கேள்விகள் பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்விகள் பதில்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 26 நவம்பர், 2014

அடி மேல் அடி அடித்தால்


                                     அடிமேல் அடி அடித்தால்
                                      -----------------------------------


 சிலவிஷயங்கள் ஓரிரு முறை சொல்லிப்போனால் போய்ச் சேருகிறதா தெரியவில்லை. அதுவும் சில நம்பிக்கை சார்ந்த விஷயங்களைக் குறித்துப் பதிவிட்டால் பதிவுலகில் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். ஒருவர் புரட்சி செய்வதாக நினைக்கிறார். இன்னொருவர் இவருக்கு lateral thinking என்கிறார். இருந்தாலும் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமாகப் பலரும் செயல்படும்போது என் மனமும் சிறிது வருந்துகிறது என்று சொன்னால் மிகையாகாது. இருந்தாலும் எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது தவிர வேறெண்ணமில்லை எனக்கு. அனாதிகாலமாக பாதுகாக்கப்பட்ட சில எண்ணங்களை எளிதில் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை.
சில் நாட்களுக்கு முன் என் பேரன் ( வயது 9 ) கடவுள் பற்றி நாங்கள் கூடி இருந்தபோது கேட்டான். அவனது பாட்டி ( என் மனைவி) புரிந்தோ புரியாமலோ சில ஸ்தோத்திரங்களை எப்போதும் படித்துக் கொண்டிருப்பவள். ஒரு முறை வீட்டின் மேல்தளத்திலிருந்து  கீழே விழுந்து காயம் ஏதும் படாமல் தப்பித்த என் மகன் அதற்கு அவன் அணிந்திருந்த ஆஞ்ச்நேயர் டாலர்தான் காரணம் என்று நம்புபவன்.. என் மருமகளும் காரணங்கள் ஏதும் கேட்காமல் இருக்கும் குண முடையவள். இப்படி இருக்க என் பேரனின் கேள்வி எனக்கு ஆச்சரியமளித்தது. கேள்வி கேட்க வேண்டும் என்னும் தாத்தாவின் குணமிருப்பது மகிழ்ச்சி அளித்தது. அவன் கூடவே கடவுள் என்று ஒன்றுமில்லை. எல்லாமே சயின்ஸ்தான் என்றான். நான் அவனிடம் வளரும்போது கேள்விகள் கேட்டு சரியான பதில்களைப்பெற வேண்டும். இப்போதே எதையும் ஒரு சார்பாக நினைக்காதே என்றேன்.

ஆக மீண்டும் கடவுள் பற்றிய என் எண்ணங்கள் என்னை ஆக்கிரமித்தது. நம் நாட்டில்தான் எத்தனைக் கடவுள்கள். ?எத்தனைக் கதைகள்.?பண்டித் ஜவஹர்லால் நேரு எழுதி இருந்ததைப் படித்த நினைவு வருகிறது. கடவுள் என்பவரே மனிதனின் சிருஷ்டி. காரணம் தெரியாத நிகழ்வுகளுக்குக் காரணங்காட்ட அவனால் சிருஷ்டிக்கப் பட்டவரே கடவுள். அதை நம்புபவரை ஆத்திகர் என்றும் நம்பாதவரை நாத்திகர் என்றும் கூறுகிறார்கள். நான் எழுதுவது ஆத்திக நாத்திக வாதம் பற்றியதல்ல. மனிதன் ஏன் இத்தனைக் கடவுள்களைப் படைத்தான் என்னும் கேள்விக்கு பதில் காணவே இதை எழுதுகிறேன், பகிர்கிறேன்
கடவுள் உண்டு என்று கூறுபவர்கள் அனைவரும் அந்த சக்தியை உணருகிறார்களா என்ற கேள்வி   எழுந்தால், 90  விழுக்காட்டுக்கு  மேல்  உணராதவரே  இருப்பார்கள். பின்  கடவுள் நம்பிக்கை என்பதே பிறந்து  வளர்ந்த  சூழல் , வளர்க்கப்பட்ட  முறைகற்றுத்தேரிந்த  விஷயங்கள்  என்பதைச் சார்ந்தே  அமைகிறது.

எங்கும் நிறைந்தவன் கடவுள், அவனன்றி ஓரணுவும் அசையாது; நாம் செய்யும் செயல்களைக் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்; நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப கடவுள் பரிசோ தண்டனையோ தருவார் என்று நாம் பிறந்தது முதல் தயார்  செய்யப்பட்டு வளர்க்கப்படுகிறோம்
ஒரு காண முடியாத சக்தியை நம்மில் பலரால் கற்பனை செய்து பார்க்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கடவுள் வழிபாட்டுக்கும் விக்கிரக ஆராதனைக்கும் முக்கிய காரணமாய் இருந்திருக்கவேண்டும். ஆண்டவனுக்கு நம்மில் ஒருவன் போல் உருவம் கற்பித்து அவனுக்கு ஏகப்பட்ட சக்தியையும் கொடுத்து காப்பவனாகக் கருதி  வழிபடும்போது மன அமைதி கிடைக்கிறது. அழிப்பவனாகக் கருதி வழிபடும்போது   தீய செயல் செய்வதை பயத்தால் செய்யாமலிருக்கச் செய்கிறது. கடவுளுக்கு ஏராளமான சக்தி உண்டு என்று நாம் நம்ப, அவனுக்கு பிரம்மா, விஷ்ணுசிவன்  முறையே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களின் வெளிப்பாடுகளாக அறிவிக்கப்படுகிறோம். இன்னும் கடவுளை ராமனாகவும் கண்ணனாகவும், முருகனாகவும்  கற்பிதம் செய்து அவர்களின்  சக்திகளில்  நம்பிக்கை  வைத்து  அவர்களை  வழிபாடு செய்தால் நலம்  பெறுவோம் எனும்  நம்பிக்கை  சிறு  வயது  முதலே  வளர்க்கப்படுகிறது. தாயே  மனிதனின்  முதல் தெய்வம்  என்று  கருதப்படும்  நம் நாட்டில், கடவுளை அன்னையின்  வடிவத்திலும்  வழிபடுகிறோம்.  சரஸ்வதியாக , லட்சுமியாக , பார்வதியாகஒவ்வொரு  தெய்வமும்  ஒவ்வொரு  சக்தியின் பிரதிபலிப்பாக  வணங்க  வளர்க்கப்படுகிறோம்

இந்தக் கடவுள்களின் சக்தியில் நாம் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவே  ஆயிரமாயிரம்   கதைகளும்  புனைவுகளும்   ஏற்பட்டிருக்க வேண்டும்.

சூனியமான இருண்ட அண்டத்தில் சூரியனின் ஒளியே வாழ்வின் ஆதாரமாக இருப்பதால் ஆதியில்  சூரிய  வழிபாடும்பிறகு உயிர்  வாழப்  பிரதானமான  ஆகாயம் , காற்று , நீர் , மண்  போன்றவைகளும்  வழிபாட்டுக்கு  உரியனவாயின .

?
கோவிலுக்குப  போகிறோம் , ஆண்டவனை  ஏதோ ஒரு உருவில்  தரிசிக்கிறோம் ,சில  வேண்டுதல்களை  சமர்ப்பிக்கிறோம் . இவற்றை எல்லாம் செய்யும்போது  நம் மனம்  அல்லது உள்ளம்  எவ்வளவு  ஈடுபாடு  கொண்டுள்ளது.?வேண்டுதல்கள்  வெறும்  வாயளவிலும்  தரிசனம்  சில பழக்க  வழக்கப்படி தன்னிச்சையாகவுமே  நடைபெறுவதாக  நான் உணருகிறேன். இங்கு நான் என்று  சொல்லும்போது  என்போல்  ஏராளமானவர்கள்  இருக்கிறார்கள் என்றும் உணருகிறேன். ..
 காலங்காலமாக  நமக்குக்  கற்பிக்கப்பட்டுவந்த இந்த நம்பிக்கைகளும்  பாடங்களும்  ஆண்டவன் நல்லது  செய்பவர்களுக்கு  நல்லது  செய்வான்  என்றும், கெடுதல்  விளைவிப்பவர்கள்  அதன் பலனை  அடைவார்கள்  என்பதை வலியுறுத்துவதாகவும்  அமைந்துள்ளது. வினை  விதைத்தவன்  வினை அறுப்பான் , தினை  விதைத்தவன்  தினை  அறுப்பான் போன்ற  போதனைகளும்  இவற்றின்  அடிப்படையில்  அமைந்ததே.

மனசால், வார்த்தையால்செயலால்  நல்லதே  நினைத்து , நல்லதே பேசிநல்லதே செய்து  வாழ  உதவுகின்றன  கடவுள் கதைகளும் வழிபாட்டு  முறைகளும். காலம்  காலமாக  கற்பிக்கப்பட்டுவந்த நம்பிக்கைகளின்  அடிப்படை  உண்மைகளைப்  புரிந்து  கொள்ளாமல்  வெறும் கதைகளிலும்   சடங்குகளில்  மட்டுமே தன்னை  ஈடுபடுத்திக்கொண்டு வாழ்பவன்  சரிதானா.? வாழ்வின்  உண்மை  நிலைகளைப்  புரிந்துகொண்டு வெறும் கதைகளையும்  சடங்குகளையும் மறுதளிப்பது தவறா.?  
மக்களின் மனநிலையும் அணுகுமுறையும் தெரிந்தும் தொடர்ந்து எழுதுகிறேன் என்றால் சில விழுக்காடு மக்களாவது சிந்திக்கத் துவங்குவார்கள் எனும் நம்பிக்கைதான்   
  




  

வியாழன், 6 பிப்ரவரி, 2014

காரண காரியங்கள் பதில்கள்


                               காரண காரியங்கள் பதில்கள்.
                                ----------------------------------------

சென்ற பதிவில் சில கேள்விகள் கேட்டிருந்தேன் நண்பர் திண்டுக்கல் தனபாலனின் பின்னூட்ட பதில்களை பார்க்காதவர்களுக்காகவும் கேள்விகள் கேட்ட நானும் பதில் சொல்லக் கடமைப் பட்டிருப்பதாலும் இந்தப் பதிவு. ஏனோ பதிவுகளில் விவாதங்கள்மிகவும் குறைந்தே வருகிறது



கேள்வி 1) வாயில் நிலைப்படிகளில் உட்காரக் கூடாது .சரியா?
சரி எது  தவறு எது என்று அவரவரே நிர்ணயிக்க வேண்டும்.நிலைப் படிகள் எதிர்மறைச் சக்திகளை (negative energy) உண்டு பண்ணுவதாக நம்பிக்கைக்கு வலு சேர்க்கச் சொல்லப் படுகிறது  தற்காலத்தில் dowsing rod  உபயோகித்து சரியா தவறா என்று கண்டு கொள்ளலாம் என்கிறார்கள் இந்த டௌசிங் ராடின் உபயோகமே கேள்விக்குறியாக உள்ளது. நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்று காண வாட்டர் டிவைனர்கள் உபயோகிக்கும் ஒரு கருவிதான் டௌசிங் ராடுகள்.

கேள்வி 2) கர்ப்பிணிப் பெண்கள் வயிற்றில் சலனம் அதிகமிருந்தால் பிறக்கப் போவது பெண்குழந்தையாக இருக்கும் .சரியா?
இதற்கு மருத்துவ ரீதியாக எந்த உறுதிப்பாடும் கிடையாது. பெண்குழந்தைகளின் இதயத் துடிப்பு அதிகமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. மேலும் பெண்குழந்தைன் கரு தாயின் வயிற்றில் அதிக திரவத்துக்குள் மிதப்பதாகச்சொல்லப் படுகிறது அதனால்தானோ என்னவொ கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு பெரிதாயிருந்தால் பிறக்கப் போவது பெண்சிசுவே என்று பெரிசுகள் சொல்லக் கேட்கிறோம்.

கேள்வி 3) கிருகப் பிரவேசம் நடத்தும் போது வாயிலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுகிறார்கள் ஏன்.?
கிருகப் பிரவேசத்தின் போது மட்டுமல்ல எந்த சுப நிகழ்ச்சிகளுக்கும் பலர் வந்து போவர். அதனால் சுற்றுவட்டாரக் காற்று அசுத்தப் படலாம். மாவிலைகளுக்கு காற்றை சுத்திகரிக்கும் குணமிருப்பதாக நம்பப் படுகிறது (என் வீட்டிலொரு மாமரமே இருக்கிறது )

கேள்வி4) படுத்து எழும்போதுவலது புறமாகவே திரும்பி எழ வேண்டும்.ஏன்.?
நம் உடலில் இரு விதமான ஈர்ப்பு சக்திகள் இயங்குவதாகச் சொல்லப் படுகிறது. தலைமுதல் காலும் கால் முதல் தலை வரை ஒன்றும், பின்னாலிருந்து இடது வலமாகவும் வலது இடமாகவும் ஒன்று என்றும் சொல்லப் அடுகிறது உடலின் அசைவுகள் இந்த மின் ஈர்ப்பு சக்திக்கு பலமூட்டுவதாக இருக்க வேண்டும் என்றால் அதன் திசையிலேயே இயங்க வேண்டுமாம். எனக்கு இதய சிகிச்சைசெய்த மருத்துவரும் வலது பக்கம் திரும்பி எழப் பழகுமாறு கூறினார். முன்பெல்லாம் சிறார்கள் மந்தமாக இருந்தால் இடப்பக்கமாகத்திரும்பிஎழுந்தாயா என்று கேட்பார்களாம்.

கேள்வி 5) முங்கிக் குளித்தபின் உடலில் எண்ணை தேய்க்கலாமா.?
மனுஸ்மிருதியில் இது தடை செய்யப் பட்டிருப்பதாகக் கூறப் படுகிறது. எண்ணை தோலின் துவாரங்களை அடைத்துவிடும் சாத்தியமிருக்கிறது. எண்ணை தேய்ப்பது ஒருவித மசாஜ் என்று கூறலாம் இதனால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது . அதிக இரத்த ஓட்டத்தினால் வெளியேற வேண்டிய வியர்வை எண்ணை தேய்ப்பதால் வெளியேறாமல் போகலாம்

கேள்வி 6) காலணி இல்லாமல் நடப்பது உகந்ததா.?
காலணி என்பது ஒரு ஸ்டேடஸ் சிம்பல் என்றாகி விட்டது. கரடு முரடான பாதையில் ஒருவர் காலணி இல்லாமல் நடக்கும் போது காலில் இருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரு வித அழுத்தத்துக் உட்படுகின்றன. இவை உடலின் எல்லா பாகங்களுக்கும்  தொடர்புடையவை. காலணி இல்லாமல் நடந்தால் உடலின் எல்லா பாகமும் ஒருவித ஸ்டிமுலேஷனுக்கு உள்ளாகும். இயற்கையாகவே இது ஒரு அக்குபன்க்சர் போல் செயலாற்றும்

கேள்வி 7) எண்ணைக் குளியல் ஏன் எடுக்க வேண்டும்.?
தினமும் தலை முதல் கால்வரை எண்ணை தேய்த்துக் குளிப்பது நல்லது என்று அறிவுறுத்தப் படுகிறது.மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணை உடலுக்குள் செல்லும். இரண்டாவதாக தோலை.க் கெடுக்கும் நுண்கிருமிகள் எண்ணையில் மாட்டிக் கொண்டு காற்றில்லாமல் அழிந்து போகும் என்றும் சொல்லப் படுகிறது ( என் மருத்துவ நண்பர் தோலில் இருக்கும் துவாரங்கள் வழியே வியர்வை வெளியேறலாமே தவிர வெளியிலிருந்து எண்ணை எதுவும் உள்ளே போக முடியாது என்றும் கூறுவார்...!)

கேள்வி 8.) பெற்றோரின் காலில் விழுந்து வணங்குவது தேவையா.?
பெற்றொர் கால்களில் விழுந்து வணங்குவது சாலச் சிறந்தது மரியாதையை வெளிப்படுத்த கரங்கூப்பி வணங்குவதும் , எழுந்து ந்ன்று மரியாதை செலுத்துவதும் , கால் தொட்டு வண்ங்குவதும் உடல் தரையைத்தொட விழுந்து வணங்குவதும் நடை முறையில் இருந்து வருகிறது. பெற்றோரைக் கடவுளாக பாவித்து வணங்கும் முறை அந்த உறவின் மேம்பாட்டை விளக்குவதாக இருக்கிறது.

கேள்வி 9)  விபூதி தரிப்பது ஏன்.?
நல்ல சுத்தமான விபூதிக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. வெறும் புல்லையே தின்னும்  பசுவின் சாணத்தை உமியுடன் கலந்து சிவ ராத்திரி தினத்தன்று எரித்தால் கிடைக்கும் சாம்பலை நீரில்கரைத்து பின் அதைக் காடவைத்து சிவனுக்கு அர்ப்பணித்து பின் சேமித்து வைத்து  உபயோகப் படுத்த வேண்டுமாம். காய்ச்சல் இருக்கும் ஒருவருக்கு நெற்றியில் விபூதி வைத்தால் காய்ச்சல் குறையும் என்று நம்பப் படுகிறது.( எதிர் பார்க்கும் பலன்கள் கிடைக்கவில்லை என்றால் விபூதி சுத்தமாக சரியாகத் தயாரிக்கப் படவில்லை என்று கூறித் தப்பிக்கலாம்...!)

கேள்வி 10) ஹிந்துக் கோவில்களில் அர்ச்சகர் அல்லது பூசாரியின் கால்களைப்பிடிப்பது அனுமதி இல்லை. ஏன்?.
இது எந்த தீண்டாமையினால் வந்த பழக்கமல்ல. ஒரு அர்ச்சகரோ பூசாரியோ, இடை விடாது மந்திர உச்சாடனங்களைச் செய்வதால் அவரிடம் ஒரு ஆன்மீக சக்தி இருப்பதாக நம்பப் படுகிறது யாராவது அவரைத் தொட நேர்ந்தால் அந்த சக்தி குறையும் என்று நம்பப் படுகிறது. ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் ஒரு பிரபை (halo)  இருப்பதாக் கூறப்படுகிறது ஒருவரை தீண்டினால் அந்த சக்தி விரய மாகலாம் என்றும் நம்பப் படுகிறது.தேவை யில்லாமல் ஒருவரைத் தீண்டுவதே தவிர்க்கப் படவேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.