பற்றுள்ள இச்சையாகக் கொண்டு பார்ப்பதால் தான் கருத்து வேறுபாடு தோன்றுகிறது, இறையிடம் அவநம்பிக்கை தோன்றுகிறது. காமம் என்றால் வெறும் உடல் சார்ந்ததல்ல என்றும் அதே போல் இச்சை என்பது வெறும் உலகியல் சார்ந்ததல்ல என்றும் புரிந்து கொண்டாலே போதும்! திருஞானசம்பந்தப் பெருமான், இறைவனை நினைந்து "காதலாகிக் கசிந்துருகினார்" ஆனால் இன்று காதல் என்பதன் பொருளே மாறுபட்டுத் தெரிகிறது அல்லவா? அது போல் பல சொற்களும் இன்றைய கால கட்டத்தில் தவறான பொருளையே சுட்டுகிறது!

    இதையே சக்தி உபாசகர்கள் சக்தி தரிசனத்தின் மூலமும் சிவ பக்தர்கள் நமசிவாய மந்திரத்தின் மூலமும், கணபதி உபாசகர்கள் வேறு விதமாகவும் அறிகின்றனர். கணபதிக்கும் இரு மனைவியர் சித்தி, புத்தி என்று சொல்வார்கள். இரு மகன்கள் சுபம், லாபம் என்றும் மகள் சந்தோஷி என்றும் சொல்வார்கள். இவை எல்லாமும் நாம் நம் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் கடைசியில் நமக்குக் கிடைப்பது என்னவென்று மறைமுகமாய்ச் சுட்டிக் காட்டுகிறது. எல்லாம் போய்ச் சேரும் இடம் ஒன்றே. வழிமுறை தான் வேறு. இந்த சநாதன தர்மம் எல்லாம் கொள்ளும் மஹாராஜன் கப்பல்! ஆகவே யார் என்ன சொன்னாலும் நிந்தனைகளைக் கூட ஏற்றுக்கொள்ளும். எப்படி வேண்டுமானாலும் வாத, விவாதங்கள் புரியலாம்.

    ReplyDelete
    Replies
    1. கீதாக்கா.... அற்புதம். இந்த விஷயம் என்றில்லை, நிறைய விஷயங்களில் தெளிவான விளக்கங்கள் ஆங்காங்கே கொடுத்து வருகிறீர்கள். ஜி எம் பி ஸார் சொல்வது போல எதையும் நியாயப்படுத்துவதாக என்று நான் நினைக்கவில்லை. அததற்கான தத்துவங்களை நன்றாகவே எடுத்துரைக்கிறீர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.

      Delete

  25. @கீதா சாம்பசிவம்
    என் போன்றோருக்கு நாம் அனுபவிப்பதே தெரிகிறது எதற்கும் ஒரு காரணம் கற்பிக்கும் கதைகள் புரிவதில்லை.பகவான் ஜி க்கு எழுதியதற்கு நான் முந்திரிக் கொட்டை போல் எழுதுகிறேன் எதையும் நியாயப் படுத்தும் உங்கள் திறனுக்கு பாராட்டுகள் / நன்றி

    ReplyDelete
  26. எதையும் நான் நியாயப்படுத்தி எழுதவில்லை. எழுதவும் மாட்டேன். இதில் எனக்கெனத் தனித் திறமையும் இல்லை. இவை எல்லாமே யோகத்தோடு சம்பந்தப்பட்டவை! யோகத்திலும் பல்வேறு விதமான வேறுபாடுகள், கணக்குகள் உண்டு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் ஈடுபடுவார்கள். இங்கே யோகம் என்பது தினசரி செய்யும் ஆசனப் பயிற்சி அல்ல. முறையான யோகத்தில் ஈடுபடுவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் குறி வைத்துக் கொள்வார்கள். அதன் குறியீடுகளே இவை. என் போன்ற சாதாரணமான மக்களுக்கும் ஓரளவாவது புரியணும்னு தான் கடவுளுக்குப் பெயர், மனைவி, குழந்தை எல்லாம்! சாமானிய மக்களுக்குப் புரிவது இந்த பக்தி ஒன்று தான். ஆன்மிகம் அதற்கும் மேலான நிலை! அந்த நிலைக்குச் செல்லவே இவை எல்லாம் பயன்படும். அதை குரு மூலமாகவே அறியலாம். குருவும் வழி தான் காட்டுவார். நாம் தான் சரியாகப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

    ReplyDelete
  27. @ ஸ்ரீராம் ,கீதா சாம்பசிவம்
    புரியாத ஒன்றைப் புரிந்தது போல் என்னால் காட்டிக் கொள்ள முடியவில்லை. எல்லா விஷயங்களையும் குரு மூலம்தான் விளங்கிக் கொள்ள முடியும் என்பதே ஏற்க முடியாதது இம்மாதிரியான விஷயங்கள் விவாதிக்க என்னால் முடியாது எல்லாவற்றுக்கும் ஏதோ நம்பிக்கை என்னும் பதிலில்தான் முடியும் மீண்டும் வருகை தந்ததற்கு இருவருக்கும் நன்றி

    ReplyDelete
  28. தானாய்ப் புரிஞ்சுக்கறவங்க இருக்கலாம். ஆனாலும் என் போன்றோருக்கு எல்லாமும் யாரானும் ஒருத்தர் சொல்லிக் கொடுத்தால் தான் தெரியும், தெரிகிறது. மேலும் நான் விவாதம் செய்வதற்காக எழுதவும் இல்லை. புரிந்தது போல் நீங்கள் காட்டிக் கொள்ளவும் வேண்டாம். அதை எல்லாம் எதிர்பார்க்கவில்லை. நான் கொடுத்தது ஒரு சிறு விளக்கமே.

    "ஒருத்தனுக்கு ஒருத்தி" என்பது தமிழ்நாட்டுக் கோட்பாடு என்று பகவான் ஜி சொல்கிறார். தமிழ்நாட்டின் எந்த அரசன் ஒரு மனைவியோடு நிறுத்திக் கொண்டிருக்கிறான்? இதே தமிழ்நாட்டில் தான் கட்டிய மனைவி இருக்க மாதவி என்னும் கணிகையைத் தேடிப் போன கோவலனும் இருந்திருக்கிறான்! ஆக இரு மனைவியர் என்பது தமிழ்நாட்டுக் கலாசாரம் இல்லைனு எல்லாம் சொல்ல முடியாது! ராஜராஜ சோழனுக்கு மூன்று மனைவியர் என்று கேள்வி! முதல் மனைவியின் புதல்வன் தான் பட்டத்துக்கு உரியவன் என்றாலும் அரசர்கள் பலரும் ஒரு தாரத்தோடு நிறுத்தினவர்கள் அல்ல!

    ReplyDelete
  29. என்னது! கடவுள் கதைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியதுதான் சிறந்த எழுத்து என்று நினைக்கிறேனா?

    நீங்கள் அன்று காட்டிய பழைய பதிவுகளில் பல கடவுள் சம்பந்தப்படாதவை; நீங்கள் காட்டிய அனைத்தையும் படித்துவிட்டுத்தான் அந்தக் கமெண்ட் சொன்னேன்- அது இது: `அப்போது உங்களிடம் ஒரு ‘flow `இருந்திருக்கிறது; இப்போது அது இல்லை’. என்னுடைய கமெண்ட் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப்பற்றியது. கடவுளைப்பற்றியது அல்ல! அது ராமாயணம், முருகாயணம் சம்பந்தப்பட்டது மட்டும்தான் என நீங்கள் நினைத்தால் -பிரமாதம்- அப்படியே நினைத்துக்கொண்டிருங்கள்!

    ReplyDelete

  30. @ ஏகாந்தன்
    எனக்கும் அந்தமாதிரி தோன்றி இருக்கிறது நீங்கள் இப்பதிவில்சுட்டியபோது அவ்வாறு நினைக்கத் தோன்றியது எழுதுபொருளும் காரணமாகலாமோ மீள் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete
  31. awesome.....எனக்கும் அவர் கோபம் பிடிக்கும், சீண்டல் பிடிக்கும், காதல் பிடிக்கும்... <3 அருமை.

    ReplyDelete
  32. அருமையான வரிகள்

    ReplyDelete
  33. #அரசர்கள் பலரும் ஒரு தாரத்தோடு நிறுத்தினவர்கள் அல்ல!#
    இந்த முருகன் கதை (உங்கள் பார்வையில் தத்துவம்) முதலில் வந்ததா ,அரசர்கள் முதலில் வந்தார்களா ?
    அரசர்களின் இருதார மணத்துக்கு ,முருகன் தவறான முன்னுதாரணம் காரணமென்று அதனால்தான் சொன்னேன் !
    மின்சாரம் கண்ணுக்குத் தெரியவில்லை ,அதை நீங்களோ,நானோ தொட்டால் ஷாக் அடிக்கிறது !கண்ணுக்குத் தெரியாத கடவுளை உணரவும் ,தத்துவங்களை புரிந்து கொள்ளவும் குரு தேவை என்பது சரியா ?
    நீங்களே நம்பும் எத்தனை ஞானிகளுக்கு குரு இருக்கிறார் ?
    தன்னால் உணர முடியாததை வேறு யாராலும் உணர வைக்க முடியாது என்பதே நானறிந்த உண்மை !

    ReplyDelete
  34. பகவான் ஜி, அ, ஆ வன்னா கத்துக்கறது மட்டுமில்லை, குழந்தையாய் இருந்தப்போ நடக்கிறதுக்கும் கூட அம்மாவோ, அப்பாவோ துணைக்கு வந்து தான் எனக்கெல்லாம் பழக்கம் பள்ளியிலும் பாடங்களை ஆசிரியர்கள் தான் கற்றுக் கொடுத்தனர். ஒரு வகையில் அவர்களும் குருவே. கல்விக்கண்ணை ஆசிரியர்கள் திறந்தால் ஞானக்கண்ணைத் திறக்கவும் ஓர் ஆசிரியர் வேண்டும். என்னைப் போல் உள்ளவர்களுக்கெல்லாம் நிச்சயமாய் குருவின் அவசியம் தேவை. அதிலும் குரு வழிகாட்டுவார் என்று மட்டும் சொல்லி இருக்கேன். மற்றதை நாம் உணர்வதன் மூலமே புரிந்து கொள்ள முடியும். நான் நம்பும் ஞானிகள் என்னும் பொருளில் பார்த்தால் ஆதிசங்கரரில் ஆரம்பித்து அனைவருக்கும் குரு உண்டு. ஏதேனும் ஓர் வழியில் குரு அவர்களுக்கு வழிகாட்டி இருப்பார். குறைந்த பட்சமாக தத்துவ போதனைகளையாவது கேட்டிருப்பார்கள். அதன் மூலம் மேலும் மேலும் முன்னேறி இருக்கலாம்.

    தமிழ்நாட்டுக் கலாசாரம் ஒருவனுக்கு ஒருத்தி என்று குறிப்பிட்டுச் சொன்னதால் தான் தமிழ்நாட்டு அரசர்களைப் பற்றிக் கூறினேன். இரு தாரம் மட்டுமல்ல பல அரசர்களும் பல தார மணம் புரிந்தவர்களே! ஆனால் அதிலும் ஓர் நியாயம் அவர்கள் தரப்பில் உண்டு. ஆகவே அதை ஏற்றுக் கொண்டிருந்தார்கள். கடவுளை உணரவோ தத்துவங்களைப் புரிந்து கொள்ளவோ எனக்குத் தானாக இயலவில்லை என்பதே உண்மை. யாரேனும் சொன்னால் தான் புரிந்து கொள்ள முடிகிறது என்பதும் உண்மை! சிஷ்யர்கள் குருவுக்கு மிஞ்சி இருந்திருப்பார்கள். ஆனால் குரு இல்லாமல் இருந்திருக்க மாட்டார்கள், அந்த குருவுக்கும் ஓர் குரு இருந்திருப்பார். குரு பரம்பரையே உண்டு! இன்னமும் நம் நாட்டில் குரு பூர்ணிமா என்று ஓர் நாளில் குரு வழிபாடு நடந்து வருகிறது. முருகன் தவறான முன்னுதாரணம் எல்லாம் இல்லை! முருகனின் தத்துவமே வேறு. நீங்கள் பேராசிரியர் டி.என்.கணபதி அவர்களின் நூல்களைப்படித்துப் பார்க்கவும். தமிழ்ச்சித்தர் மரபு பற்றி மிகத் தெளிவான விளக்கங்களைக் கொடுத்திருப்பார். அதில் அவர் சரவணபவ என்னும் மந்திரப் பொருள் பற்றிக் கூறி இருப்பார். படித்து அனுபவியுங்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  35. மனிதர்கள் இல்லாவிட்டாலும் இப்படி ஏதேனும் ஓர் புத்தகம் கூட நம் புரிதலுக்குக் காரணமாக ஆகலாம். எந்தப் பற்றுக்கோடும் இல்லாமல் நம்மால் எதையும் உணர முடியாது!மின்சாரத்தைப் பற்றிப் படித்துப் புரிந்து கொண்டிருக்கிறோம். கண்ணுக்குத் தெரியாதது என்றும் தொட்டால் அதிர்வை உண்டாக்கும் என்றும். அதே போல் கடவுள் தத்துவமும்! அனுபவம் வந்து உணர உணர நம் உடலில், மனதில் அதிர்வலைகளை உண்டாக்கும். சிலருக்குச் சீக்கிரம் கிட்டலாம். என் போன்ற உலகியல் வாழ்க்கையில் உழல்பவர்களால் முடியாமலும் போகலாம். :(

    ReplyDelete

  36. @ ஷக்தி பிரபா
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  37. @ ஜீவலிங்கம் யாழ்பாவாணன் காசிராஜ லிங்கம்
    வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  38. முருகனை உங்களுக்கு மட்டுமா பிடிக்கிறது? எங்களுக்கும் பிடித்திருக்கிறது. காரணம் அவர் தமிழர் போற்றும் கடவுள் அல்லவா? உங்களைப்போல் என்னால் ஏன் பிடிக்கிறது என சொல்லத்தெரியவில்லை.
    உங்களின் ஒப்புமை அருமை. வாழ்த்துகள்!

    ReplyDelete

  39. @ வே நடன சபாபதி
    ஒரு சிறு இடைவெளிக்குப் பின் உங்கள் பின்னூட்டம் காண்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துகளுக்கு நன்றி சார்

    ReplyDelete
  40. ம்ம்ம்... ஸ்வாரஸ்யமான பகிர்வு, மட்டும் பின்னூட்டங்கள்....

    ReplyDelete
  41. அழகன் முருகனை எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஐயா...
    ஒரு நாளைக்கு ஆயிரம்தடவை கூட அவனை அழைப்பேன்...
    எப்பவும் நான் விரும்பும் தெய்வம்.

    ReplyDelete

  42. @ வெங்கட் நாகராஜ்
    பதிவுக்கு வரும் பின்னூட்டங்களே பதிவர்களை அறிய உதவுகிறது வருகைகு நன்றி சார்

    ReplyDelete

  43. @ பரிவை சே குமார்
    எனக்கு முருகனைப் பிடிப்பதற்கான காரணங்களைப் பட்டியல் இட்டிருக்கிறேன் உங்களுக்கும் முருகனைப் பிடிக்கும் என்பதில் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete