செவ்வாய், 29 ஜனவரி, 2013

கனவிலிருந்து கற்றதும் மற்றதும்.


                           கனவிலிருந்து கற்றதும் மற்றதும்.
                          ------------------------------------------------


கனவொன்று கண்டேன். அதிலிருந்து பாடம் ஒன்று கற்றேன்.கற்றதைப் பகிர்கிறேன்.

நான் சொர்க்கத்துக்கு (?) அழைத்துச் செல்லப் படுகிறேன். தேவதை ஒன்று ( ஒருத்தி.?) எனக்கு வழிகாட்டி. முதலில் ஒரு அலுவலகம் போல் இருக்கும் இடம். அங்கே பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருக்கிறார்கள்.  ’இது என்ன ஆஃபீஸ் ?’ என்று கேட்டேன். கத்தை கத்தையாக மனுக்கள். ஆயிரக்கணக்கில் அவை தர வாரியாகப் பிரிக்கப் படுகிறதாம். உலகில் மக்கள் ஆண்டவனுக்கு அனுப்பும் வேண்டுதல்கள். பலப்பல வகைகள்.

அங்கிருந்து இன்னொரு அலுவலகத்துக்குக் கூட்டிச் செல்லப் படுகிறேன். அங்கேயும் பலரும் மும்முரமாகப் பணி செய்து கொண்டிருந்தார்கள். ‘இது என்ன ஆஃபீஸ்?’ என்று கேட்டேன். முந்தைய அலுவலகத்தில் வந்த மனுக்கள் தீர்வு செய்யப் பட்டு , மனு கொடுத்தவர்களுக்கு ஆசிர்வாதங்களும் அனுக்கிரகங்களும் அனுப்ப ஏற்பாடுகள் நடக்கும் இடமாம்.


மூன்றாவது இடத்துக்கு அழைத்துச் செல்லப் பட்டேன். அந்த அலுவலகம் எந்த சுறுசுறுப்பான இயக்கமும் இல்லாமல் ஏதோ ஒன்றிரண்டு தேவதைகளே பணியில் இருந்தனர். ’ இது என்ன ஆஃபீஸ்?’ என்று கேட்டேன். அனுப்பிய மனுக்களுக்குண்டான ஆசிர்வாதங்களையும் அனுக்கிரகங்களையும் பெற்றுக் கொண்டதற்கான acknowledgement களை வாங்கும் இடம்.

”மனுக்களை அனுப்புகிறார்கள். அருளை அனுபவிக்கிறார்கள். ஆனால் அவற்றைத் தெரியப் படுத்துவதில்லை” என்று என்னைக் கூட்டிப் போன வழிகாட்டி தேவதை வருத்தப் பட்டுக் கொண்டது. ”எப்படித் தெரியப் படுத்துவது?” என்று கேட்டேன். ’ ஆண்டவனே நன்றி “என்று நினைக்கலாமல்லவா” என்றது அந்தத் தேவதை.

’ எதற்கெல்லாம் நன்றி தெரிவிப்பது ?” என்றுகேட்டேன்.

”இன்றைக்கு உண்ண உணவும் ,உடுக்க உடையும் இருக்க இடமும் இருந்தால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன்,
உலகில் இருக்கும் மக்களில் 75% மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல். இன்று காலை உறக்கம் விழித்து ஆரோக்கியத்துடன் இருந்தால் அதற்கு நன்றி சொல். யுத்த பயம் இன்றி, சித்திரவதைக் கொடுமை இன்றி, சிறைச்சாலையில் இல்லாமல் சுதந்திர மாக இருந்தால் அதற்கு நன்றி சொல். நீ நினைத்த கடவுளை வணங்கவோ பயமின்றி நினைத்ததைப் பேசவோ முடிந்தால் அதற்கு நன்றி சொல். உன் தாய் தந்தையர் உயிருடன் இருந்து இன்னும் ஒற்றுமையுடன் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு நன்றி சொல். கைகால்கள் நன்றாக இருந்து எல்லாப் புலன்களும் உன் கட்டுக்குள் இருந்தால் அதற்கு நன்றி சொல் .உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடிந்தால் அதற்கு நன்றி சொல். ஏனென்றால் இதையெல்லாம் இல்லாதவர்கள் மத்தியில் நீ மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவன். அதற்கு நன்றி சொல் இதையெல்லாம் படித்து அறிந்து கொள்ளக் கூடிய நீ படிக்கும் வாய்ப்பே இல்லாதவரை விட நல்ல நிலையில் இருக்கிறாய். அதற்கு நன்றி சொல்”

”அதெல்லாம் சரி. நான் யாருக்கு நன்றி சொல்ல வேண்டும்.?”

”இந்தப் பேரண்டத்தில் நீ துகளினும் சிறியவன் உன் பிறப்போ இறப்போ உன்னால் நிர்ணயிக்கப் படுவதில்லை.இருப்பும் முடிவும் உன் கையில் இல்லாதவரை நான் எனும் அகந்தை தேவை இல்லாதது. சொல்லப் போனால் எல்லாவற்றுக்கும் நீ நன்றி சொல்ல வேண்டும். அது கடவுளுக்காக இருக்கலாம், இயற்கைக்காக இருக்கலாம். ஆனால் உன்னை மீறிய சக்திக்கு என்று புரிந்தால் சரி”

விழித்துப் பார்த்தால் கனவுதான் என்றாலும் கற்றது நிறைய என்று அறிந்தேன்.
                -----------------------
மற்றது.
------- 
எனக்கு பல விஷயங்கள் தெரிவதில்லை. அதுவும் இந்த வலைப்பூ எழுத ஆரம்பித்த பிறகு கணினியில் வரும் பல விஷயங்கள் புரிவதில்லை
பதிவுகள் எழுதுகிறேன். அதைப்படிக்கும் விருப்பமுள்ள தொடர்பாளர்கள் இருக்கிறார்கள் அதே போல் நானும் பலரது பதிவுகளுக்குத் தொடர்பாளனாய் இருக்கிறேன். நான் தொடர்பாளனாய் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் என் கணினியில் டாஷ் போர்டில் வரும். இப்படியிருக்க இதே பதிவர்களின் பதிவுகள் எனக்கு மெயிலிலும் வருகிறது. இது ஏதோ google+ ன் அனுக்கிரகம் போல் தெரிகிறது. இதைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்.?யாராரிடமிருந்தோ எனக்கு மெயில்கள் வருகிறது. ஆனால் அனுப்பியவர்கள் என்று நான் நினைக்கும் அவர்களுக்கு ஏதும் தெரிவதில்லை.Google+ என்றும்  Norply.என்றும் twoo என்றும் linked in என்றும் skill pages என்றும்  இன்னும் என்னவெல்லாமோ இடங்களிலிருந்தும் யார் யார் பெயரிலோ ( அறிந்தவர் அறியாதவர்) வருகிறது.. யாராவது விளக்கம் சொன்னால் நன்றாயிருக்கும்.
                                                          -----------------------------------
இதையெல்லாம் படித்ததில் தலைவலி வந்தால் அதை எந்த மருந்தும் இல்லாமலேயே குணப் படுத்த முடியுமாம். எங்கோ படித்தேன். வழக்கம்போல்
பகிர்கிறேன். மூக்கில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியே நாம் சுவாசிக்கிறோம். தலைவலி வந்தால் வலது நாசித் துவாரத்தைமூடி இடது துவாரத்தால் சுவாசித்தால் தலைவலி போய் விடுமாம்

அதேபோல் சோர்வுற்றிருக்கும்போது இடது துவாரத்தை மூடி வலது நாசித் துவாரத்தால் சுவாசித்தால் சோர்வு போய் விடுமாம். இதுவரை நான் சோதித்துப் பார்க்கவில்லை. எனக்குத் தலைவலியும் வரவில்லை. சோர்வும் வரவில்லை. சோதிப்பவர்கள் பலன் குறித்து தெரியப் படுத்தலாமே
                       ---------------------


 


ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நான் ஒரு ஏகலைவன்



                     
                                          நான் ஒரு ஏகலைவன்
                                        -----------------------------------



என் மகன் சென்னையில் இருந்தபோது என் மருமகள் ஒரு ஓவியம் வரைந்திருந்ததைக் கண்டேன். அழகான அந்த ஓவியம் என்னுள் ஒரு பொறியைக் கிளப்பியது. ஏன் நாமும் அந்த மாதிரி ஓவியம் வரையக் கூடாது என்ற எண்ணம் தலை தூக்கியது.. அவளிடம் விசாரித்தேன். அதை தஞ்சாவூர் பாணி ஓவியம் என்றும் அதை வரைய அவள் ஒரு ஆசிரியரிடம் ரூ. 3000/-கொடுத்துக் கற்றுக் கொண்டாள் என்றும் சொன்னாள். அதை வரையும் வழிமுறைகளை அவள் சொல்லச் சொல்ல நான் எழுதிக் கொண்டேன். பிறகு நான் பெங்களூர் திரும்பி வந்ததும் அதற்குத் தேவைப் பட்ட பொருள்களை வாங்கி வந்தேன். எனக்குத் தெரியும் நுண்கலைகள் பயில்பவர்கள் கையில் விரல்கள் நீளமாக இருக்கும்நளினமாக இருக்கும் .ஆனால் என்கையோ குட்டையானது. விரல்கள் லாகவமாகப் பணி புரியாது. இருந்தாலும் I wanted to have a go at it. முதலில் fabric paint  வாங்கி என் பேரனின் பனியனில் ஒரு பிள்ளையார் படம் ட்ரேஸ் செய்து பெயிண்ட் செய்தேன். சுமாராக இருந்தது. அதைவிட அவன் அதை ’என் தாத்தா வரைந்தது’ என்று பெருமைப் பட்டது மகிழ்ச்சி அளித்தது. பிறகு என் பேத்தியின் பாவாடைத் துணியில் ஒரு டிசைன் வரைந்து பெயிண்ட் செய்தேன்..அதை தையல் செய்யக் கொடுத்தபோது டெயிலர் அது நன்றாக இருக்கிறது என்று சொன்னபோது  என் மீதே எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது.


அடுத்து ஒன்றிரண்டு பிள்ளையார் படங்கள் துணியில் பெயிண்ட் செய்து ஃப்ரேம் செய்தேன். அப்போது அதைப் பார்த்து என் பேத்தி ‘பிள்ளையார் முறைப்பது போல் இருக்கிறார் என்று விமரிசித்தாள். அதன் பிறகு தஞ்சாவூர் ஓவியம் வரைய முயற்சித்தேன். இந்த ஓவியம் வரையும் முன்பாக வரைய வேண்டிய plywood பலகையைத் தயாரிக்க வேண்டும் படத்தின் சைசுக்குத் தக்கபடி இருக்க வேண்டும். அதில் ஒரு வெள்ளைத் துணியை சுருக்கமில்லாமல் ஒட்ட வேண்டும். அதன் மேல் சாக் பவுடரை ஃபெவிகாலுடன் கலந்து ஒருவித மாவு பதத்தில் தயாரித்துக் கொண்டு ஒட்டிய துணி மேல் சமமாக மெழுக வேண்டும். அது நன்கு காய்ந்தவுடன் பாலிஷ் செய்ய வேண்டும் அதன் பிறகு அந்தத் துணிமேல் வரைய வேண்டிய படத்தை ட்ரேஸ் செய்ய வேண்டும். பிறகென்ன..? யாராவது வரைய முயற்சி செய்வதாக இருந்தால் விளக்கமாக அவர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன். தஞ்சாவூர் ஓவியத்தில் முக்கியமாக இருக்க வேண்டியது ஆபரணங்கள் அதை வைக்க மக் வர்க் செய்ய வேண்டும். 22 காரட் தங்கப் பேப்பர்கள் கிடைக்கின்றன. விலைதான் அதிகம். ஆபரணத்துக்குண்டான பல நிற மணிகளும் கிடைக்கின்றன. கற்களை ஒட்டுவது, தங்கப் பேப்பர்களை ஒட்டுவது போன்ற வேலைகள் பொறுமையுடன் செய்ய வேண்டியவை. அதன் பிறகு பெயிண்டிங்.

நான் முதலில் செய்த படம் தஞ்சாவூர் ஓவியம் என்று சொல்லலாம் என்பதுபோல்தான் இருந்தது. போகப் போக என் ஓவியங்கள் சுமார் என்னும் வகைக்கு வந்திருக்கிறது. ஆனால் வரையத் துவங்கும் முன்பாகவே அதை என் உறவினர்கள் ரிசர்வ் செய்து விடுவார்கள். பெங்களூரில் எனக்கு உறவினர்கள் அதிகம் ஒவ்வொருவர் வீட்டிலும் என்னுடைய ஒரு படமாவது இருக்கும்.

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் இந்த ஓவியங்கள் வரைவதில் அக்கரை காட்டுகிறேன் என்று தெரிந்த டாக்டர் . எனக்கு அப்போதிருந்த urological problems –ஐ படம் வரைவதில் கவனம் செலுத்துவதால் குறைக்கலாம் என்று கூறி ஊக்குவித்தார். அவருக்கு ஒரு கிருஷ்ணர் படம் வரைந்து பரிசாகக் கொடுத்தேன். மிகவும் appreciate செய்தார்.

சாதாரணமாகக் கடவுளர் படங்கள் தான் வரைந்திருக்கிறேன். வரைய ஆரம்பிக்கும்போது பாதங்களில் இருந்துதான் தொடங்குவேன். வரைந்த படங்களில் என் பெயரை எழுதுவதே இல்லை.


பிறகு கண்ணாடி ஓவியங்களில் கவனம் செலுத்தினேன். கண்ணாடி ஓவியங்களை வரையும் போது வலது இடதாகவும் இடது வலதாகவும் வர வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.
இப்போதெல்லாம் ஓவியம் வரைவது மிகவும் குறைந்துவிட்டது. அண்மையில் ஒரு கண்ணாடி ஓவியம் வரைந்தேன். நண்பர் ஒருவர் என்னைப் பார்க்க என் வீட்டுக்கு வருவதாகக் கூற் இருந்தார். அவருக்குப் பரிசளிக்க வேண்டி வரைந்தேன். நண்பரும் வரவில்லை. நான் பரிசாகக் கொடுக்கவும் முடியவில்லை.! ( முகப்பில் இருக்கும் படம்.)
எனக்கொரு ஆசை. தஞ்சாவூர் ஓவியம் ஒன்று முப்பரிமாணத்தில் வரைய வேண்டும்(3-D).ஆர்வமிருக்கிறது. நேரம் கைகூடி வர  வேண்டும். பார்ப்போம். 

வரைந்த படங்கள் சில. 
---------------------


 


 



செவ்வாய், 22 ஜனவரி, 2013

இன்பம் தரும் இலக்கியம்


                                          இன்பம்-தரும் இலக்கியம்
                                          -----------------------------------



கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ....


என்ன..... மூளையில் ஏதோ ’பல்ப்’ எரிகிறதா.? எரியாவிட்டாலும் பரவாயில்லை.படிக்கப் படிக்கப் புரிந்துவிடும். அந்தக் காலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு தன் மனைவியிடம் கூடி இருந்தபோது ஒரு சந்தேகம் வந்ததாம்.தன் மனைவியின் கூந்தலில் இருந்து வரும் சுகந்த மணம் இயற்கையிலேயே உள்ளதா இல்லை அவள் அணிந்திருந்த மலர்களால் வந்ததா என்று.. அந்தக் காலத்து ராஜாக்களுக்கு சந்தேகம் வந்தால் மந்திரிப் பிரதானிகளோ புலவர்களோதானே தீர்க்க வேண்டும். அரசன் தன் சந்தேகத்தைத் தீர்ப்பவருக்குப் பொற்கிழி பரிசாக அறிவிக்கிறான். மந்திரிகளோ புலவர்களோ அந்தப் பணியில் ஈடுபட விரும்பவில்லை. தாங்கள் கூறும் பதில் அரசனுக்கு ஒப்பவில்லை என்றால்.... எதற்கு வம்பு என்று வாளாவிருந்து விட்டனர்.


அங்கே வறுமையில் வாடும் ஒரு புலவன்,தருமி என்று பெயர் தனக்கு அந்தப் பொற்கிழி கிடைக்காதா என்று ஏங்குகிறான். மதுரை சொக்கனாதருக்கு அந்தப் புலவனுக்கு உதவ எண்ணம்.அரசனின் ஐயத்தைத் தீர்க்கும் ஒரு பாடலை எழுதி தருமியிடம் கொடுத்து அரசனுக்குக் காட்டிப் பொற்கிழி பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்.தருமி அதனை எடுத்துக் கொண்டு போய் அரசனிடம் வாசித்துக் காட்டுகிறான் என்ன... இப்போது நினைவுக்கு வருகிறதா.? திருவிளையாடல் புராணம் என்ற படத்தில் காட்சிகளாகப் பார்த்திருப்பீர்களே.சிவாஜி கணேசனையும் நாகேஷையும் நினைவுக்குக் கொண்டு வரும் அந்தப் பாடல் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது.? திரைப்படம் மூலம் கதை விளங்கி விட்டது. அந்தப் படத்தின் மூலம் ஒரு அழகான பாடலும் பொதுமக்கள் பார்வைக்கும் கவனத்துக்கும் கொண்டு வரப் பட்டது. அந்தப் பாடலை இப்போது பார்ப்போம்.




”கொங்கு தேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி                                            
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியக் கெழீஇய நட்பின் மயிலியல்
செறி எயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”

தருமி பாடிய அப்பாடலில் குற்றம் இருக்கிறது என்று கூறி


சிவபெருமானின் கோபத்துக்கு ஆளான நக்கீரர் சிவனாரின் மூன்றாவது கண்ணால் எரிக்கப் படுகிறார். பொருட்குற்றம் இருக்கிறது என்ற நக்கீரருக்கு அது இல்லை என்று நிரூபிப்பதல்லவா அந்த ஆலவாயன் செய்திருக்க வேண்டியது.? ஆனால் அவர் செய்தது என்ன. ? கோபம் கொண்டு 




அங்கங் குலுங்க அரிவாளில் நெய் தடவி
பங்கம் பட இரண்டு கால் பரப்பி—சங்கைக்
கீர் கீர் என அறுக்கும் கீரனோ என் கவியை
ஆராயும் உள்ளத்தவன்
என்று சாடுகிறார். சொன்னதை நிரூபிக்க இயலாதவர் கோபம் கொள்வது முறையல்ல என்று எண்ணும் நக்கீரனும்



சங்கறுப்ப தெங்கள் குலம்  சங்கரனார்க்கு ஏது குலம்
பங்கமுறச் சொன்னால் பழுதாமோ- சங்கை
அரிந்துண்டு வாழ்வோம்  அரனாரைப் போல
இரந்துண்டு வாழ்வதில்லை
என்று பதிலடி கொடுக்கிறார்

தன் பாடல் தானே முக்கண்ணனே பாடியதில் ஒரு நரன் குற்றம் காண்பதா என்று பொறுக்க இயலாமல் அரன் அவனை நெற்றிக்கண்ணைத் திறந்து பொசுக்குகிறார். 
யாராயிருந்தாலும் குற்றம் குற்றமே என்ற நக்கீரனின் நேர்மைக்கு முன் அரனாரின் ஆவேசம் சரியா என்னும் கேள்வி எனக்குள் எழுகிறது.அவரை ஆட்கொள்ள வேண்டியே என்றும் சப்பைக் கட்டு கட்டலாம். 

. ”எனக்குத் தமிழ் தெரியாது” என்ற   என் பதிவில் குறிப்பிட்ட அகப் பொருளுரை  எழுதிய நக்கீரரும் இவரும் ஒன்றா எனும் ஐயம் இன்னும் இருக்கிறது
                         ----------------------


அரசர்களுக்கு சந்தேகம் எழுவதும் அதை அறிந்தோ அறியாமலோ தீர்ப்பதன் மூலம் புலவர்கள் வெகுமதி பெறுவதும் குறித்து நம் தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தெரிய வருகிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில்
ஒன்றும் அந்த வகையைச் சேர்ந்ததே. அரசன் மாறுவேடத்தில் நகர்வலம் வருகிறான். உயரே ஒரு நாரைக் கூட்டம் பறந்து செல்கிறது. அவற்றின் சிவந்த அலகுகள் எதற்கு ஒப்பாகும் என்னும் நினைவில் வரும் அரசன் ஒரு புலவனின் அவலப் பாட்டைக் கேட்கிறான். பொதுவாகவே துன்பத்தில் இருக்கும் போது பாடல்களும் கவிதைகளும் அழகாக வந்து விழும். இந்த என் அனுபவம் அந்தக் காலக் கவிகளுக்கும் பொருந்தும்போல. கவிதையைப் பார்ப்போம்.



நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர் வாய்ச் செங்கால் நாராய்
(அரசனுக்கு ஒரு அழகான உவமை கிடைத்து விட்டது)


நீயும் நின் பெடையும் தென் திசைக் குமரியாடி
வடதிசைக் காவிரிக் கேகுவீராயின்
எம்மூர் சத்திமுற்ற வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனை குரல் பல்லி
பாடுபார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழூஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே.



இதைவிடத்



தெளிவாக அழகாக அவலத்தை வெளிப்படுத்த முடியுமா.?எவரிடமும் சொல்லிப் புலம்ப முடியாததை நாரைகளிடம் சொல்லிப் புலம்பும் இப்புலவன் அதைக் கெட்ட அரசன் இவனுக்கு வெகுமதி  அளித்தாராம். அதன் பிறகு  அவரை குடிதாங்கி என்பவர் ஆதரித்தாராம் அப்போது இவர் பாடுவதாகக் கூறப்படும் இந்தப் பாடலையும் கவனியுங்கள்.




" வெறும்புற்கையும் அரிதாங
கிள்ளைச் சோறும் என்வீட்டில் வரும்,
எறும்புக்கும் ஆர்பதமில்லை
முன்னாள் என்னிருங் கலியாம்,
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச்
சென்று கூடிய பின்,
தெறும்புற் கொல் யானை கவளம்
கொள்ளாமற் றெவிட்டியதே."


வெறுஞ் சோறும் இருக்கவில்லை, என் வீட்டுக் கிளியும் பசியால் வாடித் தளரும்..எறும்புக்கும் ஏதுமிருக்கவில்லை. . பின் என் குறை தீர்த்த குடிதாங்கியை சென்றடைந்தபிறகு, யானையும் வாய்கொள்ளாக் கரும்புக் கழிகளை உமிழ்ந்து  சிதறடித்தது.
மலையாளத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு. “ உள்ளப்போழ் ஓணம் . இல்லெங்கில் ஏகாதசி.” இலக்கியங்களைப் படித்து மகிழ வேண்டும் படித்ததை பகிர்ந்தும் மகிழ்கிறேன் நான்.
------------------------------------------------    ,
   




 



 

 



   


 
 

 

 






 




 

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

சமூக வலைத் தளங்கள்


                                  சமூக வலைத் தளங்கள்
                                 -----------------------------------



டெல்லியில் சீரழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய சில தகவல்கள் வெளிப்படுத்தக் கூடாது என்பதால் பெயரோ முகவரியோ வேறு எந்தவிதமான பெர்ஸொனல் விவரங்களோ பத்திரிகைகளில் முதலில் வெளிவராமல் இருந்தது. ஆனால் எனக்கு வந்த சில மின் அஞ்சல்கள், அந்தப் பெண் மருத்துவ மனையில் அவளது தாயிடம் கூறிய விஷயங்கள் என்றும், அவளது பெயர் இன்னது என்றும், கடைசியாக அவளது புகைப்படம் என்றும் வந்திருக்கின்றன. பொதுப்படையாக சீரழிக்கப் பட்டு உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் அபிப்பிராய பேதம் இருக்காது. ஆனால் அவளது ஐடெண்டிடி தெரிவதிலும் , அவளது வேறு அந்தரங்க செய்திகளைத் தெரிவதிலும் , வெளியிடுவதிலும் நியாயம் இருக்கிறதா தெரியவில்லை. மேலும் வரும் செய்திகள் உண்மையானவையா என்றும்  தெரியாத போது அதை வெளியிடுவது சரியா என்றும் தெரியவில்லை. இப்படியிருக்க சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவது சரியா என்பதே என் கேள்வி.


ஆனால் சமூக வலைத்தளங்களில் வந்த ஒரு செய்தி பகிர்ந்து கொள்வதில் நன்மை விளையலாம் என்னும்நம்பிக்கையால் இதனை வெளியிடுகிறேன். ஒரு உணவு விடுதிக்கு வந்த ஒருவர் இரண்டு காஃபிக்கு ஆர்டர் செய்கிறார். ஒன்று அவருக்கு என்றும்  மற்றது பலகைக்கும்  என்கிறார். காஃபி அவருக்குக் கொடுக்கப் பட்டு , அருகே இருந்த பலகையில் ஒரு காஃபி என்று எழுதப் படுகிறது. அவர் இரண்டு காஃபிக்குப் பணம் கொடுத்துச் செல்கிறார். இன்னொருவர் இரண்டு ப்ளேட் இட்லி என்றும், இரண்டு ப்ளேட் பூரி என்றும் ஆர்டர் செய்து ஒரு ப்ளேட் இட்லியும் ஒரு ப்ளேட் பூரியும் பலகைக்கு என்கிறார். ஆனால் இரண்டு ப்ளேட்டுக்கும் பணம் செலுத்துகிறார்.  சிறிது நேரம் கழிந்து ஒரு ஏழ்மையாகத் தோற்றம் அளிக்கும் ஒருவர் அந்த உணவு விடுதிக்கு வந்து அமர்ந்து பலகையைப் பார்க்கிறார். அவருக்கு செர்வ் செய்ய வந்த பணியாளிடம் பலகையிலிருந்து ஒரு காஃபி , ஒரு ப்ளேட் இட்லி என்று ஆர்டர் செய்கிறார். அவருக்கு செர்வ் செய்தவுடன் பலகையில் இருந்த ஒரு ப்ளேட் இட்லியும் ஒரு காஃபியும் அழிக்கப் படுகின்றன. வந்தவர் உண்டு பணம் ஏதும் கொடுக்காமல் செல்கிறார். பகிர்ந்துண்டு வாழ நினைப்பவரும் எவரிடமும் தன் மானத்தை விட்டு இரக்காமல் இருப்பவரும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே உதவிக் கொள்கின்றனர். இதே கதையை அண்மையில் ஒரு பட்டிமன்றத்தில் திரு. இறையன்பு அவர்களும் பகிர்ந்துகொண்டார். இதை ஏன் நம் உணவு விடுதிகள் பின் பற்றக் கூடாது.?

                ------------------------------------

இனி ஒரு குட்டிக்கதை ( நகைச்சுவைக்காக.)ஒரு நண்பருக்குக் குழந்தை பிறந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள தன்னுடன் பணி புரிபவர்களுக்கு இனிப்பு கொடுத்தார். ஒவ்வொருவருக்கும் இனிப்பு கொடுக்கும்போது “எனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. செக்கச் செவேல் என்று வெள்ளைக்காரக் குழந்தை போலவே இருக்கிறது “ என்று மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டிருந்தார். ஒரு சந்தர்ப்பத்தில் அவரது வேறொரு நண்பர் ” அதை அடிக்கடி சொல்லாதே ஐயா. குழந்தை உனக்குத்தான் பிறந்திருக்கிறதா என்ற சந்தேகம் வந்து விடப் போகிறது” என்றாரே பார்க்கலாம்.!
  -----------------------------------------------------------------------------------

வியாழன், 17 ஜனவரி, 2013

நினைவடுக்குகளிலிருந்து...


                                    நினைவடுக்குகளிலிருந்து.
                                    -------------------------------------



சீரியஸாக ஏதாவது எழுதுவதை விட எதையும் உள்வாங்கிக் கொள்ளத் தேவையில்லாத பதிவுகளே அதிகம் படிக்கப் படுவதாகத் தெரிகிறது. அதிலும் யாரையும் பாதிக்காத சில நிகழ்வுகளை அசை போடலாம் என்று தோன்றுகிறது. என் நினைவுகள் எல்லாம் மிகவும் பழைய நிகழ்வுகள். அதில் சம்பந்தப் பட்டவர்கள் யாராவது இருந்தால் அவர்களின் நினைவுகளில் இவை இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பே நான் நாடகங்கள் போட்டது பற்றி எழுதி இருந்தேன். அவற்றிலிருந்து சில நினைவுத் துளிகள்.


முரசொலி சொர்ணம் என்பவர் எழுதி இருந்த ‘விடை கொடு தாயே’ என்ற நாடகத்தை பெங்களூர் குப்பி தியேட்டரில் நடத்தினோம். ( 1960-களின் முற்பகுதியில்)நாடகம் நடத்துவதில் எங்களுக்கு அப்போது இருந்த பிரச்சனை பெண் கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க நடிகைகள்தான். சில ப்ரொஃபெஷனல் நடிகைகள் இருந்தனர். பெங்களுரில் தமிழ் தெரிந்த நடிகைகள் கிடைப்பது மிகவும் கடினமானதாக இருந்தது. பெரும்பாலும் நடிகைகளின் எண்ணிக்கையை குறைத்து விடுவொம். ஆனால் விடை கொடு தாயே நாங்கள் எழுதியது அல்ல. மூன்று நடிகைகள் தேவைப் பட்டனர். அவர்களை ரிகர்சலுக்கு ஒன்று சேர்ப்பதோ  அதிலும் ஒன்றாகச் சேர்ப்பதோ  மிக மிக கடினம். அவர்கள் தொழில் முறை நடிகைகள்,இரண்டு மூன்று ரிகர்சலுக்கு மேல் வர மாட்டார்கள். எல்லோரையும் ஒன்று சேர்த்து ரிகர்சல் நடத்துவது ஒரு திருவிழா நடத்துவது போல் இருக்கும். அவர்களுக்கு கதை சொல்லிப் புரிய வைத்து. அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பதை செய்ய வைப்பது, இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. நாடகங்களில் பாட்டு நடனம் என்று எல்லாம் இருக்க வேண்டும் என்று எங்களில் சிலர் அபிப்பிராயப் பட்டனர்.கதாநாயகன் வேஷத்தில் நடிக்கப் பலருக்கும் ஆசை. ஆனால் வசனம் சொல்லும் போது ஏகப்பட்ட எக்ஸ்ப்ரெஷன்கள் கொடுக்கும் நடிகர்கள் மற்றவர் பேசும்போது சிலை மாதிரி நின்று விடுவார்கள். கை கால் உடல் எல்லாம் விறைப்பாக வைத்துக் கொள்வார்கள். முதலில் இவர்களை டென்ஷன் இல்லாமல் இருக்க வைப்பதே பெரிய பாடு. இருந்தாலும் கதாநாயகனாக நடித்தவனுக்கு ஒரு காதல் பாட்டுடன் நடனமும் வேண்டும் என்று ஆசை. அவனுக்காகவே “ அன்பே, அமுதே அணங்கே.! ஆறாத காதல் நான் கொண்டதாலே...” என்று ஒரு பாட்டு எழுதி ம்யூசிக் அமைத்து என்னவெல்லாமோ செய்தும் திருப்தியாகாததால் அதைக் கைவிட்டோம்.
சில நல்ல வழக்கங்கள் வேண்டும் என்று கருதி, ரிகர்சலுக்கு வந்ததும் எல்லோருக்கும் வணக்கம் சொல்ல வேண்டும் முடிந்து போகும்போது எல்லோரிடமும் விடை பெற்றுப் போக வேண்டும் என்றும் சொல்லி
இருந்தோம். எல்லோரும் கடை பிடித்தனர். அதை கடைப் பிடிக்கும் நடிகை ஒருத்தி ( தமிழ் தெரியாதவள் ) போகும் போது ” எல்லோருக்கும் வரேங்க “ என்று சொன்னபோது ( அதன் உட்பொருள் விளங்கியதும்), எல்லோரும் சிரிக்க அந்த நிலைமையை சமாளிக்க மிகவும் பாடுபட்டேன் என்பது உண்மை. இன்னுமொரு முறை ஒரு நடிகை வேறு ஒரு நாடகத்தில் “உன்னைப் பதம் பார்க்காமல் விட மாட்டேன் ”என்று வில்லன் கூறுகிறான் , அதற்கு “அர்த்தம் என்னங்க “ என்று கேட்டபோது எனக்கு வியர்த்து விட்டது. அதில் ஒரு நடிகை. நிறம் குறைவு. கருப்பு என்று சொன்னால் வருத்தப் படுவாள். நாடகம் முடிந்து எல்லோரும் மேக் அப்பை கழுவி சாதாரணமாய் இருக்க . இவள் மட்டும் அப்படியே வீட்டுக்குப் போனாள்

நாடகம் நடத்த செலவுகளை சமாளிக்க , ஏதாவது தியேட்டரை ஒரு காட்சிக்கு வாடகைக்கு எடுத்து,ஒரு பழைய சினிமாவின் ஃபிலிமை வாடகைக்கு வாங்கி , அதைப் பார்க்க டிக்கெட் விற்றுப் பணம் தேற்றுவோம். விடை கொடு தாயே நாடகம் அப்போது கர்நாடகாவில் கல்வி அமைச்சராக இருந்த திருமதி .GRACE TUCKER தலைமையில் நடந்தது. நாடகத்தோடு வீரமணி என்பவரை அழைத்து அவர் உயிருடன் தவளை மீன் எல்லாம் உண்டு அவற்றை வெளியில் எடுக்கும் நிகழ்ச்சியையும் சேர்த்திருந்தோம். ஒரு wholesome entertainment.!

.திருச்சியில் நாடகம் போட்டபோது நடிகையை ரிகர்சலுக்குக் கூட்டிவர, விடியற்காலையில் அவள் வீட்டுக்குப் போய் காத்திருந்த கொடுமையை எளிதில் மறக்க முடியாது. அந்த காலத்தில் இதை எல்லாம் ஸ்போர்டிவ்-ஆக எடுத்துக் கொண்டோம். எல்லாம் நினைவலைகளின் இடுக்குகளிலிருந்து அவ்வப்போது தலை காட்டும்.

திருச்சியில் ‘ வாழ்ந்தே தீருவேன்’ நாடகம் ( இதைப் பதிவிட்டிருக்கிறேன் ) போட்டபோது அதில் கதாநாயகி கருவுற்றிருக்கிறாள் என்று கூற ஒரு டாக்டர் தேவைப்பட்டார்.அந்த ரோலில் என் மனைவியே வந்து பேஷியண்டை உள்ளே போய் சோதித்து கர்ப்பம் ஆகி இருப்பதாகக் கூறுவார். அதைச் செய்ய வைக்க நான் மிகவும் பிரயத்தனப் பட வேண்டி இருந்தது.
            ----------------------------

இது விஜயவாடாவில் நடந்தது. என் நண்பர் ( அவரும் ஒரு அதிகாரி ) ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை சினிமாவுக்குப் போகலாமா என்றார்.. சொந்த வேலை 
          
என்பதால் நிறுவனத்தின் காரை உபயோகப் படுத்த வேண்டாம் என்று கருதினோம். என் வீட்டிலிருந்து டாக்சியில் போய் மதியம் ஒரு பெரிய ஓட்டலில் உணவருந்தி பிறகு மாட்டினி ஷோவுக்குப் போவது என்று தீர்மானித்தோம். திட்டமிட்டபடி டாக்சி வந்தது. ஓட்டலில் உணவருந்தினோம். சினிமா தியேட்டருக்குப் போய் படம் பார்த்தோம். இடைவேளையின் போது சமோசா. பாப்கார்ன் கூல் ட்ரிங்க்ஸ் எல்லாம் உட்கொண்டோம். மாலை வெளியில் வந்ததும் தியேட்டருக்கு முன்னால் பஸ் நிறுத்தத்துக்கு என் நண்பர் கூட்டிப் போனார் ‘ பாலு, இதுவரை எல்லாச் செலவுகளுக்கும் நீங்களே பணம் கொடுத்தீர்கள். இனி என் செலவு”  என்று கூறி அங்கு வந்த பஸ்ஸில் ஏறி நாங்கள் போகும் இடத்துக்கு பஸ் டிக்கெட் வாங்கினார்.!
                   --------------
ஒரு முறை திருச்சியிலிருந்து விடுமுறை நாட்களில் பெங்களூர் வந்திருந்தேன். மிகவும் வேண்டப்பட்ட ஒருவர் எங்களை மதிய உணவுக்கு அழைத்திருந்தார். நாங்கள் இருந்த இடத்திலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் அவர் வீடு இருந்தது. பஸ் நிறுத்தம் அருகில் கிடையாது. குறைந்த தூரம் என்பதால் ஆட்டோகாரர்கள் வரவில்லை. அழைப்பை ஏற்று லொங்கு லொங்கென்று மதியம் அவர் வீட்டுக்கு நடந்தே சென்றோம். அங்கே போனால் ஏதோ நாங்கள் எதிர்பாராத வகையில் சென்று விட்டதைப் போன்ற பாவத்துடன் எங்களை வரவேற்றனர். மதிய உணவு பரிமாறும் எந்த ஆயத்தமும் இருக்கவில்லை. போதாததற்கு “மாமியார் வீட்டில் விசேஷ விருந்தா என்ற கேள்வி வேறு. சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு  ஓட்டலில் மதிய உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினோம். விருந்துக்குப் போகிறோம் என்று சொல்லி விட்டல்லவா வீட்டைவிட்டுக் கிளம்பி இருந்தோம்.!
                   ----------------------------