Sunday, October 23, 2016

என் கேள்விகென்ன பதில்


                             என் கேள்விக்கென்ன பதில்
                            -----------------------------------------


சிறுவயதில்  இருந்தே கேள்விகள் கேட்டுப் பழகி விட்டேன் பலரும் இக்கேள்விகளை பார்த்து அதிகப் பிரசங்கித்தனமாக இருக்கிறது என்றும் எண்ணலாம் இருந்தால் என்ன தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டில் என்பார்கள்நான்  கேள்விகள் கேட்பது தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளத்தான் எத்தனை கேள்விகள் எத்தனை முறை கேட்டாலும்  கிடைக்கப்படாத விடைகளும்  தெளிந்து கொள்ள முடியாத சந்தேகங்களும் இன்னும் இருக்கின்றன பல கேள்விகளுக்குப் பதிலாக நம்பிக்கை சார்ந்த விஷயங்களாகவே முன்  வைக்கப்படுகிறதுஎதற்கும் ஒரு சாங்க்டிடி வேண்டும் அல்லவா. நான் யாருடைய நம்பிக்கைகளையும்  கேள்வி கேட்கவில்லை. மனம் ஒப்பும் படியாக யாராவது பதில் தருகிறார்களா  என்பதே என் தேடல்

சர்வக்ஞ எம்பவனு (G)கர்வதி-இந்த ஆதவனே
சர்வரொல்லு ஒந்து ஒந்து நுடி கலிது
வித்யேய பர்வதவே ஆதா சர்வக்ஞா..!

சர்வக்ஞா என்பவ்ன் கர்வம் கொண்டவனே
ஒவ்வொருவரிடமும் ஒவ்வொன்றாகக் கற்று
அறிவில் மலைபோல் விளங்கினான்

விளக்கம்:-சர்வக்ஞா என்பவன் உன்னைப் போல் ஒருவனே என்றாலும் 
ஒவ்வொருவனின் வார்த்தையிலும் ஞானம் பெற்று மலை போல் விளங்கினான் ( சர்வக்ஞா = எல்லாம் அறிந்தவன் )

 சர்வக்ஞா என்பவர் கன்னட உலகில் திருவள்ளுவர் போன்றவர்
 நான் என்னை சர்வக்ஞா என்று சொல்லிக் கொள்ளவில்லை  இருந்தாலும்  ஒவ்வொருவரிடமும் கற்க விரும்புபவன் 
 
சாஸ்திரங்கள் என்று கூறப்படுபவை யாவை  சில சம்பிரதாயப் பழக்கங்களை சாஸ்திரம்  என்று கூறி முடிவு செய்வது சரியா இவற்றுக்கு ஏதாவது சாங்க்டிடி இருக்கிறதா முன்னோர்கள் சொல்லிப் போனது என்னும் பதில் திருப்தி தருவதாயில்லை சாத்திரம் என்பது சில கொள்கைகளை விளக்கும்  நூல் என்னும்  பொருள் கொள்ளலாம் என்று தெரிகிறது அதன் படி மனு சாஸ்திரம் , சைவ சித்தாந்த சாஸ்திரம் . அர்த்த சாஸ்திரம்  வான சாஸ்திரம்  போன்றவற்றைக் கருத்தில் கொள்ளலாம் மற்றபடி சில பழக்க வழக்கங்களை சாஸ்திரம் எனும் பேரில் திணிக்கலாமா 

   சாத்திரங்கள்  பல தேடினேன் - அங்கு
       
சங்கையில்  லாதன  சங்கையாம் - பழங்
       
கோத்திரங்கள்  சொல்லு  மூடர்தம் - பொய்மைக்
       
கூடையி லுண்மை   கிடைக்குமோ ? -நெஞ்சில்
       
மாத்திர  மெந்த வகையிலும்  - சக
      
மாய  முணர்ந்திடல் வேண்டுமே - என்னும்
      
ஆத்திர  நின்ற  நிதனிடை- நித்தம்
      
ஆயிரம்  தொல்லைகள்  சூழ்ந்தன. (பாரதியார் )


ஆலயங்களில் அந்தக் காலத்தில் மின்சாரம் இல்லாத காலத்தில் விளக்கேற்றி அந்த ஒளியில் இறைவனின்  உருவை மானசீகமாகக் கண்டார்கள் அது காலத்துக்கு ஏற்றது. ஆனால் இன்றும்  கோவில்களில் கர்ப்பக் கிரகத்தை இருட்டில் வைத்து தீப ஒளியில் ஆண்டவனின்  உருவை தரிசிக்கச் சொல்வது சரியா எங்கும் நிறைந்திருப்பதாகக் கூறப்படும் தெய்வங்களுக்கு உருவம் கொடுத்ததே நாம்தான் அப்படி இருக்க எந்த ஒளியில் தரிசித்தால் என்ன என்னும் பதிலும் எனக்குள் எழுகிறது ஆண்டவனை உருவமில்லாமல் வழிபடும் ஞானம் நம்மில் அநேகருக்கு இல்லை. அவர்களுக்காவது அந்த உருவம் சரியாகத் தெரிய வேண்டாமா நான் சுவாமி சின்மயாநந்தாவின்  பிரசங்கங்களைக் கேட்டிருக்கிறேன்  அவர் சொல்வார் எத்தனையோ இடையூறுகளுக்கிடையே திருமலை சென்று வேங்கடவனை வணங்க முற்படும்  பலரும் அவன்  திரு உருவை நெருங்கும் போது கண்களை மூடிக் கொண்டு அவனைப் பார்க்காமல் கோவிந்தா கோவிந்தா  என்றே கூறி கிடைக்கும்  சில விநாடிகளையும்  கோட்டை விடுகிறார்கள்.  இன்னொரு பதில் உள்ளத்தே இருக்கும்  ஆண்டவனைக் காண வெளிச்சம்  எதற்கு. . இருந்தாலும் பல முறை ஆலயங்களுக்குச் சென்று வந்தவனான  எனக்கு அரை குறை வெளிச்சத்தில் அவன் உருவை தரிசித்து உள்ளம் சார்ந்த பக்தியால்  நல்ல தரிசனம் ஆயிற்று என்று கூறுவோரையும்   பார்த்திருக்கிறேன் எப்படி என்றுதான் புரிவதில்லை செயற்கை ஒளியில் இறையுருவை தரிசிக்கும்போது ஒரு தேஜஸ் காண்போம்  செயற்கை ஒளியில் இல்லை என்றும் கருத்து இருக்கிறதுமேலும்  சிலருக்கு அவ்வாறு தரிசிக்கும் போது அந்த உருவம் நம்மைப் பார்த்து புன்னகை புரிவதுபோலும் தெரியலாம்  இதைத்தான் அறிவுக்கும் மனதுக்கும் நிகழும் போராட்டங்களில் அறிவு  தோற்கிறது என்கிறேன் When there is a conflict between the head and the heart most of the times the heart wins,
கருவறையில் அவனுருவை  தரிசிக்க  இயலாமல் இருட்டடிப்பு  செய்வது  ஏன்  என்பதுதான்.புரியவில்லை மேலும்  கர்ப்பக்கிரகத்துக்கு  வெளியே நந்தா விளக்குக்காக எண்ணெய்  கொடுப்பதும், ராகுகால  வழிபாடு  என்று எலுமிச்சையில்  எண்ணெய் ஊற்றி  தீபமேற்றுவது என்பதெல்லாம் அறிவு சார்ந்தவையோ அல்லவோ அவை நம் கலாச்சார  மிச்சங்கள்  என்றுதான்  ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இன்னொரு சமாச்சாரம் இந்த நிவேதனம் பற்றியதுஆண்டவனைப் பிரத்தியேகமாக வழிபாடு செய்ய என்றே பல தினங்கள் வைக்கப் பட்டிருக்கின்றன. கிருஷ்ணனாக விநாயகநாக, சிவனாக  அம்பிகையாக வழிபாட்டுக்கு என்பது போன்றவை நிவேதனம் என்றால் காண்பிப்பது என்னும்  பொருள் உண்டு
பல பண்டிகைகளில் கடவுளுக்கு உகந்தது இன்னது என்று படையல் செய்கிறார்கள்பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் கிருஷ்ணனுக்கு முறுக்கு சீடை  என்றெல்லாம் வறையறுத்து இருக்கிறார்க்சள்  அதாவது
நிவேதனங்கள் என்பதை ஸ்டாண்டார்டைஸ்  செய்கிறார்கள் இன்ன கடவுளுக்கு இன்னதுதான் உகந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அடியார்களுக்குப் பிடித்தது ஆண்டவனுக்குப் பிடிக்கும் என்னும் எண்ணமோ என்னவோ தவறில்லை கண்ணப்பன்  சபரி போன்றோர் செய்ததுபோல் . ஆனால் இவை ஆண்டவனின் சுவையை அடக்குவதுபோல் இருக்கிறதே இதற்கும் ஏதாவது சாஸ்திரம்  இருக்கிறதா நம்மால் முடிந்ததை ஆண்டவனுக்கும் காண்பிக்கிறோம்  என்பது புரிகிறது



             வான  சாஸ்திரத்தில் (இந்த  சாஸ்திரம்  அறிவியல் சார்ந்தது) நம்  முன்னோர்   முன்னோடிகள்  என்று நமக்குத்  தெரியும். ஆனால்  நாளின் ஒரு பகுதியை  ராகு  காலம்  என்று குறிப்பிட்டு  அது ஒவ்வொரு நாளும்  ஒவ்வொரு  நேரத்தில்  வரும் என்று கூறுவதன்  விளக்கம்  எனக்குத் தெரியவில்லைஅப்படியே  இருந்தாலும் இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும்  அல்லவா... ராகு காலம்  ஒரு இடத்தின்  இருப்பை POSITION  சூரியனோடு ஒப்பிடுகையில்  இருப்பதை  பொறுத்துக்  கணிக்கப்  படுவதுதானே.. இந்தியாவில்  ஒரு இடத்தில்  ராகு காலம் இன்னொரு  இடத்தில்  வேறு நேரத்தில் அல்லவா இருக்கவேண்டும்.. இந்தியாவில் ,ஜப்பானில், அமெரிக்காவில்  ராகு காலங்கள்  ஒரே  நேரத்தில்  இருக்க  சாத்தியமில்லையே... இந்தியாவின்  ஸ்டாண்டர்ட்  டைம்  நாக்பூரின்  இருப்பிடத்தை  ஒட்டியே  கணிக்கப்படுகிறது. நாக்பூரின்  நேரமும் குவாஹத்தியின்  நேரமும் ஜம்முவின்  நேரமும்  நியாயப்படி வேறு வேறாக  இருந்தாலும் கணக்குக்காக  ஒன்றாக  ஏற்கப்பட்டுள்ளது. அதுபோல்தான்  ராகு  காலம் என்றால் அதனால் விளையப்படுவதாக   சொல்லப்படும்  நிகழ்வுகள் தவறாக இருக்க  வாய்ப்புகள்  அதிகம்தானே..ஒரு காலண்டர் கண்டேன் அதில் வெவ்வேறு இடங்களுக்கு  வெவ்வேறு  ராகுகாலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன



விவேகாநந்தர் கடவுளைத்தேடினார்.உண்டா இல்லையா? என்று தெரிந்து.கொள்ள. இறுதியில் அவர் பார்த்தார். கடவுளை அல்ல. ராமகிருஷ்ணர் என்ற மனிதரை. ராமகிருஷ்ணர் வேதத்தில், பைபிளில், குரானில் தேடினார். சாரதாம்பாள் என்ற மனுஷி தான் தெரிந்தாள். இவர்கள் வரலாற்றில் சமீபத்தியவர்கள் என்பதால் குறிப்பிடுகிறேன்.வள்ளலாரும் அப்படியே.
மகரவிளக்கு பற்றிய சமீபத்தியசெய்தி அது தெவஸ்வம் ஊழியர்களால் ஏற்றப்படுகிறது என்ற அறிக்கை ஆனாலும் தேவர்கள் வந்து ஏற்றுவதாக நம்புபவர்கள் கோடியில் உள்ளனர்.
கடைசியாக நம்பிக்கை இருப்பவர்களையும் நான் நேசிக்கிறேன் ஏனென்றால்  LOVE IS GOD என்னும்  கொள்கையில் நம்பிக்கை உடையவன் நான்  








 

48 comments:

  1. பதிலுக்காக நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. தங்களுடைய கேள்விகள் எல்லாம் நியாயமானவைகளே!..

    ஒரு துளி நீர் (அன்பின் கண்ணீர்) அதுவே எனக்குப் பிரியம் என்று ஸ்ரீ கிருஷ்ணன் கூறுகின்றான்..

    கோகுலத்தில் கண்ணன் வெண்ணெய்யும் பாலும் உண்டதாக தாத்பர்யம்.. எனவே, அவை கிருஷ்ண வழிபாட்டில் முதன்மையாகின்றன..

    தமிழகத்தில் ஒரு சில கோயில்களைத் தவிர பிரபலமாக இருக்கும் பல கோயில்களிலும் மூலஸ்தானத்தில் மின்விளக்குகள் தான்..

    ஆனால் - கேரளத்தில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை..

    சூரியனின் உதய நாழிகையைக் கொண்டு தான் ராகு காலத்தைக் கணக்கிட வேண்டும்.. எல்லா ஊர்களிலும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் உதிப்பதில்லை.. ஆனால் நாட்காட்டிகளில் வரையறுத்ததைப் போல குறித்திருப்பார்கள்..

    தஞ்சையில் இன்றைய சூரிய உதயம் 6.03..இதுவே வேறொரு நாட்காட்டியில் 6.02..

    கடந்த ஜூலை மாதம் 19 முதல் 23 வரையுள்ள ஐந்து நாட்களிலும் மிகச் சரியாக 6.00 மணிக்கு சூரிய உதயமாகியிருக்கின்றது..

    >>> இந்தியாவின் Standard Time நாக்பூரின் இருப்பிடத்தை ஒட்டியே கணிக்கப்படுகிறது <<<

    நாக்பூரில் இன்றைய சூரிய உதயம் 6.12..

    இங்கே குவைத்தில் இன்றைய உதயம் 5.55..

    குவைத்தில் கடந்த மார்ச் 13 அன்று 6.00 மணிக்கு சூரிய உதயம் நிகழ்ந்தது..
    இனிமேல் எதிர் வரும் 30/10 அன்று ஒருநாள் மட்டும் சரியாக 6.00 மணிக்கு சூரிய உதயம்..

    வேறுபாட்டினை உணர்ந்து கொள்ள இயலும்.. வாழ்க நலம்!..

    ReplyDelete
  3. >>> கடந்த ஜூலை மாதம் 19 முதல் 23 வரையுள்ள ஐந்து நாட்களிலும் மிகச் சரியாக 6.00 மணிக்கு சூரிய உதயமாகியிருக்கின்றது..<<<

    இது தஞ்சையில் சூரிய உதயத்தின் கணக்கீடு..

    இந்த குறிப்புகள் www.timeanddate.com - இருந்து பெறப்பட்டவை..

    ReplyDelete
  4. எதுவே அவரவர் மனதைப் பொறுத்துதான் ஐயா.

    ReplyDelete
  5. மிகக்கடினமான விடயம் ஐயா விடையறிய நானும் காத்து இருக்கின்றேன்.

    ReplyDelete
  6. பூவுலகில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் உண்டு.
    பதில்கள் இருப்பதாலேயே நம்மில் அதற்கான கேள்விகள் எழும்புகின்றன.
    அப்படி பதில்கள் இல்லையென்றால் கேள்விகளே எழும்பாது,.
    நம் பதில்கள் சரிதானா என்று தெரிந்து கொள்வதற்காகவே பிறரிடம் அது பற்றி கேள்வி எழுப்புகிறோம்.
    நம் கேள்விகளுக்கு மற்றார்களிடமிருந்து பதில் கிடைத்தாலும் சரி, நம்மில் கேள்விகள் இருந்து கொண்டே இருக்கின்றன.
    எந்த பதிலையும் நம் மனம் ஏற்றுக்கொள்வதிலையாதலால் தான் கேள்விகள் என்றேன்றும் நம்மில் இருந்து கொண்டே இருக்கின்றன.
    இப்படி சில கேள்விகள் நம்மில் இருந்து கொண்டே இருப்பதும் நல்லதுக்குத் தான்.
    அதனால் எதையும் ஆராய்ந்து பார்க்கும் நம் உணர்வு தூண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
    இப்படியான தூண்டல் மன ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    ReplyDelete
  7. கடவுளால் கூறப் பட்டது என்று சொல்லலப் படுபவை எல்லாமே மனிதனின் புருடாக்களே!
    'மனிதன் எதையோ சொல்லட்டுமே ,உன் மனசைப் பார்த்துக்க நல்ல படி'என்ற பாடல் வரிகளே நமக்கு வழிகாட்டி :)

    ReplyDelete
  8. என் கேள்விகென்ன பதில் என்று கேட்டுவிட்டு
    //என் சில பழக்க வழக்கங்களை சாஸ்திரம் எனும் பேரில் திணிக்கலாமா?//
    ​//​கோவில்களில் கர்ப்பக் கிரகத்தை இருட்டில் வைத்து தீப ஒளியில் ஆண்டவனின் உருவை தரிசிக்கச் சொல்வது சரியா//
    ​//​
    வேதனங்கள் என்பதை ஸ்டாண்டார்டைஸ் செய்கிறார்கள்​//​இதற்கும் ஏதாவது சாஸ்திரம் இருக்கிறதா//
    //இடத்துக்கு இடம் இந்த ராகு காலம் மாறவேண்டும் அல்லவா.//

    இவை எல்லாவற்றிற்கும் நீங்களே //நெஞ்சில்
    மாத்திர மெந்த வகையிலும் - சக
    மாய முணர்ந்திடல் வேண்டுமே -//

    என்று ஒரு பதிலையும் கூறி உங்களுக்கு தோன்றிய சில விடைகளைக் முன் வைத்திருக்கிறீர்கள். நன்று

    சாஸ்திரம் என்று கூறப்படுவது சாஸ்திரங்களை நபுவோர்க்கு மட்டுமே. மற்ற சிலருக்கு பசஹாக்க வழக்கங்கள் அன்பாலும் அதட்டலாலும் திணிக்கப்படுகின்றன.

    இருட்டோ வெளிச்சமோ ரூபமோ அரூபமோ ஆண்டவனை தரிசிக்க சிலரால் மட்டுமே முடியும் (பூந்தானம் எருமை மாட்டுக் கொம்புகளுக்கு இடையில் கண்டது போன்று). நாம் காணும் உருவங்களில் எத்தனை பேர் ஆண்டவனை உண்மையாக காண்கிறார்கள். அவர்களின் பக்தி என்பது உருவங்களைத் தொழுவதும் பின்னர் முறையிடுதலும் மட்டுமே. உண்மையாக ஆண்டவனைக் கண்டேன் என்று கூறுபவர்கள் பைத்தியம் என்று முத்திரை குத்தப்படுவார்கள்.

    நிவேதனங்கள் பற்றிய பதில்
    "நம்மால் முடிந்ததை ஆண்டவனுக்கும் காண்பிக்கிறோம் என்பது புரிகிறது" என்று கூறியுள்ளீர்கள். இது சரியே. உலர் பழங்களான முந்திரி, திராட்சை, பாதாம், வால்நட் போன்றவையும் பழங்கள் ஆப்பிள் ஆரஞ்சு கொய்யா போன்றவையும் படைப்பதை கண்டுள்ளேன். ஆனால் கேரளக் கோவிலகளில் காதலிப் பழம் தவிர வேறு பழங்கள் படைக்க ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை, பூவன் ரஸ்தாளி ரசகதலி உட்பட.

    ராகுகாலம்.

    நீங்கள் பஞ்சாக்கத்தின் ஒரு அடிப்படை விஷயமான சூரிய உதய நேரத்தை மறந்து விட்டீர்கள். உதயம் காலை 6 மணி என்றால் அந்தந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் ராகு காலம் ஆகும். சூரிய உதயம் இடத்துக்கு இடம் வேறுபடும்போது ராகு காலமும் இடத்துக்கு இடம் வேறாக இருக்கும்.

    --
    Jayakumar


    ReplyDelete
  9. தங்களின் கேள்விக்கு பதில் இல்லை ஐயா! God is Love என்ற கொள்கையில் தாங்கள் நம்பிக்கையுள்ளவர் என்று சொல்லியுள்ளீர்கள். Love is Blind எனவே God is Blind என Logic படித்தவர்கள் சொல்வதுண்டு. தங்கள் கருத்து என்னவோ?

    ReplyDelete
  10. //இப்படி சில கேள்விகள் நம்மில் இருந்து கொண்டே இருப்பதும் நல்லதுக்குத் தான்//

    i second ஜீவி

    ReplyDelete
  11. கேள்வி பிறந்தது அன்று நல்ல பதில் கிடைத்தது இன்று என்று பாடல் நினைவுக்கு வருது.

    கேள்விகள் கேட்டுக் கொண்டே இருப்பது குழந்தைகள் மட்டும் அல்ல , பெரியவர்களும் தான் என்பதை ருசுபடுத்தி விட்டீர்கள்.

    கேள்வியும் நானே, பதிலும் நானே! என்று சொல்வது போல் எல்லா கேள்விகளுக்கும் விடையும் தெரியும் உங்களுக்கு.

    சோதித்துப் பார்க்கவே கேள்விகள்.

    இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் பார்த்தால் அந்த அந்த சீஸ்னில் பயிர் ஆகும் காய் கனிகளே!

    உள் அன்போடு எதை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

    சுருளிராஜன் நடித்த ஒரு படத்தில் ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வைத்தேன் வாடி அம்மா. ஆழாக்கு அரிசியை வீணாக்க வேண்டாம் தின்னுப்போட்டு போடி அம்மா என்று தனக்கு தெரிந்த மாதிரி பாடுவார், இன்னொரு புறத்தில் வேதியர்கள் மந்திர ஸ்லோகங்களை சொல்லி பாடி, பலவித உணவை படைப்பார்கள்.ஆனால் மாரியம்மாஎளியவன் வீட்டுக்குவந்து அமுது உண்பார்.

    அது போல் நம்மால் எது முடிகிறதோ அதை கொடுக்கலாம், சில வீடுகளில் விளக்கு ஏற்றும் போது உனக்கு ஊற்ற எண்ணெயும் எங்களுக்கு சாப்பிட அரிசியும் படியள அம்மா!என்று விளக்கு ஏற்றுவார்கள்.

    நம்பிக்கையும் மனித மனமும் தான் முக்கியம்.

    ReplyDelete
  12. //நம்பிக்கையும் மனித மனமும் தான் முக்கியம். //

    இதுல அந்த மொதல் விஷயம் தான் உதைக்குது .... :(

    ReplyDelete

  13. @ ஸ்ரீராம்
    பதிகள் கிடைத்ததா ஸ்ரீ இன்னும் எதிர்பார்த்தேன் நன்றி

    ReplyDelete

  14. @ டி என் முரளிதரன்
    அன்பே கடவுள் என்பது என் கொள்கை என்றிருக்கிறேன் அதில் கேள்வியே இல்லையே கருத்துகளைக் கூறத்தயக்கமா முரளி. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  15. @ கீதா சாம்பசிவம்
    பதிவர்களில் இம்மாதிரி விஷயங்களில் துறை போகியவர் என்றல்லவா கேள்விப்பட்டேன் இதைவிட நீண்ட பதிவுகளுக்குப் பின்னூட்டம் இருந்திருக்கிறதே கருத்துச் சொல்ல விருப்பமில்லை போல் இருக்கிறது வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  16. @ துரை செல்வராஜு
    /சூரியனின் உதய நாழிகையைக் கொண்டு தான் ராகு காலத்தைக் கணக்கிட வேண்டும்.. எல்லா ஊர்களிலும் சரியாக ஆறு மணிக்கு சூரியன் உதிப்பதில்லை.. ஆனால் நாட்காட்டிகளில் வரையறுத்ததைப் போல குறித்திருப்பார்கள்./ தெரிந்து கொள்கிறேன் ஐயா ஆக தமிழ் நாட்டில் ராகுகாலம் குவைத்தில் வேறு நேரத்தில் ( நம் நேரப்படி ) இருக்கும் அல்லவா நிவேதனம் குறித்த என்கேள்வி சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன் பல வீடுகளில் இந்த நிவேதனப் பொருட்கள் ஸ்டாண்டர்டைஸ் ஆகி இருப்பது ஏன். கண்ணனுக்கு முறுக்கு சீடை ராமனுக்கு பானகம் போல நான் சென்ற பல கோவில்களில் கர்பக்கிரகம் இருட்டிலேயே எண்ணைய் விளக்கிலேயே இருக்கிறது பதில் கொடுத்ததற்கு நன்றி சார்

    ReplyDelete

  17. @டுரை செல்வராஜு
    ராகு காலங்கள் இந்தியாவிலேயே இடத்துக்கு இடம் மாறியே இருக்கக் காரணம் தெரிகிறது சில நிமிஷங்களே ஆனாலும்நன்றி

    ReplyDelete

  18. @ டாக்டர் ஜம்புலிங்கம்
    இதுசரியான பதிலில்லை முனைவரே வருகைக்கு நன்றி

    ReplyDelete

  19. @ கில்லர்ஜி
    அதனால்தான் பதில் கோரி பதிவு எழுதினேன் பின்னூட்டங்களில் இருந்து விடை கிடைத்ததா ஜி வருகைக்கு நன்றி

    ReplyDelete

  20. @ ஜீவி
    /எந்த பதிலையும் நம் மனம் ஏற்றுக்கொள்வதிலையாதலால் தான் கேள்விகள் என்றேன்றும் நம்மில் இருந்து கொண்டே இருக்கின்றன/ இதை நான் ஒப்புக் கொள்ளவில்லைமனம் ஏற்கும் படியான பதில்களைக் கூறப்பலரும் தயங்குகிறார்கள் என்பதே சரி. எந்தப்பதிலையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றால் இயலுமா மற்றபடி கேள்விகள் பற்றிய உங்கள் பதில் ஏற்புடையதே.

    ReplyDelete

  21. @ கரந்தை ஜெயக்குமார்
    அன்பே கடவுள் என்று நானே சொல்லி இருக்கிறேன் அதில் பதில் கோரும் கேள்வி இல்லையே

    ReplyDelete

  22. @ பகவான் ஜி
    கடவுளால் சொல்லப்பட்டது என்று எதையாவது எழுதி இருக்கிறேனா ஜீ அறியாத அல்லது சரியாக அறியாத விஷயங்களே கேள்விகளாகின்றன ஜி வருகைக்கு நன்றி

    ReplyDelete

  23. @ ஜேகே22384
    வருகைக்கு நன்றி சார் நான் கேட்ட கேள்விகளுக்குஇன்னும் விரிவாகப் பதில் கிடைக்குமா என்பதே பதிவின் நோக்கம் நான் ஆண்டவை தரிசிப்பதைப் பற்றிக் கூறவில்லை அந்த சிலை ரூபத்தைத்தான் சொன்னேன் கடவுளுக்கு உருவம் கொடுத்தவர்களே நாம் என்நான் அறிவேன்

    ReplyDelete

  24. @ வே நடன சபாபதி
    உங்கள் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது கடவுளே ஒரு கான்செப்ட் என்று நினைப்பவன் நான் லாஜிக் படி கடவுளுக்குக் கண் இல்லைதான் வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  25. @# தருமி
    கேள்விகள் நம்மில் இருந்து கொண்டே இருப்பது நல்லதுதான் உடன் படுகிறேன் ஆனால் பதில் என்று நினைத்து சில செயல்பாடுகளைப்பார்க்கும் போது வருத்தமும் வருகிறதே வருகைக்கு நன்றி சாம்

    ReplyDelete

  26. @ கோமதி அரசு
    சோதித்துப் பார்க்க அல்ல கேள்விகள் சரியான புரிதல்கள் இல்லையோ எனும் ஆதங்கங்களுமே பதிவை எழுத வைத்தன/இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் பார்த்தால் அந்த அந்த சீஸ்னில் பயிர் ஆகும் காய் கனிகளே!/ ஆனால் நடைமுறையில் அப்படி இல்லையே பிள்ளையார் என்றால் கொழுக்கட்டையும் ராமர் என்றால் பானகமுமே செய்கிறார்களே எனக்குத் தெரியும் நம்பிக்கை சார்ந்த அநேக விஷயங்கள் அறிவுக்கு சரியாகத் தெரியவில்லையே வருகைக்கு நன்றி மேம்

    ReplyDelete

  27. @தருமி
    மீள்வ்ருகைக்கு நன்றி சார் ஆங்கிலத்தில் when there is a conflict between the head and the heart most of the times the heart only wins நம்பிக்கை மனதைப் பொறுத்தது

    ReplyDelete
  28. #கடவுளால் சொல்லப்பட்டது என்று எதையாவது எழுதி இருக்கிறேனா ஜீ #
    நீங்கள் எழுதவில்லை ,எல்லா மதங்களிலும் அப்படிப்பட்ட கருத்துக்கள் திணிக்கப் பட்டுள்ளன :)

    ReplyDelete

  29. @ பகவான் ஜி
    மதங்கள் பற்றி ஏதாவது எழுதினால் பல வாசகர்களுக்குப் பிடிப்பதில்லைஜி. ஆனால் எழுதுவதற்கு அதில்தான் பல விஷயங்கள் இருக்கின்றன மீள் வருகைக்கு நன்றி ஜீ

    ReplyDelete
  30. கேள்விகள்தான் நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றன, நம்மை உந்தித் தள்ளுகின்றன. நியூட்டனுக்கு முன்னாலும் ஆப்பிள்கள் மரத்திலிருந்து கீழே விழுந்து கொண்டுதான் இருந்தன. நியூட்டன் தான் இது ஏன் கீழே விழுகிறது என்று கேள்வி கேட்டான், புவி ஈர்ப்பு விசைதான் காரணம் என்று கண்டு பிடித்தான். பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஏதோ ஒரு எதேச்சையான நிகழ்வு குறித்து விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்விகளின் விடைகள். விஞ்ஞானத்தில் மட்டுமல்ல, மெய் ஞானத்திலும் இதுதான் நிகழ்வு. இறப்பு பற்றி சிறுவன் வெங்கடரமணன் மனதில் எழுந்த கேள்விகளே அவனை ரமண மகரிஷி ஆக்கியது.

    இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர்கள் எல்லோரும் தங்களுக்குள் கேட்டார்கள். மற்றவர்களிடம் கேட்டிருந்தால் அவர்கள் கேள்விகள் புறக்கணிக்கப்பட்டிருக்கும், அல்லது கேலிக்கு ஆளாகி இருப்பார்கள். விடை கிடைத்திருக்காது. நமக்கு சில சமயங்களில் விடை கிடைக்காததற்கு காரணம், தேர்வு விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள் போல் நாம் ஒரு பதிலை மனதில் கருதிக்கொண்டு கொண்டு, அந்த விடையை மற்றவர்கள் அளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

    எப்படி இருந்தாலும் கேள்விகள் நல்ல விஷயம்தான். கேளுங்கள், கிடைத்த விடையை முடிந்தால் எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.



    ReplyDelete
  31. // எழுதுவதற்கு அதில்தான் பல விஷயங்கள் இருக்கின்றன//

    தேவையும் இருக்கிறது.

    ReplyDelete
  32. பிள்ளையார் என்றால் கொழுக்கட்டையும் ராமர் என்றால் பானகமுமே செய்கிறார்களே எனக்கு//

    பிள்ளையாருக்கு கொழுக்கட்டை (மோதகம்) படைப்பது அவன் பூரணம் ஆனவன் என்பதை விளக்க என்பார்கள்.

    ராமருக்கு பானகம் ஏன் என்றால் பங்குனி மாதம் வரும் ராம நவமி சமயம் வெயில் காலம் சுந்தரகாண்டம், திவ்யபிரபந்த பாடல்கள் பஜனை பாடல்கள் பாடுவார்கள். தொண்டைக்கு இதமான பானம் பானகம் அதில் கலக்கப்படுவது, சுக்கு, வெல்லம், எலுமிச்சை அதுதான் உகந்த பிரசாதம் பானகம். அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.

    பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள் சொல்வது போல் ஞானிகளுக்கு கேள்விகள் இருந்து கொண்டு இருக்கும்.
    நீங்களும் விஷய ஞானிதானே!

    ReplyDelete

  33. @ பானுமதி வெங்கடேஸ்வரன்
    கேள்விகள் நல்ல விஷயங்கள்தான் எதிர் பார்க்கிற பதில் என்று ஏதும் இல்லை. அறிவு பூர்வமாக மனம் ஒப்பும் விடைகள் கிடைத்தால் திருப்தி. இல்லையென்றால் எதுவும் தெரியாமல் தெரிந்ததுபொல்பதில் கூறுவோரைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறதுவருகைக்கு நன்றி

    ReplyDelete

  34. !@ தருமி
    மதங்கள் பற்றி எழுத நிறைய விஷயங்கள் உள்ளது அது தேவையும் இருக்கிறது என்கிறீர்கள் ஆனால் பல விஷயங்களில் மனதளவில் அடிமையாய்ப் போய்விட்ட மக்களை அடிமைத்தனத்தில் இருந்து மீட்பது எளிதல்ல. மதங்கள் பற்றி எழுதினாலேயே தொட்டாற்சுருங்கியாய் விடுகிறார்கள் எல்லாம் அவன் செயல் ......! வருகைக்கு ம் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஐயா

    ReplyDelete

  35. @ கோமதி அரசு
    உங்கள் பதிகள் உங்களுக்கே திருப்தி தருகிறதா நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்நானும் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முயறை செய்கிறேன் ஆனால் ஞானி அல்ல. பதிவில் சர்வக்ஞாவின் ஒரு சுபாஷித வாக்கியம் எழுதி இருக்கிறேனே கவனிக்க வில்லையா வருகைக்கு பதிலுக்கும் நன்றி மேம்

    ReplyDelete
  36. ஐயா,
    சீரியல்களில் வரும் வட இந்திய கோவில்களில் சாமிகள் பிரகாசமான இடங்களில் தானே காண்பிக்கப்படுகிறார்கள்!!!

    ReplyDelete
  37. இது போன்ற பல கேள்விகள் எழுவதுண்டு. நாங்கள் இருவருமே நாள் காலம் பார்ப்பதில்லை. சரியான கேள்விகள்தாம்.

    கீதா: மனதிற்கு கன்வின்சிங்காக விடைகிடைத்தால் நல்லது.

    ReplyDelete




  38. God is love;Love is blind; Therefore God is blind --இதை லொஜிக் லேயே
    தவறு என்று தான் கூறுகிறார்கள் ..It commits the fallacy of Undistributed middle என்று கேள்விப்பட்டிருக்கிறேன் !

    மாலி

    ReplyDelete

  39. @ தருமி
    வட இந்தியக் கோவில்களில் கர்ப்பக்கிரகம் அர்ச்சகர் என்று யாரையும் பார்க்கிறோமா. மேலும் வட இந்திய சாமிகள் பளிங்குக் கற்களில்பளிச்சென்று தெரியும் காசியில் விஸ்வநாதரைக் கூட கையால் தொட்டு அபிஷேகம் செய்யலாம் என் பதிவு இவற்றைக்கண்டுகொள்ளவில்லை வருகைக்கு நன்றி சார்

    ReplyDelete

  40. @ துளசிதரன் தில்லையகத்து
    கேள்விகளுக்கு கன்வின்சிங்காக பதில் கிடைத்தால் இம்மாதிரிப் பதிவுகள் வராது வருகைக்கு நன்றி

    ReplyDelete

  41. @ மாலி
    /.It commits the fallacy of Undistributed middle என்று கேள்விப்பட்டிருக்கிறேன் / உண்மையைச் சொல்லப் போனால் இது எனக்கு விளங்கவில்லை ஐயா !

    ReplyDelete
  42. //எதுவும் தெரியாமல் தெரிந்ததுபொல்பதில் கூறுவோரைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது//
    என்ன ஒற்றுமை? எனக்கும் அப்படித்தான் இருக்கிறது...! கொடுங்கள் ஒரு ஹை பைவ்!!!

    ReplyDelete

  43. ஒரு வாதம் -i. e. Argument -தர்க்க ரீதியாக சரி தானா என்று பார்க்க
    அந்த argument ஐ ஒரு அமைப்புக்கு உட்படுத்தி எழுதுவதை
    syllogism என்று கூறுவார்கள் ..அப்படி எழுதி பார்த்து விட்டு , அந்த
    argument -ல் உள்ள குறைகளை ( fallacy )எந்த வகையானவை என்று பார்க்க வேண்டும் . .".Fallacy of Undistributed Middle " என்பது Logic -ல் ஒரு fallacy (குறைபாடு ) ...Logic படித்தவர்கள் இன்னும் நன்கு
    விளக்கமுடியும் ...

    மாலி

    ReplyDelete
  44. ஒரு வாதம் -i. e. Argument -தர்க்க ரீதியாக சரி தானா என்று பார்க்க
    அந்த argument ஐ ஒரு அமைப்புக்கு உட்படுத்தி எழுதுவதை
    syllogism என்று கூறுவார்கள் ..அப்படி எழுதி பார்த்து விட்டு , அந்த
    argument -ல் உள்ள குறைகளை ( fallacy )எந்த வகையானவை என்று பார்க்க வேண்டும் . .".Fallacy of Undistributed Middle " என்பது Logic -ல் ஒரு fallacy (குறைபாடு ) ...Logic படித்தவர்கள் இன்னும் நன்கு
    விளக்கமுடியும் ...

    ReplyDelete
  45. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete